இலக்கியத்திருவிழாக்களில் எனக்கு எப்போதுமே ஒர் ஒவ்வாமை உண்டு. பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். இருந்தாலும்கூட அவ்வப்போது கலந்துகொள்ளும் கட்டாயம் நிகழ்வதுண்டு. சென்ற ஆண்டு மும்பை கேட்வே இலக்கியவிழா, கேந்திர சாகித்ய அக்காதமி இலக்கியவிழா இரண்டிலும் கலந்துகொண்டேன்.
இத்தகைய விழாக்கள், வேறு எந்த விழாக்களையும்போலவே, மாபெரும் சராசரித்தனம் கொண்டவை. அதில் பங்குகொள்பவர்களின் சராசரி அது. கூர்மையாகவும் தீவிரமாகவும் எதுவும் நிகழ அங்கே வாய்ப்பில்லை. காரணம் அனைத்துக்குரல்களுக்கும் இடம் கொடுக்கவேண்டும். பெருந்திரளாக வாசகர்கள் பங்கேற்கவேண்டும். அவ்வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கியம் தோராயமாகவே அறிமுகமாகியிருக்கும். இலக்கியவிழாக்களின் நோக்கம் இலக்கிய அறிமுகத்தை ஒரு கொண்டாட்டமாக ஆக்குவது. ஒட்டுமொத்தமாக ஒரே நோக்கில் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தின் அனைத்துப் பகுதிகளையும் அறிமுகம்செய்வது விழாக்களால் மட்டுமே இயலும்.
ஆகவே இலக்கியவிழா என்னைப்போன்ற ஒருவருக்கு எதையும் அளிப்பதில்லை. நான் அளிப்பதைப் பெறுவதற்குரிய தேர்ந்த வாசகர்கள் பாலில் நெய் என கூட்டத்தில் கலந்திருப்பார்கள். தேசிய,சர்வதேசிய இலக்கியவிழாக்களில் பொதுவாக சரமாரியாக ஆங்கிலம் பேசுபவர்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அது குறைந்த கால அளவே அனைவருக்கும் அளிக்கப்படும் நிகழ்வு என்பதனால் ‘ஷோமேன்’களுக்கு உரிய இடம். எழுத்தாளர்களை விட பேராசிரியர்கள் பரிமளிப்பார்கள்.
விளைவாக ஒருவகையான சோர்வுடனேயே விழாக்களிலிருந்து திரும்பி வருவேன். இனி எந்த விழாவிலும் கலந்துகொள்வதில்லை என்ற முடிவையும் எடுப்பேன். சென்ற ஆண்டு சாகித்ய அக்காதமி விழாவுக்குப்பின்னர் உடனே சாகித்ய லண்டன் விழா ஒன்றுக்கு அழைப்பு இருந்தது. விசாவும் வந்தது, கடைசிநேரத்தில் தயங்கிவிட்டேன்.
இவ்வாண்டு மாத்ருபூமி இலக்கியவிழாவுக்காக அழைப்பு வந்தபோது மறுத்தேன். ஆனால் மாத்ருபூமியின் இதழாளர்கள் நண்பர்களும்கூட. ஆகவே வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். அதன்பின்னரும் செல்லவேண்டுமா என்னும் தயக்கம் இருந்தது. அவர்களின் ஏற்பாடுகள் நான் செல்லாமலிருக்க முடியாது எனும் நிலைவரை கொண்டுசென்றன. எனக்குப்பிடித்த உணவு, எனக்கு என்னவகையான மைக் தேவை என்பதுவரை கேட்டு முடிவுசெய்தார்கள்.
ஆகவே வேறுவழியில்லாமல் நான்காம்தேதி காலை ஆறுமணிக்கு ரயிலில் கிளம்பி திருவனந்தபுரம் சென்றேன். ஷாகுல் ஹமீது வந்து ஏற்றிவிட்டார். காரில் செல்வதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் நாகர்கோயில் திருவனந்தபுரம் சாலையில் நான்கு இடங்களில் பாலம் வேலை நடக்கிறது. எழுபது கிலோமீட்டரைக் கடக்க மூன்றரை மணிநேரமாகும். ரயிலில் ஒன்றரை மணிநேரம்தான்.
