முதலில் என் விருப்பமும் அதன் காரணங்களையும் கூற விழைகிறேன். வெண்முரசு தவிர்த்து உங்களிடம் இருந்து ஒரு நாவலை எதிர்பார்க்கின்றேன் மிகுந்த பசியாக இருக்கிறது
” இரவு” போன்ற ஒரு நாவலையும் அதன் மயக்கத்தையும் மீண்டும் எப்பொழுது கொடுப்பீர்கள் வெண்முரசு இதர பணிச்சுமைகள்பயணங்களுக்கிடையே இதையும்
சாத்யப்படுத்த தங்கலால் முடியும்.என்னை போன்றே பலரின் எதிர்பார்ப்பும் இருக்கலாம் அறியேன்தவறு இருந்தால் மன்னிக்கவும்.
சிநேகமுடன்:
சக்தி
(குவைத்)
அன்புள்ள சக்தி
என்னைப்பொறுத்தவரை புனைவு என்பது எனக்கு முதன்மையாகத் தேவைப்படவேண்டும். என் சலிப்பை, தனிமையை போக்கிக்கொள்ள. என் நாட்களை நிறைக்க. என் தேடலையும் கண்டடைதலையும் முன்வைக்க. என் அச்சங்களையும் ஒவ்வாமைகளையும் வெளிப்படுத்த. அப்படி ஒரு கட்டாயம் இல்லாமல் எழுத முடியாது
சிலசமயம் மிகத்தீவிரமாக எழுதவேண்டும் என்று தோன்றுவதுபோலவே சிலசமயம் மிக எளிதாக எழுதவேண்டும், புனைவை வெறும் கனவாக மட்டுமே முன்வைக்கவேண்டும் என்று தோன்றும் . ஆகவேதான் எல்லாவகைமையிலும் எல்லா மனநிலைகள் கொண்டதாகவும் எழுதியிருக்கிறேன்
இரவு அப்படி ஒரு மனநிலையில் எழுதப்பட்ட நாவல்தான். அப்படி ஒரு மனநிலை அமைந்தால் எழுதலாம். பார்ப்போம். இப்போது வெண்முரசு எல்லா மனநிலைகளையும் நிறைத்துக்கொள்கிறது
ஜெ