பகுதி பத்து : பெருங்கொடை – 11
முதற்புலரிக்கு முன்பே அசலையும் தாரையும் கர்ணனின் மாளிகை முகப்புக்கு வந்தனர். வேள்வியில் அமர்வதற்கு உலோகங்களோ, தோலோ, பட்டோ கூடாதென்பதனால் வெண்ணிற பருத்தியாடைகளும், வெண்சங்கு போழ்ந்த வளையல்களும், தீட்டப்பட்ட விதைகளாலான கருமணியும் செம்மணியும் கோத்த மாலைகளும் மட்டுமே அணிந்திருந்தனர். அங்கே காத்திருந்த துணைப்படைத்தலைவன் உக்ரசேனன் வணங்கி முகமன் உரைத்து “அரசரும் அரசியும் ஒருங்கிக்கொண்டிருக்கிறார்கள், அரசி” என்றான்.
தாரை “பொழுதாகிறது, அணிகளை எங்கேனும் நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான்” என்றாள். அசலை “அரசர் எந்நிலையிலிருக்கிறார்?” என்றாள். உக்ரசேனன் சிரித்து “நன்னிலையில்தான்… ஸ்ரீகரர் உள்ளே சென்றிருக்கிறார்” என்றான். அசலை “வேள்விக்கு தூய்மையும் எளிமையுமே அணிகள் என்பார்கள்” என்றாள். தாரை நகைத்து “அவையிரண்டையும் பார்ப்பவர்கள் உணரும்படி செய்வது எளிதல்ல, அரசி. அரசர் பலர் நேற்றிரவு முதலே அணிகொள்ளத் தொடங்கிவிட்டனர். வேள்விக்கு அணிசெய்யக் கற்ற அணிச்சூதர்கள் சிலரை கூட்டிவந்திருக்கிறார் சைந்தவர்” என்றாள்.
அவர்கள் படியேறி மேலே சென்றபோது சபரி மூச்சிரைக்க ஓடிவந்து அவர்களை எதிர்கொண்டாள். “கலிங்கத்தரசி அணிகொள்கிறார். நான் கீழே வரும்போதே முடிந்துவிட்டது… அவையறையில் சற்று பொறுத்திருக்கவேண்டும், அரசி” என்றாள். அவர்கள் அங்கிருந்த பீடங்களில் அமர, சபரி படிகளில் ஓசையுடன் மேலேறிச்சென்று அணியறையை அடைந்து “இரு அரசியரும் வந்துள்ளனர், அரசி. அவர்கள் வந்தபின் நாம் பிந்துவது முறையல்ல” என்றாள். ஆடிநோக்கி உளம் அழிந்து அமர்ந்திருந்த சுப்ரியை திரும்பி நோக்கி “என்ன?” என்றாள். “அரசியர் இருவருமே வந்துள்ளனர்” என்றாள் சபரி.
சுப்ரியையும் வெண்பருத்தியாடையும் செந்நிறக் குன்றிமணிகள் கோத்த ஆரமும் தேய்த்த கல்மணிகளால் ஆன காதணியும் குருதிச்சந்தனத்தில் செதுக்கியமைத்த வளையல்களும், மரக்கடைவுத் தண்டைகளும் அணிந்திருந்தாள். ஆடியில் தன்னை நோக்காமல் விழிமூடி சரிந்திருந்தவள் ஏதோ ஒலிகேட்டு விழிதிறந்து எதிரே முன்னறியாத பெண்ணைக் கண்டு திகைத்து பின் அதிலேயே உளம்நிலைத்து அமர்ந்திருந்தாள். “இன்னும் ஒரு மணி” என்று அணிச்சேடி சொன்னாள். அதை நோக்காமல் சுப்ரியை எழுந்ததும் அணிச்சேடி “ஒரே ஒரு தையல்… ஒரு சிறு இணைப்பு, அரசி” என்றாள்.
சபரி சினத்துடன் “நேற்று பின்னிரவில் தொடங்கியது… இன்னமும் அணிசெய்து முடிக்க உன்னால் இயலவில்லை என்றால் இனி நீ அணிசெய்யவே வேண்டியதில்லை… வருக, அரசி” என்றாள். “அணிசெய்வதைப்போலவே அணிகளைவதும் ஒரு பெருங்கலை என ஆக்கிவைத்திருக்கிறார்கள்” என முனகிக்கொண்டாள். சுப்ரியை தலைகுனிந்து எண்ணம் கலையாமலேயே உடன்வந்தாள். சபரி “அனைத்தும் ஒருங்கிவிட்டிருக்கின்றன. நகரே ஒழிந்து வேள்விச்சாலையை சூழ்ந்துகொண்டிருக்கிறது. வேள்வி முடிவதுவரை நோன்புகொண்டு திறந்த வான்கீழ் தங்கியிருக்கவேண்டும் என்பது நெறி. வேள்விநிறைவின்போது அவிப்புகையை கரைத்து வான்மழை இறங்கும். அதன் துளி உடலில் படுவதே தெய்வங்களும் தேவர்களும் வானுறை முனிவர்களும் அளிக்கும் வாழ்த்து” என்றாள்.
