இமையத் தனிமை – 2

444

 

இமையத் தனிமை -1

ஃபகுவுக்குக் கிளம்பும்போது யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை, அருண்மொழி, அரங்கசாமி, கிருஷ்ணன், ராஜமாணிக்கம் எவரிடமும். கிளம்பியபின்னர் குறுஞ்செய்திகள் அனுப்பியதோடு சரி. அந்த உளநிலையை விளக்கமுடியாது என்பதுடன் சொல்ல முயல்வதே ஒவ்வாமையை உருவாக்குவதாகவும் இருந்தது. கிளம்பியது முதல் திரும்பி வருவதுவரை அனேகமாக எதுவுமே பேசவில்லை. ஒரு வரிகூட எழுதவில்லை. எந்தத் தொலைபேசி அழைப்பையும் எடுக்கவில்லை, பெரும்பாலும் தொலைபேசி அணைந்தே இருந்தது. முழுமையான தனிமையில் இருந்தேன்.

அந்த மனநிலையை இப்போதுகூட விளக்கிவிடமுடியாது. எனக்கே அதைப்பற்றிய தெளிவு இல்லை, ஏனென்றால் அதை வகுத்துக்கொள்ள முடியவில்லை. முழுக்க இறைக்கப்பட்ட கிணறு மேலும் ஊறுவதற்காகக் காத்திருத்தல் எனலாம். வெறுமையுணர்வு, ஆனால் அது துயரமானது அல்ல. இனி எழுதவே முடியாது என்னும் எண்ணம் அவ்வப்போது எழும்போது மட்டும் ஒரு திடுக்கிடலும் ஏக்கமும்.

புறவயமாக விளக்குவதென்றால் இப்படிச் சொல்லலாம், வெண்முரசு போன்ற பெரிய பணிகள் அவ்வப்போது ஆழ்ந்த வெறுமையை அளிக்கின்றன. அதன் பயன் என்ன என்னும் எண்ணம்.  சூழ இருக்கும் அன்றாடத்தின் எளிமையும் சிறுமையும் உருவாக்கும் வினா அது. இங்கே வாழ்க்கை மிக எளிய தடத்தில் அன்றாடச் சில்லறைச் சிடுக்குகள், எளிய உவகைகள் வழியாகச் சென்றுகொண்டிருக்கிறது. மிகப்பெரியவை பொருந்தாமல் உயர்ந்து, ஆகவே தனித்து ,அதனாலேயே பயனற்றவை என காட்டி நின்றிருக்கின்றன.

மிகப்பெரும்பாலானவர்களால் பெரியவற்றை உள்வாங்கிக்கொள்ள முடியாது. அவற்றை சிறிதாக்கி தங்கள் உலகில் பொருத்தவே முயல்வார்கள். அல்லது முழுமையாகப் புறக்கணிப்பார்கள். ஆனால் எப்படியோ அம்முயற்சிகள் வெவ்வேறு தளங்களில் நிகழ்ந்துகொண்டும் இருக்கின்றன. மானுடனின் மெய்த்தேடலாக இருக்கலாம். வெற்று ஆணவமாகவும் இருக்கலாம்.

222
நீலவானம்

 

பெரிய முயற்சிகள் அனைத்தும் எவ்வகையிலோ முழுமைக்குச் சற்றுமுன்னரே நின்றுவிடுகின்றன.  எவ்வகையிலோ அவை சிறுமைகளால் ஓரளவு தோற்கடிக்கவும் படுகின்றன. அதைத் தவிர்க்கமுடியாது என்பதே வரலாற்றின் பாடம். ஆயினும் பெரியவை நிகழ்ந்தாகவேண்டும். மீண்டும் மீண்டும் சிறுமைகளில் முட்டி சரிந்தாகவும் வேண்டும்.

