பாரதி வரலாறு…

பாரதியைப்பற்றி தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நூல்களில் முக்கியமானவை என்று ஐந்து பட்டியலிடப்படுகின்றன. அவற்றில் முதலிடம் வ.ரா எழுதிய ’மகாகவி பாரதியார்’ என்ற நூல்தான். தமிழில் சிலகாலம் கிடைக்காமல் இருந்த இந்நூல் இன்று மறுபதிப்பில் கிடைக்கிறது.

பிற வரலாறுகள் முறையே செல்லம்மாள் பாரதி, யதுகிரி அம்மாள், பரசி சு நெல்லையப்பர், கனகலிங்கம் ஆகியோர் எழுதியவை . இவர்கள் எல்லாருமே பாரதியுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள். ஆகவே இந்த வரலாறுகள் ஒன்றை ஒன்று நிறைவுசெய்யக்கூடியவை.

இவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தளம் உண்டு. நெல்லையப்பர் பாரதிபக்தர். ஆகவே அது ஒரு பக்திவரலாறு. செல்லம்மாளுக்கு பாரதியின் பெருமை அவர் மறைந்து பலகாலம் ஆனபின், அவரால் உருவான லௌகீக கஷ்டங்களை அவர் தாண்டிய பின்னர் தான் புரிந்தது. ஒருவகை குற்றவுணர்ச்சியுடன், பற்பல மறைப்புகளுடன் எழுதப்பட்ட வரலாறு அது.

யதுகிரி அம்மாளும், கனகலிங்கமும் எழுதியவை நேரடியான ஓரளவு அப்பட்டமான பதிவுகள். பல வரிகளுக்கிடையே மௌனம் நிறைந்துள்ள பிரதிகள். யதுகிரி அம்மாள் சிறுமியாகப் பாரதியைப் பார்த்தவர். அவர் காட்டும் பாரதி போதையில் நிலையழிந்து அலையும் நொந்துபோன இலட்சியவாதி. கனகலிங்கம் தன் சாதிச்சூழலால் நெருக்குண்டு மூச்சுத்திணறிய பாரதியைக் காட்டுகிறார்.

சுந்தர ராமசாமி சொன்னார். பாரதியுடன் நெருக்கமாக மாணவர் போல பழகியவர் வ.ரா. ஆனால் பாரதி மறைந்து இருபதாண்டுக்காலம் கழித்துத்தான் பாரதியின் வரலாற்றை அவர் எழுதினார். காரணம் பாரதியின் உண்மையான தோற்றம் அப்போதுதான் காலத்தில் தெளிந்து வந்தது. அதுவரை வராவின் நோக்கிலேயே பாரதி ஒரு கவிஞன் மட்டுமே . அவர் ஒரு யுகத்தின் தொடக்கம் என பின்னர்தான் வரா உணர்ந்தார். தன் அனுபவத்தின் முக்கியத்துவம் அவருக்கு அப்போதுதான் உறைத்தது போல. மேலும் அதன் அரசியல் முக்கியத்துவமும் தெரியவந்திருக்கும்

வரா எழுதிய பாரதியார் வரலாற்றைப்பற்றி ஒரு மதிப்புரை வாசகர் அனுபவம் இணையதளத்தில் உள்ளது. நூல் மதிப்புரைகளுக்கான இந்த தளம் பல நூல்களைப்பற்றிய வாசகக்குறிப்புகளை அளிக்கிறது. பொதுவாக பாராட்டும் கூற்றுகள். விரிவான விவாதங்கள் இல்லை. கருத்துக்கள் பல தரங்களில் உள்ளன. ஆயினும் நூல்களைப் பற்றி பேச விரும்புபவர்களுக்கு மிக முக்கியமான ஒரு தளம் இது


மகாகவி பாரதியார்

மதிப்புரைக்கு ஓர் இணையதளம்

முந்தைய கட்டுரைமாதவம்
அடுத்த கட்டுரைகல்யாணப்பாறை