கொடியை மதிப்பது

National-Flag-of-India-ili-59-img-1

ஜெ

எனக்கும் ஒரு நண்பருக்கும் அலுவலகத்தில் விவாதம். அவர் தேசியப்பாடலுக்கு எழுந்து நிற்கமாட்டேன் என்றும் தேசியக்கொடியை மதிக்கமாட்டேன் என்றும் சொன்னார். கேட்டால் அது தன் தனியுரிமை என்றும் அதில் அரசு தலையிடக்கூடாது என்றும் சொன்னார். இன்னொருவரும் அதேபோல இந்திய அரசு ஒரு மோசடியான அரசு என்றும் ஆகவே தானும் மதிப்பதில்லை என்றும் சொன்னார். என் அலுவலகத்தில் நேர்பாதிப்பேர் அதை ஆதரித்தார்கள். ஒரு நாட்டின் தேசியக்கொடியையும் தேசியப்பாடலையும் மதிப்பது என்பது தவறானதா என்ன? அது ஏன் இழிவாகப் பார்க்கப்படுகிறது?

சங்கர் ராமகிருஷ்ணன்

***

அன்புள்ள சங்கர்,

நான் சிங்கப்பூரில் இருந்தபோது சிங்கப்பூரின் தேசியநாள் கொண்டாட்டம் வந்தது. நம் ஆகஸ்ட் 15 போல. சிங்கப்பூரிலிருந்த இந்தியாவில் இருந்து குடியேறிய அனைத்துச் சிங்கப்பூர்க் குடிமகன்களும் சிங்கப்பூரின் கொடியின் நிறத்தில் ஆடையணிந்து அலுவலகம் சென்றார்கள். வீட்டில் தேசியக்கொடியை ஒன்றுக்கு நாலாக ஏற்றியிருந்தனர். குழந்தைகளுக்கு அந்த நிறத்தில் ஆடையணிவித்து கொடிகளை வாங்கிக்கொடுத்து பெண்கள் கூட்டிச்செல்வதைப் பார்த்தேன்.

எனக்கு ஆச்சரியம், ‘அட அட என்ன ஒரு தேசபக்தி. இவர்கள் இதில் பத்திலொரு பங்கை இந்தியாவிலிருக்கையில் காட்டியிருந்தால் தேசம் எங்கேயோ சென்றிருக்குமே’ என்றேன். உடனிருந்த நண்பர் ‘இந்நாட்டில் தேசபக்தி இல்லாவிட்டால் வயிற்றிலேயே அடிப்பான். நம்மவருக்கு அதுமட்டும்தான் புரியும்’ என்றார்.

இதுதான் நம் மனநிலை. பாருங்கள், உலகின் எந்த நாட்டில் குடியேறினாலும் அந்தந்த நாட்டுச் சட்டங்களுக்கு முழுமையாக அடிபணிபவர்கள் இந்தியர்களே. இங்கே தேசியக்கொடியை அவமதிப்பவன் அமெரிக்கா சென்றால் அந்நாட்டுக்கு விசுவாசப்பிரமாணம் எடுத்து குடியுரிமை பெறுவான். அந்நாட்டு ராணுவப்பணிக்கு மகனை அனுப்புவான். நல்லநாட்களில் அந்நாட்டுக்கொடியை நெஞ்சில் குத்திக் கொள்வான். ’உன் நாட்டுக்குப்போடா கறுப்பா’ என வெள்ளையன் முகத்துக்குநேராக சொன்னால் பணிவுடன் இளித்து ’நான் இந்நாட்டுக்கு விசுவாசமாக இருப்பேன்’ என்பான். எல்லாம் அந்நாடு அளிக்கும் வசதிகளுக்காக, வளங்களுக்காக. சென்றவர்கள் பாதி, கனவுகாண்பவர்கள் மீதி. அதுதானே நம் இந்தியாவின் படித்த இளைஞர் சமூகம்?

நிறவெறியை,இனவெறுப்பை, ஒதுக்குமுறையைக்கூட கைகட்டி வாய்பொத்தி ஏற்பவர்கள் இந்தியர்கள். இவர்கள் சவுதியரேபியாவிலோ ஆஸ்திரேலியாவிலோ ஒரு சிறிய எதிர்ப்பைக்கூட காட்டிய வரலாறு இல்லை. ஏனென்றால் பிழைப்பு பாதிக்கப்படும். அதற்கு உத்தரவாதமிருக்கும் வரைத்தான் இவர்களின் இந்த மீறலும் திமிரும் தன்முனைப்பும்.

