பகுதி பத்து : பெருங்கொடை – 2
புருஷமேத வேள்வியில் தன்னாகுதி அளிக்க நூற்றெட்டு அதர்வர் அமர்ந்த வேதக்கூடலில் தெரிவு செய்யப்பட்ட அவிரதன் எனும் இளைய வைதிகன் வேள்விக்காட்டின் வடக்கு எல்லையில் கங்கைக் கரையில் கோரைப்புல்லால் கட்டப்பட்ட சிறுகுடிலில் நோன்பு மேற்கொண்டு தங்கியிருந்தான். மரவுரி அணிந்து, ஒருவேளை உணவுண்டு, காலை, உச்சி, அந்தி என மூவேளை நீர் வணங்கி எரியோம்பி நாற்பத்தொரு நாட்களாக அவன் அங்கு தங்கியிருந்தான். அவன் விழிகள் மானுடர் எவரையும் நோக்கலாகாதென்றும் அவன் செவியிலும் நாவிலும் வேதச்சொல் அன்றி பிறிது திகழக்கூடாதென்றும் நெறியிருந்தமையால் அவனை அந்தணர் எவரும் அணுகவில்லை. முற்றிலும் தனிமையில் அவன் அங்கே இருந்தான்.
முதல்நாள் அவனுக்கு வேதமுதற்சொல் அளித்த ஆசிரியர் அமூர்த்தர் அவனை வலக்கை பற்றி கொண்டுவந்து அக்குடிலில் அமர்த்தினார். அங்கே அவனுக்கு நாற்பத்தொரு நாட்களுக்குத் தேவையான உணவும் நெய்யும் வேள்விக்குரிய பிறவும் ஒருக்கப்பட்டிருந்தன. அவன் வேள்வித்தீயின் அனலையும் வான்சுடர்களையும் அன்றி பிற வெளிச்சத்தை பார்க்கலாகாதென்பதனால் அக்குடிலில் விளக்குகள் இருக்கவில்லை. அனல்படாத உணவையே அவன் உண்ணவேண்டும் என்பதனால் பழக்கப்படுத்தப்பட்ட பசு நாளும் புதுக் கிழங்குகளும் கனிகளும் தேனும் பாலும் கொண்டு அவன் குடில்முற்றத்திற்கு வந்து மீண்டது. தர்ப்பையிலன்றி அமரவோ இலைகளிலன்றி உணவருந்தவோ அவனுக்கு ஒப்புதலிருக்கவில்லை. எனவே அக்குடிலில் கலங்களோ பொருட்களோ ஏதுமிருக்கவில்லை.
புலரிக்கு முன்னர் இருளில் அவன் கங்கையில் வழிபடச் சென்றபோது அந்தணர் அன்றி பிறர் அவனைப் பார்ப்பது விலக்கப்பட்டிருந்தமையால் தொலைவில் காவல்மாடத்தின்மேல் அமர்த்தப்பட்டிருந்த இளைய வைதிகன் ஒருவன் சங்கொலி எழுப்பினான். அதைக் கேட்டதும் காவலர் அனைவரும் அகன்று நோக்கு எல்லைக்கு அப்பால் சென்றனர். கங்கைக்கரை மணலில் உடல்கழுவி நீராடி அவன் குடில்முகப்புக்கு மீண்டான். எரியெழுப்பி அவியளித்து அம்மிச்சத்தை உணவெனக்கொண்டான். மீண்டும் எழுகதிர் வணங்க அவன் கங்கைக்குச் சென்றபோது சங்கொலி அவன் வருகையை அறிவித்தது. உச்சியிலும் அந்தியிலும் பொழுதிணைவு வணங்கவும் அந்தி நீராடவும் மீண்டும் அவன் கங்கைக்கு சென்றான். அந்தச் சங்கொலியால் மட்டுமே இருப்பு கொண்டவன் என்றானான்.
பகல் முழுக்க அக்குடிலுக்குள் அவன் வேதம் முற்றோதியபடி தர்ப்பை விரிக்கப்பட்ட மணைமேல் அமர்ந்திருந்தான். இரவு எழுந்தபின் வந்து குடிலுக்கு முன்னால் வலமுற்றத்தில் நின்றிருந்த மகிழ மரத்தடியில் அமர்ந்து விண்மீன்கள் வானில் ஒவ்வொன்றாக ஊறி துளிர்த்து ஒளிகொள்வதை நோக்கிக்கொண்டிருந்தான். வேதமன்றி ஒரு சொல்லும் நாவிலும் நெஞ்சிலும் எழலாகாதென்று தனக்குத்தானே ஆணையிட்டுக்கொண்டிருந்தான். அந்நெறிகளை ஆசிரியர் நாவிலிருந்து கேட்டுக்கொண்டபோது அது எவ்வண்ணம் இயல்வதென்றே அவன் அகம் வியந்தது. “நீ எண்ணுவது புரிகிறது. ஆனால் வேதம் கங்கை. நடு ஒழுக்குக்குச் செல்வது மட்டுமே நீ செய்யவேண்டியது” என்றார் ஆசிரியர்.
