பட்டியல்கள்…

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னர் நான் திண்ணை இணையதளத்தில் முக்கியமான நாவல்கள் மற்றும் சிறுகதைகளின் பட்டியல் ஒன்றை அளித்தேன். அந்தப்பட்டியல் இப்போது என் இணையதளத்தில் இருக்கிறது. பலரும் ஏற்றோ மறுத்தோ ஒவ்வொரு முறையும் மேற்கோள்காட்டுவது அது. என் இணைய தளத்தில் எப்போதும் அது வாசிக்கப் பட்டு கொண்டே இருக்கிறது

இன்று அந்தப்பட்டியல் பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிந்ததாக உள்ளது. அதை ஏற்றோ மறுத்தோ வேறு பட்டியல்கள் வெளியாகின்றன. இந்தப்பட்டியல்களின் நகல்களுடன் புத்தகச்சந்தைகளுக்கு வரும் ஏராளமானவர்களை நான் கண்டிருக்கிறேன், பதிப்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். இப்பட்டியல்களில் இடம்பெற்ற ஏறத்தாழ எல்லா ஆக்கங்களும் மறுபதிப்பாகி விட்டன இப்போது.

நான் இந்திய இலக்கியங்கள் வரிசையில் எழுதிய கட்டுரைகளில் [’கண்ணீரைப் பின் தொடர்தல்’ நூல்] அளித்த நாவல் பட்டியலில் உள்ள நாவல்கள் இன்று மீண்டும் பரவலாக வாசிக்கப்படுகின்றன. அவற்றில் கணிசமானவை முப்பது நாற்பது வருடங்களாக மறுபதிப்பு காணாதவை. அவை மறுபதிப்புக்கு வந்துள்ளன. சம்பந்தப்பட்ட பதிப்பாளர்கள் எனக்கு நன்றி சொல்லி எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் இந்தப்பட்டியல்களை நான் அளித்த காலகட்டத்தில் எத்தனை எதிர்ப்புகள், வசைகள். தமிழையே அழிக்கக்கூடிய ஒரு மாபெரும் சதிவேலையை நான் செய்வதாக சொல்லப்பட்டது. விடப்பட்ட ஒவ்வொரு நூலும் ஒரு கிளாசிக் என்றும் நான் அவற்றை விடுவதற்கே இப்பட்டியலை அளிப்பதாகவும் சொன்னார்கள். என்னுடைய நாவல்களைப் பட்டியலில் சேர்த்தமை மிகமோசமான சுயவிளம்பர உத்தி என்றார்கள். கடைசியாக பட்டியல் போடுவதே ஒரு கேவலமான உத்தி, செய்யவே கூடாது என்றார்கள். அப்படி சொன்னவர்கள் எல்லாம் இன்றும் அதே வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். வேறு விஷயங்களில். அவர்களால் அவற்றை மட்டுமே செய்ய முடியும்.

நான் அப்போது மீண்டும் மீண்டும் விளக்கினேன். உலகம் முழுக்க இந்த வகையான பட்டியல்கள் போடப்படுகின்றன என்றும், அது தரமான வாசிப்பை உருவாக்குவதற்கான வழிமுறை என்றும் சொல்லிப் பல பட்டியல்களைச் சுட்டிக்காட்டினேன். எந்த பட்டியலும் முழுமையானதாக இருக்காது, ஆகவே என் பட்டியலுடன் உடன்படாதவர்கள் இன்னொரு பட்டியல் போடலாம், அவ்வாறு பல பட்டியல்கள் வரும்போதுதான் தரமான நூல்களுக்கான ஒரு பொது தெரிவு உருவாகும் என்றேன்.

என்னுடைய பட்டியல்கள் ஒரு தெளிவான இலக்கிய அளவுகோலின் அடிப்படை கொண்டவை, அதன் அடிப்படையில் ஒரு விமர்சகனாக நான் முன்வைக்கும் படைப்புகளில் என் ஆக்கங்கள் இருக்க கூடாதென்றில்லை, இது தீர்ப்பு அல்ல, இது ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் வெளிப்பாடே என்றேன்.

இன்று யோசிக்கும்போது வேடிக்கையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஒரு சர்வசாதாரணமான விஷயத்தை, உலகமெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒன்றை, தமிழில் செய்வதற்கு எத்தனை எதிர்ப்புகளை , எத்தனை அவதூறுகளை சந்திக்கவேண்டியிருக்கிறது. எவ்வளவு விளக்க வேண்டியிருக்கிறது!

ஆர்வி நூல்விவாதங்களுக்கான அவரது இணையதளத்தில் அளித்துள்ள ஒரு பட்டியலும் அதன் மீதான விவாதங்களும் இவற்றை எண்ணச்செய்தன

முப்பது வயதுக்குள் படிக்க வேண்டிய முப்பது புத்தகங்கள்

சிறுகதை பட்டியல்

நாவல் பட்டியல்

கவிதைகள் பட்டியல்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைவிக்கிலீக்ஸும் நீரா ராடியாவும்