கேரளத்தின் காலனி

Madhu-Murder-3.jpg.image.784.410
குற்றவாளிகள்

மலையாள ‘யானை டாக்டர்’ ஒரு மொழியாக்கம் அல்ல, மறு ஆக்கம். மூலத்தைவிட முப்பது விழுக்காடு நீளம் மிகுதி. அதில் ஒரு பகுதி அந்நூல் வெளியானதுமே வாதமாக ஆகியது. வசைகளும் இருந்தன. அதில் மலையாளிகள் காடு பற்றி கொண்டுள்ள உளநிலை கடுமையாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது

காடு கேரளத்தின் காலனியாதிக்கப் பகுதி. காடு என்ற சொல்லே மலையாள மொழியில் எதிர்மறைப் பொருள் கொண்டது. மொழியில் கட்டுபாடின்மை காடுகேறுதல் எனப்படுகிறது. பாழடைதல் காடுபிடித்தல் எனப்படுகிறது. மலையாள மொழியிலுள்ள காடு சார்ந்த எல்லா சொலவடைகளும் காட்டை அச்சத்துடனும் அருவருப்புடனும் சித்தரிப்பவையே. காட்டில்நுழையும் மலையாளியின் மனநிலை ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்பவனுக்குரியதாகவே இருப்பதைக் காணலாம். ஊளைவிடுவார்கள், கெட்டவார்த்தை சொல்வார்கள், உடைத்துவீசுவார்கள். இதை யானைடாக்டர் சுட்டிக்காட்டுகிறது.

மலையாள மொழியாக்கத்தில் காட்டுக்குள் நுழையும் மலையாளிகளை  ‘செற்றகள்’ என்ற சொல்லால் யானைடாக்டர் குறிப்பிடுகிறார்.. பண்படாதவர்கள், கீழ்மக்கள் என்றபொருளில். அச்சொல்லை பலர் கடுமையாக எதிர்த்தனர். யானைடாக்டர் பிறிதொன்று சொல்லியிருக்கமாட்டார் என்றே நான் நினைத்தேன் இது கடந்த இருபதாண்டுகளாக நேரடி அறிதல் வழியாக உணர்ந்து நான் எழுதிக்கொண்டே இருப்பது. பெரும்பாலும் எல்லா கேரளப் பயணங்களிலும் இதைக்குறிப்பிட்டிருப்பேன்.

சென்ற ஆண்டுகளில் கேரள வனத்துறை காட்டுநிர்வாகத்தை பெருமளவில் சீர்ப்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் சராசரி மலையாள மனதுக்கு காடும் காடு சார்ந்தவையும் இழிவானவை, ஒடுக்கப்படவேண்டியவை, சூறையாடப்படவேண்டியவை மட்டுமே. சென்ற ஆண்டுகளில் இந்திய அளவில் காடு மிகப்பெரிய அளவில் அழிக்கப்பட்டது கேரளத்தில்தான். அடர்காடுகள் நிறைந்திருந்த அம்மாநிலத்தில் இன்றிருக்கும் காடுகள் மிகமிககுறைவு. எஞ்சியிருக்கும் காடுகள்கூட பலவகைகளிலும் ஊடுருவப்பட்டவையாகவே இருக்கும். செறிந்த காடுகளுக்கு நடுவே குன்றுகளின் உச்சிகளில் மிகப்பெரிய சுற்றுலாவிடுதிகள், கிறித்தவ நிறுவனங்களைக் காணமுடியும். எந்த அடிப்படையில் இந்நிலங்கள் சட்டபூர்வமாயின என்ற பிரமிப்பு ஏற்படும். கேரளம் மிகுதியாக மழைபெறும் நிலம் என்பதனால்தான் தமிழகம் போல காடுகள் முழுமையாக அழிந்து மொட்டைமலைகள் உருவாகாமலிருக்கின்றன.

madhu-death (1)
மதுவை அடிக்கையில் தற்படம்

கேரளத்தின் பொதுஉளநிலையையும் பிரித்தானியரின் காலனி மேல்கோன்மை மனநிலையுடன் ஒப்பிடலாம். ஒருபக்கம் ஈவிரக்கமற்ற சூறையாடல், ஒடுக்குமுறை. இன்னொரு பக்கம் அதற்கு எதிரான அறிஞர்கள் மற்றும் நுண்ணுணர்வுகொண்டவர்களின் எதிர்ப்பும் துயரும். முதல்தரப்பினர் எந்தப்பண்பாட்டுப் பயிற்சியுமற்ற மாபெரும் கும்பல். இரண்டாம் தரப்பினர் அவர்களுடன் தொடர்பற்ற சிறிய கலை,இலக்கிய,அறிஞர் குழு.

