வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–66

பகுதி பத்து : பெருங்கொடை – 5

bl-e1513402911361துறைமேடையில் விருஷசேனனும் விருஷகேதுவும் சத்யசேனனும் அவளுக்காகக் காத்து நின்றிருந்தனர். கர்ணன் கிளம்பிய பின்னரே அங்கே சென்றுசேரவேண்டுமென எண்ணி அவள் பிந்தி கிளம்பியிருந்தாள். தேரிறங்கியதும் விருஷசேனன் வந்து தலைவணங்கி “அஸ்தினபுரிச் செலவு அவர்களுக்கும் நமக்கும் நலம் பயப்பதாகுக, அன்னையே” என்றான். அவன் தலைதொட்டு “வெற்றி நிறைக!” என வாழ்த்தினாள். பிற மைந்தரும் அவள் கால்தொட்டு வாழ்த்து பெற்றனர்.

கர்ணனும் சிவதரும் ஏறிய அரசப்படகின் அமரமுனையில் எழுந்த தலைமைக் குகன் கொம்பொலி எழுப்ப படகுத்துறையிலிருந்து மேடைமேலேறிய காவலன் மறுகொம்பொலி அளித்தான். பதினெட்டு பாய்கள் கொண்ட அரசப்படகு மேடேறும் யானை என அலைகளில் பொங்கி பின் மூழ்குவதுபோல் இறங்கி முன்னால் சென்றுகொண்டிருந்த காவல்படகுகளை தொடர்ந்தது. ஒரு சிறுநகர் கிளம்பிச்செல்வதுபோல அவளுக்குத் தோன்றியது. விழிமயக்கு கொண்ட ஒரு கணத்தில் அவள் நின்றிருக்கும் படித்துறை சென்றுகொண்டிருப்பதாக எண்ணி தலைசுழல சபரியின் தோளை பற்றிக்கொண்டாள்.

அமைச்சர் ஹரிதர் வந்து வணங்கி “அனைத்தும் ஒருங்கிவிட்டன, அரசி. தங்கள் அகம்படிப்படகுகள் இரண்டாம் படித்துறையிலிருந்து கிளம்பிவிட்டன” என்றார். “சென்று வருக, அன்னையே” என்றான் விருஷசேனன். அவள் தலையசைத்துவிட்டு திரும்பி சபரியை நோக்கி தொடரும்படி விழி காட்டினாள். வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் ஒலிக்க படகை அணுகி நடைபாலத்தினூடாக ஏறி படகுக்குள் சென்றமர்ந்தபோது அவள் கால்கள் பதறிக்கொண்டிருந்தன. உள்ளே நுழைந்ததும் பாலம் விலகிச் சென்றது. பிடியைக் கண்ட களிறோசை என படகிலிருந்து கொம்பொலி எழுந்தது.

அவள் ஆடும் தரையில் நின்று கரையை நோக்கினாள். உள்ளம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. இதோ இச்சிறு சில்லையை உதைத்து மேலெழுந்துவிட்டேன். இதுநாள்வரை கரந்து வளர்த்த சிறகுகளை முற்றிலும் விரிக்கவிருக்கிறேன். வானில் நீந்தி திரும்பி நோக்குகையில் எப்படி இருக்கும் இந்நகர்? கைவிடப்பட்ட சிதைந்த கூடு. இத்தனை நாள் இங்கிருந்தோமா என்று வியக்க வைக்கும் சிறுவட்டம். அவள் உதடுகளை உள்மடித்து உளவிசையை அடக்கிக்கொண்டாள்.

தொழுதபடி படகுத்துறையில் நின்றிருந்த மைந்தரைப் பார்த்ததும் அவளுக்கு உள்ளிருந்து ஒரு புன்னகை ஊறியெழுந்தது. இவர்கள் என்னை அறிந்திருக்கவில்லை. என்னுடன் இரவும் பகலும் இருக்கும் இச்சேடி என்னை அறியாள். நான் சென்ற தொலைவுகள் எதையும் இவர்கள் உணர இயலாது. சிறு வைரக்கல்லுக்குள் ஒளி பல்லாயிரம் யோஜனை தூரம் பயணம் செய்கிறது என்ற காவிய வரியை நினைவுகூர்ந்தாள். அவ்வைரத்தை கரிய பட்டில் சுற்றி என் தனிப் பேழைக்குள் வைத்திருக்கிறேன். முடிவிலாது திரும்பித் திரும்பி சென்றுகொண்டே இருக்கின்றது ஒற்றைச்சுடர் நீட்சி. இவர்கள் எப்போதும் எதையும் அறியப்போவதில்லை.

