அஞ்சலி , செழியன் [கனடா]

seziyan

 

 

கனடாவுக்கு நான் 2001ல் செல்லும்போது அறிமுகமான நண்பர் செழியன். அவருடைய நினைவுகளின் தொகுப்பான  ஒரு போராளியின் நாட்குறிப்பு அப்போது   சிறுநூலாக வெளியிடப்பட்டு விற்காமல் அடுக்கடுக்காக அவரிடம் இருந்தது. நான் சில பிரதிகள் வாங்கிவந்தேன். அதை வாசித்தபோதுதான் முதன்முறையாக ஈழப்போராட்டத்தின் நேரடி அனுபவ முகத்தை வாசித்தேன்.  இன்று மேலோட்டமான எழுத்தாளர்கள் காற்று அடிக்கும் திசைகளைக் கணித்து ஈழப்போராட்டம் பற்றி பொய்களையும் பிரச்சாரங்களையும் புனைவுகளாக எழுதிக்குவிக்கும் ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமான நூல் அது.

 

ஈழப்போராட்டத்தில் போராளிக்குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த போரில் உயிர்தப்பி ஐரோப்பாவுக்கும், அங்கிருந்து கனடாவுக்கும் புலம்பெயர்ந்தவர் செழியன். அவர் இலங்கையில் இருந்து தப்ப சேரன் உதவிசெய்தார். அந்நினைவுகளின் உண்மைத்தன்மை எந்த ஆதாரமும் தேவையில்லாமலேயே நம் ஆத்மாவை வந்தடைவது. அச்சித்தரிப்புகளில் இருந்த  சகோதரப்போரின் இரக்கமற்றதன்மையும், திகைக்கவைக்கும் துரோகங்களும் மிகப்பெரிய வரலாற்றுப்பாடங்கள். நாம் பேணாவிட்டால் அரசியல் பிரச்சாரகர்களால் விரைவிலேயே அவை சொற்களால் மூழ்கடிக்கப்படும்..

 

குறிப்பாக ஒரு காட்சி. நெடுநாட்கள் இளைய நண்பர்களாகப் பழகிய புலி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு ஆசிரியராக அமைந்த மூத்த போராளி ஒருவரை அவருக்கு வேறு அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற ஐயத்தின் பேரில் கொல்லவருகிறார்கள். அவர்கள் வரும் நோக்கத்தை ஊகித்த அவர்கள் துரத்துகிறார்கள். “மாஸ்டர் ஓடாதீர்கள் சுட்டுவிடுவோம்” என்று கூவுகிறார்கள்.  “தம்பி சுடாதீர்கள். எதுவானாலும் பேசுவோம்” என்று அவர் கூவியபடி ஒரு சுவரை ஏறிக்கடக்க முயல்கிறார். சுட்டுவிடுகிறார்கள்.  விழுந்து உயிர்துறக்கிறார்.

 

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் கனடாவில் செல்வம் இல்லத்தில் அந்த சிறுநூலில் அந்நிகழ்ச்சியை வாசித்து இரு கால்களும் வெடவெடக்க, உள்ளம் மரத்துப்போய் அமர்ந்திருந்தேன். நாளிதழ்களில் நாம் வாசிக்கும் போர்ச்செய்திகளுக்கும், பிரச்சார உண்மைகளுக்கும் அடியில் போர் என்றால் என்ன என்பதை காட்டிய நிகழ்ச்சி அது. பின்னர் பல ஈழப்போர் நாவல்களை வாசித்தேன். கணிசமானவை எளிய பிரச்சாரக்குப்பைகள். ஓரளவு நம்பகத்தன்மை கொண்டவை சயந்தனின் ஆதிரை போன்றவை. ஆனால் எவற்றிலும் அந்த உண்மை நிகழ்ச்சிச் சித்தரிப்பின் வேகம் கொண்ட ஒரு காட்சி இல்லை.

 

அவர் ஒரு நாவலாக அந்த அனுபவங்களை எழுதலாம் என நான் கோரினேன். அவர் எழுத விரும்பினார். பின்னர் ’நான் வானத்தைப் பிளந்த கதை’ என்ற பேரில் சற்று விரிவாக்கம் செய்யப்பட்டு அந்நூல் வெளிவந்தது. நாவல் எழுதப்படவில்லை. கவிதைகள் எழுதினார். பெரும்பாலும் இருத்தலின் நிலையின்மையும் இழப்பின் வெறுமையும் நிறைந்த கவிதைகள் அவை. குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள், ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை‘  என   தொகுப்பாக அவை வெளிவந்துள்ளன

 

அதன்பின் இருமுறை கனடா சென்றபோதும் செழியனைச் சந்தித்தேன். ஒவ்வொருமுறை வழியனுப்பும்போதும் கண்ணீர் மல்க தழுவிக்கொள்வார். மீட்கமுடியாத உளச் சோர்வில் இருந்தார்.  கனடாவின் பண்பாட்டுத்தனிமையாக இருக்கலாம்.  அவருடைய கனவுகளின் இழப்பாக இருக்கலாம். அதை நாம் அறியவே முடியாது. அவரைப்போன்றவர்கள் தங்களை முழுமையாக பூட்டிவைத்துக்கொள்ளும் பயிற்சியைப் பெற்றவர்கள்

 

செழியன் செல்வத்திற்கு இளையவர் போலிருந்தார். அவர்கள் மெல்லிய நக்கல்களால் ஒருவருக்கொருவர் காலைவாரிக்கொள்வதை சொல் சொல்லாக நினைவுகூர்கிறேன். காலம் இதழுக்கும் அவர் ஒர் அணுக்கமான தோழர்.

 

செழியனுக்கு அஞ்சலி.

முந்தைய கட்டுரைஏன் மகாபாரதத்தை எழுதுகிறேன்?
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–52