இந்தியக்கலை – ஏ .வி. மணிகண்டன் கடிதம்

220px-Photo_of_T.K._Padminiஇந்திய ஓவியங்களை ரசிப்பதன் தடை என்ன?

 

ஶ்ரீராம்,

 

நீங்கள் முன் வைப்பது பொது வாசகனுக்கான கலை மரபின் அறிமுகம் பற்றி. அந்த சிக்கலுக்கான பதிலை ஜெ சொல்லிவிட்டார். ஆனால் அதை உருவாக்க வேண்டியது கலைஞர்களின், கலை வரலாற்றாசிரியர்களின் பணி, சுருக்கமாக அறிவுச்சூழலின் வேலை. அங்கேயே, இதை செய்வது பிற்போக்கானது என்ற புரிதல் இருக்கிறது என்பதே என் குறை.

 

கலையில், வரலாற்று நோக்கில் இரண்டு மரபுகள் உண்டு. ஒன்று தேசியக் கலை மற்றது நவீனக் கலை அல்லது தனி மனிதக் கலை. நம் மரபு எனும் போது அது தேசியக் கலையையே குறிக்கிறது.  தனி மனிதக் கலை, ஜன நாயகம் என்ற கருதுகோளோடு உருவானது. ஆகவே அது ஐரோப்பாவில் தோன்றியது. நம் நவீனக் கலை இந்திய மறுமலர்ச்சி காலத்தில் உருவாகி வந்தது. நமக்குத் தேவை, ஐரோப்பிய கருவிகளைப் பயன்படுத்தி, அவர்களின் கருத்துக்களை விலக்கி, நம் மரபை விளங்கிக் கொள்வது, வெண்முரசைப் போல.

 

தேசியக் கலையை இப்படி வகுக்கலாம்

 

 1. தேசம், மொழி, மதம் போன்ற பேரடையாளம் ஒன்றின் பகுதியாக இயங்குபவை
 2. அந்த பேரடையாளதிற்குள், பொதுவான பண்பாட்டுப் பின்புலத்துக்குள் இயங்குபவை
 3. பொது இடங்களில் காட்சிப்படுத்தப்படுபவை
 4. ஆகவே, சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவானவை
 5. தொகுக்கப்பட்ட மரபும், தெளிவான முறைமைகளும், எல்லைக்குட்பட்ட பேசுபொருளையும் கொண்டவை
 6. இந்த மரபுக்குள்ளும், முறைமைகளுக்குள்ளும் நின்றே பேச வேண்டியிருப்பதால், கலைஞன் அதன் பகுதியாகவே தன்னை வெளிப்படுத்த முடியும்
 7. அந்த வெளிப்பாட்டில் அவனுடைய பங்களிப்பு என்பது நுட்பமான வேறுபாடுதான்.
 8. ரசிகன் அந்த மரபையும், அதில் கலையின் பேசுமுறையையும் அறிந்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் குறிப்பிட்ட கலைவெளிப்பாட்டின் வேறுபாட்டின், தனித்தன்மையின் நுட்பம் பிடிபடும்.

 

உதாரணமாக, பரத நாட்டியத்தை எடுத்துக் கொள்ளலாம். அது பாடுவது ஒரு சமூகத்துக்கு பொதுவான நாடகத் தருணத்தை. சங்கப் பாடல் அல்லது பக்திப் பாடல் போல. அந்தப் பாடல் கோயிலில் [பொது இடம்] அரங்கேற்றப்படுகிறது. படிப்பறிவு உள்ளவருக்கும் இல்லாதவருக்கும் பொதுவான சூழலில் அது பேசுகிறது. தேசியக் கலை வெளிப்படுத்தப்படும் சூழலில் ஒரளவு பண்பாட்டு பயிற்சி அனைவருக்கும் இல்லாமல் இருந்தது கிடையாது. ஆகவே, ரசிகன் அதன் அடிப்படைகளை ஏற்கனவே அறிவான். அகத்துறையும், புறத்துறையும் தெரிந்திருக்கும். பக்தி மரபை பற்றிய பரிச்சயம் இருக்கும். நுட்பங்களை மட்டும் பார்த்தால் போதும். அதை வெளிப்படுத்தும் கலைஞர் அந்த மரபை, முறைமைகளை ஆசிரிய மரபில் இருந்து கற்க வேண்டும். அதில் எது பேசப்பட வேண்டும், எது பேசப்படக் கூடாது என்பது அந்த கலை மரபு வரையறுத்து ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் பிண்ணணியில் கலைஞன் தன் தனித்தன்மையை வெளிப்படுதுகிறான். ஆனால், அது மொத்த மரபிலிருந்து எதிர் திசையில் செல்வதாக அல்லாமல், அதற்கு ஒரு ஒத்திசைவைத் தருவதாகவே இருக்க வேண்டும்.

