திருத்தர்
அன்புள்ள ஜெயமோகன்,
எடிட்டிங் பற்றிய உங்கள் கட்டுரையில் கீழ்க்கண்ட வரிகளைக் கண்டேன்:
‘இமையத்தின் ஆறுமுகம் நூலின் முன்னுரையில் ‘க்ரியாவின் மொழிக்கொள்கையின்படி இந்நாவலை இமையத்தை எங்களுடன் மாதக்கணக்கில் அமரச்செய்து மறுஆக்கம் செய்தோம்’ என்று ஒரு வரி இருக்கும். ‘
உங்கள் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வரி முழுக்க முழுக்க உங்கள் கற்பனை. இந்த வரியின் சாயலைக்கூட ’ஆறுமுகம்’ நூலின் முன்னுரையில் நீங்கள் பார்க்க முடியாது.
உங்கள் வசதிக்கு ‘ஆறுமுகம்’ நாவலின் முன்னுரையை உடன் இணைத்திருக்கிறேன். நீங்கள் மேற்கோள் காட்டும் வரி அதில் இருக்கிறதா என்று எனக்குச் சொல்லுங்கள்.
நீங்கள் உங்கள் நவீனத் தமிழ் இலக்கிய வரலாறு நூலிலும் பல்வேறு இடங்களிலும் ‘கோவேறு கழுதைகள்’ நாவலை க்ரியாதான் திருத்தி எழுதியது என்கிற அர்த்தத்தில் எழுதியிருக்கிறீர்கள். இதற்கு உங்களிடம் சிறு ஆதாரமும் இல்லை. இமையத்தின் ஒரு வரியைப்போல க்ரியாவில் உள்ள ராமகிருஷ்ணன் உட்பட யாராவது எழுதிவிட முடியுமா என்று நீங்கள் யோசித்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள், உங்கள் புத்தி அப்படி யோசிக்காது. க்ரியாவை பற்றித் தொடர்ந்து குறைசொல்லிக்கொண்டிருக்க வேண்டும், அது ஒன்றுதான் உங்கள் குறிக்கோள்.
ஒரு எழுத்தாளரின் படைப்பில் உள்ள போதாமைகளை அல்லது சாத்தியங்களை எழுத்தாளருக்குச் சுட்டிக்காட்டுவது, படைப்பில் மொழிச் சீர்மையை எழுத்தாளருக்கு உணரவைப்பது (உதாரணத்துக்கு, இமையம் தன் வட்டார மொழியில் எழுதிக்கொண்டிருக்கும்போது அதில் திடீரென்று பண்டித மொழி வருமேயானால் அதைச் சுட்டிக்காட்டுவது), அடிப்படைத் தகவல் பிழைகளை எழுத்தாளருக்குச் சுட்டிக்காட்டுவது போன்றவற்றைத்தான் ஒரு எடிட்டராக நான் செய்துவருகிறேன். பிறருடைய படைப்பில் ஒருபோதும் ஒரு வரியைக் கூட நான் திருத்தி எழுதியதில்லை. ஆசிரியரின் இடத்தை எடிட்டர் ஒருபோதும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில் மிகவும் கறாராக இருப்பவன் நான் என்பது உங்களுக்குத் தெரியாது. எடிட்டர் சுட்டிக்காட்டியும் ஆசிரியர் ஒருவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், எடிட்டர் அதை மதிக்க வேண்டும் என்ற கொள் கையை உடையவன் நான். ஒரு யோசனையை எடிட்டர் முன்வைக்கும்போது ஆசிரியர் அதை ஏற்கவில்லை என்றால் அதற்கு மேல் தலையிட எடிட்டருக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் க்ரியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இம்மாதிரி பொய்களைக் கூறியும், தவறான எண்ணங்களை வாசகர்களிடையே உருவாக்கியும், தகவல்களைத் திரித்தும் அவதூறு என்று சொல்லத் தக்க விதத்தில் நீங்கள் க்ரியாவின் எடிட்டிங் பணியைக் கொச்சைப்படுத்திவருகிறீர்கள். என்றாவது க்ரியா பதிப்பித்திருக்கும் ஆசிரியர்கள் எவருடனாவது க்ரியாவின் எடிட்டிங் பற்றிப் பேசியிருக்கிறீர்களா? உங்கள் நண்பர் சுந்தர ராமசாமியிடம் க்ரியாவின் எடிட்டிங் குறித்துக் கேட்டிருக்கலாமே. அவருடைய பல நூல்களை க்ரியா வெளியிட்டிருக்கிறதே!
