கலை -கடிதங்கள் மேலும்…

Bhikshatana_Shiva

 

அருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன்

இந்திய ஓவியங்களை ரசிப்பதன் தடை என்ன?

இந்தியக்கலை – ஏ .வி. மணிகண்டன் கடிதம்

இந்தியக்கலை -கடிதங்கள்

 

ஏ வி மணிகண்டன் அவர்களின் கடிதத்திற்கு என்னுடைய பதில் பின்வருவது:

வணக்கம் திரு.ஏ வி மணிகண்டன்

கலை என்பது என்ன என பல முறை தேடியிருக்கிறேன் என்னுள்ளேயும் வெளியிலும். என்னுடைய புரிதல்களை சுக்கு நூறாக்கிய ஜேம்ஸ் ஜோய்ஸே அதற்கான பதிலையும் கொடுத்திருக்கிறார் “அறிபடு பொருள்களை அழகியலை நோக்கி மனிதன் கொண்டு செல்வதே கலை” என அவர் கூறுகிறார். (Art is the human disposition of sensible or intelligible matter for an aesthetic end).

இங்கிருந்தே நான் கலையை நோக்குகிறேன். ஓவியம் இலக்கியம் புகைப்படம் என அனைத்து கலைகளையும்.நான் அறிந்தவை பள்ளியிலோ கல்லூரியிலோ கற்றவை அல்ல. புத்தகங்களின் மூலமாக இணையத்தின் மூலமாக அறிந்தவை. எனவே என்னுடைய வழி வழக்கமானதாக இல்லாமல் இருக்கலாம். அது விவாதத்திற்கு உரியதே. டைலேக்ட்டிக் மூலமே முன்செல்லமுடியும் என்பதால் உங்களுக்கு இதை அனுப்புகிறேன்.தவறிருப்பின் திருத்தவும்.

அழகியல் தனிப்பட்ட ரசனை சார்ந்தது. போட்டிசெல்லியின் வீனஸ் எனக்கு அழகு என்றால் டாவின்சி மைக்கேலேஞ்சலோ வின் சற்றே ஆண் தன்மை கொண்ட அன்ரோகினோஸ்(androgynous) பெண்கள் மற்றொருவருக்கு அழகு.

எவ்வளவோ விவரணைகளை படித்தும் விளக்கங்களை அறிந்தும் டாலி டுசம்ப் போன்றவர்களின் சர்ரியலிஸ்ட் ஓவியங்களின் அழகியல் எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை . ஆனால் எவ்வித அறிமுகமும் இன்றி வான்கோவின் ஓவியத்தை பார்த்த போதே அது என்னுள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. உதாரணத்திற்கு ‘wheatfields under the thunderclouds’ ஓவியம். இம்ப்ரெஸ்ஸியோனிஸ(impressionism) ஓவியங்களும் அவ்வாறே.

 

வாங்கோ வேகமாக வரையக்கூடியவர். இருபது முதல் நாற்பது நிமிடங்களில் ஒரு ஓவியத்தை முடித்துவிடுவார்.கொட்ட போகும் மழையின் கணநேரத்திற்கு முன்னான நொடிகளில் நெல்வயல்களுக்கு நடுவில் நின்று கொண்டு அவர் ஓவியம் தீட்டுவது என் கண் முன் தெரிகிறது. இவ்வாறான ஒரு அறிமுகத்தின் மூலம் நான் அவர் கலையை மேலும் புரிந்துகொள்கிறேன்.

டாவின்சியின் லெடா மற்றும் அன்னம்(leda and the swan) ஓவியத்தை புரிந்துகொள்ள அதிலுள்ள கிரேக்க தொன்மத்தை அறிந்திருக்க வேண்டும். அதை அறியாதவற்கு அது மனம் பிறழ்ந்த ஒருவரின் sexual fantasy ஆகவே தோன்றும். இவ்வகையிலான தவறான முதல் அறிமுகம் அதன் அழகியலை அறிவதற்கும் தடையாக அமையக்கூடும்.

ஓவியத்திற்கான பொது அறிமுகம் இவ்விரண்டையும் சேர்த்தே அறிமுகம் செய்தல் வேண்டும்.அறிபடுபொருளையும்(intelligible or sensible matter) அழகியலையும்(aesthetics). இரண்டும் ஒன்றுடனொன்று ஒத்திசைவுடன் செல்வது.

