வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–56

பகுதி ஒன்பதுகதிர் இருள் பொழுது – 1

bl-e1513402911361அஸ்தினபுரியிலிருந்து சுஜாதன் வந்திருப்பதை அங்கநாட்டின் பேரமைச்சர் ஹரிதர் விருஷசேனனின் அவையிலிருந்து நேரில் வந்து உரைத்தபோதுதான் விருஷாலி அறிந்தாள். அஸ்தினபுரியிலிருந்து சுஜாதன் முந்தைய நாள் மாலையிலேயே சம்பாபுரிக்கு வந்தான் என்றும், சம்பாபுரியின் அரசப்பெருமாளிகையில் விருஷசேனனும் உடன்பிறந்தாரும் அமர்ந்து பின்னிரவு வரை சொல்சூழ்ந்தனர் என்றும், மறுநாள் சம்பாபுரியின் குடிப்பேரவை ஒன்று கூட்டப்பட்டு அதில் அஸ்தினபுரியில் நிகழ்ந்தவை அனைத்தையும் சுஜாதன் விரித்துரைத்தான் என்றும் ஹரிதர் சொன்னார்.

“நம் அரசரை அஸ்தினபுரியின் அரசவைக்கு அழைக்கவில்லை. ஷத்ரிய படைக்கூட்டை அறிவிக்கும் பேரவையிலும் அமரச்செய்யவில்லை. அதைக் குறித்து அங்கநாட்டில் அலர் பரவியிருப்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள், அரசி” என்றார் ஹரிதர். விருஷாலி “ஆம், மக்கள் சினம்கொண்டிருப்பதாக என் சேடி சொன்னாள்” என்றாள். “அதுவே மேற்பரப்பில் தெரிவது, அது உண்மையல்ல. கணவனிடம் மனைவி கொண்டிருப்பது போன்றது அரசனிடம் குடிகள் கொண்டுள்ள உறவு. பிறிதொருவருக்கு மனைவியாகி நெஞ்சுநிறைவுற மடிபெருக வாழ்ந்தாலும் அவர்களின் ஆழம் முதலுறவிலேயே நின்றிருக்கும் என்பார்கள்” என்றார் ஹரிதர். அவர் சொல்ல வருவதென்ன என்று விருஷாலிக்கு புரியவில்லை.

“அங்கநாட்டின் தொல்குடிகள் இன்னும் முந்தைய அரசரையே நெஞ்சில் நிறுத்தியிருக்கிறார்கள். அவர் செய்த கீழ்மைகளும் விளைவித்த அழிவுகளும் காலப்போக்கில் அவர்களின் உள்ளத்திலிருந்து மறைந்துவிட்டன. அவர் தீர்க்கதமஸின் மைந்தர், காக்‌ஷீவானின் குருதி, லோமபதரின் வழிவந்தவர் என்னும் வரிசை மட்டுமே நினைவில் உள்ளது. மகளிரும் நம் அரசர் இங்கு வந்தபின் பிறந்த இளையோரும் மட்டுமே நம் அரசர்மேல் பெரும் பற்று கொண்டிருக்கிறார்கள். நம் அரசர் பெற்ற வெற்றிகளும் கொண்டுவந்த செல்வமும் முந்தைய அரசகுடிமேல் பற்று கொண்டவர்களின் நாவை வென்றன என்பது மெய். ஆனால் எல்லா அவையிலும் முந்தைய அங்கநாட்டு அரசர் சத்யகர்மரை விலக்கி நம் அரசர் முடிகொண்டதைப் பற்றிய ஒரு கசந்த கூற்றேனும் எழுந்து வராமலிருப்பதில்லை. நம் அரசரின் வெற்றிச்சிறப்பைச் சொல்லி அதை மறுப்பார்கள் இளையோர். ஆனால் இன்று இந்நிகழ்வு மூத்தகுடியினருக்கு வாய்க்குகந்ததாக அமைந்துவிட்டது.”

