ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா

t1
முதல்குகை

சிலநாட்களுக்கு முன்னர் நண்பர் கே.பி.வினோத் நாகர்கோயில் வந்திருந்தார்.கணியாகுளம் பாறையடி வரை மாலைநடை சென்றிருந்தோம். கடந்துசென்ற பைக் ஒன்று நின்றது. அதிலிருந்து இறங்கிய இருவர் எங்களைத் தெரியும் என்றனர். பேசிக்கொண்டிருந்தோம். ஒருவர் தன்னை குமார் என்றும் வாசகர் என்றும் சொன்னார். புகைப்படநிபுணர், தொழில் அதுவே. அவர்கள் அருகே உள்ள வேளிமலை உச்சியிலுள்ள  ஆனைக்கல் துளிச்சொட்டு  சாஸ்தாகோயில் செல்ல வழிதேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்

பின்னர் வீட்டுக்குவந்து மின்னஞ்சலைப் பார்த்தபோதுதான் அவர் என் நெடுநாள் வாசகரான குமார் முல்லைக்கல் என தெரிந்தது. அந்த பின்னொட்டு இல்லாமல் மனதில் பெயர் எழவில்லை. குமார் துளிச்சொட்டு சாஸ்தாகோயில் செல்வதற்கான வழியைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், மேலே ஏறிக்கொண்டிருப்பதாகவும் எழுதியிருந்தார். அடுத்தமுறை மலையேறும்போது நானும் வருவதாக பதில் எழுதினேன்

t2
கீழிருந்து பார்க்கையில் ஆனைக்கல்

நான் நெடுநாட்களாக அங்கே செல்ல விரும்பிக்கொண்டிருப்பவன். இங்கே குடிவந்து 17 ஆண்டுகளாகின்றன [2000 ஜனவரி]என் இல்லத்திற்கு அருகே கணியாகுளத்திற்கு அப்பால் இருக்கிறது பாறையடி. அது ஆனைக்கல் கொடுமுடியின் அடிவாரம். வேளிமலையின் ஒரு சிகரம் ஆனைக்கல் எனப்படுகிறது

நான் குடிவந்த அன்றே மலைமேல் அப்படி ஒரு கோயில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் செல்ல வழி இல்லை. இடையர்களின் வழிகாட்டுதலுடன் புதர் வழியாகச் செல்லவேண்டும்.  மேலும் அன்றெல்லாம் பாறையடி மலைப்பகுதி குற்றச்செயல்கள் மிகுந்தது. நான் வந்தபின்னரே மூன்றுகொலைகள் நிகழ்ந்துவிட்டன. மூன்றிலும் ரௌடிகள் கொல்லப்பட்டனர். எவரும் தண்டிக்கப்படவில்லை.அதோடு அப்பகுதியில் மாபெரும் கல்குவாரிகள் சில வந்தன. எப்போதும் கல் உடையும் முழக்கம், லாரி இரைச்சல்.

அங்கே பலவகையான சட்டவிரோதச்செயல்கள் . ஆகவேஅப்பகுதியில் அயலார் எவரும் செல்வதை அவர்கள் விரும்புவதில்லை. சென்ற இரண்டு ஆண்டுகளாக கல் அகழ்வது முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் கல் அகழும் தொழிலின் விளைவாக அப்பகுதியில் ஊர்கள் உருவாயின. மூன்று பொறியியல்கல்லூரிகள் வந்ததும் அது ஒரு  நகரக்கிளையாகவே மாறிவிட்டிருக்கிறது.