அந்தணர் நிலையில் இருந்து கிளம்பும் தருணத்தில் அவன் அகம் கொந்தளித்தெழுந்தது. விழிநீர் உகுக்கலாகாது என்று அவன் தன் ஒவ்வொரு உளச்சொல்லையும் இறுக்கிக்கொண்டான். அவனுடன் இருந்த பிற வைதிகர்கள் அங்கே நிகழ்வதை சரியாக உணராதவர்கள்போல் முகம்காட்டி வெவ்வேறு திசைகளில் திரும்பி நின்றிருந்தார்கள். சிலர் மேலாடை நுனியை கைகளால் பற்றி முறுக்கிக்கொண்டிருந்தனர். சிலர் விரல்களை நெருடினர். அவன் குனிந்து நடந்தபோது கால்விரல்கள் அனைத்தும் மண்ணில் பதிந்து அசைந்துகொண்டிருப்பதை கண்டான். அவன் இடக்கால் பதறிக்கொண்டிருந்தது. இடகாலவுணர்வு கலங்கி பெருஞ்சுழி ஒன்றின் மையத்தில் நிற்பதுபோல் உணர்ந்தான்.
ஆசிரியர் அவனிடம் “இறுதியாக இவ்வினாவை கேட்கவேண்டும் என்று நெறியுள்ளது, உத்தமரே. தாங்கள் விரும்பினால் இப்போதும் பின்னடி வைக்கலாம். மூன்று காலடி பின்னால் சென்றால் அனைத்தையும் மறுத்தவராவீர். அதனால் எவ்வகையிலும் பழியோ ஏளனமோ உங்களுக்குச் சேராது” என்றார். அவன் அவர் முகத்தை நோக்கி புன்னகையுடன் “இதுவே என முடிவெடுத்துவிட்டேன், ஆசிரியரே” என்றான். அவனுள் பிறிதொருவன் இல்லை, இது நான் எண்ணியதல்ல, இது வேறு என பதறினான். அது நாப்பழக்கமென எழுந்த சொல். நாவை அதற்கு பழக்கியிருக்கிறார்கள். வேதக் கல்வி என்பது நா கொள்ளும் பழக்கமன்றி வேறல்ல. என் நெஞ்சு இதோ எழுகிறது. நாவை அது எட்டிப் பற்றிக்கொள்கிறது.
“நன்று, வேதத்தின் தெய்வங்கள் துணைநிற்கட்டும்” என அவர் அவனை வாழ்த்தினார். மூத்தவர்களும் ஆசிரியர்களுமாகிய ஏழு வைதிகர்களை அவன் கால்தொட்டு சென்னிசூடி வணங்கினான். அவன் தலையில் மஞ்சளரியிட்டு அவர்கள் வாழ்த்தினர். உள்ளிருந்து அவன் சாலைத்துணைவரும் தோழர்களுமான இளவைதிகர்கள் மரவுரி அணிந்தவர்களாக தலைகுனிந்து வந்து முற்றத்தின் எல்லையில் நிரந்து நின்றனர்.
குடில்முற்றத்தில் பசுஞ்சாணம் மெழுகப்பட்டு சிறிய எரிகுளம் ஒருக்கப்பட்டிருந்தது. அதன் அருகே கிழக்குநோக்கி போடப்பட்ட தர்ப்பைப் புல் இருக்கையில் அவன் அமர்ந்தான். அவர் அவனுக்கு எதிரே அமர்ந்துகொண்டார். அக்குருநிலையின் ஏழு முதிய வைதிகர் வந்து அவருக்குப் பின்னால் அமர்ந்தனர். அவனுக்கு புல்லாழி அணிவித்த ஆசிரியர் “உத்தமரே, இங்கிருந்து நீங்கள் எழுகையில் அனைத்தும் அடைந்து அடைந்தவற்றிலிருந்து விடுபட்டவராக இருக்கவேண்டும். ஒவ்வொரு வேதநுண்சொல்லும் உங்கள் ஒரு தளையை அறுப்பதாகுக!” என்றார். இளவைதிகர் கொண்டுவந்த எரியை விறகில் பொருத்தி நெய்யூற்றி எழுப்பினார்.
