வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 4

bl-e1513402911361அஸ்தினபுரியிலிருந்து விகர்ணனும் அவன் துணைவி தாரையும் உடன்பிறந்தான் குண்டாசியுடன் சம்பாபுரிக்கு வந்திருக்கும் செய்தியை முன்புலரியில் கதிரவன் ஆலயத்திற்கு செல்லும்போதுதான் விருஷாலி அறிந்தாள். தேரில் செல்லும்போதுதான் அணுக்கச்சேடி ஒவ்வொரு செய்தியாக அவளிடம் சொல்வது வழக்கம். சூழ்ந்தமைந்த அன்னையரை வழிபட்டு, கதிர்முகம் எழுகையில் தாமரை மலர்களை படைத்து நாளவனை வணங்கும்பொருட்டு அவள் உள்முற்றத்தில் இறங்குகையில் அவளைக் காத்து ஹரிதர் நின்றிருந்தார். உடன் துணையமைச்சர் துங்கரும் இருந்தார்.

“இன்று ஏன் அமைச்சர் ஆலயத்திற்கு வந்துள்ளார்?” என்றாள். சேடி “ஏதேனும் தனி வழிபாடாக இருக்கும், அரசி” என்றாள். “அவர்கள் முன்புலரியிலேயே எரிகடன் ஓம்பவேண்டிய பொறுப்புள்ளவர்களல்லவா?” என்றாள். “ஆம், இங்கு வருவதென்றால் அதற்கு முன்னரே அதை முடித்திருப்பார்” என்றாள் சேடி. கைகூப்பி அருகணைந்து முகமனுரைத்த ஹரிதரை உளத்திலெழுந்த குழப்பம் முகத்தில் தெரியாமல் நோக்கி மறுமுகமன் உரைத்து அவள் நின்றாள். “ஆதவனை வணங்கி மீள்க அரசி, நான் காத்திருக்கிறேன்” என்றார் ஹரிதர்.

ஆலயத்தில் நுழைந்த பின் எண்ணங்களை முற்றொதுக்கி விழிகளில் மட்டும் சித்தத்தை நிறுத்தி வழிபட அவள் கற்றிருந்தாள். முதற்கதிர் எழும் பொழுதில் நாளவன் ஆலயத்தில் பிறிதெங்குமிலாத மெல்லிய பொன்னிறம் ஒன்று உருவாகும். செந்நிறக் கற்களால் கட்டப்பட்ட ஆலயத்தின் அனைத்துத் தூண்களும் பொன் என மின்னத் தொடங்கும். வானிலிருந்து தொங்கும் செவிக்குழைபோல ஆலயத்தின் தலைக்கோபுரம் ஒளிகொள்ளும். ஒவ்வொன்றும் உருமாறி பொன்னென்றாகும். அக்கணம் அவள் வாழ்வின் நாளென்றும் தொடரும் அனைத்து செயல்களுக்கும் பொருள் கூட்டுவது. ‘பொன் எனப் பிறந்து வெள்ளியென ஒளிர்ந்து, பொருளென்றாகி பயனென்று கனியும் பருப்பொருட்களால் ஆனது இப்புவி’ என்று முன்பு அவளுடன் வந்த விறலி ஒருமுறை பாடினாள்.

பதினான்கு ஆண்டுகளாக அந்த வரி இயல்பாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்து வராமல் நாளவன் ஆலயத்தில் அவள் இருந்ததே இல்லை. தூண்களிலும் மேலே தாங்குவளைவுகளிலும் செதுக்கப்பட்டிருந்த கல்மலர்கள் அவ்வொளியில் இதழ்மென்மை கொள்கின்றன. காற்றடிக்கையில் நெகிழ்ந்தசையுமோ என விழிமாயம் கூட்டுகின்றன. அருகணைந்தால் நறுமணம் கொள்ளுமோ என எண்ணி உளமெழச் செய்கின்றன. ஒவ்வொரு முறை பார்க்கையிலும் அவ்விந்தையால் அவள் ஆட்கொள்ளப்பட்டு நின்றிருப்பாள். “கதிர் தொட்டு மலைகள் மலரடுக்குகளாக ஆவதைக் காண நீங்கள் இமயமலைக்கு ஒருமுறை செல்ல வேண்டும், அரசி” என்றாள் முதுசேடி காளி ஒருமுறை. “இளநீலத் தாமரை மலரொன்றுக்குள் நாம் நின்றிருப்பதுபோலிருக்கும். மலையடுக்குகள் செந்தாமரை என எழுந்து பொற்றாமரை என பொலிந்து கண்நிறைப்பதை அங்கு காணலாம்.”