படியிறங்கியபோது சுப்ரியை “இளைய யாதவர் இன்று வேள்வியவைக்கு வருவாரா?” என்றாள். “வருவார், ஆனால் அவருடைய இடம் வைதிகரும் முனிவரும் அறிஞரும் அமரும் அவையில்தான்” என்றாள் சபரி. சுப்ரியை பெருமூச்சுவிட்டாள். “காலையிலேயே நம் அரசர் அணிகொண்டு முடித்துவிட்டார். ஸ்ரீகரர் அவரை ஒருக்கி கொண்டுவரச் சென்றிருக்கிறார்” என்றாள் சபரி. அவளைக் கண்டதும் அசலையும் தாரையும் எழுந்தனர். சபரி “அரசி, இத்தோற்றத்தில் உஷைதேவி எழுந்ததுபோல் இருக்கிறீர்கள்” என்றாள். சுப்ரியை புன்னகை செய்து “அரசர் எழுந்துவிட்டாரா?” என்று கேட்டாள். சபரி “இதோ நோக்கிவருகிறேன்” என்றாள்.
அதற்குள் அப்பால் சங்கொலி எழுந்தது. “எழுந்தருள்கிறார்” என்று சபரி சொன்னாள். “இரவிலேயே வெள்ளித்தேர் வந்துவிட்டது. நாம் கங்கைக்கரையை அடைவது வரை விடியாது. விடியலில் சென்றிருந்தால் இளங்கதிர்பட்ட முகில்போல பொன்னிறம் கொண்டிருக்கும்.” சபரி “எழுக, அரசி!” என்றாள். சுப்ரியை எழுந்து இருபக்கமும் அசலையும் தாரையும் துணைவர வெளியே சென்றாள். சபரி “சில நாட்களுக்கு முன்புவரை இந்நகரை மூடி இருண்ட முகில் நின்றிருந்தது என்கிறார்கள். நஞ்சென ஒரு பாசி படிந்து நகரே நோயிலிருந்ததாம். நகரெங்கும் காக்கைகளும் நரிகளும் நிறைந்திருந்தனவாம். வேள்விக்கு முடிவெடுத்ததுமே இரவு விடிவதுபோல் நகர் ஒளிகொண்டு எழுந்துவிட்டது” என்றாள்.
மறுபக்கப் படிகளினூடாக கர்ணன் துணையாக குண்டாசியும் சுஜாதனும் நடந்துவர படியிறங்கினான். வெண்ணிற அரையாடைக்குமேல் மெல்லிய வெண்பருத்தி மேலாடையைச் சுற்றியிருந்தான். காதுகளில் பளிங்குக்கல் கடைந்த மணிகளால் ஆன குண்டலங்கள். வேறெந்த அணிகலன்களுமில்லை. சந்தனக்குறடுகள் அவன் காலடியில் ஒலியெழுப்பின. சுப்ரியை அவனை அத்தோற்றத்தில் கண்டதும் முதற்கணம் உள்ளம் மலைக்க கால்நிலைத்துவிட்டாள். “அரசி” என சபரி சொன்னதும் மேலும் நடந்தாள்.
அவளால் அவன் உடலைவிட்டு விழிநீக்க இயலவில்லை. கரிய பெருந்தோள்கள் போர்வடுக்களுடன் நீர்வழியும் உச்சிமலைப் பாறையென திறந்துவிரிந்திருந்தன. பாறையின் உப்புவரிகளென அவற்றிலோடும் நரம்புகள். இளங்களிற்று மத்தகம்போல் புடைத்தசையும் புயத்தசைகள். அவன் மார்பையே நோக்கிக்கொண்டிருப்பதை அவளே உணர்ந்ததும் விழிவிலக்கிக்கொண்டாள். அயலவன்போல என எண்ணியதும் விந்தையுடன் விழிதூக்கி மீண்டும் நோக்கினாள். அயலவன் போலத்தான் இருந்தான். அவனை அத்தனை எளிய தோற்றத்தில் முன்னர் நோக்கியதே இல்லை. அந்தக் காட்சியிலிருந்து அவள் கண்ட கர்ணனின் அத்தனை தோற்றங்களையும் சென்றடைந்தாள்.
சபரி “அணியின்மை ஆண்களுக்கு அழகு, அரசி” என்றாள். அவள் ஒன்றும் சொல்லாமல் தரைநோக்கி நடந்தாள். “நீராடி எழும் இளங்களிறெனத் தோன்றுகிறார்” என்றாள் சபரி மீண்டும். “கதிர்மைந்தன் கரியோனாக இருப்பது ஏன் என்று ஒரு சூதன் ஒருமுறை பாடினான். கனல் நீர்பட்டால் கருமைகொள்ளும். அங்கர் இங்குள்ள பெண்களின் விழிநிறைந்த காதலால் கருமைகொண்டிருக்கிறார்.” சிரித்தபடி “ஆம், இந்நிலத்தில் இன்று அங்கரைப்போல் அழகர் பிறரில்லை” என்று தாரை சொன்னாள். அசலை “அதை நீ சொல்லி அரசி அறியவேண்டுமா என்ன?” என்றாள். தாரை “நான் என்ன சொன்னேன்? சூதர்பாடல்களில் அவர் அழகைப்பற்றி சொல்லாத ஒன்றுகூட இல்லை என்றுதான்” என்றாள்.
அசலை அவளை நோக்கி புன்னகைக்க விழிகளால் சுப்ரியையை சுட்டிக்காட்டிவிட்டு தாரை தொடர்ந்தாள். “அனல் அழகுறுவது வேள்விநிலையில், அங்கர் போர்நிலையில் என ஒரு விறலி பாடினாள். போர்க்கலையின் இரு அழகுகளை பார்த்தரிடமும் அங்கரிடமும் காணலாம் என்றாள். அது பெண்ணுடலின் நடனம் என்றிருக்கும். இது ஆணுடலின் தாண்டவம். அது மான், இது சிம்மம். அது மயில். இது மலைக்கழுகு. ஆடவல்லானுடன் அம்மை ஆடுவதுபோல் இருவரும் தோளிணைந்து போர்புரிந்தால் விண்ணுலகும் வெல்லப்படும் என்றாள்.”
