[தொடர்ச்சி ]
நான் மூச்சு அடங்கி என் உடல் எரிச்சலை உணர்ந்தபடி யானையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது மெல்ல எழுந்து மேலே துதிக்கை நீட்டி என்னை பிடிக்க முயல்வது போல அல்லது என்னிடம் எதையோ சொல்ல முயல்வது போல நுனியை அசைந்தது. கைக்குழந்தையின் சிவந்த வாய் போன்ற துதிக்கை முனை.
கொம்பன் மெல்ல திரும்பி வாலைச் சுழற்றியபடி புல்லுக்குள் சென்று மறைந்தது. அது போன பாதை புல்லில் தெரிந்தது. மேலே மரக்கிளைகள் விரிந்த இருண்ட காட்டுக்குள் சென்றதும் அது ‘ப்பாய்ய்ங்’ என்ற ஒலியை எழுப்பியது. காட்டிலெங்கோ ஒரு பாறை அதை எதிரொலி செய்தது. சற்று தள்ளி மீண்டும் அந்த பிளிறல் எழுந்தது.
துரை பாறை மேல் இருந்து கைகாட்டி என்னை அழைத்தான் ”ஊமைச்செந்நாயே…” நான் கையைத் தூக்கிக் காட்டியபடி இறங்கி அவனை நோக்கிச் சென்றேன். யானை எங்கள் பெட்டியை எதுவும் செய்யவில்லை. துரையும் இறங்கி என்னை நோக்கி வந்தான். ”…மிருகம்…தப்பிவிட்டது…”என்றான் துரை. ”பூட்டின் ஒலியை கேட்டு அது திரும்பாவிட்டால் இந்நெரம் மண்டை பிளந்திருக்கும்”
துப்பாக்கியபோட்டுவிட்டு அவன் பெட்டியிலிருந்து சாராயத்தை எடுத்து நேரடியாகவே மடமடவென குடித்தான். ஏப்பம்விட்டு தலையைக் குனிந்தான். இருமுறை ஆவியை உமிழ்ந்தான். ”ஜீஸஸ்!” என்று தலையை உலுக்கினான். நான் பெட்டியை மூடி நன்றாகக் கட்டினேன்.
”அதை விடக்கூடாது. அது அதிக தூரம் போயிருக்காது. சீக்கிரமே அதன் ரத்தம் தீர்ந்துவிடும்…”என்றான் துரை. ”அது சிந்திக்கிறது…”என்றேன். ”டாமிட்”என்றான் துரை. ”நாம் அதைபின் தொடர்ந்து செல்கிறோம்…ரத்தத்தைப்பார்த்தே அது போனவழியை கண்டுபிடிக்க முடியும்…”
நான் ஒன்றும் சொல்லாமல் பெட்டியை எடுத்துக்கொண்டேன்.
[ 4 ]
நாங்கள் சென்ற வழி முழுக்க சிறிய கட்டிகளாக ரத்தம் கையேந்தி நின்ற இலைகள் மீது கொட்டியிருந்தது. ரத்த வாசனையை வைத்தே தடம் பார்த்துச் செல்ல முடிந்தது. ஒரு நுணா மரத்தில் கொம்பன் சாய்ந்து நின்றிருக்க வேண்டும். அந்த மரத்தடியில் ரத்தம் கொட்டி தாமரையிலகளின் வடிவில் கிடக்க அதன் மேல் படலம் உருவாகி சிறிய பூச்சிகள் வந்து சுற்றிப்பறந்து கொண்டிருந்தன.
”அது எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் ஓடும்…எப்போது அதன் ரத்தம் வற்றி உடல் தளர்கிறதோ அப்போது விழுந்து கிடக்கும்…”என்றான் துரை. நான் அவனைப்பார்த்துவிட்டு முன்னால் சென்றேன். அந்த யானை வெறும் மிருகம் அல்ல என்றும் அதற்கு நாங்கள் பின் தொடர்ந்து வருவோம் என்றும் தெரியும் என்றும் சொல்ல விரும்பினேன். அந்த யானை இந்நேரம் எங்களை எதிர்பார்த்து அதற்கு மிக வசதியான இடத்தில் நின்றிருக்கும். ஆனால் நான் சொல்லவில்லை. என் சொற்கள் பெரும்பாலும் உதடுகளுக்கு வருவதில்லை.
”நீ ஒரு ஆங்கிலேயனைப்போன்ற இயல்புகொண்டவன்…..”’என்றான் துரை. நான் திரும்பி அவனைப்பார்த்தேன். ”நீ எப்போதும் எதையும் சொல்வதில்லை. ஆனால் நீ நினைப்பது என் கண்ணுக்கே தெரிகிறது..”
