வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 2

bl-e1513402911361அக்கோடையில் கர்ணன் சம்பாபுரிக்கு தெற்காக அமைந்த தென்புரி என்னும் அரண்மனையில் தங்கியிருந்தான். அரண்மனையை ஒட்டிய சிறிய அவைக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் குடியவையும் அரசவையும் கூடின. ஆனால் அவை மிகச் சிறிய அளவில் வெறும் சடங்கென்றே நிகழ்ந்தன. குடியவைக்கு முதிர்ந்து, விழியும் செவியும் மங்கிய மூன்று குடித்தலைவர்கள் தங்கள் கொடிகளுடனும் முறையாடைகளுடனும் சென்று அமர்ந்தனர். அரசவையில் சிற்றமைச்சர் கருணர் தன் மைந்தனுடன் சென்று முறைமைகள் அனைத்தையும் இயற்றினார். அவற்றை எவரும் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை.

நகர்மையத்திலிருந்த அரண்மனையை ஒட்டிய பேரவையில்தான் குடிகளும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் கூடினர். அங்கே விருஷசேனன் தம்பியருடன் அமர்ந்து தந்தையின் ஆணைகளை தான் இட்டு அரசை நடத்தினான். அங்கே அரியணை ஒன்று அமைக்கப்பட்டு அதன்மேல் கர்ணனின் வில் மட்டும் வைக்கப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சம்பாபுரியின் மக்கள் அந்த வில்லையே அவன் என நோக்கி உணர்ந்துகொண்டிருந்தனர். வில்லை அங்கு வைக்கச் சொன்ன ஹரிதர் “அனைத்துக்கும் அப்பால் குடிகளுக்குத் தேவையாவது பாதுகாப்புணர்வுதான். அது இங்கிருக்கும்வரை அவர்கள் தந்தை நிழலில் மைந்தர் என்று உணர்வார்கள்” என்றார். “அத்துடன் தாங்கள் இடும் ஆணைகளுக்குப் பின்னால் அந்த வில் இருக்கிறதென்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தாகவேண்டும்.”

கர்ணன் எந்த அவையிலும் அரைநாழிகை பொழுதுகூட அமர்வதில்லை. அரண்மனையை ஒட்டி நிகழும் சிறிய குடியவைக்கு வந்து முடிசூடி வாளேந்தி கோல்கொண்டு அமர்ந்து முறைமைச் சொற்களைக கேட்டு முடித்ததுமே எழுந்து தலைவணங்கி அவை நீங்கினான். அரசவையில் ஓர் ஓலையைக்கூட முழுதாகக் கேட்கும் உளம் அவனுக்கு அமையவில்லை. அவனுக்கு தெரிவித்தாகவேண்டிய செய்திகளைக்கூட விருஷசேனனின் பொருட்டு இளையவனாகிய விருஷகேது நேரில்சென்று புலரியில் தந்தை துயிலெழுந்து முகம் கழுவிக்கொண்டிருக்கையில் உரைத்து மீண்டான். ஒவ்வொன்றையும் சுருக்கி எளிய சொற்களில் மூன்றுநான்குமுறை அவன் சொன்னான். அதுவும் கர்ணனின் உள்ளத்தில் பதிந்தனவா என்றே ஐயுற்றான்.

ஒவ்வொரு முறையும் கூறப்படுவதை முற்றிலும் புதியதென்றே கர்ணன் கேட்டான். முகம் கழுவி முடித்து மரவுரியால் துடைத்துக்கொண்டதுமே அவன் உள்ளம் மதுவை நோக்கிச் செல்வதை விழிகளின் பறதி காட்டத் தொடங்கும். அதன்பின் ஒரு சொல்லும் அவனுள் நுழையாது. ஒவ்வொரு செய்தியையும் வெவ்வேறு சொற்களில் நான்கைந்து முறை விருஷகேது சொல்லவேண்டியிருந்தது. ஒருமுறைகூட திருத்தமோ மாற்றோ கர்ணனிடமிருந்து எழவில்லை. ஒருமுறை மீண்டும் ஒருமுறை சொல்ல முற்பட்ட விருஷகேதுவை கையால் தடுத்து “அவன் என் மைந்தன். அவன் சொல் என் சொல்” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டான். விருஷகேது “ஆம், தந்தையே. அவ்வாறே” என்று சொல்லி பின்வாங்கினான்.

