வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–62

பகுதி பத்து : பெருங்கொடை – 1

bl-e1513402911361அஸ்தினபுரியின் மையப் படகுத்துறையிலிருந்து வலமாகப் பிரிந்து கங்கைக்கரை ஓரமாகவே செல்லும் பாதையின் இறுதியில் அஜமுகம் என்னும் சிறிய பாறை கங்கைக்குள் நீட்டி நின்றிருந்தது. அதை ஒரு சிறு துறைமேடை என்றாக்கி அங்கே சிறிய மீன்பிடிப்படகுகளும் அக்குறுங்காட்டில் வேட்டைக்கு வருபவர்களின் வாள்படகுகளும் அணையும் வழக்கமிருந்தது. அஸ்தினபுரியின் தலைமையில் தொடங்கவிருக்கும் பெரும்போர் வெல்லும் பொருட்டு ஒருக்கூட்டப்படும் புருஷமேத வேள்விக்காக அஸ்தினபுரியின் தலைமை வைதிகராக அமைக்கப்பட்ட காசியப குலத்து கிருசர் வடக்கே இமயமலைச்சாரலில் இருந்து வந்திருந்த அதர்வ வைதிகர்களான குத்ஸ குலத்து தாரகரும் மௌத்கல்ய குலத்து தேவதத்தரும் உடனமர திசைதேர்ந்து கோள்நோக்கி குறித்த இடம் அது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் குறுங்காடு நான்கு எல்லையிலும் குருதிபலி கொடுக்கப்பட்டு நடுகற்களில் நிறுவப்பட்ட பதினாறு ருத்ரர்களால் காக்கப்பட்டது. உயரமற்ற நெல்லி, மஞ்சணாத்தி, பூவரசு மரங்களும் கொன்றைகளும் கிளைகள் தொடாது ஆங்காங்கே நிற்க குறும்புதர்கள் ஊடே பரவிய இளங்காடு சரிந்து கங்கை நோக்கி சென்றது. மழைக்காலத்தில் நீரோடும் ஓடைகளின் தடங்கள் நரம்புகளென அதில் பரவியிருந்தன. முயல்வளைகளும் சரிந்த பாறைகளின் அடியில் நரிமடைகளும் கொண்டிருந்த அந்நிலம் நாணல் செறிந்த கங்கைக்கரைச் சதுப்பை சென்றடைந்தது. கரையிலிருந்து ஆலமரங்கள் நீர்மேல் சாய்ந்து விழுதுகளால் ஒழுக்கை வருடியபடி நின்றிருந்தன.

சிந்துநாட்டுச் சிற்பியான பரமரும் அவருடைய ஏழு மாணவர்களும் இடம்தேர்ந்து மகாபுருஷமேத வேள்விக்கான வேள்விச்சாலையை அக்காட்டின் நடுவே அமைத்திருந்தனர். வேள்விப்பந்தல் மணிவிளைந்த ஆயிரத்தெட்டு பெருமூங்கில்கால்களின் மேல் ஒன்றுடன் ஒன்று தொடுத்து பின்னி அமைக்கப்பட்ட மூங்கில்வலைப்பரப்பின் மேல் விரிந்த ஈச்சையோலைக் கூரை கொண்டிருந்தது. கிருசரும் தாரகரும் தேவதத்தரும் இணைந்து வசிட்டரின் மைந்தர் அதர்வா வகுத்தளித்த தொல்மரபின் அடிப்படையில் பூர்ஜமரப்பட்டையில் வரைந்தளித்தபடி சிறகுவிரித்த செம்பருந்தின் வடிவில் அது அமைக்கப்பட்டிருந்தது. நான்கு வாயில்கள் கொண்டிருந்த அப்பந்தலின் ஒவ்வொரு நுழைவிலும் வேள்விச்சாலையைக் காக்கும் பைரவர், வீரபத்ரர், காளி, அனந்தன் ஆகிய தெய்வங்கள் நிறுவப்பட்டிருந்தன.

பருந்தின் தலையில் வேள்வித் தலைவருக்கான எண்கால் மரப்பீடமும் வலச்சிறகில் வேள்விக்காவலனாகிய அஸ்தினபுரியின் அரசனுக்கும் அரசிக்குமான கல்லால் ஆன அரியணைகளும், அஸ்தினபுரியின் அரசகுடியினருக்கான தர்ப்பை விரிக்கப்பட்ட தாமரை வடிவு கொண்ட மணைகளும் அமைந்திருந்தன. இடச்சிறகில் முனிவர்களும் அந்தணர்களும் அமர்வதற்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. கழுகின் உடலென்று அவையமரும் அரசர்களுக்கான பகுதியும் அதன் இரு வால்சிறகுகளாக வேள்விப்பணியாளர் நின்றிருக்கவேண்டிய இடங்களும் வகுக்கப்பட்டிருந்தன.