அந்த வெறுமைக்கு பதில் என்ன என்றெல்லாம் எனக்கே தெரியும். இதை விட்டுவிடப்போவதில்லை என்றும் உள்ளூர உணர்ந்திருக்கிறேன். ஆனாலும் இது இந்தச் செயலின் ஒரு தவிர்க்கவியலாப் பகுதி. முன்னோக்கி முன்னோக்கி என எழும் விசை இல்லாமல் இப்படி தளராமல் பணியாற்ற முடியாது. அந்த விசை நம்முள் இருந்து எழுவது, நாம் தூண்டித்தூண்டிப் பெருக்கிக்கொள்வது. அந்த ஊசல் ஒருகட்டத்தில் அதே விசையில் பின்னுக்கும் வருகிறது

ஒருவகை உளப்பிளவுதான். ஆனால் நோயல்ல இது, ஏனென்றால் இந்த இருநிலையை  நானே தெரிந்து திட்டமிட்டு உருவாக்கிக் கொள்வதனால் பெரும்பாலும் கடிவாளம் கையில் இருக்கிறது. ஒரே சமயம் இரு உலகங்களில் இருக்கிறேன். இரண்டையும் துல்லியமாகப் பகுத்துக்கொண்டிருக்கிறேன். இரண்டிலுமே முழுவிசையுடன் இருக்கிறேன். உளப்பிளவு இரண்டு எல்லைகள் கொண்டது. அசாதாரணமான செயல்வேகம், இணையான சோர்வு. சோர்வு தற்காலிகமானது, சிறியது. செயல்வேகமே ஆண்டில் பெரும்பாலும். இச் சோர்வு அச்செயலாற்றலுக்குக் கொடுக்கும் ஒரு விலை.

 

333
தளிரிடும் ஆப்பிள்

 

இதற்கு நான் கண்ட ஒரே வழி பயணம். சிறிய சலிப்புகளுக்கு நண்பர்களுடனான பயணங்கள் நல்ல மாற்று. ஆனால் இந்த உளநிலையை சற்றேனும் புரிந்துகொண்டு உடனிருப்பவர்கள் இல்லாவிட்டால் மேலும் சலிப்புக்குச் சென்றுவிடவேண்டியிருக்கும் என்று படுகிறது. நான் தனியாகப் பயணம் செய்து நெடுநாட்களாகிறது. ஒரு சோதனையாகவே கிளம்பினேன், இதுவே சிறந்தது என இப்போது படுகிறது. அல்லது நண்பர்களுடன் செல்வதாக இருந்தால்கூட மிக அணுக்கமான, இவ்வகநிலையைப் பகிரும் ஓரிரு நண்பர்கள் மட்டும்தான் இனி.

எண்ணும்போது துணுக்குறல்போல வந்து சூழ்பவை வரவிருக்கும் அழிவுகள். களமெழுத்துபாட்டில் விடியற்காலை முதல் வரைந்த மாபெரும் வண்ண ஓவியத்தை மறுநாள் பின்னிரவில் பாட்டு முடிந்ததும் வெறியாட்டெழுந்து கூந்தலால் வீசி அழிக்கும் பாணினியைப்போல நானே வளர்த்தெடுத்த, என் கூறுகளைப் பெய்த, கதாபாத்திரங்களின் இறப்புகள். எல்லாமே கடினமானவை என்றாலும் கர்ணனே மிக அணுக்கமானவனாக இருக்கிறான். குருதிச்சாரலின் இறுதியில் கர்ணன் இருக்கும் உளநிலையிலேயே நான் எஞ்சினேன்.

ஒன்றுமட்டுமே செய்வதற்குள்ளது, வெறுமே அமர்ந்திருப்பது. ஒன்றும் செய்யாமலிருந்தாலே இந்நாட்கள் கடந்துசெல்லும். உளநிலைகள் காலத்தில் மாறியேதீரும். தீவிரங்கள் மழுங்கும். கொந்தளிப்புகள் அணையும், சலிப்பின் பெருவெளியில் உள்ளம் சிறு ஆர்வங்களைக் கண்டடையும். வேறுவழியே இல்லை. அன்றாடத்திற்குள் சிக்கிக்கொள்ளாமலிருந்தால் மட்டும் போதும். எப்படியும் மீண்டுவிடுவோம். எல்லாவற்றிலிருந்தும் காலத்திலேறி மீளமுடியும் என்ற வாய்ப்பைப்போல வாழ்க்கையின் அருள் வேறில்லை.