சில ஆண்டுகளாக விழித்திருக்கும் பொழுதெல்லாம் கர்ணன் மதுமயக்கிலேயே இருந்தான். அவன் உடலின் மின்னும் கருநிறம் வெளிறியது. நீண்ட கைகள் மேலும் மேலும் நடுக்கு கொள்ளத்தொடங்கின. விரல்களை ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொள்வதற்கே அவன் தடுமாறுவதை விருஷகேது ஒவ்வொருமுறை அவனிடம் சொல்லெடுக்கையிலும் அறியாமல் நோக்கி விழிவிலக்கிக்கொண்டான். மெலிந்த கழுத்தும் உலர்ந்த உதடுகளும் நடுங்கிகொண்டிருந்தமையால் குரலும் பதறிப்பதறியே ஒலித்தது. தசை தளர்ந்த கன்னங்களும், நிழல்விழுந்து மென்கதுப்பு வீங்கி வளைந்து பழுப்போடிய கண்களும் அவ்வப்போது இருமலுமாக பல்லாண்டு அகவையைக் கடந்தவன் என்றானான்.

அணுக்கரான சிவதரால் கர்ணன் பேணப்பட்டான். அவனுடன் அவரும் முதுமைகொண்டு புருவங்களும் நரைத்து நடுங்கும் கால்களும் கைகளும் கொண்டிருந்தார். பிறரிடம் அவர் பேசுவது குறைவு. கர்ணனிடமும் ஒருசொல் மொழிகள் மட்டுமே. எப்போதும் அவனருகே அவர் இருந்தார். மதுவுண்டதும் கர்ணன் பெரும்பாலும் மயங்கி தலைதொங்க அமர்ந்திருப்பான். கனைப்பொலிகளும் மூச்சொலிகளும் மட்டுமே அவனிடமிருந்து எழுந்துகொண்டிருக்கும். அரிதாக கட்டற்று பேசத்தொடங்குவான். சினந்து கூச்சலிடுவான். சிவதரை அடிப்பதற்காக கையோங்கியபடி செல்வான். சினமெழுந்தால் அதன் உச்சத்தில் உளமுடைந்து விம்மி அழுவது அவன் வழக்கம். அவ்வண்ணமே படுத்து விசும்பியபடி துயில்வான். அவனுடன் வேறு எவரும் இருக்க சிவதர் ஒப்புவதில்லை. அவர்கள் தனியுலகில் வாழ அப்பாலென நின்று ஏவலர் அவர்களை நோக்கிக்கொண்டிருந்தனர்.

ஷத்ரியர்களைப்போல கர்ணன் எப்போதுமே மதுவை விரும்பியவனாக இருக்கவில்லை என்பதை விருஷகேது அறிந்திருந்தான். கௌரவர் அவைகளில் மட்டுமே அவர்களுடன் மதுக்களியாட்டில் ஈடுபட்டான். வேட்டைகளிலும் உண்டாட்டுகளிலும் குறைவாக மதுவருந்தி சொல்கரந்து விழிகளால் புன்னகைத்தபடி அமர்ந்திருப்பான். “மெய்மறக்க குடிப்பதில்லை நீங்கள். அங்கரே, மதுவுக்கு நம்மை அளிக்காவிட்டால் மதுவின் தெய்வம் இறங்கிவருவதில்லை” என்று துரியோதனன் சொல்லி மேலும் மேலும் கோப்பைகளை அவன் கையில் வைத்தாலும் வாங்கி புன்னகையுடன் வெறுமனே வைத்திருப்பான்.

கௌரவ நூற்றுவரும் குடித்து நிலையழிந்து பூசல்கொள்கையில் அவனுடைய முழங்கும் குரலே அவர்களை எல்லை மீறாது காக்கும். அவர்களை கைக்கு ஒருவராக அள்ளிக் கொண்டுசென்று அறைசேர்ப்பதோ தேரிலேற்றுவதோ அவன் பணியாகவே எஞ்சும். அவர்கள் மதுவில் எல்லை மீறினால் பானுமதியும் அசலையும் பிற அரசியரும் அவனைத்தான் கடிந்துகொள்வார்கள். அதை ஏற்று தலைகுனிந்து விழிதாழ்த்தி ஓரிரு சொற்களில் முனகலாக விடையிறுப்பான்.