வேள்விச்சாலையின் கிழக்கே இந்திரன் கரும்பு வடிவில் நிலைநாட்டப்பட்டான். அவன் யானையாகிய ஐராவதமாக கங்கையின் வெள்ளுருளைக் கல்லும் மின்படையாக சிற்றாடியும் அருகே வைக்கப்பட்டன. தென்கிழக்கே அனலவன் சுடர்விளக்கின் வடிவில் நிறுவப்பட்டான். புண்டரீகமெனும் திசையானையாக செந்தாமரை மலரும் அவன் கொடிக்குறியாக பூனைக்காது மலரும் அங்கே அமைக்கப்பட்டன. தெற்கே யமன் எருமைக்கொம்பு வடிவில் நிறுவப்பட்டான். வாமனம் என்னும் அவனுடைய யானைக்கு கரிய உருளைக்கல் நிறுவப்பட்டது. செம்பருந்தின் இறகு சிம்மக்கொடியடையாளமாக. குமுதம் என்னும் திசையானையின் அடையாளமாக வெண்தாமரையும் யாளிக்கொடி என பூளைமலரும் வைக்கப்பட்டு அதன்மேல் சிறிய ஈச்ச ஓலையாலான நாகச்சுருளின் வடிவில் அன்னை நிருதி நிறுவப்பட்டாள்.

மேற்கே மாகாளை வடிவமாக தேங்காயும் கரிய கல்வடிவமாக அஞ்சனமும் நிறுவப்பட்டு அதன்மேல் வெள்ளிக்குடத்தில் நிறைக்கப்பட்ட கடல்நீராக வருணன் கோயில்கொண்டிருந்தான். வடமேற்கே புஷ்பதந்தம் என்னும் திசைக்களிறாக கதாயுதமும் அருகே கழுதைவால்மயிரிலிட்ட ஏழு முடிச்சுகளாக கொடிக்குறியும் நிலைவைக்கப்பட்டு அதன்மேல் ஓம் எனும் எழுத்து பொறிக்கப்பட்ட கற்பலகை வாயுதேவனாக நிறுவப்பட்டிருந்தது. வடக்கே பொன்நாணயமாக பீடத்தில் வைக்கப்பட்ட குபேரனுக்குக் கீழே திசையானையாகிய சார்வபௌமம் பூசணிக்காய் வடிவில் அமைக்கப்பட்டு யானைக்கொடியாக பூசணிப்பூ வைக்கப்பட்டது. ஈசானன் சுப்ரதீகம் என்னும் திசைக்கரிக்கு அடையாளமாக வைக்கப்பட்ட நிறைநாழிக்கும் அதன்மேல் கொடியாக சூட்டப்பட்ட காகச்சிறகுக்கும் மேல் சுண்ணமும் மஞ்சளும் கரைத்த குருதி நிறைத்த செம்புச்சிமிழ் வடிவில் அமைக்கப்பட்டிருந்தார்.

வேள்விக்குரிய ஐந்துவகை எரிகுளங்கள் பருந்தின் நெஞ்சில் அமைக்கப்பட்டன. கங்கையின் களிமண்ணால் வார்த்து சுடப்பட்ட செங்கற்களில் அஸ்தினபுரியின் அரசனின் வெற்றிக்கென அமைக்கப்படும் மகாபுருஷமேத வேள்விக்கென வார்க்கப்பட்டவை அவை என எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன. கன்னிப்பசுவின் சாணியால் மெழுகப்பட்ட தரையில் பூதவேள்விக்காக அரைவட்ட வடிவில் ஐந்து எரிகுளங்கள் அமைந்தன. முன்னோர் நிறைவுறுவதற்காக இயற்றப்படும் எரியளிப்புக்கு முக்கோணவடிவ எரிகுளம், மைந்தர் நலம்பெறுவதற்கான கொடைக்கான நாற்கோண வடிவ எரிகுளம், முற்பழியும் நிகழ்பழியும் வருபழியும் அகலும்பொருட்டு இயற்றப்படும் அவிசொரிவுக்காக ஐங்கோண எரிகுளம், நீள்வாழ்வுக்கென இயற்றப்படும் எரியோம்புதலுக்காக அறுகோண எரிகுளம், எதிரிகளை முற்றழிப்பதற்கான குருதியளிப்புக்காக எண்கோண வடிவ எரிகுளம்.

அதன் நடுவே அமைந்த மகாவேதிகை ஐஷ்டிகவேதி அமைப்பதற்கான அதர்வவேத நெறியின்படி ஐந்துபூதங்கள் அமைந்த ஐந்தடுக்குகள் கொண்டு ஆயிரத்து முன்னூற்றியெண்பது செங்கற்களை அடுக்கி கட்டப்பட்டிருந்தது. அதன் வடக்கே உத்தரவேதி பருந்தின் விரிசிறை வழிவில் நானூற்றியெழுபது செங்கற்களால் அமைக்கப்பட்டது. தெற்கே தென்னெரிக்கான சிறு எரிகுளமும் மேற்கே அனலவனுக்கான எரிகுளமும் அமைந்தன. சோமச்சாறு அளிப்பதற்கான சிறு எரிகுளம் வடகிழக்கே அமைந்தது. அதற்கப்பால் சோமச்சாறு பிழிவதற்கான மரத்தாலான கலங்களும் குழவிகளும் அவற்றைப் பிழிபவர்கள் அமர்வதற்கான நூற்றெட்டு மணைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