“கண்ணுக்கு காட்சிகளை மட்டுமே தெய்வங்கள் அளித்துள்ளன என்பது ஓர் எளிய உலகியல் அறிதல் மட்டுமே. காட்சி மயக்கங்களே இப்புவியில் காட்சிகளைவிட மிகுதி. இங்கு வாழ்வதற்கும் பெருகுவதற்கும் போரிடுவதற்கும் மட்டுமே காட்சிகள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன. இங்குள்ளவற்றுக்கு அப்பால் சென்று அறியவேண்டியன அனைத்தும் காட்சி மயக்கங்களாகவே நம்மை சூழ்ந்துள்ளன” என்றாள் காளி. “அரசி, காட்சி மயக்கம் ஒரு மறுமெய்மை. இங்குள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் நாற்களத்தில் வைக்கப்பட்ட புரவியும் யானையும் படைவீரனும் அரசனும் அரசியும்போல இவற்றுக்குமேல் ஒன்றைச் சுட்டி நிற்கும் சிறுகருக்கள். இப்புவியின் பருப்பொருட்பெருக்கே பிறிதொன்றை சொல்லும் பொருட்டு வைக்கப்பட்ட குறிகள்தான். இது இறைச்சிப் பொருள் தாங்கி நிற்கும் பெருங்காவியம். இங்குள அனைத்தும் இங்குறைந்து அங்கும் ஆகி எங்குமென நிற்கும் ஒன்றைக் காட்டும் பொருட்டே இவ்வாறு உருக்கொண்டு விழிமுன் இலங்குகின்றன.”

“இவை இவை என விழிதொட்டு வடிவம் வகுத்து, பெயரிட்டு பொருள் ஏற்றி, பயன் கற்பித்து நாம் ஒவ்வொன்றையும் தனித்தெடுத்து சித்தத்தில் அடுக்கிக்கொள்கிறோம். ஒன்று பிறிதை நமக்குரிய பயன் பொருட்டே சந்தித்து இணைகிறது. நம்மை மீறி இங்குள ஒன்று தான் பிறிதொன்றென மயங்கும் தருணத்தில் நாம் இழப்பது சித்தம் கொண்டுள்ள அப்பகுப்பையே. ஒன்று பிறிதொன்றாகும் எனில் அனைத்தும் ஒன்றென்றாகும். ஒவ்வொன்றையும் இணைத்து அனைத்துமென்றாகும். விழிமயக்குகள் நம்மை மேலும் அதை அணுகவே வைக்கும்.”

“விழிமயக்கென்பது முழுதறிவுக்குச் செல்வதற்கான பாதை. விழிமயக்கு கவிதையிலெழும் சொல்மயக்குபோல் சொல்லப்படாத பொருள் வெளி நோக்கி நம்மை இழுத்துச் செல்வது. சொல்லப்படாத ஒன்று சொல்லப்பட்ட அனைத்திலும் எஞ்சுவது, பலவென்றான அனைத்திலும் ஒன்றென்றாகி நிற்பது. ஏனெனில் அறியும் ஒன்றென நிற்குமளவுக்கு அது சிறிதல்ல. உணரும் வெளியென விரியவே அதனால் இயலும்.” காளியின் சொற்களில் இருந்து அவள் சித்தம் விடுதலை கொள்வதேயில்லை.

கருவறைக்குள் எழுந்து ஓங்கி நின்ற சூரியனின் கல்சிற்பத்தை ஒவ்வொரு நாளும் கால் தொட்டு தலை வரை என நூற்றெட்டு முறை விழியுருகி நோக்கி உயிர் அளித்து உளம் நிரப்பிக்கொண்டாள். அதன் கரிய பெருந்தோள்களை, இரு பலகை மணிமார்பை, சிற்றிடையை, வலுத்தொடைகளை, முழங்கால் மூட்டுகளை, பதிந்த பாதங்களை பார்க்கும்தோறும் கிளர்ந்தெழும் ஒன்றினால் மீளமீள அவள் தன்னை கண்டடைந்துகொண்டிருந்தாள்.

