ஊமைச்செந்நாய் (குறுநாவல்) : 2

[தொடர்ச்சி]

மதிய உணவுக்கு என்று துரை ஒரு சிறிய ஓடையின் கரையில் நின்றான். ஓடையில் தெளிந்த நீர் பாசிபடிந்த உருளைப்பாறைகள் நடுவே சத்தமேதும் இல்லாமல் சாரைப்பாம்பு போல வழுக்கிச் சென்றுகொண்டிருதது. தண்ணீர் தேடி வந்த காட்டுச்செடிகள் நீரை நோக்கி அடர்ந்து வரம்பிட்டிருந்தன. பாறைகள் நடுவே கொக்குக்கால் விரல்கள் போல ஏராளமான வேர்கள் தெரிந்தன. துரை ஒரு பாறை மேல் அமர்ந்து கொண்டான்

நான் என் வாளுடன் காட்டுக்குள் புகுந்தேன். ஒரு நீளமான மூங்கிலை வெட்டி நுனியைச் செதுக்கி அதன் மீது என் இடுப்பில் இருந்து கூரிய ஈட்டிநுனியை எடுத்து ஒருமுறை பாறையில் தேய்த்துவிட்டு இறுகப்பொருத்தினேன். ஈட்டியுடன் தழைகள் நடுவே மெல்ல மெல்ல ஊர்ந்துசென்றேன். என்னை ஒரு சிறுத்தையாகக் கற்பனை செய்துகொண்டேன். சிறுத்தை செல்லும்போது மண் அதிரக்கூடாது. புல் அலையக்கூடாது. சிறுத்தை, மீன் நீரில் செல்வது போல காட்டுப்புதருக்குள் செல்லக்கூடியது

புதருக்குள் என் எதிரே நான் ஒரு மானைக்கண்டேன். கொம்பு விரியாத கேழைமான். அது படுத்திருந்த இடத்தில் இருந்தே என்னுடைய வாசனையைக் கேட்டு காதுகளை என்கப்பக்கமாக குவித்து முன்னங்காலை தூக்கி வைத்தது. என்னை அது பார்த்து உடல்சிலிர்த்து எழுவதற்குள் நான் ஈட்டியை எறிந்தேன். ஈட்டியுடன் அது பாய்ந்து ஒரு மரத்தில் முட்டி விழுந்து குளம்புகளை உதைத்துக் கொண்டது. நான் ஓடிச்சென்று அதை நெருங்கி ஈட்டியை பிடுங்கி அதன் இதயத்தைப்பார்த்து இருமுறை குத்தினேன். உடைந்த கருங்கல்சில்லு போல ஈரம் மின்னிய கரிய கண்களால் அது என்னைப் பார்த்தது. நேற்று நான் சோதியின் மேலே முரட்டுத்தனமாக இயங்கிகொண்டிருந்த போது அவள் கண்கள் அப்படித்தான் இருந்தன என்று தோன்றியது. அவளுக்கு உச்சம் வந்தபோது அந்த மானைப்போலத்தான் உலுக்கிக் கொண்டு தொண்டை கமறும் ஒலியை எழுப்பினாள். அதன் பின் அவள் கண்கள் அப்படித்தான் மெல்ல இமை மூடின

நான் அந்த மானை அங்கேயே போட்டு என் வாளால் அதன் தோலை உரித்தேன். சதையில் இளஞ்சூடும் துடிப்பும் இருந்துகொண்டே இருந்தது. தொடை நரம்பை வெட்டியதும் ரத்தம் என் கைகளை நனைத்தது. இதயத்தை வெட்டி எடுத்தபோது ஊற்றுபோல ரத்தம் என் மீது பீரிட்டு அடித்தது. தொடைச்சதைக¨ளையும் மார்புச்சதைகளையும் எலும்பு இல்லாமல் போதிய அளவு வெட்டி எடுத்து பரப்பிய தேக்கிலை மீது வைத்திவிட்டு கீழே கிடந்த கமுகுப்பாளை ஒன்றை எடுத்து பையாகக் கோட்டி அதில் இறைச்சியை நிறைத்து எடுத்துக்கொண்டு ஓடைக்கரைக்கு வந்தேன்.

காட்டில் எப்போதும் ஓடைக்கரையில்தான் காய்ந்த விறகு கிடைக்கும். ஓடைவழியாகச் சென்றபோது பாறைகள் ஓடையை திசை திருப்பிய இடத்தில் நீரில் வந்து மட்கி உலர்ந்த சுள்ளிகளும் மரங்களும் சிக்கி இருந்தன. உலர்ந்த மரங்களைப் பொறுக்கிக் கொண்டுவந்து குவித்தேன். தேக்கிலையில் மான்கறியை நன்றாக பொட்டலங்களாகக் கட்டி அதை ஓடையில் எடுத்த களிமண்ணில் பொதிந்து உருட்டி உருளைகளை அடுக்கி விறகு போட்டு தீயை மூட்டினேன். காட்டுக்குள் சென்று இலைகளை ஆராய்ந்து காய்ச்சிலைக் கண்டுபிடித்து, அதன் கொடியை தூக்கி வேரைக் கண்டுபிடித்து, கிழங்கை தோண்டி எடுத்து கொண்டுவந்து தீயில் போட்டேன்.