அதர்வம் வகுத்தளித்த ஒவ்வொரு நுண்சொல்லாக அவர் சொல்ல அவன் அவற்றை பதினெட்டுமுறை சொல்லி மரக்கரண்டியால் எரியில் நெய்யூற்றினான். அரவுப்பழி அகற்றும் சுபர்ணஸ்த்வா, அனைத்து விழைவுகளையும் அளிக்கும் இந்திரேணதத்தம், கொடுங்கனவுகள் நீக்கும் யமஸ்யலோகால், பெண்ணின்பம் பெருக்கும் காமோஜேவாஜி, எதிரிகளை அழிக்கும் சதபகன், யேன பேகதிசம் என்னும் மணமங்கலம் அருளும் சொல், மைந்தரை அருளும் அயந்தேயோனிஹ, செல்வழி சிறக்கும் பிருஹஸ்பதிர்ன பாதுபரி, அறிவுத்திறன் பெருக்கும் அக்னேகோபின்னம், நிலைபெயராமையை அளிக்கும் த்ருவம்துருவேணம், ஆணவத்தை அழிக்கும் அகந்தேபக்னம், பற்றறுக்கும் யே மே பாசா, இறவாமையை அளிக்கும் முஞ்சாவித்வம்.
ஒவ்வொரு சொல்லினூடாகவும் அவன் வாழ்ந்து நிறைந்து கடந்து சென்றான். இறுதி வேதச்சொல் ஓதி வணங்கி எழுந்து அவிமிச்சத்தைப் பகிர்ந்து அங்கு நின்றிருந்த வைதிகர் அனைவருக்கும் அளித்தான். உள்ளம் ஒரு சொல் எஞ்சாமல் ஓய்ந்திருந்தது. அவன் முகம் தெய்வங்களுக்குரிய நிறைவொளி கொண்டிருந்தது. ஆசிரியர் அவன் கையில் மலர்த்தாலத்தை அளித்து அவன் கால்களில் தலைவைத்துப் பணிந்து வணங்கினார். அவன் மூன்று மலர்களை அவர் தலைமேலிட்டு “மெய்மை அடைக!” என அவரை வாழ்த்தினான். முதிய வைதிகர்கள் நிரையாக வந்து அவன் காலடியை வணங்கினர். அவன் அவர்களை வாழ்த்தி நற்சொல்லளித்தான். அதன் பின்னர் கங்கைநீர் தெளித்து தான் செல்லும் வழியை தூய்மை செய்தபின் கையிலிருந்த மலர்களை திரும்பி நோக்காமல் தலைக்குமேல் தூக்கி பின்னால் வீசிவிட்டு அவன் நடந்தான்.
குடிலை அடைந்தபோது அவன் சிறுகுழவிபோல காணும் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கி அதன் பெயரை சொல்லிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு மரத்தையும் செடியையும் பறவையையும் சிற்றுயிரையும் சொல்லாக்கினான். பாறைகளை, கூழாங்கற்களை, செம்மண் கிளறிப் பரப்பப்பட்ட பாதையை, காலடித்தடங்களை, அப்பால் தெரிந்த குடில்கூரைகளை, காவல்மாடங்களில் எழுந்து நின்ற வீரர்களின் மின்னும் வேல்முனைகளை, நீண்டு சரிந்திருந்த நிழல்களை, நீரோடைத்தடங்களை, கால்பட்டுச் சரிந்த கற்களின் புதைவுத்தடங்களை, உதிர்ந்த சருகுகளின் பொன்னிறத்தை, இலைத்தளிர்களில் ஒளிவிட்ட பசுமையை. குடிலருகே வந்துசேர்ந்தபோது அவன் உள்ளம் மீண்டும் சொற்களால் செறிந்திருந்தது.
அத்தனிமையை அங்கு வந்தணைந்த முதற்கணமே உணர்ந்தான், குளிர்ந்த கரிய ஆழ்சுனையென. அதன் விளிம்பில் தயங்கி நின்றிருந்தான். பின்னர் திரும்பிநோக்காமல் மெல்ல உள்ளே நுழைந்தான். விடைபெறாமல் ஆசிரியர் திரும்பிச்சென்றார். அந்தச் சிறுகுடிலின் சாணிமெழுகப்பட்ட திண்ணையில் அமர்ந்தபோது இரும்புக்குவை என உள்ளம் சொற்களால் எடைகொண்டிருந்தது. அதை எங்கே வைப்பதென்று அறியாதவன்போல அவன் அதற்குள் சுற்றிவந்தான். நீள்மூச்சுகளாக விட்டு தன்னை ஆற்றிக்கொள்ள முயன்றான். ஒவ்வொரு சொல்லும் நுரைத்து நுரைத்துப் பெருகியது. நெஞ்சிலறைந்தபடி சூழ்ந்திருந்த காட்டின் அமைதி நோக்கி கூச்சலிடவேண்டும் என்று தோன்றியது.
