இந்தியக்கலை -கடிதங்கள்

download (5)
பால் காகின், டகித்தியின் பகல்

 

அருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன்

இந்திய ஓவியங்களை ரசிப்பதன் தடை என்ன?

இந்தியக்கலை – ஏ .வி. மணிகண்டன் கடிதம்

ஜெ

 

ஏ. வி. மணிகண்டனின் கட்டுரை மிக நீளமானது. ஆகவே பிரிண்ட் எடுத்துக்கொண்டு படித்தேன். இந்தத்துறையில் தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான கட்டுரை இது. மிக விரிவாக பாரம்பரியக் கலைமரபுக்கும் நவீனக் கலைமரபுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை விளக்கிச் சொல்கிறார். இத்தனைச் சுருக்கமாகவும் திட்டவட்டமாகவும் எவரும் சொல்லி நான் வாசித்ததில்லை.

 

பாரம்பரியம் கொண்ட கலைக்கு நில அடையாளம் உண்டு. அது ஒரு பண்பாட்டுப்பாரம்பரியம் கொண்டது. நவீனக்கலை தன்னை பண்பாட்டுப்பாரம்பரியம் இல்லாதது என்று நினைத்துக்கொள்கிறது. ஆகவே உலகப்பாரம்பரியம் அனைத்தையும் தன்னுடையதாக உருவகம் செய்துகொள்கிறது. நடைமுறையில் அது சாத்தியம் அல்ல. ஆகவே உலகில் ஏதேனும் ஒரு எக்ஸோட்டிக் பண்பாட்டுடன் [உதாரணம் ஜப்பான் அல்லது டகிட்டி] தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு அங்கிருந்து மேலோட்டமான சில பாதிப்புகளைப் பெற்றுக்கொள்கிறது. பாரம்பரியக்கலையில் உள்ள நுட்பமான பண்பாட்டு அம்சம் அதில் இருப்பதில்லை.

 

ஆனால் உண்மையில் நவீனக்கலையும் பண்பாட்டு அடையாளம் கொண்டதுதான். அது எவரைநோக்கி அமைகிறதோ அந்தப்பண்பாட்டு அம்சம் அதிலுள்ளது. உதாரணமாக பால் காகின் எவ்வகையிலும் டகிட்டியின் பண்பாட்டு அடையாளம் அல்ல. அவர் பிரான்ஸின் பண்பாட்டு அடையாளம்தான். டகிட்டி அவருக்கு ஒரு எக்ஸோட்டிக் அம்சம் மட்டும்தான். நவீனத்துவம் உருவாக்கிய இந்த உலகப்பண்பாட்டின் வாரிசு ஆவது என்ற மாயையை இன்றைக்குக் களைந்துவிட்டார்கள். இன்றைக்கு ஒரு குறிப்பிட்டபண்பாட்டின் நுட்பம் வெளிப்படும் படைப்பைத் தேடுகிறார்கள்.

 

ஆனால் ஓவியக்கலையில் பின்நவீனத்துவம் என்பது வடிவங்களைக் கலைப்பதிலே மட்டும்தான் உள்ளது. சிந்தனையில் இல்லை. இந்திய மரபுசார்ந்த ஓவியக்கலை உருவாகாமலிருப்பதற்குக்க்காரணம் இதுவே

 

மாதவ்

 

 

<“பிற்போக்கு கலை வரலாற்றாசிரியராக ஆக்கிவிடும் போலிருக்கிறது உங்கள் கடிதம்”>.

 

தயவுசெய்து கலை வரலாற்றாசிரியர் ஆகுங்கள் என்று மணிகண்டனை கேட்டுக்கொள்கிறேன்.

 

“ஒவியம் புகைப்படம் குறித்து எழுதினால் சீண்ட மாட்டார்கள்” என்றெல்லாம் அவர் கவலைப்படவே தேவையில்லை. நல்ல நூலுக்கு எப்போதுமே கிராக்கி உண்டு. நீங்கள் அபனிந்திரநாத் தாகூர் பற்றி எழுதியதிலிருந்து இது போல இந்திய ஓவிய வரலாறு இருக்கிறதா என்றே நான் தேடிக்கொண்டிருந்தேன். சொல்புதிது குழுமத்தில் கேட்டபோது கிரி ராஜகோபாலன் களம்பூர் சிவராமமூர்த்தி அவர்கள் எழுதிய புத்தகத்தை பரிந்துரைத்தார்.  (சமீபத்தில் கடலூர் சீனு ‘தாந்த்ரீக பௌத்தம்’ பதிவிலும் அஜந்தா- ஏற்றுமானூர்-இமயமலை குகை ஓவியங்கள் என்று ஒரு மரபுதொடர்பை விவரிக்கலாம் என்று சொல்லியிருந்தார்).