தீயருகே அமர்த்து கொண்டு கிழங்குகளையும் இறைச்சி உருண்டைகளையும் புரட்டிப்போட்டு சுட்டேன். களிமண் சிவந்து கருகியதும் உருட்டி எடுத்து ஓரமாக வைத்தேன் மூன்று உருண்டைகளைக் கொண்டுசென்று துரை அருகே தேக்கிலையில் வைத்தேன். துரை அதை சிறிய கல்லால் உடைத்தான். உள்ளிருந்து வெந்த வாசனையுடன் மானின் நெய் வழிந்தது. கறி உருகி வெந்து வெண்மை கொண்டிருந்தது. துரைக்கு என் பெட்டியில் இருந்து உலர்ந்த ரொட்டி வில்லைகளையும் சாராயக்குப்பியையும் எடுத்துக் கொண்டு சென்று வைத்தேன். அவன் மானிறைச்சியின் நெய்யில் உலர்ந்த ரொட்டியை தோய்த்து கடித்து மென்று தின்ன ஆரம்பித்தான்.நடுநடுவே சாராயத்தையும் ஓரிரு வாய் குடித்தான்.

துரைக்கு உப்பில்லாத கறி பிடிக்கும். எனக்கு கொஞ்சம் உப்பும் மிளகாயும் தேவைப்படும். வரும் வழியிலேயே காந்தாரி மிளகாய் பறித்து வைத்திருந்தேன். என்னிடம் எப்போதுமே உப்பு இருக்கும். மிளகாயையும் உப்பையும் சேர்த்து பாறையில் வைத்து இடித்து பசையாக ஆக்கி வைத்துக் கொண்டேன். காய்ச்சில்க்கிழங்கை உடைத்து சூடாக பிய்த்து எடுத்து மான்கறியில் கலந்து பிசைந்து உப்புமிளகாயில் தொட்டுக்கொண்டு தின்றேன். என்னால் இரண்டு இறைச்சி உருளைகளை மட்டுமே தின்ன முடிந்தது. துரை இன்னும் ஒரு இறைச்சி உருளை கேட்டான்.

துரை சுருட்டை தீயில் மீண்டும் பற்றவைத்து இழுத்தான். நான் தண்ணீர்விட்டு அதை அணைத்துவிட்டு ஓடையில் தண்ணீர் அள்ளி குடித்துவிட்டு புறப்பட ஆயத்தமாக என் பெட்டியை நன்றாக மூடி கட்டி அதன் வார்களை தோளில் மாட்டியபடி அமர்ந்திருந்தேன். மிஞ்சிய எட்டு இறைச்சி உருளைகளை பாளைப்பையில் போட்டு கையில் எடுத்துக் கொண்டேன். துரை ஏப்பம் விட்டு துப்பியபடி எழுந்ததும் நானும் பெட்டியுடன் எழுந்துகொண்டேன்.

நாங்கள் மெல்லமெல்ல இறங்கி சென்றுகொண்டே இருந்தோம். சுண்டுமலையின் உச்சி மரங்களுக்கு மேல் சாய்ந்த வெயிலில் ஒளிவிட்ட மடம்புகள் மடக்குகளுடன் தெரிந்தது. அதன் ஒருபக்கம் மழைநீர் வழிந்த கரிய தடம். மேலே நீல வானத்தில் இரண்டு மேகப்பொதிகள் மாபெரும் வெண்முயல்கள் போல நின்றன. முயல்களின் காதுகளைக்கூட பார்க்க முடிந்தது.

மலையை நோக்கிச் சென்று கொண்டே இருந்தோம். மலை நாங்கள் எத்தனை நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அங்கேயே இருந்தது. காட்டுக்குள் மெல்லமெல்ல வெளிச்சம் அணைய ஆரம்பித்தது. பறவைகளின் ஒலிகள் கனத்து ஒலித்தன. வானத்தில் கூட்டம் கூட்டமாக கொக்குகள் மேற்கு நோக்கிச் சென்றன. குளத்தில் பரல்மீன்கூட்டம் செல்வதுபோல் இருந்தது. கொசுக்கள் புகைப்படலம் போல பறந்துவந்து எங்கள் முகங்களில் அப்பின. துரை துப்பிக்கொண்டே இருந்தான்..

