இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் நூலுக்கு லட்சுமி மணிவண்ணன் எழுதிய முன்னுரை. நூலை அமேஸான் இணையதளத்தில் மின்னூலாக மட்டுமே வாங்கலாம். இணைப்பு 

‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’
 ஜெயமோகன் நூல்கள் கிண்டில் பதிப்புகளாக

cover_007 WEB

எனது விடலை வயதில் கோணங்கி ஒருசமயம் எனது சொந்த ஊரான பனங்கொட்டான்விளைக்கு  வந்திருந்தபோது “என்னடா ரெண்டு கிலோமீட்டர் தாண்டுறதுக்குள்ள உங்கள் ஊர்ல  எட்டு சுடலையை கடக்க  வேண்டியிருக்கு “என்று ஆச்சரியமாகக்   கேட்டார்.  இத்தனைக்கும் அவர் ஊரான கோயில்பட்டியிலும் சாமிகள் அதிகமே. ஆனால் அவர் எங்கள் ஊரைப் பற்றிச் சொன்ன கணக்கு தவறு. அவர் நேரடியாக கண்ணால் கண்ட சுடலைகளை  மட்டுமே கணக்கில்  வைத்துத் திகைத்தார். உண்மையாக எங்கள் நிலமெல்லாமே பெரும்பாலும் சாமிகள்தான். விளைக்கு விளை பெரும்பாலும்  சாமிகள் இருப்பார்கள். இசக்கியும் ,சுடலையும் அதிகமென்றால் துணை சாமிகளோ ஏராளம். தோப்புத் தோப்பாக வாதைகள்  குடியிருப்பு உண்டு. இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுப் பரப்பிற்குள் தோராயமாக நூற்றுக்கும் குறையாத தெய்வங்கள் இருக்கும் .குலவாதைகளின் ஒரு குடியிருப்பென்றால் மொத்தம் இருபத்தியொரு படுக்கைகள்.  காலசாமி ,சங்கிலி பூதத்தான்,கட்டையேறும் பெருமாள்உட்பட.  இவற்றில் நான் முத்தாரம்மன் கோயில்களை சேர்க்கவில்லை.அவை சில நுற்றாண்டுகளுக்குள் வந்து சேர்ந்தவை.

சிறுவயதில் அப்பம்மைதான் வெற்றிலை பாக்கு வாங்க எங்களை கடைக்குப் பணிக்கிறவள்.  செக்கடி மாடனைப் பற்றி அவள் எச்சரித்து அனுப்புவாள். பட்டப்பகலிலேயே பயந்து பயந்து செக்கடியைத் தாண்டுவோம். போகிற வழியில் அங்கே கேட்பாரற்ற எண்ணைச் செக்கு ஒன்று சரிந்து கிடக்கும். ஏற்கனவே எங்கள் மனதில் பெரியவர்கள் சொல்லி வைத்த சங்கிலி பூதத்தான் கதைகள் உண்டு. செக்கடியைக் கடந்தால் சங்கிலி பூதத்தான் கோயில் வரும் . சற்று தென் மேற்கில் காலசாமி கோயில். திருட வந்த கள்ளனையே கண்களை இருட்டாக்கி  கையோடு கட்டி  கோயிலுக்குள் பூட்டி வைத்த சாமி அவர். காலசாமி கோயில் கொடைக்கு  செங்கிடா , கருங்கிடா என்று ஏராளம் பலிபூஜைகள்.  காலசாமி கோயிலுக்கு வடக்குப் பக்கமாக  சிறிய வெற்றிலை பாக்கு கடை உண்டு. செக்கடியை நான் பெரும்பாலும் ஓடித்தான் கடப்பேன்.  அப்போதெல்லாம் பெரியவர்களிடம் சதா மெல்லிய அச்ச உணர்வு இருந்து கொண்டேயிருந்தது. அந்த அச்ச உணர்வு பல்வேறு காரணிகளால் வாழ்க்கைக்குள் நுழைந்தது. அதனை அவர்கள் எங்களுக்குள் கடத்தினார்கள்.