கேரளத்தில்தான் இந்திய அறிவுப்புலத்தில் முதலில் சூழியல் சார்ந்த எதிர்க்குரல் எழுந்தது. 1981 லிருந்து வெளிவரத்தொடங்கிய சூசிமுகி என்னும் சிற்றிதழ் சார்ந்து உருவான சூழியல் இயக்கம் கேரளத்தில் அறிவியக்கத்தினரிடையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. ஜோண் ஸி ஜேக்கப் [ஜோண்சி] அதன் நிறுவனர். அவர் தொடங்கிய SEEK [Society for environment  education of Kerla] என்னும் அமைப்பு ஒரு பெரிய தொடக்கம்.

காடு குறித்த மலையாளிகளின் பொதுப்பார்வையை மாற்ற அறிவியக்கத்தினர் பெருமுயற்சிகள் செய்தனர். மலையாளத்தின் முதன்மைக் கவிஞர்கள் அனைவருமே காடுகுறித்த புதிய பார்வைகளை முன்வைக்கும் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். அய்யப்பப் பணிக்கரின் காடெவிடே மக்களே? கடம்மனிட்ட ராமகிருஷ்ணனின் குறத்தி, காட்டாளன் [இதை நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன்] சுகதகுமாரியின்  கவிதைகள்  போன்றவை  ஏராளமாக உருவாயின.

சூழியல்சார்ந்த முதல்பெரும்போராட்டம் 1981 ல் அமைதிப்பள்ளத்தாக்கைக் காக்கும்பொருட்டு சுகதகுமாரி, பேராசிரியர் எம்.கே.பிரசாத் போன்றவர்களின் தலைமையில் எழுந்தது. அதன்பின் மாவூர் காகித ஆலைக்கு எதிரான சூழியலியல்போராட்டம் 1984ல் அத்துறே [கே.ஏ.அப்துல்ரகுமான்] தலைமையில் நடந்தது. மேற்குமலைகளைக் காக்க, பழங்குடியினர் உரிமைகளை மீட்க நிகழ்ந்த போராட்டங்களின் நீண்ட மரபும் அங்குண்டு. சிலவற்றில் நான் தொண்டர் அளவில் கலந்துகொண்டிருக்கிறேன்

ஆனால் மறுபக்கம் நாணத்தக்கது. அண்மையில் வெளியான புலிமுருகன் என்ற படத்தைப் பார்த்தால் இது தெரியும். அத்தனை சூழியல் கருத்துக்களுக்கும் எதிரான, அறிவுக்கீழ்மை மட்டுமே நிறைந்த ஒருபடம் அது. உண்மையில் அந்தப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கையில் கேரளத்தை எண்ணி அருவருப்பு கொண்டேன். கதைத்தலைவன் ‘கொடிய புலிகளை’ தேடித்தேடிக் கொன்றழிப்பதைப் பற்றியது அந்தப்படம். புலி சாகும்போது மக்கள் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் விழுந்ததுபோல கைதட்டி ஆர்ப்பரித்தனர். அவர்களுக்கு கேரளச் சூழியலாளர்களை, கவிஞர்களைத் தெரியாது, தெரிந்தாலும் ஒரு பொருட்டில்லை. இதுதான் இன்றைய கேரளத்தின் இரட்டைநிலை.

இதன் வரலாற்றுப்பின்புலம் கருத்தில்கொள்ளத்தக்கது. கேரளத்தின் காட்டுக்கொள்ளை தொடங்கியது 1850களின் தொடக்கத்தில். அன்று கேரளநிலத்தின் எண்பது விழுக்காடு காடுகள்தான். அங்கே பெரிய தேயிலை, காப்பி, ரப்பர் பண்ணைகளை அமைக்க முடியும் என வெள்ளைய அரசு கண்டறிந்தது. மலைகளை கடக்கும் சாலைகள் போடப்பட்டன. தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.

கேரளத்தின் காடுகள் பெரும்பாலும் அரசர்களுக்கும் ஆலயங்களுக்கும் ‘கொள்கை அளவில்’ சொந்தமானவை.பழங்குடிகள் கேரள ஆலயங்களில் உரிமைகளும் கடமைகளும் கொண்டவர்கள். அரசர்களுக்குச் சில மரியாதைகளை அவர்கள் செய்யவேண்டும். ஆண்டுக்கொருமுறை இந்தச் சடங்குகளை அவர்கள் மலையிறங்கி வந்து செய்துவிட்டு மேலே செல்வார்கள். மற்றபடி கேரள மையப்பண்பாட்டுக்கும் அவர்களுக்கும் பெரிய தொடர்பில்லை

madhu

1900களுக்குப்பின் நிலவரியை மிகுதியாக்கும்பொருட்டு ஆங்கிலேய அரசும் திருவிதாங்கூர் அரசும் காட்டுக்குள் குடியேறுவதை ஊக்குவித்தன. காட்டை அழித்து வேளாண்மைநிலமாக ஆக்குபவர்களுக்கு அக்காட்டின்மேல் முற்றுரிமை அளிக்கப்பட்டது. இன்றைய இடுக்கி,மலப்புறம்,கோட்டயம்,திருவனந்தபுரம் மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான ஊர்கள் அப்போதுதான் உருவாகி வந்தன.