காட்டுக்குள் இருட்டு கனத்துக்கொண்டே வந்தது. அப்போதும் சுண்டுமலை தூரத்தில்தான் இருந்தது. அதன் மேல் இன்னொரு பெரிய மேகம் வந்து படிந்து தன் சிறகுகளைத் தாழ்த்தி அமர்ந்திருந்ததைக் கண்டேன். வவ்வால்கள் கலைந்து, சிவந்த ஒளி பரவிய வானத்தில் பறக்க ஆரம்பித்தன. பலவகையான பறவைகள் பெரிய கலவர ஒலியுடன் கூடணைந்த மாபெரும் அயனி மரம் ஒன்றை தாண்டிச்சென்றோம். அதன் கீழே பறவை எச்சத்தின் காரவாசனை நிறைந்திருந்தது.

காட்டுக்குள் ஒரு தட்டையான பாறையைக் கண்டதும் துரை அங்கே தங்கலாம் என்று சொன்னான். நான் மேலே ஏறி இடம் பார்த்தேன். பெட்டியில் இருந்து கூடாரத்துணியையும் கயிறுகளையும் ஆணிகளையும் எடுத்தேன். பாறை இடுக்குகளில் ஆணியை கல் வைத்து அறைந்து இறுக்கியபின்னர் அவற்றில் கயிறு கட்டி இறுக்கி கூடாரக்காம்பை நிறுத்தினேன். கூடாரத்துணியை விரித்து அந்தக் காம்புகளில் இறுகக் கட்டி இழுத்து கூடாரத்தை நிற்கச்செய்தேன். உள்ளே மெத்தைவிரிப்பை போட்டு பக்கவாட்டு துணிகளையும் தொங்கவிட்டேன். ஊரும் பூச்சிகள் உள்ளே செல்லாமலிருக்க பக்கவாட்டு கித்தானை நன்றாக மடித்து உள்ளே செருகினேன். கூடாரம் தயாராகும் வரை துரை பாறைமேல் மல்லாந்து படுத்திருந்தான். அவனருகே யானைத்துப்பாக்கி படுத்திருந்தது.

துரை கூடாரத்துக்குள் சென்று பார்த்துவிட்டு தன்னுடைய உறக்கப்பையை எடுத்து உள்ளே போட்டுக்கொண்டான்.நான் காட்டுக்குள் போய் பெரிய உலர்ந்த மரங்களை தூக்கி வந்து போட்டு தீ பொருத்தினேன். காட்டுக்குள் இருந்து இருட்டு வந்து எங்களைச் சூழ்ந்துகொண்டது. இருட்டுக்குள் தீ புலியின் நாக்கு போல சிவப்பாக எரிந்து புகை விட்டு வெடித்து கங்குகளை மேல் நோக்கி உமிழ்ந்து நெளிந்தது. பெட்டியில் இருந்து மெல்லிய கம்பியை எடுத்து தீயின் இருபக்கமும் நட்ட மரத்துண்டுகளில் கட்டி அதில் அலுமினிய கெட்டிலை தொங்கவிட்டேன்.

துரை வந்து தீயருகே அமர்ந்துகொண்டான். நான் என்னிடமிருந்த இறைச்சி உருளைகளை அவனுக்குக்கொடுத்தேன். அவன் அதை வாங்கி உடைத்து அதில் உலர் ரொட்டியை தோய்த்து தின்றான். புட்டியில் இருந்த சாராயத்தை தீயில் லேசாக காட்டி அதனுள் இருந்து ஆவி கிளம்பியதும் அந்த ஆவியுடன் சேர்த்தே குடித்தான். நான் டீயை வெள்ளைத்தகரப் போணியில் ஊற்றி கொடுத்ததும் சாராயத்தை அந்த டீயில் விட்டு ஊதி ஊதிக் குடித்தான்.

நான் உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்தபோது துரை ஏதோ கேட்டான். நான் விழித்து புன்னகைசெய்தேன். ”நீ அந்த வேசியைக் கொண்டு சென்று அவள் கிராமத்தில் விட்டாய் அல்லவா?”என துரை கேட்டான். நான் அதற்கு பேசாமல் பார்த்தேன். சட்டென்று துரை எழுந்து என்னை ஓங்கி உதைத்தான் ”நீ அவளை அனுபவித்தாய்…நீ அவளை அனுபவித்தாய்..நீ என் நாய்…நீ என் நாய்”என்று கூவியபடி நாலைந்து முறை உதைத்தான்

நான் பக்கவாட்டில் சரிந்து விழுந்து அந்த உதைகளை என் விலாவிலும் தோளிலுமாக வாங்கிக்கொண்டேன். துரை என் மீது துப்பிவிட்டு திரும்பி கூடாரத்துக்குள் சென்றுவிட்டான். நான் எழுந்து தீயை நன்றாக தூண்டி விட்டுக் கொண்டேன். தீயருகே என் உடலைக் காட்டிக்கொண்டு அமர்ந்தேன். வானில் கரிய பரப்பில் நட்சத்திரங்கள் மொட்டுகள் போல தெரிந்தன. அவற்றில் இருந்து நுண்மையான மழைபோல குளிர் என் மீது கொட்டியது. என் முதுகில் குளிரும் மார்பில் கனலும் இருந்தன. நான் தீ¨யையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தூங்கிவிட்டேன்.