எனது அப்பையாவின் தம்பி இளைய பாட்டனார் பெயர் வைத்தியலிங்க நாடார். ஊரே நிமிர்ந்து பார்க்கும் உயரம். பளபள என்றிருப்பார். அவருக்கு ஓய்வாக இருக்கும் போது நாங்கள் குழந்தைகள் காலை பிடித்து விடவேண்டும்.  அவர் சாய்வு நாற்காலியில் படுத்தவண்ணம் கண்களை மூடி கதை சொல்வார். அவையெல்லாம் கேட்பவருக்குத்தான் கதைகள். அவருக்கு சுயசரிதை. அவரது சுயசரிதை முழுதுமே பேய்களாலும், தெய்வங்களாலும் ஆனது. பிலா விளைக்கு தென் மேற்கே  இருந்த பன்றிமாடன் பனையை வளைத்துப் பதநீர் குடிப்பதை அவர் கண்டது தொடங்கி, பழைய   வீட்டடித் தட்டுக்கு மேற்கேயிருந்த வயலுக்கு வெள்ளம் பாய்க்கும் போது ராவிருட்டில் சுடலை தீப்பந்தத்தோடு விரட்டியது, மந்திரவாதி தூங்கியெழும்ப உவரியில் கொண்டு இறக்கி  விட்டதென எல்லாமே அவருடைய சுயசரிதைகள். அவர் சொல்லும் அனைத்து கதைகளிலும் அவரும் இருப்பார். பன்றி மாடன் பதநீர்குடிக்கும் கதையைக் கேட்கையில் ,  தந்தம் நீண்டு எப்போதும் ஒரு காளையின் அளவிற்கு  அகன்று ஊரில் நேர்ந்து விடப்பட்டு திரிந்துக் கொண்டிருக்கும் பன்றி நினைவில் நடமாடிக் கொண்டிருக்கும்.  அது முகம் திருப்பி அடித்து சிலருக்கு தொடையெலும்புகள் உடைந்திருக்கின்றன.
அப்பைய்யா  ஆதிநாராயணன் நாடார் வில்லிசைக் கலைஞராக இருந்தவர் என கேள்விப்பட்டிருக்கிறோம்.  அவர் அய்யா வைகுண்ட சாமிகளின் அய்யாவழிக்கு திரும்பிய பிறகு வில்லிசையைக் கைவிட்டார். அவரோடு கட்டிலில் ஒட்டி படுத்திருப்போம்.  அவருடைய கட்டிலில் எப்போதும் அவருடைய சுகமான உடல் வாசம் இருக்கும் . விவசாயம் உடலில் ஏற்படுத்தும் வாசம் அது. இயற்கையானது . போர்வைகளில் தணுப்பு. அது தலைப்பக்கம் உயர்ந்திருக்கும் நார்க்கட்டில். அவர் வில்லிசைக்கதைகள் பலவற்றை முழுமையாகச் சொல்லி இவையெல்லாம் பொய் என்பார். நம்பக் கூடாது என்று அறிவுறுத்துவார்.  அய்யாவழியில் நாட்டு தெய்வங்களை நம்புதல் கூடாது.  அவர்களுக்கு அய்யா வேறொரு உடன்பாடு ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.  நாட்டு தெய்வங்களோ, காட்டு தெய்வங்களோ நேரடியாக அவர்கள் மக்களிடம் பூஜைகள் கேட்கக் கூடாது. பகிரங்கமாக அவர்களுக்கு அய்யாவழி தாங்கல்களிலும் , பதிகளிலும் கருவறைக்கு வலதுபக்கமாக  சிவாய்மார் மேடை என்றொன்று  அமைக்கப்பட்டு சுத்த பூஜை செய்யப்பட்டது.

அப்போதெல்லாம் அம்மன் கோயில்கள் அதாவது முத்தாரம்மன் கோயில்கள் தவிர்த்து பிற தெய்வங்களுக்கான கோயில்களில் பொதுக்கதைகளை வில்லிசையில் பாடயியலாது . பொதுக்கதை என்பது முப்பிடாதி கதை மட்டுமே.  முப்புரத்தை அழிக்கும் கதை.  பிற தெய்வங்களுக்கெல்லாம் தனித்தனி கதைகள்.  சாராம்சத்தில் அந்த கதைகளின் ஓட்டம் ஒன்றுபோலவே இருந்தாலும் கூட சின்னச் சின்ன மாற்றங்கள் இருக்கும். எங்களூர் இசக்கியம்மன் கோயிலில் பெரியவர்கள்  பாட்டுக்காரர்களுக்கு ஊர் ஏடு எடுத்துக் கொடுப்பார்கள். அந்த கதை அந்த சாமிக்குரியது. வில்லிசைக் கலைஞர்கள் தங்களாகக் கொண்டு வந்த கதையை வைத்து ஒப்பேத்த முடியாது.  ஒவ்வொரு ஊரிலும் ஏதேனும் பெரியவரிடம் அந்த ஊர் ஏடு இருக்கும்.  கொடைக்கு அதையெடுத்தே படிக்க முடியும். எங்கள் ஊரில் அது சின்னாடாரிடம் இருந்தது.  அவர் எங்களுக்கு ஒரு சிறிய தாத்தா.