படகு கொம்போசையுடன் முன்னகர்ந்தபோது அவள் திடுக்கிட்டு நிலையழிந்து கயிற்றை பற்றிக்கொண்டாள். சகடத்தைச் சுழற்றி நீருக்குள் இருந்து நங்கூரத்தை மேலே தூக்கினர். அவள் அதன் பச்சைப்பாசி படிந்த பருத்த கொக்கிகளை பார்த்தாள். நீரைக் கவ்வும் முட்கள். எத்தனை தடித்தவை! மிக மென்மையானதென்று தோன்றும் நீரைக் கவ்வ அவை தேவையாகின்றன. பெருங்கலங்களை கவ்வி நிறுத்தியிருக்கிறது நீர். அலைநெளியும் மேற்பரப்பில்தான் அது மென்மையானது. ஆழத்தில் வைரமென இறுகுவது. பாய்கள் பெரிய கொடிகளென சுருளவிழ்ந்து மேலெழுந்து சென்றன. நெய்பற்றி மேலேறும் தழல்களென அவற்றை தொல்பாடல் ஒன்று சொல்வதை எண்ணிக்கொண்டாள்.

எண்ணியிராத கணத்தில் “சிறகு!” என்னும் சொல் நெஞ்சிலெழுந்தது. ஆடையை பற்றிக்கொள்பவள்போல நெஞ்சை அழுத்திக்கொண்டாள். இக்கணமே நான் இறந்துவிடுவேனா என்ன? சிறகுகள் விரிகின்றன. இப்பெருங்கலத்தைத் தூக்கி வானில் மிதக்கவைக்கும் அளவுக்கு அகன்றவை. கொடிமர உச்சியில் கொடி துடிதுடித்தது. முழங்கை தடிமனுள்ள வடங்கள் அனைத்தும் சீற்றம்கொண்டவைபோல் சுருள்களிலிருந்து விசைகொண்டு எழுந்து நீண்டு இறுகி மூங்கில்களென உருமாறி நின்றன. “நீர் வந்து அறையும் அரசி, உள்ளே வருக!” என்றான் குகன். “இல்லை, என்னால் உள்ளே அமரவியலாது” என்றாள் சுப்ரியை.

நூறு கையசைவுகள் வழியாக படகுக்கு ஆணைகள் வந்தன, விடைபெறல்கள் நிகழ்ந்தன. வடங்களை அவிழ்த்து சுருட்டி கரைநோக்கி வீசினர். அமரத்தின் கூர்முகப்பு வானில் எழவிரும்பும் பறவையின் அலகென மேலே தூக்க படகு அலைமேல் ஏறி அப்பால் சரிந்து அலைவளைவில் சறுக்கி முன் சென்றது. பயிலாப் புரவியென படகு தன்னை பின்பக்கம் தூக்கி முன்பக்கம் தள்ளிக் கவிழ்க்க முயல்வதை அவள் கண்டாள். அனைத்து கட்டுகளையும் மறந்து கைவீசி உரக்க கூவி நகைத்தாள் அவளைத் திரும்பிப்பார்த்த சபரி புன்னகைத்து “கிளம்பிவிட்டோம், அரசி” என்றாள் “ஆம்” என்று அவள் சொன்னாள்.

பகல் முழுக்க அவள் அமரமுனையருகே படகின் விலாவிளிம்பில் பாய்மரக் கயிறுகளைப் பற்றியபடி நின்று தொலைவில் பச்சைப்பெருக்கென சென்றுகொண்டிருந்த கரையோரக் குறுங்காடுகளை பார்த்துக்கொண்டிருந்தாள். கடந்துசெல்லும் ஒவ்வொரு படகையும் விழிமறைவதுவரை நோக்கினாள். சிறகடித்து தாழ்ந்திறங்கி பாய்க்கயிற்றில் அமர்ந்து சிறகுப்பிசிறுகள் உலைய ஆடிய நீர்ப்பறவைகளை நோக்கி கைவீசிச் சிரித்தாள். அணுகும் படகுத்துறைகளைக் கண்டதுமே அது எந்த ஊர் என்று சொன்னாள். அங்கிருக்கும் துலாநிலைகளின் எண்ணிக்கையை, சாலைகளின் அமைப்பை சபரியை நோக்கி கூவினாள்.

முதலில் அது தொடக்க எழுச்சி என்றும் விரைவிலேயே விழிசோர்ந்து உளம்நிறைந்து உள்ளே வந்துவிடுவாள் என்றும் சபரி எண்ணினாள். ஆனால் பகல் முழுக்க சுப்ரியை அங்கே நின்றிருக்கக் கண்டு “அரசி, கோடைவெயில் எரிக்கிறது. உள்ளே வந்தமர்க!” என்றாள். “இல்லை, நீ செல்க!” என்றாள் சுப்ரியை. மேலும் வெயில் எழுந்தபோது பாய்நிழலில் சென்று நின்று நோக்கிக்கொண்டிருந்தாள். கரைகளையும் வானையும் நீர்மீன்களையும் ஒரே தருணத்தில் நோக்கும்படி விழிகளை பகுத்துக்கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது.

