அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் MBA படித்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே புத்தகம்
படிக்கும் பழக்கம் இருந்தாலும் , பொன்னியின் செல்வன் போன்ற சில வரலாற்று புதினங்கள் மற்றும் சில ஆங்கில புத்தகங்களை மட்டுமே படித்திருக்கிறேன். சமீபத்தில் உங்கள் “காடு” நாவலை படித்தேன், மிகவும் பிடித்து விட்டது. உங்கள் வாசகனாக மாறிவிட்டேன். காலம் மிக தாமதமாக உங்களை எனக்கு அறிமுகபடுத்தியுள்ளது வருத்தமளிக்கிறது. உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே “விஷ்ணுபுரம்” இலக்கிய விழாவிற்கு வந்திருந்தேன். உங்களை மிக அருகில் காண நேர்ந்தும் தயக்கத்தினால் பேசாமல்சிறு புன்னகையுடன் நிறுத்திக்கொண்டேன் .
சில காலமாக “இலக்கியம்” என்றால் என்ன? என்ற கேள்வி மனதில் இருந்து வருகிறது. இந்த கேள்வியை google செய்தேன் ஆனால் கிடைத்த பதில்கள் என்னை சமாதனப்படுத்தவில்லை. பெரும்பாலான பதில்கள் இலக்கியம் =இலக்கு+ இயம் என்றும் , ம னிதனின் மனதை மேம்படுத்துவது இலக்கியம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனக்கு சில கேள்விகள் உள்ளன:
- இலக்கியத்தை பற்றி தெரியாத, இலக்கியம் படிக்க விரும்பும் இளைய வாசகர்களுக்கு “இலக்கியம்” என்றால் என்ன ? என்றகேள்விக்கு தங்களின் பதில் என்ன?மனிதனை மேம்படுத்தும் எல்லா நூல்களும் இலக்கியத்தில்சேருமா? அப்படி இல்லை என்றால் இலக்கியத்தையும் மற்றநூல்களையும் எவ்வாறு வேறுபடுத்தி தெரிந்து கொள்வது.
நன்றி
நா.மோகன் ராஜ்,
பொள்ளாச்சி.
***
அன்புள்ள மோகன்ராஜ்
திரும்பத்திரும்ப எனக்கு வரும் கடிதங்களில் உள்ள கேள்விகள் இவை, இலக்கியம் என்றால் என்ன, இலக்கியத்தை ஏன் படிக்கவேண்டும், நல்ல இலக்கியம் என ஒன்று உண்டா, இலக்கியத்திற்கும் பிற அறிவுத்துறைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன, இலக்கியம் என்பது ஒருவகை கேளிக்கையா?
இக்கேள்விகள் அனைத்திற்குமே விரிவான பதில்களை நான் நெடுங்காலமாகச் சொல்லிவந்திருக்கிறேன். முன்னர் சுந்தர ராமசாமியும், அதற்கு முன் க.நா.சுவும் சொல்லியிருக்கிறார்கள். இந்த கேள்வியும் பதிலும் இங்கே தொடர்ச்சியாக நிகழ்ந்தபடியே இருக்கும். காரணம், இதைச்செய்யவேண்டிய கல்வித்துறை செய்யவில்லை என்பதே
நான் எழுதிய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்னும் நூல் எல்லா கேள்விகளையும் ஒரே நூலாகத் தொகுத்து அளிக்கிறது. இத்தளத்திலும் பல கேள்விகளுக்கு விளக்கங்கள் உள்ளன. உண்மையில் கூகிளில் சரியாகத்தேடியிருந்தால் இங்குதான் வந்திருப்பீர்கள். இங்கே இல்லாத ஒரு வினாவை நீங்கள் கேட்டிருக்கவும் முடியாது
இலக்கியம் என்பது மனிதர்கள் தங்களுக்கு நிகழும் வாழ்க்கைக்கு மேலதிகமாக விரிந்த வாழ்க்கையை மொழியினூடாக கற்பனை செய்து அறிவது. ஒருவரின் வாழ்க்கை அளிக்கும் அனுபவங்கள் எல்லைக்குட்பட்டவை, இலக்கியம் பல்லாயிரம் பேரின் அனுபவங்களை ஒருவர் அடைய வழிவகுக்கிறது. காலத்தால் கடந்துபோன வாழ்க்கையை நாம் வாழவும் நாளை நிகழவிருக்கும் வாழ்க்கையை சென்றடைந்துவிடவும் உதவுகிறது.
எல்லா பால்நிலைகளிலும் எல்லா நிலங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லாவகை இக்கட்டுகளிலும் எல்லா வகை பரவசங்களிலும் நாம் சென்று வாழ்வதற்கான வழியே இலக்கியம் என்பது. வாழ்க்கை அளிக்கும் அனைத்தையும் இலக்கியமும் அளிக்கும். இலக்கியவாசகன் வாழும் வாழ்க்கை பிறவாழ்க்கைகளில் இருந்து பலமடங்கு பிரம்மாண்டமானது என்பதனால்தான் சற்றேனும் இலக்கியவாசிப்பு தேவை எனப்படுகிறது.
புறவாழ்க்கைக்கு அர்த்தமும் மையமும் கிடையாது. ஆகவே அதற்கென பொருளும் இல்லை. இலக்கியம் வாழ்க்கைக்கு அர்த்தமும் மையமும் அளித்து பொருளுள்ளதாக்குகிறது. இலக்கியமே வாசிக்காதவர்களயினும் வாழ்க்கைக்கு அவர்கள் அளிக்கும் அர்த்தமென்பது இலக்கியத்தால் உருவாக்கப்பட்டதாகவே இருக்கும்.
இதற்கப்பால் இலக்கியம் ஒரு மெய்யறிதல்வழி. மெய்யைச் சென்றடைய மூன்றுவழிகள். தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு. இலக்கியம் கற்பனையை முதன்மையாகக்கொண்ட அறிவுப்பாதை. உள்ளுணர்வும் தர்க்கமும் அதற்கு உடன்வருபவை. பல்லாயிரமாண்டுகளாக மானுடன் அடைந்த மெய்மைகள் அனைத்தும் இலக்கியமாகவே சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றை அறியாதவனால் எதையும் உணர்ந்துகொள்ளமுடியாது
கடைசியாக, நாம் அன்றாடவாழ்க்கையால் சூழப்பட்டுள்ளோம். கடந்தவை மறைந்துகொண்டே இருக்கின்றன. நேற்றுக்கும் நமக்கும் எந்த இயல்பான தொடர்பும் இல்லை. இலக்கியம் நேற்றின் ஆழம் முதல் இன்றுவரை வந்து நாளைக்கும் நீளக்கூடிய ஒரு பெருக்காக வாழ்க்கையை உருவகிக்கிறது. மூன்றுகாலங்களையும் தொடர்புபடுத்துகிறது. இலக்கியம் மானுடம் தன் வாழ்க்கையை நினைவில் நிறுத்திக்கொள்ளும் ஒரு வழிமுறை.
ஜெ