அவையனைத்தையும் நிறைவுசெய்தபின் நிகழ்த்தப்படும் வேள்விநிறைவில் முழுவெற்றியன்றி பிறிதெதையும் அளிக்காத தேவர்கள் உண்டு நிறைவதற்காக வேதமுழுமைகொண்ட அந்தணனை அவியாக்குவதற்குரிய வட்டவடிவ எரிகுளம் அப்பந்தலுக்கு வெளியே குறுங்காட்டுக்குள் எட்டடி ஆழமும் பன்னிரண்டு அடி விட்டமும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. அங்கு செல்வதற்குரிய செம்மண்ணாலான பாதை பந்தலில் இருந்து வலப்பக்கமாக எழுந்து மண்ணில் வடுவென வளைந்து சென்றது. இடப்பக்கமாகச் சென்ற பாதை வேள்விக்காவலனாகிய அரசன் ஏர் உழுது ஒன்பது மணிகளை விதைப்பதற்குரிய வேள்விப்புனத்தை சென்றடைந்தது.

வேள்விக்கென வந்துசேரும் அந்தணர்களும் வைதிகமுனிவர்களும் தங்குவதற்கான குடில்கள் பெருஞ்சாலைக்கு மறுபக்கம் கங்கையை நோக்கி இறங்கிய சாந்தை என்னும் ஓடையின் கரையில் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வைதிகர் குழுவுக்கும் தனித்தனியாக வேலியிடப்பட்ட குடில்தொகை அளிக்கப்பட்டது. ஈச்சையோலைகளால் கூரையிடப்பட்டு மரப்பட்டைச் சுவர்கொண்ட சிறுகுடில்கள் சூழ்ந்து நடுவே எழுந்த மையக்குடிலை நோக்கி வாயில் திறந்திருந்தன. ஆசிரியர்கள் தங்கும் அக்குடில்மேல் அவர்களின் குருமரபை குறிக்கும் அடையாளங்கள் கொண்ட கொடி பறந்தது. கங்கைவழியாக படகில் வரும் ஏவலர் அவர்களுக்குரிய உணவுப்பொருட்களையும், விறகுகளையும், எரியோம்புவதற்கான நெய்யையும் பிறவற்றையும் கொண்டுவந்து அளித்தனர். வேள்வி அறிவிக்கப்பட்டது முதல் ஒவ்வொரு நாளும் அந்தணர் வந்துகொண்டே இருந்தமையால் அக்குடில்நிரை மேலும் மேலும் கட்டப்பட்டு காட்டுக்குள் ஊடுருவிச்சென்று ஒரு சிறுநகர் என்றே ஆகியது.

வேள்விப்பந்தலுக்கு சென்றுசேர்வதற்கு அந்தணருக்கும் அரசகுடியினருக்கும் பிறருக்குமென மூன்று சாலைகள் அமைக்கப்பட்டன. அனைத்துச் சாலைகளும் சென்று வேள்விக்குடிலின் முன்னாலிருந்த தேர்முற்றத்தில் வளைந்து மறுபக்கம் வழியாக திரும்பிச்சென்று பெருஞ்சாலையை மீண்டும் அடைந்தன. அஜமுகத்தின் மேல் பலகைகள் அறையப்பட்டு தடிக்கால்கள் நாட்டப்பட்டு படகுத்துறையும் உருவாக்கப்பட்டது. அங்கே படகுகள் அணையும் பொருட்டு பன்னிரு நிலைகள் கொண்ட மூங்கில்கோபுரம் எழுப்பப்பட்டு அதன்மேல் அஸ்தினபுரியின் அமுதகலக்கொடி ஏற்றப்பட்டது. கங்கையின் கரையோரமாக பதினெட்டு காவல்மாடங்கள் அமைக்கப்பட்டு அதன்மேல் இரவும்பகலும் காவலர் வில்லம்புடன் விழித்திருந்தனர்.

பீதர்நாட்டு விரைவுப் பாய்கள் கொண்ட காவல்படகுகள் கங்கைக்குள் காவலுக்கு சுற்றிவந்துகொண்டிருந்தன. அவை நாகதாராக்கள் என்று அழைக்கப்பட்டன. கரையிலிருந்து மிகுந்த விரைவில் நீருக்குள் பாயும் மிகச்சிறிய தாக்குதல்படகுகள் நாணல்களுக்கு நடுவே காத்து நின்றிருந்தன. அவை மீன்குத்திகள் எனப்பட்டன. முரசொலியாலும் இரவில் அனல்சுழற்றலாலும் அவை ஒற்றைச் செய்திவலையில் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கான காவலர் படகுகளில் அஸ்தினபுரியின் பெருந்துறையிலிருந்து கங்கை வழியாக வந்து சென்றனர்.