பன்னிரு படைக்கள நிகழ்வுக்குப் பின் அங்கநாட்டுக்கு திரும்பியபோதுதான் கர்ணன் பெருங்குடியனாக மாறிவிட்டிருந்தான். அங்கு அரண்மனையிலும் வருவழியில் தேரிலும் சித்தம் சிதறிப்பரவும்வரை குடித்து புலம்பியபடி துயின்றான். எழுந்ததும் தலையைப் பற்றியபடி அமர்ந்திருந்தான். குளிர்ந்த ஈரத்துணியை அவன் கழுத்தைச் சுற்றிக் கட்டி பீடத்தில் தலைசாய்த்து அமர்த்தி புளித்தநீர் அளித்து அவன் தலைநோவை அகற்றினார் சிவதர். ஆனால் மெல்ல நிலைமீண்டு உணவருந்தி வெளியே சென்று மானுடரைப் பார்த்ததுமே வெருண்டவன்போல் அவன் தன் அறைக்கு மீண்டான். கைகள் பதற “சிவதரே, மது. மது எங்கே? கொணர்க மது!” என்று கூவினான். மீண்டும் வெறிகொண்டவனாகக் குடித்து வாயுமிழ்ந்து விழுந்து துயின்றான். மூன்றுமாதம் அவன் ஒருநாளில் ஒருநாழிகைகூட விழிப்புளத்துடன் இருக்கவில்லை.

மீண்டுவிடுவான் என்றுதான் மைந்தர் எண்ணினர். ஹரிதர் “எந்தத் துயரும் சில நாட்களுக்கே என வகுத்த தெய்வங்களை நம்புவோம். பிரிவு ஒரு மாதத்திற்கு, இழப்பு மூன்று மாதத்துக்கு, சிறுமை ஆறு மாதத்திற்கு” என்றார். ஆனால் நாளும் அவன் துயரும் குடியும் வளர்ந்துகொண்டே சென்றன. விருஷசேனன் “இது அவர் கொண்ட சிறுமை அல்ல. அவர் இழைத்த சிறுமை, அமைச்சரே” என்றான். “அவர் தன் ஆசிரியர் முன்பும் தெய்வத்தின் முன்பும் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவே உணர்கிறார். மது மீறிச்செல்கையில் அவர்களை வசைபாடுகிறார், வெறிகொண்டு கூவுகிறார், பின்னர் எண்ணி உளம்கலுழ்கிறார்.” ஹரிதர் “அவருடன் சிவதர் இருக்கிறார். முற்றிலும் இவ்வுலகின் பிடி அறுந்துசெல்ல வாய்ப்பில்லை” என்றார்.

ஓராண்டுக்குப்பின் ஹரிதர் அஞ்சத் தொடங்கினார். “சிவதரைப்பற்றிய என் கணிப்பு பிழை என ஐயுறுகிறேன், இளவரசே. அரசருக்கு மதுவூற்றிக்கொடுப்பதை அவரே செய்கிறார். நாம் இவ்வண்ணம் இருந்தால் மீட்கமுடியாத ஆழத்திற்கே அரசர் சென்றுவிடக்கூடும்.” அவைசூழ்ந்து ஆவதென்ன என்று தேர்ந்தனர். “அவரிடம் எவர் சொல்ல முடியும்? இரு அன்னையரும் இருவகையில் அவருக்கு சேய்மையில் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சொல்லையேனும் அவரிடம் கூறவியலாது” என்றான் விருஷகேது. சத்யசேனன் “ஆம், அன்னையையும் தந்தையையும் அவர் தன் உள்ளத்திலிருந்து விலக்கிவிட்டார்” என்றான். “மைந்தராகவும் குடிகளாகவும் நாம் சென்று மன்றாடலாம்” என்றார் ஹரிதர். அவர்கள் மறுமொழி சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அதனால் பயனில்லை என அவர்கள் அறிந்திருந்தனர்.

சற்றுநேரம் காத்தபின் “ஆம், நீங்கள் உணர்வதை நான் அறிவேன். ஆனால் அவர் காலடியில் தலைவைத்து மன்றாடவில்லை என்றால் நாம் நம் கடமையை செய்யாதவர்கள் என்று உணர நேரிடும்” என்றார் ஹரிதர். அவர்கள் தலையசைத்தனர். சேர்ந்துசென்று கர்ணனைக் கண்டு மன்றாடினர். விருஷசேனனும் விருஷகேதுவும் தனித்தனியாகக் கண்டு கண்ணீருடன் கோரினர். “தந்தையே, தாங்கள் களம்பட்டு இறந்தீர்கள் என்றால் அதை எங்கள் குடிப்பெருமை என்று எண்ணுவோம். தீச்சொல் விழுந்தவர்போல் இப்படி உருகி அழிவது எங்கள் கொடிவழிகள் வரை துயர்நிறைப்பது. அருள்க, தாங்கள் நஞ்சூட்டுவது தங்களுக்கு மட்டும் அல்ல” என்றான் விருஷசேனன். “அங்கம் மாவீரர் ஒருவரால் அருளப்பட்டிருக்கிறது என்று மக்கள் மகிழ்ந்திருந்த காலம் இது, தந்தையே. அவர்கள்மேல் தங்கள் சினம் என்ன?” என்றான் விருஷகேது.