 

ஆரம்ப காலத் தனி நபர்க் கலையை இப்படி வகுக்கலாம்.

 

 1. கலையின் அடையாளம் / தரிசனம் கலைஞன் முடிவு செய்வது.
 2. பண்பாட்டுப் பின்புலம் இல்லாதது, முடிந்தால் பிற பண்பாட்டுப் பின்புலத்துக்குள் செல்ல விழைவது.
 3. கலைக்கென்ற தனியான இடங்களில் காட்சிப்படுத்தப்படுவது
 4. தேர்ச்சி பெற்ற ரசிகர்களுக்குரியது, ஆகவே சிக்கலானது.
 5. மரபு, முறைமைகள், பேசுபொருள்கள் குறித்த எந்த எல்லைகளும் அற்றவை
 6. தனியான மரபையும், முறைமைகளையும் உருவாக்கிக் கொள்ள முடியும்
 7. அந்த வெளிப்பாட்டையே தன் பங்களிப்பாக முன் வைக்க முடியும்
 8. ரசிகன் நவீன கலாச்சார சூழலையும், அரசியலையும், அதன் கலைப்போக்கையும் அறிந்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் குறிப்பிட்ட கலைவெளிப்பாட்டின் வேறுபாட்டின், தனித்தன்மையின் நுட்பம் பிடிபடும். சுருக்கமாக, கலைஞனுக்கு இணையாக ரசிகனும் இருக்க வேண்டும், ரசனையிலும், தத்துவத்திலும், அறிவிலும்.

 

இந்த மரபுக்கான உதாரணம்தான் பிக்காஸோவும், வான்கோவும். பிக்காஸோ கருத்தாக்கக் கலைஞன் என்றால் வான்கா உணர்வாக்கக் கலைஞன் [தரிசனம்]. பிக்காஸோ ஆப்பிரிக்க மரபிலும், வான்கா ஜப்பானிய மரபிலும் ஈடுபாடு கொண்டது தேசியக் கலைகளின் எல்லைகளைக் கடக்கவே. இவை அருங்காட்சியகங்களிலும், காட்சிக் கூடங்களிலும் காட்சிக்குட்படுத்தப்படுவதால் பொது ரசிகர்களுக்குரியவை அல்ல. தேர்ச்சி பெற்ற ரசிகர்களுக்குரியது. பிக்காஸோ க்யூபிஸத்தை வளர்த்தெடுக்க முடிந்தது அதனால்தான்.

 

இந்த இரண்டு கலை மரபிலும் பொதுவான ஒன்று என்பது, அந்தக் கலை உருவான மரபை பற்றிய அறிமுகம் நமக்குத் தேவை என்பதுதான். மரபுக்கலையானால், பண்பாட்டு அறிமுகமும், நவீனக் கலையானால் அரசியல், தத்துவ அறிமுகமும் தேவை. எந்த மரபிலும் கலை தத்துவத்தின் அடிப்படை மீதுதான் நிற்கிறது. நீங்களே மிக்கேலாஞ்சலோவை மறுமலர்ச்சி நோக்கின் பிரதி நிதியாகத்தான் சொல்கிறீர்கள் இல்லையா? ஐரோப்பியக்கலையோடு தத்துவத்தை இணைத்தே புரிந்து வைத்திருக்கிறீர்கள். நம் மரபை பற்றிய அறிமுகத்தில் இது நிகழவில்லை என்பது நமக்குத் தெரிவதில்லை. பொது வாசகனுக்கு இல்லை, என் போன்ற கலைக்கல்லூரியில் படித்தவர்களுக்கே கூட.