வேள்விச்சாலைக்கு வலப்பக்கமாகச் சென்ற சாலை சென்றடையும் தாழ்ந்த நிலத்தில் குறுங்காடு தெளிக்கப்பட்டு ஆநிலை உருவாக்கப்பட்டது. ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த மூன்று வட்டக் கொட்டில்களுக்கு நடுவே நான்காள் உயரத்தில் மூங்கிலால் கட்டப்பட்ட காவல் கோபுரம் எழுந்து நின்றது. அதன்மேல் அமைந்த மேடையில் நாற்புறமும் நோக்கும்படியாக ஏறுமாடம் அமைந்திருந்தது. அதில் கூர்ந்த அம்புகளும் நாண் விரைத்து நின்ற விற்களுமாக ஐந்து வீரர்கள் எப்போதும் காவலிருந்தனர். ஆநிலையைச் சுற்றி கன்றுகளைக் காக்கும் தெய்வங்கள் எட்டுத் திசையிலும் அமைக்கப்பட்டு அந்நடுகற்களுக்குமேல் எழுந்த மூங்கில் தூண்களில் இரவுகளில் மீன்எண்ணெய்ப் பந்தங்கள் எரியவிடப்பட்டன.

வேள்வியில் பங்குகொள்ளும் சொல்திகழ் அந்தணர்களுக்கு கொடையளிக்கவேண்டிய கரிய காம்பும் வெண்ணிற உடலும் பொன்னிறக் கொம்பும் செந்தாமரை இதழ்போன்ற மூக்கும் கரிய பீலிகள் கொண்ட விழிகளும் கொண்ட ஆயிரத்து எட்டு பசுக்கள் அங்கு பேணப்பட்டன. அடுத்த இரு வட்டங்களில் வேள்விக்குரிய நெய்யை வழங்கும் கொழும்பசுக்கள் புரக்கப்பட்டன. அவற்றுக்கான பசும்புல் கற்றைகள் படகுகளில் சூழ்ந்திருந்த சிற்றூர்களிலிருந்து வந்து அஜமுகத்தை அணுகி அங்கு மலையென குவிக்கப்பட்டன. சகட வண்டிகளில் அவற்றை ஏற்றிய ஏவலர் உருட்டிக் கொண்டு வந்து கோநிலைகளில் அடுக்கினர். இரவும் பகலும் புல்உண்ணும் பசுக்களின் கழுத்து மணியோசை கேட்டுக்கொண்டிருந்தது. அவை உண்பதற்கான கம்பும் வரகும் கலந்து பொடிக்கப்பட்ட மாவும் மூட்டைகளில் வந்து இறங்கின.

மூன்று பசுக்களுக்கு ஒருவன் என ஆவலர் அமர்த்தப்பட்டிருந்தனர். ஒவ்வொருநாளும் பசுக்களை கங்கைக்கு கொண்டுசென்று கழுவி உடலெங்கும் வேப்பெண்ணை புரட்டி பூச்சிகளிலிருந்து காத்து சற்று நேரம் காலோய காட்டுக்குள் நடக்கவிட்டு மீட்டு கொண்டுவந்து கட்டினர். இரவெல்லாம் அங்கே குந்திரிக்கமும் அகிலும் புகைந்தன. இடம் வகுக்கப்பட்டு தென்கிழக்கு கன்னிமூலையில் தறி நிறுத்தி நூல்கட்டி அளந்து களம் வரையப்பட்டதுமே அந்நிலம் வேள்விநிலை என்றாகிவிட்டது என்பது நெறி. ஒவ்வொருநாளும் அந்தணர் அங்கே வந்து மூன்று வேளை எரியோம்பினர். வேள்விநிலை ஆநீரால் ஒவ்வொருநாளும் தூய்மைசெய்யப்பட்டது. வேள்விச்சாம்பலால் ஆநிலை தூய்மைசெய்யப்பட்டது. அவிமிச்சத்தை கொண்டுவந்து ஆநிலையின் பசுக்களுக்கு பகிர்ந்து ஊட்டி அவற்றை மலரிட்டு வணங்கி மீண்டனர்.

பசுக்களிலிருந்து கறக்கப்பட்ட பால் மண்குடங்களில் நுரைசூடி ஆய்ச்சியர் தலைகளிலேறி அக்காட்டிற்குள்ளேயே அமைக்கப்பட்டிருந்த பால்நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பெரிய யானங்களில் பாலை ஊற்றி காய்ச்சி மரத்தாலான கலங்களில் சேர்த்தனர். கங்கையின் ஒழுக்கில் சுழலும் சிறகாழிகளுடன் இணைக்கப்பட்டு விசைபெற்று சுழன்றுகொண்டிருந்த பதினெண்முக மத்துகள் அவற்றை கடைந்தன. பகலெல்லாம் அவை பாலை அலைக்கும் ஓசை பாறைச்சரிவில் ஆறு செல்லும் ஓசையென கேட்டுக்கொண்டிருந்தது. சிற்றுயிர்களை தவிர்ப்பதற்காக அப்பகுதியை தேவதாருவின் அரக்கு கலந்த புகையால் திரையிட்டிருந்தனர். அதனுள்ளிருந்து முகிலில் எழுபவர்கள்போல வெண்ணிற ஆடையணிந்த ஆய்ச்சியர் எழுந்து மீண்டும் சென்று மறைந்தனர்.