பாளையக்கோட்டை கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வை முனைவர் ராமச்சந்திரன் மேற்கொண்டிருந்த போது இந்த ஊர் ஏடுகளைத் திரட்டுவதற்காக சின்னாடாரைக் கேள்விப்பட்டு  எங்கள் ஊருக்கு வந்தார். அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். ராமச்சந்திரனிடம் அப்போது பல ஊர்களில் உள்ள தனியேடுகள்இருந்தன. சின்னாடாரிடம் எங்கள் ஊர் சாமிகளின் ஏடுகள் மட்டுமல்ல, பல ஊர் ஏடுகள் இருப்பதாக அவர் கேள்விப்பட்டு வந்திருந்தார்.  சின்னாடாரிடம் எவ்வளவோ முயற்சித்தும்  ஊர் ஏடுகளை அவரிடம் ஒப்படைக்க இணங்கவில்லை. முடியாது என மறுத்து விட்டார். இப்போது அந்த ஊர் ஏடுகள் எல்லாமே பெரும்பாலும் அழிந்து விட்டன என்று சொல்லலாம்.  எங்கள் ஊரில் மட்டுமில்லை. எல்லா ஊர்களிலும் அழிந்து விட்டன.  நினைவுகளில் எஞ்சியிருப்பவை மீதம்.  இப்போது  வில்லிசைக் கலைஞர்கள் பொதுக்கதைகளை  பாடுவதில் தைரியம் அடைந்து விட்டார்கள்.  கொஞ்சம் மிஞ்சிக் கிடைத்தவை முனைவர் ராமச்சந்திரனின் சேகரிப்பில் இருக்கக் கூடும்.  ராமச்சந்திரன் இவ்வாறே எனக்கு சிறுவயதிலேயே அறிமுகமானவர்.

இந்த தெய்வங்களின் கதைகள் அனைத்துமே மக்களின்     கண்ணோட்டங்கள் , பரிபாஷைகள், அவர்கள் வகுத்தறிந்த பார்வைகள்.  அந்த கண்ணோட்டங்கள் மூலமாகவே அவர்கள் வெளியுலகை உணர்வுகளை, மதிப்பீடுகளை வாழ்க்கையை வசப்படுத்தி வைத்திருந்தார்கள். புரிந்து கொண்டார்கள்.  அது விஞ்ஞானம் என்று வெளித் தோற்றத்திற்கு எளிதில் புலப்படாத மூல அறிவின் களஞ்சியம் .

ஜெயமோகன் சொல்வது போல மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பழங்குடி மக்களின் வழிபாடுகளையும் சரி,  தொன்மையான நம்பிக்கைகளையும் சரி ஒருவகையான இளகாரத்துடன் குனிந்து கீழே பார்க்கிறார்கள். அவை அம்மக்களின்  அறியாமையால் உருவானவை என்றுதான் விளக்குகிறார்கள்.   எனவே இந்த பரிபாஷைகளும் ,விழுமியங்களும் அவர்களுக்கு முகம் திருப்பி கொள்கின்றன.  அவர்கள் இவையென்ன என்பதனை அறியவே இயலவில்லை.  இந்த நம்பிக்கைகளையும் , கதைகளையும் முதலில் அப்படியே ஏற்க வேண்டும். அப்படியானால் மட்டுமே அவை உங்களுக்கு முகம்காட்டும். இல்லை என்றால்  நீங்கள் அதன் சாராம்சத்திற்கு வெளியிலுள்ள ஏதோவொன்றை உளறிக்கொண்டு   நடுத்தெருவில்  நின்று கொண்டிருப்பீர்கள். முதன்முறையாக  இந்த கதைகளும் , நம்பிக்கைகளும் ஜெயமோகனின் படைப்பாற்றலில் கவித்துவமும் இணையப் பெற்று  இந்த நூலில் கண்திறந்து பார்க்கின்றன . உயிர் எழும்பி நிற்கின்றன.  வில்லடியோ,  காணியாட்டோ கேட்டு துடிகொண்டு தெய்வங்கள் துள்ளியோடி வருவதற்கு நிகராக . அதற்கு அவர் என்ன மாயவித்தை செய்திருக்கிறார் ? முதலில் அவர்களை அவ்வாறே அறிவு கொண்டு சுருக்காமல் அனுமதித்திருக்கிறார். பெரும்பாலும் கல்விப்புலங்கள் வழியே நாம் பெறுகிற சுருங்கிய அறிவு நாம் இவற்றைக் காண்பதற்கான பெருந்தடை. ஜெயமோகன் இந்த நூலில் அவற்றை அவர்களில்  விடுத்திருக்கிறார்.

