இமையத் தனிமை -1

im1

 

மார்ச் மூன்றாம்தேதி சென்னைக்குச் செல்லும்போது அங்கிருந்து எங்காவது செல்லவேண்டும் என்னும் எண்ணம் இருக்கவில்லை. ஒருநாளில் திரும்பி வரவேண்டும் என்னும் கணிப்புதான். வழக்கமாக ஒருநாளுக்கு என்றால் இரண்டுநாளுக்கான ஆடைகள் எடுத்துக்கொள்வது என் இயல்பு., நீண்டகால அனுபவத்தால் அமைந்த நடைமுறையறிவு.

ஆனால் ரயில் கிளம்பியபோது எங்காவது செல்லவேண்டும் என்று தோன்றியது. ரயிலில் அமர்ந்திருப்பதே ஒரு பெரிய சுமையுடன் இருப்பதுபோல திணறவைத்தது. நிர்மால்யாவைக் கூப்பிட்டு ஊட்டிக்கு வருகிறேன், குருகுலத்தில் சிலநாட்கள் தங்கவேண்டும் என்று சொன்னேன். சென்னை சென்றபின் மனம் மாறிவிட்டது. ஊட்டியில் எல்லா இடங்களும் தெரிந்தவை. தெரிந்த முகங்கள் வேறு. தொலைந்துபோய்விடவேண்டும் என்று எண்ணினேன். இமையமலைப்பக்கம் சென்றுவிடலாம் என்று தோன்றியது. தொலைந்துபோய்விட ஏற்ற இடம் இமையமலைதான்.

சிம்லா அருகே உள்ள ஃபகு அருகே உள்ள பனி என்னும் ஊருக்கு நான் 1986 ல் சென்று அங்கு ஒர் இல்லத்தில் தங்கியிருந்தேன். ஆகவே ஃபகுவுக்குச் செல்வதாக முடிவெடுத்தேன். நான்காம் தேதி காலையில் டிஸ்கவரி நூல்மையத்தில் வெய்யிலின் கவிதைநூல் வெளியீட்டு விழா. இளங்கோ கிருஷ்ணன், சச்சின், மண்குதிரை என இளம் இலக்கியவாதிகள். அரங்கு சற்று சிறிது, பாதிப்பேருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆகவே சுருக்கமாகவே பேசினேன்.

.

q
சிம்லா

 

அன்றே மதிய உணவுக்குப்பின் சௌந்தரின் சத்யானந்த யோக மையத்தில் வெண்முரசு வாசகர்கள் வந்திருந்தனர். குருதிச்சாரலின் இறுதி பகுதியின் தத்துவப்போர் குறித்து பேசினேன். அதன் தத்துவஉள்ளடக்கம் இலக்கியத்தின் படிமமொழியில் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளதைப்பற்றி. அன்றிரவு வரை நண்பர்கள் உடனிருந்தனர்.

நான்காம் தேதிதான் விமானச்சீட்டு போட்டேன். ஃபகுவில் தங்க ஒர் இல்லத்தையும் முன்பதிவுசெய்தேன். ஐந்தாம்தேதி மாலை சென்னையில் இருந்து விமானம். நான் மதியமே கிளம்பி விமானநிலையம் சென்று வெறுமே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். கே.பி.வினோத் தன் காரில் கொண்டுசென்றுவிட்டார். செல்வதைப்பற்றி சென்னை நண்பர்கள் தவிர எவரிடமும் சொல்லவில்லை. என் உளநிலையை விளக்கிச் சொல்ல முடியாது என்பதனால்தான். சொல்கூட்டிப் பேசுவதே கடினமாக இருந்தது.