ஒரு மேற்கத்திய ஓவியத்தில் இடம்பெறும் ஆப்பிள், மெழுகுவர்த்தி போன்றவை அந்த ஓவியத்திற்கு மேலும் பல அர்த்தங்களை சேர்க்க கூடியது. அவ்வர்த்தங்களை விளக்கும் முன் அந்த ஓவியத்தின் போர்ட்ரைட்டில் உள்ள உருவத்தை மட்டும் கவனிக்காமல் சுற்றி இருக்கும் ஆப்பிளையும் மெழுகுவர்த்தியையும் எலுமிச்சையையும் புத்தகங்கள் என மேலும் பல பொருட்களையும் கவனிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு அதன் அர்த்தத்தை தத்துவத்தை விளக்கலாம்.

ஒரு பொது வாசகனுக்கு இவ்வகையிலான அறிமுகத்தை முதலில் கொடுத்துவிட்டு பிறகு கலை வரலாறு தத்துவம் பற்றி கூறலாம். முதலிலேயே கோட்பாடுகளுக்கும் வரையறைகளுக்கும் சென்றால் அவன் இது மிகவும் சிக்கல் போலவே என்று எண்ணி பின்வாங்க கூடும்.

இவ்வகையிலான பொது அறிமுகத்தை எனக்கு தந்தது பெரும்பாலும் புத்தகங்களும் கார்டியன் போன்ற பத்திரிகைகளில் வந்த கட்டுரைகள் தான். இது போன்ற தேர்ந்த கட்டுரைகளை நான் இந்திய பத்திரிக்கைகளில் ஒரு முறை கூட கண்டதில்லை.

பத்திரிகைகளில் கலை பற்றி பேசும் போது அது நேராக பொது வாசகனை சென்றடைகின்றது.இக்கட்டுரைகளை பொது வாசகனுக்கு கொண்டு சேர்ப்பது கலை வரலாறு படித்தவர்களின் கடமை என நான் எண்ணுகிறேன். கூகிளில் கலை வரலாறு படிப்பை பற்றி தேடினால் விரல் விட்டு எண்ணும் அளவிற்கான கல்லூரிகளே அப்படிப்பை வழங்குகின்றன. பொறியியல் கல்லூரிகள் ஊருக்கு குறைந்தது இரண்டாவது உள்ளன.

டச்சு ஓவிய பொற்காலம் என கூற படும் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பல ஓவியங்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மக்கள் ஓவியத்தை விரும்பி வாங்கினர். கலை பற்றி பலர் பேசும்போதே இவ்வாறான ஒரு நிலை அடையப்படும். இங்கும் அவ்வாறு நடக்க பலர் கலையை பற்றி பேசவேண்டும் விவாதிக்கவேண்டும்.

அரசியல் பற்றி அனைவர்க்கும் சற்றே பொதுவான சில விஷயங்கள் தெரிந்திருப்பது போன்றே கலையை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அரசியலுக்காக சமையலுக்காக வாகனங்களுக்காக என பல வற்றை பற்றியும் பல வார,மாத இதழ்கள் இங்கு வெளிவருகின்றன. கலைக்கென தனியாக ஒரு சிறந்த இதழ் இது என கூற ஏதும் இருப்பதாக தெரியவில்லை(வட இந்தியாவிலிருந்து ஆங்கிலத்தில் வெளிவரும் சில இதழ்களை தவிர).

நாம் இந்நேரம் இதை பேசி கொண்டிருக்கையில் பிபிசியின் civilisations என்ற கலை வரலாறு ஆவண படம் ஆரம்பித்திருக்கிறது. https://www.theguardian.com/tv-and-radio/2018/feb/24/bbc-civilisations-1969-civilisation-tv-global-art-history. இது போன்று இந்தியாவில் நம் கலைகளை பற்றி எழுதப்படுவதும் படங்கள் எடுப்பதும் என் கனவாக மட்டுமே இருந்துவிட கூடாது.