நானே ஆட்டோ பிடித்து எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த எஸ்பி கிராண்ட்டேய்ஸ் ஓட்டலுக்குச் சென்றுவிட்டேன். அங்கே மாத்ருபூமி வரவேற்பு அணி இருந்தது. என்னை அறிந்தவர்கள். வாயிலில் கார்கள் காத்து நின்றிருந்ததைச் சொன்னார்கள். வழக்கமாக நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருப்பவர்களின் போதாமை முதலில் அறை பதிவுசெய்திருப்பதிலேயே தெரியவரும். அறை பதிவுசெய்யப்பட்டிருக்காது. ஓட்டல் மாறியிருக்கும். வேறுஎவரேனும் தங்கியிருப்பார்கள், நம் பெயர் வேறு ஒன்றாக இருக்கும். தேடி குழம்பி பின்னர்தான் அறை அமையும். கேந்திர சாகித்ய அக்காதமியில் எல்லாவகையான குளறுபடிகளுமுண்டு. மாத்ருபூமி விழாவில் என் அறை என் புகைப்படத்துடன், எனக்கான தனிப்பட்ட பரிசுப்பொருட்களுடன் தயாராக இருந்தது.
இதுவரை நான் பங்கெடுத்தவற்றிலேயே மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கிய விழா இதுவே. கல்லூரி மாணவிகள் முந்நூறுபேர் தன்னார்வலர்களாகப் பணியாற்றினர். ஓர் எழுத்தாளர்களுக்கு ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்டார். ஒவ்வொன்றும் முன்னரே திட்டமிடப்பட்டு வகுக்கப்பட்டிருந்தன. வண்டி, உணவு, அறையின் தேவைகள் அனைத்தும்.
ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பங்கேற்பு இவ்விழாவின் முக்கியமான கொடை என நினைக்கிறேன். பெரும்பாலானவர்கள் மாணவர்கள். இலக்கிய மாணவர்கள் கேரளம் முழுக்க இருந்து வந்து மிகக்குறைந்த செலவில் தங்கி பங்கேற்றுச்செல்ல மாத்ருபூமியே ஏற்பாடுகள் செய்திருந்தது. எல்லா அரங்கிலும் ஐநூறுக்கும் மேல் பார்வையாளர்கள். ஆயினும் அவர்களில் கணிசமானவர்களின் மொழி ஆங்கிலமாக மாறிவிட்டிருந்தது என்பது சற்று சங்கடமாகவே இருந்தது
ஒரே சமயம் ஐந்து அரங்குகளில் இலக்கிய உரையாடல்கள் நிகழ்ந்தன. [கல்பற்றா நாராயணன் பங்கெடுத்த ஓர் அரங்கு கெட்டவார்த்தைகளின் சமூகப்பங்களிப்பு, மொழியியல் அடிப்படைகளைப் பற்றியது] இத்தனைபெரிய பங்கேற்பே இதை விழா என ஆக்குகிறது. பொதுவாக கோவா, டெல்லி, மும்பை இலக்கியவிழாக்களில் அடுத்த அரங்குகளுக்கான எழுத்தாளர்களே பார்வையாளர்களாக அமர்ந்திருப்பார்கள் — ‘சரிதான்பா’ என்கிற முகபாவனையுடன். அவற்றை விழா என அச்சொல்லின் சரியான பொருளில் சொல்லமுடியாது. கொண்டாட்டம்தான் ஒரு விழாவின் அடிப்படை அம்சம்.
இந்தியாவில் நிகழும் திரைப்படவிழாக்களில் இருந்து திருவனந்தபுரம் திரைப்படவிழாவை மாறுபடுத்திக்காட்டும் அம்சமும் இந்த மாபெரும் மக்கள் பங்கேற்புதான். ஒரு வகை இளைஞர்திருவிழாவாகவே அது நிகழும். சினிமா ‘தலையில் அடித்த’ இளைஞர்களை எங்கும் பார்க்கமுடியும். விழாநாட்களை போதைகொண்டதாக ஆக்குவது அதுதான். அதேபோல பெரிய மக்கள்பங்கேற்பு கொண்ட விழாவாகவே திரிச்சூர் நாடகவிழாவும் இருக்கும். இந்த விழாவிலும் அத்தகைய கூட்டமும் களிப்பும் நிறைந்திருந்தது.
