திருத்தர்

ms

ஜெ

இப்போது பலரும் நாவல் எடிட்டிங் செய்வதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு படைப்பிலக்கியத்தை இன்னொருவர் எடிட்டிங் செய்யமுடியுமா? செய்வதென்றால் அதற்கான எல்லைகள் என்ன? உங்கள் படைப்புகளை எடிட்டிங் செய்ய நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு உங்கள் நூல்களில் கிரெடிட் கொடுத்திருக்கிறீர்களா? இவை இன்றைய சூழலில் பதிவுசெய்யப்படவேண்டும் என நினைக்கிறேன்

ஆர்.மகேஷ்

***

அன்புள்ள மகேஷ்,

சில அடிப்படை விளக்கங்கள். தமிழில் எல்லா நூல்களும் எல்லா காலகட்டத்திலும்நூல்திருத்தல் [எடிட்டிங்] செய்யப்பட்ட பின்னரே வெளியாகியிருக்கின்றன. பண்டைநாளில் அதற்கு அரங்கேற்றம் என்று பெயர். அரங்கேற்றம் என்பது ஒரு கூட்டுத் திறனாய்வு, அதன் விளைவான பிரதிமேம்படுத்துதல். அதைச்செய்யும் அறிஞர் பலர் அன்று இருந்தனர்.

தொல்காப்பியம் அதங்கோட்டாசான் முன்னிலையிலும் கம்பராமாயணம் ஒட்டக்கூத்தர் அமர்ந்த அவையிலும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அரங்கேற்றம் செய்யப்பட்டபின் பாயிரம் அளிக்கப்படும். அதன்பின்னரே அந்தப்படைப்பு அனைவருக்கும் உரியதாக, பயிலத்தக்கதாக அறிவிக்கப்படும். பாயிரம் இல்லா நூல் என்பது அறிஞர் ஏற்காதது, அதாவது முகவரியற்றது.

அரங்கேற்றம் நிகழும் விதம் குறித்த ஏராளமான செய்திகள் மரபில் உள்ளன. அரங்கேற்றத்தில் கவிஞரைத் துணைக்க கலைமகளும் முருகனும் வந்த கதைகளை எல்லாம் நாம் கேள்விப்பட்டிருப்போம். கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை அரங்கேற்றியபோது திகடசக்கரம் என முதல்சொல்லிலேயே அவைப்புலவர் எதிர்ப்பு தெரிவித்தனர். திகழ்தசக்கரம் என அதைப் பிரித்து பொருள் அளித்த கச்சியப்பர் அந்தப் புணர்ச்சிவிதிக்கு வீரசோழியம் என்னும் இலக்கணநூலின் ஒப்புதல் இருப்பதையும் சுட்டிக்காட்டியபின்னரே அது ஏற்கப்பட்டது. இந்த நூல்திருத்தம் காவியங்களைப் பொறுத்தவரை பல ஆண்டுகள் நிகழ்வது.

அரங்கேற்றுமன்றின் புலவர்களால் எதிர்க்கப்பட்டு உரியவிளக்கம் அளிக்கப்படாத வரிகள் பேரிலக்கியங்களில்கூட அகற்றப்பட்டன. உலக இலக்கியப்பரப்பில் திருத்துதலுக்கு ஆளாகாத ஒரு பெரும்படைப்புகூட இல்லை. தல்ஸ்தோயின் போரும் அமைதியும் போன்ற படைப்புகள் அச்சான பின்னரும் கூட தொடர்ந்து திருத்தலுக்கு ஆளாகி மறுதொகுப்பும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு செவ்வியலாக்கத்துடனும் அதை திருத்திய திருத்தர்களின் பெயர்களும் வரலாற்றில் உள்ளன.