இரவு எட்டு மணிக்கு டெல்லியில் இறங்கியபோது நண்பர் தனாவின் உறவினராகிய சோழன் விமானநிலையம் வந்திருந்தார்.வாடகைக் காரில் டெல்லியின் வண்டிநெரிசல் நடுவே ஊர்ந்து சென்று இரவு பத்துமணிக்கு சிம்லா செல்லும் பேருந்தில் ஏறினேன். ஒரு பெரிய விடுதலையுணர்ச்சி உருவானது, இனி எவரிடமும் பேசவே வேண்டியதில்லை என. விமானத்தில் ஒரு இத்தாலிய நாவல் வாசித்தேன்.

 

Buildings-with-unattractive-facades-and-roofscapes-in-Shimla
சிம்லா

 

சிம்லாவில் பேருந்து நிற்கும்வரை நான் துயிலவேயில்லை. வெளியே முதலில் விளக்குகள் செறிந்த நகரச்சாலை, பின்னர் விளக்கொளித்துளிகள் சிதறிப்பரவிய சிற்றூர்கள், பின்னர் இருளே அலையலையாக எழுந்து மலைகளாகத்தெரிந்த இமைய அடிவாரம். மலைகளை அடைந்தபோது பேருந்தின் எதிரொலி எழுந்து மலைகளை செவிக்கும் காட்டிக்கொண்டிருந்தது. எழுதிய சொற்கள், எழுதவிருக்கும் சொற்கள் என எனக்குள் கொந்தளித்துக்கொண்டே இருந்தது.

குளிரத்தொடங்கியதும் தனாவிடம் கடனாகப்பெற்ற குளிருடையை அணிந்துகொண்டேன். விமானத்தில் இருக்கும்போதுகூட நான் ஊரில் இருப்பதாகவே தோன்றியது. ஊரிலிருந்து ஒவ்வொன்றையாக உதறிக்கொண்டிருந்தேன். சிம்லா பேருந்தில் அமர்ந்தபோதே சிம்லா சென்றுவிட்டேன். ஊர் நெடுந்தொலைவில் எங்கோ இருந்தது. எண்ணங்கள் கூட ஒவ்வொன்றாக எடுத்து எடுத்து பார்த்துக் கைவிடும் செயல்தான்.

சிம்லாவில் இறங்கியதுமே வாடகைக்கார் ஓட்டுநர்கள் சூழ்ந்துகொண்டனர். கோட் போட்ட எழுபதுவயதுக்காரர் பொதுவாக வாடகைக்கார்களை நிர்வாகம் செய்தார். என்னிடம் எங்கே செல்லவேண்டும் என்று ஆங்கிலத்தில் கேட்டார். ஃபகு என்றதும் “விலாசம் கொடு” என்றார். அதை காட்டியதும் திரும்பி ஒர் ஓட்டுநரிடம் இந்தியில் “இவரை கூட்டிக்கொண்டு செல். ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொள்” என்றார். என்னிடம் “ஆயிரம் ரூபாய்” என்றார்.

hil

நான் “ஆயிரம் ரூபாய் கூடுதல்” என்றேன். “இங்கே பேரம் கிடையாது. ரேட்டை எவரும் கூட்டி வாங்கவும் விடமாட்டோம். ஃபகுவுக்கு ஆயிரம் ரூபாய். இங்கிருந்து ஃபகு 25 கிமீ தொலைவு. நீங்கள் செல்லவேண்டியது பனி, அங்கிருந்து ஏழு கிமீ மேலும் செல்லவேண்டும். சென்று வருவதற்குத்தான் கட்டணம் வசூலிப்போம், அங்கிருந்து எங்களுக்கு வாடிக்கை கிடைக்காது” என்றார்.

