அடிப்படைவாதம் பற்றி…

islam

தேசியகீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும்

புர்க்காவும் சவூதி அரேபியாவும்

அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு

நிசார் அகமது அவர்களின் கேள்வி அதற்கு தாங்கள் அளித்திருந்த பதில் இன்று காலை வாசித்துக்கொண்டிருந்த போது எழுதத் தோன்றியது. வேண்டுமென்றே தவிர்த்தேன்.

இன்று மாலை இங்கு சென்னையில் “சல்மா” ஆவணப்பட திரையிடப்பட்டு ஒரு உரையாடலுக்கு ஒழுங்கு செய்திருந்தனர். படத்தில் ஒரு காட்சி. நடுத்தர வயதைக் கடந்த ஒரு தாய். விருப்பப்படி கடைத்தெருவுக்கு செல்ல, சினிமா, பீச் என்று போக ஆசைப்படும் நடுத்தர வர்க்கம். அவரின் மகனுக்கு அதிகபட்சம் இருபது வயதிருக்கும். தடை செய்கிறார். சரி மகனின் விருப்பத்துக்கு மதிப்பளிப்போம் என்று அந்த தாய் விட்டுக்கொடுக்கிறார். இது சமூகத்தில், நம் குடும்பங்களில் உள்ள சாதாரண விட்டுகொடுத்தல் அல்ல. பாரதூரமான வேறுபாடு உள்ளது. அந்த மகன் தன் தாயை “புர்கா” போடச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார். எந்த சமூகத்திலும் நவீன மனம் என்பது இளைஞர்களிடம், இளைஞிகளிடம் உருவாவதே வாடிக்கை. இங்கு (முஸ்லிம்களிடம்) எல்லாமே தலைகீழாக உள்ளது. காலச்சக்கரத்தை பின்னோக்கி நகர்த்தும் பிரயத்தனம் எவ்வளவு பெரிய ஒடுக்குமுறை. நம் ஆச்சிமாக்களெல்லாம் சாதாரணமாக தாவணி, முந்தானையை தலைமறைப்பாக கடந்துசெல்ல எட்டு வயது (பெண்) குழந்தைக்கு கறுப்பு புர்க்கா அணியவைப்பது ‘அதிகாரம்” அன்றி வேறென்ன? அதை நியாயப்படுத்தும் இளைஞர்களின் குரல் அபாயம் அல்லவா?

தங்களுக்கு எழுதக்கூடாதென்றே எண்ணியிருந்தேன்

இந்த மூர்க்கம் வழியாக இவர்கள் தேக்கநிலையையே வெளிப்படுத்துகிறார்கள். பிறவற்றில் காலம் இவர்களை மாற்றியதுபோல இதிலும் மாற்றுமென எதிர்பார்க்கலாம். இதையே இஸ்லாமிய, கிறித்தவ ஆசாரவாதிகளுக்கும் சொல்லவேண்டியிருக்கிறது

– தேசியகீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் –

என்று தாங்கள் குறிப்பிட்டிருந்ததைப் போல இது அவ்வளவு எளிதாக விட்டுகொடுத்ததில்லை என்பது வரலாறு. எடுத்துக்காட்டாக ராஜா ராம் மோகன் ராய் (1772 – 1833) பிரம்ம சமாஜத்தை 1828-இல் நிறுவுகிறார். Bengal Sati Regulation, 1829 என்று உடன்கட்டை ஏறும் பழக்கம் சட்டரீதியாக தடை செய்யப்படுகிறது. இத்தனைக்கும் அப்பொழுது இங்கிருந்தது ஆங்கிலேய அரசுகூட கிடையாது. ஆண்டவர்கள் கிழக்கிந்திய கம்பெனி. இன்றிலிருந்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே உடன்கட்டை மரபுக்கு கொள்ளி வைத்தாயிற்று. Child Marriage Restraint Act 1929 – சாரதா சட்டம் எனப்படும் பால்ய விவாக தடை சட்டம் வந்து ஒரு நூற்றாண்டாகிறது. Madras Devadasis (Prevention of Dedication) Act நமக்கு விடுதலை கிடைத்த இரண்டு மாதங்களுக்குள்ளாக தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தாயிற்று.