வெயில் தழையத் தொடங்கும்போதேனும் ஓய்வெடுக்க வருவாள் என சபரி எண்ணினாள். நீர்க்காற்று வெயிலை அறியச்செய்யவில்லை என்றாலும் பகல் முழுக்க காய்ந்த அவள் முகம் சுண்டி தேன்நிறம் கொண்டிருந்தது. தலைமயிர் காய்ந்து சிறுகீற்றுகளாக பறந்துகொண்டிருந்தது. கூச்சல்களும் நகைப்புகளும் மெல்ல ஓய அவள் விழிகள் திறந்து கனவிலென அமர்ந்திருந்தாள். அறைவாயிலில் நின்று நோக்கிய சபரி அவள் கருவிழிகள் ஓயாது அசைந்துகொண்டிருப்பதை, உதடுகள் ஏதோ சொல்லிக்கொண்டே இருப்பதை, கைவிரல்கள் பின்னிவிளையாடுவதை கண்டாள்.

அந்தி எழத்தொடங்கியது. நீரிலாடிய வான்செம்மை மறைந்தது. வானம் இருண்டு முகில்கள் ஒவ்வொன்றாக அணைந்தன. நீர் கரிய வழிவாக படகுகளின் ஒளியை சிதறடிக்கும் சிற்றலைகளுடன் நெளிந்தது. அப்பால் சென்ற படகுகள் சாளர ஒளிப்புள்ளிகள் கண்களாக பெரிய மீன்கள் என கடந்துசென்றன. பகல் முழுக்க நீரிலிருந்து எழுந்துகொண்டிருந்த நீராவிமணம் மாறி சிதறிய நீர்த்துளிகளில் பாசிமணம் தெரிந்தது. கரையிலிருந்து வந்த காற்றில் மென்குளிரும் தழைமணமும் கரைச்சேற்றுமணமும் இருந்தன. கரையில் இருளே வேலியெனத் தெரிந்தது. அவ்வப்போது மாபெரும் தட்டுவிளக்குபோல் ஏதேனும் படகுத்துறை வந்து மிதந்தலைந்து பின்னால் ஒழுகிச்சென்றது.

சபரி அவளருகே சென்று “அரசி, தாங்கள் உள்ளே வரலாமே?” என்றாள். “நீ சென்று படுத்துக்கொள்” என்றாள் சுப்ரியை. “அரசி, இன்னும் நெடுந்தொலைவு இருக்கிறது. இரவெழுந்துவிட்டது. நீராடி உணவருந்தி ஓய்வெடுக்கலாம்” என்று சபரி சொன்னாள். அவளிடம் செல்லும்படி சுப்ரியை கைகாட்டினாள். கதவருகே சென்று நின்று நோக்கிக்கொண்டிருந்த சபரி கால்கடுத்து அமர்ந்தாள். மீண்டும் அருகே சென்று “அன்னம் கொண்டுவரலாமா, அரசி?” என்றாள். “ஆம்” என்றாள் சுப்ரியை. அவள் தாலத்தில் அப்பங்களையும் பழங்களையும் நீரையும் கொண்டுசென்று கொடுத்தாள். அங்கிருந்தபடியே அவற்றை உண்டு தாலத்திலேயே கைகழுவிக்கொண்டாள்.

அவளை நோக்கியபடி சபரி அமர்ந்திருந்தாள். அமரவிளக்கின் ஒளியில் செந்நிறத் தீற்றலாக கரியவெளியில் எழுதிய ஓவியமெனத் தெரிந்தாள். தலையைச்சுற்றி சேலையை இழுத்துவிட்டுக்கொண்டு உடல் ஒடுக்கி அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தாள். படகு திரும்பிய கோணத்தில் விழிமணிகளின் மின்னிப்பு தெரிந்து மறைந்தது. விண்ணில் மீன்கள் முழுத்தெழுந்து வந்தன. அள்ளிவிடலாமென அருகே வளைந்திருந்தது வானம். பாய்கள் தலைக்குமேல் படபடத்து ஓசையிட்டன. காற்றில் புடைத்து கயிறுகளில் திரும்பிக்கொண்டன.