அசலை புன்னகைத்து “அவர்கள் இணைந்து ஆடி முழுமையை அடைந்தபோது ஈருடலும் ஒன்றாகி இடமொருமகள் என்றானார் என்பது தொல்கதை” என்றாள். தாரை “எனக்கும் தோன்றியுள்ளது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நிறைக்கிறார்கள். அங்கரில் குறைவதே அர்ஜுனர் என்பேன்” என்றாள். “அங்கரில் குறைவது அவரா?” என்றாள் அசலை. அவர்கள் அத்தருணத்தை களியாட்டென ஆக்க விரும்பினர். ஆனால் ஓயாது பேசிக்கொண்டிருந்த சபரி அப்பேச்சிலிருந்து அகன்றுவிட்டிருந்தாள். “ஆம், அன்னையில் மைந்தர் என” என்றாள் தாரை. அசலை சிரித்தாள்.
சுப்ரியை அச்சொற்களை கேட்டுக்கொண்டே இருந்தாள். அச்சம் கொண்டவள்போல, அரிதொன்றின் அணுக்கம் கண்டவள்போல நெஞ்சு துடித்துக்கொண்டே இருந்தது. ஸ்ரீகரர் முற்றத்தில் இறங்கி கைகாட்ட நிமித்திகன் சங்கொலி எழுப்பினான். படைவீரர்கள் வாளும் வேலும் தாழ்த்தி வாழ்த்தொலி எழுப்பினர். கர்ணன் ஸ்ரீகரரின் தோளில் கைவைத்து தலைசரித்து நகைமொழி சொன்னான். அவர் சிரித்தபடி விழிதிருப்ப அவளைக் கண்டு “அரசி, வருக!” என்றார். சுப்ரியை அருகே சென்று நின்றதும் திரும்பி நோக்கிவிட்டு அருகே வந்து நின்ற உக்ரசேனனிடம் “நாசிகரே, தேருக்கு முன்னால் நீங்கள் செல்வீர்கள் அல்லவா?” என்றான். அவன் சிரித்து “இல்லை அரசே, இங்கே காவல்பணியை நான் ஒருங்கிணைக்கிறேன்” என்றான்.
“அரசர் சென்றுவிட்டாரா?” என்றான் கர்ணன். “அவர் கிளம்பி ஒருநாழிகை கடந்துவிட்டது.” கர்ணன் “இந்த அணிசூடலுக்குத்தான் பொழுதாகிறது அணியருக்கு. இது அவர்களுக்கு பழக்கமே இல்லை” என்றான். சுஜாதன் “ஆம், நோக்கி நோக்கி திகைக்கிறார்கள். என்ன என்று கேட்டேன். ஒத்திசைவே இல்லை என்றார்கள்” என்றான். கர்ணன் நகைத்து “பொதுவாக மானுட உடல் அப்படித்தான். வேறு எந்த உருவிலாவது இப்படி இருபக்கமும் இரண்டு பெரிய உறுப்புகள் தொங்கி பொருளின்றி ஆடிக்கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா என்றேன்” என்றான்.
சுஜாதன் ஊக்கம் பெற்று “ஆம், அதோடு காது. அவ்வப்போது நான் எண்ணுவதுண்டு. மனித உடலுக்கு தேவையே இல்லாத உறுப்பு என்றால் காதுதான். எவ்வளவு அழகின்மையுடன் நீட்டி நிற்கிறது” என்றான். குண்டாசி “நான் அதையே எண்ணுகிறேன். ஒற்றைவீரனின் சிலையென அமைக்கப்படும் நீளுருளையே மனிதருக்கு உகந்த நல்வடிவம்” என்றான். கர்ணன் சிரித்து அவன் தோளைத்தட்டினான். சுஜாதன் குண்டாசி சொன்னதில் நகையாட்டு இருக்குமோ என எண்ணி பிடிகிடைக்காமல் தவிர்த்து “கிளம்பலாம், அரசே” என்றான்.
ஏவலர் படி அமைக்க அதில் ஏறி கர்ணன் தேரின் பீடத்திலமர்ந்ததும் சுப்ரியை தொடர்ந்து ஏறி அருகே அமர்ந்தாள். தொடர்ந்துவந்த தேரில் தாரையும் அசலையும் சபரியும் ஏறினர். அதற்கடுத்த தேரில் சுஜாதனும் குண்டாசியும் ஏறினர். குண்டாசி கைவீசியபடியே செல்ல ஸ்ரீகரர் ஆணையை செய்கை காட்டினார். தேர் கிளம்புவதை அறிவிக்க கொம்போசை எழுந்தது. அப்பால் மேலும் மேலும் கொம்பொலிகள் எழுந்தன. சுப்ரியை திரும்பி அந்த மாளிகையை நோக்கினாள். நீரில் மூழ்கும் பெருங்கலமென அது பின்னகர்ந்து சென்றது.