அவன் சொல்ல வருவதென்ன என்று எனக்குப் புரியவில்லை. துரை, ”நீ இரவில் என் துப்பாக்கியை எடுத்துப் பார்த்தாய்…அதை நான் கண்டேன் என்பதை இப்போதுதான் நினைவுகூர்ந்தேன். அது கனவு போல் இருந்தது…இப்போது நான் சுடும்போது நீ என் துப்பாக்கியைப் பார்த்ததை எண்ணிப்பார்த்தேன். உந்னால் ஒரே பார்வையிலேயே என் துப்பாக்கியின் விசையைப்பற்றியும் குண்டுபோடும் முறையைப்பற்றியும் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது என்று தெரிந்தது…உன் அம்மாவைப்புணர்ந்த அந்த வெள்ளையன் உனக்குள் அந்த அறிவை அளித்திருக்கிறான்”
நான் பேசாமல் நடந்தேன். துரை பேசியபடியே என் பின்னால் வந்தான் ”ஆனால் நீ ஒரு நாய்..ஆங்கிலேயன் ஒருபோதும் ஒருபோதும் அடிமையாக இருப்பதில்லை. அதை நீ மறந்துவிட்டாய். நீ என் காலை நக்கும் ஒரு நாய் மட்டும்தான். உன்னுடைய செந்நாய்க்கண்களைப் பார்க்கும்போதெல்லாம் உன் தலையை குண்டுகளால் சிதறடிக்க எனக்கு வெறி வருகிறது…” துரை மூச்சிரைத்தான் ” நீ ஆங்கிலேயரை உன் இருப்பின் மூலமே அவமானம்செய்கிறாய்…கடவுளே! உன்னைக்கொல்ல நான் எத்தனை தூரம் விரும்புகிறேன் தெரியுமா?”
நான் அவன் ஏறி வருவதற்காக காத்து நின்றேன். ”இந்த துப்பாக்கியை நீ தொடக்கூடாது…இனி இந்த துப்பாக்கி மேல் உன் கைபட்டால் நான் உன் மூளையை சிதறடிப்பேன்… கண்டிப்பாக அதைச் செய்வேன்” என்றான். மேலே ஏற நான் கை கொடுத்தேன். ”நீ வெள்ளைப்பெண்ணை எப்போதாவது புணர்ந்தாயா?” நான் ஒன்றும் சொல்லவில்லை ”சொல்லித்தொலை ஊமைச்செந்நாயே..உன்னை கொல்லும்படிச்செய்யாதே” நான் இல்லை என்றேன். ”உன் கண்களைப்பார்த்தால் அவர்கள் கூப்பிடுவார்கள். நீ எப்போதாவது வெள்ளைப்பெண்ணுடன் படுத்தாய் என்று தெரிந்தால் நான் உன்னை தேடிவந்து கொல்வேன்…”
பெரிய வேங்கைமரத்து வேர்கள் பரவி சிறிய இறக்கத்தில் மௌனமாக இறங்கினேன். பள்ளத்தில் நின்று கூர்ந்து பார்த்தேன். ரத்தம் சொட்டியிருந்தது குறைந்திருந்தது. ஆங்காங்கே சில இலைகளில் கருஞ்சிவப்பு முத்துக்கள் மட்டுமே தென்பட்டன ”நீ எனக்கு தேவைபப்டுகிறாய்… இல்லையேல் உன்னைக்கொல்வதே எனக்குக் கொண்டாட்டம்”என்றான் துரை. நான் வாயில் கைவைத்து காட்டினேன். அவன் துப்பாக்கியை தோளில் ஏற்றிக்கொண்டான். ”நீ மனதுக்குள் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறாய். அதை எங்களிடமிருந்து மறைக்கவே நீ பேசுவதே இல்லை…முட்டாள். முட்டாள்தனமான ஊமைச்செந்நாய்”என்று பல்லைக்கடித்தபடி அவன் கிசுகிசுத்தான்
நான் என் கைகளை ஊன்றி கிட்டத்தட்ட தவழ்ந்து முன்னே சென்றேன். புதர்களுக்கு அப்பால் மண் மீண்டும் மேலேறிச்சென்றது. மேட்டில் இரு பாறைகள் இணைந்து நிற்கும் யானைகள் போல் நின்றன. அதற்கு அப்பால்தான் என்று எனக்கு தெளிவாகப்புரிந்தது. நான் மெல்லமெல்ல காலடி எடுத்து வைத்து பின்னால் வந்தேன். கைநீட்டி ”அங்கே” என்றேன்.
”எங்கே?”என்று துரை கிசுகிசுத்தான். ”அந்த இரு பாறைகளுக்கு நடுவே…” என்றேன். அவன் உடனே அதைப்புரிந்துகொண்டான். ”அது ஒரு சாத்தான்…சாத்தான்தான் மிருக வடிவில் வந்திருக்கிறது… மிருகங்கள் ஒருபோதும் இப்படிச்சிந்திப்பதில்லை! ”என்றான். துப்பாக்கியின் எட்டும் தொலைவுக்குள் எங்கே சென்றாலும் மேட்டில் இருந்து யானை வேகமாக கீழே பாய்ந்துவந்து தாக்கமுடியும். நாங்கள் பின்ன்வாங்க வேண்டுமென்றால் எங்களுக்குப் பின்னால் உள்ள மேட்டில் ஏற வேண்டும். அதற்குள் அது எங்களைப்பிடித்துவிடும்.