நானும் அருண்மொழியும் பாறையடி வரை நடை செல்வோம். அதற்கே சாரதாநகர்வாசிகள் பதறுவார்கள். இன்றுகூட சாரதாநகரில் இருந்து ரயில் பாதைக்கு அப்பால் நடைசெல்லும் ஒரே பெண் அருண்மொழிதான் அஜியுடன் சிலமுறை அருகே உள்ள மலைகள் வரை சென்றிருக்கிறேன், அப்பால் செல்ல வழி தெரியவில்லை  ஒரு நண்பருடன் தோட்டியோடு வழியாக கொஞ்சம் மலையேறியிருக்கிறேன் – அந்தச் சித்திரம் ஒரு சிறுகதையில் வரும். இமையோன்.

t3
தூண்பாறை, மேலிருந்து. புகைப்படம் குமார் முல்லக்கல்

வேளிமலைப்பகுதி உண்மையில் பல ஆயிரம் ஆண்டுகளாக மானுடவாழ்க்கை செறிந்திருந்து பின்னர் கைவிடப்பட்டது. வேளிர்மலை ஆய்வேளிரின் ஆட்சியில் இருந்தது. ஆய் அண்டிரனின் கல்வெட்டுகள் இங்கே கிடைத்துள்ளன. தொல்பழங்காலத்தில் இங்கே மாடுகளை மேய்த்துவாழும் பெரிய சமூகங்கள் இருந்தன. இவர்களுக்கு இந்த மலை நன்றாகத்தெரியும் என்பதனால் திருவிதாங்கூர் மன்னர்கள் இவர்களுக்குப் பயிற்சி அளித்து போர்வீரர்களாக்கி, காவல்படை ஒன்றை அளித்தனர். அவர்களின் குழுக்கள் மலைகளைச்சூழ்ந்த ஊர்களாக மாறின.

வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் மலைகளில் மக்கள் அதிகமாக வாழ்ந்திருக்கிறார்கள். அரசுகளும் மலைசார்ந்து அமைந்திருக்கின்றன. தமிழில் குன்றுகளில் அமைந்த அரசுகளைப்பற்றி சங்ககாலம் முதல் குறிப்புகள் உள்ளன. பறம்புமலை, கொல்லிமலை, எழிமலை என பல உதாரணங்கள். மலைகள் எதிரிகளிடமிருந்து தப்புவதற்கான பாதுகாப்பு அளிக்கும் நிலப்பகுதிகளாக இருந்திருக்கலாம். ஆய்வேளிர் சங்ககாலத்தின்  மலைப்பண்பாட்டைச் சேர்ந்தவர்கள்

அடுத்தகாலகட்டத்தில் நிலையான அரசுகளும், பாதுகாப்பளிக்க படைகளும் உருவானதும் சமவெளி நாகரீகம் ஓங்கியது. முல்லைத்திணை பண்பாட்டின் விளைநிலமாகியது. மலைகளிலிருந்து நாகரீங்கள் இறங்கி பரவின. மலைகள் மெல்லமெல்ல கைவிடப்பட்டன. வேளிர்மலையில் அக்காலப் பண்பாட்டின் எச்சங்கள் பல அறியப்படாமல் உள்ளன என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இன்றும் எஞ்சுவது பலவகையான வழித்தடங்கள். வேளிமலை வழியாக பத்மநாபபுரத்தில் இருந்து பணகுடிக்கும், திருக்கணங்குடிக்கும்  தொன்மையான வழிகள் உள்ளன நடுவே அவை கைவிடப்பட்டு புகையிலைக்கு திருவிதாங்கூர் அரசு வரி போட்டபோது மீண்டும் உயிர்கொண்டு கள்ளக்கடத்தலுக்கான பாதைகளாக மாறின . அதைத்தடுக்க புகையிலைக்கோட்டை திருவிதாங்கூர் அரசால் கட்டப்பட்டது

t4
புகைப்படம் குமார் முல்லக்கல்

இரண்டுநாட்களிலேயே குமார் முல்லக்கல் கூப்பிட்டார், வழியை கண்டுபிடித்துவிட்டேன், மேலே செல்லலாமா என்றார். ஏற்கனவே இருந்த ஒற்றையடித்தடம் ஓக்கி புயலில் மரமும் பாறையும் விழுந்து மூடிவிட்டது. இன்னொரு பாதை உள்ளது, அதை கண்டுபிடித்துவிட்டோம் என்றார். உடனே ஒரு மலையேற்றம் ஏற்பாடுசெய்யலாம் என்றார்.