[ 3 ]

மறுநாள் காலை நான் இருட்டுக்குள்ளேயே எழுந்து கங்குவிட்டிருந்த தீயை தூண்டி எரியவிட்டுவிட்டு கெட்டிலுடன் பக்கத்துகோடைக்குச்சென்று குச்சி ஒடித்து பல்தேய்த்து மலம்கழித்துவிட்டு கெட்டிலில் தண்ணீர் அள்ளி வந்து தீயில் தொங்கவிட்டுவிட்டு கூடாரத்துக்குள் சென்று துரையை எழுப்பினேன். எழுந்ததுமே அவன் என்னை அடிப்பான் என எண்ணி நான் காத்து நின்றாலும் அவன் என்னை வெறித்துப் பார்த்துவிட்டு பற்களைக் காட்டி ”குட்மானிங்”என்றான். நான் அவனை பேசாமல் பார்த்தேன். ”நீ ஒரு மிருகம்…” என்று அவன் சொன்னான். நான் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. ”டீ இருக்கிறதா?”என்றான். நான் ஆமாம் என்றேன்

துரை எழுந்து வெளியே வந்து சோம்பல் முறித்தான். இரு முறை கொட்டாவி விட்டபின் நேராகச் சென்று தீயருகே அமர்ந்துகொண்டான்.நான் அவனுக்கு டீ கலந்து கொடுத்தேன். ”என் பிராந்தியை எடுத்துவா”என்று அவன் சொன்னான். அதில் கொஞ்சத்தை டீயில் விட்டு குடித்தான். பின்னர் எழுந்து யானைத் துப்பாக்கியை மட்டும் எடுத்துக்கொண்டு அவனே நடந்து காட்டுக்குள் சென்றான் நான் அவன் பின்னால் சென்றேன். அவன் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு ஒரு சிறிய பாறைமீது ஏறி அமர்ந்து மலம் கழித்தான். என்னைப்பார்த்து கண் சிமிட்டினான். நான் அவனுக்கு துடைத்துவிட்டதும் அவன் எழுந்து ஓடையில் இறங்கி வாயைக் கொப்பளித்து கழுத்தையும் முகத்தையும் கழுவிக்கொண்டான்.

தலைக்குமேல் பறவைகள் கலைந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்த காலையில் மங்கலான ஒளியில் காட்டுச்செடிகளின் இலைகள் எல்லாம் தெளிவான பச்சை நிறம் கொண்டிருந்தன. எங்களை தாண்டி ஒரு பெரிய மிளா உடல்முழுக்க சருகுகள் ஒட்டியிருக்க திமிர் தெரியும் தசையசைவுகளுடன் சென்றது. துரை அதை நோக்கி துப்பாக்கியைக் குறி வைத்தான். சுடுவதற்காக அல்ல என்று தெரிந்தது. சாய்வாக காட்டுக்குள் விழுந்த இளவெயிலில் காடு தூள்பாசியும் நூல்பாசியும் நிறைந்த நீர் கொண்ட ஒரு பச்சைநிறத் தடாகம் போல தெரிந்தது. உள்ளே இறங்கிய வெயிலில் இலைகள் பளபளவென அ¨சைவதை நான் கனவுகளிலும் கண்டிருக்கிறேன்.

ஒருமுறை அமர்ந்து சுருட்டு பிடித்துவிட்டு எழுந்து மீண்டும் நடந்தோம். துரை ஒரு நவர இலையைப் பறித்து ”இதை நான் சாப்பிட முடியுமா?”என்றான். ”இதை சாறு மட்டும்தான் குடிக்கவேண்டும். சக்கையைத் தின்றால் பேதி போகும்”என்றேன். ”உனக்கு ஆங்கிலம் பேச வருகிறதே”என்றான். நான் ஒன்றும் சொல்லவில்லை.

சுண்டுமலை அருகே தெரிய ஆரம்பித்தது. அதன் சிகரத்துக்கு விலாவில் இருந்த காடு அதன் மடக்குகளுக்குள் கசிந்து பசுமையாக இறங்கியிருந்ததையும் மரங்கள் சிறிய புற்பூண்டுகள் போல தெரிவதையும் கண்டேன். கூர்ந்து கவனித்தபோது மலைப்பாறையில் ஒரு மடிப்புவழியாக தலைவகிட்டில் பேன்கள் செல்வது போல வரையாடுகள் செல்வதைக் கண்டேன். துரை என்னிடம் ”என்ன?”என்றான். நான் வரையாடுகளைச் சுட்டிக் காட்டினேன். துரை தன் துப்பாக்கியை தூக்கி அந்த ஆடுகளை விளையாட்டாகக் குறி வைத்தபின் என்னை நோக்கி கண்களைச் சிமிட்டினான்.