தேர் கிளம்பியபோது இனிப்புண்ட நாவு என தன் உடலே சுவையறிவதை உணர்ந்தாள். அவளுக்கும் அவனுக்கும் நடுவே நிறைய இடைவெளி இருந்தது. மெல்ல நகர்ந்து அதை நிறைத்து அணுகிவிடவேண்டும் என எண்ணினாள். அதில் கையை வைத்து நகர்த்தியபின் அஞ்சி எடுத்துக்கொண்டாள். மீண்டும் மீண்டும் அந்த இடைவெளியிலேயே படிந்தது அவள் உள்ளம். அவள் அதில் நிறைய நிறைய அது விரிந்தகன்றது. பின்னர் அணுகியது. அணுக்கம் என அவள் உணர்ந்ததும் அகன்று மாயம் காட்டியது. பின்னர் அவள் நீண்ட பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்தாள். அவள் அவனை நோக்குவதை அவன் அறியவில்லை. ஒருமுறைகூட சாலையிலிருந்து நோக்கை விலக்கவில்லை.
அவள் எதையேனும் அவனிடம் பேச விரும்பினாள். வேள்வியவையில் அவன் இடம் குறித்து பேசினால் அவன் செவிகொள்ளக்கூடுமோ? துரியோதனனைக் குறித்து பேசினால் என்ன? ஆனால் முதலில் எப்படி தொடங்குவது? அவன் விழிதிருப்பி அவளை நோக்கினால் பேசத் தொடங்கிவிடலாம். அவனை அழைப்பது எப்படி? அவனை தான் அழைத்ததே இல்லை என்று நினைவுகூர்ந்ததும் அவள் திடுக்கிட்டாள். உண்மையிலேயே ஒருமுறைகூட அவள் அவனை கணவன் என சொல் விளித்து பேசியதில்லை. ஆகவே அத்தனை ஆண்டுகளில் அப்படி ஒரு சொல்லே திரண்டு அமையவில்லை. இப்போது எச்சொல்லில் அழைத்தாலும் அது பொருந்தாததே. அரசே என்றழைக்கலாம். ஆனால் அச்சொல் அன்று அவளுக்கு அயலானதாகத் தோன்றியது.
கர்ணன் அவளை நோக்காமல் தாழ்ந்த குரலில் “அங்கே வேள்வியவையில் அமர்ந்திருக்கும் ஷத்ரியர்கள் பெரும்பாலானவர்கள் என்னால் வெல்லப்பட்டவர்கள். என்னை வெல்ல ஒரு தருணமென இந்த அவையை அவர்கள் எண்ணக்கூடும்” என்றான். அவன் குரல் இடறியது தேரின் ஓட்டத்தால் எனத் தோன்றியது. அவள் நெஞ்சு ஒலிப்பது செவியிலெழ சொல்லெடுக்க இயலாமல் உயிரிழந்து தடித்த நாவுடன் அமர்ந்திருந்தாள். “அந்தணர் தங்களுக்கு அரசரையே சுண்டி எறியும் ஆற்றலுண்டு என நிறுவும் தருணமாக இதை கொள்ளவும்கூடும். அவைச்சிறுமை நிகழுமென்று என் உள்ளுணர்வு சொல்கிறது. எதுவானாலும் அது எனக்குரியதே. உனை நோக்கியல்ல என்று கொள்க!” என்றான்.
அவள் பற்களைக் கடித்தபடி “அவ்வண்ணமென்றால் என்னை ஏன் அழைத்துவரவேண்டும்? உங்கள் சூதஅரசி வந்திருந்தால் அவைச்சிறுமையை நிகராக பங்கிட்டுக்கொண்டிருக்கலாமே?” என்றாள். கர்ணன் திரும்பி நோக்கி ஒருகணம் விழிநிலைத்து பின்னர் புன்னகைத்து “ஆம், பிழைதான். பாதி அவளுக்குரியதே, கொண்டுசென்று அளித்துவிடுகிறேன்” என்றபின் மீண்டும் சாலைநோக்கி திரும்பிக்கொண்டான். அவள் திகைத்து உடல் குளிர்ந்துநடுங்க அமர்ந்திருந்தாள். தன் வாய்க்குள் கொடிய நாகம் ஒன்று நாவென்று அமைந்திருக்கிறதுபோலும். அச்சொற்கள் என்னுடையவை அல்ல. அக்கீழ்மை என்னுடையதல்ல. அரசே, என் கதிரே, அவற்றை என்மேல் ஏறிய ஏதோ இருள்தெய்வமே உரைத்தது. அவள் தொண்டை அடைத்திருந்தது, மூச்சு ஏறியிறங்கியது.
ஏன் அதை சொன்னேன்? நாப்பழக்கமாகவா? அன்றி அவனை வேல்நுனியால் குத்தி எனை நோக்குக என்றேனா? அச்சொல்லை திரும்ப எடுப்பது எப்படி? அது இழிசொல்லே. கீழ்மையென நான் வெளிப்பட்ட தருணமே. என் இறையே, அதில்கூட பிறிதொருத்தியுடன் பகிரமுடியாமையை அல்லவா நான் சொன்னேன். அவள் தன்னுள் உளம் கரைந்து சொல்பெருக்கினாள். பொழிந்து ஓய்ந்து துளிசொட்டி அமைதியானபோது உள்ளம் வெறுமைகொண்டிருந்தது. இரு கைகளிலும் தலையை தாங்கி குனிந்து அமர்ந்திருந்தாள். விழியூறிக்கொண்டிருந்தது. ஒருதுளி சொட்டத் தொடங்கினால் கதறி அழுதுவிடுவோம் என தோன்றியது.