ஏதோ ஒரு கணத்தில் அனைத்தையும் அறுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடிவிடுவான் என அவனே உணர்ந்தபோது உள்ளே சென்று கண்களை மூடிக்கொண்டு அதர்வவேதத்தை சொல்லத் தொடங்கினான். நாப்பழக்கமாக வேதம் ஓடிக்கொண்டிருக்க சிறுவழியில் முண்டியடிக்கும் வெள்ளாட்டுச் செச்சைபோல சொற்கள் வேறெங்கோ பெருகிச் சென்றுகொண்டிருந்தன. ஏமாற்றமும் சிறுமையுமாக எழுந்து வெளியே ஓடி வெட்டவெளியில் நின்று கண்ணீர் மல்கினான். உள்ளம் விண்முகிலென நீரென நெருப்பென காற்றென உருவற்றது. அதை எவர் ஆளமுடியும்? சொல்லை மேலும் சொல்லால் மட்டுமே அடக்கமுடியும். சொல்லை வெல்லமுயல்வதே சொல்பெருக்குவதுதான். முடியாது என உணர்ந்தபோது விடுதலை உணர்வு ஏற்பட்டது. இந்நோன்பை வகுத்தவர்கள் அறியாததா இது? நாவில் வேதம் திகழ்வதொன்றே நான் செய்யக்கூடுவது. உள்ளத்தை ஆளும் தெய்வங்களுக்குமேல் எனக்கு ஆணையில்லை.
அதன்பின் கொந்தளிப்பு அடங்கி மீண்டும் வந்தமர்ந்து வேதமோதத் தொடங்கினான். இரண்டு நாட்களுக்குள் இரு பெருக்குகளும் ஒன்றென்றாயின. வேதத்தினூடாக மேலெழுந்து மறையும் அடித்தளமென்று இருந்தது சித்தப்பெருக்கு. பின்னர் எப்போதோ உணர்ந்தான், மிக அரிதாகவே சித்தம் சொல்வடிவு கொள்வதை. அது செயலென்றாகி உடலில் பரவிவிட்டிருந்தது. புலரியில் எழுந்தான். கங்கையாடினான். அரணிகடைந்து அனல்கறந்தெடுத்து எரிகுளம் மூட்டி அவியளித்தான். பொழுதிணைவு வணக்கங்களை செய்தான். இருளில் விண்மீன் நோக்கி அமர்ந்திருந்தான். அவன் ஆழம் வேதமாக இருந்தது.
அவன் உத்கல நாட்டைச் சேர்ந்த பெருவைதிகரான திரிபுவனரின் எஞ்சிய எட்டு மைந்தரில் மூத்தவன். வேதம் பயிலும்பொருட்டு அவனை நகர்கள்தோறும் பயணம் செய்து வேள்விகள் இயற்றும் அதர்வ வைதிகர்களான ஹிரண்யகர்ப்பம் என்னும் குருமரபினரிடம் அவன் தந்தை ஒப்படைத்தார். அங்கு அவன் தன் பன்னிரு அகவையில் தொடங்கி ஏழு ஆண்டுகள் அதர்வவேதம் பயின்றான். தந்தையிடமிருந்து மூவேதங்களையும் முதலிறுதி, இறுதிமுதல், சொல்திருப்பல், சொல்லெண்ணுதல், சொல்மாற்றுதல் என்னும் தொல்முறைகளில் முன்னரே கற்றுத் தேர்ந்திருந்தான். அவனுடைய தந்தையும், மரபினரும் ரிக்வேதிகள். தந்தையின் ஆணைப்படி அவன் அதர்வ வைதிகனானான்.
எண்ணியிரா கணத்தில் உள்ளத்திலெழுந்த தந்தையின் நினைவால் அவன் திடுக்கிட்டான். மரத்தடியிலிருந்து எழுந்துநின்று செவியில் கைவைத்து கன்றுக்காது முத்திரைகாட்டி வேதச்சொல் தொடுக்கத் தொடங்கினான். பெருகிவிழும் மழை புழுதியை என அவனுள்ளிருந்து சொற்களைக் கழுவி அகற்றி தான் பரவி நின்றுகொண்டது வேதம். விண்மீன்கள் நிலைமாறியிருப்பதை உணர்ந்தபோதுதான் தன்னுணர்வுகொண்டான். காட்டிலிருந்து குளிரலைகள் எழுந்துகொண்டிருந்தன. அவற்றில் ஏறி அணுகிய விலங்குகளின் ஓசைகளும் பறவைமுழக்கமும் வேற்றுச்சுதி கொண்டிருந்தன. அவன் எழுந்து குடிலுக்குள் சென்று தர்ப்பைப் புல் பாயை எடுத்து விரித்தான்.
பாயின் அடியிலிருந்து சிறிய நாகக்குழவி ஒன்று நெளிந்தோடியது. சுவர் மடிப்பில் குழம்பி வால் தவிக்க அங்குமிங்கும் பாய்ந்து ஒரு மூங்கில் விரிசலில் நுழைய முயன்று முடியாமல் தலை மீண்டு அப்பால் விரைந்து வழியைக் கண்டுகொண்டு வெளியேறியது. அது செல்வதை சற்றுநேரம் நோக்கியிருந்தபின் அவன் பாயை விரித்து முருக்குத்தடித் தலையணையை வைத்துக்கொண்டு உடல்நீட்டி படுத்துக்கொண்டான். மீண்டும் வேதச்சொல் இயல்பாக நெஞ்சிலெழுந்து ஓடத் தொடங்கியது. அச்சொற்கள் தயங்குவதை, ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்வதை உணர்ந்தான். தேன்சிட்டென ஒரு சொல் மட்டும் நின்று சிறகடித்துக்கொண்டிருக்க துயிலில் ஆழ்ந்தான்.