அவளை இருபதாண்டுகளாக அறிந்திருந்த சபரி முற்றிலும் புதிய ஒருத்தியை நோக்கிக்கொண்டிருந்தாள். அல்லது, என்றும் அறிந்திருந்ததே இவளைத்தானோ? அவள் துயின்று தலை கதவின் சட்டத்தில் சென்று முட்டிக்கொண்டபோது விழித்துக்கொண்டாள். வாயைத் துடைத்தபடி எங்கிருக்கிறோம் என உணர்ந்தபோது அரசியைப்பற்றிய எண்ணத்தை அடைந்தாள். பாய்ந்தெழுந்து நோக்கியபோது அவள் அங்கேயே அசையாமல் அவ்வண்ணமே அமர்ந்திருப்பதை கண்டாள். தன் ஆடை எழுந்து பறப்பதையும், காற்று நன்றாக குளிரத்தொடங்கியிருப்பதையும் உணர்ந்து உள்ளே சென்று பருமனான கம்பளிப் போர்வையை கொண்டுவந்து அவளிடம் அளித்தாள். அதை எச்சொல்லுமின்றி வாங்கி அவள் போர்த்திக்கொண்டாள்.

அந்த விழிகளின் மின்னை அவள் திடுக்கிடலுடன் பார்த்தாள். பித்தர் விழிகள். பேய்கொண்டவர்களின் விழிகள். அவள் மீண்டும் வந்து வாயிலருகே அமர்ந்தாள். மீண்டும் துயின்று விழித்தபோது விடிவெள்ளி எழுந்திருந்தது. அவள் அங்கேயேதான் இருந்தாள். விடியலெழுவதை நோக்கிக்கொண்டு சபரி நின்றிருந்தாள். ஒவ்வொரு விண்மீனாக உள்ளிழுக்கப்பட்டு வானம் வெளிறியது. நீர் நிறம் மாறத்தொடங்கியது. அதன் பரப்பைக் கிழித்தபடி மீன்கள் எழுந்து எழுந்து விழுந்த அலைவட்டங்கள் ஒன்றுடன் ஒன்று விளிம்புமுட்டி கலைந்தன. ஒளி கொண்டன பாய்கள். பின் கிழக்கே செம்மை தெரியலாயிற்று.

அவள் உள்ளே சென்று ஏவலனிடமிருந்து கொதிக்கும் அக்காரஅன்னப்பாலை கொண்டுவந்து அரசிக்கு அளித்தாள். அவள் அருந்தி முடித்ததும் “வருக அரசி, சற்று இளைப்பாறுக!” என்றாள். அவள் சபரியை எவரென அறியாதவளாக நோக்கினாள். “அரசி, தாங்கள் காலைக்கடன் கழிக்கவேண்டும். உடைமாறவேண்டும்.” அவள் பாவை என எழுந்துகொண்டாள். அவள் ஆடைமாற்றிக்கொண்டிருக்கையில் கைகளிலும் கன்னத்திலும் தோல் வெந்ததுபோல சிவந்திருப்பதை சபரி கண்டாள். அவள் கேட்ட அனைத்துக்கும் ஓரிரு சொற்களிலேயே சுப்ரியை மறுமொழி சொன்னாள்.

அவளிடம் சற்று படுக்கும்படி சபரி சொன்னாள். ஆனால் மேலாடை ஒன்றை எடுத்துக்கொண்டு அவள் மீண்டும் படகின் விளிம்புக்கே சென்றாள். சபரி ஒரு நீண்ட பீடத்தில் மரவுரி விரித்து வெளியே கொண்டுசென்று போட்டாள். அதில் அமரும்படி கோரினாள். சுப்ரியை அதிலமர்ந்து நீரையும் கரையையும் நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் அதிலேயே விழுந்து துயின்றாள். எழுந்தமர்ந்து மீண்டும் நோக்கிக்கொண்டிருந்தாள். அன்றிரவும் அவ்வண்ணமே அமர்ந்திருந்தாள். மறுநாள் பகலில் ஆடைமாற்றி அங்கே சென்றமர்ந்தாள். அப்பயணம் முழுக்க அவள் அங்கேயேதான் இருந்தாள். அவள் மொழியையே மறந்துவிட்டிருந்தாள் என சபரி எண்ணினாள்.

அவள் செயல்கள் ஒவ்வொன்றும் திகைப்பூட்டின. எண்ணும்தோறும் அச்சத்தையும் பதற்றத்தையும் நிறைத்தன. ஆனால் சொற்கள் ஓய அவளை வெறுமனே நோக்கியிருக்கையில் அந்த சுப்ரியையை அவள் முன்னரே நன்கறிந்திருப்பதாகத் தோன்றியது. அது ஏன் என்று அவள் தன்னை உசாவிக்கொண்டாள். உள்ளம் அவ்வாறு உணர்வதற்கெல்லாம் எந்த விளக்கமும் இல்லை என்று பின் எண்ணிச் சென்றடைந்தாள். அவள் முன்பு சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. ஆனால் அச்சொற்களென்ன என்று அவளால் தெளிவுற எடுக்க முடியவில்லை. அச்சொற்களால் உருவான உணர்வுமட்டும் நிலைத்திருந்தது அகத்தில்.