அந்த உத்தரவாதத்தை அளிப்பது அந்த மூவண்ணக்கொடி, அந்த வங்கமொழிப் பாடல். இவர்களுக்கு இந்தியாவிட்டு ஒரு சுற்றுசுற்றி வந்தால் தெரியும், இன்று கீழைநாடுகளில் தனிமனித உரிமையை அளிக்கும் நாடு என்பது இந்தியா மட்டுமே. சிந்திக்கவும் போராடவும் தன்வழிதேரவும் அரசு பாதுகாப்பளிக்கும் நாடு இந்தியா.தனிமனித உரிமையை மதிப்பவன் வேறு எதற்கு இல்லையென்றாலும் அந்த உரிமையை அளித்த நன்றிக்காவது அந்தக்கொடியையும் பாடலையும் மதித்தாகவேண்டும்

அடையாளமாக நீங்கள் கொண்டுள்ள கடவுச்சீட்டு, கல்விக்கும் சலுகைக்கும் நீங்கள் நம்பும் நிர்வாகம்,நீதிக்காக நீங்கள் சென்று நிற்கும் நீதிமன்றம் இந்தியாவின் அரசால் ஆனதாக இருக்கும் வரை நீங்கள் அக்கொடியை மதித்தே ஆகவேண்டும். அக்கடமையை துறக்கலாம், அவ்வுரிமைகளையும் துறந்துவிடுங்கள், தோரோ செய்ததைப்போல. அது ஒரு தத்துவநிலைபாடு.

அடிப்படை அறிவுள்ள எவரும் நம் தாத்தாக்கள் இருந்த நிலையுடன் நம்மை ஒப்பிட்டுப்பார்க்கலாம். அவர்கள் அடையாத கல்வியை, அடிப்படை வசதிகளை, உரிமைகளை நாம் அடைந்தது அந்தக் கொடியால்தான்.அந்த உரிமைகளை உங்களுக்கு அளிப்பவன் இந்நாட்டின் வரிகட்டும் எளிய குடிமகன். அவன் அக்கொடியை நம்பும் வரை அவன் வரியில் சலுகைபெற்று படித்த நீங்கள், அவன் மேல் வாழும் நீங்கள் அக்கொடிக்கு வணக்கம் வைத்தாகவேண்டும். மறுப்பேன் என்பது வெறும்திமிர்

அந்தக்கொடி ஏன் நம் வணக்கத்திற்குரியது? அந்தப்பாடல் ஏன் மதிப்பிற்குரியது? ஏனென்றால் நாம் சுதந்திரம் பெற்றபின்னர் நமக்கே சொல்லிக்கொண்ட உயரிய விழுமியங்களின் அடையாளம் அது. உலகின் மிகச்சிறந்த ஜனநாயக நாடுகளின் மாதிரியில் நாம் நம் அரசியல்சட்டத்தை, அரசாட்சியை உருவாக்கிக் கொண்டோம். இன்று நாம் பேசும் அத்தனை உரிமைகளையும் அதுதான் நமக்கு அளிக்கிறது. அக்கொடியை வணங்கமாட்டேன் என்றுகூட இவர்கள் அதைச்சுட்டிக்காட்டித்தான் வாதிடுகிறார்கள். அந்த உரிமைமனநிலையை இவர்களுக்கு அளிப்பது மதமோ, இனமோ அல்ல. அவற்றைக்கடந்த ஜனநாயகம் என்னும் விழுமியம்.

mahatma-gandhi

மிகச்சுருக்கமாக அதன் சாதனைகள் என்னென்ன?

அ. பஞ்சத்தால் பல லட்சம்பேர் ஆண்டுதோறும் இறந்த இந்நாட்டில் சுதந்திரம்பெற்ற மிகச்சில ஆண்டுகளிலேயே பஞ்சத்தை ஒழிக்க இயன்றது. இன்று ஐம்பதாண்டுகளில் உணவுத்தன்னிறைவை அடைந்தும் உள்ளது

ஆ. அதற்கு விலையாக எவரையும் அழிக்கநேரவில்லை. எந்த அன்னியநாட்டையும் சுரண்டவுமில்லை. சீனா நம்மைவிட முன்னால் உள்ளதே என்பவர்கள் அந்நாடு அச்சீர்திருத்தங்களுக்காக, அதன் விளைவான பஞ்சங்களுக்காக எத்தனைகோடிபேரை பலிகொண்டது, இன்றும் எத்தனை கோடிபேரை அடிமையுழைப்பில் வைத்திருக்கிறது என்பதை மட்டும் பாருங்கள்

