அலைகளில் அமைவது

போகன்
போகன்

பாவியல்பு [lyricism] புதுக்கவிதைகளில் கைகூடுவது அரிது. ஏனென்றால், அந்த வடிவமே பாவியல்பை புறக்கணிக்கும்பொருட்டு எஸ்ரா பவுண்ட் போன்ற முன்னோரால் உருவாக்கப்பட்டது. பாவின் வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, இசைத்தன்மையை நிராகரித்துவிடவேண்டும் என்பது அவர்களின் வழிகாட்டல்

ஆனால் விரைவிலேயே பாவியல்பு புதுக்கவிதைக்குள் திரும்பி வந்தது. புதுக்கவிதைக்கு முன்பு அது யாப்பின் வரையறுக்கப்பட்ட ஓசையை கொண்டிருந்தது. அல்லது இசைப்பாடலின் பண் சூடியிருந்தது. அவை இரண்டையும் துறந்து ஒலியமைப்பினாலும், உள்ளுறைந்த உணர்வொருமையாலும் பாவியல்பை அடைந்தது புதுக்கவிதை.

தமிழில் பிரமிள், அபி,தேவதேவன், சு.வில்வரத்தினம் போன்றவர்களின் கவிதைகளை   சிறந்த உதாரணமாகச் சுட்டலாம். அவ்வரிசையில் வரும் கவிதைகளில் ஒன்று இது. பாவியல்பு கொண்ட கவிதைகளுக்கு பேசுபொருள் பெரும்பாலும் ஒன்றே. விடுதலை அல்லது பிறிதொன்றில் முயங்கல். தனிமை அல்லது கூடலின் களிப்பு.பெரும்பாலும் அடிப்படை உணர்வுகள்.

*

கதவு திறக்காத
வெளிக்குள் இருந்த
சிற்பங்கள்
கனவில் வந்து
முறுமுறுக்கின்றன

“நீ இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம்
ஒரு அரை மணி நேரம்…
நாங்கள் காத்திருந்தோம்.
ஆயிரம் வருடங்கள்
ஆயிரம் யுகங்கள்.”

நான் சொன்னேன்
மரங்கள் காத்திருக்கின்றன
கொடிகள் ஏறிச் செல்லுகின்றன
இரண்டின் காலமும் வேறு .

எனக்கு மண்டபங்கள் போதும்
திருமுற்றங்கள் போதும்.

தூரப்பேருந்திலிருந்து
வயல்வெளிகள் மீது மிதக்கும்
கோபுரங்கள் போதும்.

யாரோ கைதட்டிக் கலைத்தாற்போல்
சிதறிச்செல்லும் கிளிகள்…

பல்லாயிரமாண்டுகள் சிறைப்பட்டிருக்கும் அசைவிலாச்  சிற்பங்களுக்கும் கலைந்து வானிலேறும், இன்றிருந்து நாளை மறையும் கிளிகளுக்குமான தொலைவு. மரங்களுக்கும் கொடிகளுக்குமான இடைவெளி. நிலைகொண்டு உயர்ந்த கோபுரங்களுக்கும் வயல்வெளியில் மிதக்கும் அவற்றின் நிழல்களுக்குமான வேறுபாடு.

இயல்பாக எண்ணம் ஓடி தேவதேவனின் கவிதை வரி ஒன்றைச் சென்றடைந்தது.

அந்திவரை வாழப்போகும்
பூவின் மடியில்
அந்த காலைப்பொழுதிலேயே
மடிந்துவிடப்போகும்
பனித்துளிதான்
எத்தனை அழகு

பாவியல்பு கொண்ட கவிதைகளின் அனுபவம் இது. அதன் உணர்வமைதி , மொழியின் இசையாலேயே ஒர் உளநிலை உருவாகி வேறுசில கவிதைகளை நினைவில் கொண்டுவரும். விந்தை என்னவென்றால் முதற் கவிதைக்கும் அவற்றுக்கும் தொடர்பே இருக்காது. அல்லது அறியாத ஒரு தொடர்பு நமக்குள் இருக்கும். கண்டுபிடிப்பதுவரை கவிதையனுபவம் தித்திப்பாக நீடிக்கும்

***

முந்தைய கட்டுரைகைதி-நாடகநிகழ்வு
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67