எடிட்டர் தன்னடக்கம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று உபதேசிக்கும் நீங்கள் அந்தப் பண்பைச் சிறிதேனும் மேற்கொள்ள முயலலாம்.
ராமகிருஷ்ணன்
க்ரியா
அன்புள்ள திரு ராமகிருஷ்ணன்,
அ நீங்கள் குறிப்பிட்டுள்ள க்ரியாவின் பதிப்பாளர் குறிப்பு மிகத்தெளிவாகவே சொல்கிறது
- க்ரியாவின் வெளியீடுகளில் தமிழின் ஒருமை வெளிப்படவேண்டும். இன்றைய தமிழின் கூறுகளை உணர்ந்து உருவாக்கப்பட்ட உரைநடை உருவாகவேண்டும்.என எண்ணுகிறீர்கள்.
- க்ரியாவின் அனைத்து வெளியீடுகளிலும் அந்த உரைநடை ஒருமை வெளிப்படவேண்டும் என பல ஆண்டுகளாக முயற்சிசெய்துவருகிறீர்கள்.
- எல்லா கேள்விகளுக்கும் ‘நீங்கள்’ [அதாவது பதிப்பகம்] விடைகண்டுபிடித்துவிடவில்லை. ஆனால் ஒவ்வொரு வெளியீட்டிலும் உரைநடையை மொழியின் ஒருமையை கூடுதல் தெளிவுடன் கொண்டுவர முயல்கிறீர்கள்.
- அந்த நீண்டகால தொடர்ந்த உழைப்பின் விளைவாக இந்நாவலைக் குறிப்பிடவேண்டும்.
நான் குறிப்பிடுவது இதைத்தான். செய்திமொழிக்கு தினதந்தி அப்படி ஒர் ஒருமையை உருவாக்கலாம். ஆனால் புனைவுமொழிக்கு அப்படி ஒரு ‘தரப்படுத்தல்’ இருக்கவியலாது. புனைவுமொழியை உருவாக்குவதோ தரப்படுத்துவதோ பதிப்பகத்தின் வேலை அல்ல, புனைவுமொழி எழுத்தாளன் தன் மொழிசார்ந்த உள்ளுணர்வின் விளைவாகக் கண்டடையவேண்டியது. அவனுடைய பண்பாட்டுப்பின்புலம், அவனுடைய உளமொழி செயல்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்திக்கொள்ளக்கூடியது. பதிப்பகம் தன்னுடைய மாறாத சட்டகங்களுடன் அதில் தலையிடக்கூடாது, அது வன்முறை. அதை மட்டும்தான் மிகுந்த பணிவுடன் தங்கள் கடைக்கண் பார்வைக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். தமிழில் முப்பதாண்டுகாலமாக எழுதிவருபவன் என்ற முறையில் இதைச்சொல்லும் குறைந்தபட்ச உரிமை எனக்குண்டு என நம்புகிறேன்.
ஆ. இமையம் அல்லது இன்னொரு படைப்பாளி ஒரு படைப்பில் உருவாக்கிக்கொண்ட புனைவுமொழியை, அதன் தனிப்பட்ட மொழியமைப்பு மற்றும் அழகியலை உணர்ந்து சீரமைக்க க்ரியா முயல்வது வேறு, க்ரியா கொண்டுள்ள பொதுவான மொழிக்கொள்கையின் அடிப்படையில் அப்புனைவுமொழியைச் சீரமைக்க முயல்வது வேறு. நான் சுட்டிக்காட்டுவது இந்த வேறுபாட்டைத்தான்.
உதாரணமாக அரைப்புள்ளி, கால்புள்ளிகளைக் கருத்தில் கொள்ளாமல் ஒரு நாவலுக்கான உரைநடையை ஒரு படைப்பாளி உருவாக்கலாம். வேண்டுமென்றே சொற்திரிபுகளை, பொருள்மயக்கங்களை உருவாக்கலாம். அவருடைய ஆழ்மனச் செயல்பாடு மொழியாக விளையும்போது அவரே அறியாத மொழிமயக்கங்கள் உருவாகலாம். அதிலுள்ள பிசிறுகளும் சிக்கல்களும்கூட படைப்பியக்கத்தின் ஒரு பகுதிதான்.