வெயில் வெள்ளி கொள்ளத் தொடங்குகையில்தான் அவள் வெளியே வந்தாள். அப்போது வாயிலுக்கு அருகே ஹரிதர் நின்றார். அவள் அணுகியதும் தலைவணங்கினார். “தங்களை சந்திக்கும்பொருட்டே இங்கு காத்து நின்றேன், அரசி” என்றார். அவர் நின்றிருப்பதை அப்போதுதான் நினைவுகூர்ந்தவள் என அவள் மீண்டும் வியப்பும் தடுமாற்றமும் கொண்டாள். “ஆம், காலையிலேயே இங்கு தங்களை பார்த்தேன்” என்றாள். “தாங்கள் இத்தனை பொழுது இங்கு வழிபடுவீர்கள் என்று எனக்குத் தெரியாது, அரசி” என்று ஹரிதர் சொன்னார். “பொறுத்தருள்க, அமைச்சரே! இந்தப் பொழுதே என் வாழ்வில் நிறைவு தருவதாக உள்ளது” என்றாள். “ஆம், இந்நகரை ஆளும் முதன்மைத் தெய்வம் கதிரோன். அனலினூடாக நாங்கள் முதலில் அவியளிப்பதும் அவனுக்கே” என்றார். அவள் அவர் மேலே சொல்வதற்காக காத்து நின்றாள்.

ஹரிதர் இயல்பான குரலில் “அஸ்தினபுரியிலிருந்து இளைய கௌரவர்கள் விகர்ணனும் குண்டாசியும் நேற்று பின்னிரவில் நகர்புகுந்தார்கள். அவர்கள் தங்களை சந்திக்க விழைகிறார்கள். அவர்களுடன் விகர்ணனின் துணைவி தாரையும் வந்துள்ளார்” என்றார். விருஷாலி “அரசியர் பிறநாடு செல்வதற்குரிய முறைமைகள் பல உள்ளன. முன்னரே முறைப்படி அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும் அல்லவா?” என்றாள். “ஆம், ஆனால் இளைய அரசி முறைமைகளை பொருட்படுத்தாமல் இருப்பதற்கு புகழ்பெற்றவர்” என்று ஹரிதர் சொன்னார். “அத்துடன் அவர் தன் கணவருடன் வந்திருப்பதனால் அதை பெரிய முறைமீறல் என்று கொள்ளமாட்டார்கள்.”

“நான் அவர்களை எங்கு சந்திப்பது?” என்று விருஷாலி கேட்டாள். “அரசமுறைப்படி சந்திப்பதென்றால் நான் அவைக்கு வரவேண்டும். அஸ்தினபுரியின் சிற்றரசர், சிற்றரசியாக அவர்கள் வந்திருப்பதனால் தாங்கள் முறைப்படி அவைமாளிகையில்தான் சந்திக்கவேண்டும். ஆனால் இச்சந்திப்பு தங்கள் மைந்தர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்பட்டால் போதும் என அவர்கள் எண்ணுகிறார்கள். புலரியிலேயே தங்களை சந்தித்து உரையாடிவிட்டு மைந்தரையும் அரசரையும் சந்திக்கவேண்டுமென்று விகர்ணன் சொன்னார்” என்றார் ஹரிதர். “சொல்லுங்கள்” என்றாள் விருஷாலி. “முறைப்படி தாங்கள் இன்று வேறெங்கும் செல்வதற்கு நெறியில்லை. ஆனால் இந்த ஆலயத்திற்கு வருவது அன்றாட வழக்கம். தாங்கள் சற்று நேரம் இங்கேயே பொறுத்திருக்க முடியுமென்றால் அவர்களை இங்கு வரச்சொல்வேன்.”

விருஷாலி “ஆம், நின்றிருக்கிறேன்” என்றாள். “இந்தச் சுற்றுவட்டப்பாதையின் எல்லையில் துங்கையன்னையின் ஆலய முகப்பில் உள்ள மண்டபம் சற்று பெரிது. அங்கு நீங்கள் அவர்களைச் சந்திக்கலாம்” என்றார் ஹரிதர். “நன்று, வரச்சொல்க!” என்றபின் அவள் திரும்பி சேடியிடம் “நம்முடன் வந்த காவலரிடம் நான் அகத்தளம் திரும்ப சற்று பொழுதாகும் என்று சொல்லி அனுப்பிவிடு” என்றாள். ஹரிதர் “அவர்கள் மிக அருகேதான் தங்கியிருக்கிறார்கள். காலையிலேயே எழுந்து நீராடி ஆடையணிந்து சித்தமாக இருக்கிறார்கள். தாங்கள் மண்டபத்தில் காத்திருக்கலாம். காலை உணவாக இங்கு படைத்த அப்பங்களையும் பழங்களையும் உண்ணுங்கள். உண்டு முடிப்பதற்குள் அவர்கள் இங்கு வந்துவிடுவார்கள்” என்றார்.

