பெரியார்மதம்

evr

 ஈவேரா -உண்மைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 எந்த விமர்சனமும் இன்றி வெ ராமசாமி அவர்களையும் திராவிட இயக்கத்தையும் அணுகுபவர்களில்   ஒருவன் அல்ல நான்.  எனினும் அதை பற்றிய தீவிர ஆய்வுகள் ஏதும் நடக்கவில்லை என்பது போல நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. 1990களுக்கு பிறகு எஸ் வி ராஜதுரை கீதா, MSS பாண்டியன் போன்று ஆய்வு புலம் சார்ந்தவர்களின் பணிகளை நீங்கள் மறுப்பதையும் கவனித்திருக்கிறேன். அப்படி நீங்கள் மறுப்பதற்கான காரணங்கள் புரிந்தாலும்,  அந்நிலைப்பாட்டினில்   எனக்கு சில பிரச்சனை இருக்கிறது

 

அவற்றை விட்டுவிடுவொம்அவ்வாய்வு மரபின் தொடர்ச்சியாக அல்லாது கடந்த பத்தாண்டுகளாக அவ்வியக்கம் குறித்த சில முக்கியமான ஆய்வுகள் வெளிவந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும்பழ அதியமானின் சேரன்மா தேவி போராட்ட வரலாறு தொடங்கி சமீபத்திய திருநீலகண்டனின் நீடாமங்கலம் புத்தகம் வரை. மேலும் தமிழ் உலகில் முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவரான  சலபதி பெரியாரின் வரலாற்றை எழுதி கொண்டிருக்கிறார்  (அது துதிபாடலாக இருக்காது என்பதை அவரது முந்தைய பணிகளின் தரத்தை கொண்டு நம்பலாம்  ), அதியாமனும் வைக்கம் குறித்து  ஆய்வு மேற்க்கொண்டு வருகிறார்.  இப்படியாக வெளிவந்து கொண்டிருக்கும் ஆய்வுகளின் நேர்மையை அத்தனை எளிதில் நிராகரித்து விட முடியாது. சமகாலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வாசகர்களிடம் பாதிப்பை ஏற்ப்படுத்திவிஷயங்களை அறிமுகப்படுத்தும்   நீங்கள், திராவிட இயக்கத்தை முழுமையாக நிராகரிக்கும் பட்டச்சத்தில் இத்தகு ஆய்வுகளுக்கு பதிலளிக்காமல்  மட்டுமல்ல பதிவே செய்யாது போவது என்பது பெரும் பிழை என கருதுகிறேன்

 

நன்றி

அருண்.

 *** 

அன்புள்ள அருண்

 

நான் ஈவெரா அவர்கள் எழுதிய நூல்களை வாங்கி வாசித்துக்கொண்டிருந்தவன். என் புரிதல் அவருடைய எழுத்துக்கள் வழியாக, அவருடைய சமகாலத்தவரின் வரலாற்றுப் பதிவுகள் வழியாக

 

எண்பதுகளில் தமிழகச் சமூகச்சூழலில் இடைநிலைச்சாதிகள் வலுப்பெற்றபின் அவர்களின் அடையாளமாக ஈவெரா முன்னெடுக்கப்பட்டார். அதன்பின்னரே அவரை சிந்தனையாளர் என முன்வைக்கும் இன்றைய முயற்சிகள் அறிவுலகில் வேகம் கொண்டன.

 

அவ்வாறு எழுதப்பட்ட எஸ்.வி.ராஜதுரை கீதா வின் நூல் உட்பட பலநூல்களை வாசித்திருக்கிறேன். ஈவெராவின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்படுபவை, எந்த தர்க்க ஒழுங்கும் இல்லாதவை, பலசமயம் வெறும் காழ்ப்புக்கள். அவற்றிலிருந்து ஒரு சிந்தனையாளரைத் திரட்டி எடுக்கச் செய்யப்படும் முயற்சிகளே இந்நூல்கள். முன்பின் தொடர்புபடுத்தி இடைவெளிகளை நிரவி உருவாக்கப்படுபவை. இவை காட்டும் ஈவெரா வெறும் புனைவு. இப்படி உலகசிந்தனையில் எந்த சிந்தனையாளராவது கட்டமைக்கப்பட்டிருந்தால் இந்த பெரியாரியர்கள்தான் அவர்களை முதலில் எதிர்ப்பார்கள்.

