வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71

பகுதி பத்து : பெருங்கொடை – 10

bl-e1513402911361ஊட்டறைக்குள் நுழைவதுவரை அங்கே எவரெல்லாம் வரப்போகிறார்கள் என அவள் அறிந்திருக்கவில்லை. அவளை சம்புகை வரவேற்று மேலே கொண்டுசென்றபோது வேறுவேறு எண்ணங்களில் அலைபாய்ந்துகொண்டிருந்தாள். பானுமதியை பார்த்ததும்தான் அங்கே விருந்துக்கு வந்திருப்பதை அவள் அகம் உணர்ந்தது. “என் விருந்தறைக்கு வந்து என்னையும் அஸ்தினபுரியையும் மதிப்புறச் செய்துவிட்டீர்கள், அங்கநாட்டரசி. வருக!” என முகமன் உரைத்து பானுமதி அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

அங்கே புண்டரநாட்டரசி கார்த்திகையும் வங்கநாட்டரசி சுதையும் அமர்ந்திருந்தனர். முகமன் உரைத்து சுப்ரியை அமர்ந்தாள். அதன்பின் சேதிநாட்டரசி பத்ரையும் விதர்ப்பநாட்டரசி சுகதையும் மாளவநாட்டு அரசி சுபத்ரையும் வந்தனர். அனைவரும் அமர்ந்துகொண்டதும் பானுமதி “இது இயல்பாக நிகழும் ஊண்களியாட்டுதான். ஒவ்வொருநாளும் அங்குமிங்குமாக விருந்துதான் நடந்துகொண்டிருக்கிறது. இவ்விருந்தை என் பொருட்டு ஏற்பாடு செய்தேன். என் உளத்திற்கினியவர்களை சந்திக்கவேண்டும் என்று. எந்த அரசமுறையும் இல்லை. உணவருந்தி மகிழ்வதையும் சிறுசொல்லாடுவதையும் தவிர” என்றாள்.

“இவள் எனக்கு அகவையில் இளையோள். தகுதியால் மூத்தோள். அஸ்தினபுரியின் படைமுகம் நிற்பவரும் அங்கநாட்டரசரும் எங்கள் அரசருக்கு மூத்தோர்நிலை கொண்டவருமான கர்ணனின் துணைவி. கலிங்கநாட்டில் பிறந்தவள். சுப்ரியை என்று பெயர்” என்றாள் பானுமதி. “ஆம், அறிந்துள்ளேன். இவர்களின் தமக்கை ஒருவர் இங்கிருக்கிறார் அல்லவா?” என்றாள் சேதிநாட்டரசி பத்ரை. “ஆம், அவள் இங்கு வந்த சிலநாட்களிலேயே தன் விருப்பத்தெய்வமொன்றை முழுதளிப்பு வழிபாடு செய்ய தலைப்பட்டாள். அது அஸ்தினபுரிக்கு நலம் பயப்பதுதானே? ஆகவே மேற்குக் காட்டில் ஒரு மாளிகை கட்டப்பட்டு அங்கே சென்றுவிட்டாள். கலிங்கம் பங்குகொள்ளும் விழவுகளில் மட்டும் எழுந்தருள்வதுண்டு” என்று பானுமதி இயல்பான புன்னகையுடன் சொன்னாள்.

வங்கநாட்டரசி சுதை “அங்கரை நான் ஒருமுறை பார்த்திருக்கிறேன். எங்கள் நாட்டின்மேல் அஸ்தினபுரியின் படை எழுந்தபோது நாங்கள் ஒரு மாற்றுறுதி ஓலையில் கைச்சாத்திட்டோம். வங்கநாட்டு மரபின்படி நானும் அதில் முத்திரையிடவேண்டும். அதன்பொருட்டு நாங்கள் எங்கள் குலதெய்வமான மாகாளியின் மண்டபத்தில் சந்தித்தோம்” என்றாள். சுபத்திரை “அரசியர் போர்நிறுத்த ஓலையில் முத்திரையிடுவதா? கேட்டதே இல்லையே” என்றாள். சுதை “நாங்கள் தீர்க்கதமஸின் வழிவந்தவர்கள். எங்கள் நாட்டு நிலம் முழுக்க பெண்டிருக்கே உரியது” என்றாள்.