அலைநுரை என உருண்டெழுந்த வெண்ணெய் மண்கலங்களால் திரட்டப்பட்டு அங்கேயே உருக்கி நெய் ஆக்கப்பட்டு செம்புக்குடங்களில் நிறைக்கப்பட்டது. மூடி பொருத்தி விளிம்புகளை ஈயத்தை உருக்கி ஊற்றி ஒட்டி கொண்டுசென்று கங்கையின் குளிர்நீர் ஆழத்திற்குள் இறக்கி சேர்த்தனர். ஒவ்வொருநாளும் நூற்றுஎட்டு குடம் நெய் கங்கைக்குள் இறக்கப்பட்டது. நெய்க்குடங்கள் கட்டப்பட்ட கயிறுகள் ஒன்றோடொன்று பிணைந்த வலையை தொடுத்துக்கொண்டபடி படகுகள் கங்கையின் அலைகளில் ஆடி நின்றன.

வேள்விச்சாலையின் மேற்கு எல்லையில் வேள்விக்குரிய தொன்மையான அன்னங்களான வரகு, சாமை, கம்பு, எள், கொள் எனும் ஐந்து மணிகளும் தனித்தனி வயல்களில் விளைவிக்கப்பட்டன. நீளாயுளுக்காக பாலும், நற்புகழுக்காக நறுமணப்பொருட்களும், மைந்தர்பெருக வெண்குருதித் துளியென தயிரும், விண்ணவர் மகிழ நெய்யும், நற்சொல் அமைய தேனும், இன்னுளம் அமைய கருப்புச்சாறும், பெருநிதி சேர சந்தனமும், இல்லறம் பெருக அன்னமும், மங்கலம் விளைய மஞ்சளும், ஆபெருக பழங்களும் என நூலோர் வகுத்த அவிப்பொருட்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு வேள்விநிலையின் இடப்பக்கத்திலமைந்த கலவறையில் சேர்க்கப்பட்டன.

ஒவ்வொரு நாளும் பணி முடிந்து ஏவலர் விலகிச் சென்றதும் காட்டைச் சுற்றி பல்லாயிரம் நெய்ப்பந்தங்கள் ஏற்றப்பட்டு விலங்குகள் உள்நுழையாது காக்கப்பட்டன. அஸ்தினபுரியின் ஆயிரத்தவர் படைகள் இரண்டு துணைப்படைத்தலைவன் சிம்ஹபாகுவின் தலைமையில் இரவும் பகலும் இரண்டு அணிகள் என வேள்விக்காட்டை காத்து நின்றிருந்தன.

bl-e1513402911361அஸ்தினபுரியின் அரசவையில் புருஷமேத வேள்வி ஒன்றை இயற்றவேண்டும் என்னும் எண்ணத்தை காசியப குலத்து கிருசர்தான் முதலில் சொன்னார். அவர் சிந்துநாட்டிலிருந்து கணிகரால் வரவழைக்கப்பட்டவர். போரெழுகை குறித்த பேச்சு அப்போது அவையில் நிகழ்ந்துகொண்டிருந்தது. “இது வேதத்திற்கான போர். பெருவேள்வி ஒன்றினூடாக நாம் வேதியரின் வாழ்த்தை பெறவேண்டும். நாம் நிகழ்த்தும் போர் எதன்பொருட்டு என்று அதன்பின் எவருக்கும் அறிவிக்கவேண்டியதில்லை. வாளும் வில்லும் ஏந்தும் ஒவ்வொருவரும் அதை உணர்ந்திருப்பார்கள்” என்று கிருசர் சொன்னார்.

விதுரர் “ஆம், ஒரு மகாசத்ரயாகம் செய்யவேண்டும் என்று வைதிகர்களும் சொன்னார்கள்” என்றார். “இளவேனிற்காலத்தின் வளர்நிலா காலம் வேள்விகளுக்கு உகந்தது என்பார்கள்.” கிருசர் “வேள்விகள் பலநூறு உள்ளன. கோமேதம், அஜமேதம், அஸ்வமேதம் என இத்தருணத்தில் இயற்றக்கூடியவற்றை தெரிவுசெய்யவும்கூடும். ஆனால் அதர்வவேதம் ஆணையிடும் புருஷமேதமே அவற்றில் தலையாயது. அதை நாம் முதுவேனிலில் தேய்பிறைநாளில் நடத்தலாம் என்கின்றன நூல்கள்” என்றார்.