ஏன் இது தேவையாகிறது? உண்மையில் சராசரி எழுத்தாளனுக்கு இது தேவை இல்லை. அவன் தனக்கென ஒரு சராசரி மொழி, சராசரி வடிவத்தைக் கொண்டிருப்பான். அதை உளப்பழக்கமாகவே  சென்றடைவான். அந்தத் தரப்படுத்தல் அவன் உள்ளத்தில் இருப்பதனால் மொழியையும் வடிவத்தையும் எப்படி அங்கு கொண்டுசேர்க்கவேண்டுமென்ற ஒரு புரிதலும் அவனுக்கு இருக்கும். அதாவது சரியான வடிவம், சரியான மொழி என அவன் ஒன்றை உறுதியாக நம்புவான். அதை திட்டமிட்டு, யோசித்து அடைவான்

முதல்நிலைப் படைப்பாளிக்கு அவன் அடைந்த அகத்தூண்டலே வழிகாட்டி. அவன் சென்றடையவேண்டிய இடம் எழுதுவதற்கு முன் தெரியாது, எழுதியபின்னரும் தெளியாமலிருக்கும். அவனுடைய மொழி ஒவ்வொருமுறையும் ஒன்றென உருமாறும். அவன் அடையும் வடிவம் என்பது பெரும்பாலும் தற்செயல்தான். ஏனென்றால் அவன் ஆழுள்ளத்தால் ஒரு கனவென புனைவை நிகழ்த்துபவன். கனவுக்கு வடிவஒருமை இருக்கும், ஆனால் அது காண்பவன் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. எழுதிக் கண்டுபிடிப்பவற்றின் மீதுதான் படைப்பாளியின் ஆர்வம் குவிந்திருக்கும், வெளிப்பாட்டின்மீது அல்ல.

இக்காரணத்தால் படைப்பாளியால் தன் புனைவை புறவயமாக, தர்க்கபூர்வமாகப் பார்க்கமுடியாது. தன்னுடைய கோணத்திலேயே அதைப் பார்க்கமுடியும், வாசகனின் பார்வையில் அதை பார்க்கமுடியாது. உண்மையில் அதை புறவயமாகப் பார்ப்பதே ஒருவகை சித்திரவதையாகத் தெரியும். மெய்ப்பு பார்ப்பதும் வடிவத்தைப் பரிசோதிப்பதும் அக்கனவிலிருந்து வெளிவருவதுதான். அது பறந்துகொண்டிருப்பவன் மண்ணில்விழுவதுபோல

இந்நிலையில் திருத்தர் தேவையாகிறார். அவர் ஓர் இலட்சியவாசகர். அவர் வாசகரின் கோணத்தில் அப்படைப்பை அணுகி அவருக்கு ஏற்பட்ட இடர்களை, போதாமைகளைச் சொல்கிறார். அவர் சொன்னதுமே அவை அவன் கண்ணுக்கும் தென்படத்தொடங்கும், அதுவரை எத்தனைமுறை வாசித்தாலும் தெரியாது. இந்த மாயத்தை மொழியில் எப்போதும் பார்க்கலாம். மிகச்சரியாக பொருள்கொள்வதாக நமக்குத்தோன்றும் ஒருவரி வாசகருக்கு பெரிய குழப்பத்தை அளிக்கும். அவர் தன் குழப்பத்தைச் சொன்னதுமே நமக்கு அந்தக்கோணம் பிடிபடும். இதுவே திருத்துதலின் தேவையை உருவாக்குகிறது

மொழி,வடிவ ஒருமை, நுண்தகவல்கள் ஆகிய மூன்றையும் திருத்தர் சீர்செய்யலாம். உண்மையில் நல்ல திருத்தர்கள் அவர்களே அதைச் செய்வதில்லை. அவர்கள் இப்படிப்பார் என ஆசிரியனிடம் சொல்கிறார்கள். சொன்னதுமே அப்பிழைகள் தென்படத் தொடங்குகின்றன. அவன் அப்பிழைகளை, பிசிறுகளைச் சீரமைக்கிறான். தேவை இல்லை என்று தெரிந்தால் மறுக்கிறான். இதுதான் இலக்கியப்படைப்பில் உள்ள திருத்தல் என்னும் செயல்பாடு.

images raja
ராஜகோபாலன்

இதிலுள்ள மூன்று விதிகள், ஒன்று படைப்பாளிக்கு சுட்டிக்காட்டுவது மட்டுமே திருத்தரின் பணி. இரண்டு, திருத்தவேண்டுமா வேண்டாமா என முடிவெடுப்பது அப்படைப்பாளிதான். மூன்று, அந்த மேம்படுத்தல் எப்படி நிகழவேண்டும் என ஒருபோதும் திருத்தர்  சொல்லக்கூடாது.