bl-e1513402911361அஸ்தினபுரியை படகுகள் சென்றடைந்தபோது சபரிக்கு சற்று ஆறுதல் ஏற்பட்டது. சுப்ரியை விரைவில் மீண்டுவிடுவாள் எனத் தோன்றியது. கால்கள் பழகிய நிலைத்த தரை சித்தத்தையும் நிலைகொள்ளச் செய்யும் என எண்ணினாள். அன்று காலை புலரி எழுந்ததும் அவர்கள் படகுத்துறையை அணையக்கூடும் என்று சொல்லப்பட்டது. அவள் கருக்கிருளிலேயே சுப்ரியையை அழைத்து உள்ளே கொண்டுசென்று நீராட்டி கூந்தல் முடைந்தாள். முகச்சுண்ணமும் வண்ணமும் தீட்டினாள். அரசியருக்குரிய பொன்னூலாடையும் அணிகளும் அணிவித்தாள். சுப்ரியை அதையெல்லாம் அறிந்ததுபோலவே தெரியவில்லை. பாவையை அணிவிப்பதுபோலிருந்தது.

“தாங்கள் சொன்னபடி அனைத்து அணிகளையும் கொண்டுவந்திருக்கிறோம், அரசி… தாங்கள் விரும்புவதை அணியலாம்” என்றாள் சபரி. “ஆம்” என்று அவள் பொருளில்லாமல் சொன்னாள். “மகத அரசியிடம் மட்டுமே இருக்கும் செவ்வைரம் பதித்த நெற்றிச்சுட்டி உள்ளது… அதை எடுக்கட்டுமா?” என்றாள் சபரி. “ஆம்” என்றாள் சுப்ரியை. “அன்றி, இந்த வெண்பட்டாடைக்கு நீலமணி பொருந்துமென எண்ணுகிறேன். அருமணிப் பதக்கம் ஒன்றுள்ளது. நாம் அதை காம்போஜ அரசரிடமிருந்து கப்பமாகப் பெற்றோம். அதை சூடுகிறீர்களா?” அதற்கும் சுப்ரியை பொருளில்லாமல் “ஆம்” என்று தலையசைத்தாள்.

சபரி பெருமூச்சுவிட்டாள். பின்னர் மேலே கேள்விகளேதுமின்றி அவளை அணிசெய்தாள். அவளை ஆடிமுன் நிறுத்தி “முழுதணிக்கோலம், அரசி. இத்தகைய கோலத்தில் நீங்கள் சம்பாபுரியில்கூட எழுந்தருளியதில்லை” என்றாள். அவள் தலையசைத்தாள். “அஸ்தினபுரியின் அரசியர் எவருக்கும் நிகராக அணிகள் இருக்கவியலாது. ஒருவேளை முதலரசி பானுமதி கொண்டிருக்கலாம். பாரதவர்ஷமே பணிந்து கப்பம்கட்டிய அரசரின் அரசி நீங்கள் என அறிய உங்கள் அணிகளை நோக்கினாலே போதும்.” அவளிடம் சீற்றமோ இகழ்ச்சியோ வெளிப்படும் என எண்ணியே அவள் அதை சொன்னாள். ஆனால் சுப்ரியை அதற்கும் “ஆம்” என்றாள்.

சபரி சலிப்புடன் பெருமூச்சுவிட்டாள். “இன்னும் சற்றுநேரத்தில் நாம் படகுத்துறையை அடைவோம், அரசி. அங்கே தேர்கள் ஒருக்கமாகி நின்றிருக்கும். அங்கிருந்து சாலையில் சென்று அஸ்தினபுரியின் கோட்டையை அடையவேண்டும்” என்றாள். சுப்ரியை தலையசைத்தபடி படகின் விளிம்புக்குச் செல்ல “அரசி, தாங்கள் அங்கே நிற்கக்கூடாது. தாங்கள் தோன்றுவதற்கென நெறிகள் உள்ளன. மேலும் ஆடையும் அணியும் காற்றில் கலைந்துவிடக்கூடும்” என்றாள் சபரி. அவள் தலையசைத்துவிட்டு மரவுரி விரித்த படுக்கையில் அமர்ந்தாள்.

படகுகள் அஸ்தினபுரியின் பெரிய அரசப்படகுத்துறையை சென்றடைந்ததை கொம்பொலிகளும் முரசுமுழக்கமும் அறிவித்தன. ஏவல்படகுகள் அணுகி ஏவலர் இறங்கிச்சென்று நின்றனர். காவலர்கள் நிரைநிரையாக இறங்கி அணிவகுத்தனர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் எழுந்தபடியே இருக்க அரசப்படகு முகம்நீட்டி துறைதொட்டது. கர்ணனும் சிவதரும் நடைபாலத்தினூடாக கரைநோக்கி சென்றனர். அவர்களுக்கு முன் அங்கநாட்டின் சூரியக்கொடி ஏந்தி ஒரு வீரன் சென்றான். கர்ணனின் யானைச்சங்கிலிக் கொடியுடன் இன்னொருவன் தொடர்ந்தான். கர்ணன் ஒளிவிடும் பொற்கவசமும் மணிக்குண்டலங்களும் செம்பருந்தின் இறகுசூடிய அங்கத்தின் மணிமுடியுமாக அரசணிக்கோலத்தில் இருந்தான்.