சுகதை “ஆம், அங்கே அரசமைந்தர் அரசருக்கே பிறந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை என்று விறலி சொல்லி அறிந்திருக்கிறேன்” என்றாள். “அதெப்படி?” என்று பத்ரை கேட்க சுகதை “தீர்க்கதமஸ் இவர்களின் பெண்களின் வயிற்றில் விதைத்ததே குலமெனப் பெருகியது. அங்கம் வங்கம் கலிங்கம் புண்டரம் சுங்கம் ஆகிய ஐந்து நாடுகளுக்கும் தீர்க்கதமஸ்தான் முதல் துளி. அவரிலிருந்து பெண்கள் பெற்றுக்கொண்டது அந்நிலம்” என்றாள். பத்ரை திரும்பி சுப்ரியையிடம் “அங்கத்திலுமா?” என்றாள். சுகதை சிரித்து “அங்கத்தில் எப்படி? அங்கத்தை ஆண்ட லோமபதரின் கொடிவழி அழிக்கப்பட்ட பின்னர்தான் இன்றைய அரசர் முடிகொண்டார். அஸ்தினபுரியின் அரசரிடமிருந்து அவர் முடியை கொடையாகக் கொண்டதை அறிந்து விழிநீர் உகுக்காதவர் எவர்?” என்றாள்.

பேச்சு தொடங்கிய சிலகணங்களிலேயே உரசிக்கொள்ளத் தொடங்கிவிட்டதைக் கண்டு சுப்ரியை திரும்பி பானுமதியை நோக்க அவள் புன்னகை செய்தாள். பத்ரை “எங்கள் நாட்டில் ஆண்களை ஆண்களென்றே நூல்கள் சொல்கின்றன. நிலமும் பெண்ணும் சொல்லும் ஆண்களுக்கே” என்றாள். கார்த்திகை “ஆம், அறிந்துள்ளேன்” என்றாள். அவள் விழிகளில் வந்துசென்ற நச்சுத்துளியை சுப்ரியை கண்டாள். “சேதிநாட்டில் மகளிரை அருமணிகள் என்றே நினைக்கிறார்கள். ஆகவே கைப்பற்றியவருக்குரியவர்கள் அவர்கள் என்று நெறி.” சுப்ரியை விழிகளை எவ்வுணர்ச்சியும் இன்றி வைத்துக்கொள்ள முயன்றாள். “சேதிநாட்டு சிசுபாலர் கோபதத்தின் அந்தகக் குலத்து யாதவ சிற்றரசர் பஃப்ருவின் மனைவி விசிரையை கவர்ந்து வந்ததை அறிந்திருப்பீர்கள். அன்று யாதவர்களிடையே தொடங்கிய போரில்தான் இறுதியில் சிசுபாலர் இளைய யாதவரால் தலையறுத்து கொல்லப்பட்டார்.”

“ஆம்” என சுதை ஊக்கத்துடன் சொன்னாள். கார்த்திகை “யாதவ அரசியை பட்டத்திலமர்த்த சிசுபாலர் விழைந்தார். அதற்கு தந்தை தமகோஷர் ஒப்புக்கொள்ளாததனால்தான் விசாலநாட்டுக்குச் சென்று அரசி பத்ரையை கவர்ந்து வந்தார். அவர் வைசாலியின் கோட்டைமுகப்பில் வீரர்கள் பன்னிருவரை கொன்று குவித்துவிட்டு இளவரசியை கவர்ந்துவந்த கதையை நான் விறலி சொல்லி கேட்டிருக்கிறேன். மெய்ப்புகொள்ளச் செய்யும் வீர கதை” என்றாள். சுப்ரியை பத்ரையை நோக்க அவள் விழிகள் சினம்கொண்டு சிவந்திருப்பது தெரிந்தது. கார்த்திகை எங்கே செல்கிறாள் என்று அவளுக்கு புரியவில்லை.

ஆனால் அது சுதைக்கு தெரிந்திருந்தது. “சூக்திமதியை இப்போது தமகோஷர்தானே ஆள்கிறார்?” என்றாள். “ஆம், ஆனால் அவர் பேரரசராக முடிசூடுவதுடன் சரி. அவையமர்ந்து நாடாளும் அகவையில் இல்லை. தமகோஷரின் ஷத்ரிய அரசி கிருபையின் மைந்தன் சீர்ஷதேவர்தான் சூக்திமதியின் இன்றைய அரசர். சிசுபாலரின் இறப்புக்குப் பின் அவர் முடிசூடினார். அருகே உள்ள கராளமதியை அவர் ஆள்கிறார். சிசுபாலரின் அரசியரையும் அவரே மணந்துகொண்டார்.” சுதை உரக்க “என்ன இது? அரசியரை கைப்பற்றிக்கொள்வதா?” என்றாள். “அங்குள்ள வழக்கம் அது” என்றாள் கார்த்திகை.