அவர் அதைச் சொன்னதுமே கணிகரின் குரல் அது என உணர்ந்து அவை அமைதிகொண்டு செவிகூர்ந்தது. விதுரர் எழுந்து “புருஷமேதமா? அது நாமறியாத் தொல்காலத்தில் எப்போதோ நிகழ்த்தப்பட்டது. இன்று அதை கேள்விப்பட்டவர்களே சிலர்தான்” என்றார். கிருசர் “ஆம், நான் மூவேதம் கொண்டவன். சென்ற முந்நூறாண்டுகளாக யஜுர்வேத மரபு மேலோங்கி, அதன் எதிர்நிலை என வேதமுடிபுக் கொள்கைகள் காடுகளை நிறைத்தபோது அதர்வவேதம் அவையஞ்சியவனின் சொல் என ஆழத்திற்கு சென்றுவிட்டது. ஆனால் அது சிவம் கழுத்திலமைந்த நஞ்சு. எழாது பரவாது என்றுமழியாது அங்கிருப்பது” என்றார். “உள்ளமைந்திருத்தலால் அது விதை. ஒரு குடம் நீர் பெற்றால் கிளையும் விழுதும் விரித்த பெருமரம்.”

“மகாபூதவேள்விகளை செய்பவர்களே பாரதவர்ஷத்தில் அருகிவிட்டனர். அதன் பெரும்செலவை அரசர்கள் அஞ்சுகின்றனர். அரசவைகளில் எழும் அமைச்சர்கள் பூதவேள்விகள் அவ்வரசன் கொண்ட பெருவிழைவின் பொதுஅறிவிப்புகள், ஒவ்வொரு மகாபூதவேள்வியும் பிற அரசரிடம் எச்சரிக்கையையும் அச்சத்தையும் ஊட்டுகிறது என்று சொல்லி அதன் அரசியல் விளைவுகளை சுட்டிக்காட்டி அவர்களை தடுக்கின்றனர். அந்தணரும் முனிவரும் அதர்வ வேத வேள்விகள் பிற மூன்று வேதங்கள் கூறும் மங்கல வேள்விகளுக்கு எதிரானவை என்கின்றனர். இவ்வுலகில் ஒன்றை நாடுபவர் அவ்வுலகில் ஒன்றை கைவிட்டே அதை செய்கிறார்கள் என்கின்றது தர்மசமுச்சயம். பெரிதொன்றை நாடுவோமென்றால் அதைவிடப் பெரிதொன்றை இழப்போம்” என்று விதுரர் சொன்னார்.

“அரசே, புருஷமேத வேள்வி ஆசுரவேதத்தில் இருந்து அதர்வம் கைக்கொண்டது. விருத்திரன் முதல் ஹிரண்யகசிபு ஈறாக பரம்பொருளால் மட்டுமே வெல்லத்தக்க வீரம் கொண்டிருந்த அசுரப் பேரரசர்களால் இயற்றப்பட்டது. பாரத மண்ணை மும்முறை வென்ற கார்த்தவீரியன் அதை இறுதியாக ஆற்றினார். கருவூலம் ஒழிய பொன்இறைத்து ஊற்றி எழுப்பப்படவேண்டியது அவ்வேள்வி. எனவே இன்று அதை இயற்றும் ஆற்றல் கொண்ட பிறிதொருவர் இந்நிலத்தில் இல்லை” என்றார் கிருசர். “பெருவேள்விகள் பெரிதாகவும் அரிதாகவும் இருப்பதே பெரியோரும் அரியோரும் மட்டுமே அவற்றை செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.”

முன்னர் அங்கநாட்டு அரசன் கர்ணனின் தலைமையில் அஸ்தினபுரி வடக்கே கின்னர நாடு முதல் தெற்கே வேசர எல்லை வரை, மேற்கே யவன நாடு முதல் கிழக்கே காமரூபம் வரை படைகொண்டு சென்று கப்பம் ஈட்டி கருவூலத்தைப் பெருக்கி வைத்திருந்தமையால் அமைச்சர்களும் குடியவையும் பிறிதொன்று கூறவில்லை. அத்துடன் அவர்களுக்கு அந்த வேள்வியின் விரிவும் பொருளும் அப்போது புரியவுமில்லை. சகுனி “ஆம், பிறரால் இயலாது என்பதே நாம் இயற்றவேண்டும் என்பதை காட்டுகிறது” என்றார். “புருஷமேத வேள்வி ஒன்றை இயற்றும் ஆற்றல் தங்களுக்கு இருக்கிறதென்பதை அஸ்தினபுரி அறிவிப்பது தொடங்கவிருக்கும் அரசப் பேரவையில் நமக்கு முன்தூக்கம் அளிக்கும்” என்று கணிகர் சொன்னார்.