காட்டை அழித்து குடியேறுவதென்பது ஒரு வீரச்செயலாக, தியாகமாக இலக்கியங்களால் போற்றப்பட்டது. எஸ்.கே.பொற்றேக்காட்டின் விஷகன்யக ஓர் எடுத்துக்காட்டு. [தமிழில் வெளிவந்துள்ளது] அதில் காட்டை ஒரு நச்சுக்கன்னியாக அவர் உருவகம்செய்கிறார். அழகியது, நஞ்சுகொண்டது. அதை அடக்கி வெல்வதன் சித்திரமே அந்நாவல். அத்தகைய நூறு நாவல்களேனும் மலையாளத்தில் அன்று எழுதப்பட்டன.

குடியேற்ற வேளாண்மக்களில் பெரும்பாலானவர்கள் கிறித்தவர்கள். அவர்கள் கேரளத்தில் கிபி நான்காம் நூற்றாண்டுமுதல் இருந்துவரும் சமூகம். பதின்நான்காம் நூற்றாண்டுக்குப்பின் கடலோர நிலங்களில் அவர்கள் பெருகினர். தொடக்கத்தில் நீர்வழியாக வணிகம் செய்யும் சமூகமாக இருந்தனர். சாலைகள் பெருகியபோது அவர்கள் வேளாண்மை நோக்கித் திரும்பினர். மேலும் மேலும் வேளாண்நிலம் அவர்களுக்குத் தேவைப்பட்டது.

அன்றைய நில உரிமை முழுக்க மூன்று தரப்பினரிடமே இருந்தது. பிராமணர், கோயில்கள் அரசர் [பிரம்மஸ்வம், தேவஸ்வம், ராஜஸ்வம்] இந்நிலங்களை கையில் வைத்திருந்தவர்கள் நாயர்கள். புதியநிலம் கண்டடையப்பட்டேயாகவேண்டும் என்னும் நிலையில்தான் அவர்கள் எல்லைகளை நோக்கி விரியலாயினர். சதுப்புகளும் கரைக்காடுகளும் விளைநிலங்களாயின. வெள்ளையர் ஆட்சியில் காடுகளினூடாக சாலைகள் அமைந்தன. போக்குவரத்து உருவானபோது அவர்கள் காடுகளை நோக்கிப் பரவினர். காடுகளை அழித்து தோட்டங்களாக்கினர்.

நாட்டு விடுதலைக்குப்பின் அடர்காடுகளில் அணைக்கட்டுத்திட்டங்கள் வந்தன. மேலும் மேலும் மக்கள் குடியேறினர். ஊர்கள் உருவாயின, தோட்டங்கள் வளர்ந்தன. இவை அனைத்தும் பழங்குடியினரின் நிலம். அவர்கள் மேலும் மேலும் காடுகளுக்குள் துரத்தப்பட்டனர். அடிமைக் கூலியாட்களாக ஆயினர். பின்னர் காடுகள் விலங்குகளுக்கான காப்புநிலைக் காடுகளானபோது அங்கிருந்து மீண்டும் ஊர்களுக்குத் துரத்தப்பட்டனர். நூறாண்டுகளாக இரக்கமின்றிச் சூறையாடப்படும் மக்கள் அவர்கள். மலையாளிகளின் புகழ்பெற்ற அரசியல் அகச்சான்றினால் காணாதொழியப்படுபவர்கள்.

கேரள அரசியலில் சென்ற எழுபதாண்டுகளில் முதன்மையான அரசியல்கோரிக்கைகளில் ஒன்றாக எப்போதும் இருப்பது குடியேற்ற வேளாண்மக்களுக்கு நிலம் பட்டா அளிப்பது. அதாவது அவர்கள் கையகப்படுத்திய காட்டுக்கு சட்டபூர்வ உரிமை அளிப்பது. காங்கிரஸ், இடதுசாரிகள் என்னும் இரு தரப்பினரும் இந்த கோரிக்கையை மாறிமாறி நிறைவேற்றிக்கொண்டே இருந்தன. இது நடந்துகொண்டே இருக்கிறது –இந்த ஆண்டுவரை. எல்லா அரசியல்கட்சிகளின் வாக்குறுதிகளிலும் இந்த வரி கட்டாயம் இருக்கும்