அவர்களின் சொற்களைக் கேட்டு மீசையை நீவியபடி அமர்ந்திருந்த பின் ஒரு சொல்லும் உரைக்காமல் கர்ணன் எழுந்துசென்றான். விருஷகேது ஒருமுறை கண்ணீருடன் அவன் காலடியில் அமர்ந்து “செவிகொள்க, தந்தையே! ஒற்றைக்கடிவாளக் கற்றையால் ஒவ்வொரு புரவியையும் தனித்தனியாக ஆளும் உங்களுக்கு உங்கள் உள்ளம் அடங்கவில்லை என ஏற்கமாட்டேன். அளிகொள்க, தந்தையே! உங்கள் கண்ணெதிரே நாளை உங்கள் மைந்தரும் அழியவிடாதீர்கள்” என்றான். கர்ணன் அவனை நோக்கி அமர்ந்திருந்தான். அவன் இடக்கண் துடித்தது. சிவந்த விழிகளிலிருந்து புண்ணுமிழ் குருதி என நீர் வழியலாயிற்று. நெடுநேரம் ஒரு சொல் எழாமல் அவன் விழிநீருகுத்துக்கொண்டிருந்தான். பெருமூச்சுடன் விருஷகேது எழுந்துகொண்டான்.

பின்னர் திருவிடத்திலிருந்தும் யவனநாட்டிலிருந்தும் மருத்துவர்களை வரவழைத்து அவன் உடலை நோக்கச் செய்தனர். மாதக்கணக்கில் தங்கி நோக்கிவிட்டு “அவரே உளம்விழையவேண்டும், அன்றி அடிமையளித்தலுக்கு மருந்தில்லை, இளவரசே” என்றனர். “அவர் உள்ளம் நோயுற்றிருக்கிறது. அந்நோயை ஆற்றுவது மருத்துவரால் இயலாதது. அவர் அதிலிருந்து மீண்டாலொழிய இதை சீரமைக்க இயலாது.” யவன மருத்துவரான சைமர் “அவர் உள்ளம் கொண்ட எரியை இன்று இதுவே ஆற்றுகிறதென்று தோன்றுகிறது. இதை நிறுத்தினால் உயிர்துறக்கவும்கூடும்” என்றார்.

“புதைசேற்றில் மூழ்கிக்கொண்டிருக்கும் யானையைப் பார்த்துநிற்கும் துயர்” என்று ஹரிதர் சொன்னார். “நாம் அறிந்த அங்கர் இறந்துவிட்டார். உடல் சிதைநோக்கி செல்கிறது.” தனியறையில் அதைக் கேட்டு சீற்றத்துடன் எழுந்த விருஷசேனன் பின்னர் நெஞ்சில் குத்துபட்டவன்போல நடுங்கி மீண்டும் பீடத்திலமர்ந்து தலையை பற்றிக்கொண்டான். “நான் சொல்வது…” என ஹரிதர் சொல்லவர “போதும்” என்று தளர்ந்த குரலில் சொல்லி செல்லும்படி கைகாட்டினான். அவர் தலைவணங்கி வெளியேறியதும் விருஷகேது “அவர் சொல்வது சரிதான்… இன்றிருக்கும் அவரா பாரதவர்ஷமே அஞ்சும் வில்வீரர்? பரசுராமரின் முதன்மை மாணவர்?” என்றான். “போதும்” என உரக்கக் கூவி கைகாட்டினான் விருஷசேனன். சத்யசேனன் இளையவனின் தோளைப்பற்றி அடக்கினான்.