நாங்கள் பாதை இல்லாதபடி வளர்ந்து கிடந்த யானைப்புல் பரப்பை வந்தடைந்தோம். உள்ளே செல்லவேண்டுமானால் புல்லை சரித்து பாதையை உருவாக்க வேண்டும். நான் ஒரு பெரிய குச்சியை எடுத்து புல்லை அடித்து சரித்து வகிடு எடுத்து அதன் வழியாக சென்றேன். காலில் சதுப்புச்சேறு மிதிபட்டது. யானைப்புல்லின் விளிம்பு பட்டு என்னுடைய உடலெங்கும் கீறல்கள் விழுந்தன. சில கீறல்களில் ரத்தம் கசிந்து எரிந்தது.

நான் முதலில் வாசனையை உணர்ந்தேன். துரைக்கு கையைக் காட்டினேன். துரை அப்படியே சிலை மாதிரி நின்றான். மிகமெல்ல துப்பாக்கியை திருப்பி அதன் கட்டையை தன் அக்குள்சதைமேல் வைத்துக்கொண்டு விசையில் விரலை நுழைத்தான். தரையில் மண்டியிட்டு முன்னால்சென்று நான் யானைப்பிண்டத்தைக் கண்டடைந்தேன். சிலமணி நேரம் முந்திய பிண்டம் அது. சக்கையின்மீது இருக்கும் சாணிப்பசை உலர ஆரம்பித்துவிட்டிருந்தது. இன்னும் சிலமணி நேரத்தில் அதில் வண்டுகள் துளைபோட்டு முட்டை போட்டிருக்கும். பிண்டத்தின் அருகே இருந்த யானையின் காலடித்தடங்களைப் பார்த்தேன்.

துரை அருகே வந்து ”அதுதானா?”என்றான். நான் சைகையால் ஆமாம் என்றேன். அந்த அளவுக்கு அகலமான இடைவெளியுள்ள வேறு யானைக் காலடித்தடம் காட்டுக்குள் வேறு இல்லை. துரை அருகே வந்து அந்த காலடித்தடத்தை கூர்ந்து நோக்கினான். நான் அந்த பிண்டத்தை காலால் புரட்டிப்பார்த்தேன். ஈஞ்சைச்சக்கையாக இருந்தது. சுண்டுமலையின் தென்புறம் ஈஞ்சைக்காடு அடந்திருக்கும். இரவு அங்கே தங்கிவிட்டு காலையில் அங்கிருந்து இங்கே வந்திருக்கிறது. வெயில் ஏறிவிட்டதனால் திரும்பி ஈஞ்சைக்காட்டுக்கே சென்றிருக்கும். நான் அந்த புல்லடர்வு முழுக்க ஊடுருவி வேறு பிண்டங்கள் கிடக்கின்றனவா என்று பார்த்தேன். கொம்பன் ஒற்றையானை. அது இருக்கும் இடத்தில் பிற யானைகள் வராது. மதம் கொண்டு இளகும்போது மட்டுமே அது பிடியானைகளை தேடி பிறயானைப்பற்றங்களுக்குச் செல்லும்.

”இப்போது எங்கே இருக்கும் அது?” என்று துரை கேட்டான். ”ஈஞ்சைக்காடு…”என்று நான் சொன்னேன். ”அங்கே முள் அடர்ந்திருக்கும். இங்கே திறந்த வெளி இருக்கிறது. இங்கேயே தங்குவோம். காலையில் இங்கே வரும்…”என்று துரை சொன்னான். ஆனால் அங்கே மரங்கள் ஏதும் இல்லை. நேரடியாக வெட்டவெளியில் நின்று யானையை எதிர்கொள்வது சிரமம். நான் அதைச் சொல்லவில்லை. துரையே ஊகித்துக் கொண்டு தன் துப்பாக்கி¨யை காட்டி கண்களைச் சிமிட்டினான்.

கொம்பனின் பிண்டத்தை அள்ளி சதுப்புக்குழியில் இருந்த நீரில் கலக்கி உடல்மீது தெளித்துக் கொண்டோம். சுருட்டு பிடிக்கக்கூடாது. சாராயம் குடிக்கக்கூடாது, ரொட்டி இறைச்சியை தின்பதும்கூட சரியில்லைதான். ஆனால் நான் எஞ்சிய இறைச்சி உருண்டையை உடைத்து கொடுத்தேன். நான் இரண்டு உருண்டை தின்றேன். துரை மிஞ்சிய நான்கு உருண்டைகளை தின்றான்.