இலக்கியநூலின் திருத்தல் நிகழ்வதற்கு உள்ள இடர் என்னவென்றால் அந்த ‘இலட்சியவாசகர்’ அமையவேண்டும் என்பதுதான். அவர் அப்படைப்பாளியின் படைப்புலகைக் கூர்ந்து வாசிப்பவராக, மிக அணுக்கமாக அவனுடைய புனைவுள்ளத்தைப் பின்தொடர்பவராக இருக்கவேண்டும். அவருடைய தனித்தன்மைகள் எல்லாம் தெரிந்திருக்கவேண்டும். அவர் அந்தப்படைப்பின் மேல் மதிப்புள்ளவராக, அதை வாசிப்பதில் மகிழ்ச்சிகொள்பவராக இருக்கவேண்டும்.

இந்தத் தகுதி இல்லையேல் திருத்தர்  அப்படைப்பில் அதன் அழகியலின் ஒரு பகுதியாக நிகழும் இயல்பான உணர்வு மீறலையும், வடிவச் சிக்கலையும் பொருள்மயக்கத்தையும், படைப்பாளி உருவாக்கும் பல்வேறு பின்னல்களையும் அதன் பிழைகள் என்று பார்க்க ஆரம்பித்துவிடுவார். இடியாப்பத்தை சீப்புவைத்து சீவிச் சாப்பிட முயல்வது போல.

அத்துடன் திருத்தர் தன்னை வாசகனாக, பிரதிக்குக் கீழே வைத்திருக்கும் தன்னடக்கம் கொண்டவராக இருக்கவேண்டும். ஒவ்வொரு படைப்பும் வெவ்வேறுவகை மொழிபு, வெவ்வேறு உலகம் என அவருக்குத் தெரிந்திருக்கவேண்டும். படைப்புக்கு தன்னை ஒப்புக்கொடுக்கவேண்டும். இல்லையேல் எல்லா படைப்பையும் தன்னைநோக்கி இழுத்து தன்னுள் பதிந்துள்ள ஒருபடைப்பாக ஆக்க முயல்வார்

என் நோக்கில் மிகச்சிறந்த தமிழ் திருத்தர் எம்.எஸ் அவர்கள்தான். என்னுடைய விஷ்ணுபுரம் நாவலை அவர் அவ்வாறு திருத்தல் செய்து உதவியிருக்கிறார். அவர் விரும்பாவிட்டாலும் அவர் பெயர் அந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். மிகநுட்பமாக படைப்பின் குறைகளையும் சாத்தியங்களையும் வாசகர் நோக்கில் அவர் சொல்வது நாம் அந்தப்பக்கம் நின்று பார்த்து நூலை மேம்படுத்த உதவுவது. எம்.எஸ் போன்ற மாபெரும் வாசகர் மட்டுமே அப்படி இலட்சியவாசகரும் ஆக முடியும்.

haran_prasanna
ஹரன் பிரசன்னா

அருண்மொழிநங்கை, தமிழினி வசந்தகுமார் என பலரும் என் படைப்புகளை அப்படி திருத்தல் செய்துள்ளனர். ஹரன்பிரசன்னா, ராஜகோபாலன்,செல்வேந்திரன் ஆகியோர் சமீபத்தில் சில நூல்களுக்குச் செய்திருக்கிறார்கள். வெண்முரசின் அத்தனை அத்தியாயங்களும் சுதா ஸ்ரீனிவாசன்-,ஸ்ரீனிவாசன் தம்பதிகளாலும் வேறுநண்பர்களாலும் திருத்தல் செய்யப்பட்டே வெளியாகின்றன. ராஜகோபாலன் ஒரு மிகச்சிறந்த திருத்தர், அவருடைய பங்களிப்பை எழுத்தாளர்கள் பலர் நாடியதுண்டு.