 

நீங்கள் மேலே சொன்னவர்கள் எவரும் சற்றேனும் நடுநிலைமை கொண்டவர்களோ, சிந்தனை என்பதன்மேல் அடிப்படை நம்பிக்கைகொண்டவர்களோ அல்ல. அவர்கள் மதவாதிகள், பெரியார் ஒருமதம் அவர்களுக்கு. நபி குறித்து பலநூறு இஸ்லாமியர் நூல்களை எழுதிக்குவித்துள்ளனர். அவற்றிலிருந்து நபி என்னும் வரலாற்று மனிதரை நீங்கள் சென்றடைய முடியுமா?

 

பெரியாரியத்தின்அடிப்படை என்பது  சாதிப்பற்றும் அதைச்சார்ந்த எதிர் மனநிலையும் அது உருவாக்கும் ஆழ்ந்த காழ்ப்புகளும்தான்.. ஆகவே அவர்களால் எந்த விவாதத்தையும் உணர்ச்சியின்றி நடுநிலையாக எதிர்கொள்ளல் இயலாது. எனக்கு இவர்கள்மேல் இருப்பது பெரும்சலிப்பு. மதவாதிகளுடன் விவாதிக்கக்கூடாது என்பது என் நிலைபாடு. இவர்களையும் அந்தப்பட்டியலில் சேர்க்கலாமென நினைக்கிறேன்.

 

ஓர் உதாரணம் சொல்கிறேன், வைக்கம் போராட்டம் பற்றி நான் நிறையவே எழுதியிருக்கிறேன். ஆதாரபூர்வமாக. வைக்கம் போராட்டம் ஈவெராஅவர்களால் தொடங்கப்படவில்லை, அவரால் தலைமைதாங்கி நடத்தப்படவில்லை, அவரால் முடித்துவைக்கப்படவுமில்லை. அவர் அதில் பங்குபெற்றார். ஆனால் அவர் அதை தொடங்கி நடத்தினார் என சென்ற ஐம்பதாண்டுகளாக  இங்கே சொல்லப்பட்டுள்ளது. பாடநூல்களிலேயே அவர் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது. Periyar launched vaikom struggle என. இது பொய், திருத்தப்படவேண்டும் என்பது என் தரப்பு

 

அதற்கு பெரியாரியர்கள் எழுதிய இருபதுக்கும் மேலான மறுப்புகளை வாசித்திருக்கிறேன். வசைகளுக்கு நடுவே அவர்கள் வாதிடுவது ஒன்றைமட்டும் சொல்லித்தான். ’பெரியார் வைக்கம்போராட்டத்தில் பங்கேற்றார், கூட பங்கேற்றவர்கள் பலர் அவருடைய பங்கை புகழ்ந்திருக்கிறார்கள். இதோ ஆதாரம்’ அவ்வளவுதான். திரும்பத்திரும்ப இதேதான். என் மறுப்பு அப்படியேதான் உள்ளது, ஆனால் பெரியார் குறித்த ஜெயமோகனின் அவதூறுகளை இன்னார் கிழி கிழி என கிழித்துவிட்டார் என நூறு இடங்களிலாவது கொக்கரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் மதவாதிகளின் மனநிலை. திரு பழ அதியமானின் நூலும் இதே கோணத்தில்தான் அமையும், ஒருபோதும் அவரால் பெரியாரின் உண்மையான பங்களிப்பென்ன என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அவர் பெரியாரியர் என தன்னை அறிவித்துக்கொண்டுவிட்டார்.

 

ஜெ