”மேலே ஏறிக்கொள்வோம்…”என்றபடி துரை பின்பக்க மேட்டில் ஏறிக்கொண்டான். ”இப்போது செய்யக்கூடியது ஒன்றுதான்..பொறுமைச்
சீட்டாட்டம்…” என்றான் துரை ”வா… வேசிமகனே..வா விளையாடுவோம்”என்று பாறைக்கு அப்பால் நின்ற கொம்பனை நோக்கிச் சொல்லிவிட்டு வேர்மீது ஏறி அமர்ந்துகொண்டான். துப்பாக்கியை தோள்மேல் ஏந்திக்கொண்டான்.
துப்பக்கிக்குண்டுத் தொலைவுக்கு அப்பால் இரு பாறைகளும் மிக அமைதியாகக் காத்து நின்றன. இப்பால் துரை மெல்லிய குரலில் வைதுகொண்டும் துப்பிக்கொண்டும் காத்திருந்தான். நேரம் சென்றுகொண்டே இருந்தது. பொறுமை விளையாட்டில் மிருகங்களை வெல்ல எந்த மனிதனாலும் முடியாது என்று சொல்ல நான் விரும்பினேன்.
துரை துப்பாக்கியை தோள்மாற்றினான். ”உன்னை ஏன் உன் குடிப்பெண்கள் மணந்துகொள்வதில்லை?” என்றான். நான் பாறையையே பார்த்துக்கொண்டிருந்தேன். ”உன் கண்களைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் அல்லவா?” நான் பாறையை விட்டு கண்களை எடுக்கவில்லை.
நெடுநேரம் கழித்து துரை ”ஜீஸஸ்..இது என்னைக் கொல்கிறது”என்றான். ”என் பிராந்தியை எடு” நான் பிராந்தியுடன் ரொட்டியையும் அவனுக்குக் கொடுத்தேன். அவன் ரொட்டியைத் தின்று பிரந்தியைக் குடித்தான். அவன் முகம் வெந்த சீனிக்கிழங்கு போல சிவந்தது. மூக்கு காரட்கிழங்கு போலிருந்தது.
இரவுக்கு முன்னால் யானை வெளியே வந்தாக வேண்டும். இருளில் யானைக்கு ஆயிரம் கண்கள். இருட்டிவிட்டதென்றால் மரங்களில் ஏறி அமர்ந்து இரவைக் கழிக்க வேண்டியதுதான். உணவும் மதுவும் எல்லாம் இன்னும் மூன்றுநாட்களுக்கு இருந்தன. இத்தனை சீக்கிரம் கொம்பனைக் காண்போமென நான் எதிர்பார்க்கவில்லை. சுண்டுமலைக்கு அப்பால் தெற்குக்காட்டில் பலாமரங்கள் அதிகம். அங்கேதான் இருக்கும் என்று எண்ணியிருந்தேன்.
காட்டுக்குள் ஒலிகள் மாறுபட ஆரம்பித்தன. நிழல்கள் எங்களை நோக்கி சரிந்து வந்தன ”சாத்தானுக்குப் பொறுமை அதிகம்…”என்றான் துரை. துப்பி விட்டு கைகளை உரசிக் கொண்டு மீண்டும் துப்பாக்கியை எடுத்தான். ”சரி, இப்போது ஒரே வழிதான். நீ முன்னால்செல்…அதை கூப்பிடு”என்றான்
கீழே உருளைக்கற்களும் சருகுகளும் நிறைந்த பள்ளம். அது மழைக்காலத்தைய ஓடைகளில் ஒன்றாக இருக்கலாம். அதில் நான் ஓடித்தப்ப முடியாது. நான் துரையை கூர்ந்து நோக்கினேன். துரை என்னை நோக்கி துப்பாக்கியை திருப்பினான் ”போ…இல்லாவிட்டால் உன்னைச் சுடுவேன்…கண்டிப்பாகச் சுடுவேன்…”
நான் அவனுடைய கண்களைப் பார்த்து ஒரு கணம் நின்றபின் மெல்ல பள்ளத்தில் இறங்கினேன். பாறைகளில் என் கால்கள் இடறின. கொடிகளில் பாதங்கள் பின்னிக்கொண்டன. நான் ஒவ்வொரு உறுப்பாலும் மேலே நின்ற யானையைப் பார்த்தபடி முன்னால் சென்றேன். துப்பாக்கியின் எல்லை வரும்வரை என் பின்னால் வந்தபின் துரை நின்றுகொண்டான். ”ம்ம் போ”என்றான். நான் மேலும் முன்னகர்ந்தேன். என் கால்கள் மிகமிகக் கனமாக இருந்தன
நான் பக்கவாட்டில் ஓடி தப்பிவிட்டாலென்ன என்று எண்ணியதுமே துரை ”ஓடினால் உன்னைச் சுடுவேன்… நீ தப்பிவிட்டாலும்கூட எல்லா காட்டுக்கும் ஆளனுப்பி உன்னை பிடித்துவந்து சுடுவேன்…”என்றான்.
நான் மெல்லமெல்ல முன்னேறினேன். பாறைக்கு அப்பால் ஒரு அசைவு நிகழ்வதை என் காது கேட்கவில்லை, சருமம் கேட்டறிந்தது. ”ம்ம்..போ…மேலே போ”என்றான் துரை. நான் மேலும் முன்னால்சென்றேன். எனக்குப் பின்னால் துரை துப்பாக்கியின் பூட்டை விடுவித்தான். அப்பால் யானையின் காதுகள் நிலைக்கின்றன என்று அறிந்தேன்.