இதிலுள்ள சிக்கல்களையும் சொல்லியாகவேண்டும். தனக்கென மொழியும் நோக்கும் அமைந்த படைப்பாளி ஒருபோதும் திருத்தர் ஆக முடியாது. சுந்தர ராமசாமியின் பல கதை, கவிதைகளை நான் கையெழுத்தில் வாசித்ததுண்டு. ஆனால் திருத்தலுக்கு முயன்றதில்லை, வெளியாகும் முன் கருத்தே சொன்னதில்லை. என் இலக்கியப்பார்வையும் அழகியலும் முற்றிலும் வேறானவை. நான் அவரை என்னை நோக்கி இழுக்கக் கூடாது.

ஒரு படைப்பு ஏறத்தாழ முழுமையடைந்த பின்னரே திருத்தர் அதில் நுழையவேண்டும். இல்லையேல் அதன் திசையை அவர் தீர்மானித்தவராவார். அது பெரும்பிழை. ஊக்கப்படுத்துவதோ சோர்வூட்டுவதோ அவர் பணி அல்ல. அதன் முழுவடிவமும் திருத்தரின் பார்வைக்குத் தெரிந்தபின் அந்த வடிவம் மேலும் எப்படி சிறப்பாக இருக்கமுடியும் என்றுதான் அவர் சொல்லவேண்டும். அவர் அந்தவடிவைத் தீர்மானிக்கக் கூடாது.

முக்கியமாக ஒன்று, திருத்தருக்கு தனக்கென மொழிக்கொள்கைகள், இலக்கணக் கொள்கைகள், மாறாத நெறிகள் இருக்கக் கூடாது. அத்தகையவர் எல்லா படைப்புகளையும் தரப்படுத்தும் கல்லுருளை ஆகிவிடுவார். அவர் தன்னை படைப்புக்கு ஒப்புக்கொடுப்பவராகவே இருக்கவேண்டும். அந்த படைப்புமொழியை அவர் சென்றடையவேண்டும். தன் கொள்கை நோக்கி இழுக்கக்கூடாது.

இளம்படைப்பாளிகளின் ஆக்கங்களில் சில சிக்கல்கள் உண்டு. ஒன்று, அவர்களின் உள்ளம்  உணர்வுகளும் நினைவுகளும் இழுக்கும் திசைக்குச் சென்றிருப்பதனால் வடிவப்பிழை இருக்கும். இரண்டு, அவர்களைப் பாதித்த எழுத்தாளர்களின் மொழிநடை ஊடுருவியிருக்கும். மூன்று, சூழலில் உள்ள தேய்வழக்குகள் உள்ளே வந்திருக்கும். ஏனென்றால் அவர்கள் தங்கள் மொழியை தாங்கள் அடைந்திருக்கமாட்டார்கள். ஆகவே அவற்றைச் சுட்டிக்காட்டும் திருத்தர் அவர்களுக்கு மிகப்பெரிய உதவியைச் செய்கிறார்

ஆனால் அவர் அப்படைப்பாளியின் புனைவை  முன்னின்று வழிநடத்தவோ, விரிவாக்கவோ, அதன் மையத்தை வரையறைசெய்யவோ, அதன் உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் கூட்டவோ குறைக்கவோ செய்யக்கூடாது. அதோடு தன் எல்லையை திருத்தர் உணர்ந்திருக்கவேண்டும். ஒரு சொல்கூட அவன் எழுதிச்சேர்க்கக் கூடாது.

சில தனி நுண்ணுணர்வுகளும் திருத்தருக்குத் தேவை. படைப்பாளியின் சில பிழைகள் பின்னாளில் அவருடைய தனித்தன்மையாகக்கூட மாறமுடியும். சு.வேணுகோபாலிடம் ஒரு கட்டற்ற தன்மை உண்டு. அவர் 1990களில் காலச்சுவடுக்கு அளித்த கதைகளில் அந்த கரடுத்தன்மை ஓங்கித்தெரியும். சுந்தர ராமசாமி அக்காரணத்தால் அவர்கதைகளை வெளியிடவில்லை. அதை அடையாளம் கண்டவர் கோவை ஞானிதான்.பின்னாளில் அவர் அதை ஒரு கிராமத்து விவசாயியின் குரலாகவே ஆக்கிக்கொண்டார். தன்முனைப்பு கொண்ட ஒரு திருத்தர் அதை முளையிலேயே கிள்ளி விட்டிருப்பார்.