பத்ரை “ஆம், எங்கள் குடியில் பெண்கள் கைம்மை நோற்பதில்லை, சிதையேறுவதுமில்லை” என்றாள். சுதை “யாதவ அரசியையும் இப்போது சீர்ஷதேவரா கொண்டிருக்கிறார்?” என்றாள். “ஆம், அதைத்தான் சற்றுமுன் சேதிநாட்டு அரசி சொன்னார், அவர்களுக்கு கைம்மை நோன்பு இல்லை என்று” என்று சுகதை சொன்னாள். “அவர்களின் நெறிகள் நமக்கு புரிவதில்லை. இந்தக் கதையை கேட்டிருப்பீர்கள். அந்தகக் குலத்து பஃப்ருவை வென்று மனைவியை கவர்ந்து வந்தார் சிசுபாலர். பின்னர் கதாவசானத்தில் நிகழ்ந்த பெரும்போரில் பஃப்ருவைக் கொன்று குருதிபடிந்த கச்சையை கொண்டுசென்று அரசிக்கு அளித்தார். விசிரை அந்தக் குருதிக்கச்சையை தன் தலையில் முடி என சூட்டிக்கொண்டு மகிழ்ந்தார். அதன்பின்னர் சிசுபாலர் கொல்லப்பட்டதும் அவருடைய குருதியை கச்சையில் நனைத்துக்கொண்டுவந்து விசிரைக்கு அளித்தார்கள். அதையும் அவர் தன் தலையில் சூடிக்கொண்டாராம்.”

பத்ரை “எவர் சொன்னது அது?” என்றாள். “விறலியர் கதைகளை நானும் முழுமையாக நம்புவதில்லை” என்று கார்த்திகை சிரித்துக்கொண்டே சொன்னாள். சுதை “இவ்வாறு கச்சையை அளிக்கும் வழக்கம் சேதிநாட்டில் உண்டா என்ன?” என்றாள். பத்ரை சீற்றத்துடன் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் பானுமதி திரும்பி அப்பால் நின்றிருந்த முதுசேடி சம்புகையை நோக்கினாள். அவள் அருகே வந்து குனிந்து அவள் காதில் சில சொல்ல அவள் “ஓ” என்றாள்.

தலையசைத்து அவளை செல்லும்படி பணித்துவிட்டு கூர்ந்து தன்னை நோக்கியிருந்த அரசியரை நோக்கி புன்னகைத்தாள். அவர்களின் விழிகளை நோக்கியபோது அனைவரும் எதையோ எதிர்பார்த்திருப்பதை, அச்செய்தியா அது என ஆவலுற்றிருப்பதை சுப்ரியை உணர்ந்தாள். பானுமதி புன்னகையுடன் “ஒன்றுமில்லை, சிறிய ஒரு குழப்பம். இங்குள்ள நெறிகள் அயலரசர்களுக்கு தெரியவில்லை என்பதனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சூதரை அனுப்பி அறிவித்திருந்தோம். இருந்தும் இவ்வாறு நிகழ்ந்துவிடுகிறது” என்றாள்.

“நாங்கள் அறியக்கூடுவதென்றால்…” என சுதை சொல்ல “பெரிய செய்தி அல்ல. ஆனால் எவருக்கும் சற்று அறத்துன்பம் அளிப்பது. கோசல அரசர் பிருகத்பலரின் துணைவி சௌமித்ரை இன்று காலை காட்டில் உலவச் சென்றிருக்கிறார். வழிதவறி அஸ்தினபுரியின் முன்னோருக்கு படையல் அளிக்கும் குறுங்காட்டுக்குள் நுழைந்துவிட்டார். அதை தடுத்த காவலனை அவருடைய காவலர்கள் வெட்டிவிட்டனர். அரசி கால்குறடுகளுடன் உள்ளே சென்று அங்கே நின்றிருந்த நெல்லிமரத்தில் இருந்து சில கனிகளையும் பறித்து உண்டிருக்கிறார். அங்கே ஆண்டிற்கு ஒருமுறை ஆடிமாதம் கருநிலவுநாளில் மட்டுமே மானுடர் நுழைய ஒப்புதல். அதுவும் குருதியுறவுகொண்டோர், கொடிவழியினர் மட்டும்” என்றாள் பானுமதி.

ஒவ்வொரு அரசியராக உடல் தளர்ந்தனர். “அதை அறிந்ததும் அமைச்சர் கனகரின் ஆணைப்படி காவலர்தலைவன் நூறுகாவலருடன் சென்று அவர் தங்கியிருந்த பாடிவீட்டை வளைத்து அதைத் தடுத்த அத்தனை காவலரையும் கொன்று அரசியை சிறைபிடித்து அஸ்தினபுரியின் சிறையில் அடைத்துவிட்டான். கோசல அரசரையும் சிறைபிடித்திருக்கிறார்கள். அவரை ஷத்ரியக்கூட்டிலிருந்து வெளியேற்றக்கூடும்” என்றாள் பானுமதி. சுதை பெருமூச்சிட பத்ரை “அவர்களுக்கு நெறி தெரிந்திருக்கவேண்டும்” என்று பொதுவாக சொன்னாள்.