bl-e1513402911361விகர்ணனின் முகத்தை நினைவிலிருந்து மீட்டெடுக்க விருஷாலியால் இயலவில்லை. அவனைப் பார்த்த நினைவு எழுந்ததே ஒழிய முகமென்று எழுந்தது துரியோதனனின் தோற்றம்தான். கௌரவர்கள் அனைவரும் ஒருவரே என்றும் ஒற்றைப்பெருக்கின் அலைகளே என்றும் எப்போதும் அவளுக்கு தோன்றியிருந்தது. அவளால் துச்சாதனனையும் துர்முகனையும் துச்சலனையும் தனித்து அறிய முடிந்ததில்லை. உண்மையில் அவ்வெண்ணம் விறலியராலும் சூதராலும் பாடிப் பாடி நிறுவப்பட்டது என்றும் தோன்றியது. அதை ஒரு முறை சொல்ல கர்ணன் சிரித்தபடி “ஆம். அவர்கள் ஓருடலும் ஓருள்ளமும் மட்டுமல்ல, ஆன்மா ஒன்றென்றே கொண்டவர்கள்” என்றான். “அவர்களின் துணைவியருக்குக்கூடவா?” என்று அவள் கேட்டாள். “அவர்களிடம் இருக்கும் கீழ்மையை மட்டும் ஒருவேளை துணைவியருக்கு காட்டுகிறார்களோ? கீழ்மை ஒவ்வொருவரிலும் ஒன்று” என்று கர்ணன் சொன்னான்.

ஆனால் குண்டாசி மட்டும் அவர்களில் தனித்து தெரிந்தான். அவனை கௌரவ நிரையைச் சார்ந்தவன் என்று ஒருபோதும் அவளால் எண்ண முடிந்ததில்லை. நீண்ட நாள் மதுப்பழக்கத்தால் மெலிந்து, தோள்கள் கூன் விழுந்து முன்வளைந்தமையால் புயம் மெலிந்த கைகள் தொங்கி ஆட, அதிர்ந்துகொண்டிருக்கும் விரல்களும் வெளுத்து கருத்த உதடுகளும் பல்லுதிர்ந்த வாயும் ஒட்டிய கன்னங்களுக்கு மேல் குழிக்குள் சிவந்து கலங்கிய கண்களுமாக நடந்துவரும் குண்டாசி அயல் நிலத்திலிருந்து வந்து நகர் நடுவே திகைத்து நிற்கும் காட்டு மனிதனின் மெய்ப்பாட்டை எப்போதும் கொண்டிருந்தான். “என்ன ஆயிற்று அவனுக்கு?” என்று கர்ணனிடம் கேட்டபோது “நன்றென ஒன்று நிகழ்ந்தது. அதை பற்றி மேலேற அவனால் இயலவில்லை. நிலைக்காத ஊசல்” என்று கர்ணன் சொன்னான். “என்ன அது?” என்று அவள் மீண்டும் கேட்க “அதற்கப்பால் அதைப்பற்றி எதுவும் சொல்ல இயலாது” என்றான்.

குண்டாசி அவர்கள் அஸ்தினபுரியின் அரண்மனையிலிருக்கையில் அவ்வப்போது கர்ணனை பார்க்க வருவான். ஒவ்வொரு முறையும் அவளைப் பார்த்ததும் வணங்கி முகமன் உரைப்பான். அவன் முதல் நோக்கில் அவளில் ஒவ்வாமையை எழுப்ப அவள் தயங்கி முகம் சுளித்து நோக்கு விலக்கி நிற்பாள். அத்தருணத்தை எப்போதும் ஓர் இளிவரல் நடிப்பென மாற்றிக்கொள்ள அவனால் இயன்றது. கைகளை தலைக்குமேல் கூப்பி “அன்னையே, அடிபணிகிறேன்” என்று கூவுவான். வாய்பொத்தி உடல் வளைத்து நின்று “தங்களை சந்திக்கும் பேறு பெற்றேன்” என்பான். ஒருமுறை மண்டியிட்டு நிலத்தில் விழுந்து தரையில் தலை வைத்து “தங்கள் அடி என் தலைமேல் படுகையில் மீட்பு பெறுவேன், அன்னையே” என்றான். ஒருமுறை அஞ்சி அருகே நின்ற தூணில் பற்றி ஏற முயன்றான்.

அவன் தன்னை நகையாடுகிறான் என்றே அப்போது அவளுக்கு தோன்றியது. ஒருமுறை அதை காளியிடம் சொன்னபோது “அல்ல அரசி, களிமகன்களின் உள்ளம் முற்றிலும் வேறுபட்டது. அவர்கள் பித்தர்களையும் மந்தர்களையும்போல பிற மானுடருடன் தங்களை சேர்த்துக்கொள்ள எப்போதும் முயல்கிறார்கள். தங்களை விலக்கிவிட வேண்டாம் என்றுதான் அவர்கள் ஒவ்வொரு செயலிலும் மன்றாடுகிறார்கள். ஆனால் இரக்கமின்றி உலகம் அவர்களை விலக்கிக்கொண்டும் இருக்கிறது. அத்தருணத்தை வெல்லும் பொருட்டு பேரன்பை காட்டுகிறார்கள், நெகிழ்கிறார்கள், பணிகிறார்கள். அதற்கும் அப்பால் சென்று தங்களை அவைக்கோமாளிகளாக ஆக்கிக்கொண்டு நம்மை நகைக்க வைக்கிறார்கள். அதனூடாக நம்முடன் அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்” என்றாள்.