நாங்கள் புல்நடுவே அமர்ந்துகொண்டோம். எங்கள்மேல் தவளைகள் எம்பிப் பாய்ந்தன. கண்ணாடிவிரியன் இருக்கக்கூடும் என்று நான் மோப்பம் பிடித்துக்கொண்டே இருந்தேன். கொசுக்கள் எங்கள் மேல் பரவி போர்வை போல ஒட்டிக்கொண்டன. துரை துப்பிக்கொண்டே இருந்தான். துவாலையால் முகத்தை மூடி அவை மூக்குக்குள் போவதை தடுத்தான்.

இருட்டிக்கொண்டே வந்தது. நட்சத்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தன. மேற்குவானில் சரிபாதிப் பிறைநிலவு எழுந்துவந்தது. ஒரு தும்மல் ஒலியை அருகே கேட்டேன். பெரிய மிளா ஒன்று என்னருகே நின்று என்னை உற்று பார்த்தது. அதன் கண்களின் மெல்லிய மினுமினுப்பைக் கண்டேன். அது மீண்டும் தும்மியது. துரை ”முட்டாள் மிருகம்”என்று சொன்னான்.மிருகங்களில் முட்டாளே இல்லை.

துரை அமர்ந்தவாறே தூங்க ஆரம்பித்து பின்னர் முழங்காலைக் கூட்டிவைத்து நன்றாகவே தூங்கிவிட்டான். அவன்மேல் கொசுக்கள் ரீங்காரமிட்டன. நான் தூங்காமல் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டு நிறைய விஷயங்களை நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். என்னுடைய அம்மாவைப் பற்றியும் என் ஊரான நெடுமங்காட்டைப்பற்றியும் நினைத்தேன். சிறு வயதில் அம்மா ·ப்ளெட்சர் துரையின் வீட்டில் சமையல்செய்தாள். அப்போதுதான் நான் பிறந்தேன். என்னை சிறு வயதில் என் மலைக்குடியில் காட்டுபூனை என்று அழைத்தார்கள். அப்போது என் கண்கள் நீலமாகவும் என்னுடைய தோல் கறுப்பாகவும் இருந்தது. பிறகு என் கண்கள் ஓநாயின் கண்கள் போல ஆகிவிட்டன.

என் அம்மாவுக்கு சீக்கு வந்து உடம்பெல்லாம் புண் ஆகியபோது நான் அம்மா சொன்னதைக்கேட்டு பிளெட்சர் துரையிடம் பணம் கேட்கச் சென்றேன். அவர் என்னை ”போ போ”என்று சொல்லி திட்டி குடையை என் மீது எறிந்தார். அம்மா செத்துப்போனபிறகு நான் சிம்ஸன் தோட்டத்தில் வேலைக்குச் சென்றேன். அங்கே நான் காட்டிலேயே இருந்தேன். என்னுடன் எவருமே பேசுவதில்லை. செந்நாய் கண்கள் கொண்டவன் தீய தெய்வங்களுக்கு நெருக்கமானவன் என்று சொன்னார்கள். நான் தீய தெய்வங்களைக் கண்டதேயில்லை.

முதல்முறையாக நான் செந்நாயைக் கண்டபோது அது என்னை அடையாளம் கண்டுகொள்ளும் என்று எதிர்பார்த்தேன். முப்பத்திரண்டு வருடம் முன்பு காரிமலைக்காட்டுக்குள் நான் புதருக்குள் குந்தியமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது அது என்னருகே மிக நெருங்கி வந்திருந்தது. நான் அதன் சீறல் கேட்டு கண்விழித்தேன். மாலைநேர மஞ்சள் வெளிச்சத்தில் அதன் தேங்காய் நிறமான பிடரிமுடி சிலிர்த்து நிற்பதைக் கண்டேன். கண்கள் என்னை விழித்துப்பார்த்தன. வாயை திறந்து கரிய ஈறுகளில் வெண்ணிறப்பற்கள் தெரிய ர்ர்ர் என்றது. நான் மெல்ல கையை என் இடுப்பில் இருந்த கத்தியை நோக்கிக் கொண்டுசென்றேன். அது பாய்ந்து ஓடி புதருக்குள் வால் சுழற்றி தாவி மறைந்தது. புதருக்குள் இருந்த மேலும் பல செந்நாய்கள் அதைத்தொடர்ந்து ஓடின.