அதன்பின் அவர்களிடையே சொல் எழவில்லை. சுகதை “சேதிநாட்டிலிருந்து பேரரசர் தமகோஷர் வருகிறாரா?” என்றாள். “இல்லை, பேரரசர் உடல்நலம் குன்றியிருக்கிறார். மைந்தனின் இறப்புக்குப் பின் அவர் நோயிலேயே வாழ்கிறார்” என்றாள். “ஒருமுறை மருத்துவர் திருவிடநாட்டிலிருந்து ஒரு மருந்தை கொண்டுவருவதைப்பற்றி சொன்னபோது இந்நோய்க்கு ஒரே மருந்துதான், இளைய யாதவனின் நெஞ்சுபிளந்த குருதி என்றார்.” சுதை “ஆம், அவ்வஞ்சம் இருக்கும்தான்” என்றாள்.

கார்த்திகை “புண்டரத்தின் அரசரும் தன் தந்தையைக் கொன்ற இளைய யாதவர்மேல் பெருவஞ்சம் கொண்டிருக்கிறார். தந்தையைக் கொன்றவனின் குருதி காணாமல் மஞ்சத்தில் படுப்பதில்லை என நோன்பு கொண்டிருக்கிறார். எப்போதும் தரைப்பலகையில்தான் பள்ளிகொள்கிறார்” என்றாள். “ஆகவே நீங்களும் மரப்பலகையில்தானா?” என்றாள் பத்ரை புன்னகையுடன். “மரப்பலகையில் படுப்பதைப்பற்றி எண்ணிக்கூட நோக்கவியலவில்லை.”

கார்த்திகை “குருதிப்பழி என்பது அவ்வாறுதான் அமையவேண்டும். ஒவ்வொருநாளும் அதை எண்ணிக்கொள்ளவேண்டும். எண்ண எண்ண அது பெருகும். பேருருக்கொண்டு தன் கையில் நம்மை படைக்கலமாக ஏந்திக்கொள்ளும். அதுவே பழிகொள்வதற்கான வழி” என்றாள். “ஷத்ரியர் வழிமுறைகள் அவை. ஆனால் எங்குமல்ல” என்ற சுதை “வேள்வியாலும் நோன்பாலும் அந்தணர், வஞ்சத்தாலும் கொடையாலும் ஷத்ரியர், சேமிப்பாலும் கொடையாலும் வைசியர், உழைப்பாலும் விருந்தோம்பலாலும் சூத்திரர் என்பது பிரகஸ்பதி சூத்திரம்” என்றாள். “விசாலநாட்டு அரசர் எவரும் வஞ்சினம் ஏதும் உரைக்கவில்லையா?” என்றாள்.

பத்ரை நாவெடுப்பதற்குள் பானுமதி “நாம் உணவருந்துவோம்… சேடி வந்து நிற்கிறாள்” என்றாள். அனைவரும் ஆடைகளும் அணிகளும் ஒலிக்க எழுந்தனர். பத்ரை “இளைய யாதவர் எப்போது நகர்புகுகிறார்?” என்றாள். சுப்ரியை அவள் விழிகளை நோக்கினாள். அதில் பகையோ சினமோ தெரியவில்லை. சுதை “அவர் நகர்புகப்போவதில்லை, நேராக வேள்விக்காட்டுக்கே செல்வார் என்றார்கள்” என்றாள். “ஆம், அவர் இங்கு வரப்போவதில்லை. இம்முறை அவர் சாந்தீபனி குருநிலையின் வேதமுடிபறிந்த முனிவராகவே வருகிறார். அவர்கள் கங்கையிலிருந்து நேராக வேதியர் குடில்களுக்கு சென்றுவிடுவார்கள்…”

சுதை “மாணவர்களுடன் வருகிறாரா?” என்றாள். “இல்லை, சாத்யகி மட்டுமே துணையென வருகிறார்” என்றாள் பானுமதி. “உபப்பிலாவ்யத்திலிருந்து நடந்தே வருகிறார். மரவுரி அணிந்த தோற்றம். பொது உணவை உண்பதில்லை. மரநிழல்களில் அந்தியுறங்குகிறார்” என்றாள். “எப்போது வருகிறார்?” என பத்ரை மீண்டும் கேட்டாள். “நாளை காலை வந்துசேர்வார் என்றனர்” என்றாள் பானுமதி. “வருக! உணவு நமக்காக ஒருங்கியிருக்கிறது. அஸ்தினபுரியின் அடுகலையை உணர அரசியருக்கு வாய்ப்பு” என்றாள். பத்ரை “முதன்மை அடுமனையாளர் இங்கில்லை என்று அறிவோம்” என்றாள். பிற அரசியர் நகைத்தபடி ஊட்டறை நோக்கி சென்றனர்.