அவர்களை வரவேற்க துர்மதனும் துச்சகனும் வந்திருந்தார்கள். அவர்கள் கைகூப்பியபடி அணுக அமைச்சர் கனகரும் துணையமைச்சர் மாதவரும் பின்னால் வந்தனர். முறைமைப்படி அணித்தாலம் உழிந்து பரத்தையர் வரவேற்றனர். மங்கல இசைசூழ, வாழ்த்தொலிகள் எழ அவர்கள் கர்ணனை வரவேற்று தேரிலேற்றி அழைத்துச்சென்றனர். அதன் பின்னரே அவர்கள் சென்ற படகு கரையணைய ஆணை எழுந்தது.

படகின் முகப்பு கரைமேடையை அடைந்தபோதுதான் சபரி அவர்களை வரவேற்க படகுத்துறையில் அஸ்தினபுரியின் அரசியரான அசலையும் தாரையும் வந்திருப்பதை கண்டாள். அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த அரசியரை அவளால் அடையாளம் காணமுடியவில்லை. உள்ளே ஓடிச்சென்று மஞ்சத்தில் சாளரத்துளையினூடாக நோக்கி அமர்ந்திருந்த சுப்ரியையிடம் “அரசி, அஸ்தினபுரியின் இரண்டு அரசியர் தங்களை வரவேற்க வந்துள்ளனர்” என்றாள். “அது வழக்கமே இல்லை. தொல்குடி ஷத்ரிய அரசர்களுக்கு மட்டுமே அந்த முறைமை அளிக்கப்படுகிறது.” சுப்ரியை “வந்துவிட்டோமா?” என்றபடி எழுந்தாள். விழிகளில் அச்சொற்களை அவள் உள்வாங்கிக்கொண்டதே தெரியவில்லை. “பொறுங்கள், அரசி. நான் அனைத்தும் சித்தமான பின் அழைக்கிறேன்” என்று சபரி வெளியே ஓடினாள்.

வெளியே கலிங்கத்தின் சூரியக்கொடி ஏறத்தொடங்கியது. முரசுகளும் கொம்புகளும் முழங்கின. “கலிங்கமகள் வாழ்க! அங்கநாட்டரசி வாழ்க!” என வீரர்கள் வாழ்த்து கூவினர். நடைமேடை நீண்டுவந்து படகின் விளிம்பை தொட்டது. சபரி அவர்களில் ஒருத்தி அவந்திநாட்டு இளவரசி அபயை என்று அடையாளம் கண்டாள். உடனே பின்னால் நிற்பவர்களில் கௌரவ அரசியர் கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை அனைவரையும் அறிந்துகொண்டாள். உள்ளே ஓடிச்சென்று “அரசி, ஏழு அரசியர் வந்து வரவேற்பது அஸ்தினபுரியின் வரலாற்றிலேயே இதுவரை நிகழ்ந்திருக்காதென்று எண்ணுகிறேன். இது எளிய செய்தி அல்ல. நாளை சூதர்கள் பாடுவார்கள், சொல்லி அழியாது வாழும் நாள் இது…” என்றாள்.

“வந்துவிட்டோமா?” என சுப்ரியை ஆர்வமின்றி கேட்டாள். சபரி திகைத்துவிட்டாள். ஒருகணம் சினம் எழுந்து முகத்தை அனலாக்கியது. ஆணவத்தின் உச்சம் அது என்று தோன்றியது. அப்படி தருக்க அவள் யார், கலிங்கத்தின் ஒரு பகுதியை ஆளும் அரசனின் இளைய அரசியின் மகள் மட்டும்தானே? சித்ராங்கதனை பேரரசன் என்று எவரும் எண்ணுவதில்லை. “சென்றமுறை தங்கள் தந்தை தட்சிண கலிங்கத்திலிருந்து அவந்தி சென்றபோது அரசரின் ஏழாம் மைந்தர் வந்து வரவேற்றார் என்பதையே சூதர்களைக்கொண்டு செவிக்காவியமாக பாடச்செய்தார்கள். இதோ, அவந்தியின் அரசியே வந்து நின்றிருக்கிறார்கள்” என்றாள். அவள் எண்ணியதுபோல சுப்ரியை சினம் கொள்ளவில்லை. “நன்று, நாம் இறங்கலாமா?” என்றாள்.