இவை இந்துக்களிடம் பழங்கதையாக, வெறுங்கனவாக மட்டுமே எஞ்சியிருப்பது. ஆனால் முஸ்லிம்களின் விஷயம் அப்படியல்ல. ”முத்தலாக்” என்பது முஸ்லிம்களில் ஹன்பலி, ஷியா, அஹ்லெ ஹதீஸ், சலஃபி என குறுங்குழுக்கள் பலரிடம் இல்லை. ஆனால் தங்களின் மத நம்பிக்கையின்படி ”முத்தலாக் தடை” பிரிவை ஆதரிக்கவேண்டிய இவர்களே பழமைவாத கும்பலுடன் கூட்டுச்சேர்ந்து கோஷம் போடுவது அராஜகம். இங்கு உள்ளுக்குள் சீர்திருத்தம் என்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை.

# வஹாபியம் சவூதிஅரேபியாவில் 1800கள் முதல் உள்ளது. அது ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம். ஏறத்தாழ அதேகாலகட்டத்தில் உலகின் அனைத்து மதங்களிலுமே ‘தூய்மைவாத’ இயக்கங்கள் ஆரம்பித்தன. #- புர்க்காவும் சவூதி அரேபியாவும் –

 தங்களின் மேற்கோளில் அரை உண்மை உள்ளது, ஆம் தூய்மைவாத இயக்கங்கள் அனைத்து மதங்களிலுமே வேண்டுமானால் ஒரே காலகட்டத்தில் உருவாகி வந்திருக்கலாம். ஆனால் இந்து, கிறிஸ்துவ தூய்மைவாத இயக்கங்கள் வெகுமக்கள் முன்னுக்கு உந்தித் தள்ளின. முஸ்லிம் தூய்மைவாத இயக்கங்களோ ஏழாம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்ல பார்க்கின்றன. இந்த “அரசியல் இஸ்லாம்” குறித்த உரையாடல் அகவயமாகவும், புறவயமாகவும் நடக்காவிட்டால் ஜனநாயகம், மானுட அறத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள எதார்த்துக்கு நாம் கொடுத்துவரும் விலை தொடர்ந்து அளிக்க வேண்டிவரும்

இவர்களிடம் பேசவே முடியாதோ என்கிற ஆயாசமும், அயற்சியுமே தங்களுக்கு எழுதத் தோன்றியது. “பம்பாய்” படத்தில் “அலி”யிடம் அரவிந்தசாமியின் குழந்தை கேட்கும், நீங்கள் நல்லவரா? கெட்டவரா? நானும் அதே இடத்தில் நிற்கிறேன். முஸ்லிம்களிடம் இதைக்குறித்து பேசவே முடியவில்லை.

அந்த ஆவணப்பட திரையிட்டது Praxis Institute of Participatory Practices, உரையாடலின்போது என் கருத்தை முன்வைத்தபோது அங்கு கூடியிருந்த ஒருவர் உங்களுக்கு knowledge பத்தாது என்று உருது வாசனையோடு ஆங்கிலத்தில் இடைமறித்தார். நூற்றுக்கணக்கான பக்கங்களை தினமும் வாசிக்கும் எனக்கு, அதுவும் கடந்த முப்பதாண்டுகளாக செய்துவரும் எனக்கு “அறிவு(?) இல்லை என்று ஒருவர் பலர் முன்னிலையில் மடக்குகிறார், அதை இடது, முற்போக்கு என பலரும் வாயடைத்து கேட்ட அவலம் ஒருபுறம். கதிமோட்சம் இல்லையோ என இந்த நள்ளிரவில் தங்களுக்கு தட்டச்சி மின்னஞ்சல்

செய்துவிட்டேன். இனி யாராவது ஏன் இதை “இந்துத்வா” ஜெயமோகனுக்கு எழுதினாய் என்று வந்தால் யப்பா! ஜமாத்துலே பேசமுடியலே, பொது அரங்கில் பேச முடியலே, எங்கியாவது பேசித்தானே ஆகனும் – அப்படின்னு பதில் சொல்லனும்.