ஊட்டறைக்குள் காலில்லா மணைகளுக்கு முன் அரையடி உயரமான பீடங்களில் பொற்தாலங்கள் பரப்பப்பட்டிருந்தன. நீருக்காக பொற்கிண்ணங்கள் வைக்கப்பட்டிருந்தன. பானுமதி “அமர்க, அரசி!” என அவர்களில் மூத்தவளான சுதையை அழைத்தாள். “நல்லுணவுக்கான சூழல்” என முகமன் உரைத்தபடி அவள் சென்று அமர மற்றவர்களை அகவைநிரைப்படி அழைத்து பானுமதி அமரச்செய்தாள். சுப்ரியையின் அருகே நின்றிருந்த மாளவத்து அரசி சுபத்ரை அணுக்கக் குரலில் “நீங்கள் இளைய யாதவரை பார்த்ததுண்டா?” என்றாள். “இல்லை” என்றாள் சுப்ரியை. “நானும் பார்த்ததில்லை” என அவள் மேலும் தாழ்ந்த குரலில் சொன்னாள்.

“நான் உசாவியறிந்தேன். நாளை காலை முதலொளியில் அந்தணருக்கான படகுத்துறையில் இளைய யாதவர் வந்திறங்குகிறார். நான் பார்க்கச் செல்லலாம் என எண்ணுகிறேன்.” சுப்ரியை மெல்லிய மூச்சுத்திணறலுடன் “எவ்வண்ணம்?” என்றாள். “அந்தணருக்கு அறமளிக்கும் வழக்கம் அரசியருக்குண்டு. முன்புலரியில் கங்கையில் நீராடிவிட்டு அந்தணநிலையில் நின்றிருந்தால் அவர் வந்திறங்குவதை காணமுடியும்.” சுப்ரியை மேலும் மூச்சுத்திணற “நானும் வருகிறேன்” என்றாள். “நான்…” என சுபத்ரை தயங்க “நானும் வருவேன்” என்றாள் சுப்ரியை.

bl-e1513402911361சுபத்ரையுடன் சுப்ரியை வேள்விக்காட்டுக்குச் சென்றபோது வைதிகர்கள் முதற்காலைக்கு முன்னரே எழுந்து வேள்விச்செயல் முடித்து தங்கள் குடில்களுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அவிமிச்சத்தை உண்ட பின்னர் புலரிவணக்கத்திற்கு சிறிய குழுக்களாக சிலர் சென்றனர். அவர்களின் தேர் சென்று சிறிய முற்றத்தில் நின்றபோது அங்கிருந்த தலைமைக் காவலன் வந்து வணங்கினான். சுபத்ரை பலமுறை அங்கே வந்திருப்பவளாகத் தோன்றினாள். “அந்தணர் கங்கைக்கு செல்லத் தொடங்கிவிட்டனர், அரசி” என்றான் காவலர்தலைவன். சுபத்ரை “நன்று, எஞ்சியிருப்போர் நூற்றெண்மருக்கு நாங்கள் கொடைவணக்கம் செலுத்தி வாழ்த்துபெற விழைகிறோம்” என்றாள்.

அவர்கள் கீழிறங்கி அங்கு நின்றிருந்த அரசமரத்தின் அடியில் நிற்க தொடர்ந்து வந்த தேரிலிருந்து இறங்கிய இரு சேடியர் பெரிய கூடைகளை கொண்டுவந்து அவர்கள் அருகே வைத்தனர். அவற்றில் இளஞ்செம்மையுடன் மணியரிசி நிறைந்திருந்தது. அருகே இரு பித்தளை ஏனங்களை சேடியர் வைத்தனர். அவற்றில் பொன்னாலான அரிசிமணிகள் இருந்தன. தொலைவில் அந்தணர் வரும் பேச்சொலி கேட்டது. இலைநிழல் செறிந்த குறுங்காட்டில் வானொளி இறங்காமையால் புலரி எனத் தெரியவில்லை. அவர்களின் வெண்ணிற ஆடைகளின் அசைவுகள் அணுகின.

முதன்மையாக வந்த முதிய அந்தணர் உரத்த குரலில் “நாங்கள் பொழுதிணைவு வணக்கத்திற்குச் செல்ல நேரமாகிறது. எளிய கொடைகளை பெற்றுக்கொண்டிருக்க பொழுதில்லை” என்றார். சுபத்ரை “பொறுத்தருள்க அந்தணரே, இவை எங்கள் பொருட்டும், எங்கள் மைந்தர் பொருட்டும். ஏற்றுக்கொண்டு வாழ்த்தருளவேண்டும்” என்றாள். “அரிசியை எல்லாம் நாங்கள் மிகுதியாக பெற்றுக்கொள்வதில்லை. அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. இங்கிருந்து நாங்கள் பிறிதொரு வேள்விக்கே செல்லவிருக்கிறோம்” என்றார் அந்தணர்தலைவர்.