இ. மக்கள்தொகையில் முக்கால்வாசிப்பேர் கல்வியே இல்லாமலிருந்த நாட்டில், மக்கள்தொகையில் கால்வாசிப்பேருக்கு நிரந்தரமான வாழ்விடமோ சொந்தமாகப் பெயரோகூட இல்லாதிருந்த நாட்டில் ,அவர்கள் அனைவருக்கும் உரிமைகளைக் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது. அவர்கள் அனைவரையும் ஒரு நாகரீக நாட்டின் குடிமகன்களாக்கி இங்கே இன்றும் ஜனநாயகத்தை தக்கவைத்துள்ளது. இன்று ஒவ்வொரு அடித்தளச் சமூகமும் விழிப்புற்று உரிமைகோரி போராடி வளர்கிறது என்றால் அது சுதந்திரம் கிடைத்தபின்னர் அளிக்கப்பட்ட கல்வியால்தான். அரசியல்சட்டம் அளித்த  ‘அனைவருக்கும் வாக்குரிமை’ என்ற ஆயுதத்தால்தான்.

உ. இந்தியாவைச்சூழ்ந்து அன்று நம்முடன் சுதந்திரம்பெற்றுள்ள எந்நாட்டிலும் மனித உரிமைகளோ, ஜனநாயக உரிமைகளோ இல்லை. இன்றும் உலக அளவில் பேச்சுரிமை, சிந்திக்கும் உரிமை, தனியுரிமை திகழும் நாடு இது

இது அளிக்கும் வாய்ப்புகள் ஏராளமானவை. அந்த வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதன் குறைகள் என்ன?

அ. ஜனநாயகத்தை சாதியரசியல், பண அரசியல் கைப்பற்றியிருப்பது

ஆ. அரசுமுதல் கீழ்த்தளம் வரை நீண்டிருக்கும் ஊழல்

இ. மத, இன,சாதி, மொழி சார்ந்த பிரிவினைப்போக்கு

உ. அறிவியல்நோக்கற்ற மூர்க்கமான உணர்ச்சிகரம்

ஊ. படித்தவர்க்கத்திற்கும் படிக்காதவர்களுக்கும் இடையேயான மாபெரும் பிளவு

எ. குடிமையுணர்வற்ற கும்பல்தனம்

இவை அனைத்துமே நம் குறைகள்.  இவற்றுக்கு நாம் தேசத்தையோ அதன் முன்னோடிகளையோ அல்ல நம்மைத்தான் கசந்துகொள்ளவேண்டும். ஊழல் என்றால் அவ்வூழல்வாதிகளுக்கு வாக்களிப்பவர்கள் நாம். ஒவ்வொரு சின்னவிஷயத்திற்கும் சாதிமதஇனச் சாய்வு கொள்பவர்கள் நாம். இச்சிறுமைகளை மறைக்கவே நாம் தேசத்தைக் கரித்துக்கொட்டுகிறோம்.

Nehru

கேரளத்தில் நிகழ்ந்தது இது என ஒரு நண்பர் சொன்னார். திரையரங்கில் தேசியகீதத்திற்கு எழுந்து நிற்காமல் ஒர் இளைஞன் அமர்ந்திருந்தான். அருகே சென்று ஒருவர் எழுந்து நிற்கும்படிச் சொன்னார். “என் உரிமை, மாட்டேன்” என்றான் அந்த இளைஞன். இன்னொரு இளைஞன் அருகே சென்று  “எழுந்து நில், இல்லையேல் பிளேடால் சங்கைக் கிழித்துவிடுவேன்’ என்றான். அவன் பயந்து  எழுந்து நின்றான்.

“ஆக, தேசப்பாடலுக்கு எழுந்து நிற்கமாட்டாய் ஒரு ரேசர்பிளேடுக்கு எழுந்து நிற்பாய் இல்லையா? உன்னைமாதிரி பிறவிகளால்தான் கொடியே மதிப்பிழக்கிறது” என்றான் இளைஞன் “பயப்படாதே, பிளேடெல்லாம் இல்லை. சும்மா கையை வைத்திருந்தேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

இங்கே இன்றுள்ள படித்த சராசரி குடிமகன் உண்மையில் அந்தக்கொடியும் அப்பாடலும் வாக்களிக்கும் நிமிர்வையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்வதற்கான தகுதி அற்ற சிறுமதியன். தன்னைப்பற்றி மட்டும் எண்ணி தன் சமூகத்தை கைவிடுபவன். வாய்ப்பு கிடைத்தால் உலகியல்வசதி அளிக்கும் நாட்டுக்கு ஓடிவிட தருணம் நோக்கி இருப்பவன். ஆனால்  பாதுகாப்பான இடங்களில் பெரும்பேச்சு பேசுபவன். ஒரு வகையான பெருச்சாளி.  தன்மதிப்பும் அதற்காகப் போராடும் நிமிர்வும் குருதியிலேயே கிடையாது. ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள ஆதிக்கம் எதுவோ அதற்கு ஆதரவாகப்பேசுபவர்களே இவர்கள் அனைவரும்.