தேர் நின்றபோதுதான் வேள்விச்சாலை முகப்புக்கு வந்துவிட்டிருப்பதை அவள் உணர்ந்தாள். மறுபக்கம் தேருக்கு வெளியே வைதிகர் எழுவர் நிறைகுடங்களுடன் நின்றிருந்தனர். கர்ணனுடன் அவள் இறங்கியபோது நீர்தெளித்து வேதமோதி வாழ்த்தினர். வாழ்த்தொலியோ குரவையோ மங்கல இசையோ எழவில்லை. கர்ணன் பாதக்குறடுகளை கழற்றி வைத்துவிட்டு பசுஞ்சாணி மெழுகப்பட்ட பாதையில் நடக்க அவள் அவனுக்கு ஓர் அடி பின்னால் தொடர்ந்து சென்றாள். பின்னால் வந்த தேரிலிருந்து இறங்கிய அசலையும் தாரையும் பிறிதொரு வழியினூடாக அவைநோக்கி செல்ல குண்டாசியும் சுஜாதனும் மட்டும் அவர்களுடன் இணைந்தனர்.
சுஜாதன் “அரசர் வந்து அவைமுகப்பில் அமர்ந்திருக்கிறார், மூத்தவரே” என்றான். “இந்த அவை பருந்தின் வடிவுகொண்டது. வலச்சிறை அரசருக்குரியது.” குண்டாசி “அமைச்சரிடம் சென்று மூத்தவர் எங்கமரவேண்டும் என்று கேட்டு வருக!” என்றான். சுஜாதன் ஓடிச்செல்ல கர்ணன் அவன் திரும்பிவர பொழுதளித்து மிக மெல்ல நடந்தபடி “விதுரர் வரவில்லையா?” என்றான். “இல்லை, மூத்தவரே. அவருக்கு உடல்நலமில்லை. தொடர்ந்து காய்ச்சலும் நினைவழிதலுமாகவே இருக்கிறார். துவாரகையிலிருந்து அவர் மைந்தர் சுபோத்யரும் சுசரிதரும் வந்து உடனிருக்கிறார்கள்” என்றான். “அவர்கள் பாண்டவரின் தரப்பை உளம்கொண்டவர்கள். ஆகவே அரசரை சந்திக்க வரவில்லை.” கர்ணன் “இளமையில் அவர்களை கண்டிருக்கிறேன்” என்றான்.
சுஜாதன் ஓடிவந்து அவர்களுடன் இணைந்துகொண்டு “அரசருக்கு வலப்பக்கம், பீடம் அங்குதான் போடப்பட்டிருக்கிறது” என்றான். வேள்வியரங்கு நிறையத் தொடங்கியிருந்தது. வைதிகமுனிவர்களான வேதமித்ரர், சௌபாரி, சாகுல்யர் மூவரும் அனலெழுகையை மேல்நோட்டமிட்டுக்கொண்டிருந்தனர். விஸ்வாமித்திர மரபைச் சேர்ந்தவரான காலவர் மைந்தர் சிருங்கவானுடன் உள்ளே நுழைய வைதிகர்களிடம் கார்வையொலி எழுந்தது. வேள்விநிலைக்குள் எவருக்கும் முகமனோ வரவேற்போ வாழ்த்தோ வழங்கப்படவில்லை. எனினும் அந்தணருக்கும் முனிவருக்கும் மட்டுமே அங்கே ஏற்பின் முழக்கம் எழுந்தது என சுப்ரியை உணர்ந்தாள்.
அஸ்தினபுரியின் தலைமை வைதிகர் காசியப குலத்து கிருசர் வெண்ணிற கீழாடையும் தோளில் முடிச்சிட்ட வெண்மேலாடையும் கழுத்தில் கல்மணிமாலையும் அணிந்தவராக அவர்களைக் கடந்து கைவீசி ஆணையிட்டபடியே ஓடினார். அவர் அருகே வந்த இளவைதிகர் அவர் ஆணையை ஏற்று தலைவணங்கி பல திசைகளுக்காக சிதறினர். சுஜாதன் “வில்லில் இருந்து அம்புகளென எழுந்து பறக்கிறார்கள்” என்றான். கலிங்க நாட்டு மன்னர் சுருதயுதர் பட்டத்து இளவரசன் சக்ரதேவனுடன் உள்ளே நுழைந்து தன் இடத்தை தேட சுஜாதன் “இதோ வருகிறேன், மூத்தவரே” என அவரை நோக்கி ஓடினான்.
அதர்வ வைதிகர்களான குத்ஸ குலத்து தாரகரும் மௌத்கல்ய குலத்து தேவதத்தரும் தங்கள் மாணவர்களுடன் ஐந்து எரிகுளங்களையும் மீண்டுமொருமுறை நோக்கிக்கொண்டிருந்தனர். அங்கிரசின் மகன் ஹோரர் அவ்வேள்விக்கென அவிக்கொடையாளராக சிறப்பு அழைப்பின் பேரில் வந்திருந்தார். அவரை கிருசர் நேரில் அழைத்துவந்து பீடத்தில் அமரச்செய்தார். வேள்விச்சாலையை அமைத்த சிந்துநாட்டுச் சிற்பியான பரமரும் அவருடைய ஏழு மாணவர்களும் வைதிகர்களால் கொண்டுவரப்பட்டு அவைமுகப்பில் அமரச்செய்யப்பட்டனர்.