நான் உரையாடல்களை தனிப்பத்திகளாக ஆக்குவதில்லை. அது வாசிப்பை துண்டுகளாக்குகிறது என நினைப்பேன். எண்ணங்கள், நினைவுகூரல்கள் ஆகியவற்றை தனித்தனியாக அடையாளமிட்டுப் பிரிப்பதில்லை. கூடுமானவரை அரைப்புள்ளிகள், ஆச்சரியக்குறிகளைப் பயன்படுத்துவதில்லை.ஏனென்றால் வாசகனுக்கு துல்லியமான பொருளை அளிக்கவேண்டியது புனைவுமொழியின் வேலை அல்ல, அந்த உணர்வையே அளிக்கவேண்டும் என நினைக்கிறேன். அதற்கு மொழியைப் பொருள்கொள்ளும் பொறுப்பை அவனிடம் அளித்துவிடுவதே நல்லது. என் புனைவுமொழியில் ஓசை சார்ந்து வரும் சொற்றொடர் அமைப்பை இலக்கணம் சார்ந்து மாற்றுவதில்லை. பொருள்மயக்கங்களை அப்படியே விட்டுவிடுவேன். என் பதிப்பாளர் எவரும் தங்கள் சொந்த மொழிக்கொள்கையுடன் என் மொழியில் தலையிட அனுமதிக்கும் தன்னடக்கம் என்னிடம் இல்லை.
இது புனைவிலக்கியவாதியின் சுதந்திரம். சோ.தருமன் பத்தி பிரிக்காமலேயே ஒருநாவலை எழுதியிருக்கிறார். அதை க்ரியா வெளியிட்டிருந்தால் என்ன ஆகும்? பதிப்பகத்திற்கென ஓர் உரைநடைக் கோட்பாடு [ மறுபடியும் நோக்குக முன்னுரையில் நீங்கள் ஒற்று, இலக்கணம் குறித்தல்ல, உரைநடைகுறித்தே பேசுகிறீர்கள்] இருப்பதும் அதை அவர்கள் வலியுறுத்துவதும் அந்தப்படைப்பின்மீதான வன்முறைதான்.
இதற்கும் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் தாங்கள் பதிப்பித்த அனைத்து நூல்களையும் செந்தமிழுக்கு மாற்றியதற்கும் உளநிலையில் என்ன வேறுபாடு? இந்த வேறுபாட்டை இப்போதுகூட உங்களிடம் என்னால் புரியவைக்க இயலவில்லை என்றால் பிற எழுத்தாளர்கள் உங்களிடம் என்னதான் பேசியிருப்பார்கள்?
இ. பதிப்பு வாய்ப்பு என்பது எண்பது தொண்ணூறுகளில் எத்தனை அரியதாக இருந்தது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. சர்வதேச அளவில் தொடர்புகள் இருந்த ஒரு முக்கியமான பதிப்பகம் இப்படி ஒரு மொழிக்கொள்கையை [பல்லாண்டு உழைத்து] உருவாக்கி சட்டகமாக வைத்திருந்து அதை ‘பரிந்துரைத்தால்’ மறுக்குமளவுக்கு அன்றைய இளம் படைப்பாளிகள் இருந்திருப்பார்களா என்ன?