கர்ணன் காலையில் எழுந்து நீராடி ஆடை மாற்றி வந்து அமர்ந்ததுமே பொற்கிண்ணத்தில் மது வழங்கப்படவேண்டும். சிவதரே மதுக்கிண்ணங்களை கொண்டுவந்து நிரத்துவார். கோப்பையை இரு கைகளாலும் வாங்கி அவன் அருந்தும்போது காலையில் அரசுச்செய்திகளை சொல்லிவிட்டு நின்றிருக்கும் விருஷகேது விழிகளைத் திருப்பி பெருமூச்சுவிடுவான். மும்முறை அருந்தி கிண்ணத்தை வைத்து மரவுரியால் உதடுகளைத் துடைத்து கண்களை மூடி உடல் வியர்க்கவிட்டு சற்று பொழுதமர்ந்து மெல்ல மீண்டு வருகையில் அவன் முற்றிலும் மாறிவிட்டிருப்பான். அவன் இயல்புக்கு எவ்வகையிலும் பொருந்தாத கோணலான நகையொன்று இதழ்களில் ஏறியிருக்கும். உள்ளத்தில் இறுகிய ஒன்றை உந்தி அசைப்பதன் கோணல் அது எனத் தோன்றும்.

நடிப்பென்றோ பிறிதெங்கிருந்தோ வந்து பொருந்தும் இயல்பென்றோ தோன்றும் சிறுகளிப்புடன் “சொல்க மைந்தா, நாடு எங்ஙனம் உள்ளது? நான் அறிவேன் உங்கள் கையில் அங்கநாட்டின் கோல் சிறக்கும் என்று. ஆகவேதான் இங்கு ஒதுங்கிக்கொண்டேன். அஸ்தினபுரியிலிருந்து ஏதேனும் செய்தி வந்ததா? நான் செய்ய வேண்டியதென்ன?” என்பான். விருஷகேது தலைவணங்கி சொல்லத் தொடங்கும்போதே திரும்பி மீண்டும் மது ஊற்றிக்கொடுக்க சிவதரிடம் கைகாட்டுவான். சிவதர் ஊற்றிக்கொடுத்ததை கையிலேந்தியபடி “சொல்க, அங்கம் குறையின்றி இருக்கிறதல்லவா? என் வில் தேவையாகிறதா?” என்று கேட்பான். விருஷகேது “தேவையானபோது தெரிவிக்கிறேன், தந்தையே” என்றபின் வெளியே செல்வான்.

ஒவ்வொருநாளும் கர்ணனை விருஷகேது மட்டும் சென்று சந்தித்துக்கொண்டிருந்தான். பின்னர் அது குறைந்து கதிர் நாளில் மட்டும் என்றாயிற்று. பின்னர் அதுவும் இன்றி தவிர்க்க இயலா செய்தி ஏதேனும் இருந்தால் என்றாயிற்று. நாளடைவில் அரண்மனையும் அங்கநாடும் அவனை மறந்தன. சம்பாபுரியின் முதன்மை அரண்மனையில் விருஷசேனன் கூட்டும் அரசவையும் குடியவையுமே அனைத்தையும் முடிவு செய்தன. முடி சூடாமலேயே அந்நாட்டை விருஷசேனன் அரசன் என்று அமர்ந்து ஆண்டான். அவன் சொற்களும் நோக்கும் உடலசைவுகளும்கூட தந்தையைப்போன்றே இருந்தன. அளியும் ஆணவமும் சொற்சுருக்கமும்கூட கர்ணனையே காட்டின.

இளஅகவையில் கரிய நெடிய உடலும், ஒளிகொண்ட விழிகளும், சுருண்டு தோளில் பரவிய குழல்புரிகளுமாக இளங்கதிரோன் என நீலம் சுடர யானை மேலேறி நகர்வலம் வந்த கர்ணனை அவனைப்போன்றிருந்த விருஷசேனனையும் அவனைப்போலவே தோன்றிய மைந்தரையும் பார்க்கையில் சம்பாபுரியின் மக்கள் நினைவுகூர்ந்தனர். “கதிரவன் மேற்கில் மறைந்தால் மேலும் இளமையுடன் கிழக்கில் எழுந்தாக வேண்டும். தன்னை நோக்கும் பரப்பை எல்லாம் தான் என்றே ஆக்குவது அவன் ஒளி” என்று சூதர் பாடினர். “மைந்தரைப் பாடுக, அது தந்தையரைப் பாடுவதேயாகும். அரசர்கள் எனும் அலைகளுக்கு அப்பால் உள்ளது அரசன் எனும் கடல்.”