 

ஒரே ஒரு மாற்றுக்கருத்து: கலை உருவான பரந்த மரபு பற்றி தெரிந்து கொள்ளுதல் அவசியம்தான். ஆனால் அது இது போன்ற நூல்கள் வெளிவர தடையாக இருக்கக்கூடாது.

 

நான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சுற்றிப்பார்த்த வரையில் சொல்கிறேன். ஓவியங்கள் சிற்பங்களை பார்ப்பதிலும் சரி வாங்குவதிலும் சரி, சராசரி பார்வையாளர்கள் ரொம்ப ஆழமானவர்கள் அல்ல. ஓவியத்தின் வடிவமைப்பை வைத்து ரொமாண்டிசிசம் இம்ப்ரெஷனிசம் என்று ஓரளவுக்கு சொல்கிறார்கள். அதைத்தாண்டி பெரிதாக தெரிவதில்லை. ( இதில் வருடாவருடம் ஐரோப்பாவுக்கு குடும்பத்துடன் டிக்கட் போட்டுக்கொண்டு போய் தம் குழந்தைகளுக்கு ‘மகத்தான மரபை’ அறிமுகம் செய்ய தலைப்படும் அமெரிக்க இந்திய wannabeக்களும் அடக்கம்). இவர்களுக்கு கலைப்பொருட்களை வாங்கி வீட்டில் அலுவலகங்களில் வைப்பதில் ஒரு அந்தஸ்தும் டேஸ்டும் signaling செய்யப்படுகிறது. இதைச்சுற்றியுள்ள வணிகமும் ஊடக கவனமும் கலைமரபுகளை பெருமளவு புரக்கின்றன.  அதாவது, லௌகீக வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஓவிய மரபுகள் மக்களின் கவனத்தில் என்றும் இருக்கின்றன. ஆயிரக்கணக்கில் ‘காபி டேபிள்’ புத்தகங்கள் வெளிவருகின்றன.

 

நியுயார்க் நகரில் ரூபின் மியூசியம் மற்ற பிரபல அருங்காட்சியகங்களை காட்டிலும் மிகச்சிறியது. இந்திய நேபாள பூடானிய அரும்பொருட்கள் பெரும்பாலும் பௌத்தம் சார்ந்தவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நான் அங்கு போயிருந்தபோது ஒரு வெள்ளைக்காரக் குழுவுக்கு மியுசியம் நிர்வாகி சுற்றிக்காண்பித்து விளக்கிக்கொண்டிருந்தார். எல்லாம் பெரும்பணக்கார உடையும் தோரணையும் கொண்டவர்கள். அவர்கள் பேச்சிலிருந்து சில அரும்பொருட்களை வாங்க வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. வஜ்ரயோகினி புணர்ச்சி சிலையை பார்த்து ஒரு கிழவி விதிர்த்து போய் கண்களை அகல விரித்து இன்னொரு கிழவியிடம் சிரித்துக்கொண்டே எதோ சொன்னது. இன்னொருவர் சிறிய சிலைகளை பார்த்து “Oh they look like model trains!” என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவர்களே கலைபுரப்பவர்கள்,  இவர்கள் தரும் பணத்தின் மேல்தான் கலைகளும் அருங்காட்சியகங்களும் செழிக்கின்றன. இவர்களுக்கு கலைமரபு பற்றி உண்மையாக என்ன தெரியும் ?

 

 

மதுசூதனன் சம்பத்

 

ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்

விலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்

ஜெயக்குமாருக்கு

கலையை கையாளுதல் பற்றி …

இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்

கலைக்கோட்பாடுகள் எதற்கு? -ஏ.வி.மணிகண்டன்

புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன் [தொடர்ச்சி]

புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன்

 

ஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் கணங்களும் – ஏ.வி.மணிகண்டன்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–77
அடுத்த கட்டுரைஇது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்