ஈ. ஆசிரியரை அமரச்செய்து ஆண்டுக்கணக்கில் க்ரியா நூல்களை ‘செப்பனிடுகிறது’ என்பது அன்று பெருமையாக பேசப்பட்டது. சுந்தர ராமசாமி பெருமையாகவும் பின்னர் உங்கள் அத்துமீறல் குறித்து கசந்தும் சொல்லியிருக்கிறார். உங்கள் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். பாருங்கள், உங்கள் குறிப்பிலேயே அந்த அர்த்தமும் தோரணையும்தான் இருக்கிறது.இப்போது அதை மறுக்கிறீர்கள் என்றால் சூழல் மாறியிருக்கிறது என்று பொருள். நீங்கள் மறுத்தால் நான் அதை நிரூபிக்கமுடியாது. ஆகவே அச்சொற்களுக்காக வருத்தம் தெரிவிக்கிறேன்
உ. எவ்வகையிலும் படைப்புக்குள் தலையிட உங்களுக்கு தகுதி இல்லை – வாசகனாகக்கூட. அதற்கு சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலில் கால்திருத்தி என வரும் பகுதிக்கு நீங்கள் அளித்த விளக்கம் குறித்து நஞ்சுண்டன் எழுதியதே சான்று.[ பார்க்க – “கெரகம்!” ]ஜே.ஜே.சிலகுறிப்புகள் உங்கள் குழுவால் இரண்டு ஆண்டுக்காலம் செப்பனிடப்பட்டது என சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நஞ்சுண்டனும் அதைச் சொல்ல நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். எப்படிச் செப்பனிட்டிருப்பீர்கள் என்பதற்கு அந்தப் பொருள்கோடலே சான்று. சுந்தர ராமசாமி படைப்புகள் நகர்சார்ந்தவை, தனிமனித உலகு சார்ந்தவை, குடும்பப் பண்பாட்டுப்பின்புலம் உங்களுக்கும் பொதுவானது. அரிதாகவே அதில் ஒரு நாட்டார்வாழ்க்கைக் குறிப்பு வெளிப்படும். அதை இப்படிப்புரிந்துகொள்ளும் நீங்கள் அடித்தள, நாட்டார் வாழ்வின் ஆயிரம் நுண்மைகளால் ஆன இமையம் நாவலையோ பூமணி நாவலையோ தொடலாமா? மனசாட்சி இருந்தால் சிந்தித்துப்பாருங்கள்
ஊ கடைசியாக, எந்த பூடகமும் இல்லாமல் சொல்கிறேன். இலக்கணம் என்பது எப்போதுமே மேலிருந்து கீழே செலுத்தப்படும் அதிகாரம். கீழிருந்து எழும் இலக்கியம் அந்த அதிகாரத்திற்கு எதிரானது, மீறல்தன்மை கொண்டது, தனக்கான இலக்கணத்தை தானே கண்டடைவது. இச்சூழலில் மேற்குடிகள், மேல்தட்டினரின் கைகளில் இலக்கணம் ஒடுக்குமுறையாக அமைகிறது, நக்கலாகவும் கிண்டலாகவும் அது வெளிப்படுகையில் கொடிய நஞ்சென்று ஆகிறது. இது உலகமெங்கும் உள்ள வழக்கம்.
தமிழ்ச்சூழலில் மொழியில் தேர்ச்சி கொண்டவர்கள் என வழிவழியாக தங்களைக் கருதிக்கொள்பவர்கள் பிறர் எழுதும் புனைவுமொழிகளை எளிய இலக்கண அடிப்படையில் நக்கலடிப்பதையே இலக்கியவிமர்சனம் என நினைப்பதை சாதாரணமாகக் காணலாம். அத்துமீறி ‘மேம்படுத்த’ முயல்வது இன்னொருவகை மேட்டிமைத்தனம். ஆமோதித்துச் சான்றளிக்கும் இடத்தில் அவர்கள் தங்களை நியமித்துக்கொள்கிறார்கள். பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் ஜெயகாந்தனுக்கும் இவர்களின் தொந்தரவு உச்சகட்டத்தில் இருந்தது. இன்றும் மொழித்திறன், மொழிமீதான பற்று என்னும் பாவனைகளில் அரைவேக்காட்டுத்தனமான இலக்கணமேட்டிமைவாதம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இந்த உளநிலைக்கு எதிராக உருவானதே இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் வரி. இலக்கணப்படி எழுதப்படுவதல்ல இலக்கியம். அதன் வழி மீறலும் தன்னிச்சையான பெருக்கும்தான். நீங்கள் ஒருபடைப்பை அதன் அழகியலை உணர்ந்து அதற்கு ஒப்புக்கொடுத்து அதன் வாசகராக அமைந்து செம்மைசெய்தால் பிரச்சினையே இல்லை. ஆனால் உங்கள் பதிப்புரையைப் பாருங்கள், அப்படியா சொல்கிறீர்கள். முன்னரே ‘பல்லாண்டுகால உழைப்பால்’ உருவாக்கப்பட்ட மொழிக்கொள்கையுடன் படைப்பின் முன் அமர்கிறீர்கள். அனைத்து படைப்புகளுக்கும் அதை செலுத்துகிறீர்கள்.