கையகப்படுத்தப்பட்ட நிலத்தின்மேல் உரிமையை பெறும்பொருட்டே உருவான அமைப்பு மாநிலக் கட்சியான கேரளக் காங்கிரஸ். ஒருபக்கம் இது கிறித்தவத் திருச்சபைகளால் ஆதரவளித்து நிறுத்தப்படுகிறது. மறுபக்கம் மதுவணிகர்கள். மீன்ஏற்றுமதியாளர்கள், பெரும்பண்ணை உடைமையாளர்களால் போற்றப்படுகிறது. காட்டுவேட்டையர்களின் கட்சி இது என அனைவருக்கும் தெரியும். இது தேவைக்கேற்ப இரண்டாகப்பிரிந்து ஒருபகுதி இடதுசாரிகளுடனும் இன்னொரு பகுதி காங்கிரஸுடனும் இருக்கும். இவர்களின் ஆதரவில்லாமல் சென்ற அறுபதாண்டுகளில் கேரளத்தில் எவரும் அரசமைத்ததில்லை. ஆகவே சட்டபூர்வ காடழிவு கேரள அரசியலின் ஒரு பகுதி

1972ல் முதல் அனைத்துலகச் சூழியல்மாநாட்டுக்குப்பின் காடுகள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நிலைபாட்டை மையஅரசு எடுத்தது. ஆகவே நிலத்தை புதிதாக கையகப்படுத்தமுடியாத நிலை உருவானது. உடனே புதிதாகக் கையகப்படுத்திய நிலத்துக்கு ஐம்பதுகள் முதலே ஆவணங்கள் தயாரிப்பது கேரளத்தின் முதன்மையான அரசுத்தொழிலாக உருவாகி சென்ற முப்பதாண்டுகளாகச் செழித்து வளர்கிறது. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட ஏராளமான நிலங்கள் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை. தொண்ணூறுகளுக்குப்பின் தோட்டத்தொழிலுடன் சுற்றுலாமையங்கள் அமைப்பது இணைந்துகொண்டது.

இவை கண்ணுக்குத்தெரிவன. பொதுவாகத் தெரியாமல் மாபெரும் கஞ்சாத்தோட்டங்கள் கேரளக்காடுகளுக்குள் உள்ளன. பத்தாண்டுகளுக்கு முன் கஞ்சாத்தோட்டங்களை நோக்க காட்டுக்குள் செல்லமுயன்ற சுகதகுமாரி தாக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். அவை தனி முடியரசுகளாகவே நடக்கின்றன. பழங்குடிகள் அங்கே அடிமைகளாக வேலைசெய்கிறார்கள். கேரளத்தின் மலைப்பகுதிகளில் எங்கு நின்றாலும் கஞ்சாத்தோட்ட வேலைக்காக பழங்குடிகள் லாரிகளில் ஏற்றிச்செல்லப்படுவதைக் காணலாம். கஞ்சா கேரளத்தின் பொருளியலை முடிவுசெய்யும் முதன்மையான விளைபொருள். அதில் பங்கில்லாத அரசியல்கட்சிகள் இல்லை.

மலைப்பகுதிகளில் உள்ள இன்னொரு ஊடுருவல் தரப்பு இஸ்லாமியச் சிறுவணிகர்கள். அவர்களில் நில உடைமையாளர்கள் குறைவு. 1950களில் மலப்புறம் பகுதிகளில் இருந்து கடைகள் வைக்க மலைக்கு வந்தனர்.மெல்லமெல்ல மலைப்பகுதிகளின் வளர்ச்சியுடன் தாங்களும் வளர்ந்து வலுவான வணிகக்கூட்டமாக ஆயினர். இன்று அவர்கள் சுற்றுலாவிடுதிகளை நடத்துகிறார்கள். அதன்பொருட்டு காடுகளை பெருமளவில் அழிக்கிறார்கள். ஓர் அரசியல்தரப்பாகத் திரண்டிருக்கிறார்கள்.