துயிலின் ஆழத்தில் எங்கோ அவன் தன் அன்னையை கண்டான். அவளை கனவில் கண்டு பல ஆண்டுகளாகின்றன என்பதை அக்கனவுக்குள்ளேயே அவன் வியந்துகொண்டான். அவர்களின் மரப்பட்டை வேய்ந்த ஆளுயரக் குடிலுக்கு தென்கிழக்கு மூலையில் தனியாக ஈச்ச ஓலைக் கூரையிட்ட சிறுகுடில் அடுமனைக்குள் கால்மடித்து அமர்ந்து களிமண் அடுப்பிலிருந்து அனலில் வெந்த அப்பங்களை சிறு கம்பியால் குத்தி எடுத்துச் சுழற்றி அருகிலிருந்த சிறிய மூங்கில் கூடையில் போட்டுக்கொண்டிருந்தாள். சற்றே கரிந்து, புதுமணம் எழுப்பிய அப்பங்கள். வெளியே கூரைநுனிகளிலிருந்து மழை சொட்டிக்கொண்டிருந்தது. அப்பால் நின்றிருந்த அசோகமரம் கிளைவிரித்துச் சுழன்றாடியது. நீர்த்துளிகள் அடுமனைக்குள் தெறித்து காற்றில் தூசிபோல் பறந்தன.
அவன் அன்னையிடம் ஏதோ பேசிக்கொண்டிருப்பதை அவனே அவ்வறையின் வேறொரு மூலையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவன் சொற்களை புன்னகையுடன் கேட்டு அன்னை தலையசைத்தாள். காதோரம் அவள் தலைமுடி பொன்னொளி கொண்டிருந்தது. காலை வெளிச்சமா என அவன் திரும்பி நோக்கினான். அப்போதுதான் கதிர் எழுந்துகொண்டிருந்தது. அடுமனையை ஒட்டிய புழக்கடை முற்றத்தில் சிறுகுருவிகள் எழுந்தமைந்து எதையோ கொத்தியபடி சிறுமொழி பேசிக்கொண்டிருந்தன. அவற்றின் நிழல் இலையசைவுபோல அப்பாலிருந்த மண்சுவரில் தெரிந்தது. அங்கிருந்த மண்தொட்டி நீரில் விழுந்த ஒளியின் அலைவு அடுமனைக்குள் கூரைச்சரிவில் ஒளியென ததும்பியாடியது.
அடுமனையின் சிறுசாளரத்தினூடாக உள்ளே மூன்று சட்டங்களாக இறங்கிய மஞ்சள் வெயிலில் நீராவியும் புகையும் கலந்து தழல்போலாடின. அன்னை அவனிடம் என்ன கேட்டுக்கொண்டிருக்கிறாள் என அவ்வறைக்குள் நின்றிருந்த அவன் செவிகூர்ந்து முன்னால் சென்றான். மேலும் மேலுமென அருகே சென்று தடுக்கியவன்போல நின்று விழித்துக்கொண்டான். கனவை எண்ணியபடி படுத்திருந்தபோது அன்னை முகம் மிக அருகிலெனத் தெரிந்தது. வாடிய பாளை என சுருக்கங்கள் அடர்ந்த ஒட்டிய முகம். கிண்டியின்மேல் வெண்துகில் விழுந்ததுபோல் அவள் முகத்தோலுக்குள் இருந்து எலும்புகள் புடைத்திருப்பதாக அவன் எண்ணுவதுண்டு.
அன்னையின் முகம் விழுந்து மட்கும் பனம்பழம் ஓடென்றானதுபோல் மெலிந்து மெலிந்து தசையை இழந்து உருவானது. கண்கள் குழிக்குள் இறங்கி வாயைச் சுற்றி தசை வறண்டதனால் பற்கூட்டு மேலெழுந்து, கழுத்து வளையங்களை அடுக்கியதுபோலாகி இருந்தது. வற்றிய ஈறுகளிலிருந்து நீண்டிருந்தன பற்கள். ஆயினும் அவள் புன்னகை அழகானது. அது அவனுக்காகக் கனிவதனால் மட்டும் அல்ல. அவள் இளமையில் என்றோ அழகியாக இருந்திருக்கக்கூடும். புன்னகை மட்டும் அவ்வழகின் பகுதியாக எஞ்சக்கூடும். உடைந்திருந்தாலும் களிம்பிருந்தாலும் விளக்கின் சுடர் ஒளிகுன்றுவதில்லை.
