மொழிகள் – ஒரு கேள்வி

saka

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றைய அகாலக்காலம்கடிதங்கள்‘ கட்டுரையுடன் இணைத்துள்ள தினமணி நாளிதழில் உள்ள செய்தியில் எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்கள் உலகத்தில் ஏழாயிரம் மொழிகள் இருப்பதாக கணக்கிட்டிருப்பதாகவும்,அதில் இரண்டே இரண்டு மொழிகள் தான் இடையறாமல் பேசப்படும் மொழியாகவும்,எழுதப்படும்  மொழியாகவும் உள்ளன அதில் ஓன்று தமிழ் மற்றொன்று சீனம் என்று கூறியிருக்கிறார்.”

எனது எளிய சந்தேகம் இதில் ஆங்கில மொழி சேர்த்தி கிடையாதா?,இத்தகவல்கள் எல்லாம் நன்கு ஆராய்ந்து நிறுவப்பட்டதா? அல்லது இவர்களின் அனுமானமா?.

அன்புடன்,

அ .சேஷகிரி.

***

அன்புள்ள சேஷகிரி,

இதை அவர் சொல்லியிருப்பாரா, சொன்னால் என்ன பொருளில் சொல்லியிருந்தார் என்றெல்லாம் தெரியாது. பொதுவாக சா.கந்தசாமி தவறாக ஒன்றும் சொல்பவர் அல்ல. சொல்மேல் கட்டுப்பாடு கொண்டவர்.

பொதுவாக நாளிதழ்களில் ஒர் எழுத்தாளரோ அறிஞரோ பேசியதாக வரும் எந்தக் கருத்தையும் நாம் அவர் சொன்னதாகக் கருதக்கூடாது. அது அந்த நிருபருக்குப் புரிந்தது, அல்லது அவருக்கே சொந்தமாகத் தோன்றியது, அவ்வளவுதான். அடிப்படை வாசிப்பும், சமகாலக் கருத்துக்கள் பற்றிய பொதுவான அறிமுகமும் கொண்ட செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் மிகமிகமிகக் குறைவு.

இங்கே அத்தனை உரைகளும் ஓரிரு வரிகளே வெளியிடப்படுகின்றன. ஒருவரின் உரையில் வாகான ஒரு வரி கிடைக்குமா என்றே செய்தியாளர்கள் கவனிப்பார்கள். அவர்களே எழுதியும்விடுவார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே எழுதிக்கொடுத்தால் கொஞ்சம் பொருத்தமாக அமையும்.

மலையாள ஊடகங்களில் இலக்கியநிகழ்ச்சிகளுக்கு இலக்கியமறிந்தவர்களையே அனுப்புகிறார்கள். முக்கியமான பேச்சுக்கள் அனேகமாக முழுமையாகவே நாளிதழில் வெளிவரும். நான் கேரளத்தில் பேசிய அனைத்து உரைகளும் முழுமையாக , அதாவது நாளிதழின் அரைப்பக்க கட்டுரை அளவுக்கு, வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ஒரு முழுமை இருக்கும். ஒற்றைவரிகள் அந்த ஆசிரியரே சொன்னவை ஆனால்கூட அவருடைய கருத்து அல்ல.

*

மொழிகளைப்பற்றி எவர் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஏனென்றால் மொழிகள் பெரும்பாலும் இன,நாடு,தேசிய அடையாளங்களாக இன்று உருமாற்றம் அடைந்துள்ளன. அரசியல் கருவிகளாகியுள்ளன. ஆகவே மதங்களைப்போலவே அவற்றையும் புறவயமாக ஆராயமுடியாது, எந்தக்கூற்றும் எவரையேனும் புண்படுத்தும் என்னும் நிலை இன்றுள்ளது.

உலக அளவில் அறிவுத்துறைக்குள்கூட மொழிகளை மதிப்பிடுவதற்கும், ஆராய்வதற்கும் திட்டவட்டமான அளவுகோல்கள் இல்லை. ஆகவே ஏதேனும் ஒருவர் எங்கேனும் சொன்ன ஒற்றைவரியை மேற்கோள்காட்டி எதை வேண்டுமென்றாலும் வாதிட்டு நிறுவமுயலலாம். அது அறிவை வீணடிப்பது மட்டும்தான்.

ஒரு காலகட்டத்தில் பொதுவாக ஏற்கப்பட்ட மொழியியல் அளவுகோல்களும் அவற்றின் அடிப்படையிலான பொதுமுடிவுகளும் அறிவுத்துறைக்குள் இருக்கும். அவற்றை ஏற்றுக்கொண்டு, சிறிதளவு ஐயத்தையும் தக்கவைத்துக்கொண்டு, பொதுவிவாதத் தளத்தில் பேசுவதே மொழியியலாளர் அல்லாதவர்கள் செய்யவேண்டியது.

இந்திய அளவில் அதிகமானவர்களால் பேசப்படும் மொழிகள் முறையே இந்தி,தெலுங்கு,தமிழ். உலக அளவிலும்கூட ஏறத்தாழ வரிசை இந்த அடிப்படையில்தான்.

மொழிகளின் தோற்றம், வரலாற்றுகாலம், ஊடாட்டம் ஆகியவை பற்றி இங்கே அரசியல் சூழலில் பேசப்படும் எல்லா கருத்துக்களும் அறிவுத்துறைகளுக்குள் காலாவதியாகி முப்பதாண்டுகள் கடந்துவிட்டன

ஜெ

முந்தைய கட்டுரைஅடிப்படைவாதம் பற்றி…
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–73