சிரித்தபடி என் தோளில் தட்டி “நம்பு சகோதரா, அங்கே செல்லும்வழியில் நீயே உணர்வாய், ஆயிரம் அதிகமில்லை என்று. இங்கே எங்களுக்கு நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி நான்கு மாதங்களும் வருமானமே இல்லை. எஞ்சிய மாதங்களில் சம்பாதித்து வாழ்கிறோம். ஆனாலும் டெல்லியை விட இங்கே வாடகை குறைவுதான்” நான் சிரித்துக்கொண்டு சரி என்றேன். டெல்லியில் இருபது கிலோமீட்டருக்கு ஆயிரம் கொடுத்திருந்தேன்.

fagu-shimla2
ஃபகு வயல்கள்

 

ஃபகு செல்லும்பாதை ஒரு மாபெரும் ரங்கராட்டினம். நல்ல சாலைதான், ஆனால் சுற்றிச்சுற்றி மலையிறங்கி பின்பு மேலும் ஏறிச் சென்றது. ஃபகு சிம்லாவை விட உயரமானது. அந்த கோட்டுபோட்ட மனிதர் யார் என்று கேட்டேன். “பண்டிட்ஜி” என்றார். அவரை புரோக்கர் என முதலில் நினைத்தேன். ஆனால் அத்தனை ஓட்டுநர்களும் அவர் சொல்லுக்குக் கட்டுப்படுவதைக் கண்டு கார் உடைமையாளர் என நினைத்தேன். பின்னர்தான் புரிந்தது அவர் ஆங்கிலம் பேசத்தெரிந்தவர், பிராமணர் என.

விடியற்காலையின் ஒளியில் கண்ட சிம்லா ஏமாற்றமூட்டியது. எங்கு பார்த்தாலும் இடைவெளியே இல்லாமல் கட்டிடங்கள். அம்மை வந்த உடல் போல. பின்னர் ஒரு குழந்தையை என்னுள் இருந்து எடுத்துக்கொண்டேன். குன்றுகள் முழுக்க கட்டிடங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக. கட்டிடங்களின் வானளாவிய குவியல்கள். கட்டிடங்களால் ஆன மலைகள். ஒரு நோக்கில் பலநூறு கிளைகள் கொண்ட மாபெரும் மாடிக்கட்டிடம்!

 

im2
நான் தங்கியிருந்த ஸ்னோவியூ தங்குமிடம்

 

ஃபகுவைச் சென்றடைய ஒன்றரை மணிநேரம் ஆகியது. என் இல்லத்தங்கல் உரிமையாளரை செல்பேசியில் அழைத்து வழிகேட்டுக்கொண்டு சென்றேன். சுற்றிலும் ஊசியிலைமரங்கள் செறிந்த மலைச்சரிவில் தனியாக இருந்தது ராகேஷ் டாக்கூரின் இல்லம். முப்பத்தைந்து வயதான உற்சாகமான இளைஞர். முட்டிமோதி ஆங்கிலம் பேசுவார். ஹிமாச்சலப்பிரதேசமே இந்தியாவிலேயே நட்பான மாநிலம் என்பது என் எண்ணம் [கேரளத்திற்குக் கடைசி இடம், அதற்கு முன்பாக தமிழகம்] அந்த எண்ணம் அவரால் மேலும் வலுப்பெற்றது. முதல் பார்வையிலேயே பிடித்துவிடும் எளிய இனிய மனிதர்

ஸ்னோலைன் இல்லத்தங்கல் [http://snowlineviewhomestay.com] சிறிய அமைப்பு. நான்கு அறைகளை வந்து தங்கும் விருந்தினருக்காகக் கட்டியிருந்தார் ராகேஷ் டாக்கூர். வசதியான நல்ல அறைகள். ஒரு உணவுக்கூடம். கீழே ஒருபகுதியில் அவருடைய இல்லம் . அவருடன் அவர் அம்மா, அப்பா, மனைவி இரு பெண்குழந்தைகள் வாழ்ந்தனர். பரீணிதி தாகூர் எல்கேஜி. அவள் தங்கை சுஜாதா தாகூர் நடைபழக ஆரம்பித்திருந்தாள். உணவு அவர் வீட்டில்தான். அவர் அப்பா ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். ராகேஷ் அங்கே ஏழு ஏக்கரில் ஆப்பிள் பயிரிடுகிறார். நான்கு எருமைகள். கீழே மேலும் ஏழு ஏக்கரில் உருளைக்கிழங்கு, பெரும்பயறு ஆகியவை பயிரிடுகிறார்.

