காடன் விளி- வாசிப்பு

il_340x270.1274577788_7wki

 

காடன்விளி [சிறுகதை]

அன்புள்ள எழுத்தாளர் ஜெமோ அவர்களுக்கு,

 

 

உங்கள் “காடன்விளி” சிறுகதை வாசித்தேன்.

 

 

காடன்  எல்லாவற்றையும்  பார்க்கிறது. ஒரு சரிக்கு  ஒரு தவறை  கழித்துக் கொள்கிறது.   தவறு அதிகமானால்,  கிராமம் அழியும்.  ஏழாவது முறையாக  அழிந்தால்   மீட்சி இல்லை.  ஆக, ஒரு  அழிவுக்கு பின் மீண்டும்  அது  புனரமைக்கப் பட்டிருக்கிறது.   இறுதியில்  அந்தபுணரமைப்புக்கும்  ஒரு  எல்லை இருக்கிறது என்பது  கதையில் விதியாக பாவிக்கப்படுகிறது.

 

 

“காடன்” என்பது சரி, தவறு என்கிற இருமையை  பிரிக்கவென  உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது.  ஆனால் என்ன  நடந்தது  என்று எதுவும்காட்சிகள்  இல்லை. ஆக, சரி , தவறை  தத்துவார்த்த ரீதியில் சிறுகதை  பாவிப்பதாக  கொள்ளலாம்.   காடன் எருமை தோற்றம். எ ருமை எமனின் வாகனம்.  அந்த நள்ளிரவில்,   அவன் எருமையின்  முயக்கத்தை பார்க்கிறான்.  யார் மீது  என்று  கதையில்   இல்லை.  எருமையின்முயக்கம்  என்பது மானிட  வாழ்வில்  அர்த்தமற்று  எதிலோ  முட்டிக்கொள்வதின்  வாதை என உருவகம் கொள்ளலாம்.

 

 

கிராமம் அழியவில்லை.  மறு நாள் அந்த பெண்  அங்கில்லை. பாட்டி மலை  ஏறுகிறாள்.  இவைகள்  இந்த உருவகங்களுக்கு மேற்சொன்னவைகள் தவிர  வேறு  எவ்வித  அர்த்தமும் இல்லை என்பதை குறிக்க இருக்கலாம்.

 

 

மொத்தத்தில் இது பூடகமாக  சரி தவறு  என்கிற  பாகுபாடுகள்  மானுட  வாழ்வில் (அல்லது வேறு எதையோ)  எவ்வகை  வாதைகளை உருவாக்கி  அர்த்தமற்றதாக்குகிறது   என்பதுதான்.

 

 

இது என் புரிதல். என்னுடைய  புரிதல் சரிதானா?  நீங்கள் இந்தக்  கதை மூலம்  வேறு  எதையேனும் சொல்ல  வந்தீர்களா?  விளக்கவும்.

 

 

– ராம்பிரசாத்

 

 

அன்புள்ள ராம்பிரசாத்

 

ஒரு கதைக்கு என்ன வாசிப்பு சாத்தியம், சாத்தியமல்ல என்று எவரும் சொல்லமுடியாது. அதில் ஒன்றுமே சொல்லமுடியாதவர் அந்த ஆசிரியரே.

படைப்பை நுணுகி வாசித்து இயல்வதான சிறந்த வாசிப்பை அடைய முயலும் இலக்கியவிமர்சன மரபு அமெரிக்கத் திறனாய்வு  அல்லது புதுத்திறனாய்வு எனப்படுகிறது. New Criticism] திறனாய்வாளரான க்ளிந்த் புரூக்ஸ் அதன் முதன்மை ஆளுமை.

அந்த வகை வாசிப்பு முறைமையை ஒட்டி இன்றைய தமிழ்ச்சூழலுக்காகச் சிலசில விதிகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

அ. குறைந்த அளவு இயலும் வாசிப்பல்ல, மிகையெல்லை வரை செல்லும் வாசிப்பே கதைகளுக்கு அளிக்கப்படவேண்டும். எத்தனை சென்றாலும் அது தவறு அல்ல. கதை விரியும் பொருட்டே எழுதப்பட்டுள்ளது

 

ஆ. ஆனால் அந்த வாசிப்பு கதையிலிருந்து மிகவும் விலகிச்செல்லக்கூடாது. நம் கற்பனைக்கு அடிப்படையான சில உறுத்துதல்கள் அக்கதையில் தெளிவாக இருந்தாகவேண்டும். சொற்களாக, படிமங்களாக, உட்குறிப்புகளாக.

 

ஆ. அந்த வாசிப்பை எண்ணி, விவாதித்து விரிவு செய்யக்கூடாது. அது அக்கணத்தில் தொடங்கும் கற்பனையால் நிகழவேண்டும். இயல்பாக வளரவேண்டும்.

 

இ. முதற்கட்ட இயல்பான பொருட்கோடலுக்குப் பின்னர் வேறு பாதைகள் உண்டா என நோக்கவேண்டும். ஏனென்றால் முதற்கட்டப் பொருட்கோடல் பலதருணங்களில் வழக்கமானதாக இருந்துவிடும். சூழலில் உள்ள பொதுக்கருத்துக்களைச் சார்ந்ததாக அமைந்துவிடும்.

 

பொருட்கோடலின் சில விதிகள் என இவற்றைச் சொல்லலாம்

  1. கதையில் உள்ள குறிப்புகள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இல்லாத குறிப்புகள் உருவாக்கிக் கொள்ளப்படலாகாது – உரணமாக நீங்கள் காடன் விளி என்ற தலைப்பில் உள்ள அழைப்பு என்னும் சொல்லைக் கருத்திலேயே கொள்ளவில்லை.
  2. கதைக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் குறியீட்டுப் பரப்புக்குள்ளேயே, உணர்வுநிலைகளுக்குள்ளேயே சொற்களும் குறியீடுகளும் பொருள்கொள்ளப்படவேண்டும். வெளியே பொதுச்சூழலிலோ தனி அறிவுச்சூழலிலோ உள்ள பொருட்கள் முதலிலேயே உள்ளே கொண்டுவரப்படலாகாது
  • அவ்வாறு கதையின் குறியீட்டுப்பரப்பும் உணர்வுப்பரப்பும் சார்ந்து பொருள்கொள்ளப்பட்டபின்னர் அதை மேலும் விரிவாக்கம் செய்யவே வெளியே உள்ள அறிவுப்புலம் நோக்கிச் செல்லவேண்டும்
  • வாசிப்பு என்பது படைப்பை நோக்கி வாசகன் செல்வதே ஒழிய படைப்பை வாசகனை நோக்கி இழுத்துக்கொள்வது அல்ல. பிரதி வாசகனால் பொருள்கொள்ளப்படுகிறதென்றாலும் புறவயமானதுதான்

உங்கள் வாசிப்பு எத்தகையது என்பதை இவற்றின் அடிப்படையில் நீங்கள் மதிப்பிட்டுக்கொள்ள முடியும். அதுவே சரியானது. அதை எழுத்தாளன் சான்றளித்து ஏற்கவேண்டுமென்பதில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைகனேரி குகைகள்
அடுத்த கட்டுரைதை அறுவடை