அன்பின் ஜெ..
சோ.தர்மனின் சூல் படித்தேன். இன்னும் 2-3 முறை படிக்க வேண்டும். உங்கள் உரையில் குறிப்பிட்ட து போல், இயல்பு வாத அழகியலும், நாட்டார் கூறுகளும் இணைந்த ஒரு பார்வை. இன்னுமொரு கோணம்.
ஆனால், 2 நோக்குகளில், இந்தப் படைப்பு மிகவும் நிரடுகிறது..
- பழங்காலப் பொற்கால கம்மாக் கரை x இன்றைய நவீனத்துவத்தால் சீரழிந்த கிராம்ம் – இவ்வளவு எளிமையா உலகம்? அன்றைய காலத்தின் எதிர்மறைகள் எதுவுமே தென்பட வில்லை. ஆனால் இன்றைய உலகின் எதிர்மறைகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இந்தக் கதை வரலாறாக எழுந்த காலத்தில் தானே வைகை நதிப்பாசனம் உருவாக்கப் பட்டிருக்கிறது? காவிரியின் மேட்டூர் அணை கட்டப்பட்டிருக்கிறது. அதன் பின்னர், ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வேளாண்மை ஒரு 50-60 ஆண்டுகள் நடைபெற்றிருக்கிறது.
- தடுப்பூசிகளும் மருத்துவமனைகளும் வந்து கொள்ளை நோய்கள் குறைந்த, பிரசவ மரணங்கள் குறைந்த காலமும் தானே? தீண்டாமை முதன் முதலாய் எதிர்க்கப்பட்ட்தல்லவா? கல்வி கடையருக்கும் கிடைக்கத் துவங்கிய காலமல்லவா?
கதை இறுதியில், கரகாட்டக்காரிச் சிலையில் வந்து நிற்பது, ஒரு வீழ்ச்சியைச் சொன்னாலும், வீழ்ச்சி மட்டும்தானா?
கதையெங்கும் பாத்திரங்கள் வந்தாலும், அவை கதையின் வருடங்களை ஓட்டிச் செல்லும் வண்டிகள் போல இருக்கிறதே ஒழிய – ஒரு அகவய தரிசனத்தைச் சொல்வதாக இல்லை – அது மனதிலும் பெரிதாய் நிலை கொள்ள வில்லை.. கொப்புளாயி / குப்பாண்டி சாமி தவிர.
மிக முக்கியமான நிரடல் – அவரின் முன்னுரையில் ப்ரஷ்னேவை எடுத்துக் காட்டியது. முட்டாள்தனம் எனத் தோன்றியது. இந்தியாவில் நவீனம், கட்டாயப்ப்படுத்தப்படவில்லை. வேளாண்மைக் கல்வியின் பல கூறுகள், நமது பாரம்பரியத்தைச் சேர்த்துக் கொண்டது – உரம் / பூச்சி மருந்து போன்ற நவீன்ங்களோடு சேர்த்து. ஆனால், சோவியத் யூனியன், பாரம்பரிய வேளாண்மையை அடியோடு பிடுங்கி எறிந்து, அனைத்தையும் புதிதாய்ச் சமைத்தது.. மனிதனை அடிமையாக்கி அடக்கியது. இந்த வரலாற்றுப் பிரக்ஞை இல்லாமல் எப்படி இவர், நமது நவீனத்தைக் குறை சொல்கிறார் – புரியவில்லை.
வாசிக்கும் பக்கங்களெங்கும், தர்மனின் கடின உழைப்பு தெரிகிறது. நாளெங்கும் கமலை இறைத்து, கால் ஏக்கர் நீர் பாய்ச்சிய என் தந்தையுடன் வளர்ந்தேன்.. ஒரு நாள் காலை, பாட்லிபாய் டீஸல் எஞ்சின் வந்து எங்கள் வாழ்வை மாற்றியது. குமரப்பா கேலி பேசியது போல டீஸல் எஞ்சின் (அவர் ட்ராக்டரைச் சொன்னார்) சாணி போடவில்லை. ஆனால், கால் ஏக்கர் நீர் பாய்ச்சவும், வருடம் 4-5 முறை உழவும், எருதுகளை வைத்துக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சுமை மறைந்து, வாரம் ஒரு முறை பணம் தரும் பால் எருமைகள், நவீன யுகத்தின் ஒரு பகுதியாக எங்கள் வாழ்வில் வந்தது. வருடம் சில முறை உழ, வாடகைக்கு ஏர் பிடித்தோம்..
நவீனத்துவம் நுழைந்த்தன் நேர்மறை விளைவுகளையும் சேர்த்து, ஒரு முழுமையான தரிசனத்தை முன்வைத்திருந்தால், இது ஒரு பெரும் புதினமாயிருக்குமா? இல்லை, எனது வாசிப்பின் குறைபாடா? தெரியவில்லை.
ஆனால், கரிசல் வாழ்க்கையின் ஒரு பகுதியை, பெரும் அர்ப்பணிப்புடன் ஆவணப் படுத்தியிருக்கும் அந்த உழைப்புக்குத் தலை வணங்கியே ஆக வேண்டும். அதுவும் இன்றைய காலத்தில்.
அன்புடன்
பாலா
அன்புள்ள பாலா
சூல் தனக்கென ஓர் ஆவணத்தன்மையை புனைவுப்பாவனையாகக் கொண்டுள்ளது. ஆகவே நீங்கள் அதனிடம் எழுப்பும் கேள்விகள் பொருளுள்ளவைதான். ஆனால் அது ஆவணம் அல்ல என்பதை வாசகன் உணரவும் வேண்டும். அது சோ தருமனின் பெரும்பாலான ஆக்கங்களைப்போல இயல்புவாத அழகியல் கொண்டது. உள்ளது உள்ளபடி என்னும் புனைவுப்பாவனை அதிலிருப்பது.அது வரலாறு அல்ல புனைவு. ஆகவே பாரபட்சமற்றது அல்ல. உயிரற்றதும் அல்ல. ஆசிரியனின் நோக்கு உள்ளிருப்பதனால்தான் அது இலக்கியம்.
அந்த உள்ளது உள்ளபடி என்பது ஒரு மாயை. ஆசிரியன் இலக்கு வடிவமும் இல்லாதவன் என்றால் அது வெறும் ஆவணம், படைப்பு அல்ல. அது படைப்பாவது அதில் குவியத்தை ஆசிரியன் உருவாக்குவதனால்தான். யதார்த்தவாதப் படைப்பில் ஆசிரியனே புனைவுக்குள் வந்து அந்தக் குவியத்தை முன்வைக்கிறான். இயல்புவாதப் படைப்புக்குள் ஆசிரியன் இல்லை. அவன் அங்கே தன் தெரிவுகள் மூலம், விடுபடுதல்கள் மூலம் அக்குவியத்தை உருவாக்குகிறான். சோ.தருமன் எதை விடுகிறார் எதைச் சொல்கிறார் என்பதிலிருந்து நாம் அவருடைய பார்வையைச் சென்றடையலாம்
ஜெ