புனலாட முடிவுசெய்து விட்டால் ஆடைகளை கழற்றவேண்டும் என அவசியம் இல்லை ஆடையுடனே புனலில் இறங்கலாம். நீங்கள் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் எழுதிய கடிதங்கள் கட்டுரைகள்  மூலமே நீரில் இறங்கிவிட்டீர்கள் (கலை வரலாற்றை எழுத துவங்கிவிட்டீர்கள்) பேராசிரியர் ஆகிய பிறகே எழுத வேண்டும் என்ற ஆடையை கழற்ற வேண்டுமா இல்லையா என்பது உங்கள் விருப்பம்.

ஸ்ரீராம்

 

ஜெ

 

கலைகளின் வரலாறு பற்றிய ஒரு விவாதம் இங்கே நிகழ்வது மகிழ்ச்சியூட்டுகிறது. என் பெயர் வேண்டியதில்லை. நான் ஒரு கவின்கலைக்கல்லூரி மாணவன். நான் தேடிவந்தது வேறு, இங்கே கற்பிக்கப்படுவது வேறு. நான் இந்தியக்கலையை , மேலைக்கலையை அதன் ஆழமான குறியீடுகளுடன் கற்க ஆசைகொண்டிருந்தேன்.

 

இங்கே வந்தால் தெரிந்தது, திரும்பத்திரும்ப எங்களுக்கு இரண்டு விஷயங்கள்தான் கற்பிக்கப்படுகின்றன. ஒன்று வடிவங்கள், வண்ணங்கள், தொழில்நுட்பங்கள். அதுவும் பாதி நாமே கற்றுக்கொள்ளவேண்டியதுதான். எஞ்சிய நேரத்தில் மேலைநாட்டு ஓவியக்கலை இயக்கங்கள். அவற்றிலுள்ள கொள்கைகள், சில பெயர்கள். அவ்வளவுதான்.

 

எங்களை கும்பகோணம் ராமசாமி கோயிலுக்குக் கொண்டுசென்றார்கள். சிற்பங்களைச் சுட்டிக்காட்டி ‘கல்பொம்மைகள்’ என்ற அளவிலேயே அறிமுகம் செய்தார்கள். ’என்னென்ன நகைகள் போட்டிருக்கிறது சிலை என்றுபாருங்கள்’ என்ற அளவில். மேலும் ஓராண்டு கழித்து உங்கள் இணையதளத்தில்தான் நான் அங்கிருப்பது தலைக்கோலி சிலை என்றும், அதன் பண்பாட்டு இடம் என்ன என்றும் புரிந்துகொண்டேன்.

 

இந்தியாவின் கலைமரபை, தொன்மங்களை, பண்பாட்டுப்பின்புலத்தை எல்லாம் எந்தக் நுண்கலைக் கல்லூரியிலும் சொல்லித்தருவதில்லை. சந்தேகமிருந்தால் இங்கே நுண்கலை பயிலும் சிலரிடம் பேசிப்பாருங்கள். அடிப்படையே இருக்காது. ஏனென்றால் கொஞ்சம் தத்துவம், மதம், மெய்யியல் எல்லாம் சேர்த்துத்தான் சொல்லித்தர முடியும். காளாமுக மரபு என்றால் என்ன என்று தெரியாமல் எப்படி பிட்சாடனரை விளக்கமுடியும்?

 

எங்கள் ஆசிரியர்களுக்கே ஒன்றும் தெரியாது. அதுகூட பிரச்சினை இல்லை. இதெல்லாம் பழங்குப்பைகள், தேவையற்றவை என்ற எண்ணம். கேலியும் நக்கலுமாகவே சொல்லித்தருவார்கள். மூளையில் ஒரு ‘ஸில்லி’ பகுத்தறிவுநோக்கைப் புகுத்திவிடுவார்கள். அதன்பிறகு கலையே மண்டைக்குள் ஏறாது. மொண்ணையான விமர்சனங்கள் மட்டுமே தோன்றும்.

 

அதன்பின்  ‘ஒரிஜினலாக’ என்ன வரைவது? எங்காவது வேலைக்குச் செல்வது. அல்லது மேலைநாட்டு பாணிகளை நகல் எடுப்பது. அவ்வளவுதான். இங்கே இன்றைக்கு தத்துவம் பண்பாடு கலை மூன்றும் கலந்த ஒரு ஒருங்கிணைந்த கலைக்கல்வி தேவை. அதை தனியார்தான் அளிக்கமுடியும்.

 

அன்புடன்

_