கைதி-நாடகநிகழ்வு

kaithi1

கைதி- நாடகம்

ஜெ,

அன்புடன் கோ எழுதுவது.

நேற்று 18.2.2018 ஞாயிற்றுக்கிழமை இங்கே திருவண்ணாமலையில் red elephant theater 4 bee artists இணைந்து நடத்திய “கைதி” நாடகம் பார்க்க சென்றிருந்தேன். நேற்று தான் அந்த தியேட்டரில் நாடகம் அரங்கேறும் முதல் நாள். அதனால் துவங்க சற்று தாமதித்துவிட்டது .ஏற்பாட்டாளர்கள் தயாராகத்தான்இருந்தார்கள். அவர்கள் மட்டும் தயாராக இருந்தால் போதுமா…

முதலில் S.ராமகிருஷ்ணனின் “அக்கடா”-வின் ஒருப்பகுதியை அரங்கேற்றினார்கள் .குழந்தைகளுக்கான நாடகம் பார்ப்பதற்கு மட்டுமல்ல .நடிப்பதற்கும் தான். எல்லாம் பள்ளி மாணவர்கள். சில சிறுவர்கள் டைமிங் மிஸ் பண்ணாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அச்சிறுவர்கள் இப்போதுதான் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்பதை அறிந்த போது . பரவாயில்லையே என்றே படுகிறது.
அடுத்ததாக தங்களின் கைதிகள்.கைதி என்ற பெயரில் அரங்கேறியது.மிக அற்புதமாக நடித்தார்கள்என்று தான் சொல்ல வேண்டும்.குறிப்பாக “அப்பு”-வாக நடித்த ராகவானந்தன் பிரமாதம்.நாடகத்தை வடிவமைத்த சந்திரமோகன் “கருப்பையா” பாத்திரத்தை தத்துரூபமாக அரங்கேற்றினார். நாடகம்முடிந்ததும் எதிர்வினைகளை கோரினார்கள்.நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கூட்டமும்எதிர்வினையும் வந்தன.பேசிய பலரும் நடிப்பையும், நாடகத்தின் ஆழ்கருத்தை சிலரும்பாராட்டினார்கள்

.கடைசியாக பவா அவர்கள் பேசியது தான் சற்று முக்கியமானது. முதலாவதாக அவர் நாடகத்திற்கு முக்கியமே நடிப்பும் செட்டுமே என்றவர் கதையின் பீரீயடை முக்கியமாக கடைபிடிக்கவேண்டும். காம்பில் போலீஸ் பயன்படுத்திய சேரை பிளாஸ்டிக்கில் போடாமல் அந்த பீரியடுக்கு ஏத்தமாதிரி ஒரு சேர போட்டிருக்கலாம். அத்தோடு அப்புவை உயர் அதிகாரி சுடமாட்டார். அவர் சுடலாம்னு போவாரு ஆன சுட மனசு வராது. போலீஸே ஆனாலும் மனிதன் இல்லையா? அதனால தனக்கு கீழேபணி புரியும் போலீஸ் காரரை சுடச் சொல்லுவாரு. தவறா இருந்தா நண்பர்கள் என்னை திருத்தலாம் என்றார்.

kaithi3

காரணம் என்னவென்றால் நாடகத்தில் அப்புவோடு ஒரே ஒருத்தர் தான் உயர் அதிகாரி தோரணையில் வந்தார். ஆனால் அவர் டி.எஸ்.பியாக தான் இருக்கணும் ஏனெனில் அவரைப் பார்த்ததும் கருப்பையா குழைகிறார். ஆனால் கிளைமேக்ஸில் அவரே அப்புவை சுடுகிறார். அதனால்தான் பவா அப்படிகூறினார் .அவர் கருத்தை ஆமோதித்து சில குரல்கள் எழுந்தன. உரையாற்றும் மன நிலையில் நான் இல்லை.ஆகவே மௌனம் காத்தேன்.கண்ணப்பன் என்ற கேரக்ட்டரை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

அடுத்ததாக பவா குறிப்பிட்டதில் முக்கியமானது வட்டார மொழி. ஜெயமோகனுடையது நாகர்கோயில் வட்டார மொழி. அதை அப்படியே பயன்படுத்தணும் என்பதில்லை. அதை தர்மபுரி பக்கம் நம்ப வட்டாரமொழியாக மாற்றியிருக்கலாம். அது ஒன்றும் தவறில்லை. அது ஒரு எழுத்தாளனுக்கு நாம் செய்யும் மரியாதை தான் . மற்றபடி நாடகம் அருமை. ராகவானந்தன் நடிப்பு பிரமாதம் என்று பாரட்டிவிட்டு ஜெயமோகனிடம் சொல்லலாம் .ஒரு நல்ல நாடகம் பண்ணியிருக்கிறோம் என்று முடித்துக்கொண்டார்

பதிலளித்து நண்பர் ஷபி உரையாற்றுகையில் பீரியடை எவ்வளவோ முயற்சி பண்ணோம் ஆனால் நூதன் ஸ்டவ் எல்லாம் நாங்க கேள்விப்பட்டதே கிடையாது. நாங்கள் பயன்படுத்திய துப்பாக்கி கூட இந்த தலைமுறை வடிவமைப்பு என்றவர் பாலுமகேந்திரா சொல்வார் ஒரு எழுத்தாளருடைய படைப்பை நீ அப்படியே முழுவதும் எடுக்கணும் என்பதில்ல. நீயும் ஒரு படைப்பாளி. நீயும் சுதந்திரமா படைக்கணும் என்று மேற்க்கோள் காட்டிவிட்டு நன்றி கூறி வழியனுப்ப துவங்கினார்.

