பயண இலக்கியம்

kaka
காகா காலேல்கர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் பயணம் செய்வதை மிகவும் விரும்புபவன். பயணம் பற்றிய புத்தகங்களையும் விரும்புபவன். எனக்குத் தெரிந்த, பயணம் பற்றிய புத்தகங்களை தொடந்து படித்து வருகிறேன். தொடந்து பயணித்தும் வருகிறேன். தனித்து மது அருந்தியும், தனித்து பயணம் செய்தும் பழகவே கூடாது. அவை பெரிய போதை ஆகிவிடும். இது எனது அனுபவம்.

பயண இலக்கியம் பற்றி உங்கள் கருத்து என்ன? கடந்த ஐம்பது ஆண்டுகளில் நீங்கள் பொருட்படுத்தும்படி பயணம் பற்றி எழுதும் எழுத்தாளர்கள், புத்தகங்கள் பற்றி எழுதினால் மிகவும் உதவியாக இருக்கும். நான் படித்த பயணம் பற்றிய சில புத்தகங்களை இங்கு குறிப்பிடுகிறேன்.

rakul
ராகுல் சாங்கிருத்யாயன்

1.Into the wild – Jon Krakauer. இந்த புத்தகத்தை விட இது மிக அழகாக திரைப்படமாக்கப்பட்டிருக்கும். பயணத்தை விரும்பும் அனைவருக்கும் விருப்பமான படங்களின் பட்டியலில் முதல் இட்த்தில் இருக்கும். Christopher Mccandless என்ற நிஜத்தில் வாழ்ந்த இளைஞனின் பயணத்தை பற்றியது இந்தப் படம்.

  1. பில் பிரைசன் புத்தகங்கள்

3.மோட்டார் சைக்கிள் டைரீஸ்

4.ராகுல்ஜீயின் புத்தகங்கள்

5.Wild:From lost to found on the Pacific Crest Trail – Cheryl Strayed

6.On the road – Jack kerouac

7.The great railway bazaar – Paul theroux

8.Eat, prey, love  – Elizabeth gilbert

  1. நைல் நதிக்கரையோரம் – நடேசன்.     எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரை செய்திருந்தார். பயண அனுபவமாக இல்லை எனினும் எகிப்திய வரலாறைப் பற்றி அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது.

10.ஹிமாலயன் – சவுக்கத் அலி. (அடுத்துப் படிக்க ரெடியாக இருக்கிறது)

(இதில் குறிப்பிடப்பட்டுள்ள அநேக புத்தகங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன)

அன்புடன்,

மு.ஞானசேகர்.

thomu
தொ மு பாஸ்கரத்தொண்டைமான்

அன்புள்ள ஞானசேகர்

இப்போது பயணம் குறித்த ஆவணப்படங்கள் ஏராளமாக வருகின்றன. அவை செய்திகளுடன் காட்சிகளையும் காட்டுகின்றன. மலையாளத்தில் யாத்ரா என்னும் பயணத்திற்கான தொலைக்காட்சியே உள்ளது. அதேபோல புகைப்பட- அச்சுக்கலையின் வளர்ச்சி காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது. மாத்ருபூமி இதழ் யாத்ரா என்னும் மாத இதழை நடத்துகிறது

இதற்கு அப்பால் பயணநூல்களுக்கு என்ன முக்கியத்துவம்? அவை மொழியில் இருப்பதுதான். எழுதுபவன் எழுத்தாளன் என்பதனால் வரும் அகவெளிப்பாடுதான். ஆகவே எனக்குப் பயணநூல்கள் எந்த அளவுக்கு மொழியனுபவமாக ஆகின்றன என்பது முக்கியம்

nasu
ந.சுப்புரெட்டியார்

தமிழக பயண எழுத்தில் புகழ்பெற்ற பெயர்கள் ஏ.கே.செட்டியார், ந.சுப்பு ரெட்டியார். ஏ.கே.செட்டியார் உலகம் முழுக்க பயணம் செய்திருக்கிறார். சுப்புரெட்டியார் வைணவ ஆலயங்கள் தோறும் சென்றிருக்கிறார். தென்னக யாத்திரை – பகடாசலு ராமானுஜ நாயிடு, வேங்கடம் முதல் குமரிவரை – தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஆகிய நூல்கள் இத்துறையின் செவ்வியல் ஆக்கங்கள்

எழுத்தாளர்களில் தி.ஜானகிராமன் சிட்டியுடன் சேர்ந்து எழுதிய நடந்தாய் வாழி காவேரி முக்கியமான நூல். அவருடைய கருங்கடலும் கலைக்கடலும், உதயசூரியன் ஆகிய பயணநூல்களும் முக்கியமானவை. சிட்டி-சிவபாதசுந்தரம் எழுதிய கௌதமபுத்தர் அடிச்சுவட்டில் ஒரு முக்கியமான படைப்பு.

தமிழாக்கம் செய்யப்பட்ட பயணநூல்களில் ஜீவன்லீலா [காகா காலேல்கர்] பூர்ணகும்பம் [ராணிசந்தா] ஆகியவை அற்புதமான ஆக்கங்கள். முழுமையான ஒரு பட்டியலை என்றாவது தயாரிக்கவேண்டும்

ஜெ

பயணக்கட்டுரை

முந்தைய கட்டுரைகலைகளின் மறுமலர்ச்சி -கடிதம்
அடுத்த கட்டுரைசெழியன், கடிதங்கள்