77

ஃபகுவின் அந்த பனிமலைகள் என்னை பிறிதொரு உச்சநிலையில் வைத்திருந்தன. அது விழியுணரும் உன்னதம். அதை கருத்துருவ உன்னதமாக ஆக்கிக்கொண்டே இருக்கிறது உள்ளம். அங்கிருந்து வெண்முரசுக்குத் திரும்பமுடியும் என்று தோன்றியது. இதை எழுதும்வரை அந்த திரும்புதல் நிகழவில்லை என்றாலும்.

இப்புவியை அளக்கும் முழக்கோல் என்கிறான் காளிதாசன், இமையத்தை. பருவடிவ உவமை அல்ல அது. இங்குள்ள கொந்தளிக்கும் வாழ்க்கையை அங்குள்ள அமைதியால் அளக்கலாம். அது மண்மேல் விழுந்த விண்ணுரு ஒன்றின் மேலாடை என நான் நினைக்கிறேன். சிறுவயதில் அன்னையின் முந்தானை அடைக்கலமளிக்கும் பெருங்காடுபோலத் தோன்றும்.

ஃபகுவில் நான் முன்பு தங்கிய டாக்கூரின் வீட்டை விசாரித்து பார்த்தேன். எவருக்கும் தெரியவில்லை. விரிவாக விசாரிக்கவேண்டும் என்றால் ஏராளமாகப் பேசவேண்டியிருக்கும். என்னால் ஓரிரு சொற்களுக்கு மேல் பேசமுடியவில்லை. ஆகவே தேடுவதைக் கைவிட்டேன்.

ஃபகு முழுமையாக மாறிவிட்டிருந்தது. 1986ல் நான் வந்தபோது இங்கே எல்லா வீடுகளும் கற்பாளங்களால் கூரையிடப்பட்டவை. மிகத்தாழ்ந்து மலைச்சரிவின் நீட்சியாகவே மண்ணில் இருந்து எழாதவண்ணம் அமைந்தவை. நிறைய  பைன் மரங்கள் இருந்தன. இப்போது பெரும்பாலும் அனைத்துக் கட்டிடங்களும் கான்கிரீட்டில் கட்டப்பட்டு இறுதியாக தகரக்கூரையிடப்பட்டிருந்தன. பெரும்பாலானவை அடுக்குவீடுகள்.  மேலும் மேலும் கட்டிடங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஃபகு சிம்லா போல கட்டிடமலையாக ஆகிவிடும்.

 

yy

 

ஃபகுவில் பனிதா அம்மன் ஆலயம் உள்ளது. நூறாண்டுகளுக்குள் கட்டப்பட்ட சிறிய ஆலயம். மரச்செதுக்கு வேலைகள் கொண்டது. ஒருநாள் பகல் அங்கே சென்று அமர்ந்திருந்தேன். சுற்றுலாப்பருவம் தொடங்கவில்லை என்பதனால் பயணிகள் எவருமில்லை. நாலைந்து உள்ளூர் பெண்கள் மட்டுமே. ஃப அருகே ஒரு குன்று உண்டு. கடிர் என்று பெயர். சென்றமுறை அங்கே சென்றிருந்தேன். இம்முறை இன்னமும் பனி உருகவில்லை, வண்டிகள் செல்லாது என்றார்கள். ஆண்டுக்கொருமுறை ஏப்ரல் வாக்கில் அங்கே திருவிழா நடக்கையில் இரண்டாயிரம்பேர் வரை மலையேறிச்செல்வார்களாம்.