நேற்று 16-22018 அன்று நானும் அஜிதனும் காலை ஐந்தரை மணிக்குப் பாறையடிக்குச் சென்றோம்.  குமார் முல்லக்கல் ஆறுமணிக்கு  அஸீம் என்னும் அவருடைய நண்பருடன் வந்தார். இன்னொரு வாசகரும் நண்பருமான பாலா இணைந்துகொண்டார். மறைந்த சிங்கப்பூர் சந்திரசேகரின் நண்பர். விடியற்காலைக் குளிர்காற்று. ஏராளமான சர்க்கரை நோயாளிகள் காலைநடை சென்றுகொண்டிருந்தனர்.

ஆறுமணிக்கு கிளம்பி மெல்ல ஏறி ஒன்பதரை மணிக்கு மேலே சென்று சேர்ந்தோம் வழி முழுக்க காடு பட்டாநிலமாக மாறியிருப்பதனால் பல இடங்களில் தனியார்நிலம் வழியாகச் சுற்றித்தான் செல்லவேண்டும். முள்செடிகளும் குற்றிமரங்களும் அரம்கொண்ட இலைகளுடன் இஞ்சிப்புல்லும் செறிந்த பாறை நிலம். நோக்கு கூர்ந்து செல்லாவிட்டால் வழி தவறிவிடும். கூழாங்கற்கள் கால்களை இடறின.  பல இடங்களில் பாறைகளில் அமர்ந்து ஓய்வெடுத்து மெல்ல சென்றமையால் அலுப்பு தெரியவில்லை.

மேலே முதல்குகை ஒழிந்துகிடக்கிறது.பல ஆயிரமாண்டுகளாக இடையர்கள் தங்குமிடம் அது. இருபதுபேர் வசதியாக படுக்குமளவுக்கு இடமிருந்தது. அடுப்புகள் கூட்டப்பட்டிருந்தன. உப்பு வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து மேலும் ஏறிச்சென்றால் துளிச்சொட்டு சாஸ்தா ஆலயம்.

இயற்கையான குகைக்கு சின்ன சுவர் அமைத்து கோயிலாக்கியிருக்கிறார்கள். உள்ளே பாறையிலிருந்து ஊறி கனிந்து நீர்த்துளி சொட்டுகிறது. அங்கே சாஸ்தாசிலை நிறுவப்பட்டுள்ளது. அரைநிமிடத்திற்கு ஒரு சொட்டு என சாஸ்தாமேல் நீர் சொட்டிக்கொண்டே இருக்கும். அங்கே இருந்த சுண்ணாம்புக்கல் அந்நீர் வழிவால் பல்லாயிரம் ஆண்டுகளாகக்  கரைக்கப்பட்டு அந்தக்குகை உருவாகியிருக்கிறது

t5

புகைப்படம் குமார் முல்லக்கல்

மிகப்பழமையான கோயில். அவ்வப்போது கைவிடப்பட்டு மறுமடியும் கண்டுபிடிக்கப்படுகிறது.நெடுங்காலம் முன்பு அங்கே ஒரு கல் மட்டும்தான் இருந்திருக்கிறது. அதைத்தான் வழிபாடு செய்திருக்கிறார்கள். அது எந்த தெய்வம் என்று தெரியவில்லை.