இப்போது அவருடைய மொழியில் இந்த நூலில்  சொல்லப்பட்டிருக்கும் தெய்வங்கள் அத்தனையும் உயிர்ச்சாறு கூடி அருள் நிறைந்து நிற்கின்றன. நிச்சயம் இந்த தெய்வங்கள் அவருக்கு  அருள்புரியும்.  இப்படி எழுப்புவதற்காக  கன காலம் ஏங்கியிருந்த தெய்வங்கள் இவை.  மக்களின் வாழ்விற்கும் குற்றங்களுக்கும் சாராம்சமாக  இருந்த,  இருக்கும் கதைகள் இவை.  நாய்கள்,நாகங்கள் ஆகியவை ஜெயமோகனின் படைப்பாற்றலில் இந்த தெய்வங்களை அறிவதற்கு பேருதவி செய்திருக்கின்றன. ஜெயமோகனின் இந்த நூலில் பல விசேஷங்கள் உள்ளன. இந்த கதைகள் உயிர் கொண்டு எழும்பி நிற்கின்றன என்பதோடு  பணி  முடிவடையவில்லை. அப்படி முடிந்திருந்தால் இந்த தெய்வங்களுக்கு நேர்மையாகச் செய்த வேலை என்பதோடு அது முற்றுப் பெற்றிருக்கும். ஜெயமோகன் இந்த கதைகளின் வழியே மெய்மை நோக்கிய பயணத்தை மேற்கொள்கிறார். அந்த மெய்மை வழக்கமான அன்றாட ஆன்மிகம் சுட்டிக் காட்டுகிற மெய்மை அல்ல. மக்களில் இருந்து தொடங்குகிற மிகவும் சிக்கலான அதேநேரம் தீவிரமான மெய்மை இது. எளிதில் அகப்படாதது அல்லது அகப்பட கடினமானது. ஆனால் அந்த விஷேச அனுபவத்தை திறன்பட கவித்துவ சன்னதத்துடன் வாசகர்களிடம் கடத்தியிருக்கிறார்.  இந்த நூலில் ஒருவர் அடையவிருக்கிற மெய்மை மிகவும் விஷேசமானது. நாம் கோபுரங்களில்,மேல் தளங்களில் லயித்து இருக்கும் போது அதன் தாழ்வாரங்கள் எவ்வளவு கட்டுறுதி மிக்கவை என்பதனை இந்த நூல் உணர்த்துகிறது. இந்த கதைகளை ஜெயமோகன் சொல்லியிருக்கும் விதத்தில் அந்த கதைகளுக்கேயுரிய தாளலயம் ஒன்று இயல்பாக அமைந்திருக்கிறது . அதிலிருந்து மிகவும் பிரகாசமாக நம்மால் அவர் காட்டுகிற மக்களின் மெய்மை நோக்கி நகர முடிகிறது. நேர்மறை எதிர்மறை என்னும் பகுப்புகளுக்குள் அடங்காத மெய்மை இது.

மனிதனின் மெய்மை நோக்கிய பயணத்தில் ஏராளமான கதைகள். தொல்குடிகளும் ,இனக்குழு மக்களும் அதனை நிலத்தைக் கொண்டும் ,நிலம்சார் தெய்வங்களின் விழுமியங்களைக் கொண்டும் ஈடுசெய்ய முயல்கிறார்கள். இயற்கையான பிரயாசை இது. இந்த பிரயாசை மனிதனை காத்து ரட்சிக்கக் கூடியது. அதனால் தான் அவன் மீண்டும் மீண்டும் தனதாற்றல் அத்தனையையும் பயன்படுத்தி அதில் உழன்று கொண்டேயிருக்கிறான். இந்த தொல்குடிகளின் பிரயாசையிலேயே நமது அகவெளி புதையுண்டிருக்கிறது.