கௌதம குலத்தவரான சிரகாரி தன் மாணவர்களுடன் அவை நுழைந்து இளவைதிகர்களால் தர்ப்பையிடப்பட்ட பீடத்திற்கு கொண்டுசென்று அமர்த்தப்பட்டதை சுப்ரியை கண்டாள். அகத்தியகுலத்தவரான திருடஸ்யூவும் திருடேயுவும் அவைக்கு வந்தனர். ஒவ்வொருவரையும் அவள் முன்னரே அறிந்திருந்தாள். அவர்களின் நெடும்பயணங்கள், அணுகவொண்ணா காடுகளிலும் மலைகளிலும் அயல்நிலங்களிலும் அமைந்த அவர்களின் குருநிலைகள் அனைத்தும் நினைவிலெழுந்தன. சற்று தொலைவில் அமர்ந்திருப்பவர் கண்வமரபினரான திரிசோகர். அப்பால் எரிகுளங்களின் அருகே பொருட்களை ஒருக்கிக்கொண்டிருப்பவர்கள் பெருவைதிகர்களான குண்டஜடரரும் குண்டரும். அவள் விழிகள் ஒவ்வொருவரையாக தொட்டுச்சென்றபோது அவள் அவர்களனைவரையும் முன்னரே அணுகிப்பழகி அறிந்திருப்பவளாக உணர்ந்து அகம் திகைத்தாள்.
துரியோதனன் மரத்தாலான தாழ்ந்த பீடத்தில் கால்மடித்து அமர்ந்திருந்தான். அவனருகே துச்சாதனனும் துச்சலனும் துர்மதனும் துச்சகனும் அமர்ந்திருந்தனர். வைதிகர் ஒருவர் அவன் இடையில் தர்ப்பையாலான கச்சை ஒன்றை கட்டிக்கொண்டிருந்தார். துச்சாதனன் எழுந்து கர்ணன் அமர்வதற்காக பீடத்தை சுட்டிக்காட்டினான். துச்சகன் அப்பால் பானுமதி அமர்ந்திருந்த இடத்தைச் சுட்டி அங்கே அமரும்படி சுப்ரியையிடம் கைகாட்டினான். கர்ணன் தனக்கான பீடத்தில் அமர்ந்ததும் சுப்ரியை சென்று பானுமதியின் அருகே அமர்ந்தாள். பானுமதி புன்னகைத்து விழிகளால் வரவேற்றாள்.
வெளியே வலம்புரிச்சங்கம் ஒலித்துக்கொண்டே இருந்தது. வசிட்ட மரபினரான குந்ததந்தர் தன் துணைவர்களான ஊர்ஜர், ரஜஸ், காத்ரர், ஊர்த்வபாகு, சவனர், சுதபஸ் ஆகியோருடன் அவைக்குள் வந்து அமர்ந்தார். பானுமதி விழிகளால் சுட்டி “அவர்கள் யார்?” என்று கேட்டாள். சுப்ரியை நோக்கிவிட்டு “அரசி, அவர்கள் விஸ்வாமித்திர மரபினரான காபிலேயரும், காரூஷரும்” என்றாள். “அவர்கள் கலிங்கத்தில் ஏதேனும் வேள்விக்கு வந்துள்ளனரா?” என்றாள் பானுமதி. “இல்லை அரசி, நான் அவர்களை பார்த்ததே இல்லை. ஆனால் அவர்களைப்பற்றிய சூதர்பாடல்களை கேட்டிருக்கிறேன்.”
பானுமதி வியந்து “சொல்லில் இருந்து இத்தனை கூர்மையாக மானுடமுகங்களை எடுத்துக்கொள்ள முடியுமா?” என்றாள். “மானுடமுகங்களை சொல்லாக்கலாமென்றால் இதுவும் இயல்வதே” என்றாள் சுப்ரியை. “நீ காவியங்களை பயில்வதுண்டா?” என்றாள் பானுமதி. “இல்லை, அரசி. நான் பயணங்களை மட்டுமே நோக்குவது வழக்கம். இங்கே பயணங்கள் வேள்விகளின்பொருட்டும் படையெடுப்பின்பொருட்டும் வணிகத்தின் பொருட்டும் மட்டுமே நிகழ்கின்றன.” பானுமதி சிரித்து “குலத்திற்கு ஒன்று சொல்லிவிட்டாய். நான்காவதையும் சொல். சூத்திரர் பஞ்சத்தின்பொருட்டு பயணம் செய்கிறார்கள்” என்றாள். சுப்ரியை புன்னகைத்து “நீங்கள் காவியம் பயில்கிறீர்கள்” என்றாள்.
அரசர்கள் சிறிய குழுக்களாக வந்து தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தனர். அனைவரும் வெண்ணிற ஆடைகளும் மரத்தாலும் விதைகளாலும் எளிய கற்களாலுமான அணிகளும் மட்டுமே சூடியிருந்தனர். அணியாடைகள் இல்லா நிலையில் சிலர் மிக எளிய வணிகர்கள்போல ஏவலர்போல மாறிவிட்டிருந்தனர். சிலர் மேலும் அழகும் நிமிர்வும் கொண்டிருந்தனர். ஜயத்ரதன் அந்தணரையும் முனிவரையும் வணங்கியபடி வந்து அவையிலமர்ந்தான். அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் இணைந்து வந்தனர். ருக்மியை அவள் அமர்ந்திருக்கும் அரசர்களின் நடுவே அடையாளம் கண்டாள். அருகிருப்பவனை ஒருகணம் கழித்து கோசலமன்னன் பிருகத்பலன் என்று புரிந்துகொண்டாள்.