“அரிசியால்தான் அந்தணரை வணங்கவேண்டும் என்று எங்கள் குலநெறி. ஏற்றருளவேண்டும்” என்று சுபத்ரை சொன்னாள். “இவ்வளவு அரிசி தேவையில்லை. சடங்குக்கு அரைக்கைப்பிடி போதும்” என்றபடி அந்தணர் தன் கலத்தை நீட்டினார். சுபத்ரை அதில் இரண்டு பிடி அரிசியை இட்டு மூன்றாம் பிடியுடன் மூன்று பொன்மணிகளையும் சேர்த்து அளித்தாள். அவர் “காந்தாரரும் சைந்தவரும் பொன்நாணயங்களை கைநிறைய அள்ளி அளிக்கிறார்கள். அதர்வம் பொன்னாலன்றி பிறிது எதனாலும் நிகர்செய்யப்படாதது என்பார்கள்” என்றபடி கைதூக்கி “அரசர் நீடுவாழ்க! நிலம் செழிப்புறுக! களஞ்சியம் நிறைக! மைந்தர் பெருகுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார்.

அவர் விலகிச்செல்ல அடுத்த அந்தணருக்கு சுப்ரியை கொடையளித்தாள். அவர் “விரைவாக. நாங்கள் இன்றே உசிநாரர்களின் பெருங்கொடைக்கு செல்லவேண்டும்” என்றபடி மிக விரைந்த சொற்களில் அவளை வாழ்த்தினார். இன்னொருவர் கைநீட்டியபடி “நான் அங்கேதான் செல்வதாக எண்ணினேன்” என்றார். “அரசக்கொடைகளே சிறந்தவை. அரசியரின் நோன்புக்கொடைகளில் அவர்களுக்கு சில எல்லைகள் உள்ளன” என்றபடி அடுத்த அந்தணர் அருகே வந்தார். விலகிநின்றவர் “விரைந்து வருக… இந்த அரிசிக்கொடைக்கு நின்றால் அருமணிக்கொடைகளை இழப்பீர்கள்” என்றார்.

ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் உரத்த குரலில் பேசியபடி வந்து கொடைபெற்று வெற்றோசைபோல் ஒலித்த வாழ்த்தை உரைத்து அப்பால் சென்றனர். மேலும் உரத்துப் பேசியபடியே கங்கை நோக்கி சென்றனர். நூற்றெண்மரும் கொடைபெற்றுச் சென்றதும் சுப்ரியை சலிப்புடன் “ஏன் நாம் இவர்களுக்கு கொடுக்கவேண்டும்?” என்றாள். “அவர்கள் வேதத்தை நிலைநிறுத்துகிறார்கள்” என்றாள் சுபத்ரை. சுப்ரியை கூர்ந்து நோக்கியதும் “பல்லாயிரம் பேரில் சிலரே மெய்வைதிகர். பல்லாயிரம்பேர் கொண்டதாக அந்த அமைப்பு இருக்கையில்தான் அந்த மெய்வைதிகர் உருவாக முடியும்” என்றாள்.

“அவர்களின் ஒவ்வொரு அசைவும் எனக்கு ஒவ்வாமையை அளிக்கிறது” என்றாள் சுப்ரியை. சுபத்ரை “ஷத்ரியர்களின் ஒவ்வொரு அசைவும் கீழுள்ள பிரிவினருக்கு அதே ஒவ்வாமையை அளிக்ககூடும்” என்றாள். சுப்ரியை சிரித்து “மெய்தான்” என்றாள். சுபத்ரை காவலர்தலைவனிடம் “நாங்கள் படகுத்துறை வரைக்கும் சென்று வருகிறோம்… புதிய துறை என்றனர். நாங்கள் பார்த்ததில்லை” என்றாள். “மிகச் சிறியது, அரசி. நதிக்குள் மூங்கில்களை நட்டு உருவாக்கியிருக்கிறார்கள். பெரிய படகுகள் அணையவியலாது” என்றான். “எதுவானால் என்ன?” என்றபடி அழைத்துச்செல்ல சுபத்ரை கைகாட்டினாள். அவன் தலைவணங்கி முன்னால் செல்ல அவர்கள் தொடர்ந்தனர்.