தமிழ் உரைநடையில் இந்த மேலாதிக்கம், அடக்குமுறைக்கு நூறாண்டுகால வரலாறுண்டு. அதைமீறித்தான் இங்கே நவீன இலக்கியம் எழுந்துவருகிறது. அது அடைந்த மீறல்கள் ,பிசிறுகள் வழியாகவே தன் அடையாளத்தை அது உருவாக்கிக்கொண்டது. அதன் அழகியல் அவ்வாறு உருவானதே. ஆகவே உங்களைப்போன்ற ஒருவர் அடித்தளப் பண்பாட்டுப் பின்புலம் கொண்ட ஆக்கங்களை உங்களுக்குரிய மாறாத மொழிச்சட்டகத்துடன் செம்மைசெய்ய முயல்வதை நான் ஐயப்படுகிறேன் இருபதாண்டுக்குமுன் நான் எழுப்பிய ஐயம் இது, இந்த ஐயம் இப்படி இலக்கியவரலாற்றில் பதிவாகிக்கிடக்கட்டும்.
ஜெ
திரு ஜெயமோகன்,
உங்களுடைய இணையதளத்தில் ‘திருத்தர்’ என்ற கேள்வி-பதில் பகுதியில் – “இமையத்தை எங்களுடன் மாதக் கணக்கில் அமரச் செய்து மறுஆக்கம் செய்தோம்” என்று ஆறுமுகம் நாவலின் முன்னுரையில் பதிப்பாளர் எழுதியிருப்பதாகவும், அதற்கு அப்போதே நீங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்ததாகவும் எழுதியிருக்கிறீர்கள்.
நீங்கள் கூறுகிற வாக்கியம் நாவலின் முன்னுரையில் எங்கும் இடம்பெறவில்லை. நீங்கள் கூறுகிற வாக்கியம் நீங்களே எழுதியதுதான். ஆறுமுகம் நாவலை பதிப்பிக்கிற சமயத்தில் என்னை மாதக் கணக்கில் க்ரியா ராமகிருஷ்ணன் உட்கார வைக்கவுமில்லை. நான் எழுதிய பிரதியை அவர் மறுஆக்கம் செய்ய கட்டாயப்படுத்தவுமில்லை.
உங்களுடைய இணையதள பக்கத்தில் எழுதிய அதே தொனியில் ‘நவீனத் தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூலிலும் ‘ஆறுமுகம்’ நாவல்பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அதுவும் உண்மைக்கு புறம்பானதே. ஒருசில மேடைகளில் நாம் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறோம். தொலைபேசியிலும் நாம் பேசியிருக்கிறோம். எந்த சந்தர்ப்பத்திலும் ‘ஆறுமுகம்’ நாவல்பற்றி எதுவும் நீங்கள் கேட்டதில்லை. ‘ஆறுமுகம்’ நாவல் பற்றி எனக்கு நீண்ட கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தீர்கள். அக்கடிதத்திலும் உங்கள் இணையதளத்தில் எழுதியிருக்கிற குற்றச்சாட்டும், ‘நவீனத் தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூலில் கூறியிருக்கிற குற்றச்சாட்டும் இடம்பெறவில்லை.
இதுவரை க்ரியா என்னுடைய ஐந்து நாவல்களையும், ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறது. என்னுடைய பிரதிகளில் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் திருத்தம் செய்தார், மாற்றம் செய்தார், மாற்றி எழுத கட்டாயப்படுத்தினார், ‘இப்படியிருந்ததை அப்படி மாற்றி எழுத வைத்தார், அப்படி இருந்ததை இப்படி மாற்றி எழுத வைத்தார்’ என்று நான் இதுவரை எந்த இடத்திலும் கூறவில்லை. நான் மட்டுமல்ல, க்ரியா பதிப்பித்த எந்தவொரு எழுத்தாளரும், க்ரியா மீது இதுவரை நீங்கள் கூறுகிற மாதிரியான குற்றச்சாட்டை முன்வைத்ததில்லை. அவ்வாறான சந்தேகம் இருக்கும் பட்சத்தில் என்னிடமே கேட்டிருக்கலாம். ‘நொறுங்கல்’ என்ற சிறுகதை தொகுப்பையும், ‘அஞ்ஞாடி’ என்ற நாவலையும் க்ரியாதான் வெளியிட்டிருக்கிறது. பூமணிக்கு நீங்கள் விஷ்ணுபுரம் விருது கொடுத்திருக்கிறீர்கள். பூமணியிடமே நீங்கள் “உங்களுடைய பிரதிகளில் க்ரியா ராமகிருஷ்ணன் என்ன செய்தார்?” என்று கேட்டிருக்கலாம். பூமணி உண்மையை மறைக்கக்கூடியவர் அல்ல. நீங்கள் கேட்டிருந்தால் நிச்சயமாக பதில் சொல்லியிருப்பார். என்னிடமும் கேட்கவில்லை, பூமணியிடமும் கேட்கவில்லை. க்ரியா பதிப்பித்த மற்ற எழுத்தாளர்களிடமும் கேட்கவில்லை. நீங்களாக ஒரு தீர்மானத்திற்கு வருவது ஏற்புடைய செயல் அல்ல.