நான் எதிர்பார்த்து நின்ற அக்கணத்தில் காட்டுமரம் சரியும் ஓலம் போல பிளிறியபடி கொம்பன் துதிக்கையை தூக்கிச் சுழற்றிப் பாய்ந்து என்னை நோக்கி வந்தது. நான் உறைந்து போய் அது வருவதை அணுஅணுவாகப் பார்த்தபடி நின்றிருந்தேன். பின்னர் என் உடல் தசைகள் எல்லாம் துடிக்க திரும்பி ஓட முயலவும் கூழாங்கல்லில் கால் தடுக்கி விழுந்து விட்டேன். அதே கணத்தில் துப்பாக்கி வெடித்து காட்டுக்குள் பல இடங்களில் எதிரொலி முழங்கியது.
யானை பிளிறியபடி அதே வேகத்தில் வந்து முன்காலை மடித்து முன்னால் விழப்போயிற்று. கனத்த கொம்புகள் நிலத்தில் ஊன்றின. துரை மீண்டும் சுட்டான். யானை பக்கவாட்டில் சரிந்து விலா மண்ணில் அழுந்தி மறுபக்கம் வயிறு புடைத்தெழ விழுந்து துதிக்கையையும் இரு கால்களயும் உதைத்துக்கொண்டது.
நான் எழுந்து யானையை நெருங்கினேன். அது என்னைக் கண்டதும் பிளிறியது. துதிக்கை அடிபட்ட மலைப்பாம்பு போல புழுதியில் புரண்டு நெளிந்தது. பின்னங்கால் மட்டும் நீண்டு அதிர்ந்துகொண்டிருந்தது. கொம்பனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அதன் மத்தகம் வழியாக மண்ணில் சொட்டியது. அதன் அசைவுகள் அடங்குவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
பின்பக்கம் ”செந்நாயே..”என்று துரையின் குரல் கேட்டது. கையில் துப்பாக்கியுடன் கோணலான புன்னகையுடன் துரை நெருங்கி வந்தான் ”பயமுறுத்தப்பட்டால் நீ மிகவும் தைரியமாகச் செயல்படுகிறாய்…”என்றான். யானையை நெருங்கி அதன் மீது தன் சப்பாத்துக்காலைத்தூக்கி வைத்தான். யானையின் வயிற்றிலும் துதிக்கை நுனியிலும் மெல்லிய அசைவு மிச்சமிருந்தது. அதன் கண்கள் மெல்ல மூடிக்கொண்டிருந்தன, அந்த விழிகள் கரிய உடலுக்குள் மெல்லமெல்ல புதைந்து மறைவதுபோல் உணர்ந்தேன்.
துரை அதன் தந்தங்ளை துப்பாக்கியால் தட்டிப்பார்த்தான்.”அனேகமாக இதுதான் இந்தியாவிலேயே பெரிய யானைத்தந்தம்”என்றான். ”ஆப்ரிக்க யானைகளின் அளவுக்கே பெரியது…. ஆமாம், இது ஒரு மன்னன். யானைகளில் ஒரு மன்னன்” என்றான். யானையின் முன்னங்கால் மேல் அமர்ந்துகொண்டு தன் ஒரு சப்பாத்தைக் கழற்றினான்.
”மிகப்பெரியது…கன்ன எலும்பைப்பார்த்தால் எண்பது வயதுகூடச் சொல்லலாம். மூத்தவர்”என்றான் துரை என்னிடம். நான் அவன் கண்களிலும் புன்னகையிலும் மகிழ்ச்சியே இல்லாததைக் கவனித்தேன். அதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பெரிய வேட்டையை கொன்றதும் ஏமாற்றம் வந்துவிடுகிறது. ஏனென்றால் அதற்குமேல் வேட்டையாட ஏதுமில்லை. ஆனால் அது மட்டுமல்ல. மிருகம் எப்போதுமே சாவின்மூலம் மனிதனை வென்றுவிடுகிறது. வேறு ஒரு உலகைச்சார்ந்ததாக ஆகிவிடுகிறது. அதை மகத்தானதாகவும் பெருந்தன்மை மிக்கதாகவும் நாம் நினைக்க ஆரம்பித்து விடுகிறோம் என்று சிம்ப்ஸன் பெரிய துரை ஒருமுறை சொன்னார். புலி ஒன்றைக்கொன்றபின் அவர் அதனருகே நின்று பிரார்த்தனை செய்துகொண்டே கண்ணீர் விட்டார்.
துரை என்னிடம் ”நான் புதருக்குள் விழுந்துவிட்டேன். என் தொப்பியை எடுத்துவா ”என்றான்’என் உடம்பெங்கும் முள்” நான் புதரை நோக்கிசென்றேன். துடலிமுள் அடர்ந்த குட்டையான புதருக்குள் துரையின் தொப்பி கிடந்தது. அதை எடுக்கச்சென்றபோது என் மூக்கு அதிர்ந்தது. கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டு துரையை நோக்கி திரும்பினேன்.
