கதாபிரசங்கம்

Kedamangalam_Sadanandan
கெடாமங்கலம் சதானந்தன்

பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கி என்னும் பெயரை நான் முதன்முதலில் கேட்டது ஒரு கதாப்பிரசங்கமேடையில். குழித்துறைக்கு அருகிலுள்ள மஞ்சாலுமூடு என்னும் ஊரில் உள்ள கோயில் திருவிழாவில். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் நாவலின் கதையை மூன்றரை மணிநேரம் உணர்ச்சிகரமான கதைவிவரிப்பு, பலகுரலில் தனிநடிப்பு, பாடல்கள் ஆகியவற்றுடன் கண்முன் என நிகழவிட்டார் கதாப்பிரசங்கக் கலைஞரான சாம்பசிவன். அப்போது எனக்கு வயது பதினைந்து. நான் அந்நாவலை வாசிப்பது மேலும் ஏழாண்டுகள் கழித்து

கேரளத்தில் சென்ற நூற்றாண்டில் உருவாகி கிட்டத்தட்ட ஐம்பதாண்டுக்காலம் அரங்குகளை நிறைத்திருந்த கலைவடிவம் கதாப்பிரசங்கம் எனப்படுகிறது. மரபான கதாகாலட்சேபம் என்னும் கலையின் நவீன வடிவம் இது. வில்லுப்பாட்டு, கேரளத்தின் நகைச்சுவை கலைவடிவமான சாக்கியார்கூத்து, ஓட்டன்துள்ளல் ஆகியவற்றுடன் இதற்கு அணுக்கமுண்டு

முதலில் சுகதகுமாரியின் தந்தையான கவிஞர் போதேஸ்வரன் சுதந்திரப்போராட்ட காலத்தில் சுதந்திர உணர்வைத் தூண்டும் நவீன கதைகளை கதாகாலட்சேப வடிவில் சொல்ல ஆரம்பித்தார். அது ஒரு தனி கலையாக வளர்ந்தது.

ஆரம்பகாலத்தில் காந்திய இயக்கங்கள்தான் கதாப்பிரசங்க கலையை வளர்த்தெடுத்தன. கே.கே.வாத்யார், ஜோசப் கைமாப்பறம்பன், எம்.பி.மன்மதன் போன்ற காந்தியவாதிகள் புகழ்பெற்ற கதாபிரசங்க கலைஞர்கள். காந்திய சிந்தனையாளர்களாகவும் சுதந்திரப்போராட்ட வீரர்களாகவும் இவர்களுக்கு கேரளவரலாற்றில் முக்கியமான இடமுண்டு. பின்னர் செபாஸ்டின் குஞ்சுகுஞ்சு பாகவதர் போன்றவர்கள் கிறிஸ்தவக் கதைகளை இவ்வடிவில் சொல்லத் தொடங்கினர்

ஆனால் கதாப்பிரசங்கத்தை பெரிய கலைஇயக்கமாக வளர்த்தவர்கள் இடதுசாரிகள். சொல்லப்போனால் இடதுசாரிகளின் அரசியல்வெற்றியே முதன்மையாகக் கதாப்பிரசங்கத்தால் ஆனது எனலாம். கதாப்பிரசங்கத்திற்கு பெரிய ஏற்பாடுகள் ஏதும் தேவையில்லை. ஒரு திண்ணையிலேயே அதை நடத்திவிடலாம். ஒலிப்பெருக்கி மட்டும் போதும். அது இசை,நடிப்பு,கதைசொல்லல் என்னும் பல கலைகளின் கலவை. ஆகவே ஜனரஞ்சகமானது. அத்துடன் நேரடியாகவே அரசியல் கருத்துக்களைச் சொல்லவும் முடியும்

ஐம்பதுகளில் இடதுசாரிகள் யட்சி, சாஸ்தா, பகவதி, முத்தப்பன் போன்ற சிறுதெய்வ ஆலயங்களில் நிகழும் திருவிழாக்களை கையிலெடுத்தனர். பல ஆலயங்களில் அவர்களே திருவிழாக்களை ஒருங்கிணைத்தனர். அவை அன்று அடித்தள மக்களின் கொண்டாட்டங்கள். ஆகவே உயர்குடியினரால் பொருட்படுத்தப்படாதவை. அவற்றில் எளிய செலவில் நிகழ்த்தப்படும் கலை கதாப்பிரசங்கம்தான். கேரளத்தில் எழுபதுகள் வரை ஒவ்வொருநாளும் ஆயிரம் இடங்களில் கதாப்பிரசங்கம் நடந்துகொண்டிருந்தது என்பார்கள்.