கொள்ளு நதீம்

 ***

அன்புள்ள கொள்ளு நதீம்,

ஆரம்பத்தில் எனக்கு இந்துமதத்தின் நெகிழ்வுத்தன்மை, ஏற்புத்தன்மை பற்றிய ஒரு பொதுவான எண்ணம் இருந்தது. ஆனால் இன்றைய போக்குகளைப் பார்க்கையில் அவ்வெண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.

எல்லா மதங்களிலும் ஜனநாயக யுகம் தொடங்கியதும் உருவான ‘சீர்திருத்த’ இயக்கங்கள் பெரும்பாலும் ஒரே இயல்புகளைக் கொண்டிருந்தன.

அ. அவை மேலோட்டமான அறிவியல்நோக்கை வலியுறுத்தி ‘மூடம்பிக்கை’களைச்  சீர்திருத்த முயன்றன.ஆகவே இனக்குழு பேதங்ங்களை, தொன்மையான சடங்குகளை மறுத்தன.தொன்மங்களை குறியீட்டுரீதியாக விளக்கின. அவற்றின் ‘முற்போக்கு’ அம்சம் இது

ஆ. அவை தொன்மையான ஓர் அடையாளத்தின் அடிப்படையில் மத எல்லைகளை வரையறைசெய்து தான் – பிறன் என்று பிரித்துக்கொண்டன.

இ. மதம் அழியக்கூடாது, அதைப் பேணவேண்டும் என முடிவுசெய்தன. மதத்தை ஏற்று ஒழுகுவதை விட அதை பாதுகாக்கப் போராடுவதே முக்கியமானது என்ற எண்ணத்தை உருவாக்கின

ஈ. அந்த எண்ணங்களின் அடிப்படையில் மதத்தை மறுவரையறைசெய்ய, மறுகட்டமைப்பு செய்ய முயன்றன. நூல்களை அச்சில்கொண்டுவந்து பரவலாக்குதல், மதநிலைகளை மீட்டு கட்டி எழுப்புதல் போன்றவற்றை முன்னெடுத்தன

உ. இவற்றின் விளைவாக மதத்தை ஓர் அரசியல் அடையாளமாக மாற்றிக்கொண்டன. அதிகாரத்தை நோக்கிச் சென்றன.

*

இவ்வைந்து இயல்புகளும் எல்லா மதங்களுக்கும் பொதுவாகவே உள்ளன. இலங்கையில் அநகாரிக தம்மபால போன்றவர்கள் உருவாக்கிய ‘செயல்படும் பௌத்தம்’ எவ்வகையிலும் வகாபியத்திற்கு மாறுபட்டது அல்ல. இங்கே உருவான இந்துத்துவமும் அந்த இயல்புகளைக் கொண்டுள்ளது. பௌத்தத்தையும் இனவாதம் நிறைந்த செயல்படும் பௌத்தத்தையும் பிரித்தே புரிந்துகொள்ளவேண்டும்.  இந்துத்துவத்தையும் இந்துமதத்தையும் அவ்வாறே.

இந்துமதத்தின் இயல்பான தொகுப்புத்தன்மை, உள்ளிழுக்கும் தன்மை, நெகிழ்வுத்தன்மை ஆகியவை அதை கட்டுப்படுத்துகின்றன என நினைத்தேன். இன்று தோன்றுகிறது, அதிகாரம் கையகப்பட்டதுமே அதன்குரலும் பிறவற்றைப்போலவே ஒலிக்கிறது என. அதே வெறி, அதே கசப்புகள். பன்மையையும் விரிவையும் ஒடுக்கும் மையத்தின் மூர்க்கம். அதனுடன் எதையுமே இன்று பேசமுடியாது, எதைப்பேசினாலும் பேசுபவர் எதிரியின் அடியாளோ ஒற்றனோ தாசனோ ஆகிவிடுவார்.

இலங்கையில் பௌத்தமும் சவூதியரேபியாவில் வஹாபியமும் அந்தக்குரலில் ஒலிப்பது அவற்றிடம் அதிகாரம் இருப்பதனால்தான். இந்தியாவில் அது தொடங்கியிருக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைதுளிச்சொட்டு சாஸ்தா -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமொழிகள் – ஒரு கேள்வி