துரை யானைமீதிருந்து எழுந்து கையை ஆட்டி ஏதோ சொல்ல முயன்றான். துப்பாக்கி நழுவி கீழே விழுந்தது. அவன் வாய் இழுத்துக்கொண்டது. அவன் கழுத்து அறுபட்ட கோழி போல நடந்து, சில அடி தூரம் முன்னால் வந்து, குப்புற விழுந்தான். நான் அவனை நோக்கி ஓடி அவன் சப்பாத்துகளை உருவி எடுத்தேன். அவன் சப்பாத்துக்கு சற்றுமேல் கண்ணாடிவிரியனின் கடித்தடம் இருந்தது.
நான் இடையில் வைத்திருந்த ஈட்டி நுனியால் அந்த இடத்தை கிழித்தேன். பிளந்து ரத்தம் கொட்டிய காயத்தை அழுத்திப்பிழிந்தபின்னர் காட்டுக்குள் ஓடினேன். இலைகளுக்குள் முழந்தாளிட்டு துழாவியபடி வெறியுடன் அலைந்தேன். கைநீலி செடியைக் கண்டுபிடித்ததுமே கைநிறைய இலைகளைப் பறித்துக்கொண்டு வேகமாக ஓடிவந்தேன். அந்த இலைகளில் ஒரு தளிரை வாயிலிட்டு பார்த்தேன். என் குடல்கள் வரை கடும் கசப்பு பரவி உடல் அதிர்ந்தது.
பச்சிலையைக் கசக்கி வெட்டுக்காயத்தில் சாற்றைச் சொட்டினேன். பலா இலையைக் கோட்டி அதில் பச்சிலையைச் சாறு பிழிந்தேன் கிட்டித்துவிட்டிருந்த துரையின் வாயை ஈட்டி நுனியால் நெம்பித்திறந்து உள்ளே சாற்றை செலுத்தி வாயில் வாய் வைத்து ஊதி உள்ளே புகுத்தினேன். கண்களிலும் மூக்கிலும் காதுகளிலும் பச்சிலைச்சாற்றை செலுத்தியபின் துரையை திருப்பிப்போட்டு எஞ்சிய சக்கையை அவன் குதத்துக்குள் செருகினேன்.
துரையின் ரத்தம் கெட்டிப்படாமலிருக்க அவன் கைகால்களை மடக்கி நீட்டியபடி இருந்தேன். கைகால்கள் இறுகியபடியே வந்தன. பின்னர்மெல்ல அவை இலகுவாயின. துரையின் மூக்கு வழியாக கொஞ்சம் கரிய ரத்தம் வந்தது. வெட்டுக்காயத்தில் வழிந்த ரத்தம் கரிய பசையாகவும் தெளிந்த நீராகவும் பிரிந்து வெட்டுக்காயம் மாங்காய் பிளந்தது போல வெளிறி தெரிந்தது. மீண்டும் பச்சிலை கொண்டுவந்து துரைக்குக் கொடுத்தேன்.
மெல்ல துரையின் இமைகளில் அசைவை உணர்ந்தேன். அது பிரமையா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் இமை மெல்ல மெல்ல துடித்து பிளவு விட்டு வெண் விழிகாட்டி பின்பு திறந்துகொண்டது. ”தண்ணீர்…தண்ணீருக்குள்…ஆழம்”என்றார் துரை. அவன் பார்வை தண்ணீருக்குள் இருப்பது போல அலையடிக்கிறது என்று தெரிந்து கொண்டேன். மீண்டும் கண்களில் இரு சொட்டு பச்சிலையை விட்டேன். துரை ”கப்பலில்…ஒரு ஸீகல்..கப்பல்…ஆனால் நீ என்னை…”என்றான். அவன் உதடுகள் துடித்துக்கொண்டே இருந்தன ”நான் வந்துவிடுவேன்…பெரியம்மை ஜீஸஸ்”என்று உளறிக்கொண்டிருந்தான்
சட்டென்று தீபட்டவன்போல துடித்தெழுந்து தன் துப்பாக்கிக்காக கை நீட்டினான். நான் துப்பாக்கிகளை ஏற்கனவே எடுத்து அகற்றியிருந்தேன். அவன் என்னிடம் ”நான் உன்னைக் கொல்வேன் ஊமைச்செந்நாயே…”என்றான். வரண்ட வாயில் நான் மீண்டும் சாற்றை பிழிந்தேன் ”… இது மிகவும் தித்திப்பானது”என்று நக்கினான்.கண்களை மூடிக்கொண்டான்.
இரு சடலங்கள் போல யானையும் துரையும் மண்ணில் கிடந்தார்கள். யானையின் ரணத்தில் சிறிய பூச்சிகள் வர ஆரம்பித்து விட்டிருந்தன. நான் பெட்டியில் இருந்து துணியை எடுத்து யானை ரத்தத்தில் தோய்த்தபின் சிறிய கிழிசல்களாக ஆக்கிக்கொண்டேன்.
துரை மீண்டும் கண்விழிந்த்தபோது சோர்வாகவும் தெளிவாகவும் இருந்தான். மெல்லிய குரலில் ”எந்த இடம்?”என்றான். ”காடு”என்றேன். அவன் கையை ஊன்றி எழுந்து கொண்டான். தலை சுழன்றதனால் மீண்டும் படுத்தான் ”எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது…” என்றான். நான் அவனுக்கு பச்சிலைச்சறு பிழிந்து சேர்த்த தண்ணீர் கொடுத்தேன்.”இனிக்கிறதா?”என்றேன்.