சுப்ரியையின் முகத்தை கூர்ந்து நோக்கிய சபரி அவள் சித்தம்பிறழ்ந்திருக்கலாமோ என ஐயுற்றாள். ஆனால் இயல்பாக எழுந்த சுப்ரியை “நாம் செய்யவேண்டியதென்ன என்று அவர்கள் செய்யும் கையசைவுகளைக்கொண்டு கணித்து என்னிடம் சொல்லிக்கொண்டிரு” என கூந்தலை சீரமைத்தாள். வெளியே வரவேற்கும் கொம்பொலிகள் எழுந்தன. சபரி அவள் ஆடைகளையும் குழலையும் சீரமைத்து “வருக, அரசி!” என அழைத்துச்சென்றாள். பாவைபோல நீளடிவைத்து சுப்ரியை நடந்தாள். அவள் மேலாடை தலையிலிருந்து நழுவியதை உணரவில்லை. சபரி அதை எடுத்து அவள் கொண்டைமேல் இட்டாள்.

சுப்ரியை வெளியே தோன்றியதும் வாழ்த்தொலிகள் உச்சம்கொண்டன. நடைமேடையினூடாக அவள் வெளியே சென்றதும் மலர்மழை பொழிந்தது. அஸ்தினபுரியின் மண்ணில் அவள் காலடி வைக்குமிடத்தில் மலரிட்டனர். அசலையும் தாரையும் அபயையும் அருகணைந்து வணங்கி “அங்கநாட்டரசிக்கு தலைவணங்குகிறோம். அங்கே அரண்மனை முகப்பில் தங்களுக்காக மூத்த அரசியர் சத்யசேனையும் சத்யவிரதையும் அரசி பானுமதியுடன் காத்திருக்கிறார்கள். தங்களை நேரடியாகவே அகத்தளத்திற்கு கூட்டிச்செல்லும்படி பேரரசி காந்தாரியின் ஆணை. தங்களுக்காக நகரே ஒருங்கியிருக்கிறது” என்றனர். தாரை “அஸ்தினபுரி மகிழும் நன்னாட்களில் ஒன்று இது, அரசி” என்றாள்.

அபயை “அனைவரையும்விட அரசர் மகிழ்வுகொண்டிருக்கிறார். ஏழுமுறை கனகரே வந்து இங்கே அனைத்தையும் ஒருக்கியிருக்கிறார்” என்றாள். ஸகை “இது தங்கள் அரசென்றே கொள்க, அரசி… வருக!” என்றாள். அவர்கள் வழிநடத்தி கூட்டிச்செல்ல சுப்ரியை நடந்தாள். அவள் திரும்பி நோக்க சபரி அவள் எண்ணத்தை உய்த்துணர்ந்து “அணிப்பேழைகள் அனைத்தையும் அரண்மனைக்கே கொண்டுவரும்படி ஆணையிட்டுள்ளேன், அரசி” என்றாள். ஆனால் அச்சொற்களை அவள் உளம்பெறவில்லை என விழிகள் காட்டின. “இந்தப் படகு நாம் செல்லும்வரை இங்கே நின்றிருக்குமா?” என்றாள் சுப்ரியை. சபரி திகைத்து திரும்பி நோக்கியபின் “ஆம்” என்றாள். அசலை “நீங்கள் திரும்பிச்செல்ல இன்னும் நெடுநாட்களாகும், அரசி. வேள்விக்குப் பின் இங்கே அரசவைக்கூடுகைகளே பல உள்ளன, தங்கள்பொருட்டு விழவுகளேகூட ஒருங்கமையக்கூடும்” என்றாள்.

வெண்ணிறமான கொழுத்த உடலும் பெரிய கைகளும் உருண்ட முகமும் கொண்டிருந்த அசலையின் சிறிய உதடுகளும் கண்களும் சேர்ந்து எப்போதுமே சிரித்துக்கொண்டிருப்பவை போலிருந்தன. அவளை எங்கோ பார்த்திருப்பதுபோல சபரி எண்ணினாள். அவள் உள்ளத்தை உணர்ந்துகொண்ட அசலை “என் அக்கையை பார்த்திருப்பீர்கள். நான் அவள் தோற்றம் கொண்டவள்” என்றாள். சபரி “ஆம்” என்றாள். சுப்ரியை “நாம் செல்வதுவரை இப்படகு இங்கேயே நின்றிருக்கட்டும்” என்றாள். சபரி சிறு ஒவ்வாமையை உணர்ந்தபடி “ஆம் அரசி, ஆணை” என்றாள்.