புனைவுமொழிமேல் தன்விழிப்பு சார்ந்த கட்டுப்பாடு கொண்ட முதன்மைப்படைப்பாளிகள் எவருமில்லை. ஏனென்றால் புனைவை உருவாக்கும் நனவிலியை விட மிகமிக சிறியது விழிப்புநிலை.. படைப்பிலக்கியவாதியின் மொழி என்பது நனவிலியுடன் மொழியைப் பிணைக்கும்போது உருவாவது. ஆகவே பிழையற்ற மொழி கொண்ட உலகப்பேரிலக்கியவாதிகள் எவருமில்லை. பேரிலக்கியவாதிகளின் பிழைகள், மீறல்கள் குறித்து ஆர்வமுள்ளவர்கள் தேடிவாசிக்க பல்லாயிரம் பக்கங்கள் உள்ளன.

சொல்லமுடியாத ஒன்றை நோக்கிச் சென்று எவ்வகையிலோ உருமாற்றம் அடைந்ததே புனைவுமொழி. அதன் அழகுகளும் சரிவுகளும் அவ்வாறு உருவாகின்றவையே. பொருள்மயக்கம், சொல்மயக்கம் போன்றவை படைப்பின் அழகியலில் முக்கியமானவை என வில்லியம் எம்ப்ஸன் போன்ற விமர்சகர்கள் வகுத்தே நூறாண்டு ஆகப்போகிறது.

பிழையற்ற மொழி என்பது உண்மையில் சராசரி மொழிதான். சராசரியான எதற்கும் அப்பாலிருப்பதே இலக்கியம். ஆகவே பிழையற்றமொழியை கொண்டுவர முயல்வதுகூட பலசமயம் படைப்பின் உயிரைச் சிதைப்பதாக ஆகிவிடக்கூடும். படைப்பிலக்கியத்தில் எழும்   ‘பிழை’களை புனைவுப்பரப்பில் உள்ள ‘விரிசல்’கள் என்று தகர்ப்பமைப்பு விமர்சனம் சொல்கிறது. படைப்பிலக்கியவாதி வெளிப்படுத்திய நனவிலியில் இருந்து மறைத்த நனவிலிக்குச் செல்லும்பாதை அது என்பார்கள். எது கவனப்பிசகின் விளைவான பிழை எது நனவிலிவெளிப்பாட்டின் மீறல் என புரிந்துகொள்ளத் திராணியுள்ள திருத்தர் தேவை

*

இதெல்லாம் இலக்கியப் படைப்புகளை திருத்தல் செய்வதுபற்றி. தொழில்முறைப் படைப்புகளை திருத்தல் செய்வது முற்றிலும் வேறு. அங்கே திருத்தர் “இலட்சியவாசகர்’ அல்ல “சராசரி வாசகர்”. தொழில்முறைப் படைப்புகள் எந்த வாசகர்களைச்ச் சென்றடையவேண்டுமோ அந்த வாசகர்களின் பிரதிநிதி அவர். அவர்களில் ஒருவர், அல்லது அவர்களை நன்கு ஆராய்ந்தவர். அங்கே நூல் என்பது நுகர்பொருள் ,திருத்தர் அந்நுகர்வோரின் தரப்பு.

அத்தகைய நூல்கள் சந்தையில் முன்னர் பெற்ற எதிர்வினைகளின் அடிப்படையில் அவர்களுக்கு என்னென்ன பிடிக்கும், என்னென்ன சிக்கல்கள் அவர்களுக்கு உண்டு என்று அந்தப் திருத்தர் அறிந்திருப்பார். அவர் அந்த ‘ஏற்கப்பட்ட வடிவம்’ நோக்கி படைப்புகளைக் கொண்டுசெல்வார். இது படைப்பிலக்கியம் அல்ல, தயாரிப்பு எழுத்து. இது ஆசிரியனின் அகவெளிப்பாடு அல்ல, ஓர் நுகர்வுப்பண்டம்.