அவன் இளமையில் கவிஞனாக விழைந்தான். கவிதை வரிகளை பெரும் பித்துடன் உளப்பதிவு செய்தான். வேதநுண்சொற்களுக்கு நிகராக அவற்றை சொல்லிக்கொண்டிருந்தான். ஒருநாள் தன் பெருங்காவியம் மும்முடி கொண்டமர்ந்த பேரரசர் ஒருவரின் கவியவையில் அரங்கேறுவதைப் பற்றி பகற்கனவுகள் கண்டான். காலங்களுக்கு அப்பால் தென்னகத்திலும் வடகிழக்கிலும் அறியா நிலங்களில் அவன் அறியாத மைந்தர் அச்சொற்களைப் பயில்வதை எங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருந்தான். அவனுடைய அவ்விழைவை அன்னை மட்டுமே அறிவாள். ஆம், அடுமனையில் அன்னையின் அருகே அமர்ந்து அவன் தன் கவிதையைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான்.
அவன் இருளுக்குள் உளம் மயங்கி விழிநீர் உகுத்தான். அங்கே எவரோ நின்று தன்னை கண்காணிப்பதாக உணர்ந்தவன்போல பெருமூச்சுகள் அடக்கி ஓசை தவிர்த்தான். நெஞ்சு எடைகொண்டு விம்மலென வெடித்தெழுந்துவிடும்போல் தோன்றியது. முகத்தை கைகளால் அழுத்தி பிடித்துக்கொண்டான். மீண்டும் அக்கனவில் புகுந்துகொள்ள விரும்புபவன்போல குப்புறப்படுத்து மண்ணில் உடலை புதைத்துக்கொண்டான். அன்னையின் முகத்தை நினைவுகூர்ந்தான். ஆனால் அது நீரில் மூழ்குவதுபோல அகன்று கரைந்து மறைந்தது. இறுதியொளியாக அவள் புன்னகை மட்டுமே விழிக்குள் எஞ்சியது.
உத்கலத்தின் அவனது சிற்றூரில் அந்தணருக்கு நாளும் அன்னமிடும் அளவுக்கு வேளிரும் ஆயரும் வணிகரும் செல்வந்தர்கள் அல்ல. எட்டுமாதகாலம் அயலூர்களில் தர்ப்பையுடன் அலைந்து சடங்குகள் செய்து தானியங்களையும் வெள்ளி நாணயங்களையும் ஈட்டியபடி திரும்பி வரும் தந்தை எஞ்சிய நான்கு மாதம் ஊரில் அதைக்கொண்டு குடிபுரந்தாக வேண்டும். உத்கலத்தின் மழைக்காலம் வீச்சு மிக்கது. கீழைக்கடலில் இருந்து பல்லாயிரம் சவுக்குகள் என மழை மண்ணை அறையும். புயலெழுந்து மரங்களைப் பிடுங்கி வீசும். இல்லக்கூரைகள் சருகுகள் என பறந்தகலும். நீரில் நின்ற கலங்களைத் தூக்கி கரைமேல் வீசியதுமுண்டு. மகாநதி பேருருக்கொண்டு மறுகரை காணாததாகும். அதன் கைகள் நாளுமென பெருகி நகர்களை, சிற்றூர்களை தழுவி உள்ளிழுத்துக்கொள்ளும்.
மக்கள் அந்நதியை மூதன்னை என நன்கறிந்திருந்தனர். எப்போதும் உடனிருக்கும் எடையில்லாச் சிறுபடகுகளிலும் பரிசல்களிலும் ஏறி ஊர்விட்டு அகன்று குன்றுகளுக்குமேல் ஏறிக்கொள்வார்கள். அனைத்து வீடுகளையும் தெருக்களையும் வயல்களையும் செந்நிற வண்டலால் மூடியபடி நதி நிலைமீண்ட பின்னர் அவர்கள் திரும்பிவருவார்கள். மீண்டும் இல்லங்கள் விளக்கேறி சுவர்கள் வெண்மைமீண்டு வயல்கள் பசுமைகொள்ள ஒரு மாதமாகும். அப்போதும் உத்கலம் பல்லாயிரம் வெறிகொண்ட ஓடைகளால் பல துண்டுகளாக சிதறடிக்கப்பட்டிருக்கும். “வேதச்சொற்களை மழையோசை முற்றாக மறைத்துவிடும். பசியென்னும் அனலை அக்குளிர்நீர் மூண்டெழச் செய்யும்” என உத்கலத்து அந்தணர் சொல்வதுண்டு.