பகலில் அதிகபட்சம் 15 பாகை வெப்பம், இரவில் 5 பாகைக்கும் கீழே. ஒருநாள் புலரியில் சுழியம்கூட வந்தது. காலையில் எல்லா புல்நுனிகளிலும் பனிக்கட்டி மணிகள். ஓடைகளின் விளிம்புகளில் பனிக்கட்டி கண்ணாடிச்சில்லு போல கூர் கொண்டு நின்றது. நான் செல்வதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்புவரை அப்பகுதியை உறைபனி மூடியிருந்தது. நான் அமர்ந்திருந்த மாடியில் இரண்டு அடி உயரத்திற்கு பனி இருந்தது என்றார் ராகேஷ் டாக்கூர்

.

im3
ராகேஷ் தாகூர்

 

ஆப்பிள்மரங்கள் அனைத்தும் இலைகளை உதிர்த்து குச்சிகளாக நின்றன. அவற்றின் கிளைகள் பனிதாளாமல் ஒடிந்திருந்த வடுக்களில் பச்சைநிறமான ஏதோ பூசியிருந்தார். சிறிய ஆப்பிள் மரங்களுக்கு பாலிதீன் போர்வை இடப்பட்டிருந்தது.  ராகேஷ் டாக்கூர் “குளிர்தாளாதவை… இரண்டுநாளில் எடுத்துவிடுவோம்” என்றார்.

என் கால்கள் மரத்து விரல்கள் அசைவிழந்தன. நான் ஷூக்கள் கொண்டுசெல்ல்வில்லை, என் வழக்கமான செருப்பைத்தான் போட்டிருந்தேன்.  அறைக்குள் சென்று வெந்நீரில் காலை வைத்து இதமாக மீட்டுக்கொண்டேன். பின்னர் வெளியே நடக்கச் சென்றபோது பாலிதீன் கவரை காலுறையாகப் போட்டுக்கொண்டேன். ஃபகு கடைவீதியில் அன்றே ஒரு கம்பிளிக் காலுறையை வாங்கி அணிந்தபின் சமாளிக்கமுடிந்தது.

உள்ளூரில் கிடைக்கும் ஆப்பிள், பைன் மரங்களைக்கொண்டு சுவர்களும் உட்கூரையும் அமைக்கப்பட்ட நவீனமான அறை. தரையில் கம்பளம் ஒட்டப்பட்டிருந்தது. மெத்தை, போர்வை எல்லாமே சுத்தமானவை.  தண்ணீரைத் தொடமுடியாது, குளிர். வெந்நீர் எப்போதும் இருந்தது. அறைகளுக்கு முன் பெரிய உப்பரிகைகள்.

 

im9
கண்ணாடி அறை

 

அறையை ஒட்டி ஒரு கண்ணாடி அறை.மூன்றுபக்கமும் பார்க்கமுடியும். வெளியே ஐந்து பாகை வரை குளிர் இருந்தபோதிலும் உள்ளே இருபதுதான். காலைவெயிலில் இருபத்தைந்து வரை வந்தது. “உள்ளே மெட்ராஸ் போல இருக்கும்” என்றார் ராகேஷ் டாக்கூர் ”மெட்ராஸ் வந்திருக்கிறீர்களா?” என்றேன். “ஆம், அங்கே ஒரு மாதம் தங்கினேன். தாங்கமுடியாத வெப்பம்….இரவெல்லாம் தூங்கவே முடியாது” என்றார். “எப்போது வந்தீர்கள்?” என்றேன். ”2012 டிசம்பரில்” என்றார்.