 

அதே போல, ஐரோப்பிய கலை மரபையும் நாம் இங்கிருந்து முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். மறுமலர்ச்சிக்காலத்தில் மட்டும் நான்கு டேவிட்கள் செதுக்கப்பட்டிருக்கின்றனர். நான்கு சிற்பங்களுக்கும் நான்கு தத்துவ அழகியல் வேறுபாடுகள் இருக்கின்றன. அதைப் புரிந்து கொள்ளும் போதே நாம் ஐரோப்பியக் கலையையும் புரிந்து கொண்டோம் எனலாம்.  பிக்காஸோவிற்கு தனி நூல்கள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. ஆனால், அத்தனையையும் ஒரு பொது வாசகர் வாசித்து அங்கிருந்து க்யூபிஸத்துக்கும் காண்ட்டுக்குமான தொடர்பை புரிந்து கொள்வது சாத்தியமில்லை. அதை துறை வல்லுனரின் அறிமுக நூலே பொது வாசகனுக்கு அளிக்க முடியும். அதற்குத்தான் அறிமுக நூல்கள், அறிவுச் சூழலின் கலை குறித்த உரையாடல்கள்.

 

நீங்கள் குறிப்பிடுவது போல தனிக் கலைஞர்களைப் பற்றிய நூல்கள் ஏன் நமக்கு இல்லை என்றால் நமக்கு நவீனக் கலை உருவாகி வந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான். அதற்கு பிறகான கலைஞர்களைப் பற்றி நிறைய தொகை நூல்கள் இருக்கின்றன. ஆனால், தனிக் கலைஞர்களைப் பற்றிய நூல்கள் துறைக்குள் நின்று ஆராய்பவர்களுக்கானது. ஒரு சமூகத்திற்கு அல்ல. அதே போல, நாம் புரிந்து கொள்ள வேண்டிய நம் கலை மரபு தேசியக் கலை மரபு. ஆனால் நம் அளவீடுகள் ஐரோப்பிய நவீனக் கலையுடையது. உங்கள் கேள்வியே அந்த சிக்கலைக் காட்டுகிறது, நமக்கு ஏன் தனிப் பெருங்கலைஞர்கள் இல்லை என்று கேட்கும்போதே நாம் ஐரோப்பிய நோக்கில் இந்தியக் கலையை மதிப்பிடத் துவங்குகிறோம். இந்த சிக்கலுக்குத்தான் அறிமுக நூல்கள் தேவை.

 

ஒவியத்துக்கு என்றில்லை, நாட்டார் கலைகளுக்கு, தொன்மங்களுக்கு, செவ்விலக்கியங்களுக்கு, இசைக்கு என எந்தத் துறைக்கும் சிறிய அறிமுக நூல்கள் இல்லை. நான் எப்படி இந்துஸ்தானி இசைக் கலையை அறிய முடியும்? கிஷோரி அமோங்கரைப் பற்றி அறுனூறு பக்கமிருக்கும் நூலை வாசித்தால் கூட ஒட்டுமொத்த இந்துஸ்தானிய இசையை அறிய முடியாது இல்லையா? அந்த நூலின் வழியாக அறிந்த அவரைக் கொண்டு சென்று பொருத்த ஒரு பின்புலம் வேண்டுமே? நான் சொல்வது இதற்கு நேர் எதிராக. ஒரு துறையின் வரலாறையும், தத்துவத்தையும் விரிவாக வாசித்து கருத்துகளை உருவாக்கிக் கொள்வது துறைக்குள் இருப்பவர் செய்ய வேண்டியது. அந்தக் கருத்துகளை மட்டும் பொது வாசகனும், மாணவனும் வாசித்தால் போதும், இல்லையெனில் எந்தக் கலையையும் அறிமுகப்படுத்திக் கொள்ள நாட்கள் போதாது. இங்கு காசு வாங்கிக் கொண்டு போஸ்டிங் போட நாம் வைத்திருக்கும் பல்கலைகழகங்களைப் போலவே, ஐரோப்பிய அமெரிக்க அரசுகள் வைத்திருக்கும் பல்கலைகழகங்கள் இந்த அறிமுக நூல்களை பதிப்பிக்கின்றன.

