தாந்த்ரீக பௌத்தம் – கடலூர் சீனு

budh

இனிய ஜெயம்

 

கடந்த சில தினங்களாக  பௌத்தம் குறித்து இணையத்தில் ஆங்காங்கே தேடி , கிடைக்கும் ஆங்கில தகவல்களில் இருந்து  என்னால் இயன்றவரை  , மொழிபெயர்த்து புரிந்து கொண்டு வாசித்து வருகிறேன் .

 

வாசித்த வரையில் சில ஆச்சர்ய தகவல்கள் கிடைத்து . கிட்டத்தட்ட பௌத்தத்தின் அத்தனை பிரிவுகளையும்   பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த காலச்சக்கரம் எனும் நூல்  பாதித்து இருக்கிறது . வஜ்ராயன பௌத்தத்தின் காலச்சக்கர தந்திரம் எனும் நூலை [ஓடிசாவின் ரத்னகிரி பௌத்த பல்கலை கழகத்தில் உருவான நூல் என்கிறது மற்றொரு இணைய தகவல் ]  தலாய் லாமா மொழிபெயர்த்து விளக்க உரை அளித்திருப்பதாக தெரிகிறது .  எனில் இந்த காலச்சக்கரம் எனும் மைய தரிசனமே விஷ்ணுபுரம் நாவலில் அஜிதனால் ,பவத்தருடன் விவாதித்து  கண்டடைந்து புறவயமாக முதன் முதலாக ,  முன்வைக்கபடுகிறது .

 

அதாவது உலகம் தழுவி விரிந்த பௌத்தத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் அடிப்படையான நோக்கு ஒன்றை அளித்த இந்த கால சக்கரம் எனும் ”தரிசனம் ”, அதன் விதை   இந்தியாவின் தென்னிலத்தில்  ஊன்ற பட்டது , என்கிறது விஷ்ணுபுரம் .

 

இணைய தகவல்களின் நம்பகம் ,அதை சரிபார்க்கும் முறைமைகள் ஏதும் அறியேன் .ஆனால் விஷ்ணுபுரம் வழியே அந்த  தருணம் இப்போது அளிக்கும் உவகை சொல்லில் அடங்காதது .முற்றிலும் எனது புரிதல் பிழையாகவும் இருக்கலாம் .   போகட்டும் இப்போது உவகையில் இருக்கிறேன் அது போதும் .

 

தொடர் தேடலில் ,  மறைந்து போன பௌத்த குகைகள் என்றொரு ஆவணப் படம் பார்த்தேன் .  திபெத் பக்கத்தில் முஷ்டங் என்றொரு நிலப்பரப்பில் , அணுக இயலா பனி வரை குடைவுகளில் ,  செயல்பட்ட  பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த தாந்த்ரீக பௌத்த கல்வி நிலையம் ,மற்றும் பிக்குகள் வாழ்விடம் ,  முதன் முதலாக ஒரு குழுவினரால் ,உலகுக்க்கு கண்டு பிடித்து அறிவிக்கப்படுவது குறித்த ஆவணப் படம் .

 

என்ன சொல்ல விஷ்ணுபுரம் நாவலில் அஜிதனின் வெற்றி ஸ்தூபியை கண்டுபிடிக்க செல்லும் பிக்குக்களின்  சித்திரம் நினைவில் எழுந்ததது .அதன் திரைக்காட்சி வடிவம் இது .குகைக்குள் கையெழுத்து பிரதிகள் கண்டெடுக்கப்படும் போது, வரலாற்றின் பக்கங்களில் பெயர் இன்றி ,பனி போல கலைந்து போன ,பெயரறியா அந்த ஏதோ ஒரு நரோபாவை நினைத்து ஒரு கணம் உளம் பொங்கி விட்டது . எத்தனை ஞானம் ,எத்தனை உழைப்பு ,எத்தனை மனித வாழ்வுகளை உண்டு செறித்து, வளர்ந்து வந்து நிற்கும் அறிவுத்தேட்டம் .  கிபி ஐந்தில் கிரேக்கத்தில் , கிறிஸ்த்துவ கட்டுப்பாட்டில் அனைத்தும் வந்த பிறகு அது முதலில் செய்த வேலை ,பிளேட்டோவின் கல்வி நிலையத்தை மூடியதே .அதன் பிறகு கிட்டத்தட்ட பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் அங்கே முதல் பல்கலை கழகம் திறக்கபடுகிறது .  அந்த காலக்கட்டத்தை ஐரோப்பாவின் இருண்ட காலம் என்கிறது இணயம் .  அந்த ஐந்து முதல் பன்னிரண்டு வரியிலான நூற்றாண்டுகள்; இங்கே பாரத மண்ணில் பௌத்தத்தின் தர்ம சக்கரம் கம்பீரமகாக சுழன்று கொண்டு இருந்தது . ஞான தாகிகள் அனைவருக்குமான கனவு பூமியாக பாரதம் இருந்திருக்கிறது . ஞானத்தின் சிம்மங்கள் இங்கிருந்து எண்திசையும் திசைகளை வெல்ல சென்றிருக்கிறது . பக்தியார் கில்ஜி வந்து அனைத்தயும் முடித்து வைக்கிறார் . இங்கே ஞானத்தின் சிரம் சரியும் அந்த பன்னிரண்டாம் நூற்றாண்டில் ,அங்கே முதல் பல்கலை கழகம் துவங்கப்படுகிறது . மறுமலர்ச்சி காலம் அங்கே .இருண்ட காலம் இங்கே .

 

ஏதேதோ கட்டற்ற எண்ணங்கள் .  இப்போதே நாளந்தா சென்று ,அதன் இடிபாடுகளின் சிகர முனை ஏறி நின்று ,  இந்தியா என ஈரல் குலை அறுந்து சரியும் வண்ணம் குரல் எடுத்து அலற வேண்டும் என தோன்றுகிறது .

 

நேரம் ஒதுக்கி இந்த காணொளியை காணுங்கள் . தாந்த்ரீக பௌத்தம் சார்ந்து இதுவரை நான் பார்த்தறியா வித விதமான சுவர் ஓவியங்கள் . காலா புத்தர் ,ஞானம் உரைக்கும் நாகார்ஜுனர் .என பல ஓவியங்கள்   வடிவத்தால் [சீன ஓவிய பாணியின் தாக்கம் இன்றி ]  அஜந்தா ஓவிய மரபின் தொடர்ச்சி போல காட்சி அளிக்கிறது .  சேர நிலத்தின் ஏற்றுமானூர் கோவில் சுவர் ஓவியத்தில் இருந்து ,இந்த இமய மலை தொடர் குகையில் இருக்கும் சில தாந்த்ரீக குறியீட்டு ஓவியங்களுக்கு,அறுபடாத ஒரு கோடினை இழுத்துவிட முடியும் .

 

என்னில் பதிந்து போன இந்த குகை ஓவியங்களில் ஒன்று , இறுதில் வருகிறது . அதன் அத்தனை அடையாளங்களும் கங்காள மூர்த்தி . மற்றொரு ஓவியம்  வெண்சங்கு அதை சுற்றி பிணைந்து நிற்கும் இரண்டு அரவங்கள் .

 

 

 

மந்திரம் இணைவு மண்டலம்

முந்தைய கட்டுரைஇலக்கிய டயட் -பரிந்துரை
அடுத்த கட்டுரைஅந்தக்குயில்