மறுநாள் பேருந்தில் நார்கொண்டா என்னும் ஊருக்குச் சென்றேன். அங்கிருந்து அருகே உள்ள ஹட்டு என்னும் மலைமுகடுக்குச் செல்லவேண்டும் என்பது திட்டம். வாடகை ஓட்டுநர் ஆயிரம் ரூபாய் கேட்டார். பத்து கிலோமீட்டருக்குள்தான். ஆனால் மலைமேல் ஏறிச் செல்லவேண்டும். இன்னொரு ஓட்டுநர் “பனி இன்னமும் உருகவில்லை” என்றார். “இல்லை, சென்றாகவேண்டும்” என்றேன் பனிக்காலத்தில் பனிமேல் செல்லும் நான்குசக்கரத்திலும் இயந்திர இணைப்புள்ள ஜீப்புகள்தான் மேலே செல்லமுடியும். என்றார் ஓட்டுநர்.செல்லும்வரைச் செல்வோம் என்றேன்.

ஆயிரம் ரூபாயால் கவரப்பட்டு அவர் கிளம்பினார். பாதிவழிச் செல்வதற்குள் பனியில் வண்டி நின்றுவிட்டது. இருபக்கங்களிலும் வெண்பொருக்குப் பனி. நான் இறங்கி பனிமேல் கால்வைத்ததும் பரப்பு உடைந்து உள்ளே கால் சென்றுவிட்டது. பனி அடியிலிருந்து உருகி மேல்தகடு வெண்படலமாக நின்றிருந்தது. “என் கையைப் பிடியுங்கள்” என ஓட்டுநர் கூவினார். பாய்ந்து பிடித்து ஒருவழியாக மேலே வந்தால் கால்கள் மரத்துப்போய் இரு ரப்பர் பந்துகளைப் பொருத்தியதுபோல் உணர்ந்தேன்

ha
ஹடு ஆலயம், இணையத்திலிருந்து

 

“என்னது ஷூ இல்லாமலா வந்தீர்கள்?” என்றார் ஓட்டுநர். நான் செருப்பு போட்டிருப்பதை அப்போதுதான் பார்த்தார். உள்ளே கருப்பு காலுறை இருந்தமையால் ஷூ என்றே தோன்றியிருக்கிறது. ”இங்கே மேலே செல்லச்செல்ல மிகவும் குளிரும்… திரும்பிவிடுவோம்” என்றார். திரும்பி நார்கொண்டாவுக்கே வந்தேன். பேருந்தைப் பிடித்து மீண்டும் ஃபகு வந்தேன்.

இங்கே உறைபனியில் எப்படி சமாளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. கனடா போன்ற குளிர்நாடுகளில் இரட்டைச் சன்னல்கண்ணாடிகள், நடுவே வெப்பம்கடத்தாப் பொருள்திணிக்கப்பட்ட மரச் சுவர்கள், எரிவாயுக் கணப்புகள் எல்லாம் உண்டு. இங்கே இந்த பருவத்தில்கூட கான்கிரீட் சுவர்களைத் தொட்டால் மின்னதிர்ச்சிபோலக் குளிர் தாக்குகிறது. சாதாரண கண்ணாடிச் சன்னல்கள். அவற்றிலும் விரிசல்கள், இடைவெளிகள். குளிர்காலத்தில் மின்சாரம் இருக்காதாம். விறகுபோட்டு எரிக்கும் கணப்புதான். அதுவும் அடுப்பும் கணப்பும் ஒன்றேயான ஓர் இரும்புப்பெட்டி. உள்ளே விறகு போட்டு எரித்தால் அலுமினியக்குழாய் வழியாக புகை வெளியே சென்றுவிடும். அதிலெயே சப்பாத்திசுடலாம், வெந்நீர் போடலாம்.