இடதுசாரிகளின் கதாப்பிரசங்க நட்சத்திரங்கள் பலர்.மூத்தவரான கெடாமங்கலம் சதானந்தன் [1926 -2008]  கேரளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியரும்கூட. 15000 மேடைகளில் கதை சொல்லியிருக்கிறார். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையின் ரமணன் என்னும் கதையை மட்டும் 3500 அரங்குகளில் சொல்லியிருக்கிறார். இது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது

vsa
வி சாம்பசிவன்

இடதுசாரி கதைசொல்லிகளில் முதன்மையான நட்சத்திரம் வி.சாம்பசிவன் [1929-1996] கதாப்பிரசங்க கலையின் உச்சநட்சத்திரமும் இவரே. கொல்லம் அருகே பிறந்து ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் முழுநேர கதைசொல்லியாக ஆனார். கேரள மாணவர் சங்கம் [மார்க்ஸிஸ்ட்] அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். நெருக்கடிநிலை காலத்தில் பத்துமாதகாலம் சிறையில் இருந்தார். மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாபெரும் பிரச்சாரகரான சாம்பசிவன் தன் 18 வயது முதல் அனேகமாக அனைத்துநாட்களிலும் கதைசொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய கதைகேட்க ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவதுண்டு.

உலக இலக்கிய அறிமுகத்தைன் தல்ஸ்தோயின் இருட்டின் ஆற்றல் என்னும் நாடகத்தை கதையாகச் சொன்னபடி தொடங்கிய சாம்பசிவன் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, ஷேக்ஸ்பியர் கதைகளை மாபெரும் அரங்குகளில் உணர்ச்சிகரமாகச் சொல்லியிருக்கிறார். சாம்பசிவன் பேரில் கொல்லத்தில் சாம்பசிவன் ஃபௌண்டேஷன் இன்று கதாபிரசங்க கலைக்கான விருதுகளை வழங்குகிறது. அவருடைய மகன் வசந்தகுமார் சாம்பசிவனும் கதாப்பிரசங்கம் செய்துவருகிறார்.

தொண்ணூறுகளில் தொலைக்காட்சி தோன்றியதுமே கதாப்பிரசங்க கலை மெல்ல முக்கியத்துவம் இழக்க ஆரம்பித்தது. இன்றும் கதைசொல்லிகள் இருக்கிறார்கள், ஆனால் முன்புபோல ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவதில்லை.

தமிழில் பவா செல்லத்துரை கதைகளை மேடையில் சொல்கிறார். அது ஓர் எழுத்தாளனின் கதைசொல்முறை. ஆனால் கதைகளை பயிற்சி செய்து உணர்ச்சிகரமான நடிப்புடன், பலகுரல் திறன்களுடன் சொல்லும் கதைசொல்லிகள் உருவாகிவருவார்கள் என்றால் அது இன்றையசூழலில் இலக்கியங்களை பெரிய அளவில் மாணவர்களிடையே கொண்டுசெல்ல உதவக்கூடும்

சாம்பசிவனின் இருபதாம்நூற்றாண்டு என்னும் கதையின் சுருக்கமான வடிவை இணையத்தில் கண்டடைந்தேன். பிமல்மித்ரா எழுதியநாவலின் கதைவடிவம். அவருடைய குரல்பதிவுகள் இணையத்தில் நிறையவே கிடைக்கின்றன,. நடிப்புடன் கூடிய இந்த வடிவம் நெகிழ்ச்சியான பழைய நினைவுகளை எழுப்பியது

 

திருநெல்லூர் கருணாகரனின் ராணி என்ற நீள்கவிதையின் கதாப்பிரசங்கவடிவம்

கேரள மார்க்ஸிய எழுத்தாளர் செறுகாடு எழுதிய தேவலோகம் என்னும் நாவலின் கதைவடிவம்

 

வங்க எழுத்தாளர் பிமல் மித்ராவின் விலைக்குவாங்கலாம் நாவலின் கதாபிரசங்கவடிவம்

 

தல்ஸ்தோயின் அன்னா கரீனினா

 

 

முந்தைய கட்டுரைதுளிச்சொட்டு சாஸ்தா -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகீழ்ப்படிதல்,முரண்படுதல் பற்றி…