விழாவை ஒட்டி மாத்ருபூமி என்னைப்பற்றி ஓர் இரண்டுநிமிட விளம்பரக்குறிப்பு எடுத்திருந்தனர். வீட்டுக்குவந்து அதை பதிவுசெய்தனர். அது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது. அதன்பின்னர் பத்துநிமிட அறிமுகப்படம். விழாவில் பங்குகொள்ளும் முக்கியமான எல்லா படைப்பாளிகளும் அவ்வாறு முன்னரே வாசகர்களுக்கு முழுமையாக அறிமுகமாகியிருந்தனர்
விழாவில் இதிகாசங்களின் மறு ஆக்கம் குறித்த கலந்துரையாடலில் நான் முதலில் மலையாளத்தில் 7 நிமிடம் என் கருத்தைச் சொன்னேன்.பின்னர் அதை ஆங்கிலத்தில் ஐந்துநிமிடம் சொன்னேன். ஆனந்த் நீலகண்டன், மீனாட்சி ரெட்டி மாதவன் ஆகியோர் விவாதத்தில் கலந்துகொண்டனர். வேறு அரங்குகளில் என் நண்பர்களான எழுத்தாளர்களுக்கு நினைவுப்பரிசுகளை மாத்ருபூமி சார்பில் வழங்கினேன். சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்திருந்த என் உரையை அச்சு எடுத்து கொண்டுசென்றிருந்தேன், அதை வேண்டியவர்களுக்கு வழங்கினேன்.
விவாதம் உற்சாகமாகவே நடந்தது, ஆனால் விழாவுக்குரிய சராசரிகேள்விகள். ஒருசில கேள்விகளே உண்மையில் முக்கியமானவை. ஆனால் ஒட்டுமொத்தமாக அங்கிருந்தது நிறைவளித்தது. கல்பற்றா நாராயணன் கூடவே இருந்தார். பி.ராமன், அன்வர் அலி, ராஜசேகரன் என கவிஞர்களையும் இலக்கியவிமர்சகர்களையும் சந்தித்துக்கொண்டே இருந்தேன். அடூர் கோபாலகிருஷ்ணனைச் சந்தித்த போது வெண்முரசு குறித்து சற்று உரையாடினேன்.
மாலையில் அதே விழாவில் நிகழ்ந்த விவாதங்களை மேலும் விமர்சித்து நானும் கல்பற்றா நாராயணனும் ஓர் உரையாடல் நிகழ்த்த அதை மாத்ருபூமி இணையத்தில் வலையேற்றியது. விழாவின் மையக்குரல் அரசியல்சரிநிலைகளை சார்ந்தே இருந்ததை ஒட்டியே எங்கள் விமர்சன உரையாடல் அமைந்திருந்தது.
பெப்ருவரி 2 முதல் 4 வரை மூன்றுநாட்கள் நடந்த இலக்கியவிழாவில் பிரிட்டன், கென்யா, மலேசியா என பலநாடுகளிலிருந்து எழுத்தாளர்கள்ல் பங்கெடுத்தனர்.முதல்முறையாக ஓர் இலக்கியவிழா நிறைவூட்டும் அனுபவமாக அமைந்தது. அதற்கு மாத்ருபூமியின் ஆசிரியர்குழு முக்கியமான காரணம். அவர்களே நல்ல வாசகர்கள், இலக்கியமென்றால் என்ன என்று அறிந்த இதழாளர்கள். ஏதோ ஒருவகையில் அவர்கள் கேரள இலக்கிய இயக்கத்தின் ஓட்டுநர்கள்.
http://www.mathrubhumi.com/tv/ReadMore1/42293/writer-jayamohan/E
http://www.mathrubhumi.com/tv/ReadMore1/42016/writer-jayamohan-mathrubhumi-festival-of-letters/M