“அவர் பிழையீட்டுப் பூசைக்குப்பின் சேர்த்துக்கொள்ளப்பட்டார்” என்று அவள் நோக்கை உணர்ந்து பானுமதி சொன்னாள். அவள் திரும்பி நோக்க “அவர் ஓர் இரவு முழுக்க பிற ஷத்ரியரை எதிராக திருப்ப முயன்றார். அவர்கள் அவரை ஏற்கவில்லை” என்றாள். சுப்ரியை “ஏன்?” என்றாள். “அனைவரும் வெல்ல விழைகிறார்கள். வெல்லும் தரப்பிலிருந்து விலக எவருக்கும் எண்ணமில்லை.” சுப்ரியை புன்னகை செய்தாள். சல்யரும் பால்ஹிகநாட்டரசர் சோமதத்தரும் காந்தாரத்தரசர் சுபலரும் சேர்ந்து அவைபுகுந்தனர். மேலுமொரு ஓசை எழ பானுமதி திரும்பாமலேயே “பிதாமகரா?” என்றாள். பீஷ்மரும் கிருபரும் துரோணரும் அவையிலமர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து சேதிநாட்டு தமகோஷரும் விதர்ப்பநாட்டரசர் பீஷ்மகரும் சேர்ந்து அவைக்குள் வந்தமர்ந்தனர்.
சுக முனிவரின் மைந்தர்களான கிருஷ்ணர், கௌரபிரபர், ஃபூரி, தேவஸ்ருதர் ஆகியோர் சேர்ந்து அவையில் வந்தமர்ந்தனர். “சுகரின் மைந்தர்கள்” என்று எவரோ சொல்ல சுப்ரியை எட்டிப்பார்த்தாள். விதுரரின் உருப்பொதுமை அவர்களிடமிருப்பதை கண்டாள். “விதுரரின் மைந்தர்களோ என எண்ணினேன்” என்றாள் பானுமதி. அவர்களை அனைவருமே ஆர்வத்துடன் நோக்குவதை சுப்ரியை கண்டாள். அவர்கள் பீடம்கொள்வதுவரை அவையில் ஓசை நீடித்தது.
“வியாசர் வரமாட்டாரா?” என்றாள் சுப்ரியை. “மெய்யுரைப்பதென்றால் அவர் இருக்கிறாரா என்பதே ஐயம்தான். அவரை சென்ற எண்பதாண்டுகளில் எவருமே கண்டதில்லை. அவருடைய மாணவர்கள் என பலர் கிளம்பி வருகிறார்கள். அவர் எழுதியவை என கவிதைகளும் குறுங்காவியங்களும் சூதரிடம் ஒலிக்கின்றன. ஒவ்வொருவரும் அவரை ஒவ்வொரு வடிவில் ஒவ்வொரு இடத்தில் பார்த்ததாக சொல்கிறார்கள். எந்த வேள்விக்கும் விழவுக்கும் அவர் தோன்றியதில்லை. உயிருடன் இருக்கிறாரென்றால் எப்போதோ அகவை நூறை தாண்டியிருக்கும். விழியும்செவியும் அவிந்து எங்கேனும் உடல்முடங்கியிருக்கவே வாய்ப்பு” என்றாள் பானுமதி.
முன்பு ஒருமுறை மட்டுமே தான் கண்ட பானுமதியிடமிருந்து இப்போதிருப்பவள் மிக விலகி வந்துவிட்டிருக்கிறாள் என்பதை அப்போதுதான் சுப்ரியை உணர்ந்தாள். அன்று ஓரிரு நாட்களின் மேலோட்டமான பழக்கமே இருந்தது. அன்றிருந்தவள் எவ்வண்ணமோ ஓர் அன்னையை போலிருந்தாள். இன்று அவளிடமிருக்கும் இந்த எள்ளல் அன்று கூடியிருக்கவில்லை. பானுமதி “நீள்சடையுடன் வருபவர் சமீகர், இங்கு முன்பு ஒரு வேள்விக்காக வந்துள்ளார்” என்றாள். “அவருடன் அவைபுகுபவர்கள் தேவலரும் மைந்தர் ஸ்வேதகேதுவும். அவர்களின் குருநிலை கங்கையின் மறுகரையில் வாரணவதத்திற்கு அப்பால் உள்ளது. ஒருமுறை அங்கு சென்றுள்ளோம்.”
அப்பால் வந்தமைந்த ஒருவரை நோக்கி “அவர் பெயர் ஜங்காரி, விஸ்வாமித்ர குருநிலையை சேர்ந்தவர்” என்று பானுமதி சொன்னாள். “முன்பு இங்கு வேள்விக்கென வந்தவர். அப்பால் அமர்ந்திருக்கும் வெண்சடை கொண்டவர் தேவஸ்ரவஸ். அவரும் விஸ்வாமித்ரரின் மரபினர்தான்.” சுப்ரியை “விஸ்வாமித்திரரின் மரபிலிருந்துதான் மிகுதியானவர்கள் வந்திருக்கிறார்கள் என எண்ணுகிறேன்” என்றாள். “ஆம், வசிட்ட மரபிலேயே குறைவான கிளைகள் இருக்கும். அவர்கள் அந்தணர்களால் மட்டுமே ஆனவர்கள். விஸ்வாமித்திர மரபும் பிருகுமரபும் அனைவரையும் உள்ளிழுப்பவை. எனவே அம்மரபு பாரதவர்ஷமெங்கும் பெருகிக்கொண்டிருக்கிறது.”
வேள்விக்கான சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆகுதிப்பொருட்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. ஆல், அத்தி, அரசு, அகில், கருங்காலி, புரசு, அருகு, பூவரசு, நெல்லி, நாவல், எருக்கு, கடுகு, ரோகிணி, வன்னி, வெட்டிவேர், மூஞ்சுப்புல், தர்ப்பைப் புல், விளாமிச்சை வேர், சந்தனம், நொச்சி, நாயுருவி, தேவதாரி, மா என எரிவிறகுகள் தனித்தனியாக கொண்டுவந்து குவிக்கப்பட்டன. ஒவ்வொரு பொருளும் வேள்விச்சாலையின் மணத்தை நுட்பமாக மாற்றியது. முன்னர் இருந்த மணம் பிறிதொன்றாகியது. புதியதொன்றை ஏற்றுக்கொண்டது. நெய்க்குடங்கள் ஒவ்வொன்றாக கொண்டுவரப்பட்டு ஐந்து எரிகுளங்களுக்கு அருகிலும் வைக்கப்பட்டன.