ஈஸ்டர் தீவு , பசிபிக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள 163  சதுரகிமீ பரப்பளவுள்ள தீவு . இந்த தீவைப் பற்றிய செய்திகள், ஆய்வுகள் பல்வேறுஇதழ்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்து விட்டன. பலரும் அறிந்த விஷயம்தான் இது. ராப்பா லூயீ என்கிற தொல்குடி அங்கே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள்  உருவாக்கிய வழிபாட்டுத் தலத்திற்கு அஹு  ஆகிவி எனப் பெயர். ராணா ராக்கு என்னும் எரிமலைச் சாம்பலில் உருவாக்கப்பட்ட 887  பிரம்மாண்டமான சிலைகள் அந்த தீவில் இதுவரையில் கண்டடையப்பட்டுள்ளன.  இந்தச் சிலைகள் டாப் எனப்படும் எரிமலைச் சாம்பல் கொண்டு செய்யப்பட்டவை.  இந்தத் தீவு பற்றியும் ,இந்த சிலைகளை பற்றியும் ,இங்கு வாழ்ந்த தொல்குடி மக்களை பற்றியும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அம்மக்கள் கிபி  7ஆம் நூற்றாண்டிலிருந்து  14  ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்கள் என ஆய்வுகளின் யூகங்கள் நம்புகின்றன

ROBERT  D  CROLG  என்பவர் எழுதிய  HAND BOOK OF POLYNESIAN MYTHOLOGY ,STEVEN  N   ROGER FICHER என்பவர் எழுதிய ISLAND  AT  THE  END  OF THE WORLD ,JOHN FLENLEY  AND PAUL BAHN  எழுதிய THE ENIGMAS  OF  EASTER ISLAND  போன்ற நூல்களில் இருந்து எப்படி இந்த தொல்குடியை இருள் தழுவிற்று என்பதனை தெரிந்து கொள்ளலாம். அது ஜெயமோகன் ஓரிடத்தில் குறிப்பிடுவதை போன்று  உலக வரலாறு முழுக்க ஒரு பண்பாடு இன்னொன்றை வெல்வது நடக்கிறது. வென்றவர்களுக்குத் தோற்றவர்களின் தெய்வங்கள் பேய்களாகத் தெரிகின்றன. நாம் உலகெங்கும் காணும் அத்தனை பேய்களும் தோற்றவர்களால் வழிபடப்பட்ட தெய்வங்கள்தாம் .

ராப்பா லூயீ  தொல்குடிகள் உருவாக்கிய “மோய்” என்றழைக்கப்படும். பிரமாண்டமான இந்த சிலைகளே  ஈஸ்டர் தீவு பேரில் எனக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்கான காரணம். ஏன் அவர்கள் இந்த பிரம்மாண்டமான சிலைகளை, உருவங்களை செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள் ? ஆத்ம சரீரம் பேரில் மனிதனுக்கு  இருக்கும் தீராத கவர்ச்சியினாலா ? எரிமலைச் சாம்பலைத்தேடித் செல்வதும் , அதிலிருந்து பிரமாண்டமான உருவங்களை வார்த்துப்படைப்பதும் அவற்றை தங்கள் நிலப்பகுதிக்குக் காவலாக முன்னிறுத்துவதும்எதற்காக ? நமது வசதிக்கேற்ப இச்செயற்பாட்டிற்கு ஏதேனும் ஒருஒற்றைப்படையான அர்த்தத்தை வழங்கிவிட முடியும். ஆனால் சிறிய அர்த்தங்களுக்காக மட்டும்தான் இந்த சிலைகளா ? மனிதன் தன்னுடைய சூக்கும உடலை சதா தேடித் கொண்டிருப்பதும் , சூக்கும உடல்கள் அவனைத் தேடித் கொண்டிருப்பதும் மனிதப் பிரயாசைகளின் பயணத்தில் முக்கிய அங்கங்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த பிரயாணம் எங்கோ முடிவிலியில் தோன்றுகிறது. மற்றொரு முடிவிலி நோக்கி சென்று கொண்டேயிருக்கிறது. மனிதனின் மெய்மை நோக்கிய ஆசையும் ,பிரயாசையும் ஒருபோதும் அவனை விட்டகலவே செய்யாது.