க்ரியா இதுவரை சுந்தர ராமசாமி, எஸ்.வி.ராஜதுரை, அம்பை, புகழ், ராஜேந்திர சோழன், ந.முத்துசாமி, சார்வாகன், பூமணி, வ.ஐ.ச.ஜெயபாலன், என்று பலருடைய எழுத்துக்களை பதிப்பித்திருக்கிறது. இவர்களுடைய நூல்களை பதிப்பித்தபோது நீங்கள் எந்த கருத்தையும் கூறவில்லை. என்னுடைய நாவல்களை பதிப்பித்தபோது மட்டும் “திருத்தி எழுதப்பட்டது, மாற்றி எழுதப்பட்டது, உட்காரவைத்து மறுஆக்கம் செய்யப்பட்டது” என்பது போன்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள். மற்றவர்கள் எல்லாம் சரியாக எழுதியிருந்தார்கள். இமையம் மட்டும் சரியாக எழுதவில்லை. அதனால் க்ரியா அதை மாற்றி, திருத்தி எழுத தூண்டியது என்று எழுதுவது – என்னையும், என்னுடைய எழுத்தையும் இழிவு செய்கின்ற செயலாகவே கருதுகின்றேன்.
“பாவம் கிராமியக் கலைஞர்களான இமையமும், பூமணியும் க்ரியாவிடம் மாட்டிக்கொண்டார்கள்” என்று எழுதியிருந்தீர்கள். க்ரியா பதிப்பித்த மற்ற எழுத்தாளர்கள் பாவமில்லை. மாட்டிக்கொள்ளவில்லை. நானும், பூமணியும்தான் பாவம். மாட்டிக்கொண்டோம். இல்லையா? என்ன பொருளில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உள்நோக்கம் கொண்டது என்பது மட்டும் எனக்கு புரிகிறது. ஒரு வகையில் என்னையும், பூமணியையும் அவமானப்படுத்தியிருக்கிறீர்கள். கி.ராஜநாராயணனை கிராமியக் கலைஞர் என்று அடையாளப்படுத்துவீர்களா? மறைமுகமாக என்னுடைய சாதியையும், பூமணியுடைய சாதியையும் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா? என்னையும், பூமணியையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் க்ரியா பதிப்பித்த எழுத்தாளர்கள் யார்யார் என்பது தெரியும்.
க்ரியா பதிப்பகம் பதிப்பித்த என்னுடைய நூல்களில் இதுவரை தன்னிச்சையாக ஒரு வரியை, ஒரு வாக்கியத்தை, ஒரு சொல்லை தானாக எஸ்.ராமகிருஷ்ணன் சேர்த்தார் என்றோ, நீக்கினார் என்றோ சொல்ல முடியாது. அவர் கேட்கிற கேள்விகளின் மூலம் நானும், நான் சொல்கிற பதில்களின் மூலம் அவரும் படைப்பு மொழி குறித்தத் தெளிவை பரஸ்பரம் பெற்றிருக்கிறோம். என்னுடைய நாவல்களின், சிறுகதைகளின் உலகத்தை முழுமையாக அறிந்தவரல்ல க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன். அதேபோல் நான் பயன்படுத்துகிற பல வட்டார வழக்குச் சொற்களில் பலவும் அவருக்குப் புதியவை. அதனால் அவர் என்னிடம் சில கேள்விகளை கேட்டிருக்கிறார். நானும் அதற்கு பதில் சொல்லியிருக்கிறேன். என்னுடைய நூலில் எது இருக்க வேண்டும். எது இருக்கக் கூடாது என்று முடிவெடுக்கிற அதிகாரம் எனக்கு மட்டும்தான் இருக்கிறது. இதுவரை க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் எனக்கான அதிகாரத்தில் தலையிட்டதில்லை. குறுக்கிட்டதில்லை. என்னிடம் மட்டுமல்ல மற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பதிப்பிக்கிற போதும் அவ்வாறுதான் நடந்துக்கொண்டார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
