ஜெ
சவூதிஅரேபியாவின் மதவாதம் பற்றி எழுதியிருந்தீர்கள், இப்போதைய அரசர் வந்தபின் தெளிவாகவே சீர்த்திருத்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. உங்கள்பார்வைக்கு
http://www.arabnews.com/node/1243446/saudi-arabia
இனிமேல் சவூதி அரேபியாவில் பெண்கள் புர்க்கா போட்டாகவேண்டும் என்று சட்டம் இல்லை. அது எவ்வகையிலும் மதக்கடமை அல்ல. தலைமை மதகுருக்களின் கூட்டமைப்பைச் சேர்ந்தவரிடமிருந்தே அறிவிப்பு வந்திருக்கிறது. எதிர்காலத்தில் மேலும் சீர்திருத்தங்கள் வரக்கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் மிகச்சில இஸ்லாமியக் குழுக்களைச் சேர்ந்த மட்டுமே எண்பதுகளுக்கு முன் புர்க்கா போட்டுக்கொண்டிருந்தார்கள். சவூதிஅரேபியாவிலிருந்து வஹாபிய அடிப்படைவாதம் இங்கே பரவியபோதுதான் அனைவரும் புர்க்கா போடவேண்டும், அது மதக்கடமை என்பது வலியுறுத்தப்பட்டது. இன்றும்கூட கட்டாயத்தாலும் வன்முறைமீதான அச்சத்தாலும்தான் புர்க்காபோடுகிறார்கள் பெரும்பாலானவர்கள். அவர்கள் சவூதி அரேபியாவைத்தான் சுட்டிக்காட்டினார்கள். இத்தனைபெரிய ஒரு சமூகப்பின்னகர்வு இங்கே நிகழ்ந்தபோது இங்குள்ள முற்போக்கினரிடமிருந்து ஒரு முனகலாகக்கூட எதிர்ப்பு வரவில்லை என்பதையும் வரலாறு பதிவுசெய்யவேண்டும்
இன்றுகூட காஷ்மீரில் சன்னி இஸ்லாமியப்பெண்கள் புர்க்கா போடுவதில்லை. பாகிஸ்தானில் பெரும்பாலான இடங்களில் புர்க்காக்கலாச்சாரம் இல்லை. சவூதியில் மேலும் பல மாற்றங்கள் வரக்கூடும் என்கிறார்கள். அதை எல்லாம் இங்குள்ள வஹாபியர்கள் கருத்தில்கொண்டு தங்கள் சமூகத்தை முன்னேறவிட்டார்கள் என்றால் நல்லது என்று நினைக்கிறேன்
நிசார் அகமது
***
அன்புள்ள நிசார்,
வஹாபியம் சவூதிஅரேபியாவில் 1800கள் முதல் உள்ளது. அது ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம். ஏறத்தாழ அதேகாலகட்டத்தில் உலகின் அனைத்து மதங்களிலுமே ‘தூய்மைவாத’ இயக்கங்கள் ஆரம்பித்தன. ஒரேசமயம் அவை மூடநம்பிக்கைகள், அமைப்புசார்பு ஆகியவற்றுக்கு எதிரான சீர்திருத்தநோக்கம் கொண்டவையாகவும் மறுபக்கம் ஏதேனும் நூல், நம்பிக்கைத்தொகுதி ஆகியவற்றின்மேல் மூர்க்கமான விசுவாசத்தை வலியுறுத்துவனவாகவும் இருந்தன.
சவூதி அரேபியாவிற்குள்ளேயே செயல்பட்டுக்கொண்டிருந்த வஹாபியம் அந்நாட்டு அரசு அளித்த மிகப்பெரும் நன்கொடைகளால், ஊக்கத்தால்தான் உலகமெங்கும் சென்றது. இன்றைய உலகின் மானுடநெருக்கடிகளில் பல அதன் விளைவுகள். இன்று சவூதி அரேபியா மட்டுமல்ல, அரபுநாடுகளேகூட எண்ணைவிலை வீழ்ச்சியால் பொருளியல் அடித்தளம் கலங்கி அமர்ந்திருக்கின்றன. உலகுக்கு எதிர்நிலை எடுத்து வாழமுடியாதென்ற புரிதலைநோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. வருங்காலத்தில் அவை தங்கள் இரும்புநிலைபாடுகளை நெகிழச்செய்தேயாகவேண்டும்
ஆனால், நேற்று அவர்களால் வளர்த்துவிடப்பட்ட மதக்குழுக்கள், அவை உருவாக்கிய உளநிலைகள் அவ்வாறு எளிதில் கடந்துசெல்லத்தக்கவை அல்ல. அவற்றை உருவாக்குவது எளிது, வெல்வது கடினம். சவூதி அரேபிய அரசையும் மதஅமைப்பையும் நிராகரித்து தங்கள் நம்பிக்கைகளைப் பேணவே அவர்கள் முயல்வார்கள்.
ஆனால் நீண்டகால அளவில் அவர்கள் தனிமைப்பட சவூதி அரசின் இம்முடிவு உதவும், எதிர்ப்புகளைக் கடந்து முழுமையாக நிறைவேற்றப்படுமென்றால்.
ஜெ