ஜெயமோகனின் தொல்குடி தெய்வங்களை பற்றிய இந்த நூலை படிக்கும்போது எனக்கு நாம் எல்லோருமே  ஈஸ்டர் தீவு போன்றதொரு தீவிற்குள் வசிப்பவர்கள்தாம் என்று தோன்றிற்று . அந்த தீவிற்கு இடம், காலம் பெயர்கள் எல்லாம் மாறிக் கொண்டேயிருக்கலாம். ஈடுபடும் பிரயாசை ஒன்றே தான். அந்த தீவு மனிதகுலம் ஒருபோதும் கரையேறவே இயலாத தீவு. அப்படியானால் நமது உருவங்கள், ஆண் ,பெண் என்னும் பாவனைகள் ? தெய்வங்களின் மடல்கள் அவை. சூக்கும உடல்களின் மடல்கள். அந்த மடல்கள் இளமை , முதிர்ச்சி என தங்களைத் தாங்களே கடந்து செல்கின்றன. பின் பிறிது மடல்களில், கொம்பில், தளிரில் வளர்கின்றன. ஏக்கங்கள், ஆசைகள் , துரோகங்கள், வேதனைகள் அனைத்தும் சூக்கும உடல்களாக வளர்கின்றன. அடப் பாவி… என்று கூறி தன்னில் ஓருடல் துரோகத்தால்  விடைபெறும் போது அடப் பாவி… என்பது தனியே வளரத் தொடங்குகிறது. ஏக்கம் வளர்ந்தால் அது எப்படியேனும் பற்றிக் கொள்ள வேண்டும், அதுவரையில் மீட்சியில்லை. ஆசை பொருத வேண்டும். துரோகம் பழிவாங்கப்படல் வேண்டும்.  இவை இல்லாது  சாந்தம் என்பதில்லை. அப்படியிருப்பது செயற்கையானது. “அவள் தாகம் மட்டும் உடலில் இருந்து தனியே பிரிந்து எழுந்தது ” என்றொரு வரி களியங்காட்டு நீலி கதையில் வருகிறது.  உடலில் இருந்து பிரியும் தாகம் . தனியே உயிர் வாழும் தன்மை கொண்டது. அதுதான் மெய்மையின் சிறப்பியல்பே. “நாம் காணும் மனிதர்கள் நமது கண்ணுக்குத் தெரியும் மாய வடிவங்கள். இவர்கள் உண்மையானவர்கள்  என்று நினைக்கிறோம். ஆனால் வேறெங்கோ இருக்கும் எவருடையவையோ நிழல்கள்தான் இங்கே ஆடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிழல்களை பார்த்து அந்த அசல் நாடகத்தை நம்மால் தெரிந்து கொள்ளவே முடியாது. அந்த அசல் நாடகத்தை தெய்வங்களே பார்க்க முடியும்”  என்று இந்த நூலில் ஜெயமோகன் சொல்கிறார். இந்த நூல் முழுதையும் இணைக்கும் வாக்கியங்கள் இவை என்பது போல எனக்குத் தோன்றுகின்றன.

ஜெயமோகனின் இந்த நூலில் பெரும்பாலும் குமரி மாவட்ட நிலப்பரப்பைச் சார்ந்த தெய்வங்களின் கதைகளே அதிகம் . சிலகதைகள் கேள்விப்பட்டவை . சில கேள்விப்படாதவை . சில வில்லிசையில் கதை பாடல்கள் மூலம் அறிந்தவை. இவையெல்லாமே இந்த நூலில் ஒரு படைப்பு மனத்தின் ஊடுருவலில் உயிர் கொண்டு நிற்கின்றன. அதன் மூலம் நமது மனப்பரப்பின் எல்லைகளை மெய்மையால் அகலப்படுத்துகின்றன. நானறிந்த நிலம் , நானறிந்த தெய்வங்கள் என்பதால் எனக்கு கூடுதல் நெருக்கம் ஏற்படுகிறது. வரலாறும் , நினைவுகளும் போற்றி வைக்கப்பட்டு  எப்போது வேண்டுமாயினும் எழுந்து விட  முடியுமாயின்  நமது வெற்றுடல்களின் பொருளடக்கம்  வேறெங்கோ இருக்கிறது என்றுதானே ஆகிறது ? இந்த  தெய்வங்களை யெல்லாம்  கண்டடைந்து கவித்துவத்தால் இந்த நூலில் ஜெயமோகன் உயிர்பெறச் செய்திருக்கிறார். உதாரணமாக கவித்துவ கனவு போல நீரிலேயே வாழுகிற பிருதையை அவர் முதலில் கண்டடைந்திருக்கிறார் . பின்னர் கண்டடைந்த விதத்திற்கு மிக நெருக்கமாக நம்மை கொண்டு செலுத்தியிருக்கிறார்.

