பேலியோ -நியாண்டர்செல்வன்

nea

 

 

பேலியோ -ஒரு கடிதம்

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

வணக்கம். மாதவன் இளங்கோ எனும் வாசகரின் கடிதம் கண்டேன். இரத்தவகை டயட் நூலை நான் படித்ததில்லை. கேள்விப்பட்டதை வைத்து எழுதுகிறேன்.

 

இரத்தவகை டயட் எனும் கோட்பாடே பிழையானது. அறிவியல் அடிப்படை அற்றது. ஏனென்றால் நம் இரத்தவகை என்ன என்பது பரிசோதனை செய்ய்யாமல் யாருக்கும் தெரியாது. ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போனால் தமிழ்நாட்டில் பலருக்கும்

தம் ரத்தவகை என்ன என்பதே தெரியாது. ஆக தம் ரத்தவகை என்ன என்பதே தெரியாமல் அதற்கு ஏற்ற உணவை எப்படி சாப்பிடமுடியும்? தற்போது மெடிக்கல் சோதனைகள் பரவலான காலத்தில் மட்டுமே இது சாத்தியம். கற்காலம் முதல் தற்போது வரை எல்லாரும் தாம் இருக்கும் பகுதிகளில் என்ன கிடைக்கிறதோ அதை உண்டு வாழ்ந்தவர்கள் தான். இரத்தவகை ஏ எல்லாரும் சைவம் என சொல்வதற்கு என்ன அடிப்படை இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. சைவம் என்பது கலாசாரம், மரபு சார்ந்த விசயம். பார்சுவநாதரும், மகாவீரரும் சமண மதத்தை பரப்புமுன் உலகில் சைவம் என யாரும் இருந்தார்களா என்பது கேள்விக்குரியது. அதனால் 30,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் சைவர்கள் இருந்தார்கள் என்பது முழுக்க பிழையானது.

 

அறிவியல் ரீதியில் எந்த நிருபணமும் இந்த இரத்தவகை டயட்டுக்கு கிடையாது. நூலை படிக்கவில்லை என்பதால் இதற்குமேல் அது குறித்து எழுதுவது சரியாக இருக்காது. ஆனால் அந்த வாச்கர் கடிதத்தை படித்தவரை தோன்றியது இதுவே.

 

மற்றபடி உலகில் பலவகை டயட்டுகள் உள்ளன. விருப்பமான டயட்டை ஒருவர் தேர்ந்தெடுத்து உண்ணலாம். சும்மா எந்த டயட்டையும் பின்பற்றாமல் கண்டதையும் உண்பதை விட ஏதோ ஒரு டயட்டை பின்பற்றுவது சிறந்தது. எல்லா டயட்டுகளும் அடிப்படையில் குப்பை உணவுகள், மது, சிகரெட்டை ஒதுக்குபவை தான் என்பதால் அனைத்து டயட்டுகளும் ஒரு அளவு பலன் அளிக்கவே செய்கின்றன

 

பேலியோவை நீண்டகாலம் தொடர்வது சிரமம் என நீங்கள் எழுதியதையும் படித்தேன். பேலியோவை ஆயுள் முழுக்க தொடரமுடியவில்லை எனினும் சுத்திகரிக்கபட்ட எண்ணெய்கள், கோதுமை, சோயா, குப்பை உணவுகளை தவிர்ப்பது நலம். தமிழக உணவில் மாவுச்சத்து மிக அதிகம். நாளுக்கு மும்முறை அரிசி, கோதுமை என எடுப்பது மிக தீங்கானது. வைத்தால் குடுமி , அடித்தால் மொட்டை கதையாக பேலியோ இருக்கமுடியவில்லை என சொல்லி மறுபடி மூன்றுவேளை தானிய உணவில் யாரும் போய்விழுவது எனக்கு சரியாக தெரியவில்லை. இரு வேளை உணவுகள் தானியம் தவிர்த்த உணவுகளாகவும், ஒரு வேளை உணவில் கஞ்சி வடித்த அரிசியும் எடுத்தால் நல்லது. அந்த இருவேளை உணவுகளும் முட்டை, பால், இறைச்சி என இருப்பதும் ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் இருப்பதும் நல்லது.

 

சீனர்களை எடுத்துக்கொன்டால் நம்மைபோல அரிசி எடுத்தாலும் தட்டு நிறைய அரிசி எடுப்பதில்லை. கொஞ்சமாக அரிசி, நிறைய இறைச்சி, காய்கறி என எடுக்கிறார்கள். அவர்கள் உணவில் சர்க்கரை சுத்தமாக இருக்காது. கோதுமை கிடையாது. அதாவது அவர்களின் பாரம்பரிய உணவில்…தற்போது சீனாவிலும் தெருவுக்கு தெரு மெக்டானலட்ஸும், கோக்கும் வந்துவிட்டன.

 

அதுபோல பேலன்ஸ்டாக உண்பதும், தானிய உணவை ஒரு வேளையாக சுருக்குவதும் நம் மக்களுக்கும் நல்லது.

 

அன்புடன்

நியாண்டர் செல்வன்

 

 

அன்புள்ள நியாண்டர்செல்வன்

 

உண்மைதான். நான் சிங்கப்பூர் பல்கலை உணவகத்தில் மாணவர் உணவருந்துவதைப்பார்ப்பேன். ஓர் ஓரத்தில் இந்திய உணவகம். அங்கே குவியல்குவியலாகச் சோற்று. மற்ற அத்தனை கடைகளிலும் கிண்ணத்தில்தான் சோறு

 

தானிய உனவு மிகுதியாக இருப்பதே நம் பிரச்சினை. மாவுகுறைக்கப்பட்ட உணவுமுறையே எல்லாவகையிலும் நல்லது, விரும்பியதை ச்சாப்பிடலாம், மிகக்குறைவாக என்பதுதான் சிறந்தது என ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறேன்

 

ஜெ

பேலியோ கடிதங்கள்

 

பேலியோ -ஓர் அனுபவக் கடிதம்

 

பேலியோ