எப்படியோ திருவண்ணாமலையில் இது ஒரு நல்ல முயற்சி .ஏற்பாட்டாளர்களையும் கலைஞர்களையும் பாராட்டியாக வேண்டும்.இந்த மடல் மூலமும் அத்தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் அங்கே அதிக அளவில் சிறுவர்கள் பங்கேற்க வைத்ததும் பாராட்டிற்குரியது. அச்சிறுவர்களும் தட்டிக்கொடுக்கப்பட வேண்டியவர்களே. அடுத்த முறை இதைவிடசிறப்பாக இன்னும் அதிக மக்களை ஈர்க்கும் வகையில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதில் நான் அறிய விழைவது என்னவென்றால் வட்டார மொழி மாற்றம் குறித்த பவாவின் கருத்துபற்றி, பாலுமகேந்திராவின் படைப்பாளியின் சுதந்திரம் பற்றி, டி.எஸ்.பியையும் கண்ணப்பரையும் ஒன்றாக்கியதால் ஏற்ப்பட்ட குழப்பம் பற்றி எல்லாம் தாங்கள் எண்ணுவது என்ன?

தங்கள் பதிலை எதிர்நோக்கி..

..
– கோவர்தனா

kaithi2

அன்புள்ள கோவர்த்தனா

அந்தக்கதையில் காவலர் தென்தமிழகத்தவர், அந்த மொழியை பேசுகிறார்கள். ஏன் தென்தமிழகத்தவர் என்றால், ஒரு சின்ன புனைவுவசதிக்காக. அந்த ஊரின் சூழல், அங்குள்ள சிக்கல் ஆகியவற்றை அவர்கள் கதைக்குள் பேசிக்கொள்ளவேண்டும். அது அவர்களுக்குப் புதியசெய்தியாக இருக்கவேண்டும் என்றால் அவர்கள் அயலவராக இருந்தாகவேண்டும். அதோடு பொதுவாக ஆயுதப்படைக் காவலர்கள் சொந்த ஊரில் நிறுத்தப்படுவதில்லை. நக்சலைட் வேட்டையில் பெரும்பாலும் தென்னகப்போலீசார்தான் ஈடுபடுத்தப்பட்டனர்.

தென்தமிழக வட்டார வழக்கு இதற்கு அப்பால் அந்தக் கதைக்கு முக்கியம் அல்ல. பொதுவாக நடிகர்கள் இயல்பாகப்பேசும் மொழிக்கு நாடகத்தின் மொழியை மாற்றுவதே நல்லது. வட்டாரவழக்கை நாடகத்தில் ‘பயின்று’ பேசமுடியாது. செயற்கையாக ஆகிவிடும். உண்மையான உணர்ச்சி வெளிவராமலாகிவிடுமென்றால் அது பெரிய இழப்பு

மொழி,அரங்க அமைப்பு ஆகியவற்றில் அத்தகைய சில சலுகைகளை எடுத்துக்கொள்ளாமல் ஒரு கதையை நாடகமாக ஆக்கமுடியாது. கதாபாத்திரங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் வழக்கமாக நாடகங்களில் செய்யப்படுவதுதான், இல்லையேல் நாடகம் குவியம் கொள்ளாது. அனைத்துக்கும் மேலாக நாடகம் குறுகிய ஒரு வெளிக்குள் நிகழ்ந்தாகவேண்டும் என்பதே அதன் பெரிய கட்டாயம்

நாடகம் இவ்வாறு பல கட்டுப்பாடுகளினூடாக தன் எல்லையை வரையறுத்துக்கொண்ட வடிவம். ஆனால் குறுகிய ஓர் எல்லையை வரையறுத்துக் கொண்டதனாலேயே ரசிகனை நிறைய கற்பனைசெய்ய வைக்கும் வடிவமும்கூட. கதகளியில் அர்ஜுனன் முக்காலியில் அமர்வது சாதாரணம். மலைமேல் நிற்பது என்றால் அந்த முக்காலிமேல் ஏறிநிற்பதுதான்.

 

kaithi4

 

எந்தக்கலைவடிவமும் ரசிகனிடம், வாசகனிடம் தன்னை நம்பும்படிக் கோருகிறது. “இவ்வாறு காட்டுவதை ஏற்றுக்கொண்டு மேலே கற்பனைசெய்து அந்த யதார்த்தத்தை உன் உள்ளத்தில் உருவாக்கிக்கொள்க” என்பதே அக்கோரிக்கை. அதன் காட்சியமைப்பில், மொழிநடையில் எந்த விடுபடல் இருந்தாலும் நடிப்பு உண்மையானது என்றால் நாடகம் வெற்றியே.

ஏனென்றால் நாடகத்தின் மைய விசையே நடிப்புதான். நாம் ஒரு கதாபாத்திரத்தை நிஜமனிதனாகக் கண்முன் காண்கிறோம் என்பதே நாடகம் என்னும் கலைவடிவம் இத்தனை  காலம் நீடித்திருப்பதற்கான காரணம். நடித்துக்காட்டிவிட்டால், அக்கணம் நம் முன் அந்த புனைவுமானுடன் மெய்யென நின்றுவிட்டால், நாடகம் நிகழ்ந்துவிட்டது.

ஜெ

***

முந்தைய கட்டுரைஅகாலக்காலம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅலைகளில் அமைவது