பயன்பாட்டு நூல்கள், துறைசார்நூல்கள். கல்வித்துறைநூல்கள், கேளிக்கை எழுத்துக்கள் போன்றவை இவ்வாறுதான் உருவாக்கப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் திருத்தர்களின் குழுவே உண்டு. அவர்கள் எழுத்தாளனை வழிநடத்துவார்கள். மாற்றியமைப்பார்கள். சிலபகுதிகளை வேறுசிலரைக்கொண்டு எழுதச்செய்வதுமுண்டு. மேலைநாட்டில் பிறருடைய எழுத்து சற்றேனும் இல்லாத புகழ்பெற்ற நூல்களே இல்லை என்பார்கள்.

பெரும்பாலும் பதிப்பாளர்களால் இவர்கள் ஏற்பாடுசெய்யப்படுகிறார்கள். இவர்களை மறுக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது ஒப்பந்தத்தின் ஒரு பகுதி, அதை மீறவே முடியாது. உதாரணமாக ஆங்கிலநாவல்களில், அவற்றில் பலநாவல்கள் இலக்கியமுலாம் கொண்டவையும்கூட, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பாலுறவுக் காட்சி ஒன்று தேவை என ஒரு வடிவ இலக்கணம் உண்டு.இனிமேல் நாவல்களில் பாலுறவுக்காட்சி எத்தனை சீரான இடைவெளியில் வருகிறது என பாருங்கள், நான் சொல்வது புரியும்.

இன்றைய அமெரிக்க, ஐரோப்பிய படைப்புகளில் வர்ணனைகள், உள்ளச் சித்தரிப்புகளை குறிப்பிட்ட பக்கங்களுக்குமேல் நீள விடமாட்டார்கள். கதாபாத்திரங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவார்கள். நிகழ்வுகளில் வன்முறை, பாலுணர்வு, துரோகம், திருப்பம் ஆகியவை அமைந்திருக்கவேண்டிய பகுப்பமைப்பு பற்றி துல்லியமான கணக்குகள் உண்டு. நான் ஒரு திருத்தர் பயிலரங்கில் இதைக் கேட்டிருக்கிறேன். சிறியவிஷயங்களின் கடவுள் போன்ற நூல்களில்கூட இந்த தொழில்முறை திருத்தலின் முத்திரைகளைக் காணலாம்.

கவிஞர் சேரன் அவருடைய சுயசரிதையை ஒரு பதிப்பகம் வெளியிட முன்வந்ததைப்பற்றி ஒருமுறை சொன்னார். அது ஈழப்போர்ச்சூழலில் அவருடைய இளமைக்கால வாழ்க்கையின் விவரிப்பு. ஆனால் குறிப்பிட்ட அளவுக்கு பாலுறவுச்சித்தரிப்பு இருந்தாகவேண்டும் என்றனர் திருத்தர்கள். “அந்தவயசிலே நம்ம ஊரிலே என்ன பாலுறவு? வேண்டுமெண்டால் மாஸ்டர்பேட் பண்ணினதை எழுதிக்குடுக்கலாம் எண்டு சொன்னேன்” என்று சேரன் என்னிடம் நகைத்தார்.