குண்டாசி கர்ணனின் அவைக்குள் நுழைந்து ஒவ்வொரு முறையும் முன்பு நிகழாத ஒன்றை நிகழ்த்துவான். கைகூப்பியபடி கால்களில் விழுவதுண்டு, அறை மூலையில் சென்றமர்ந்து விசும்பி அழுவதுண்டு, ஓலையையோ கணையாழியையோ எடுத்து உரத்த குரலில் கூவியபடி அவன் முன் வீசுவதுண்டு. ஒருமுறை அவன் பின்னால் நின்று கர்ணனின் தோள்களைத் தழுவி முத்தமிடுவதை அவள் கண்டாள். மடியில் தலை வைத்து அமர்ந்து கண்ணீர் விடுவதை கண்டிருக்கிறாள். ஒருமுறை அருகறையில் அவள் இருக்கையில் உரத்த குரலில் அழுகை ஓசையைக் கேட்டு கதவு திறந்து உள்ளே சென்றாள். குண்டாசி தரையில் கர்ணனின் முன் அமர்ந்து இரு கைகளாலும் தலையை ஓங்கி ஓங்கி அறைந்து அழுதுகொண்டிருந்தான். தோள்கள் குலுங்க இடக்காலும் இடக்கையும் இழுபட்டு துடிதுடிக்க வாயும் கண்ணும் இடப்புறமாக வலித்திருக்க அவனில் நிகழ்ந்த அழுகையைக் கண்டு அவள் திகைத்து சுவரோடு ஒட்டிக்கொண்டாள். பின்னர் தன் கண்களில் நீர் வழிவதை உணர்ந்தாள்.

கர்ணன் இரு கைகளையும் கட்டி விழியசையாமல் அவனை நோக்கிக்கொண்டிருந்தான். அழுது ஓய்ந்து மெல்ல பெருமூச்சுகளும் சீறல்களுமாக மீண்டு மேலாடையால் முகத்தை அழுத்தி துடைத்தபின் கையூன்றி குண்டாசி எழுந்தான். “சென்று வருகிறேன், மூத்தவரே. நீங்கள் நலமாக வாழவேண்டும்” என்று வாயிலை நோக்கி நடந்தான். அப்போதேனும் கர்ணன் ஏதேனும் சொல்வான் என்று விருஷாலி எதிர்பார்த்தாள். அவனிடமிருந்து ஒரு சொல்லும் எழாமை கண்டு முன்னால் சென்று “இளையோனே, நில்! கண்ணீருடன் இவ்வறையை நீ நீங்குவது துயருறச் செய்கிறது” என்றாள். அவன் திரும்பி வணங்கி “இல்லை அன்னையே, தாங்கள் இச்சொற்களைக் கேட்கும் பேறு பெற்றேன். இத்தருணம் நிறைவுற்றது. இத்துயரையும் இவ்வெறுமையையும் இதற்குப்பின் எஞ்சும் களிப்பையும் நான் ஏழு மொந்தை மதுவால் மட்டும்தான் நிரப்பமுடியும். இல்லையேல் இறந்துவிடுவேன்” என்றான்.

அவள் சொல்லின்றி நிற்க மீண்டுமொருமுறை வணங்கி சுவர் பற்றி தள்ளாடி நடந்து சென்றான். அவள் திரும்பிச்சென்று கர்ணனிடம் “ஒரு சொல் சொல்லியிருக்கலாமல்லவா?” என்றாள். “அவனிடம் சொல்ல என்னிடம் ஒரு சொல்லும் இல்லை” என்று கர்ணன் சொன்னான். “உங்கள் ஆறுதல் சொற்களுக்காகவே அவன் இங்கு வருகிறான். ஒருமுறைகூட நீங்கள் அவனை ஆற்றுப்படுத்தியதில்லை” என்றாள். கர்ணன் “அல்ல, அவன் தன்னை என்னிடம் நோக்கவே இங்கு வருகிறான்” என்றான். அவள் திகைப்புடன் “ஏன்?” என்று கேட்டாள். “அவன் அறிவான் எனக்குள்ளும் அவனுடைய ஒரு துளி இருப்பதை. யார் கண்டார், ஒருநாள் நானும் அவனைப்போல ஆகக்கூடும்” என்று பெருமூச்சுவிட்டான். “இது என்ன பேச்சு?” என்று அவள் சீறினாள். கர்ணன் நகைத்தபடி “நன்று, அவ்வாறு நிகழாதிருக்கட்டும்” என்று எழுந்தான்.