bl-e1513402911361விருஷாலி ஒவ்வொரு நாளும் கணவனை நினைத்துக்கொண்டிருந்தாள். அவளையறியாமல் எவ்வகையிலேனும் அவளில் எழும் நினைவு அது. ஒருநாள் கனவென்று, பிறிதொருநாள் எவர் சொல்லிலேனும் எழும் அவன் பெயர் அளிக்கும் திடுக்கிடல் என்று, சிலமுறை எதனுடனேனும் தொடுத்தெழும் நினைவுச்சரடு என்று, அரிதாக விடியற்காலையின் குளிரில் பெருகி எழுந்து சூழ்ந்துகொள்ளும் நினைவுகளின் பெருக்கு என்று. அவன் சொற்களை, விழிநிறைத்த தோற்றத்தை, அவனிலிருந்த மாண்பைக்கூட தன்னால் மறக்கமுடிவதையும் அவன் உதடுகள் தனக்களித்த முத்தங்கள், அவன் பெருங்கைகளுக்குள் உடல்குழைய அடைந்த நிலையிழப்புகள் மட்டுமே நாள்தோறும் கூர்கொண்டு அன்றுநிகழ்வதென, ஐம்புலனறிதல்கள் என நின்றிருப்பதையும் எண்ணி வியந்தாள்.

ஆணை உடலென்றே பெண் அறியமுடியும்போலும் என்று எண்ணிக்கொண்டாள். “ஆம் அரசி, ஆளென்று அறிந்து உடலென்று சுருங்குவதே பெண்ணுக்கு ஆண். உடலென்று ஏற்று சுவையென்று நின்று உணர்வென்று கூர்வதே ஆணுக்குப் பெண்” என்றாள் காளி. விருஷாலி பெருமூச்சுவிட்டாள். மீண்டும் அங்கு சென்று சேரவியலாதா என்று அவ்வப்போது உளம் எழுவதுண்டு. அதை உய்த்துணர்ந்ததுபோல் காளி சொன்னாள் “கடந்துவந்தவற்றை மீண்டும் சென்று இயற்றமுடியும் என்றாலும் அவ்வாறே செய்வோம். அந்தக் காற்றில் அந்தச் சுடர் அவ்வாறுதான் அசையவியலும்.” ஒவ்வொரு எண்ணக்கொந்தளிப்பையும் ஏதேனும் அன்றாடச் செயலில் முழுவிசையுடன் ஈடுபட்டுக் கடப்பதே அவள் கண்டடைந்த வழியாக இருந்தது.

சம்பாபுரியின் மரபுகளின்படி அவள் அரசனைச் சென்று பார்க்கக் கூடாது. அங்கிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு சேடி தனக்கு செய்தி கொண்டுவர வேண்டுமென்று அவள் வகுத்திருந்தாள். மீள மீள ஒரே செய்தியையே சேடியர் கொண்டுவந்தனர். புலரி எழுந்ததுமே மதுவருந்தி மிகைக்களிப்பு கொண்டு, பின்னர் உடல் சோர்ந்து துயின்று, பின் உச்சிப்பொழுதில் எழுந்து உணவுண்டு, மீண்டும் மதுவருந்தி துயின்று, அந்தியில் விழித்துக்கொண்டு, குடிக்களியாட்டுக்கென்றே வந்து சூழும் கீழ்மக்களாகிய சூதருடனோ அயல்நிலத்துப் பாணருடனோ விறலியருடனோ களியாடி நகைத்து கூத்தாடி, கீழ்மையில் திளைத்து பின்னிரவில் நின்ற இடத்திலேயே அமர்ந்து உடல்நீட்டி அவ்வண்ணமே துயின்று ஏவலரால் தூக்கிக் கொண்டுசென்று மஞ்சத்தில் படுக்க வைக்கப்பட்டான்.

“அரசி, அங்கு நிகழ்வதொன்றே. அரசர் தன்னை கீழ்மகன் என்றாக்க முயல்கிறார். நான் கீழ்மகன், ஆட்டன், களியன் என்று கூவிச்சொல்கிறார். நெஞ்சிலறைந்து தெய்வங்களை நோக்கி வெல்விளி எழுப்புகிறார்” என்றார் ஹரிதர். “அக்கீழ்மைக் களியாட்டுகளை குடிப்பிறந்தோர் ஒருவர் சற்று பொழுதுகூட நோக்கி இருக்க இயலாது. மானுட அசைவனைத்தையும் கேலிக்குரியனவாக ஆக்கும் குரங்குகளைப்போன்று இங்கு திகழும் அறங்களனைத்தும் அங்கு கீழ்க்கூத்தென்று நடிக்கப்படுகின்றன. அதற்கென்றே நாடெங்குமிருந்து வந்து குழுமுகிறார்கள் ஆட்டரும் களிமக்களும்.” அவள் கண்கலங்கி நோக்கியிருக்க “குடியில் என்ன நிகழ்கிறது என நான் வியப்பதுண்டு? தன்னை தலைகீழாக்க மானுடன் கொள்ளும் உள்விழைவை தொட்டு முளைக்கவைக்கிறதா மது? தலைகீழாக நின்று இவ்வுலகையே அவ்வண்ணம் திருப்பிக்கொள்கிறார்களா?” என்றார்.