“கோசல அரசியை விட்டுவிட்டார்களா?” என்றாள் சுப்ரியை. சுபத்ரை “ஆம், நேற்று நள்ளிரவிலேயே விட்டுவிட்டார்கள். பிழை நிகழ்ந்துவிட்டது என இளைய அரசர் துச்சாதனர் மாப்பு கோரினாராம். ஆனால் கோசல அரசி உடனடியாக அஸ்தினபுரியிலிருந்து செல்லும்படி அரசரின் ஆணை. கருக்கிருளிலேயே அவர்கள் கிளம்பிச்சென்றுவிட்டனர்” என்றாள். சுப்ரியை பெருமூச்சுவிட்டாள். “அதை எதிர்பார்த்திருந்தோம்” என்று சுபத்ரை சொன்னாள். “கோசலத்து அரசி அவ்வாறு நடந்துகொண்டபோதே அது பொறி என எங்கள் அமைச்சர்கள் சொன்னார்கள்.” சுப்ரியை ஒன்றும் சொல்லவில்லை.

“வேள்வியரங்கில் அங்கரை தன் துணைவராக அஸ்தினபுரியின் அரசர் அமர்த்துவார் என்பது முன்னரே அனைவரும் அறிந்தது. அதைப் பற்றிய ஒவ்வாப் பேச்சுகள் அரசரிடையே நிகழ்ந்துகொண்டிருந்தன. இனி அப்பேச்சுகள் எழாது” என்ற சுபத்ரை “வேள்வியரங்கில் அங்கநாட்டரசருடன் நீங்களும் அமர்வீர்கள் அல்லவா?” என்றாள். சுப்ரியை “ஆம், அதன்பொருட்டே வந்தேன்” என்றாள். “நன்று, இங்கே பேசப்படுவதெல்லாம் குலப்பெருமை குறித்தே. ஏனென்றால் வில்லுடன் எழுந்தால் அங்கரின் முன் நிற்பவர் என எவருமில்லை” என்றாள்.

சிறிய துறைமேடையில் நீண்ட கொதும்புத்தோணிகள் ஒன்றோடொன்று தொட்டுக்கொண்டு அலைகளிலாடி நின்றிருந்தன. துறைமேடையின் வலப்பக்கம் பொதிகள் இறக்கும் படகுகளும் இடப்பக்கம் பயணிகளுக்கான படகுகளும் என வகுக்கப்பட்டிருந்தது. பொதிப்படகுகளில் இருந்து மரவுரிக்கட்டுகளும் தர்ப்பைகளும் மரத்தாலான குடுவைகளும் பல வகையான இரவலர் கொப்பரைகளும் மண்கலங்களும் இறங்கின. பயணியர் அனைவருமே அயலூர் அந்தணர்களாக இருந்தனர். நீண்ட படகுப்பயணத்தால் களைத்து துயிலிழப்பால் வீங்கிய கண்களுடன் கரையிலிறங்கி உள்ளுடல் ஊசலாட தள்ளாடி ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டனர். முதியவர்கள் அங்கேயே கால்மடித்து அமர்ந்தனர். தங்கள் பொதிகளுடன் கடந்துசென்றவர்கள் அவர்களை கண்சுருக்கி நோக்கியபடி சென்றனர்.

“இங்குதானா?” என்றாள் சுப்ரியை. “ஆம், நான் நேற்றிரவு என் ஒற்றனிடம் இன்னொருமுறை உறுதிசெய்துகொண்டேன்” என்றாள் சுபத்ரை. “உங்கள் ஒற்றனா?” என்றாள் சுப்ரியை. “ஆம், எனக்கு எல்லா நாட்டிலும் ஒற்றர்கள் உள்ளனர். அனைவரும் நான் பிறந்த சூரசேனநாட்டைச் சேர்ந்தவர்கள். ஏன் உங்களுக்கு கலிங்க ஒற்றர்கள் இல்லையா?” என்றாள் சுபத்ரை. “இல்லையே” என்று சுப்ரியை சொன்னாள். “தேவையென எனக்குப் படவில்லை.” சுபத்ரை “அப்படியென்றால் அங்கநாட்டின் ஆட்சியில் உங்கள் பிடி என்ன?” என்றாள். சுப்ரியை திகைத்து “நானா? எனக்கு எதுவுமே தெரியாது. சொல்லப்போனால் பல ஆண்டுகளாக நான் ஓர் அரண்மனைக்குள்ளேயே வாழ்கிறேன்” என்றாள்.