நான் பெரும்பாலான நேரம் கண்ணாடி அறையின் உள்ளேயே இருந்தேன். நேர்முன்னால் மலையடுக்குகள் பெரும்சரிவாக இறங்கிச்சென்றன. ஒரே நோக்கில் பல குன்றுகள், அவற்றில் நாடாபோலச் சுற்றியிருந்த சாலைகள், மண்புழுக்களைப்போன்ற ஊர்வழிகள். அவை சென்று சேர்ந்த சிற்றூர்கள். சரடில் பிணைக்கப்பட்ட பட்டங்கள் போல். திராட்சைக்கொடியில் காய்கள் போல். ஒளியில் மின்னும் தகரக்கூரைகள். மிக அரிதாக  சிறுபேன் என ஊரும் பேருந்துகள். அவற்றின் முகக்கண்ணாடியின் ஒளி கண்களை வந்து வெட்டிச்செல்லும்.

சுற்றிலும் ஆப்பிள்தோட்டங்கள், ஊசியிலை மரக்காடுகள், மலைமடிப்பின் ஆழங்களில் பனி வழிந்திறங்கிய அருவிகளின் வடுக்கள். அத்தனை விரிவை விழிகளால் நோக்குவதே ஓர் அமைதியை அளித்துவிடுகிறது. இதே விரிவனுபவத்தை பாலைநிலத்தைப் பார்க்கையிலும் அடைந்திருக்கிறேன்.

 

im4
படுக்கையறை

நேர் முன்னால் மூன்று அலைகளாக பனிமுகடுகள். பதினைந்து நாட்களாகப் பனி உருகிக்கொண்டிருக்கிறது என்று ராகேஷ் சொன்னார். ஆனாலும் அத்தனை முடிகளும் பனிசூடியிருந்தன. அங்கிருந்து வந்த காற்றுதான் அத்தனை குளிரை அளித்தது. மாலை மூன்றுமணிக்கெல்லாம் காற்று வீசத்தொடங்கிவிடும். அதன்பின் வலுத்துக்கொண்டே செல்லும்.

காலையில் கிளம்பி ஒரு நீண்ட நடை. மிகமெல்ல. வெயிலில் மட்டுமே நிற்கமுடியும், கொஞ்சம் நிழல் வந்தாலும் நடுங்கத் தொடங்கிவிடுவோம். அவ்வப்போது தலைக்குமேல் மடிப்புகளாக எழுந்துசென்ற மலையில் இருந்து புழுதி பெரிய அருவி போல இறங்கி வந்து சூழ்ந்து கடந்து கீழிறங்கிச்செல்லும். வெவ்வேறு இடங்களில் நின்று பனிமலையை நோக்கிக்கொண்டிருந்தேன். எண்ணங்கள் ஏதுமில்லை. எந்த திட்டங்களும் ஓடவில்லை. எவரையும் எண்ணிக்கொள்ளவில்லை.

எமர்சன் ஒரு கட்டுரையில் மலைகளுக்குச் செல்லவேண்டாம், அவை செயலின்மையை அளிக்கின்றன. கடலோரம் செல்க, கடலின் அலைகள் ஊக்கமூட்டுபவை என்கிறார். எனக்கு கடலோரம் நெடுநேரம் நிற்கமுடிவதில்லை. மிக அரிதாகவே கடலோர விடுதிகளில் தங்கியிருக்கிறேன். கடலோரம் வானில் முகில்திரள்வது பிடிக்கும். ஆனால் மலைப்பகுதி என்னை ஆழ்ந்த அமைதிக்குக் கொண்டுசென்று கனவுகளால் நிறைக்கிறது. குளிர் மிக்க இரவுக்குப்பின் மெல்லிய வெயிலில் கண்மயங்குவது ஒருவகை ஊழ்கநிலை

k

அந்தக் கண்ணாடியறைக்குள் இருந்தபடி அந்தியையும் பின் காலையையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தி இருள்வது ஐந்துமணிக்கே தொடங்கிவிடும், ஆறுக்கெல்லாம் நல்ல இருள். பனிமலைமுகடுகள் நெடுநேரம் வெண்மையாக தெரியும். மலைகளில் இருந்து பிரிந்து வானில் தனியாக மிதந்து நிலைகொள்வதுபோல. பின்னர் அவை சிவந்து கனன்று வானில் மூழ்கி மறையும்