”கொஞ்சம்…” என்றான். ”இன்னும் விஷம் போகவில்லை…” என்றேன். துரை ”என் தலை சுழல்கிறது”என்றான் ”உங்கள் ரத்தத்தில் பாதி நீராக மாறிவிட்டது…இனி நீங்கள் நன்றாக ஆவதற்கு ஒரு வருடம்கூட ஆகும்…” என்றேன்
துரை முழுபலத்தாலும் எழுந்து அமர்ந்துவிட்டான். ”இங்கே இருக்கமுடியாது…இன்னும் சற்று நேரத்தில் செந்நாய்களும் நரிகளும் வந்துவிடும்” நான் ”ஆம்”என்றேன். ”என்னைப் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்தால் போய்விடலாம்…”
”கிளம்புவோம்”’என்றான் துரை. பெட்டியை நான் சுமக்க முடியாது என்பதனால் அதை நன்றாக மூடி தூக்கி ஒரு மரத்தடியில் வைத்தேன். துரைக்கு ஒரு கம்பு வெட்டி ஊன்றிக்கொள்ளக் கொடுத்துவிட்டு யானைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு நடந்தேன். துரை ஒரு கையை என் தோளில் வைத்து மறுகையில் குச்சி ஊன்றி மெல்ல நடந்தான்
”நாம் அதிக தூரம் வந்துவிடவில்லை, நல்ல வேளை…”என்றேன். யானை ரத்தம் தோய்ந்த கிழிசல்துணிகளை செடிகளில் கட்டியபடி நடந்தேன். சிலநாட்களுக்குப் பின்னர் ஒரு வேட்டைநாய் துணையுடன் வேலையாட்களுடன் வந்து தந்தங்களை எடுத்துக் கொண்டு போகலாம்.அழுகிய சதையில் இருந்து தந்தங்களை வெட்டிஎடுப்பது எளிது. யானையின் உடலில் சிறு பகுதிதான் அப்போது மிஞ்சியிருக்கும்.
[ 5 ]
இரவாகும் வரை நாங்கள் நடந்தோம். துரை ஒன்றும் பேசாமல் உரக்க மூச்சுவிட்டபடி, அவ்வப்போது ”ஜீஸஸ்!”என்று குரலெழுப்பி அழுதபடி, என் தோளில் எடையை அளித்து தள்ளாடி வந்தான். நான்கு இடங்களில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு எஞ்சிய மதுவைக்குடித்தான். இரவு ரீங்காரத்துடன் வானில் இருந்து பொழிந்து காட்டை மூடியது. துரைக்கு நான் மீண்டும் மீண்டும் பச்சிலைச் சாற்றைக் கொடுத்தேன். அதன் இனிப்பு குறைந்து வந்தது. கசப்பு தெரிய ஒரு வாரம்கூட ஆகும்.
”நாம் ஏதாவது மரத்தின்மேல் ஏறிக்கொள்ளலாம்”என்றேன்.துரை ”என்னால் மரமேற முடியாது…பாறை மீது தங்குவோம்”என்றான். ”இன்றிரவு இங்கே நிறைய செந்நாய்களும் நரிகளும் திரண்டு வரும்..”என்றேன். ஒரு யானையின் சடலம் அவற்றுக்கு பலநாள் உணவாகும். துரை பெருமூச்சு விட்டான்.
நான் அவனை அமரசெய்துவிட்டு மரத்தில் ஏறி கொடிகளை வெட்டி கயிறாக்கி தொங்கவிட்டேன். அவன் பலத்த முனகல்களுடன் மெல்லமெல்ல ஏறிவந்தான். அவனை என் பலத்தால் தூக்கி மரக்கிளையில் அமரச்செய்தேன். அதன்பின் காட்டுகொடிகளால் அவனை கிளைகளுடன் சேர்த்துக் கட்டினேன். ”நீங்கள் தூங்கினாலும் பிரச்சினை இல்லை. நான் விழித்திருப்பேன்”என்றேன்.
துரை மெல்ல ”ஜீஸஸ்”என்றான். நான் இன்னொரு கிளையில் அமர்ந்து என் தோளை அடிமரத்தில் சாய்த்துக்கொண்டேன். காட்டுக்குள் பன்றிக்கூட்டம் ஒன்று செல்லும் உறுமல்தொகைகள் கேட்டன. சில்வண்டுகளின் ரீங்காரத்துடன் காற்று செல்லும் ஓசையும் இணைந்துகொண்டது. நான் காட்டுக்கு மேல் இலைக்கூரைக்கு அப்பால் கரியவானில் மின்னியபடி விரிந்திருக்கும் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டேன். துரை தூங்கிவிட்டானா என்று தெரியவில்லை.
துரை அசையும் ஒலி கேட்டு நான் ”ம்?”என்றேன். துரை ”ஊமைச்செந்நாயே”என்றான் ”நீ என்னை ஏன் காப்பாற்றினாய்?” நான் இருட்டுக்குள் பேசாமல் இருந்தேன். ” நீ என்னை விட்டுவிட்டு போயிருக்கலாமே” நான் ஒன்றும் சொல்லவில்லை.
