கலை -கடிதம்

26219597_1034590833348441_411317062568561626_n

கலைகளின் மறுமலர்ச்சி

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

சென்னையில்  நேற்றைய தங்களது உரை ஒரு கிளாசிக். இதுவரை இலக்கியம், சமூகம், பண்பாடு பற்றிய பல தளங்களில் தங்களின் உரைகளை கேட்டுள்ளேன். ஓவியம் இசை சிற்பம் போன்ற சக நுண்கலைகளை பற்றிய மிக செறிவான உரை இது.புது அனுபவம்.   எனக்கு இசை நடனம் ஓவியம் எதை பற்றிய எந்த நுட்பங்களும் தெரியாது.

ஆனால் இசையோ நடனமோ நான் விட பிடியாக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அமர்ந்து இறுதி வரை கேட்பதுண்டு.பார்ப்பதுண்டு. அக்கலைகளை  ஆழ்ந்து அனுபவிக்கும்போது அது  நம்மை அழைத்து செல்லும் தளம் அதில் மூழ்கி திளைக்க செய்கிறது. அது அளிக்கும் ஆன்மீக அனுபவம் அலாதியானது. அந்த அனுபவம் எதோ விதத்தில் எழுத்தில் பதிவு செய்ய பட்டிருக்கிறதா என்பது  என் நீண்ட நாள் கேள்வி. அதற்கு தங்கள் உரையின் தொடக்கம் மிக சரியான பதிலாக அமைந்தது. ஒன்று ராகங்களை,பாடியவர் பற்றிய வெறும் TECHNICAL விமர்சனங்கள், அல்லது உணவுடன் ஒப்பிட்டு சொல்லும் சலிப்பூட்டும் கிண்டல்கள்.

தாங்கள் குறிப்பிட்டது போல் மேலை நாடுகளில் உள்ள  அந்த இசையின் அல்லது ஓவியத்தின் ஒருங்கமைதியையும் அதன் மூலம் நமது புலன்கள் அடையும் அனுபவ உச்சத்தினை  அளவீடுகளாக கொண்ட விமர்சனங்களும், மதிப்புரைகளும் வருமானால் என் போன்ற அனுபவ ரீதியாக மட்டுமே கலையை அணுக முயற்சிப்பவர்களுக்கு, அந்த கலையின் உன்னத படைப்புகளை அறிமுக படுத்தி கொள்வதற்கும் அதனை நோக்கி ரசனையை மேம்படுத்தி கொள்வதற்கும் பேருதவியாய் இருக்கும்.

தாங்கள்,  எழுத்தின்  வழியே அக்கலைகளை அனுபவ ரீதியாக வெளிப்படுத்தும் முயற்சி நடந்து கொண்டே இருக்க வேண்டும், அதில் தோற்று கொண்டே இருந்தாலும் அது முக்கியமான முயற்சி என்று சொன்னீர்கள். ஆனால் நேற்றைய தங்களது உரை எழுத்தின் வழியாக இல்லாமல், சொற்களின் வழியாக அந்த அனுபவத்தை அளித்த பெரும் வெற்றி உரை .

அதற்கான சான்று அவ்வுரை   தொட்டு சென்ற  இடங்களான  ஐரோப்பிய இசை, ஓவியம், இந்திய சிற்பக்கலை, முகங்கள், உடல் பற்றிய அவதானிப்புகள், ராஜா ரவி வர்மா  ஓவியங்கள், நாம் 400 வருடம் ஐரோப்பிய மறுமலர்ச்சியில் பின் தங்கி இருப்பதான  கருத்து , அக்கருத்து இந்திய கலைஞர்களுக்கு அளிக்கும் அறைகூவல்,உஜ்ஜைனி கோயில் முதல் காவிரி வரையிலான பண்பாடு, பகுத்தறிவின் எல்லை, கலையை உணர அதனை தாண்டி செல்வதற்கான தேவைகள் போன்று பல தளங்களில் சென்று எனது புரிதலின் தடைகளை  தாண்டியபடியே முழு உரையும்  நிகழ்ந்தது.

மிக்க நன்றி

த .அனந்த முருகன்

 

 

அன்புள்ள ஜெ

 

நலம்தானே

 

இந்தியக் கலைகளைப்பற்றி நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டேன். சில முக்கியமான விஷயங்கள் அதில் இருந்தன. ஓவியன் என்ற முறையில் எனக்கு அது முக்கியமானதாகப்பட்டது. அதை கலைவிமர்சகர்கள்தான் சொல்லமுடியும். அவர்கள்தான் கலையை வரலாற்றுரீதியாகப்பார்ப்பவர்கள். கலைஞர்களின் பார்வை வேறு

 

ஒன்று, நீங்கள் சொல்வதுபோல இங்கே கலைக்கு மார்க்கெட் இல்லை. ஆகவே நாங்கள் ஐரோப்பியச் சந்தைக்காகவே கலைகளை உருவாக்குகிறோம். நம்மூடைய ஓவியம் மட்டும் அல்ல தியேட்டர் கூட. ஆகவே அவற்றுக்கும் இங்குள்ள மக்களுக்கும் சம்பந்தமே இல்லை. அவை ஏற்றுமதிப்பொருட்கள்தான். இங்கு இயல்பாக எழுந்தவை இல்லை

 

ஐரோப்பியச் சந்தைக்காகத் தயாரிக்கும்போது அவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ அது அந்தக் கலையில் இருக்கவேண்டும். இது இந்திய ஆங்கில எழுத்துக்கும் பொருந்தும் எனநினைக்கிறேன். அதைச்சரியாகப் புரிந்துகொண்டவர்கள் ஜெயிக்கிறார்கள்.

 

இரண்டாவதாக, நம் கலையானது மெய்யாக மறுமலர்ச்சி அடையவில்லை என்றால் அது ஒரு குறை அல்ல. அது ஒரு நல்ல வாய்ப்பு. உலகமயமாதலில் தனி அடையாளங்கள் எஞ்சுவது பெரிய வரம். அதை நீங்கல் சொன்னபோது பெரிய அளவிலே உற்சாகம் ஏற்பட்டது

 

சுந்தர்ராஜன்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58
அடுத்த கட்டுரைபகுத்தறிவும் டாக்கின்ஸும் – கடலூர் சீனு