பிப்ரவரியில் வானில் வானில் முகில்களே இல்லை. இனி ஜூனில்தான் மழைக்காலம். ஆனால் இமையமலையடிவாரத்தில் மழைக்கு அப்படி கறாரான காலக்கணிப்பு இல்லை. நான் செல்வதற்கு முன்பு தொடர்ச்சியாக ஏழுநாட்கள் மழை. சாலைகள் ஈரமாக இருந்தன. காடுகளுக்குள் சிறிய குட்டைகளில் சேறு தெரிந்தது. ஆனால் இமையமலையின் புழுதி மிக எளிதில் காய்ந்து பறக்க ஆரம்பித்துவிடும். மலைச்சரிவுகளில் புழுதி வழிந்தது

முழுநீல வானின் கீழ் மலைகள் என்பது ஒர் ஓவியத்தன்மையைச் சூழலுக்கு அளித்தது. பெரும்பாலான புகைப்படங்கள் தப்பாக எடுக்கப்பட்டவை. சொல்லப்போனால் என் கை குளிரில் நடுங்காமல் ஒரு படம்கூட எடுக்கப்படவில்லை. செல்பேசியில் படம் எடுப்பது எனக்கு வழக்கமும் இல்லை. எப்போதும் பயணங்களில் நான் படம் எடுப்பதில்லை. அது உளப்பதிவை இல்லாமலாக்கிவிடும் என்பது என் எண்ணம். மிக அரிதாக ஒருசில படங்கள் எடுத்தேன். ஆனால் எல்லா படங்களையும் ஓரளவு அழகாக ஆக்கியது நீலவானம்தான்.

im11
கண்ணாடி அறை உட்பக்கம்

 

இரவெல்லாம் விண்மீன்கள். அவை அக்கண்ணாடி அறையைச் சூழ்ந்து மிக அருகே மிதந்து நிற்பதுபோலத் தோன்றும். கீழே சிற்றூர் விளக்குகளும் மீன்களே. சிலசமயம் நாம் ஒரு விண்கலத்தில் பூமிக்குமேல் மிதப்பதுபோலிருக்கும். நோக்கிக்கொண்டிருந்தால் நாம் ஒழுகிச்செல்வதுபோலக்கூடத் தோன்றும்.

இரவில் கம்பிளிக்குமேல் போர்த்திக்கொள்வதற்கான மென்மெத்தையையும் போட்டு நம்மைச் சுருட்டிக்கொள்ள வேண்டும். வெளியே காற்றின் ஓசை மழைபோல கேட்டது.

இரவில் துயில்கையில் வெளியே கேட்கும் அனைத்து ஒலிகளும் சிறுவயதில் என் வீட்டில் கேட்ட ஓசைகளாக உருமாறிவிட்டிருந்தன. தென்னைமரங்களின் சிறகடிப்பு. திற்பரப்பு அருவியின் ஓசை. இங்கே தென்னை மரங்கள் வளரமுடியாது. ஆனால் நான் உணரும் அனைத்து நிலங்களிலும் விழிமூடினால் தென்னை நின்றிருப்பதை உணரமுடிகிறது.நெடுங்காலத்திற்கு முன் என் முன்னோர் ஒருவர் தன்னை தென்னைவிறகில்தான் எரியூட்டவேண்டும் என இறுதியாகச் சொன்னாராம்

காலையில் ஆறுமணிக்கு ஒலிஎழுப்பியை வைத்து எழுந்துகொண்டேன். கதிரெழுவதைப் பார்ப்பதற்காக. உப்பரிகையில் நிற்க முடியவில்லை. காற்றின் குளிர் நடுக்கியது.கண்ணாடி அறைக்குள் சென்று அமர்ந்து சூரியனுக்காகக் காத்திருந்தேன்.

