அகாலக்காலம் கடிதங்கள்

sura

அகாலக்காலம்

ஜெமோ,

 

 

நீங்கள் அடிக்கடி கூறுவது போல இலக்கியம் எனபதும் ஒரு வகையான பிரச்சார ஊடகம் மட்டுமே என்பது வலிந்து இடதுசாரிகளின் மண்டையில் ஏற்றப்பட்டுள்ளது. கண்டிப்பாக உங்களை “ஏன் சமகால பிரச்சினைகளைப் பற்றி எழுதவில்லை?” என்ற கேள்வியைக் கேட்ட அந்த தாடிக்காரர் பொன்னுலக கனவில் வாழும்  கம்யூனிசக்காரராகவே இருக்கமுடியும் என்பது என்னுடைய ஊகம். இவர்களைப் பொறுத்தவரை நல்வாழ்வு எதிர்காலத்தில் மட்டுமே உள்ளது. நிகழ்காலம் ஒரு துன்பியல் காலம்; கடந்த காலம் என்ற ஒன்று இல்லவே இல்லை. மார்க்ஸியம் கற்றுக் கொடுத்த வரலாறு எவ்வாறு முன்னோக்கி நகரும் என்பதைப் பற்றிய அக்கறையெல்லாம் அவர்களுக்கு இருப்பதில்லை. இங்கே எப்படி மூர்க்கத்தனமான 16ம் நூற்றாண்டு கிறிஸ்துவம் மட்டுமே கிடைத்ததோ, அதேபோல் தான் மார்க்ஸின் காலாவதியான ஒரு பகுதி மட்டுமே இங்குள்ள சமகால விளம்பிகளுக்கு கிடைத்துள்ளதாக எண்ண வைக்கிறது. இவர்களைப் பொருட்படுத்தி ‘விஷ்ணுபுரம் எழுதுவதை நிறுத்தியிருந்தேன்’ என்றதும் பக்கென்றிருந்தது எனக்கு.

 

பிரச்சார ஊடகங்களைப் போலவே இலக்கியமும் 24*7 பரபரப்பு செய்திகளை மட்டுமே எழுதவேண்டும் என்பது எவ்வளவு அறிவிழித்தனம் என்பது இலக்கிய வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் புரியும்.

 

அதேசமயத்தில் கடந்த கால புராணங்களை மட்டுமே பேசி கடந்த காலத்திலேயே நின்று விடுகிற படைப்புகளையும், அதன் நீட்சியாக சமகாலத்தைத் தொட்டு ஒரு முழுமையை நோக்கி நகரும் படைப்புகளையும் பிரித்தறிய ஒரு வாசிப்பூக்கமும் உழைப்பும் தேவை. சமகால விளம்பிகளுக்கு இது இருக்க வாய்ப்பில்லை என்பதே என் அபிப்பிராயம்.

 

இத்தொடரை தடம் இதழில் படித்த மறுநாளே உங்கள் தளத்தில் வெளியான ஏ.வி. மணிகண்டனின் ‘அருகமர்தல்’ கட்டுரையையும் படித்தேன்.  ஏன் நம்முடைய கலைகள் அதன் உன்னதத்தை தொடமுடியவில்லை எனபதற்கான காரணம்,  வேர்களை உதாசீனப்படுத்திய வாசிப்பு குன்றிய இந்த சமகால விளம்பிகளே என்றுணர்த்தி தங்களின் ‘அகாலக் காலம்’ கட்டுரையை நிறைவு செய்திருந்தார்.

 

அன்புடன்

முத்து

 

 

அன்புள்ள ஜெ

 

விகடனில் வெளியான அகாலக்காலம் ஓர் அழகிய கட்டுரை. அதில் சுந்தர ராமசாமி ஆ மாதவன் இருவரின் ஆளுமைகள் அழகான சித்திரமாக உள்ளன. அந்த நக்கல், அதில் நீங்கள் புண்பட்டுக் கிளம்பியது எல்லாவற்றையும் இன்றைக்கு ஒரு சென்றகால வரலாறுபோலவே வாசிக்க முடிந்தது

 

மகேஷ்

முந்தைய கட்டுரைஇரவு ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகலையில் மடிதல்