பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,
வணக்கம்.
ஒரு சமயம் ஒரு கட்டுரையில் நீங்கள் வைணவ ஜீயர் ஒருவரை சந்திக்க நேர்ந்தபோது அவரது திருமண் சாத்திய அழகிய கோலத்தை வர்ணிக்கும்போது ‘நல்ல பாறையில் சாற்றிய ஏணி போல் இருந்தார்‘ என்று குறிப்பிட்டிருப்பீர்கள் (இன்று நினைத்தாலும் எனக்கு குபீரென்று சிரிப்பை வரவழைப்பது!) அது போல் ஒரு சமயம் மாலை முரசு செய்தித்தாள் கட்டின் மேல் தலை வைத்து தூங்கி கொண்டிருந்தவரை பார்த்து சுந்தர ராமசாமி அவர்கள் இவரென்ன மோசிகீரனாரோ என்றுகூறியதாக குறிப்பிட்டிருப்பீர்கள்!. அது போல் இப்பொழுது ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் அன்றைய நாட்டு நடப்புக்களை பிரதிபலித்து வரும் தமிழ் மீம்ஸ்களை எப்படி பார்க்குகிறீர்கள்? .மாதிரிக்கு ஒன்றை இணைத்திருக்கிறேன்.
அன்புடன்,
அ .சேஷகிரி.
அன்புள்ள சேஷகிரி,
இந்த மீம்ஸ்களை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. சிரித்தவை மிகச்சில. நினைவில் நிற்பவை அனேகமாக ஏதுமில்லை. இவை மிக குறைவான அறிவுத்திறனும், அதைவிடக்குறைவான சூழலறிவும் கொண்டவர்களுக்காக உருவாக்கப்படுபவை.
இங்கே நகைச்சுவை என்பது வார்த்தை வேடிக்கை, நேரடியான நையாண்டி அல்லது வசைபாடல் என்ற அளவிலேயே உள்ளது. அதற்கான காரணம் என்ன என்று நான் முன்னரும் சொல்லியிருக்கிறேன். நகைச்சுவை என்பது பொதுவான சொல். கேலி,நையாண்டி, இடக்கு, பகடி என அவை பலவகை. முதல் மூன்றுவகையிலேயே இங்கே பரவலான நகைச்சுவை உருவாக்கப்படுகிறது. நல்ல நகைச்சுவை நுட்பமான பகடியாகவே இருக்க இயலும்
நகைச்சுவை நிகழ ஓர் அறிவின் பின்புலம் தேவையாகிறது. நகைச்சுவை எப்படி நிகழ்கிறது? ஒரு சிறிய மொழிக்குறிப்பு, அடையாளம் அளிக்கப்படுகிறது. அதைக்கொண்டு ஒரே கணத்தில் அந்நகைச்சுவையை அறிபவர் ஒரு முழு முரண்பாட்டைச் சென்றடைகிறார். அவ்வாறு ஊகித்து அறியும் அந்தக்கணத்தில்தான் நாம் சிரிக்கிறோம், அல்லது புன்னகை செய்கிறோம்.
எதன்பொருட்டு நாம் சிரிக்கிறோமோ அது நமக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. நாம் ‘அறிந்து’ சிரிக்கவில்லை, ஏற்கனவே தெரிந்தவற்றை வேறு ஒரு கோணத்தில் ‘தொகுத்துக்கொண்டு’ சிரிக்கிறோம். ஆகவே நகைச்சுவைக்கு அடிப்படைத்தேவை எந்தத் தளத்தில் அந்நகைச்சுவை இருக்கிறதோ அந்தத்தளம் பற்றிய முன்னறிதல். அப்புலம் குறித்து ஒன்றுமே தெரியாதவர்களுக்கு அந்நகைச்சுவை எவ்வகையிலும் பொருள்படாது.
நம் சூழலில் தத்துவம், வரலாறு, பண்பாடு சார்ந்த மிகப்பொதுவான அறிவு கொண்டவர்கள் கூடக் குறைவு. நல்ல நகைச்சுவை அவற்றிலிருந்து எதையேனும் எடுத்து திசைமாற்றிக் காட்டுவதனூடாகவே சிரிக்கச் செய்கிறது. அதை இவர்களால் சென்றடையவே முடியாது. ஆகவே நல்ல நகைச்சுவைக்கான வாய்ப்புகளே இங்கு குறைவு. எனக்குப்பிடித்த மலையாள நகைச்சுவையாளர் வி.கே.என். அவரை ரசிக்க கதகளி, சம்ஸ்கிருதநாடகம், கேரளவரலாறு, கேரள அரசியல் என பல விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டும். ஆகவே கேரளத்தின் முதன்மை பகடிக்கலைஞர் எனப்படும் அவர் அனைவருக்கும் உரியவர் அல்ல.
அறிதல்குறைவானவர்களுக்கான நகைச்சுவை என்பது பொதுவாகச் சூழலில் பேசப்படும் செய்திகளையும் கருத்துக்களையும் மனநிலைகளையும் உடனடியாக கொஞ்சம் மடக்கி உருவாக்கப்படுவதாக இருக்கும். பெரும்பாலும் சமகால அரசியல் அல்லது சினிமாப் பின்புலம் கொண்டது. ஆகவே எதுவும் பெரிதாகத் தெரியாதவர்களும் அதற்குச் சிரிப்பார்கள். நீங்கள் அனுப்பிய ‘நகைச்சுவை’ அத்தகையது.