பின்னர் ஒருமுறை அவள் நோக்கியிருக்க சம்பாபுரியின் அரசஅவைக்கு அழைத்துவரப்பட்ட கர்ணன் இரு ஏவலரின் தோள்களையும் கைகளால் தாங்கியபடி கால்கள் ஆற்றலிழந்து தரையில் இழுபடும் ஓசையுடன் வந்து தாங்கியோர் அவன் எடையால் நிகரிழக்க தள்ளாடி நின்றான். அருகிருந்த தூணைப்பற்றி கூந்தல் இழைகள் முகத்தில் சரிய தலைகுனிந்து நின்றபின் திரும்பி ஏவலரிடம் செல்வோம் என்று கைகாட்டினான். மேலுமிரு காவலர்கள் தாங்கிக்கொள்ள அலைகளில் ஊசலாடிச் செல்லும் பெருங்கலம்போல சென்றான். அப்போது அவள் இயல்பாக குண்டாசியை நினைவுகூர்ந்தாள். அந்நினைவுமீது தான் அறிந்த அனைத்துச் சொற்களையும் உணர்வுகளையும் கொண்டு மூடி அப்பால் தள்ளினாள். ஆனால் பல நாட்களுக்கு அறியாத ஏதோ ஒன்று உள்ளே எழுந்ததுபோல உள்ளம் திடுக்கிட்டுக்கொண்டே இருந்தது.

விகர்ணன் மூன்று முறை வெவ்வேறு செய்திகளுடன் சம்பாபுரிக்கு வந்திருந்தான். ஒவ்வொரு முறையும் அவனுடன் சுஜாதனும் வருவதுண்டு. தொலைவில் துரியோதனன் துச்சாதனனுடன் வருவதாகவே அதை உளம் உணரும் கணத்தில் அது துரியோதனன் அல்ல என்று உளம் தெளியும். கௌரவர் என்னும் திரளில் இருந்து விகர்ணன் என்னும் பெயரும் அடையாளமும் கொண்டு அவன் எழுந்தபின் அவனை வகுத்துக்கொள்ள முடியாத திகைப்பே எப்போதும் இருக்கும். கௌரவரிடமில்லாத ஒன்று அவனிடம் எப்போதும் இருப்பதை அப்போது உணர முடியும். அவன் விழிகள் கௌரவ நூற்றுவருக்குரியதல்ல என்று அவள் உணர்வதுண்டு. அவை பாண்டவரின் விழிகள் என்று ஒருமுறை தோன்றியது. இவ்வெண்ணங்களுக்கு ஏதேனும் பொருள் உண்டா என்று அவள் எண்ணினாள். பின்னர் ஒருமுறை வேறேதோ எண்ணத்தினூடாக செல்லும்போது விகர்ணன் நகுலனைப்போல என்று தோன்றியது.

காளியிடம் “விகர்ணனை பார்க்க நகுலன் போலிருக்கிறார் அல்லவா?” என்றாள். “இருவர் விழிகளும் ஒன்றே” என்றாள் காளி. “மெய்யாகவே நானும் அதைத்தான் நினைத்தேன்” என்றாள் விருஷாலி. காளி புன்னகைத்தாள். “விலகி நின்றிருப்பதன் பெருந்துயர் கொண்டவை அவர்கள் மூவரின் விழிகள். தருக்கி விலகியவர் விகர்ணன், விலகியதனால் உடைந்தவர் குண்டாசி. கள்ளமின்மையால் விலகுவது மட்டுமே இன்பம் அளிக்கிறது. சுஜாதன் அக்களிப்புடன் மண்ணில் மறைபவர்” என்றாள். அச்சொற்களை அவள் மீளமீள நினைத்து விரித்துக்கொண்டதுண்டு. ஒருவரை பிறிதொருவராக்கி எண்ணிப்பார்க்கையில் எழும் திகைப்பை சொற்களாக வடிக்க அவளால் இயலாது. “அப்படியென்றால் சகதேவன்?” என்று அவள் கேட்டாள். “அறிந்தபின் கடந்து அறிவின்மைகொள்வதன் உவகையில் இருப்பவர்” என்றாள் காளி.