வேள்வித் தலைவருக்கான எண்கால் மரப்பீடத்தின் அருகே வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு இளைய வைதிகர் காவல்நின்றனர். வேள்விச்சாலையின் வலப்பக்கம் அமைந்த கல்லால் ஆன அரியணைகளை கௌரவர்களான சகன், விந்தன், அனுவிந்தன், துர்தர்ஷன், துஷ்ப்ரதர்ஷணன் ஆகியோர் காவல் காத்து நின்றனர். அவையில் உலோகப்பொருள் ஆகாதென்பதனால் மரத்தாலான வில்லையும் அம்பையும் படைக்கலங்களாக ஏந்தியிருந்தனர். அருகே அரசத்துணைவருக்கான பீடமும் அவருடைய அரசிக்கான பீடமும் இருந்தது. அவற்றை கௌரவர்களான சலன், சத்வன், சுலோசனன், சித்ரன், உபசித்ரன் ஆகியோர் காவல்காத்தனர்.
அஸ்தினபுரியின் அரசகுடியினருக்கான மணைகள் அனைத்திலும் கௌரவ மகளிர் வந்து நிறைந்திருந்தனர். வேள்விச்சாலையின் இடது நீட்சியில் முனிவர்களும் அந்தணர்களும் அமர்வதற்கான இருக்கைகள் பெரும்பாலும் நிறைந்திருந்தன. வேள்விச்சாலையின் நேர்நீட்சியில் அமைந்த அரசர்களுக்கான பகுதியில் அரசர்களின் நிரைகளில் வந்தமர்ந்துகொண்டே இருந்தனர். எவருக்கும் வாழ்த்தும் அறிவிப்பும் இல்லையென்பதனால் அவர்கள் அனைவருமே சற்று நிலையழிந்திருந்தனர். அரசர்களுக்குரிய நீள்காலடியை இசையிலாது வைத்தபோது அது ஒவ்வாமலிருந்தது. இயல்பாக நடந்தபோது அவர்கள் அரசர்களல்லாமல் தோன்றினர்.
அங்கு ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு சடங்கு நிகழ்ந்துகொண்டிருந்தது. வேள்வியில் அனலூட்ட அமர்பவர்களை தூய்மைப்படுத்தும் சடங்கு அந்தணர் பகுதியில் நிகழ்ந்தது. கங்கைநீர் தெளித்து வேதமோதி வாழ்த்தப்பட்ட அவர்கள் தங்கள் ஆசிரியர்களையும் முனிவர்களையும் வணங்கி வேதநிலையை சுற்றிவந்து அதன் எட்டு மூலையிலும் நிறுவப்பட்டிருந்த திசைத்தேவர்களை தொழுது வெளியே நிறுத்தப்பட்டிருந்த பசுவை வணங்கி தர்ப்பைத் திரியால் வேள்விப்புரிநூல் அணிந்து உள்ளே வந்தனர்.
சுப்ரியை பந்தலுக்குள் இளைய யாதவர் சாத்யகியுடன் நுழைவதை கண்டாள். எளிய வெண்ணிற ஆடையை தோள்சுற்றி அணிந்திருந்தார். அணிகளென ஏதுமில்லை. அவர் தலையில் அந்த மயிலிறகு மட்டும் மின்னிக்கொண்டிருந்தது. இளவைதிகர் ஒருவர் அவரை அழைத்துச்சென்று முனிவர்களின் நிரையில் அமரச்செய்தார். கௌதமகுடியின் ஏகதர் த்விதர் திரிதர் ஆகியோருக்கு அருகே அவர் அமர்ந்து அவர்களிடம் இன்சொல் உரைத்து புன்னகைத்தார். கௌதம குடியின் காக்ஷீவான் அவரிடம் வந்து குனிந்து முகமனுரைத்தார். அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த தேவத்யூதியும், தேவமதரும் அவரை நோக்கி முன்னகர்ந்து ஏதோ சொல்ல அவர் புன்னகை செய்தார்.
சுப்ரியை திரும்பி கர்ணனை நோக்கினாள். ஒரு நெஞ்சதிர்வுடன் மீண்டும் இளைய யாதவரை நோக்கினாள். “என்ன?” என்றாள் பானுமதி. “ஒன்றுமில்லை, நேற்றிரவின் துயில்நீப்பு… களைத்திருக்கிறேன்” என்றாள். கண்களை மூடிக்கொண்டபோது எங்கோ விழுந்துகொண்டிருக்கும் உணர்வு எழுந்தது. “வேள்விப்பொழுது முழுக்க எதுவும் அருந்தும் வழக்கம் இல்லை” என்றாள் பானுமதி. “ஆம், அறிவேன்” என்று அவள் சொன்னாள். வேள்வியவை மெல்ல முழுமையடைவதை ஓசையினூடாகவே அவள் கேட்டாள். விழிக்குள் எழுந்த பிம்பங்களால் மீண்டும் திடுக்கிட்டு விழிதிறந்தாள். இருவரையும் நோக்கியபின் தலைகுனிந்து மேலாடையை இழுத்து தன் முகத்தின்மேல் விட்டுக்கொண்டாள்.