இந்த நூலில் வரும் தெய்வங்களில் சிலவற்றை நேரடியாக எனக்குப் பரிச்சயம். விஷ்ணுபுரத்திற்கும் முந்தைய எனது ஆரம்ப காலங்களில் நேரடியாக அவர் சிலவற்றைக் காட்டியும் தந்திருக்கிறார். ஜ்யேஷ்டை அவர் அவ்வாறு அழைத்துச் சென்று கண்ணில் காட்டிய தெய்வம். அதன் செல்வாக்கு விஷ்ணுபுரத்தில் உண்டென்றே கருதுகிறேன். இந்த நூலின் மிக முக்கியமான சாராம்சமாக விளங்கும் தெய்வம் அது. இந்த நூலை ஜெயமோகனின் அகவுலகின் சான்றாகக் கருத முடியுமெனில் , அவர் கண்டடைந்த மெய்மையின் முக்கியமான தாது ஜ்யேஷ்டை எனும் தெய்வம் எனலாம். அவர் நேரடியாகக் காட்டித் தந்த போதே கடுமையாக இருந்த அகப்பொருள் அது.

ஜ்யேஷ்டைக்கு நிகராக ஆதிகேசவனின் படுக்கைக்கு கீழே அமர்ந்திருக்கும் கேசிகள்.  இருவேறு உலகத்தைச் சுட்டி நிற்பவை. “கை விரலை வைத்தால் துண்டாக்கிக் கொண்டு செல்லும் நதியொன்று ஓடுகிறது. அதைக் கடந்தே மெய்மைக்கான பாதையைத் தொடர முடியும்.”என்கிற நித்ய சைதன்ய யதியின் கூற்று ஜ்யேஷ்டையின் கதையில் பொருத்தமாக இடம் பெற்றிருக்கிறது.நாம் கோபுரங்களில் மெய்மையைத் தேடித் கொண்டிருக்கும் போது  ஜ்யேஷ்டையும், கேசிகளும் மனதின் அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

“மகா யோகநிலை என்பது சிருஷ்டிக்கும் முந்தைய நிலை. அப்போது பிரபஞ்சத்தில் பெருமாள் மட்டுமே இருந்தார். பிறிதொன்று இலாததினாலேயே அவரும் இன்மை நிலையில் இருண்டிருந்தார்” கவித்துவத்தின் சாறு நின்றெரியும் வாக்கியங்கள் இதுபோல இந்த நூல் முழுதும் நிறைய வருகின்றன. ஆதிகேசவனைப் பற்றிய கதையில் இடம்பெற்றிருக்கும் வாக்கியங்கள் இவை.  நாட்டுத் தெய்வங்களையும் , காட்டுத் தெய்வங்களையும் பேசும் இந்த நூல் அடிப்படையில் புதிய மெய்மை ஒன்றினை அறிமுகம்செய்கிறது. அனுபவமாக்குகிறது. நமது அக வெளியினை நம்மிடம் திறந்து காணச்செய்கிறது. மகாபாரதம் பற்றிய அறிவின் மனத்தடைகளில் இருந்து வெளியேற ஐராவதி கார்வேயின் “யுகாந்தா “ஒரு யுகத்தின் முடிவு என்னும் நூல் எனக்கு பெரிதும் உதவியது.  இத்தனைக்கும் சாதாரணமான மானுடவியல் அணுகுமுறை மூலம் எழுதப்பட்ட மிகச் சிறிய நூல்தான் அது .அதுபோல நாட்டார் தெய்வங்களை பற்றிய இந்த நூலில், படைப்பு மனதின் ஊக்கத்துடன் அறிவின் பாசியை எடுத்தகற்றியிருக்கிறார் ஜெயமோகன். வாசகர்களின் மனதிலும் இது தன் வினையை மேற்கொள்ளும்.

லக்ஷ்மி மணிவண்ணன்
நாகர்கோயில்
11  – 01 – 2018

முந்தைய கட்டுரைஇந்தியக்கலை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78