கேரளத்தின் மலைப்பகுதிகளின் அரசியலில் மூன்று தரப்புகள் உள்ளன. குடியேற்றவேளாண்மக்களின் கட்சியான கேரள காங்கிரஸ் மற்றும் இந்தியதேசிய காங்கிரஸ், இஸ்லாமிய வணிகர்களின் கட்சியான முஸ்லீம் லீக் மற்றும் பிடிபி போன்ற வகாபிய கட்சிகள், தோட்டத்தொழிலாளர்களின் கட்சியான கம்யூனிஸ்டுக் கட்சி. அங்கே பழங்குடிகளுக்கும், ஏறத்தாழ அதேநிலையில் வாழும் மலைப்பகுதி தமிழ்த்தொழிலாளர்களுக்கும் அரசியலமைப்பே இல்லை.

elvin
வெரியர் எல்வின்

 

இந்திய அரசின் பழங்குடிக் கொள்கை பழங்குடிகளிடையே வாழ்ந்து அவர்களை அறிந்த வெரியர் எல்வின் அவர்களின் செல்வாக்கால் உருவானது. வெள்ளைய அரசின் கொள்கை பழங்குடிகளை காடுகளில் இருந்து அப்புறப்படுத்துவது, வலுக்கட்டாயமாக நாகரீகப்படுத்துவது, இயலவில்லை என்றால் ஒடுக்குவது என்னும் நோக்கில் அமைந்தது. மாறாக பழங்குடிகளின் வாழ்விடமும் பண்பாடும் பேணப்படவேண்டும், அதற்கான உரிமையை அவர்களுக்கு அரசு அளிக்கவேண்டும் என எல்வின் வாதிட்டார். அதனடிப்படையிலேயே இந்தியப் பழங்குடிநலன்கள் சார்ந்த திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்திய அரசியல் சட்டம்[ 244 ஆம் பகுப்பு 5,6 ஆம் அட்டவணைகள்] அதை உறுதிசெய்கின்றடது

ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் விடுதலைக்குப்பின் ஆட்சியைக் கைப்பற்றிய அரசுகள் அந்த உரிமைகளை பொருட்படுத்தவே இல்லை. ஏனென்றால் அதற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே காடுகளில் குடியேறி, வணிகமும் வேளாண்மையும் செய்யும் வலுவான சமூகங்கள் உருவாகி விட்டிருந்தன. அவர்களின் வாக்கு அரசை முடிவுசெய்வதாக இருந்தது. அவர்களின் நலன்களே முதன்மையாகப் பேணப்பட்டன.

தொடர்ச்சியாக பழங்குடிகள் சுரண்டப்படுவதைக் கண்ட நடுவண் அரசு டேபர் கமிஷனை [Dhebar commission report 1961] அமைத்து பழங்குடிநலன்கள் பேணப்படுவதை ஆராய்ந்தது.அந்த அறிக்கை அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை உறுதிசெய்தபோது மாநில அரசுகளுக்கு வலுவான அழுத்தத்தை அளித்தது. தேசிய பழங்குடிநல துறை [ITDP)]  நிகழ்த்திய ஆய்வுகளில் கேரளத்தில்  1960ல் பழங்குடிநிலமாகக் கண்டடையப்பட்ட நிலங்களில் அட்டப்பாடியில் மட்டும் பத்தாயிரம் ஹெக்டேர் நிலம் தனியாருக்குப் பட்டாபோடப்பட்டது தெரியவந்தது. இதை இடது வலது அரசுகள் மாறிமாறிச் செய்திருந்தன

இவ்வாறு உருவான அழுத்தத்தால் 1971 கேரள சட்டச்சபை பழங்குடிநிலங்களைப் பாதுகாப்பது குறித்த ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.  [ Kerala Private Forest (Vesting & Assignment Act, 1971]    ஆனால் இது வெறும் கண்துடைப்புச் சட்டம், ஏனென்றால் மறுபக்கம் அதுவரை கையகப்படுத்தப்பட்ட அத்தனை காடுகளுக்கும் பட்டா வழங்கும் பணியும் நடந்துகொண்டிருந்தது அதன்பின் அதிலுள்ள ஓட்டைகளை சுட்டிக்காட்டிய சட்டப்போராட்டங்களுக்குப்பின் 1975ல் அடுத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. KST Act, 1975 [Kerala scheduled Tribes (Restriction on Transfer and Restoration of Alienated Land) Act, 1975] இச்சட்டங்கள் எல்லாம் கேரளத்தின் சிறந்த முதல்வர்களில் ஒருவராகக் கருதப்படும் சி.அச்சுதமேனன் [இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி] முயற்சியால் கூட்டணியிலிருந்த காங்கிரசின் எதிர்ப்பை மீறி உருவாக்கப்பட்டவை.