தோட்டிகோடு மௌனகுரு சுவாமிகள் இருந்தபோது அந்த ஆசிரமத்தினரின் பராமரிப்பில் இருந்தது இக்குகை.  எழுப்து ஆண்டுகளுக்கு முன்பு அங்கே  சாஸ்தாசிலையை பிரதிஷ்டை செய்தது அவர்தான்.  சுவாமிகளின் சீடர் ஒருவர் நெடுநாள் அங்கே தங்கியிருந்திருக்கிறார். பின்னர் மீண்டும் பல ஆண்டுகள் எவருக்கும் தெரியாததாக இருந்தது.

முப்பதாண்டுகளுக்கு முன்னர் வணக்கத்திற்குரிய தக்கலை சிவசித்தானந்த  சுவாமி அவர்கள் ஆலயத்தை பொறுப்பேற்றுக்கொண்டார். வாரம் ஒருமுறை வந்து பூசைகள் செய்து ஒருநாள் இரவு அங்கே தங்கி திரும்பிச்செல்கிறார். அவ்வப்போது இன்னொரு துறவியும் அங்கே வந்து தங்கியிருக்கிறார்.

t6
புகைப்படம் அஸீம் . நான் அஜிதன் பாலா குமார் முல்லக்கல்[

நாங்கள் சென்றபோது எவருமில்லை. பைகளை போட்டுவிட்டு மேலும் மலை ஏறிச்சென்று யானைப்பாறை உச்சியில் நின்று நாகர்கோயிலைப் பார்த்தோம். எவ்வளவு சின்ன ஊர் என்ற எண்ணம் ஏற்பட்டது.ஒர் எறும்புப்புற்று. மக்கள் தென்படவில்லை, அவ்வளவு உயரம். வண்டிகள் ஒளிவிட்டபடி ஊர்ந்து சென்றன. நாகர்கோயில் என்பது கடல்போல அலையடிக்கும் பச்சை வயல்களால் சூழப்பட்டது என்று தெரிந்தது

அப்பகுதி எங்கும் பெரும்பாறைகளின் குவியல். குமரிநிலம் தொன்மையான கரும்பாறைகளால் ஆனது. காலமின்மையின் அமைதி சூடி நின்ற மலைகளின் நடுவே அத்தனை அசைவுகளும் அத்தனை எண்ணங்களும் சொற்களும் பொருளின்மை அடைகின்றன. திரும்பத்திரும்ப அந்த மாபெரும் பருண்மையின்.அமைதியிலேயே நம் உள்ளம் சென்று முட்டுகிறது. அவை நம்மை மூர்க்கமாக பிடித்து வெளியே தள்ளுகின்றன என்று தோன்றுகிறது

பலவண்ணங்களில் பாறைகள். சிவந்தநிறத்தில் ஒருவகை பாசி படர்ந்து யானையின் முகத்திலுள்ள தேமல்பூ போல தோன்றின சில. இளம்பச்சை நிறப்பாசி படிந்தவை. பாசிப்பருப்பு நிறத்தில் வண்ணப்பூச்சு கொண்டவை. இரும்புவண்ணம் கொண்ட மாபெரும் உருண்டைகள். தீட்டப்பட்ட இரும்பு போல மின்னும் உடைசல் விளிம்புகள். கீழிருந்து நோக்குகையில் வானுடன் குலவி நின்றிருக்கும் மலைமுடிகள் அவை என எண்ணும்போது ஓர் உளஎழுச்சி ஏற்பட்டது

IMG_20180216_102025

நல்ல வெயில். ஆனால் குளிர்காற்றில் வெயில் தெரியவில்லை. வெயிலில் நின்ற உடல் எரிய ஆரம்பித்தது இரவு திரும்பிவந்தபின்னர்தான். மலையுச்சியில் அமர்ந்து இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். பாறைகளில் தொற்றி அலைந்தோம். நான் ஒரு குட்டித்தூக்கமும் போட்டேன்

அங்கே நாம் பேசிக்கொண்டிருப்பது நம்மை மீட்டுக்கொள்ளும்பொருட்டு. உலகியலில் நம்மைப் பொருத்திக்கொள்ளும்பொருட்டு. இல்லையேல் பாலையில் விழுந்த நீர்த்துளி போல உள்ளம் ஆவியாகிவிடக்கூடும்IMG_20180216_092040