நாளடைவில் அவள் நிகழ்வன ஒவ்வொன்றாக தவிர்த்துக் கடந்துசென்று அவன் கை பற்றி அங்கு வந்து சேர்ந்த நாட்களை மீட்டெடுத்து தன் அரண்மனைக்குள் அந்த முகத்தை நிறுத்திகொண்டாள். என்றோ ஒருநாள் அந்தக் கர்ணனைக் குறித்து அவள் சொன்னபோது விறலியான சம்பை “அரசி, நீங்கள் இப்பொழுதுபோல் உளம் மகிழ்ந்து அவருடன் அன்று இருந்ததில்லை” என்றாள். விருஷாலி விழிசுருக்கி “என்ன சொல்கிறாய்?” என்றாள். “இந்த அரண்மனையில் உங்கள் அன்பின்பொருட்டு அவர் வந்து காத்து நின்றிருந்ததை நான் அறிவேன். காதலன் என்றோ கணவன் என்றோ நீங்கள் அவரை கண்டதே இல்லை. அரசர் எனக் கண்டு அடிமையென பணிந்து எழுந்தீர்கள்” என்றாள் சம்பை.

அவள் நெஞ்சு அறைபட தலைதிருப்பிக்கொண்டாள். சம்பை “இன்று நீங்கள் மீட்டெடுத்து நிறுவியிருக்கும் இந்த அங்கர் உங்கள் இளமையின் தனிமைக் கனவுகளில் வாழ்ந்தவர். இந்தக் காதலின் ஒரு துளியையேனும் அன்று அவருக்கு அளித்திருக்கலாம். இன்று அவர் அக்கோப்பையில் ஊற்றி ஊற்றி அருந்திக்கொண்டிருப்பது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவர் மீது பெய்த வெறுமையை அல்லவா?” என்றாள். சினந்து எழுந்து “செல்க!” என்றாள் விருஷாலி. “எண்ணுவதை உரைத்தாகவேண்டும் என்பது விறலியின் கடன்” என்று சம்பை சொன்னாள். உரத்த குரலில் “செல்க!” என்றபின் கைநீட்டி மூச்சிரைத்தாள்.

“இதையே கலிங்கத்தரசி கேட்டாலும் சொல்வேன், அரசி. அவர் மைந்தரை கருவுற்றபோதுகூட எவர் மைந்தர் மூத்தவர் என முடிபெறுவார் என்ற கணிப்புகள் மட்டுமே உங்களை ஆட்டுவித்தன” என்று சம்பை தொடர்ந்தாள். “உங்கள் குருதியில் பிறந்த மைந்தர் அரசனாவார் என்றால் நீங்களும் இயல்பாக அரசகுடியாவீர்கள் என எண்ணினீர்கள். அன்றைய உளச்சிறுமையில் வருநாளின் எழுதல் குறித்து அவ்வண்ணம் கனவுகண்டீர்கள்.” அவள் நீர்பரவிய விழிகளுடன் விறலியை நோக்கி அமர்ந்திருந்தாள். “இன்று அந்த அங்கநாட்டரசர் எவ்வண்ணம் உங்களுக்கு உவப்புக்குரியவர் ஆகிறார்? ஏனென்றால் இன்று நீங்கள் உங்களை அரசியென்று உணரத் தொடங்கிவிட்டீர்கள். பொற்குறடுகள் மேல் தயக்கமின்றி கால்வைத்துச் செல்கிறீர்கள். துயிலுக்கு முன் அருமணி நகைகளை சலிப்புடன் கழற்றி அப்பாலிடுகிறீர்கள்” என்றாள் விறலி.

“இழந்தவை மீளாது என்பதை மீளமீளச் சொல்வதே என்றும் கவிதையின் வழி. வாழ்க வாழ்க என்று மானுடரிடம் கிணையும் யாழும் முழக்கி சொல்லிக்கொண்டிருக்கிறோம் பாணரும் விறலியரும். எனினும் காலத்தை நழுவவிட்டு கடந்துசென்று திரும்பி ஏங்குவதையே மானுடரில் பெரும்பாலானவர்கள் இன்பம் என கொண்டிருக்கிறார்கள்.” விருஷாலி பெருமூச்சுவிட்டு தோள்தணிய அமர்ந்திருந்தாள். பின்னர் “நீ சொன்னது மெய் விறலி, ஆனால் நான் பொன்னாலோ முடியாலோ புகழ்மொழியாலோ இவ்வண்ணம் ஆகவில்லை” என்றாள்.