அஸ்தினபுரியின் இந்திரவிழவில் வில்லுடன் எழுவதற்காக அரசரின் அழைப்பைக் கொண்டு அம்முறை விகர்ணன் வந்திருந்தான். அவனும் சுஜாதனும் பேசிக்கொண்டிருக்கையில் மீசையைச் சுழற்றியபடி தாழ்ந்த கண்களுடன் அசைவிலாதமர்ந்து கர்ணன் அதை கேட்டுக்கொண்டிருந்தான். “அஸ்தினபுரி அஞ்சிக்கொண்டிருக்கிறது, மூத்தவரே. அந்நகருக்குள் அனைவரின் உள்ளங்களின் ஆழத்தில் கொடுங்கனவொன்றின் நொதித்துளியென இளைய பாண்டவர் அர்ஜுனர் இருந்துகொண்டிருக்கிறார். எங்கோ அவர் தன் வில்திறனை பெருக்கிக்கொண்டிருக்கிறார், பேருருக்கொண்டு வஜ்ரமென வில்லை ஏந்தி நகர் முன் வந்து நின்றிருக்கப்போகிறார் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இந்திரவிழவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டிருக்கிறது என தாங்கள் அறிந்திருப்பீர்கள். இம்முறை அது ஒரு வெற்றுச் சடங்கென்றே நிகழ வாய்ப்பு மிகுதி. ஆகவேதான் தாங்கள் வரவேண்டுமென்று அவையினரும் அரசரும் எண்ணினார்கள். தங்கள் வில்திறன் அங்கு எழும்போது அஸ்தினபுரி மீண்டும் நம்பிக்கை கொள்ளும். தாங்களன்றி அஸ்தினபுரி சார்ந்திருக்க எவருமில்லை. இது தங்கள் கடன்” என்றான்.

கர்ணன் “நான் அங்கு இப்போது வரும் நிலையில் இல்லை, இளையோனே” என்றான். “தாங்கள் வந்தாகவேண்டும். தங்களை அழைத்து வருவேன் என்று மூத்தவரிடம் சொல்லித்தான் இங்கு வந்தேன்” என்றான் சுஜாதன். “தாங்கள் இல்லையேல் அஸ்தினபுரி வில்லற்ற கை என்று தோன்றும், மூத்தவரே.” விகர்ணன். “தங்களை அழைத்து வரும்படி என்னிடம் துரோணரே சொன்னார்” என்றான். கர்ணன் அவனை நோக்கி திரும்பி “ஏன், சூதன் மகனின் வில்திறன் அவருக்கு இப்போது தெரிகிறதா?” என்றான். “தன் முதன்மை மாணவனுக்கு எதிராக சூதனை நிறுத்த அவருக்கு இப்போது மறுப்பில்லயோ?” விகர்ணன் “அவர் அஞ்சிக்கொண்டிருக்கிறார். இன்று அவர் எண்ணுவதெல்லாம் தன் மைந்தனின் அரசைக் குறித்து மட்டுமே. பாஞ்சாலத்தை நீங்கள் எளிதில் வென்றதையே அவர் ஆறுதலென கொண்டிருக்கிறார்” என்றான்.

“தன் மைந்தனை அர்ஜுனனுக்கு நிகரான வீரன் என்றல்லவா அவர் எண்ணுகிறார்?” என்றான் கர்ணன். “ஆம், பதினான்கு ஆண்டுகளில் அர்ஜுனன் செல்லும் தொலைவும் அடையும் அம்புகளும் என்ன என்று அவருக்கு தெரியவில்லை. ஒருமுறை சிற்றவையில் பிதாமகருடன் சொல்லாடுகையில் நீங்கள் அஸ்வத்தாமரைவிட, பிதாமகரையும்விட ஒரு படி மேல் என்றார். பிதாமகர் சினத்துடன் ஏன் என்றார். ஏனென்றால் தவத்திறன் கொண்ட ஒருவரை நீங்கள் ஆசிரியரென பெற்றிருக்கிறீர்கள் என்றார் துரோணர். இவ்வுலகில் இலக்கு என ஏதுமில்லாதவர்கள் அடையும் வில்லறிதலே தனுர்வேதம் எனப்படும். பிற அனைத்தும் தனுர்சாஸ்திரமே என்று சொன்னார். பார்த்தர் அப்படி ஒரு தவத்தாரை சந்தித்து அம்புபெற்றார் என்றால் அனைவரையும் கடந்துவிடக்கூடும் என்று அவர் சொன்னபோது பிதாமகர் ஒன்றும் சொல்லாமல் தாடியை நீவிக்கொண்டிருந்தார்” என்றான் விகர்ணன்.