குளிர்காலத்தில் வேறுவகை பயணிகள் வருகிறார்கள் என்றார் ராகேஷ் டாக்கூர். பெரும்பாலும் இஸ்ரேலியர்கள். ஐரோப்பாவுக்குச் செல்வது செலவாகும் என்பதனால் இங்கே பனிவாழ்க்கைக்கு வருபவர்கள்  அவர்கள். இங்கு ஒருமாதம் தங்கி பனியாடி செல்வது அவர்களின் பணமதிப்புக்கு மிகமிக லாபமானது.அவர்கள் இமையமலையை வெல்ல வருகிறார்கள். அதன் விரிவில் ஒர் உச்சத்தை மட்டும் தெரிவுசெய்து வென்று திரும்புகிறார்கள். அதன் அமைதியை அவர்கள் உணர்வதேயில்லை.

ttt
அறைக்குள் இருந்து

 

எந்தக்கோணத்திலும் பனிமலை தெரிவது நாம் எப்போதும் ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றவைக்கிறது. ஒரு பெரிய சாம்பல்நிறப்பறவை சிறகுவிரித்து வான்நோக்கி வெண்ணிற அலகை நீட்டி அமர்ந்திருப்பதுபோன்ற மலை. இத்தனை உவமைகள் வழியாக இந்த மலைகளை எதுவாக ஆக்கிக்கொள்கிறேன்? நானறிந்தவையாகவா? அல்லது இவ்வொப்புமைகள் வழியாக நான் அறியாத நுண்வடிவ ஒன்றை நோக்கி எழமுயல்கிறேனா?

மூன்றுநாட்கள் இங்கிருந்ததில் ஒன்றை உணர்ந்தேன்.  செய்திகளை கேட்காமல், பேசாமல் இருந்தால் கூடிப்போனால் 24 மணி நேரத்திற்குள் நாம் உழன்றுகொண்டிருக்கும் வெளியுலகு முழுமையாகவே அகன்றுவிடுகிறது. நாம்தான் அதைக் கவ்விக்கொண்டிருக்கிறோமே ஒழிய அது நம்மை பற்றியிருக்கவில்லை. முழுநாளும் வெறுமே மலைகளை நோக்கிக்கொண்டிருந்தேன். எதையும் எவரையும் நினைக்கவில்லை. அப்போது எனக்கு என் ஊருடன் நண்பர்களுடன் குடும்பத்துடன் தொடர்பே இல்லை. ஒரே ஒருவருக்கு மட்டுமே குறுஞ்செய்திக்கு மறுமொழி அனுப்பினேன், கோபக்காரர்,திமிராகப் புறக்கணிக்கிறேன் என எடுத்துக்கொள்வார் என்பதனால்.

தர்மசாலா செல்லலாம் என்று எண்ணம் வந்தது.  ஃபகுவில் தங்குவது செலவேறியது. ஒருநாளுக்கு கிட்டத்தட்ட மூவாயிரம் ரூபாய் வரை ஆனது. பேருந்திலேயே தர்மசாலா கிளம்பினேன்.  தர்மசாலாவின் நினைப்பு வந்ததுமே மனம் கிளம்பிவிட்டது. மலைப்பாதையில் 250 கிமீ. ஆனால் 12 மணிநேரமாகியது. இமையமலையடுக்குகள் வழியாக பருந்து போல வட்டமிட்டுக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது.

ll

வழியில் ஒரு பெரிய மலைப்பாறை மேலிருந்து உருண்டு விழுந்துகிடந்தது. அரைமணிநேரம் முன்புதான் விழுந்தது என்றனர். நல்லவேளையாக எந்த வண்டிமேலும் விழவில்லை. அதை ஓட்டுநர்களே புரட்டி அப்பால் தள்ளினர். மிக எளிது. அதன் அடியில் மண்ணை தோண்டி சரிவாக்கி தள்ளி விட்டனர். கீழே மலைச் சரிவில் சென்று தயங்கி நின்றது. அதற்கு அப்பால் மேலும் ஏழெட்டு அடுக்குகளாக சாலை. வண்டி சுற்றி வந்தபோது அந்தப்பாறை தலைக்குமேல் நிற்பதைக் கண்டேன். கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது.