அவள் விழிகளை நோக்கி “என் மைந்தன் அவர் உருவில் எழுந்தபோதுதான் நான் உணர்ந்தேன், அவர் எனக்குரியவர் என” என்றாள். விறலி “அவ்வண்ணமென்றால் நீங்கள் உளம்கொண்டிருக்கும் அங்கர் அவரல்ல, உங்கள் மைந்தனே” என்றாள். நெஞ்சு திடுக்கிட்டாலும் மேலே சொல்லெடுக்க விருஷாலியால் இயலவில்லை. விறலி எழுந்து தலைவணங்கி விடைபெற்ற பின்னரும் நெடுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள். அப்போது தன் உள்ளம் சென்றடைந்த இடத்தை உணர்ந்ததும் அவள் திடுக்கிட்டாள். அதை தன்னிடமிருந்து அகற்ற முயன்றபின் ஆம் என பெருமூச்சுவிட்டாள்.

அன்று மாலை அணிகளைந்து ஆடைமாற்றி துயில்கொள்ளப் போகும்போது அணிச்சேடியிடம் “கலிங்கநாட்டரசியிடம் அணுக்கமான எவரையேனும் நமக்குத் தெரியுமா?” என்றாள். அணிச்சேடி “நான் ஓராண்டு அங்கே அணிசெய்துகொண்டிருந்தேன், அரசி” என்றாள். அதை முன்னரே அறிந்திருப்பதை விருஷாலி அப்போது நினைவுகூர்ந்தாள். உள்ளத்தின் ஆழமே முன்செல்கிறது, அலைகளாலான மேல்பரப்பு அஞ்சியும் பிந்தியும் அறியாததென நடித்தும் தொடர்கிறது. “அங்கே அரசர் எவ்வகையிலேனும் இருக்கிறாரா?” என்றாள். “அரசி?” என அவள் புரியாமல் கேட்டாள். “இங்கு அரசர் இருப்பதை நீ அறிவாய் அல்லவா?” என்றாள் விருஷாலி. “ஆம், அரசி” என்றாள் சேடி. “அதைப்போல அங்கு அவர் இருக்கிறாரா?”

சேடி சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு “அவர்களுக்கும் மைந்தர்கள் இருக்கிறார்கள், அரசி” என்றாள். முதல் கணம் அந்த மறுமொழி சீற்றத்தை ஏற்படுத்தியது. உடனே அது பொருத்தமான கூற்று என்றும் தோன்றியது. அதை எண்ணிக்கொண்டு அன்று முழுக்க மஞ்சத்தில் துயிலாது படுத்திருந்தாள். பின்னர் சுப்ரியையாக மாறி அவ்வரண்மனையில் வாழ்ந்தாள். அது மிக எளிதாக தோன்றியது. ஏனென்றால் அங்கே அவள் மைந்தர்களாக இருந்தவர்களும் அதே முகம் கொண்டிருந்தனர்.

மறுநாள் விறலியிடம் அவள் அதைக் குறித்து கேட்டாள். “அவளும் இழந்ததில் வாழ்வாள் போலும், விறலி” என்றாள். “அனைவரும் அவ்வாறுதானே வாழ்கிறார்கள், அரசி?” என்றாள் விறலி. “அனைவருமா?” என்றாள் விருஷாலி. “ஆம், அவ்வாறல்ல எனில் ஒரு சொல்லும் காவியம் கற்றிருக்கலாகாது. அணியும் ஆடையும் அகச்சொல்லும் ஆக நம்மை நிறைத்திருக்கும் காவியம் நம்மை நடைகாலத்திலிருந்து அகற்றுகிறது” என்றாள் விறலி. விருஷாலி விழித்து நோக்கி அமர்ந்திருக்க “அன்றேல் காவியம் முழுத்துச் சூழ்ந்து நம் அணிகளை, ஆடைகளை, அகச்சொற்களை ஒவ்வொன்றாகக் கழற்றவேண்டும், அரசி” என்றாள்.

முந்தைய கட்டுரைஅகாலக்காலம்
அடுத்த கட்டுரைஇரவு ஒரு கடிதம்