ஆனால் இச்சட்டம் நடைமுறைக்கே வரவில்லை. அதை நடைமுறைக்க்குக் கொண்டுவரவேண்டும் என்று கோரித்தான் 1990ல் சி.கெ.ஜானு தன் போராட்டத்தை ஆரம்பித்தார். முதலில் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இருந்துகொண்டு போராடிய அவர் காட்டுரிமை விவாதங்களில் காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் ஒரேதரப்பினர்தான் என உணர்ந்தபின்னரே வெளிவந்தார். இருதரப்பினரும் இணைந்து 1975ல் கேரளச் சட்டச்சபை நிறைவேற்றிய சட்டத்தை செயலற்றதாக்கும் துணைப்பிரிவுகளைச் சேர்ப்பதற்கு எதிராகவே அப்போராட்டம் தொடங்கியது.ஆதிவாசி விமோசன முன்னணி, ஆதிவாசிகோத்ர சபா போன்ற பல்வேறு பழங்குடி அமைப்புகள் ஓரணியில் திரண்டன. 2001ல் 157 பழங்குடியினர் கண்ணனூர் மாவட்டத்தில் பட்டினியால் இறந்தனர் என்னும் கண்டடைதலின் அடிப்படையில் 55 நாட்கள் நிகழ்ந்த போராட்டம் கேரளம் முழுக்க அலைகளை உருவாக்கியது.

1990 முதல் பலநிலைகளில் நிகழ்ந்த போராட்டத்தை ஒட்டி அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தங்களின் வரிசையை எடுத்துப்பார்த்தால் ஒன்று தெரியும், தொடர்ச்சியாக பழங்குடிகளை சட்டரீதியாக ஏமாற்றவே இடது, வலது அரசுகள் முயன்றுவந்துள்ளன. உதாரணமாக 1999ல் இடதுசாரி அரசு 1975ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்தது. அதாவது பழங்குடியினருக்குரிய நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால் அது ஐந்து எக்கருக்குக் குறைவாக அளவுள்ளது என்றால் அதை கையகப்படுத்தியவருக்கு அளித்துவிடம். ஐந்து ஐந்து எக்கராகஎத்தனை ஆயிரம் ஏக்கர் வேண்டுமானாலும்!

பலநிலைகளில் நிகழ்ந்த போராட்டம்  2003 பெப்ருவரி 19ல் தொடங்கிய முத்தங்கா போராட்டத்துடன் முடிவுக்கு வந்தது. பழங்குடியினர் அமைப்பின் கூட்டுத்தலைமை நடத்திய போராட்டத்தை வன்முறைமூலம் அடக்கி சி.கே.ஜானுவைக் கைதுசெய்து கடுமையான ஒடுக்குமுறை வழியாக பழங்குடியினரின் குரல்களை முழுமையாக நசுக்கியது நில ஆக்ரமிப்பாளர்களான கேரள காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீகின் ஆதரவில் அமைந்த காங்கிரஸ் அரசு. 1100 பழங்குடிகள் சிறையிலடைக்கப்பட்டனர். ஜோகி என்பவர் கொல்லப்பட்டார். இன்றும் பழங்குடிகள் மீதான வழக்குகள் நிகழ்ந்துவருகின்றன. [பழங்குடிப்போராட்டங்களை வழிநடத்துபவர்களில் ஒருவரான கீதானந்தன் அவர்களின் கட்டுரையில் இருந்து இத்தகவல்கள்]

பழங்குடிகள் காடுகளில் இருந்து அரசு உருவாக்கிய சேரிபோன்ற குடியிருப்புகளில் கொண்டுவந்து தங்கவைக்கப்படுகிறார்கள். அவர்கள் கூலிவேலைசெய்தாகவேண்டும். காட்டின் நிலத்தில் எந்த உரிமையும் இல்லை. அவர்கள் அறிந்தவாழ்க்கையை வாழமுடியாது. கூலிவேலைசெய்யும் மன அமைப்பு அவர்களுக்கும் இல்லை. ஆனால் அவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். கொலை, கற்பழிப்பு சாதாரணமாக நிகழ்கிறது. ஒரு பேட்டியில் கீதானந்தன் 2002 வரை அட்டப்பாடியில் கொல்லப்பட்ட பழங்குடியினரின் எண்ணிக்கை 120 என்றும் எந்தக்குற்றவாளியும் தண்டிக்கப்படவில்லை என்றும் சொல்கிறார்.

CK_janu
சி கே ஜானு

அதன்பின் பதவிக்கு வந்த இடதுசாரி அரசும் எதுவும் செய்யவில்லை. இன்று பழங்குடிப்போராட்டங்கள் பெரும்பாலும் நின்றுவிட்டன. விவாதங்களில் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் மாறிமாறி பழங்குடிகளுக்காகத் தாங்கள்செய்த சட்டத்திருத்தங்களைச் சொல்வார்கள், நடைமுறையில் எதுவுமே நிகழவில்லை.