காலையில் நன்றாக குளிர ஆரம்பித்தது. நான் கைகளை என் வெற்றுடல் மேல் கட்டி இறுக்கிக் கொண்டேன். வானத்தில் நட்சத்திரங்கள் இடம்மாறிவிட்டிருந்தன. கீழ்வானில் வெள்ளி தெரிந்தது. எனக்கு நன்றாகவே பசித்தது. ஆனால் அப்போது எதையாவது உண்பதைப்போல முட்டாள்தனம் ஏதுமில்லை. அப்போது நான் நிலம் அதிர்வதை உணர்ந்தேன். காற்று மறு திசைநோக்கி வீசியதனால் மோப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அது நல்லதுதான் எங்கள் மோப்பமும் அதற்குக்கிடைக்காது.

நிலம் அதிர்வது நெருங்கிவந்தது. நான் எழுந்து பார்த்தபோது இருளுக்குள் கொம்பனின் உயரமான மத்தகத்தைப் பார்த்தேன். செம்மண் மீது கொன்றைப்பூக்கள் உதிர்ந்து கிடந்தன. துதிக்கை மடிப்புகளில் மண் வரியடித்து உலர்ந்த சேறூ வெடித்தது போல் இருந்தது. தோணி போன்ற இரு பெரும் தந்தங்களும் கீழ் நோக்கி சரிந்திருந்தன. துரையை மெல்ல உலுக்கினேன். அக்கணமே அவன் விழித்துக்கொண்டு தோளில் சரிந்த துப்பாக்கியை சரியாகப்பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தான்.இருவரும் யானையைப் பார்த்தபடி அசையாமல் நின்றோம்.

துரை துப்பாக்கியை யானையின் மத்தகத்தை நோக்கி நீட்டி குறி வைத்தான். அந்தக் கணங்கள் மிகமெல்ல அடிவயிற்றை தரையில் ஒட்டி தவழ்ந்து முன்னேறும் புலி போல நீண்டன. என்ன செய்கிறான் என்று நான் வியந்தேன். அவன் மீண்டும் மீண்டும் குறி பார்த்தால். கண்முன் நிற்கும் யானையைச் சுடுவதற்கு ஏன் கிளையில் அமர்ந்த பறவையைச் சுடுவதற்கு பார்ப்பதுபோல் குறியை தீட்டிக் கொள்கிறான்? அவன் விரல்கள் துப்பாக்கிக் கட்டையில் நடுங்கியபடி பற்றியிருப்பதைக் கண்டேன். அவன் மனம் பதறுகிறது என்று ஊகித்தேன்.

மலைதெய்வமான மாதி காட்டுக்குள்ளேயே மிகவும் தலையெடுப்புமிக்க யானைமீது அமர்ந்திருப்பாள் என்று குடிகளில் சொல்வார்கள். சின்னஞ்சிறு குழந்தைகள் மட்டுமே அவளைப் பார்க்க முடியும். மாதி துரையின் கைகளை பிடிக்கிறாளா? துரை இதயம் உடைந்து விழுந்து ரத்தம் கக்கி செத்துப்போகப்போகிறானா? நான் அவனையே பார்த்தேன். என் இதயம் துடித்து வாய்க்குள் அதன் அதிர்வு தெரிந்தது.

துரையின் விரல் விசையை அழுத்தியதும் துப்பாக்கியின் பூட்டு விடுவித்துக்கொண்டு ‘லிலிக்’ என்றது. அந்த ஒலியிலேயே கொம்பனின் காதுகள் நின்றன. அதன் மத்தகம் திரும்பி எங்களைப் பார்த்தது. கண்களை சந்திக்க முடியவில்லை. காதுகளை அசையாமல் நிறுத்தி அது எங்களைப் பார்த்தது. ஒரு பெரும் காட்டுபாறை உயிர்கொண்டு என்னைப் பார்ப்பது போல உணர்ந்தேன். பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு முன்பே இருந்து கொண்டிருக்கும் பாறை. தெய்வங்கள் பிறப்பதற்கு முந்திய பாறை.

ஆனால் கொம்பன் அசையவில்லை. முன்னால் வரவும் இல்லை. துரை சில அடிகள் பின்னால் நகர்ந்தான். அவன் முதுகில் சட்டை வியர்வையில் ஒட்டியிருந்தது. கன்னங்களில் வியர்வை வழிந்தது. நெற்றியில் நீல நரம்பு புடைத்தது. கொம்பன் மீண்டும் காதுகளை ஆட்டிக்கொண்டு புல்லை பிடுங்கி சுழற்றி தன் முன்வலதுகாலில் அடித்து மண் களைந்து, வாழைப்பூ போல தொங்கிய வாய்க்குள் போட்டு மெல்ல ஆரம்பித்தது

துரை பெருமூச்சு விட்டான். பின்னர் ஒரு அடி முன்னால் வைத்தான். நான் யானையையே பார்த்துக்கொண்டிருந்ததனால் என்னருகே யானைத்துப்பாக்கி செவி பிளக்க வெடித்த ஒலியில் திடுக்கிட்டு அதிர்ந்தேன். என் செவிகளில் தேனீ ரீங்காரம் ஒலித்தது. யானை திகைத்து நின்றது அதன் முன்காலுக்கு மேல் குண்டுபட்ட இடத்தில் சிவந்த குழி உருவானதைக் கண்டேன். பாறை பிளக்கும் ஒலியுடன் பிளிறியபடி கொம்பன் எங்களை நோக்கி ஓடி வந்தது.