நீங்கள் அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்தானே. உங்கள் அதிகாரிகளிடம் இவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்? கைகட்டி, வாய்பொத்தி, தலையாட்டி, போட்டுக்கொடுத்து, இளித்து. எல்லா அலுவலகத்திலும் இதுவே நிலைமை. அமெரிக்கச்சூழலில் ஆறுமாதம் வேலைபார்த்த ஒருவர் இந்தியச்சூழலில்  வேலைபார்க்கவந்தால் இங்குள்ள நம்பமுடியாத அடிமைத்தனம் அவரைத் திகைக்கச்செய்யும். இங்கே மேலதிகாரி என்பவன் கண்கண்ட தெய்வம்.

இந்தியாவில் மிகமிக அடிப்படையான உரிமைகளுக்காகக் கூட குரலெழுவதில்லை. சாலையில் ஒரு சாதாரண காவலர்  ‘டேய் இங்க வாடா’ என அழைத்தால் ’சார்’ என்று கும்பிட்டபடிச் செல்வோம். எவரேனும் எதிர்த்தால்கூட கூடிநின்றிருப்பவர்கள் போலீசுக்குச் சாதகமாகப் பேசுவார்கள். எத்தனையோ தடவை பொதுவான விஷயங்களுக்காக, பாதிக்கப்படும் எளியவர்களுக்காக வாதாடச்சென்று தனியாக மாட்டிக்கொண்டிருக்கிறேன், சிறுமையும்பட்டிருக்கிறேன். என் நண்பர்களுக்கு தெரியும் அந்நிகழ்ச்சிகள்.

சாலையில் ஒரு இரண்டு இஞ்ச் கத்தியுடன் ஒரு ரவுடி நின்று ஆணையிட்டால் தேசியகீதத்திற்கு என்ன குத்துப்பாட்டுக்கே குனிந்து வணங்குவார்கள். .   தேசியக்கொடி ஏற்றிய கம்பத்தை ஒவ்வொருவரும் நக்கித்தூய்மை செய்யவேண்டும், இல்லையேல் வேலைபோய்விடும் என்று ஆணையிருந்தால் விடிகாலையில் நாக்கை நீட்டியபடி வரிசையில் நின்றிருப்பார்கள்.

தன் கோழைத்தனத்தை, சிறுமையை, அறியாமையை, அக்கறையின்மையை செல்லிடத்தில் காட்டி வீண்தருக்கை வெளிப்படுத்துவது மட்டுமே இவர்களின் நோக்கம். பேசிப்பாருங்கள் அவர்களின் அறியாமையும் அதன்விளைவான வெற்றுக்கித்தாப்பும் குமட்டலை அளிக்கும். எது உண்மையான அதிகாரமோ அதை உடனடியாக அடையாளம் கண்டு அடிபணியும் நுண்ணுணர்வால் பிழைத்துக்கிடக்கும் புழுக்கள்.

இது ஒருபக்கம், இன்னொரு பக்கம் மத, சாதி,இனவெறியர்கள். குறுகலாகச் சிந்திப்பதன் காழ்ப்பால் நிறைந்தவர்கள். இவர்கள் தங்கள் அடையாளங்கள் மீது கண்மூடித்தனமான பற்றைக்  கொண்டிருப்பார்கள். அதை எவரேனும் மதிக்கவில்லை என்று தெரிந்தால் வெறிகொள்வார்கள். இந்திய தேசியக் கொடியை, பாடலை இவர்கள் மறுப்பது அவை அளிக்கும் சமத்துவம், தனியுரிமை, விடுதலை என்னும் எந்த உயர்விழுமியங்களும் இல்லாத மிகமிகப்பிற்பட்ட, காட்டுமிராண்டித்தனமான விழுமியங்களைக் கொண்ட வேறு சில அடையாளங்களை முன்வைப்பதற்காகவே.

உலகியல் வாழ்வில் ஒவ்வொருவரும் ஏதேனும் அடையாளங்களுக்கு தங்கள் பணிவை, மதிப்பை வெளிக்காட்டியபடியே வாழ்கிறார்கள். மேலதிகாரியின் நாற்காலியில் நீங்கள் அமர்வதில்லை. எவரை எழுந்து வரவேற்கவேண்டும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவையெல்லாம் வெவ்வேறுவகையான ஆதிக்கங்களுக்கு நீங்கள் உங்களை அளிப்பதுதான்.