துரை சற்றுநேரம் பேசவில்லை. பின்பு ”என்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”என்றான். நான் அதற்கும் பதில் சொல்லவில்லை ”சொல்” நான் மெல்ல கனைத்ததுடன் சரி. ”நீ சொல்ல மாட்டாய் எனத் தெரியும்”என்றான் துரை. ”ஆனால் நீ ஒன்று தெரிந்துகொள்ளவேண்டுமென நான் விரும்புகிறேன்…நான் கெட்டவன் அல்ல. ஆணவம் பிடித்தவனாக இருக்கலாம் . இனவெறியனாக இருக்கலாம். ஆனால் நான் உள்ளூர கெட்டவன் அல்ல…”
அவன் நான் ஏதேனும் சொல்லக்கூடுமென எதிர்பார்த்தான். பின்னர் தொடர்ந்தான் ” ஊமைச்செந்நாயே, நாடுவிட்டு இந்த வெப்பநாட்டுக்கு வந்திருக்கும் நானும் என்னைப்போன்றவர்களும் எங்கள் சமூகத்தில் உன்னைப்போலவே கடைப்பட்டவர்கள். எங்களை எவரும் மனிதர்களாக மதிபப்தில்லை. ஒரு நல்ல குடும்பத்துப்பெண் எங்களை ஏறிட்டும் பார்க்கமாட்டாள். ஒரு சாதாரண விருந்தில்கூட நாங்கள் கலந்துகொள்ள முடியாது. எங்கள் கழுத்துக்குட்டைகளையும் காலுறைகளையும் தொப்பிகளையும் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். அவர்கள் சிரிக்கும்தோறும் நாங்கள் மேலும் கோமாளிகள் ஆவோம்….நாங்கள் எங்கள் சமூகத்தில் உள்ள புழுப்பூச்சிகள் தெரியுமா?”
பேச ஆரம்பித்ததும் அவனுக்கு பேச்சு வந்தது ”எல்லாவற்றையும் உதறிவிட்டு இந்த வெயில் காடுகளுக்குள் வந்து பதுங்கிக்கொள்கிறோம். எங்களை வெறுப்பவர்களை நாங்கள் வெறுக்க முடியாது. அவர்கள் எங்கள் எஜமானர்கள். ஆகவே உங்களை வெறுக்கிறோம். சாட்டையால் அடிக்கிறோம். அவமானபப்டுத்துகிறோம். நீயே பார்த்திருப்பாய், அடிமைகள் அனைவருமே நாய் வைத்திருப்பார்கள்.”
நெடுநேரம் இருவர் நடுவே இருள் மட்டும் இருந்தது. பின்பு துரை ”நீ அசாதாரணமான மனிதன். என்னைவிட நீ எத்தனையோ பெரியவன். நான் சாதாரணமானவன்…ஆனால் நான் உனக்கு ஏதாவது தரவேண்டும்…பதிலுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். உனக்கு என்ன வேண்டும்?” அவன் என்னை நோக்கி கை நீட்டி என் முழங்காலை தொட்டான். அவன் கை சூடாக நடுங்கிக்கொண்டிருந்தது ”சொல்…உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”
நான் ஒன்றும் சொல்லாமலேயே இருந்தேன் .என் முழங்காலைப் பிடித்து அவன் உலுக்கினான் ”சொல்…நிறைய பணம் தருகிறேன்.கீழே கிராமத்துக்குப் போய் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு நிலம் வாங்கி வீடுகட்டி விவசாயம்செய்…” அவன் மேலும் உலுக்கினான் ”சொல் என்ன வேண்டும் உனக்கு? அந்த சோதியை திருமணம் செய்துகொள்கிறாயா? அவளை கட்டாயப்படுத்தி உன்னை மணக்கச் செய்கிறேன்…”
நான் பேசாமலிருந்ததும் அவன் வெறிகொண்டான் ”சொல், முட்டாளே, சொல்…ஊமைச்செந்நாயே…உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? சொல். வாயைத்திறந்து சொல்…ஏன் பேசாமலிருக்கிறாய்?”
நான் மெல்ல ”ஏனென்றால் நான் ஒரு ஊமைச்செந்நாய்’என்றேன். அவன் தளர்ந்து மெல்ல சாய்ந்துகொண்டான். ”நான் உன்னிடம் சொல்வதெல்லாம் இவ்வளவுதான். நீ என் நண்பன். என் சகோதரன். என் வாழ்நாளெல்லாம் நான் உன்னை நினைத்திருப்பேன்…ஒருநாளும் உன் நினைவை நான் இழக்க மாட்டேன்” அவன் குரல் தழுதழுத்திருந்தது.
அதன்பின் அவன் பேசவில்லை. ஆனால் அவன் இரவெல்லாம் தூங்கவில்லை. பெருமூச்சு விட்டபடியும் நெளிந்தபடியும்தான் இருந்தான். இருமுறை தண்ணீர் கேட்டான். விடியற்காலையில் அவன் சற்று தூங்கிவிட்டிருந்தான்.
