அருண்மொழி ஊரில் இல்லை. தனிமையான வீடு. எழுதி எழுதிச் சொற்கள் எஞ்சாத தனிமை எப்போதும் அஷ்டபதிக்கே கொண்டு சேர்க்கிறது. வேறெந்த பாடலிலாவது இத்தனை ஆண்டுகளாக மூழ்கிக்கிடக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்தப்பித்து ஆரம்பித்து முப்பதாண்டுகளாகின்றன. பெரும்பாலும் ஓர் இரவுக்கு ஒரே பாடல். திரும்பத்திரும்ப, இரவு முழுக்க. இன்று இது. ரதிசுகஸாரே…
எல்லா வடிவிலும் எல்லா குரல்களிலும் இந்தப்பாடலைக் கேட்டிருப்பேன் என நினைக்கிறேன். ஒரிஸாவிலும் வங்கத்திலும் பிகாரிலும் விருஜபூமியின் எத்தனையோ களங்களில் இதை நெஞ்சுக்குள் பாடிக்கொண்டிருக்கிறேன். கங்கையிலும் மகாநதியிலும் மிதந்தபடி எண்ணியிருக்கிறேன். பழகிப்போனதனால் ஒவ்வொரு சொல்லும் அணுக்கமென்றாகி மேலும் தித்திப்பு கொண்டிருக்கின்றது. வேறெந்த வடிவையும் விட இது மிக இனியது. அணுகுதற்கு எளிய பாதை-கொல்லும் நஞ்சும் அமுதுமென்றானவனை.