“அஸ்வத்தாமர் ஒவ்வொரு ஆண்டும் இந்திர விழவுக்கு வருகிறார். அவர் வில்திறன் கண்டு அஸ்தினபுரியின் மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால் அவரை அவர்கள் தங்களவர் என்று எண்ணவில்லை” என்றான் சுஜாதன். “நான் வந்தால் மட்டும் அவ்வாறு எண்ணுவார்களா? சூதன் எவ்வாறு அவர்களுக்கு அரசனாக தோன்றுவான்?” என்றான் கர்ணன். விகர்ணன் ஒருகணம் சொல்லின்றி அமைந்தபின் “தாங்கள் பொறுத்தருள்வீர்கள் என்றால் இதை நான் கூறியாகவேண்டும், மூத்தவரே. தாங்கள் இளைய பாண்டவரின் அதே உருவத்தோற்றம் கொண்டவர். களம் நின்று வில்லாடுகையில் சூழ்ந்திருக்கும் ஆயிரங்களில் ஒருவராக நின்று உங்களை பார்த்தால் இளைய பாண்டவரே வில்லுடன் எழுந்ததாக தோன்றும். பல தருணங்களில் அவ்வாறே வாழ்த்தொலிகள் எழுவதுண்டு” என்றான்.

கர்ணன் இகழ்ச்சியில் இதழ்கள் வளைய “நன்று. ஆனால் கூத்துமேடையில் பிறிதொருவனென மாற்றுருக்கொண்டு நடிப்பதற்கு எனக்கு ஆர்வமில்லை” என்றான். பின்னர் எழுந்துகொண்டு “அரசரிடம் சொல்லிவிடுங்கள், நான் வர இயலாது” என ஆடையை எடுத்துக்கொண்டான். அவன் திரும்ப சுஜாதன் ஓடிவந்து அவன் கைகளைப்பற்றி “மூத்தவரே, தங்களை அழைத்து வருவேன் என்று நான் சொன்னேன். தாங்கள் வந்தாகவேண்டும்” என்றான். “போரெனில் அழைக்காமலேயே வில்லுடன் வருவேன், இளையோனே” என்றபின் அவனை உடலோடு தழுவி “பருத்துக்கொண்டே வருகிறாய்” என்றான். “மூத்தவரே…” என்று சுஜாதன் கெஞ்ச அவன் கன்னத்தில் இருமுறை தட்டிவிட்டு கர்ணன் வெளியே சென்றான்.

விகர்ணன் அருகே அமர்ந்திருந்த விருஷாலியிடம் “தாங்கள் ஒரு சொல் உரைக்கலாகாதா, அரசி?” என்றான். “அரசுசூழ்தல் குறித்த செய்திகளில் எனக்கு உரைக்க ஒரு சொல்லுமில்லை” என்றபின் அவள் தலைவணங்கி சேடியிடம் தன் மேலாடையை சீர் செய்ய ஆணையிட்டாள். சுஜாதன் “அரசி, என் சொற்களை மூத்தவர் தட்டமாட்டார் என்று எண்ணியே இங்கு வந்தேன்” என்றான். விகர்ணன் “ஆம், ஆனால் அவர் உன்மேல் தந்தைக்குரிய அன்பு கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. தந்தையருக்கே உரிய முறையில் உனது சொற்களை மைந்தனின் குதலை என நடித்து தட்டிவிட்டுச் செல்கிறார்” என்றான். சுஜாதன் முகம் மலர்ந்து “ஆம், நான் தந்தையென்றே அவரை உணர்கிறேன்” என்றான்.

அணுக்கச்சேடியர் வாழையிலைகளில் கதிரோனுக்கு படைக்கப்பட்ட கனிகளையும் அப்பங்களையும் கொண்டுவந்தனர். “உணவருந்துக, அரசி. அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றாள் சேடி. அவள் அவற்றை உண்ணத் தொடங்கும்போதுதான் தாரை உடன் வருவதை நினைவுகூர்ந்தாள். அவள் முகமோ தோற்றமோ நினைவிலெழவேயில்லை. அவள் மச்சநாட்டவள் என்னும் செய்தி மட்டும் தொலைவில் எங்கிருந்தோ வந்தது. கௌரவ இளவரசியரும்கூட ஒற்றைப்பெருந்திரளாகவே விழிமயக்கு கொண்டிருந்தனர். அவர்களுக்கு முகமிருக்கவில்லை. வண்ண ஆடைகளின் அலைவும் சுழிப்புமென்றே எண்ணங்களில் எஞ்சினர். சம்படை? அவள் தெறித்து அப்பால் சொட்டிநின்ற ஒரு தனித்துளி. விருஷாலி பெருமூச்சுவிட்டாள்.

முந்தைய கட்டுரைகொடியை மதிப்பது
அடுத்த கட்டுரைஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