“புருஷமேதம் அஸ்வமேதத்திற்கான அறைகூவல். ராஜசூயம் அவ்விரு புரவிகளால் இழுத்துவரப்படும் பொற்தேர்” என்று கிருசர் சொன்னார். “புருஷமேதம் நிகழ்த்தியவன் தன்னை எரித்து கனலென்றான காட்டுமரம். அவனை எண்ணி எவரும் அஞ்சுவர்.” துரியோதனன் அரியணையில் மீசையை சுட்டுவிரலால் நீவியபடி கூர்விழிகளுடன் அமர்ந்திருந்தான். “இத்தருணத்தில் இவ்வேள்வியை அறிவிப்பதே ஓர் அறைகூவல்தான். எவருக்கேனும் ஷத்ரியக்கூட்டின் பேரவையில் முதன்மை கொண்டு அமர வேண்டுமென்ற விழைவிருந்தால் அந்தக் கனல் துளியை கரியென்றாக்கிவிடும் இது” என்றார் கணிகர். சகுனி “ஆம், புருஷமேத வேள்வியை பாய்வதற்கு முன் சிம்மம் நிலத்திலறைந்து முழங்குவதுடன் ஒப்பிடுகின்றன நூல்கள்” என்றார். “அதைக் கேட்டு யுகங்களாக ஆழ்துயிலில் மூழ்கியிருக்கும் போர்த்தெய்வங்கள் விழித்தெழுகின்றன. அவற்றின் விடாய் தீர்வதற்கான குருதி இப்போரிலுண்டு என்று அவற்றுக்கு நாம் சொல்கிறோம்.”

விதுரர் சீற்றத்துடன் “அதர்வ வேதத்தின் வேள்விகள் அனைத்துமே அவற்றுக்குரிய எதிர்விளைவுகளும் கொண்டவை எனப்படுகின்றன. நோய்க்கு நச்சுமருந்து அளிப்பதைப் போன்றவை அவை. ஆறாக் கொடுநோய்க்கு அவை உகந்தவை என்றாலும் நிகர்நோய் ஒன்றை உருவாக்கியே அவை நலம் அளிக்கின்றன” என்றார். “ஆம், இத்தருணத்தில் நாம் நஞ்சு கொள்ள வேண்டியிருக்கிறது. நெடுநாள் வஞ்சம் தீர்க்கக் காத்திருக்கும் அரசநாகம் எந்த இரையையும் கொத்தாமல் தன் நச்சைப் பேணி நீலமணி என்றாக்கி நாவுக்குள் கரந்திருக்கும் என்பார்கள். நாம் அந்நிலையிலிருக்கிறோம்” என்று சகுனி சொன்னார். “நூறாண்டு தவமிருந்தால் அந்நீலமணியின் ஒளியை அது தன் கண்களில் அடையும். பின்னர் நோக்கியே நஞ்சூட்டும். நாம் வேண்டிய தவம் செய்துவிட்டோம்.”

கணிகர் “அமைச்சரே, புருஷமேத வேள்வி அரக்கத் தொல்குடியினர் கொண்ட போர் வழக்கம் ஒன்றிலிருந்து எழுந்ததென்று அறிக! பெரும்போருக்கு தங்களை ஒருக்கூட்டிக் கொள்ளும் குடியினர் தங்கள் உளஉறுதியை, மற்றொன்றின்மையை, மீளவிழையாமையை தங்களுக்கும் தங்கள் தெய்வங்களுக்கும் அறிவித்துக்கொள்ளும் பொருட்டு செய்யும் சடங்கொன்று உண்டு. அக்குடித்தலைவன் தன் இளமைந்தர்களில் அழகும் அறிவும் திகைந்த ஒருவனை மூதாதையர் நடுகல் என நின்ற ஆலமரத்தடிக்கு கொண்டு சென்று தன் குலத்தோர் கூடி நிற்க அன்னையரும் சூழ்ந்து நோக்க தலைமயிர் பற்றி சங்கறுத்துக் கொன்று அக்குருதியால் அந்நடுகற்களை நீராட்டுவார். அது புத்ரமேதம் எனப்பட்டது” என்றார்.

“தன் மைந்தர் அனைவரும் களம்பட்டால்கூட போரிலிருந்து பின்னடி வைக்கப்போவதில்லை, எந்நிலையிலும் இழப்பை எண்ணி துயருறப்போவதில்லை, எவருக்காகவும் அஞ்சவும் போவதில்லை என்று அறிவிக்கும் செயல் அது. இங்கு நாம் செய்வதும் அதுவே. புருஷமேதத்தினூடாக நாம் யயாதிக்கு ஹஸ்திக்கு குருவுக்கு பிரதீபருக்கு சந்தனுவுக்கு விசித்திரவீரியருக்கு நம் உறுதிகோளை அறிவிக்கிறோம். நம் குடியினருக்கு இனி கண்ணீரில்லை என்று தெரிவிக்கிறோம். நம்மைச் சூழ்ந்து படைகொள்ளவிருக்கும் ஷத்ரியர்களுக்கு மறுக்கவியலா ஆணைகளை அளிக்கும் ஆற்றலை பெறுகிறோம். அதனூடாக பாரதவர்ஷத்தின் பிறர் அனைவருக்கும் வாழ்வை விழைந்தால் பணிக என்னும் எச்சரிக்கையை விடுக்கிறோம்” என்றார் கணிகர்.

