அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
ஒரு முறை சிதறாலுக்கு சென்று வந்து, அந்த பயண அனுபவங்களை ஒரு கடிதமாக உங்களுக்கு எழுதினேன். அதற்கு தங்களின் பதிலில் ‘பயண விதிமுறைகள் ‘ என, பயணம் எவ்வாறு முன் தயாரிப்புகளுடன் செல்ல வேண்டும் என அறிவுபூர்வமாக விளக்கியிருந்தீர்கள் . இம் முறை எனக்கு 8 நாட்கள் மும்பையில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அதில் தலையாய நோக்கம், மும்பைக்கு அருகில் உள்ள போரிவெளி என்னும் நகரில் உள்ள ‘கானேரி குகைகள் (KANHERI CAVE )’ என்னும் புத்த குடவறை கோவில்களை காண்பது .
இந்த இடம் மும்பை மேற்கு – போரிவெளி – சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்குள் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணகிரி மலையில் (சமஸ்கிருதத்தில் கருப்பு மலை என்று அர்த்தம் )உள்ளது . சொந்த வாகனத்தில் செல்பவர்கள் நேரடியாக மலையின் அடிவாரத்துக்கே சென்று விடலாம் . இந்த தேசிய பூங்காவிற்குள் நுழைய ரூ.50/- நுழைவு கட்டணம் வசூலிக்கிறார்கள், மேலும் குடவரை கோவில்களை காண ரூ.15/- தனி . இந்த சம்ப்ரதாயங்களை எல்லாம் கடந்து மலை என்ற தொடங்கினால், அழகிலும், தொன்மையிலும் நம்மை அதிர வைக்கும் அந்த அழகிய பிரும்மாண்டமான புத்த குடவரை கோவில்கள் , பள்ளிகள் மற்றும் வசிப்பிடங்களை காணலாம் . ஒரே மலையில் பாறையை குடைந்து செய்த மொத்தம் 109 குகைகள், சிற்பங்களுடனும், இல்லாமலும் உள்ளன.
இந்த மலை எரிமலை குழம்புலால் உருவான பாறைகளால் ஆனது . நாங்கள் தேசிய பூங்காவில் கிடைக்கும் வாடகை காரில் சென்றதால், எங்களுக்கு ஒரு மணி நேரமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் இந்த குகைகளை சுற்றி பார்க்க ஒரு நாள் கூட போதாது . நான் பார்த்த சில குகைகளையும், குடவரை சிற்பங்களையும் பற்றி சுருக்கமாக கூறுகிறேன்.
குகை எண் 1. – பாறையில் செதுக்கப்பட்ட படிக்கட்டுகள் வழியாக சென்றால், இரண்டு உருளை வடிவ தூண்கள் தாங்க, இரு நிலைகளில் உள்ளது முதல் குகை. இது முழுக்க முடிவுறாததாக உள்ளது.
குகை எண் 2. – பாறையை நீள் செவ்வக வடிவில் குடைந்து, சுவரில் புத்தரின் பல வகையான தவ நிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன.
குகை எண் 3. – இந்த குகைக்கு பெயர் ‘சைத்தியகிரஹ’. இந்த குகைதான், மொத்த குகைகளில் உச்சகட்ட அழகுடன், இரண்டு அடுக்குகளில் உள்ளது . நுழைவாயிலில் இரு புறமும், புத்த பெருமான் மகா நிர்வாண நிலையில், அசரடிக்கும் காந்த புன்னகையில் நிற்கிறார். இந்த பிரும்மாண்டமே நம் எண்ணங்களை, யோசிப்பை நிறுத்தி, நம்மை பரவசப்படுத்தி, பரபரப்பை உண்டாக்குகிறது . இந்த இரு சிலைகளையும் கடந்து நாம் மிக பெரிய ஒரு சபையில் நுழைகிறோம். இது ஏறக்குறைய 26 மீட்டர் நீளமும், 14 மீட்டர் அகலமும், 13 மீட்டர் உயரமும் கொண்டது, மேலும் சபையின் இடதும் வலதுமாக 20 பிரும்மாண்டமான தூண்கள், பாறையாய் குடைந்து செய்யப்பட்டு உள்ளது. இது சடவாகன பேரரசின் இந்து மன்னர் சாதகர்ணி ஆட்சியில் (கி.பி. 172 – 201) அவரின் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ளது .