 

im5

இமைய மலைமுடிகளில் சூரியன் எழுவது சொல்லும்தோறும் மேலும் விரியும் தருணம். முதற்புலரியில் சற்று மங்கலான வெண்புகையாலானவை போல மலைகள் ஒன்றன்மேல் ஒன்றெனப் படிந்து தென்படும். அல்லது வெண்ணிறத் தாளில் எண்ணைக்கறையின் அலைகள் போல. பாலிதீன் தாள்களை மேல் மேலாக அடுக்கியதுபோல. ஒரு மலையை ஊடுருவி அப்பாலிருக்கும் அடுத்த மலையைப் பார்த்துவிடமுடியும் என்றுகூடத் தோன்றும்.

கிழக்கின் அடியிலிருந்து ஒளி எழத்தொடங்கியதும் மென்மையான மலரிதழ்களாக மாறுகின்றன. அடுக்கிதழ் கொண்ட மலர் என்னும் விழிமயக்கில் இருந்து என்னால் விடுபடவே முடிவதில்லை. மலைகள் எப்படி மலரிதழ்களாக முடியும் என வினவுபவர்கள் இமையமலைக்குச் சென்றுதான் பார்க்கவேண்டும். மெதுவாக நீலமலரிதழ் அடுக்குகளாகின்றன. இளநீலம் அடர்நீலமாகிறது. அதன் விளிம்பு என வெண்பனிமுகடுநிரைகள். அவற்றில் ஒரு கூர்முனை மட்டும் சற்றே குருதிபூசிக்கொண்டதுபோல் தோன்றுவது உளம் கிளரவைக்கும் காட்சி. விழிவிலக்கவே கூடாது.

 

im22
விடுதியின் முகப்பில் இருந்து தெரியும் இமையமுடிகள்…

 

நோக்கிக்கொண்டிருக்கையிலேயே இன்னொரு மலை செவ்வொளி கொள்ளும். அதற்கு எந்த ஒழுங்குநெறியும் இல்லை. எந்த மலைமுடி அடுத்து என விழி அலைந்துகொண்டே இருக்கையில் ஒரு மலை செம்முனை சூடுவதை தவறவிட்டிருப்போம். பின்னர் அனைத்துமலைகளும் செந்நிறப் பனிக்கூர் கொண்டுவிடுகின்றன. மலைவளைவுக்குமேல் சூரியன் எழுகையில் ஒளிச்சட்டங்கள் விரிந்து வானை தாங்கிநிற்பவை போல விரிகின்றன. சற்றுநேரத்திற்குள் கண்கள் கூச எங்கும் ஒளிப்பெருக்கு. திரும்பிப்பார்த்தால் சுவரில் நம் நிழல் மட்டும் சிவப்பாகத் தெரியும்.

மிகப்பெரும்பாலான நேரம் பனிமலைகளை நோக்கிக்கொண்டு வெறுமே அமர்ந்திருந்தேன். அங்கு சென்ற முதல் நாள் ஊரைப்பற்றிய எண்ணங்கள் இருந்தன. பின்னர் ஒரு சலிப்பான சோர்வு. பின்னர் இனிய சலிப்பு. பின்னர் வெறுமே அமர்ந்திருப்பதன் இனிமை மட்டும்.

[மேலும்]

 

இமையத் தனிமை – 3

இமையத் தனிமை – 2

முந்தைய கட்டுரைகுற்றமும் தண்டனையும் பற்றி…
அடுத்த கட்டுரைபிழைகள்