விதுரர் இறைஞ்சும் குரலில் துரியோதனனை நோக்கி “அரசே, மீண்டுமொருமுறை எண்ணுக! இந்த அவை கலையட்டும். ஏழு நாட்கள் பொழுது கொள்வோம். மூன்றுமுறையேனும் அமர்ந்து சொல்சூழ்வோம். உடன்முடிவு எடுப்பதற்கானதல்ல இது” என்றார். “ஏனென்றால் இன்னமும் ஷத்ரியப் பேரவை கூடவில்லை. இன்னமும்கூட நாம் பாண்டவர்களிடம் முற்றிலும் சொல்முறித்துக் கொள்ளவில்லை. அங்கிருந்து அரசகுடித் தூதர் என எவரும் இங்கு வரவில்லை. இளைய யாதவர் வரப்போவதாக ஒற்றர்சொல் வந்துள்ளது. புருஷமேதம் அறிவிக்கப்பட்டு வேள்விநிலைக்கு கால்நாட்டப்பட்டுவிட்டால் அதன்பின் பின்னெட்டு வைக்க இயலாது. விழித்தெழுந்த தெய்வங்களுக்கு விடாய்குளிர குருதியளிக்காவிட்டால் அவை பெருநோயும் பஞ்சமும் பரப்பி அவ்வழைப்பு விடுத்தவரின் நகரையும் குடிகளையும் அழிக்கும். கொடிவழிகள் மேல் அத்தெய்வங்களின் வஞ்சம் நின்றிருக்கும்.”

துரியோதனன் வெற்று விழிகளுடன் மீசையை முறுக்கியபடி அமர்ந்திருந்தான். சகுனி “இப்போதும் நம்முடன் ஷத்ரியர் படைக்கூட்டுக்குத் தயங்குவது ஒன்றினாலேயே. அவர்கள் உங்கள் உடன்குருதியர். எனவே இறுதியில் ஓர் அவையிலமர்ந்து சொல்முடிப்பதில்தான் சென்று நிற்கும் இப்படைப் புறப்பாடு என அவர்கள் ஐயுறுகிறார்கள். அவர்களுடன் சொல்முறுகி நின்றிருக்கும்பொருட்டு சேவல் செட்டைவிரிப்பதுபோல இப்போர்க்குமுறலை அஸ்தினபுரியின் அரசன் நிகழ்த்துகிறான் என்று சூதர்கள் இளிவரல் பாடிக்கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மையில்லை என்று நானும் சொல்லமாட்டேன்” என்றார். “இவ்வேள்வியை அறிவிப்பது அந்த அனைத்து ஐயங்களையும் பொசுக்கிவிடும் என்று உணர்க!”

“ஒருவேளை நாம் வேண்டிக்கொண்டதற்கேற்ப பாண்டவர்கள் நிலம் கோருவதை கைவிட்டால்? போருக்கு ஒருக்கமல்ல என்று மீண்டும் கானேகினால்? அரசே, புருஷமேதம் நிகழ்ந்தபின் போர் ஒழியமுடியாது” என்றார் விதுரர். “அவ்வாறென்றால் நாம் அசுரரையும் நிஷாதரையும் கிராதரையும் அரக்கரையும் அழிப்போம். பாரதவர்ஷம் முழுக்கவும் ஷத்ரியக்கொடி பறக்கவேண்டுமென்று படைகொண்டெழுவோம். குருதிக்கு குறைவிருக்காது” என்றார் சகுனி. “ஆம், இப்போர் பாண்டவர்களுக்கு எதிரானது அல்ல, இது மெய்ச்சொல் இந்நிலமெங்கும் நின்றிருக்கவேண்டும் என்பதற்கானது” என்றார் கணிகர்.

துரியோதனன் மெல்ல எழுந்தபோதே விதுரர் உளம்தளர்ந்து அமர்ந்துவிட்டார். கைவீசி தாழ்ந்த குரலில் “ஆம், புருஷமேதம் நிகழ்க!” என்று துரியோதனன் ஆணையிட்டான். அவைசொல்லி எழுந்து அச்சொல்லை மும்முறை எதிரொலிக்க அவையில் அமர்ந்திருந்த வைதிகர்கள் எழுந்து உரத்த குரலில் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்லளித்தனர். அவையினர் அனைவரும் எழுந்து தங்கள் கோல்களைத் தூக்கி “வேள்வி நிறைக! போர்த்தெய்வங்கள் எழுக! அரசர் வெல்க! அஸ்தினபுரி சிறப்புறுக!” என்று முழக்கமிட்டனர்.

முந்தைய கட்டுரைக்ரியாவின் மொழிக்கொள்கை,இலக்கண ஆதிக்கம்
அடுத்த கட்டுரைபெரியார்மதம்