இந்தியாவின் மேற்கே புத்தமதம் பரவ தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் இவ்விடம் முக்கியமான தலமாக இருந்துள்ளது. இங்கு புத்த மதத்தின் ஹீனாயானம் என்னும் பிரிவு கற்பிக்கப்பட்டது. கி.மு. 3ம் நூற்றாண்டில் தொடங்கி 11ம் நூற்றாண்டு வரை பல கால கட்டங்களில் இந்த குடவரை பள்ளிகள், சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன . கி.மு. 3ம் நூற்றாண்டில் தற்போது வடக்கு கொங்கன் எனப்படும் அபராந்தக தேசத்தின் தலை நகரான சோபராவில் இருந்தே புத்த மதம் இந்தியாவின் மேற்கே பரவ தொடங்கியது. மௌரிய பேரரசின் காலத்தில் இந்த இடம் பல்கலைக்கழகமாக இருந்துள்ளது.
நாங்கள் 11, 67,68, மற்றும் 69 எண் குடவரை குகைகளையும் பார்த்தோம். இதில் 11ம் எண் குகை ‘தர்பார் ஹால்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு மலையில் மூன்று காரணங்களுக்காக பாறைகள் குடையப்பட்டு இருக்கலாம். 1. புத்தமதத்தை போதிக்கும் பள்ளிகளுக்காக, தியான அறைகளாக 2. பௌத்த துறவிகள் தங்கமிடங்கள் 3. மழை நீரை சேகரிக்க. மலையில் சமதளமான இடங்களில் பாறைகளை குடைந்து, தொட்டிகள் அமைத்து நீரை சேகரித்து, அந்த மலையில் உள்ள மொத்த பௌத்த வளாகத்திற்கும், நீர் தேவைகள் பூர்த்தி செய்ய பட்டுள்ளது. பிராமி அல்லது தேவநகரியில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு உள்ளது .
மிக மிக பழமையான இந்த இடம் மகாராஷ்டிரா மாநிலத்தின் தொல்லியல் துறையால் நிர்வாகிக்கப்படுகிறது. நுழைவு கட்டணம் வசூலிப்பதில் உள்ள ஆர்வம், இந்தியாவின் பொக்கிஷங்களை பாதுகாப்பதில் இல்லை. குகை 2இல் உள்ள புத்த ‘stupa ‘ எனும் அரை வட்ட கோளம் எல்லாம், சுற்றுலா வரும் கீழோர்களின் பெயர்கள் எழுதப்பட்டும், சேதப்படுத்த பட்டும் உள்ளது. இப்போதும் யாரும் எதுவும் செய்யலாம் என்ற பாதுகாப்பில்லாத நிலையே எல்லா குகைகளுக்கும் உள்ளது. இந்த வரலாற்று பொக்கிஷங்களின் எந்தவித தகவல்களும் ஒரு இடத்திலும் இல்லை.
அஜந்தா எல்லோரா சிற்பங்களை போல் kanheri குகைகளும் சிற்பங்களும் யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகளால் பேணப்பட்டாலொழிய இவை நம் வரும்கால சந்ததிகளுக்கு காண கிடைக்குமா என்பது சந்தேகமே.
தங்களின் அறிவுரையால் மட்டுமே, இந்த இடத்திற்கு செல்லும் முன்பே இணையத்தில் தகவல்களை அறிந்து கொண்டு முழுமையாக அனுபவிக்க முடிந்தது.
சரன்