அப்படி இல்லை என்பவன் ஹிப்பி அல்லது சித்தன். நான் மெய்யான ஹிப்பிகளையும் சித்தர்களையும் அறிந்துள்ளேன், அவர்கள் மேல் எனக்கு மதிப்புண்டு. அவர்கள் தேசியக்கொடியை கோவணமாகக் கட்டியிருந்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. அவர்களின் அவ்வுரிமைக்காகவே குரல்கொடுப்பேன்.

தேசியக்கொடியை அல்ல எந்த அடையாளத்தையும் ஏற்கமாட்டேன் என்று சொல்வது ஒரு விழுமியம். அதற்காக எதையும் இழக்க ஒருவன் சித்தமாக இருந்தால் அதை நான் புரிந்துகொள்கிறேன். இந்த தேசியத்தை நான் ஏற்கவில்லை, இதைவிட மேலான ஒரு தேசியத்திற்கான, மேலான ஒரு உலக அமைப்புக்கான சமரசமில்லாத போராளி நான் என்று ஒருவன் சொன்னால் அதைக்கூட புரிந்துகொள்ளலாம். அவனுடைய சொல்லால் அல்ல, தியாகங்களால் மட்டுமே அவனை நான் மதிப்பேன்.

நாம் நம் மதிப்பை, வணக்கத்தை அளிக்கும் அடையாளத்தின் மெய்யான பெறுமதி என்ன என்பதே முக்கியம். இந்தியத் தேசியக்கொடி தன்னளவில் சென்ற நூற்றாண்டு உருவாக்கிய மகத்தான ஜனநாயக விழுமியங்களின் அடையாளமாகவே நின்றிருக்கிறது.பல்வேறு இன, மொழி,வட்டார, மத அடையாளங்கள் கொண்ட மக்கள் சேர்ந்துவாழவும் முன்னேறவும் முடியும் என்னும் கனவின் அடையாளம் அது.இன்று, அவ்விழுமியங்களை வெவ்வேறு அடிப்படைவாதங்கள் அழித்துவரும் நிலையில் அக்கொடி கண்ணீரும் குருதியும் அளிக்கப்பட்டு காக்கப்படவேண்டிய நிலையில் இருக்கிறது.

ambe

என்னைப்போல ஐம்பதுகடந்தவர்களுக்குத் தெரியும், நெருக்கடி நிலைக்காலத்தில் இந்நாடு எப்படி எதிர்வினையாற்றியது என்று. போலீஸுக்குப் பிடிக்காது என நீண்ட தலைமுடியையும் கிருதாவையும் இரவோடிரவாக மழித்தவர்கள் நாம்.அத்தனை சிற்றிதழ்களையும் நிறுத்தி கருத்துரிமை காத்தவர்கள். இன்றுகூட மிக எளிமையான ஓர் ஒடுக்குமுறை எழுமென்றால் இந்த அற்பர்களின் ஒருகுரல் கூட எழாது. அவரசநிலை வந்தபோது நிகழ்ந்ததுபோல மிகச்சில இலட்சியவாதிகளின் குரல்களே எழும்.

ஆனால் இந்தச் சிறுமைக்கு எதிர்வினையாக அத்தகைய அடக்குமுறை அரசொன்றுக்கான குரல் எழுந்துவிடக்கூடாது. இச்சிறுமதியாளர்கள் மிகச்சிலர்தான்.ஆனால் இவர்கள் தங்கள் சிறுமையினால் இந்தியாவின் பெரும்பான்மையினரை அத்தகைய அடக்குமுறை அரசு ஒன்று தேவை என்னும் எண்ணம் நோக்கிக் கொண்டுசெல்கிறார்கள். அதை இந்நாட்டின் சாமானியர்களிடம் ஓரிரு சொற்கள் பேசினாலே நாம் புரிந்துகொள்ளமுடியும். ஒவ்வொரு முறையும் திரையரங்கில் அக்குரல் எழுவதைக் காண்கிறேன்

பொறுப்பின்மை ஓங்கிய சூழலில் இருந்து ஒழுங்குக்கான மூர்க்கமான கோரிக்கை எழுகிறது. அதுவே எப்போதும் அடக்குமுறை அரசை நோக்கி மக்கள் செல்ல காரணமாக அமைகிறது. அது இங்கே நிகழக்கூடாது.

ஜெ

***

முந்தைய கட்டுரைஅனோஜன் பாலகிருஷ்ணன் குறித்து
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59