‘கோவேறு கழுதைகள்’ நாவலில் ‘லிபி’ என்று ஒரு சொல் இடம்பெற்றுள்ளது. “ஆரோக்கியம் போன்ற பாத்திரம் லிபி என்ற சொல்லை பயன்படுத்துவாரா?” என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் “ஆமாம்” என்று சொன்னேன். ”லிபி என்பது சமஸ்கிருத சொல். அது எப்படி ஆரோக்கியத்திற்கு தெரியும்?” என்று கேட்டார். “லிபி என்பது தமிழ்ச்சொல்லா, சமஸ்கிருத சொல்லா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அச்சொல் நடைமுறைப் புழக்கத்தில் இருக்கிறது” என்று சொன்னேன். லிபி என்ற சொல் நாவலில் இருக்கிறது, நீக்கப்படவில்லை. ‘ஆறுமுகம்’ நாவலில் “சாண்ட குடிச்சவன்” என்ற சொல் இருக்கிறது. “அதை மாற்றி எழுத முடியுமா?” என்று என்னிடம் கேட்டார். “அச்சொல்லை சனங்கள் தினந்தோறும் பயன்படுத்துகிறார்கள். அதோடு அது இயல்பாகவும் இருக்கிறது, அப்படியே இருக்கட்டும்” என்று சொன்னேன். “சாண்ட குடிச்சவன்” என்ற சொல் நாவலிலிருந்து நீக்கப்படவில்லை. ‘செடல்’ நாவலில் அடவு முறைகள் குறித்து இரண்டு பக்கம் இருக்கும். “தகவல்களாக இருப்பதால் வாசகர்கள் எளிதில் தாண்டிச் சென்றுவிடுவார்கள். குறைக்க முடியுமா பாருங்கள்” என்று சொன்னார். “பரவாயில்லை தாண்டி போனால் போகட்டும். அடவு முறைகள் குறித்த முக்கியமான பதிவு. அப்படியே இருக்கட்டும்” என்று சொன்னேன். நான் எழுதியதில் ஒரு வரி அல்ல, ஒரு சொல்கூட மாற்றப்படவில்லை. நான் எழுதியபடியேதான் அச்சானது. இப்படி பல உதாரணங்களைப் பட்டியலிட முடியும். அது இங்கு அவசியமில்லை.
நாம் நம்முடைய படைப்பை நண்பர்களிடம் கொடுத்து படிக்கச்சொல்லி கருத்து கேட்பதில்லையா? நண்பர்கள் சொல்வதை சில நேரங்களில் ஏற்கிறோம். சில நேரங்களில் நிராகரிக்கிறோம். ஒரு படைப்பில் கவனக்குறைவாக ஏற்படுகிற சிறுசிறு பிழைகளைச் சுட்டிக்காட்டுவதால் பிழையை சுட்டிக்காட்டியவரே பிரதியை மாற்றி எழுதிவிட்டார், திருத்தி எழுதிவிட்டார் என்று கூறுவது ஏற்பதற்குரியதல்ல. நீங்களே, திருத்தர் என்ற கேள்வி-பதில் பகுதியில் எம்.எஸ். நல்ல திருத்தர் என்று சான்று தந்து இருக்கிறீர்கள். அதோடு ஒரு திருத்தருடைய பணி எவ்வளவு முக்கியமானது, அவசியமானது என்பது குறித்தும் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். அதே நேரத்தில் என்னுடைய நாவலைச் சுட்டிக்காட்டி க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் அப்படி செய்துவிட்டார், இப்படி செய்துவிட்டார் என்று யூகமாக கருத்து கூறுவது, அமெரிக்கப்பாணி எடிட்டிங் என்று கூறுவது உங்களைப்போன்ற ஒரு பொறுப்புமிக்க எழுத்தாளர் செய்யக்கூடிய காரியமல்ல.
என்னுடைய எழுத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சியுங்கள். அதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அச்சிடப்பட்ட நூலை படிக்கிற எவருக்கும், நூலை விமர்சிக்கிற உரிமை உண்டு. “இமையத்தை எங்களுடன் மாதக் கணக்கில் அமரச் செய்து மறுஆக்கம் செய்தோம்” என்று நீங்களாகவே ஒரு வாக்கியத்தை உருவாக்கி எழுதுவதையும், “பாவம் கிராமியக் கலைஞர்கள் க்ரியாவிடம் மாட்டிக்கொண்டார்கள்” என்றும், “இமையத்தின் எழுத்துக்களை அப்படி மாற்றி எழுதினார், இப்படி மாற்றி எழுதினார்” என்றும் இனி எழுதாதீர்கள். நீங்கள் சொல்வது உண்மையல்ல. நீங்கள் சொல்கிற கற்பனையும், பொய்யும் என்னையும், என் எழுத்தையும் அவமதிக்கிற செயலாகவே கருதுகிறேன். இனி என் எழுத்து குறித்து உண்மை அல்லாத தகவல்களை எழுத மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
இமையம்.