சி.கே ஜானு ஒருங்கிணைக்க அம்புகுத்தி, கோளிக்கம்பாளி, பனவல்லி,சீங்ஙேரி போன்ற ஊர்களில் தொடர்ச்சியான பழங்குடியினர் போராட்டங்கள் நிகழ்ந்தன. பழங்குடியினரின் கோரிக்கைகள் மிக எளியவை. அவர்களுக்குரியவை என மத்திய அரசு ஒப்புக்கொண்ட நிலங்களை கையகப்படுத்தி வைத்திருப்பவர்களிடமிருந்து பெற்று அவர்களிடம் அளிக்கவேண்டும், ஒருவருக்கு ஐந்து எக்கர் அளவிலேனும். அவர்கள் காடுகளில் தேன் போன்றவை சேகரிக்கும் உரிமையை சட்டபூர்வமாக அனுமதிக்கவேண்டும். அதைத்தவிர எல்லா பேச்சுவார்த்தைகளுக்கும் அரசு தயாராக உள்ளது

ஏனென்றால் கேரள அரசு அதிகபட்சம் நாலைந்து எம்.எல்.ஏ வேறுபாடில் அமைவது. குடியேற்றவேளாண்மக்களும் மலைவணிகர்களும் பதினைந்து எம்.எ.ஏ இருக்கைகளைக் கட்டுப்படுத்தும் அரசியல் சக்தி. பழங்டிகளுக்கு ஒரு பஞ்சாயத்து உறுப்பினரைக்கூட தேர்ந்தெடுக்கும் எண்ணிக்கை வல்லமை எங்குமில்லை. ஜனநாயகத்தின் வன்முறை!

மலைப்பகுதித் தமிழர்கள் அண்மையில் அத்தனை அரசியல்கட்சியினரையும் புறக்கணித்து முழுக்கமுழுக்க பெண்களை மட்டுமே முன்னிறுத்தி மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நிகழ்த்தினர். அவர்கள் இடது, வலது எவரையும் உள்ளே விடவில்லை என்பதிலிருந்தே அங்குள்ள அரசியல்சூழல் புரியும்.

இதிலுள்ள பாவனைகள் எண்ணற்றவை. காட்டுக்குள் குடியேறியிருக்கும் ஆக்ரமிப்பாளர்களை காடுகளைக் காப்புக்காடுகளாக ஆக்கும்பொருட்டு அரசு வெளியேற்றும்போது மட்டும் இடதுசாரிகள், போராளிகள் எழுந்துவருவார்கள். ஆனால் அது பழங்குடிநலனைப் பாதுகாப்பதற்காக என்பார்கள்.

பழங்குடிகளின் இடர்கள் அனைத்துமே காப்புக்காடுகளால்தான் என்ற சித்திரத்தை உருவாக்க இன்று பெரிய ஒரு அறிவுஜீவிப் பட்டாளமே களமிறக்கப்பட்டுள்ளது. காப்புக்காடுகள் பழங்குடிகளுக்கு எதிரானவை அல்ல, கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பத்துசதவீதம் நிலம் மீட்கப்பட்டு பழங்குடிகளுக்கு அளிக்கப்பட்டால், காப்புக்காடுகளுக்குள் பொருட்கள் சேகரிக்கும் உரிமைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டால் பிரச்சினை முழுமையாகவே முடிந்துவிடும். அதற்கு விடமாட்டார்கள்.*

இச்சூழலில் நிகழ்ந்துள்ளது இந்த வன்முறை. இது அங்கே அன்றாடம் நிகழும் வன்முறையின் ஒரு பகுதி, மது உயிரிழக்கவில்லை என்றால் செய்தியே ஆகியிருக்காது. மது ஒரு பழங்குடியினர். அந்த உளநிலையிலிருந்து அவரால் எளிதில் வெளிவர முடியாது. அவர் மலைக்குள் பாறையிடுக்கில் வாழ்ந்திருக்கிறார். உணவை சேகரித்து உண்டிருக்கிறார். அதன் ஒருபகுதியாக அவ்வப்போது ஒரு கைப்பிடி நெல், ஒருசில பாக்குகள், தேங்காய் போன்ற சிலவற்றை எடுத்துச்சென்றிருக்கிறார். அவருக்கு அது திருட்டு அல்ல, உணவுச்சேகரிப்பு.

அவரை அவர்கள் தாக்கும் ஒளிக்காட்சியைப் பாருங்கள். அவரை கைகளைக் கட்டிவைத்து கூடநின்று தற்படம் எடுத்துக்கொள்கிறார்கள். சிரிக்கிறார்கள், கேலிசெய்கிறார்கள். அடித்து அடித்து கொலைசெய்கிறார்கள். அவரால் பேச முடியவில்லை. கெஞ்சக்கூட தெரியவில்லை. அது அவர்களுக்கு ஒரு கொண்டாட்டம். திருட்டுக்கொடுத்ததன் சினமோ இழப்புணர்வோ அல்ல அவர்களிடம் வெளிப்படுவது. அடிப்பவர்கள் மிகமிகச் செல்வச்செழிப்பைக் காட்டுகிறார்கள். ஒருவேளை உணவு அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்களுக்கு அவர் ஓர் இரை.

