திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு

evr

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இத்தலைப்பில் எழுதியுள்ள தங்களது இரண்டு கட்டுரைகளையும் படித்தவுடன் இக்கடித்தை எழுதுகிறேன்.

திராவிட இயக்கத்தின் பங்களிப்பை மதிப்பிட்டும் அதேசமயத்தில் ஒரு வெற்று பரப்பியமாக அது தமிழ் சமூக பண்பாட்டு தளத்தின் பின்னடைவிற்கு ஏற்படுத்தியுள்ள பின்னடைவுகளை கறாராக நிறுவியுள்ளீர்கள்.

தங்கள் வாசகனாக பெருமிதம் கொள்கிறேன் .

இப்போதுள்ள தேக்க நிலைகளிலிருந்து மீள்வதற்கான  இயக்கங்களை சமூகம் உருவாக்கிக்கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா?  இதுபற்றி தங்கள் சிந்தனை என்ன என்பதை அறிய விழைகிறேன் .

பாபுஜி

கரூர்

***

அன்புள்ள பாபுஜி,

எல்லா மக்கள் இயக்கங்களும் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் சில தேவைகளின் பொருட்டு உருவானவை. காலப்போக்கில் பிழைகளையும் சரிவுகளையும் சேர்த்துக்கொள்பவை. திராவிட இயக்கத்தின் வரலாற்றுத்தேவை இந்தியா தன்னாட்சியை அடையும் காலகட்டத்தில் உருவாகி வந்த அதிகாரத்தில் பிராமணரல்லா உயர்சாதியினருக்கான அதிகாரத்தைக் கோரிப்பெறுவது. பின்னர் அது பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரத்தை கோருவதற்கான களமாக ஆகியது. அதைப் பெரும்பாலும் சாதித்தும் விட்டது.

அதன் கட்டமைப்பிலுள்ள பிழை அது பிற்படுத்தப்பட்டோர் அரசியலை மட்டும் சார்ந்ததாக இருப்பதும் அதன்பொருட்டு வரலாற்றுத்திரிபுகளையும் மிகையுணர்ச்சிகளையும் காழ்ப்புகளையும் கட்டமைத்துக்கொண்டதே.

அது உருவாக்கிய முதன்மையான வரலாற்றுத்திரிபு என்பது திராவிட இனவாதம். திராவிடமொழிக்குடும்பம் என்ற ஊகத்தை ஒரு இன உருவகம் என மாற்றிக்கொண்டது.  இன்று திராவிட இனக்கோட்பாட்டை அது ஏறத்தாழ கைவிட்டுவிட்டது. அதற்கு மாற்றாக தமிழினம் என சொல்லத் தொடங்கியிருக்கிறது. இந்தியா என்னும் பண்பாட்டுவெளியில் இருந்து தமிழ்ப்பண்பாட்டை பிரித்து எதிர்நிலையில் வைக்கும் போலியான அறிவுத்தளம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதன் நீண்டகால அழிவுத்தன்மையை உணர்ந்தும்கூட அதைச்செய்கிறது. இப்பிழையே முதன்மையாகக் களையப்படவேண்டும். இனவாத, பிரிவினைவாத எண்ணங்களிலிருந்து அது விடுபடவேண்டும். நவீன ஜனநாயகம் என்பது அனைவரையும் ஒருங்கிணைக்கும் நவீன சமூகம் ஒன்றை முன்னால் காண்பது என உணரவேண்டும்.

அதன் விளைவாக தமிழர்வரலாறு, தமிழ்ப்பெருமை என்னும் மிகையுணர்ச்சிகளை உருவாக்கி நிலைநிறுத்துகிறது. அது வரலாற்றையும் பண்பாட்டையும் சமநிலையுடன் பார்க்கமுடியாதவர்களாக நம்மை ஆக்குகிறது. நமது மெய்யான பெருமைகளையே இந்தப் போலிப்பெருமை மறைத்துவிடுகிறது. நாம் கலை, இலக்கியம் ,சிந்தனை அனைத்திலும் தேங்கிநின்றிருக்கச் செய்கிறது. இம்மிகையுணர்ச்சிகள் களையப்படவேண்டும். யதார்த்தமொழியில் பேச ஆரம்பிக்கவேண்டும்

போலிவரலாறு, மிகையுணர்ச்சி இரண்டும் காழ்ப்புகளை உருவாக்குகின்றன. திராவிட அரசியலின் சாரம்சமாக பிராமண வெறுப்பும், வடவர் வெறுப்பும் உள்ளது. ஆழத்தில் தலித் வெறுப்பு. இவ்வெறுப்புகளிலிருந்து அது விடுபட்டு நேர்நிலைப் பார்வைகொண்டதாக ஆகவேண்டும். காழ்ப்புகள் நீண்டகால அளவில் எதிர்விளைவுகளையே உருவாக்கும். காழ்ப்பின்மொழியிலேயே இன்றும் திராவிட இயக்கம் பேசிக்கொண்டிருக்கிறது. அது களையப்படவேண்டும்

காலப்போக்கில் உருவான பிழைகள் தனிநபர் துதி, குடும்ப ஆட்சி, தொண்டர்அரசியல், ஊழல். மேலிருந்து கீழேவரை திராவிட அரசியல் என்பது தனிநபர்களை மிதமிஞ்சி துதிப்பதும் வாரிசுகளை முன்னிறுத்துவதும்தான். மாபெரும் தொண்டர்படையை உருவாக்கி அனைவருக்கும் ஊதியம் அளித்தாகவேண்டிய நிலை அதை ஊழலில் ஆழ்த்துகிறது. நவீன ஜனநாயகத்திற்கு எதிரானவை இந்த அம்சங்கள். அது செயல்பாட்டாளர்களை முன்னிறுத்தவேண்டும். தொண்டர்களின் பெருக்கு நவீன ஊடகங்கள் மிகுந்துள்ள இந்தக்காலத்திற்குத் தேவையில்லை. ஊழலை முற்றொழிப்பது ஜனநாயகத்தில் இயலாது. ஆனால் இந்த மாபெரும் தொண்டர்படை பல லட்சம்பேர் ஊழல் செய்ய வழிவகுக்கிறது. அதை ஒழிக்கலாம்

ஓர் இயக்கம் அப்படியே நீடிக்கவேண்டும் என்பதில்லை. அது வேரில் இருந்து முளைத்தெழுந்து பிறிதொன்றாகி, தன் சாராம்சங்களில் உள்ள நல்லவற்றை வளர்த்துக்கொண்டு அல்லவற்றை உதறி முன்செல்லலாம். அது நிகழ்ந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது

ஜெ

முந்தைய கட்டுரைதை அறுவடை
அடுத்த கட்டுரைகாரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டம்