அன்புள்ள இமையம்,
ஆறுமுகம் நாவலின் பதிப்பாளர் குறிப்பு அந்நாவல் மீதான அத்துமீறல் என நான் எழுதி இருபதாண்டுகளுக்குப்பின் அதற்கு மறுப்பு வந்துள்ளது. நன்று. அதன் மீதான என் ஒவ்வாமையை மீண்டும் பதிவுசெய்கிறேன். அக்குறிப்பில் க்ரியாவின் ‘உரைநடைக்கொள்கை’யின் அடிப்படையில் ஆறுமுகம் சீரமைக்கப்பட்டது என்றுதான் இருக்கிறது. தமிழக தலித் மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் ஒருநாவலை க்ரியாவின் மொழிக்கொள்கைப்படி சீரமைக்கலாமா என்ற ஐயம் எனக்கு வலுவாக இப்போதும் உள்ளது. மிகச்சரியாக நான் சொன்ன வரி உள்ளதா என்ற வழக்கறிஞர் வாதத்தில் எனக்கு ஆர்வமில்லை, அக்குறிப்பு என்ன சொல்கிறது என வாசகர்கள் உணரட்டும்.
உங்கள் புனைவிலக்கியத்தில் அவர்களின் தலையீடு இல்லை என நீங்கள் சொன்னால் அதை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், ஆகவே அந்த குறிப்பு அவ்வாறு தொனிப்பதற்காக மன்னிப்பு கோருகிறேன். ஆனால் பதிப்பாளர்கள் உரைநடை குறித்த கொள்கைகள் கொண்டிருப்பதை, அதை படைப்புகள் அனைத்திலும் செயல்படுத்துவதை கண்டிக்கவே செய்வேன்
மொழியின் சாவி தங்களிடம் இருப்பதாகவும் இமையம், பூமணி போன்ற நாட்டுப்புற கலைஞர்களை தங்கள் மெய்ஞானம் மூலம் தாங்கள் உயர்கலைஞர்களாக ஆக்குவதாகவும் ஒரு பாவனை இவர்களிடம் இருக்கும். – என்பது என் வரி. அதில் அந்தப்பாவனை என்னிடம் இருப்பதாக அல்ல, க்ரியாவிடம் இருப்பதாகவே சொல்லியிருக்கிறேன் என்று புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு தமிழறியாதவரல்ல நீங்கள்.
நான் உங்கள் மேல் கொண்டுள்ள பெருமதிப்பு என்பது எழுத்தாளனாக மட்டுமே தன்னை முன்வைக்கும் நிமிர்வு உங்களிடமிருப்பதனால். பூமணியையும் உங்களையும் நான் சொன்னதே உங்கள் எழுத்துக்கள் நாட்டார்ப்புலம் சார்ந்தவை, க்ரியாவுக்கு அந்தத் தளம் சார்ந்த புரிதல் இல்லை என்பதுடன் பெரிய மதிப்பும் இல்லை என்பதனால்தான் [பார்க்க நஞ்சுண்டன் எழுதிய கால்திருத்தல் பற்றிய குறிப்பு] கிராமியக் கலைஞர் எனக் குறிப்பிட்டது அந்தப்பொருளில். அதை நீங்களும் அறிவீர்கள். ஏனென்றால் சென்ற இருபதாண்டுகளில் உங்களை, உங்கள் படைப்புகளை நான் எவ்வகையில் மதிப்பிட்டிருக்கிறேன் என உங்களுக்குத்தெரியும்..
ஆனால் விவாதத்தில் சினம் எழுந்ததுமே சாதியடையாளத்தை கொண்டுவந்து வைக்கிறீர்கள். இது நாலாந்தர எழுத்தாளர் செய்வது. இமையம் செய்யக்கூடாது. இருபதாண்டுக்கால தொடர்பு நம்மிடையே உண்டு. அன்றுமுதல் என் மனதில் ஓர் உயரத்தில் இருக்கிறீர்கள், அங்கேயே இருங்கள்.
ஜெ