அன்புள்ள ஜெ
நான் அதிகம் கவிதைகளையே நேசிக்கவும் வாசிக்கவும் செய்தேன். எனது நண்பர் ஒருவர் உங்கள் இணையதள முகவரியை அனுப்பிய போது உங்கள் புத்தகங்களுக்கான பின்னூட்டங்களை வாசித்தேன்.ஏழாம் உலகம் மிக வேறுபட்ட ஒரு புத்தமாக இருக்க வேண்டுமென்று தோன்றிற்று.
இலங்கையில் புத்தகசாலைகளிலே தேடிப்பார்த்தேன் அப்போது கிடைக்கவில்லை, ஒருவாறு புத்தகக்கண்காட்சியில் வாங்கி விட்டேன்.உங்கள் படைப்புகளில் நான் வாங்கிய முதல் புத்தகம் இதுதான்.
வாங்கிய புத்தகத்தை வாசிக்க சரியான நேரம் கிடைக்கவில்லை, இடையில் ஒருமுறை வாசித்தேன், அந்த மொழி வழக்கும், அப்பிக்கிடந்த நிஜத்தின் நிறமும் என்னை நிலைகுலையச்செய்துவிட்டன.அப்போது நிறுத்தி விட்டேன்.
இம்முறை விட்ட இடத்திலிருந்து படிக்க நினைத்தேன், எல்லாம் புதிதாக இருப்பது போல தோன்ற மறுபடி ஆரம்பத்திலிருந்து படித்தேன், அம்மொழி வழக்கு, எனக்குள் ஒரு உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தந்தது. என்ன சொல்லி இருக்கிறீர்கள் என இருமுறை வசித்து நானே புரிந்து கொண்டேன், சில சமயம் சிரித்தும்,சிலசமயம் சிலிர்த்தும் , சில சமயம் அழுதும் கொண்டேன்,
எழுத்துக்கள் எழிலை வர்ணிப்பதையே அதிகம் வாசித்திருக்கிறேன், அப்பட்டமான, அசிங்கத்தையும், குப்பையையும்,புளித்துப்போன உணவையும்,வண்டிக்குள் அடிக்கும், மலவாடையையும் ,மனிதரின் மேல் வீசும் நாற்றமும்,புண்களில் வடியும் சீழும் …பன்றிகள் உலவும் குப்பைக்கிடங்கும் கண்முன்னே கொண்டுவந்து மூக்கை சுளிக்க வைத்திருக்கிறீர்கள்.. சீவி சிங்காரித்து ஒப்பனையுடனே பார்த்துபழகிய உலகத்தின் உண்மை முகத்தை கிழித்துக்காட்டிருக்கிறீர்கள்..
உருப்படிகள் என வந்திருக்கும் அனைத்து சதைக்குவியலுக்குள்ளும் ஒரு ஆன்மா இருக்கிறது .அவர்கள் மனிதர்கள், குறைகளை நிறைவாய் பார்க்கும் மனிதர்கள்.முத்தம்மையின் தாய்மை அவளின் தோற்றத்தின் கோரத்தை மறக்கடித்து விட்டன
தன்னைப்புணர வந்திருப்பது தன் மகன் தான் என்றுணரும் தாய் பிச்சைக்காரியானாலும்,தாசியானாலும் அவள் உணரும் சித்திரவதை ஒன்று தானே .உலகத்தின் கேடுகெட்ட ஒரு பக்கம் தானே இதுவும். நம்மை விட அந்த உருப்படிகள் சிறந்தவர்கள்,நம்மை நல்லவர்களாகவும், பணக்காரர்களாகவும் ,அழகானவர்களாகவும் காட்டிக்கொள்ளும் ஒரு முகமூடியை நாமெல்லாரும் எப்ப்போதும்அணிந்திருக்கிறோம் , போலியான முகம்கொண்ட மனிதர்களின் கூட்டத்தையே நாம் விரும்புகிறோம்,
அவர்களின் உலகு, மிக எளிமையானது, அவர்களின் அன்பில் பொய்யில்லை,எதிர்பார்ப்புமில்லை முகமூடிகளில்லா முகங்கள், காயங்களும் ,கண்ணீரும், புன்னகையும், காதலும், விரக்தியும் உள்ளதை உள்ளபடி காட்டும் உண்மை முகங்கள் அவர்களது… இன்னும் சிலமுறை வாசிப்பேனென்று எண்ணுகிறேன்…
நன்றி ஐயா
அன்புடன்
நிரோஜினி ரொபர்ட்
***
அன்புள்ள ஜெ
நான் ஏழாம் உலகம் நாவலை வாங்கி எட்டாண்டுகள் ஆகின்றன. இன்று வரை வாசிக்கவில்லை. கடுமையான நாவலாக இருக்கும், மனஉளைச்சலை அளிக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் வாசிப்பு வேறு ஒரு தளத்தில் இருந்தது தற்செயலாகத்தான் எடுத்து எதையோ புரட்டினேன். அதில் மாங்காண்டிச்சாமி பற்றி குய்யன் சொல்லுமிடம் சிரிப்பை அளித்தது. ஆரம்பத்திலிருந்தே படித்து ஒரே மூச்சில் முடித்தேன். ஒரு கடுமையான சூழல்.
ஆரம்பத்தில் இரண்டு அத்தியாயங்களில் அந்த கடுமையும் கசப்பும்தான் உள்ளது. ஆனால் மெல்லமெல்ல அடுத்தடுத்த கட்டத்துக்குச் செல்கிறது கதை. நக்கல்கள், நையாண்டிகள். பிரியம் நாவல் முழுக்க வழிந்துகொண்டே இருக்கிறது. மாங்காண்டிச்சாமி, குய்யன், ராமப்பன், அகமது நால்வருமே நான்குவகையில் ஆன்மிகமானவர்கள் என நினைக்கிறேன். நான் சமீபத்தில் வாசித்தவரை மிக பாஸிட்டிவான, மனநெகிழ்வும் நிறைவும் அளிக்கக்கூடிய நாவலாகவே தெரிந்தது. நன்றி
ராஜசேகர்
***
ஏழாம் உலகம் அமேஸானில்