அந்த நகைச்சுவையே கூட ஜக்கி, ஜெயலலிதா சிலை என ஒன்றுமே தெரியாத சாதாரணர்களுக்கு பிடிகிடைப்பதில்லை. அந்தத் துணுக்கை ரயிலில் ஒருவரிடம் ஓரு முயற்சியாக காட்டிப்பார்த்தேன்.எழுபது வயதான முதியவர். அவருக்கு என்ன என்றே தெரியவில்லை. ஜெயலலிதா சிலை பற்றி தெய்வத்திடம் முறையிடுகிறார்கள் என்ற அளவில் மட்டுமே அவர் புரிந்துகொண்டார். இன்னும் ஆறுமாதம் கழிந்தால் இந்த நகைச்சுவை எவருக்கும் புரியாது, இது எதைக்குறித்தது என்பதை பெரும்பாலானவர்கள் மறந்துவிட்டிருப்பார்கள்.
இத்தகைய பொதுநகைச்சுவையில் எதுவுமே ஊகிக்க வாய்ப்பளிக்காமல், தமிழகத்தின் மேடைப்பேச்சில் சொல்லப்படும் நகைச்சுவைபோல, விரிவாக அனைத்தும் கூவிச்சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். இது அந்தத்தளத்தைச் சேர்ந்தவர்களுக்கான நகைச்சுவை, அவ்வளவுதான். எனக்குரியது அல்ல.
இங்கு ஒருசில கூற்றுக்கள் எப்போதும் வலம்வருவதைக் காணலாம். ‘எனக்குச் சிரிப்பே வரவில்லை’ என ஒரு நகைச்சுவையை விமர்சிப்பார்கள். ‘சரி, இதைப்புரிந்துகொண்டு சிரிக்கும் அளவுக்கு உனக்கு இந்தத்தளத்தில் என்னென்ன தெரியும்?” என்று நாம் கேட்டால் திகைப்பார்கள். உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை ஒன்றைச் சொல்லுங்கள் என்றால் ஒரு நாலாந்தர வசைபாடலை நகைச்சுவை என்று குறிப்பிடுவார்கள்.
சிரிப்பு வராமலிருப்பது பெரும்பாலும் அதைச் சொல்பவருக்கு பின்னணி அறிதலென ஏதுமில்லை, அவருக்கு அந்த நகைச்சுவையின் முரண்பாடு புரியவில்லை, அந்தக் கணத்தில் அது தன்னியல்பாக அவருள் விரிந்தெழவில்லை என்பதையே காட்டுகிறது. இதையெல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்த்தே நகைச்சுவை உணர்ச்சியின்மை என்கிறோம்.
இங்குள்ள இன்னொரு பரவலான தவறெண்ணம் நகைச்சுவை ‘அனைவருக்கும்’ புரியவேண்டும் என்பது. அவ்வாறு புரிவதே நல்ல நகைச்சுவை என்பது. உண்மையில் நகைச்சுவை எந்த அளவுக்கு நுட்பமானதாக ஆகிறதோ அந்த அளவுக்கு அது புரிந்துகொள்ளப்படுவது குறையும். நம் நினைவில் நீடிக்கும், நினைத்து நினைத்து நாம் புன்னகைக்கும், நகைச்சுவைகள் முதற்கணம் நம்மை வந்தடையாது. சற்றுப்பொறுத்தே அவை விரியும்.
எனக்கு தமிழகத்தில் மெய்யான நகைச்சுவைக்கு எதிரான தடையாக இருப்பவை எனத் தோன்றுபவை இரண்டுவகை ‘பிரபலபாணி’ நகைச்சுவைகள். ஒன்று நீங்கள் காட்டியதுபோன்ற அரசியல், சமூகவியல் நிலைபாடுகளை நையாண்டியாக வசையாக வெளிப்படுத்துபவை. கூச்சலிடுபவை, அப்பட்டமானவை இவை.
இன்னொன்று எஸ்.வி.சேகர் முதல் பா.ராகவன் வரை வந்துள்ள செயற்கையான ’டெம்ப்ளேட்’ நகைச்சுவை. இவை அன்றாடமொழியில் இருந்தே ஏதேனும் வரியை, சொல்லை எடுத்துக்கொண்டு திரித்து கேலிசெய்பவை. இதை ஒர் அரட்டையில் வெறும் வேடிக்கைக்காகச் செய்துகொண்டே இருக்கலாம். நகைச்சுவை என்பது இவை அல்ல.
மேலான நகைச்சுவையில் ஒரு வரலாற்று, தத்துவ, இலக்கிய தரிசனம் இருக்கும். அது முந்தைய தரிசனங்களைத் தலைகீழாக்குவதாக இருக்கலாம். பகடிசெய்வதாக இருக்கலாம். அது ஒரு தொடக்கம். அதிலிருந்து நாம் செல்ல நெடுதொலைவு இருக்கும். நான் ரசித்த சமீபத்தைய நகைச்சுவை இது
ஜெ