தலைக்குமேல் பறவைகளின் ஒலி கேட்டபோது நான் எழுந்து அவனை எழுப்பி அவன் கட்டுகளை அவிழ்த்தேன். அவன் முகம் தெளிவாக இருந்தது. அது தூங்கியதனால் இருக்கலாம். அல்லது இரவு அவன் பேசியதனாலும் இருக்கலாம். என்னிடம் ”இன்று நானே நடப்பேன் என்று நினைக்கிறேன்”என்றான். நான் புன்னகைசெய்தேன்.
காட்டுக்குள் இறங்கி இருவரும் சென்றோம். அவன் சற்று திடமாகவே நடந்தான். ஏற்றங்களில் மட்டும் நான் சற்று பிடிக்க வேண்டியிருந்தது. மலைப்பாதை பெரிய குன்றின் விலாவில் வளைந்து சென்றது. கீழே மிக ஆழத்தில் பாம்புச்சட்டை போல ஆறு ஓடும் பள்ளம் தெரிந்தது. ”அது காரோடையா?” என்றான். நான் ஆம் என தலையசைத்தேன்.
அவனை மரத்தடியில் நிறுத்திவிட்டு நான் காட்டுக்குள் சென்றேன். பாதையோரத்தில் சிறிய பாறை ஒன்றின் இடுக்கில் ஊற்று கசிந்து அப்பால் பள்ளம் இறங்குவதைக் கண்டேன். நீரை அள்ளிச்செல்ல ஒரு கமுகுப்பாளை எடுத்து கோட்டிக்கொண்டிருந்தபோது சீறல் ஒலியைக் கேட்டேன். என் முன்னால் மாங்கொட்டை நிறத்து உடலுடன் ஒரு செந்நாய் நின்றது. அதன் பழுப்புக்கண்களை பார்த்துக்கொண்டே நான் காலை தூக்கி பின்னால் வைத்தேன்.
புதர்களுக்குள் மெல்லிய அசைவுகளாக நான் செந்நாய்களைக் கண்டேன் எந்த திசை நோக்கி விலகுவது என நான் கண்களை மட்டும் திருப்பி பார்ப்பதற்குள் செந்நாய் ஒன்று என் விலாப்பக்கமிருந்து என்னைத்தாக்கியது. யானைரத்தம் தோய்ந்த துணி அங்கே இருந்தது. அதை முகர்ந்து பின்னால் வந்த கூட்டம் அது. நான் என் இடுப்புத்துணியை உருவிவிட்டுக்கொண்டு பாய்ந்து அந்தப்பாறையில் ஏறினேன். என் அலறல் கேட்டு துரை திரும்பிப்பார்த்து ”ஜீஸஸ்!” என்றபடி தன் கைத்துப்பாக்கியை உருவி இருமுறை சுட்டான்.
காடே ஒலியில் அதிர செந்நாய்கள் வால் சுழற்றி எம்பிப்பாய்ந்து புதர்களுக்குள் விலகி ஓட துரை என்னை நோக்கி வருவதைப்பார்த்திருந்தபோது காட்சி சற்றே ஆடுவதை உணர்ந்தேன். அதைப்புரிந்துகொள்ளும் சில கணங்களுக்குள் நான் நின்றிருந்த சிறிய பாறை மண்ணுடன் பெயர்ந்து சரிவில் இறங்கியது.
நான் அதிலிருந்து குதித்து ஒரு தவிட்டைச்செடியைப்பற்றினேன். பாறை பெயர்ந்து உருண்டு வேகம் கொண்டு தம்ம்ம் என்ற ஒலியுடன் ஆழத்துக்காட்டை அடைந்தது. தவிட்டைச்செடி என் எடையை தாங்காமல் பிடுங்கப்பட்டு வந்தது. நான் பல்வேறுசெடிகளைப்பிடிக்க முயன்று ஈரமண்ணில் வழுக்கி வழுக்கி கீழிறங்கி செங்குத்தான சரிவின் விளிம்பில் நின்ற ஒரு வேரைப்பற்றிக்கொண்டு தொங்கினேன். மண்ணில் ஊன்ற முயன்று வழுக்கிய என் கால்களுக்குக் கீழே ஆழத்தை பார்க்காமலேயே உணர்ந்தேன்.
துரை ஓடிவந்து மேலே குப்புறப்படுத்துக்கொண்டு ”பயபப்டாதே …பயபப்டாதே…ஒரு நிமிடம்.. ”என்று கூவினான். தன் இடுப்பில் இருந்து பெல்ட்டை உருவி அதன் ஒரு நுனியை தன் கையில் சுற்றிப்பிடித்துக்கொண்டு அதை நீட்டினான்.
பெல்ட் என் முகத்தருகே வந்தது. என் வலக்கையை நீட்டி அதைப் பிடித்தபடி மேலே பார்த்தேன் ”’பிடித்துக்கொள்…நான் இழுக்கிறேன்’என்று அவன் கூவினான்.
நான் ”நரகத்துக்குப் போ!” என்று அவன் கண்களைப் பார்த்துச் சொல்லி காறித் துப்பிவிட்டு என் பிடிகளை விட்டேன். அடியாழத்தில் விரிந்திருந்த பசுமையான காடு பொங்கி என்னை நோக்கி வர ஆரம்பித்தது.