எட்டுமாத பயணத்தில் மூன்றுமுறை தந்தை திரும்பிவந்து பொருள் அளித்துச் செல்வார். அப்பொழுதுகளில் அவன் குடிலில் உணவு மணம் எப்போதுமிருக்கும். எண்ணை ஏனத்தை அடுப்பிலேற்றி அரிசி முறுக்கும் சீடையும் செய்து அளிப்பாள் அன்னை. எண்ணை கொதிப்பதன் இனிய மணம், நறுநெய்யின் சுவை அப்போதுதான் மூக்கிலும் நாவிலும் தொடும். ஆண்டெல்லாம் இனிய நினைவென அது நீடிக்கும். அவன் தன் இளையோரின் மகிழ்ந்த முகங்களையும் சிரிக்கும் வெண்பற்களையும் களிக்கூச்சல்களையும் எப்போதும் கேட்டுக்கொண்டிருப்பான். அவர்களை ஓயாது பூசலிட்டு அழுது சிணுங்கும் முகங்களாகவே ஆண்டெல்லாம் கண்டிருப்பான். அவர்களில் துயரென இருள்வதும் மகிழ்வென ஒளிர்வதும் அன்னம்தான், இலைப்பசுமையும் மலர்வண்ணமும் நீரே என்பதைப்போல என எண்ணிக்கொள்வான்.
மழைக்காலத் தொடக்கத்தில் முடிந்தவரை தானியங்களையும் நாணயங்களையும் சேர்த்துக்கொண்டு தந்தை இல்லம் மீண்டதுமே அதை கொடை பெற்றுக்கொள்ள அந்தணக்குடியில் எழுந்த வறியோரும் முதியோரும் வந்துகொண்டே இருப்பார்கள். ஆறு மாதம்கூட நிலைகொள்ளக்கூடும் என்று நம்பிக்கையளித்த அனைத்தும் ஒரு மாதத்திலேயே தீர்ந்துவிட மழைக்காலம் இருண்டு குளிர்ந்து இடியோசை எழுப்பி மின்னல்சீறி எழுந்தணையும். பின்னர் நிலைக்காத வான்பொழிவு. எங்கும் ஈரம். கால்களிலும் கைகளிலும் ஈரப்புண். எப்போதும் உடனிருக்கும் பசி. பல நாட்களுக்கு ஒருமுறையே அடுப்பில் அனலெழும். ஆனால் ஒருமுறைகூட குடில்முன் பாளைகளைப் பின்னி கூரையிட்டு இருவர் மட்டுமே அமரும் அளவுக்கு தந்தை அமைத்திருக்கும் வேள்விச்சாலையின் எரிகுளத்தில் அனலெழாமல் இருந்ததில்லை. தந்தை எரியோம்புவதை அன்னை குடிலின் சிறுதிண்ணையில் மெலிந்த கைகளைக் கோத்தபடி உணர்வற்ற விழிகளுடன் பார்த்திருப்பாள். அவன் தந்தைக்கு வேள்வியில் உதவுவான். அவன் இளையோர் அப்பால் கைகூப்பி நின்றிருப்பார்கள்.
அவனும் அன்னையும் குறுங்காடுகளில் அலைந்து சேர்த்துவரும் மலைக்கிழங்குகளும், காய்களும் மட்டுமே அவர்களுக்கு உணவு. புளிப்பிலை சேர்த்து வேகவைத்தோ, மும்முறை நீர் வடித்தோ அவற்றின் கசப்பையும் நஞ்சையும் நீக்குவதை அன்னை மலைக்குறவப் பெண்களிடம் கேட்டு தெரிந்துகொண்டிருந்தாள். ஆயினும் தொடர்ந்து மலைப்பொருட்களை உண்ணும்போது குடல் வலுவிழந்துவிடும். ஒவ்வொரு மழைக்காலத்திலும் இளையோர்களில் ஒருவன் வயிறு ஒழுகிவழிய உயிர் துறப்பதுண்டு. அவன் அன்னை ஈன்ற மைந்தர் ஆணும்பெண்ணுமாக பதினாறு. எஞ்சியவர்கள் எண்மர்.
அவனுக்கு மூன்று அகவை இருக்கையில் அவனைவிட ஓராண்டு இளையவனாகிய சம்புகன் இறந்தபோது “அன்னையே, அவனுக்கு என்ன நோய்?” என்று அவன் கேட்டான். திண்ணையில் கால் மடித்தமர்ந்து பொழிந்துகொண்டிருந்த மழையை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்த அன்னை அவனை திரும்பிநோக்கி “அது ஒரு கொடிய நோய். இப்புவி தோன்றிய காலம் முதலே இருந்துகொண்டிருக்கிறது” என்றாள். “அதற்கு என்ன மருந்து?” என்று அவன் கேட்டான். “அன்னம்” என்று அவள் சொன்னாள். அவள் சொன்னது முற்றிலும் புரியவில்லை என்றாலும் அவன் மெய்ப்புகொண்டு அவள் உடலுடன் தன் உடலை சேர்த்துக்கொண்டான். அவள் தன் சுள்ளி போன்ற கையை அவன் தலைமேல் வைத்து குடுமியைச் சுழற்றி தலையை வருடியபடி அமர்ந்திருந்தாள்.