சுபத்ரை “விந்தைதான்” என்றாள். “ஆனால் பாரதவர்ஷத்தின் அரசியர் எவரும் அப்படி இருப்பதில்லை. அரசின்மேல் தங்கள் பிடி தளரவிடும் அரசி மெல்ல மெல்ல பொருளற்றவள் ஆவாள்” என்றபின் “அவ்வண்ணமென்றால் அங்கநாட்டின் மெய்யான அரசி விருஷாலிதானா?” என்றாள். சுப்ரியை “இல்லை, அவளும் ஓர் அரண்மனைக்குள் ஒடுங்கிக்கொண்டிருக்கிறாள்” என்றாள். “மேலும் விந்தை” என்ற சுபத்ரை “அரசர்களின்மேல் பெண்களின் செல்வாக்கு அரசியால் கட்டுப்படுத்தப்படவேண்டும். அங்கநாட்டரருக்கு அணுக்கமான பரத்தையர் பலர் உண்டா?” என்றாள். சுப்ரியை “இல்லை, அவருக்கு வேறு பெண்கள் இல்லை” என்றாள். “அதெப்படி? அவர் அரசரல்லவா?” என்றாள் சுபத்ரை. “ஆம், ஆனால் இதை நான் உறுதியாகவே அறிவேன், அவருக்கு வேறு பெண்கள் இல்லை.” சுபத்ரை பொதுவாக தலையசைத்தாள்.

படித்துறையில் பரபரப்பு உருவாவதை சுப்ரியை கண்டாள். அதை முன்னரே கண்ட சுபத்ரை “அவர்தான், அவர் வந்துகொண்டிருக்கிறார்” என்றாள். அது சுப்ரியைக்கும் உறுதியாகத் தெரிந்தாலும் “எப்படி தெரியும்?” என்றாள். சுபத்ரை மறுமொழி சொல்லவில்லை. படித்துறை அருகே நின்றவர்களை காவலர்கள் அகலச் செய்தனர். அங்கு நின்றிருந்த இரு படகுகள் விலகி மேடையொழிந்தன. தொலைவில் ஒரு கொம்போசை எழுந்தது. ஒற்றைப் பாய்கொண்ட ஒரு படகு மரங்களுக்கு அப்பாலிருந்து மூக்கு நீட்டியது. “அவர்தான்” என்று சுபத்ரை சொன்னாள். சுப்ரியை விழிகளால் தேடினாள். படகுமுனையில் நின்ற குகன் துடுப்பை மேலும் மேலும் உந்தினான். இன்னொருவன் சுக்கானைத் திருப்ப அது முகம் திருப்பி படகுமேடை நோக்கி வந்தது.

குகன் துடுப்பை மேலே வைத்துவிட்டு எழுந்து நின்று கைவீசினான். படகு அதன் இயல்பான விசையால் மேடையை அடைந்து மூங்கில்பத்தைமேல் முட்டி விசையழிந்தது. வடம் சுருளவிழப் பறந்துசென்று படகின்மேல் விழுந்தது. அதைப் பற்றி இழுத்து படகின் தூண்களில் கட்டினான். நடைபாலம் முன்னகர்ந்து படகைத் தொட்டது. படகிலிருந்து முதலில் வருவது சாத்யகி என சுப்ரியை உணர்ந்தாள். அவன் நிலத்தை அடைந்து விலகி நிற்க கைகளைக் கூப்பியபடி இளைய யாதவர் வெளியே வந்தார்.

கூட்டத்திலிருந்து மெல்லிய கலைவோசை எழுந்தது. வாழ்த்தோ முகமனோ உரைக்கப்படவில்லை. துறைமேடையை அடைந்து இரு பக்கமும் கூடிநின்றவர்களை நோக்கி தொழுதபின் இளைய யாதவர் நடந்தார். சாத்யகி குகன் மேலே கொண்டுவந்து வைத்த மான்தோல் மூட்டையை எடுத்துக்கொண்டு அவரை தொடர்ந்தான். இளைய யாதவர் இடையிலணிந்திருந்த மரவுரியைச் சுழற்றி தோளில் முடிச்சிட்டிருந்தார். நெடும்பயணத்தில் வண்ணம் மாறிய குழல்கற்றைகள் தோளில் சரிந்திருந்தன. கால்கள் புழுதிபடிந்து சேற்றிலூறிய வேர்களைப்போலத் தெரிந்தன.

அவர் மீதிருந்து விழிவிலக்காமல் எங்கிருக்கிறோமென்ற உணர்வை முற்றிலும் இழந்து சுப்ரியை நோக்கி நின்றிருந்தாள். அவர் தன்னைக் கடந்து சென்று தோள்களுக்கும் மரக்கிளைகளுக்கும் அப்பால் மறைந்த பின்னரே அவள் மீண்டாள். சென்றுவிட்டார் என்னும் எண்ணம் எழுந்து பதைப்பு உருவானதும் மீண்டும் நோக்கினாள். தலைகளுக்கு அப்பால் பீலி மட்டும் தெரிந்தது எனத் தோன்றியது.

முந்தைய கட்டுரைகாரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டம்
அடுத்த கட்டுரைகலை -கடிதங்கள் 2