நான் துரையை நோக்கி ”ஓடுங்கள்…”என்று கூவியபடி யானையை நோக்கி ஓடினேன். துரை பின்பக்கமாக விலகி ஓடினான். நான் யானையை நோக்கிச் சென்று அதனிடம் ”ஹோ!”என்று கை நீட்டி ஆர்ப்பரித்தபின் வலப்பக்கமாக திரும்பி புல்லை ஊடுருவி வெறி பிடித்தவன் போல ஓடினேன். கொம்பன் பிளிறியபடி என்னை துரத்தி வந்தது.

யானையை மனிதன் ஓடி வெல்லமுடியாது. இன்னும் சில கணங்களில் எனக்கு ஒரு மரம் கிடைத்தாக வேண்டும். மரம் மரம் மரம் என்று என்னுடைய மனம் எண்ணிக்கொண்டிருக்க நான் ஓடிக்கொண்டே இருந்தேன். ஒரு பெரிய பலா மரம் என்னை நோக்கி வந்தது. அதில் கனத்த கொடிவள்ளிகள் அடர்ந்து பின்னி மேலேறியிருந்தன. நான் போனவேகத்திலேயே அதைப்பற்றி மேலேறி மூன்றாமடுக்கு கிளைக்குச் சென்றுவிட்டேன். என் உடலெங்கும் புல்க்கீறல்களும் முள்க்காயங்களுமாக ரத்தம் கசிந்தது. என் உடலில் வியர்வை ஆவி பறந்தது. நான் வாயாலும் மூக்காலும் காதுகளாலும் மூச்சு விட்டேன். என் நெஞ்சு உடைந்து விடுவது போலிருந்தது

யானை மரத்தருகே வந்து ஆவேசமாக மரத்தில் மத்தகத்தால் முட்டியபோது மரம் அதிர்ந்து மேலிருந்து சருகுகள் அதன் மேல் உதிர்ந்தன. அதன் வலதுகால் முழுக்க ரத்தம் சேறாக குமிழிகளுடன் வழிந்திருப்பதைக் கண்டேன். மறுபக்கம் துரை ஒரு பாறை மீது கைகளை ஊன்றி ஏற முயன்றுகொண்டிருந்தான். துப்பாக்கியுடன் அவன் ஓடியதனால் ஏற முடியவில்லை. துப்பாக்கியை உதறிவிட்டு ஓட அக்கணம் அவனால் எண்ண முடியவில்லை.

என்னைப்பிடிக்க முடியாது என யானை புரிந்துகொண்ட வேகம் என்னை ஆச்சரியம் கொள்ளச்செய்தது.நானறிந்து எந்த யானையும் அபப்டி சிந்தனைசெய்ததில்லை. அது திரும்பி புல்கூட்டத்தை மிதித்து ஒரு பிளவை உருவாக்கியபடி துரையை நோக்கிச் சென்றது. துரையை பிடித்துவிடுமென தெரிந்ததும் நான் கூவியபடி பலாமரத்தில் இருந்து குதித்து கீழே கிடந்த கற்களை எடுத்து யானைமேல் வீசினேன். யானை நின்று வால் சுழலத் திரும்பி வெறியுடன் என்னை நோக்கி வந்தது.

நான் மீண்டும் பலா மரத்தில் ஏறிக்கொண்டேன். யானை என் மரத்தின் அடியில் வந்து நின்றபோது வெம்மையான குருதி வீச்சத்தை நான் உணர்ந்தேன். யானை மரத்தில் சாய்ந்து அடிபட்ட காலை தூக்கியபடி நின்றது. துதிக்கை மலைப்பாம்பு போல மாபெரும் தந்தங்கள் மேல் ஏறி சறுக்கியது. அந்த தந்தங்களுக்காகத்தான் துரை வந்திருக்கிறான். தெந்திருவிதாங்கூரிலேயே பெரிய தந்தங்களாக அவை இருக்கும். துரையின் யானை இல்லாத நாட்டில் ஏதோ சீமாட்டியின் பெரிய நிலைக்கண்ணாடியின் இருபக்கமும் அது இருக்கும். இரண்டு வெள்ளைக்கார வேலைகாரர்களைப்போல.

[மேலும்]

முந்தைய கட்டுரைஊமைச்செந்நாய் (குறுநாவல்) : 3
அடுத்த கட்டுரைஊமைச்செந்நாய் (குறுநாவல்) : 1