செங்குத்தான பாறைவிளிம்புகளில் வரையாடுகள் மேய்வதைக் காணமுடிந்தது. நல்ல வெயில், புழுதி , ஆனால் குளிர். திடீரென்று ஓர் இடத்தில் மழை. மழைக்குள் புகுவதற்கு முன் ஆலங்கட்டிகள் பெய்தன. மேலிருந்து கல்பொழிகிறது என்றுதான் தோன்றியது. மழையில் நனைந்து அப்பால் சென்று கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் வெயில். புழுதி.

நள்ளிரவில் தர்மசாலா சென்றேன். பேருந்துநிலையம் அருகிலேயே ஒரு சிறுவிடுதியில் 600 ரூபாய்க்கு அறைபோட்டு தங்கினேன். காலையில் 6 மணிக்கு எழுந்து தலாய் லாமாவின் மடாலயம் அமைந்துள்ள மெக்லியோட்கஞ்ச் என்னும் குன்றுக்குச் சென்றேன். அங்கிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது. ஆட்டோரிக்‌ஷாவில் செல்ல 150 ரூபாய்.  மேலே செல்லச்செல்ல நல்ல குளிர்.

 

hh

மெக்லியோட்கஞ்ச் குன்று ஒரு சுற்றுலாமையம். உலகமெங்கிலும் இருந்து பௌத்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் வந்துகொண்டே இருக்கிறார்கள்.  சுற்றுலாப்பயணிகளுக்குரிய அனைத்தும் கடைகளில் குவிந்துள்ளன. பலவகையான பொம்மைகள், சிற்பங்கள், திபெத்பாணி போலி டோங்காக்கள், குத்துவாட்கள்,பாரம்பரிய ஆடைகள், கையால்செய்யப்பட்ட காகிதத்தால் ஆன குறிப்பேடுகள். உலகின் அனைத்துநாட்டு உணவுகளும் கிடைக்கும்.

விதவிதமான முகங்கள் . ஏராளமான ஹிப்பிகளைக் காணமுடியும். உள்ளூர்ப்பயணிகள் பெரும்பாலும் திபெத்தியர். அமெரிக்கர், பிரென்சுக்காரர்கள், ஜெர்மானியர் என பேச்சை வைத்துக் கண்டுபிடிக்கலாம். தலாய் லாமா அங்கு இல்லை. நாளாந்தர பூசைக்காக காலையிலேயே பிட்சுக்கள் அமர்ந்திருந்தனர். சற்றுநேரம் உடனிருந்தேன். சுற்றிச்சுற்றி நடந்தேன்.சுற்றிலும் பனிமலைகள். காற்று வீசும்போது குளிராடையையும் மீறி நடுக்கியது

தர்மசாலாவில் சுற்றிக்கொண்டிருந்தேன். மிகக்களைப்பாக உணர்ந்தபின்னர்தான் அது பசி எனத் தெரிந்தது. பசி தாகம் இரண்டையும் நானே உணர்ந்துகொள்வது இளமையிலிருந்தே எனக்குச் சிக்கலானதுதான். கொஞ்சம்கூட நடக்க, சிந்திக்க முடியவில்லை என உணர்ந்தபின்னர்தான் அது பசி அல்லது தாகம் என தெரியவரும். அதன்பின்னரும்கூட சாப்பிடுவதை ஒத்திப்போட்டுக்கொண்டே இருப்பேன்.

என்னை எவரோ பராமரித்துக்கொண்டே இருக்கும்நிலையிலேயே வாழ்ந்திருக்கிறேன் என இப்போது உணர்கிறேன். அதை முழுமையாகத் தவிர்க்கவேண்டும். எவரையும் சார்ந்தில்லாமல் வாழமுயலவேண்டும். ஆனால் அது ஒரு கனவு என்றும் தோன்றியது.