 

துறைக்கு வெளியே நிற்கும் ஒருவருக்கு மூன்று வகையான அறிமுகங்கள் தேவை. ஒன்று, இந்திய மரபை பற்றிய பொதுவான வரலாற்று, தத்துவப் பின்புல அறிமுகம். கிருஷ்ணனை  பற்றிய ஒவியத்தை அறிய விசிஷ்டாத்வைதத்தையும், பக்தி மரபையும் அறிமுகப்படுத்துவது, இந்திய மரபில் தொன்மங்களின் இடத்தை அறிமுகப்படுத்துவது. இரண்டு, இங்கு இருந்த பல்வேறு கலை மரபுகளுக்கு இடையேயான வேறுபாடுகளும் நுட்பங்களும் குறித்த ஒரு அறிமுகம். ஹோய்சாலர்களின் கிருஷ்ணனுக்கும் பகாரி ஒவியத்தின் கிருஷ்ணனுக்குமான வேறுபாடும் பங்களிப்பும். இந்த புரிதல்களுக்கு அப்புறமாக, ஒரு இந்தியக் கலைப்படைப்பை அணுகும் விதம் குறித்தும் [கலையை வாசித்தல்], அது எப்படி இந்த மரபின் தத்துவத்திலும், வரலாற்றிலும், அழகியலிலும் பொருந்துகிறது என்ற அறிமுகம், கிருஷ்ணனைப் பற்றிய ஒவியத்தில் வரும் கார்மேகமும் மின்னலும் எப்படி குறியீடாகின்றன என்பதை அஷ்டபதியிலிருந்தோ பாகவதத்திலிருந்தோ குறிப்பிட்டு விளக்குவது.

 

இந்த அடுக்கில் இரண்டாவது இடத்தில்தான் வருகின்றன, நீங்கள் குறிப்பிடும் நவீனக் கலையின் தனிக் கலைஞர்களின் நூல்கள். அவர்களின் retrospective எப்படி மரபிலிருந்து வேறுபடுகின்றது, என்ன மாதிரியான பங்களிப்பை வழங்கினார்கள் என ஆராய்பவை. மரபிலிருந்து அவர்கள் வேறுபடும் இடத்தையும், அவர்களுடைய பங்களிப்பையும் மட்டுமே பேசுபவை, துறை சார்ந்து வாசிப்பவருக்கு மரபுச் சூழல் பற்றிய அறிமுகமும், கலையை அணுகுவதன் முறைமைகளும் ஏற்கனவே பரிச்சயமாக இருக்கும். அதனால் எளிதாக பொருத்திக் கொள்வார்கள்.

 

பி.என்.கோஸ்வாமி ஒரு சிற்றோவியத்தை சுட்டினார். கோபியர் மதுராவிற்கு சென்று, கோகுலத்திற்கே வந்து விடும்படி கிருஷ்ணனை அழைப்பர். கிருஷ்ணனை சுற்றி ஏழெட்டு கோபியர் நின்று முகம் பார்த்து அழைக்க, கிருஷ்ணன் கைகளை கீழ் நோக்கி நீட்டி மறுப்பான். கடைசியில் நிற்கும் கோபிகை மட்டும் பசுக்களை சுட்டி நிற்பாள். கோஸ்வாமி சொன்னார், நீ உன் சமாதானங்களை எல்லாம், உன்னைக் காணாமல் வாடி நிற்கும் கோகுலத்து பசுக்களிடத்தில் சென்று சொல் என்கிறாள் என. எனக்கு கண்கள் கலங்கி விட்டது. இந்த உணர்வின் ஊற்று நீலத்திலிருந்தும், மீராவிலிருந்தும், கிஷோரி அமோங்கரிலும் இருந்து வருவது இல்லையா?