அவர்கள் தேர்களை நோக்கி சென்றனர். பொன்முலாம் பூசிய வெள்ளித்தேர் கலிங்கக்கொடியுடன் நின்றிருந்தது. சபரி மீண்டும் உள எழுச்சியுடன் “பொற்சுடர்தேர் அரசி, தங்களுக்காக” என்றாள். “ஆம்” என்றாள். சபரி பெருமூச்சுவிட்டாள். அவள் உள்ளம் அமைந்து அனைத்து எண்ணங்களும் அசைவிழந்தன. காவலர்கள் கரிய புரவிகளில் வேல்களுடன் அணிவகுத்து முன்னால் சென்றனர். தொடர்ந்து மங்கலச் சேடியரின் தேர்கள். அதைத் தொடர்ந்து வந்து நின்ற வெள்ளித்தேரில் ஏறும்படி அசலை கைகாட்டினாள். சபரி “ஏறுக, அரசி!” என்றாள். சுப்ரியை படிகளில் ஏறி உள்ளே அமர்ந்தாள். தன் மேலாடையை எடுத்து முகம் மீது போட்டுக்கொண்டாள்.

சபரி ஏறி அமர்ந்தாள். அசலை “தேர் கோட்டைமுகப்பை அடைந்ததும் திரைகள் அகலட்டும். கலிங்க அரசி மக்கள் காண நகர்நிறைகோலத்தில் செல்லவேண்டுமென்று பேரரசியின் ஆணை” என்றாள். “ஆணை” என சபரி தலைவணங்கினாள். திரைகள் சரிய தேர் கிளம்பியது. சுப்ரியை “நம் படகுகள் அனைத்தும் இங்கே நின்றிருக்கும் அல்லவா?” என்றாள். “ஆம், அரசி” என்ற சபரி ஏதோ நீரணங்கு அரசியை பற்றிவிட்டது என்ற முடிவுக்கு வந்தாள். அஸ்தினபுரியில் ஏதேனும் நிமித்திகனை எவருமறியாமல் அழைத்து அவளை நோக்கச் செய்யவேண்டும். முடிந்தால் அணங்கு ஒழிய ஒரு வெறியாட்டையும் இரவில் இயற்றிவிடவேண்டும்.

அவர்களின் தேர் மேலேறி அஸ்தினபுரி செல்லும் சாலையை நோக்கி சென்றது. சபரி திரைவழியாக நோக்கியபோது அசலை திரும்பி சுங்கமாளிகைக்கு அருகே கங்கையின் நீர்ப்பரப்பின் அருகே கிளைபரப்பி நின்ற ஆலமரத்தடியில் இருந்த சிற்றாலயத்திலமர்ந்த அன்னை ஒருத்தியின் முன் கைகூப்பி நிற்பது தெரிந்தது. அருகே பிற இளவரசியர் நின்றனர். அது அம்பை அன்னையின் ஆலயம் என அவள் நினைவுகூர்ந்தாள். அஸ்தினபுரியின் அமுதகல முத்திரைகொண்ட பெருவளைவைக் கடந்து தேர் சென்றது. அது விரைவு கொண்டதும் சபரி பதற்றம் விலகி சாய்ந்தமர்ந்தாள். சுப்ரியை திரைகளை விலக்கி வெளியே சென்றுகொண்டிருந்த குறுங்காட்டை நோக்கிக்கொண்டிருந்தாள்.

புதிய சாலைகள் இரண்டு கிளைபிரிந்து சென்றன. “இடப்புறம் செல்வது வேள்விக்காட்டுக்கு, வலப்புறம் அந்தணர்குடிகளுக்கு” என்றாள் சபரி. “அரசி, இதைப்போல ஒரு வேள்வி இதற்கு முன்னர் கார்த்தவீரியர் மட்டுமே நிகழ்த்தினார் என்கிறார்கள்.” சுப்ரியை மறுமொழி சொல்லாமல் நோக்கிக்கொண்டு வந்தாள். “இங்குள்ள வரவேற்பைக் கண்டால் நாம் எண்ணிவந்தது எளிதில் ஈடேறுமென்று தோன்றுகிறது. அரசத்தோழர் என நம் அரசர் வேள்வியவையில் அமர்வார். அருகே நீங்களும் முடிசூடி அமர்வீர்கள்.”

சுப்ரியை அதை கேட்டாளா என ஐயுற்று “ஆனால் ஒருவேளை அந்த உரிமையை நமக்கு மறுக்கும்பொருட்டு இந்த மிகையான வரவேற்பு அளிக்கப்படுகிறது என்றும் கொள்ளலாம்” என்றாள் சபரி. அதற்கும் அவளிடம் எதிர்வினை இல்லை என்று கண்டு பெருமூச்சுவிட்டு கால்களை நீட்டி கண்களை மூடிக்கொண்டாள். தேரின் குலுக்கல்களில் அவள் நீர்ப்பரப்பின் மேல் அலைவுறும் படகொன்றில் அமர்ந்திருப்பதாக உணர்ந்தாள்.

முந்தைய கட்டுரையானைவந்தால் என்ன செய்யும்?
அடுத்த கட்டுரைஅகாலக்காலம் -கடிதங்கள்