அங்கே தங்கியிருக்கும் துறவி கீழிருந்து வந்துவிட்டிருந்தார். அவரே சோறும் ரசமும் சமைத்தார். நாங்கள் அவருக்குப் பலநாட்கள் தேவையான அரிசி முதலியவற்றைக் கொண்டுசென்றிருந்தோம். அவரே பரிமாறினார்.நல்ல காரமான ரசம். பழங்கள் கொண்டுசென்றிருந்தோம். அங்கே நீர் உண்டு- ஒருநாளைக்கு துளித்துளியாக இருபதுகுடம்நீர் வரை கிடைத்துவிடும்

அந்தத்துறவி அங்கு அகளி என்னும் பறவை இரவுகளில் வரும் என்றார். டைனோசர் போன்ற பறவைகள். அவற்றை வானில் பார்க்கமுடியாது. பார்த்தால் கவ்விக்கொண்டுசென்றுவிடும். மாபெரும் நிழல்கள் நிலத்தில் ஊர்வதைப் பார்க்கமுடியும். நிலவில் பெங்குயின்கள் வருகின்றன என்றார். எருமைகள் இரவில் மட்டும் முக்ரி ஓசை எழுப்புமாம். ‘அய்யப்பனுக்கும் மகிஷிக்குமான சண்டையிலே நாம மாட்டிக்கிடப்பிடாதுல்லா?”

அஜிதனிடம் அவை கற்பனைகள் அல்ல, வேறுவகை யதார்த்தங்கள் என்றேன். அவை உடனிருப்பதனால்தான் அங்கே, அந்த அபாரமான தனிமையில் வாழமுடிகிறது. இங்குள்ள யதார்த்தம்போலவே அங்குள்ள அந்த யதார்த்தமும் வெறும் உருவெளித்தோற்றமே. இதைவிட அது கொஞ்சம் சுவாரசியமானது.

IMG_20180216_102607

சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்து மாலை நான்கரை மணிக்கு கிளம்பினோம். ஆறரை மணிக்கெல்லாம் மீண்டும் பாறையடியை வந்துசேர்ந்தோம்.

கிட்டத்தட்ட ஐந்து மணிநேர நடை. பெரிதாக இடர்படவில்லை, ஆனால் மூன்றுமுறை சரல் சறுக்கி விழுந்தேன். அடிபடவில்லை, ’தந்திரபூர்வ’மாக அமர்ந்தேன்’ என்று சொல்லிக்கொள்ளலாம். கொஞ்சம் முள் குத்தியதைத்தவிர விழுப்புண்கள் ஏதுமில்லை.

செல்லும் வழியில் தூண்பாறை ஒன்று உண்டு. செங்குத்தாக கல்தூண் போல நின்றிருப்பது. சாலையில் நின்று பார்த்தால் அதன் பிரம்மாண்டம் பயமுறுத்தும். மேலே செல்லச்செல்ல அது கீழிறங்கி ஒரு சிறு கல் என ஆகியது. திரும்பி வரும்போது காலடியில் அது தெரிந்தபோது ஆகா வந்து சேர்ந்துவிட்டோம் என ஆறுதல் ஏற்பட்டது. அந்த தூண் மண்ணைச்சேர்ந்ததாக ஆகிவிட்டிருந்தது. சாலைக்கு வந்தபோது மீண்டும் தலைக்குமேல் எழுந்து விண்ணுக்குரியதாக நின்றது

தலையருகே எப்போதும் எழுந்துநின்றிருக்கும் ஆனைமலையின் பொருள் இப்போது மாறிவிட்டிருக்கிறது

முந்தைய கட்டுரைமயிலாடுதுறை பிரபு வலைப்பூ
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65