நியூயார்க் டைம்ஸ் கதைகள் பெரும்பாலும் ஒரே வடிவில் இருப்பதை சிங்கப்பூருக்கு வந்திருந்த ஒரு   திருத்தரிடம் சொன்னேன். அவர்கள் நீளம், மொழிநடை, வடிவம், உணர்வுநிலை ஆகிய நான்கிலும் தெளிவான இலக்கணத்தை வைத்திருக்கிறார்கள் என்றும் ஆசிரியர்குழுவால் வெட்டித்தொகுக்கப்பட்டு, மறுபடைப்பு செய்யப்பட்டே கதைகள் வெளியாகும் என்றும் அவர் அங்கே பணியாற்றியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எழுத்தாளரை விட பதிப்பாளர்களின் ஆதிக்கம் ஓங்கிவிட்டது. பதிப்பாளர்கள் எழுத்தாளர்களை நடத்துகிறார்கள். அவர்கள் திருத்தர்களின் வழியாக நூல்களின் அமைப்பை, மொழியை வடிவமைக்கிறார்கள். அதில் அபாரமான தொழில்நுட்பத்தேர்ச்சியை அடைந்தும் விட்டார்கள் .ஏனென்றால் நூல்தயாரிப்பு கார்தயாரிப்பு போன்று ஒரு பெருந்தொழில் இன்று. அது தேர்ச்சியை கட்டாயமாக்குகிறது.

விளைவாக சராசரியான நூல்களின் தரம் மிக அதிகமாகிவிட்டது.  வாசிப்புத்தன்மை உறுதிசெய்யப்படுகிறது. ஆனால் புனைவிலக்கியம் நாளுக்குநாள் சரிந்துவிட்டிருக்கிறது. ‘பெஸ்ட்செல்லர்’ படைப்புக்கும் இலக்கியத்திற்கும் இடையேயான வேறுபாடு அங்கே அழிந்துவிட்டது. படைப்பில் அந்தரங்கக்குரல் ஒலிப்பது, அந்தரங்கமான கனவுகளின் அளவுக்கே சுதந்திரமும் மீறலும் கொண்டிருப்பது அருகிவருகிறது. உலக இலக்கியப்பரப்பில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் முக்கியத்துவம் இழந்து வருவதற்கான காரணம் இதுவே, பதிப்ப்பகம் என்னும் பெரும் உற்பத்திநிலையங்களின் தரப்படுத்தல்.

இந்தியாவில் ஆங்கிலப் பதிப்பாளர்கள் இதை ஆரம்பித்தனர். பெருமளவில் பயனுறு நூல்களை அச்சிட்டு சந்தைக்குக் கொண்டுவர இம்முறை உதவியானது. அதுவே இன்று அவர்களால் இலக்கியநூல்களுக்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆசிரியரின் அனுமதி இல்லாமல் எழுதிச்சேர்ப்பது மிகச்சாதாரணமாக நிகழ்கிறது. ஒப்பந்தங்களில் எழுத்தாளர் content provider என்றே குறிப்பிடப்படுகிறார்.

தமிழில் இன்று இது மெல்ல ஆரம்பித்துள்ளது என நினைக்கிறேன். இதற்கு தொடக்கமிட்டது க்ரியா பதிப்பகம். இமையத்தின் ஆறுமுகம் நூலின் முன்னுரையில் ‘க்ரியாவின் மொழிக்கொள்கையின்படி இந்நாவலை இமையத்தை  எங்களுடன் மாதக்கணக்கில் அமரச்செய்து மறுஆக்கம் செய்தோம்’ என்று ஒரு வரி இருக்கும். அன்றே அதற்கு எதிராக மிகக்கடுமையான எதிர்வினையை நான் பதிவுசெய்திருக்கிறேன். இது ஓர் வன்முறை என்பதே என் எண்ணம்.

புனைவல்லாத நூல்கள், கேளிக்கை எழுத்துக்களுக்கு ‘சராசரி’ திருத்து உகந்ததுதான். இலக்கியப்படைப்புகளுக்கு அது அழிவையே அளிக்கும். இலக்கியவாதியின் தனித்தன்மையை முழுமையாக அறிந்து, அவனுடன் அந்தரங்கமாகப் பயணிக்கும் திருத்தர் அதற்குத்தேவை. அவர் வழிநடத்துவதில்லை, எதிர்வினையாற்றுகிறார். அவர் எழுத்தாளன் தன்னைப்பார்ப்பதற்கான ஓர் ஆடி, அவ்வளவுதான்

ஜெ

அஞ்சலி: எம்.எஸ்
“கெரகம்!”
எம்.எஸ் – பாராட்டுவிழா. 2003
முந்தைய கட்டுரையாக்கை
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54