அன்னையின் முலையொடிய நெஞ்சுக்கு இருபக்கமும் விலாவெலும்புகள் மரச்சீப்புபோல எழுந்திருக்கும். அவள் நெஞ்சில் தலை சேர்க்கையில் மூச்சோடும் ஓசையும் நெஞ்சு துடிக்கும் ஓசையும் செவிக்கு கேட்கும். என்றாவது ஒருநாள் அன்னையைப்பற்றி ஒரு காவியத்தை எழுதவேண்டும் என அவன் எண்ணிக்கொள்வான். மாமுனிவர்களைப் பற்றியும், பெருவீரர்களைப் பற்றியும் எழுதுகிறார்கள். வேதத் தவம் செய்யும் அந்தணர் பற்றி எழுதுகிறார்கள். அன்னையரைப் பற்றி ஏதேனும் பெருங்காவியம் உள்ளதா? கவிதைகளைக்கூட அவன் பயின்றதில்லை. ஒருமுறை அதை உசாவியபோது தந்தை “எல்லா விதைகளும் பிளந்து மட்கியழியவேண்டும் என்பது மண்ணின் நெறி” என்றுமட்டும் சொன்னார்.
அவன் அன்னை தாம்ரலிப்தியில் வாழ்ந்த பெருவைதிகரான சித்ரகரின் நான்காவது மகள். சித்ரகர் வணிகக் குழுக்களுக்கு வழிச்செலவு தொடங்கும்போது வழிமங்கலம் ஏகும் அதர்வவேத வேள்விகளை செய்தளிப்பவர். மழைக்காலத்தில் அவர்களின் பண்டங்கள் தேவர்களால் காக்கப்படுவதற்கான வேள்விகளை செய்வார். அவர் மடியில் பொன் விழாத நாளே இல்லை. அவள் இல்லத்தின் முன் எப்போதும் செம்பட்டுத் திரையுடன் மூன்று பல்லக்குகள் நின்றிருக்கும். தந்தைக்குரியது வெள்ளிப்பூண் இட்டது. மகளிருக்குரியது பித்தளைப்பூணிடப்பட்டது. அன்னை மூன்று தோழியருடன் அன்றி எங்கும் சென்றதில்லை. பட்டன்றி ஆடை அணிந்ததில்லை. ஏழு கல் குழையும் செம்மணி மூக்குத்தியும் பொற்செதுக்கு வளையல்களும் அணிந்திருந்தாள்.
சித்ரகர் வணிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப வேள்விகளை நீட்டியும் குறுக்கியும் இயற்றும் வழக்கம் கொண்டிருந்தார். அவர்கள் பொன்னளித்தமையால் எதிரிகளை அழிக்கும் சதபதக வேள்விகளையும் பலமுறை செய்திருந்தார். வயிற்றுக்கடுப்பு நோய் வந்து படுக்கையில் விழுந்தபோது அது தன் வேதப் பிழையால்தான் என்பதில் அவருக்கு ஐயமே இருக்கவில்லை. நாளுமென வயிறு வீங்கி வந்தது. உணவு கொள்ளுதல் தடைபட்டது. நிமித்திகர் வந்து நோக்கி “ஆம் அந்தணரே, வேதப்பழியால் விளைந்தது இது. மகோதரம் முற்பிறவியிலோ இப்பிறவியிலோ அன்னம் முடக்கியவர், அன்னைப்பழி இயற்றியவர், பெண்சொல் கொண்டவர் பெறுவது என்பர். இப்பிறவியில் மட்டுமல்ல செல்வழிக்கும் தொடர்ந்து வரும். கொடிவழியில் நின்றிருக்கும்” என்றார்.
“என்ன செய்வது?” என்று கண்ணீருடன் சித்ரகர் கேட்டார். “கொடையும் நோன்பும் பிறருக்குரியவை. அந்தணருக்குரிய ஆற்றுநெறிகள் என்ன என்று அறியோம். அதை உசாவி இயற்றுக!” என்றார் நிமித்திகர். அந்தணர் எழுவர் கூடி அமர்ந்து நூல்நோக்கி மறுநெறி சொன்னார்கள். அதன்படி சித்ரகர் தன் செல்வத்தில் பாதியை அதர்வவேத அந்தணர்களுக்குப் பகிர்ந்தளித்தார். தன் நான்கு மகள்களில் இருவரை அந்தணருக்கு மகள்கொடையாக கையளித்தார். பதினாறு அகவையில் அவன் அன்னை வாயிலில் வந்து நின்று கையிரந்த அவன் தந்தைக்கு சித்ரகரால் நீரூற்றி கொடையளிக்கப்பட்டாள். பதினெட்டு பொன்பணத்துடன் அவன் அன்னையையும் அழைத்தபடி தந்தை உத்கலத்தில் மகாநதிக்கரையில் மாவகம் என்னும் தன் சிற்றூரில் அமைந்த சிறுகுடிலுக்கு வந்தார்.
கரிச்சான் புலரிக்குரல் எழுப்பக்கேட்டு அவன் எழுந்தான். கைகூப்பி வேதச்சொல் எழுப்பி நெஞ்சில் நிறுத்தியபடி வெளியே திரண்டிருந்த கருக்கிருட்டுக்குள் இறங்கினான்.