 

நான் கூறும் அறிமுக நூல்கள் அனைத்தும் பொதுப்புத்தியை நோக்கியும், பொது வாசகனை நோக்கியும் இருக்க வேண்டும், ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ நூலைப் போல. இந்த வகையான நூல்கள் மேற்கத்தியக் கலைகளுக்கு எளிதாகக் கிடைக்கின்றன. தன் தேவைக்கேற்ப, ஐம்பது பக்கங்களிலிருந்து ஐம்பதாயிரம் பக்கங்கள் வரை, ஒருவர் வாசிக்க முடிவெடுத்தால் அதற்கேற்ப நூல்கள் அனைத்தும் கிடைக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலே இவை எல்லாம் பொது வாசகருக்கு ஒரு கலை மரபை அறிமுகப்படுத்துவதில் இருக்கும் சிக்கல். நம் சூழலில் துறைக்குள் இயங்குபவர்களுக்கே இந்த அறிமுகங்கள் நிகழ்வதில்லை.

 

நமக்கும் மூல நூல்கள் இருக்கின்றன. ஆனால் அவை பழமையானவை. ரசவாத செய்முறை நூல்கள் போல எங்கு கிடைக்கும் என்றே தெரியாத அளவில்தான் இருக்கின்றன. அவற்றை இன்றைய மொழியில், இன்றைய சிந்தனைக்கேற்ப புதிதாகவும் எளிமையாகவும் அறிமுகம் செய்யும் நூல்களே அவசியம். அவை பரவலாகக் கிடைக்க வேண்டும்.  அதை யார் செய்வது என்பதும் அதற்கு சமூகத்தில் தேவையிருப்பதாக உணரப்படுகிறதா என்பதுமே சிக்கல். அதை விட அப்படி தெரிந்து கொள்ளத் தேவையே இல்லை என்று இங்கே நாம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே ஆகப் பெரிய சிக்கல்.

 

பின் குறிப்பு: உங்கள் கடிதம் மகிழ்ச்சியளிக்கிறது. ஒவியம் புகைப்படம் குறித்து எழுதினால் சீண்ட மாட்டார்கள். ஆனால், இப்படி ஒன்றுக்கு மேற்பட்டோரால் படிக்கப்படுகிறது என்பது நாமே ஏன் இவற்றைப் பற்றி எழுதக் கூடாது என்ற நப்பாசையை உருவாக்குகின்றது.

 

புனலாட வேண்டும் என்று தோன்றிவிட்டால்

உடனே

ஆடைகளை களைந்து விட வேண்டியதுதான்

கடல்நீர் ஆவியாகி

பிறகு மேகமாகி

எப்போது அது மாரியாகி

எப்போது நமது ஆறுகளில் புதுவெள்ளம் பெருக்கெடுக்க?

 

என்று இசையனார் எழுதியிருக்கிறார்.

 

நான் ஒரு கனவோடு இருக்கிறேன், புகைப்படங்களை காட்சிப்படுத்தி சம்பாதித்து கோடிகளைக் கொடுத்தாவது ஒரு பேராசிரியர் பதவியை வாங்கி விட வேண்டும், அது வரையில் தமிழில் எழுதுவதில்லை என்று. அதைக் கைவிட்டுவிட்டு பிற்போக்கு கலை வரலாற்றாசிரியராக ஆக்கிவிடும் போலிருக்கிறது உங்கள் கடிதம்.

 

ஏ வி மணிகண்டன்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–75
அடுத்த கட்டுரைஈரோடு சந்திப்பு- விஷால் ராஜா