 

விடுதி சென்ற டிசம்பரில்
விடுதி சென்ற டிசம்பரில்

ஒரு பெரிய கேன் பழச்சாறு வாங்கிக்கொண்டு மடாலயத்தின் ஒரு மூலையில் அமர்ந்து தொலைவில் கண்கூச ஒளிவிட்ட பனிமலையை நோக்கிக்கொண்டிருந்தேன். முதலில் அவை திரை ஓவியம்போலிருக்கும். நோக்க நோக்க முப்பரிமாணம் கொண்டு எழுந்து அணுகிவரும். மலைமேல் சமவெளிகளைக்கூடக் காணமுடியும்.  திடீரென்று குளிர்வந்து நடுக்கியெடுக்கத் தொடங்குவது இமையமலைப் பகுதிகளின் இயல்புகளில் முக்கியமானது

அங்கே அமர்ந்தபடி வெற்று எண்ணங்களில் அமைந்திருந்தேன். என்னைப்பற்றி எப்போதும் ஒரு கணிப்பு உண்டு. நான் ஆணவம் மிக்கவன் என எனக்குத்தெரியும், அது இல்லையேல் என்னால் எழுதமுடியாது. ஆகவே அதைச் சுமந்தேயாகவேண்டும். அவ்வாணவத்தை நிறைவுசெய்யும் பெரியபணிகளைச் செய்தாகவேண்டும். அதற்கு சூழ இருக்கும் அனைத்தையும் வேர்நீட்டி உறிஞ்சிக்கொள்ளவேண்டும். பெரிய மரங்களின் குரூரமான தன்னலம்.

என்னைச்சார்ந்தவர்களுக்கு எப்படி இருக்கிறேன் நான் என எப்போதும் கேட்டுக்கொள்வதுண்டு. கூடுமானவரை இனியவனாக, நம்பகமானவனாக, நலம்நாடுபவனாக. ஆனால் நான் எண்ணும் அளவுக்கு அல்ல. புண்படுத்துபவன், புறக்கணிப்பவன், பொறுப்பற்றவன். எப்போதும் அந்தக்குறையை உணர்வதே என் துயரங்களில் ஒன்று.

 

jjj

நான் எழுதும் இலக்கியத்தின் உச்சங்கள் நான் அல்ல. மீளமீள என் வாசகர்களிடம் அதைச் சொல்லியாகவேண்டும். கீழ்மைகளில் உளம்திளைக்காமல் எவராலும் கீழ்மையை எழுதிவிடமுடியாது. வஞ்சம், சினம், காமம். அவை இல்லாமல் இலக்கியத்தின் நெசவு அமைவதுமில்லை. ஒற்றைப்படையான உளவிசை புனைவெழுத்துக்குரியது அல்ல. ஆகவே எழுதும் உச்சங்களுக்கு நேர் மறு எல்லையில் இருண்ட ஆழங்களிலும் திளைக்கிறது எழுத்தாளனின் உள்ளம்.மெய்ஞானம் இலக்கியத்தின் இலக்கு. ஆனால் இலக்கியவாதி வழிகாட்டிப்பலகைதான். அவன் அங்கே சேரவியலாது

ஆகவே எழுத்தாளன் எவருக்கும் வழிகாட்டி அல்ல. இலக்கியத்திற்கு அப்பால் எவருக்கும் ஆசிரியனும் அல்ல. ஆனால் அதை நாமே உணரும்போது உருவாகும் சோர்வு குரூரமானது. என்றாவது நோயும் முதுமையுமாக, செயலற்றுச் சித்தம் திரிந்து, இன்று வெண்முரசில் கிருஷ்ணன் பேசும் மகத்தான சொற்களை நானே வாசிக்கையில் என்ன உணர்வேன்? அதற்குமுன் சென்றுவிடவேண்டும் என்று வேண்டிக்கொள்வதன்றி ஒன்றும் சொல்வதற்கில்லை

[மேலும்]

முந்தைய கட்டுரைபயணம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரவு பற்றி…