சென்ற ஐம்பதாண்டுகளில் அவர்கள் பழங்குடிகளை கொன்றே அழித்துக்கொண்டிருக்கிறார்கள். வாழ்விடங்களை பிடுங்கி, நோய்களை உருவாக்கி, அவர்கள் சேகரித்துவரும் பொருட்களை விற்கமுடியாதபடி கெடுபிடிகளை உருவாக்கி விலைகுறைத்து, அவர்களின் நலத்திட்டங்களில் ஊழல் செய்து, அவர்களுக்கான ரேஷனைக்கூட திருடிவிற்று, கஞ்சாத்தோட்டங்களில் கைகளைக் கட்டி அடிமைவேலைசெய்யவைத்து. இச்செயல் அந்த பேரழிவின் அடையாளம், வேறல்ல

இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளித்தரப்பு இன்னமும் கைதுசெய்யப்படவில்லை. காட்டுக்குள் இருந்த பழங்குடியாகிய மதுவை காட்டிக்கொடுத்ததும் காட்டுக்குள் அழைத்துச்சென்றதும் வனத்துறை ஊழியர்கள்.

சரி, இந்த வழக்கு என்ன ஆகும்? 16 பேர் கைதாகியிருக்கிறார்கள். கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. கேரளவரலாற்றில் அரிதாக மலைப்பகுதியைச் சூறையாடும் இரு தரப்பினரின் கட்சிகளும் நேரடியாக இடம்பெறாத அரசு இன்றிருப்பது. ஆகவேதான் இன்று இக்கைதே இயல்வதாகியிருக்கிறது.ஆனால் இப்போதே கேரள இஸ்லாமியக் கட்சிகள் இது இஸ்லாமியருக்கு எதிரான நடவடிக்கை என சொல்லத் தொடங்கியிருக்கின்றன.

மது ஒரு மனநோயாளி என்று தொடர்ச்சியாக அங்குள்ள அரசியல்வாதிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடுமையாகத் தாக்கப்பட்டு போலீஸிடம் ஒப்படைக்கப்பட்ட மது ஜீப்பிலேயே மயங்கிவிழுந்து ஆஸ்பத்திரியில் மரணவாக்குமூலம் அளித்துவிட்டு உயிரிழந்தார். அதில் ஹூசேய்ன், மத்தச்சன், மனு, அப்துல் ரஹ்மான், அப்துல் லதீஃப், அப்துல் கரீம், எம்.பி.உம்மன் ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அவர்கள் தன்னை அடித்ததாகச் சொல்லியிருக்கிறார். பழங்குடி அமைப்புக்களின் கடுமையான போராட்டத்திற்குப்பின்னர்தான் காவல்துறை மரணவாக்குமூலத்தை வெளியிட்டது.   அவரை மனநோயாளி எனச் சித்தரிப்பது இந்த மரணவாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தகர்ப்பதற்காகத்தான் என்கிறார்கள். அவர் நீராடுவதில்லை, அழுக்கு ஆடை அணிந்து குகையில் வாழ்ந்தார் என்பதைக்கொண்டு அவரை மனநோயாளி என நம் நீதிமன்றங்கள் முடிவுசெய்யவே வாய்ப்பு மிகுதி

இவ்வழக்கில் இனி பெரும்பாலும் விழிச்சான்றுகள் இருக்காது. சூழல்சான்றுகள் குழப்பப்படும். நீதிமன்றமே பழங்குடியினருக்கு எதிரான உளநிலையில்தான் இருக்கும். இப்போது உருவாகும் இந்த எதிர்ப்பு அலை சிலமாதங்கள் கடந்ததும் இல்லாமலாகும்.  பல ஆண்டுகள் விசாரணை நடக்கும். அதன்பின் அனைவரும் அனைத்தையும் மறந்தபின் அத்தனை குற்றவாளிகளும் சட்டபூர்வமாகவே விடுதலைசெய்யப்படுவார்கள்.சிலதருணங்களில் போதிய ‘இடைவெளி’ விடப்பட்டு கீழ்நீதிமன்றத்தில் கடும்தண்டனை அளிக்கப்படும். உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்துசெய்து அவர்களை விடுவிக்கும். இதுதான் எப்போதும் நிகழ்கிறது.

ஏனென்றால் அவர்கள் கேரளத்தின் பிரதிநிதிகள், அவர்களை அவர்களைப்போன்ற பிறர் எப்படித் தண்டிப்பார்கள்?

விஷக்கன்னி எஸ்.கே.பொற்றேக்காட்