“குடிப்பெருமை இல்லாதோர் ஆட்சிசெய்தால் எத்தனை வீரமும் கொடையும் புகழும் கொண்டிருந்தாலும், எப்படி கருவூலம் செழித்தாலும், காவியம் பெருகினாலும் அரசர் அவைகளில் பெருமை கிடைக்காது என்று சொல்லத் தொடங்கிவிட்டனர். அத்துடன்…” என ஹரிதர் சற்று தயங்கி “நம் பட்டத்து இளவரசர் விருஷசேனர் தங்கள் மைந்தர். இளைய அரசியின் மைந்தரான விருஷகேதுவே மேலும் தூய குருதிகொண்டவர், அவர் முடிசூடினால் சற்றேனும் அவைச்சிறப்பு இருக்கும் என்று சொல்பவர்களின் நிரை ஒன்றும் இங்கிருந்தது என அறிந்திருப்பீர்கள்” என்றார். “ஆம்” என்றாள் விருஷாலி. “உண்மையில் இதை நானே சொன்னேன். மூத்தவனே அரசாளவேண்டும். குடிச்சிறப்பு நோக்கி இளையவனை நான் அவையமைத்தால் நான் முடிசூடிய அடிப்படையை நானே தகர்த்தவனாவேன் என்றார் அரசர்.”

“ஆம், அவர் சொல்வதே மெய். அத்துடன் மூத்தவரைக் கடந்து முடிசூட இளையவர் ஒருபோதும் ஒப்பவும் மாட்டார். அவர்கள் தந்தையைப் போலவே தலையெடுப்புள்ள மைந்தர்கள்” என்றார் ஹரிதர். “அரசி, முன்னரே இங்குள்ள குடிப்பழைமையோரின் அச்சொல்லுக்கு சிறுமன்றுகளில் செவியிருந்தது, இப்போது ஷத்ரியப் பேரவையில் நம் அரசர் முற்றாகவே தவிர்க்கப்பட்ட பின் அதை நோக்கி திரும்புவோர் பெருகிவிட்டிருக்கிறார்கள்” என்றார் ஹரிதர். “அஸ்தினபுரியின் படைத்துணையும் அவைத்துணையும் மட்டுமே நமக்கு தாங்கென இருந்தது. அதையும் நாம் இழந்துவிட்டோம் என உணர்கிறார்கள் நம்மைச் சார்ந்தோர்.”

“அது எப்படி? அஸ்தினபுரியின் அரசர் இன்றும் தன் உடன்பிறந்தவர் என்றே நம் அரசரை கொள்கிறார்” என்றாள் விருஷாலி. “அரசி, அஸ்தினபுரியின் அரசர் விரும்பியிருந்தால் ஷத்ரியப் பேரவையில் முதன்மை படைத்தலைவர்களில் ஒருவராக முன் வைத்திருக்க முடியும். அங்கு கூடியிருந்த அரசர்கள் அவரை மண்ணெழுந்த தெய்வம் என்று வணங்கிய தருணம் அது. முடி கொண்ட அரசர்கள்கூட எளிய குடிமக்கள்போல கைகூப்பி ஆர்த்து கண்ணீர் மல்கி கொந்தளித்தனர் என்கிறார்கள். ஆனால் அவர் அதை செய்யவில்லை. அவருக்குத் தெரியும், அவையை அவர் முற்றிலும் வெல்வார் என. ஆயினும் நம் அரசரை அவர் அவைக்கு அழைக்கவேயில்லை” என்றார் ஹரிதர்.

விருஷாலி “அது ஏன் என்று நானும் குழம்பினேன்” என்றாள். “அது கணிகரின் கணிப்பு, அரசி. அஸ்தினபுரியின் படைக்கூட்டில் நம் அரசரை முன்வைத்து ஒரு விரிசல் எழவேண்டாம் என்று அவர் எண்ணியிருக்கலாம். அதை அஸ்தினபுரியின் அரசர் ஏற்றதுதான் விந்தை. எவருமறிந்த ஒன்றுண்டு, போர் என ஒன்று நிகழ்ந்தால், மறுபக்கம் அர்ஜுனன் இருக்கும்வரை இப்பக்கம் அங்கர் இருந்தாக வேண்டும். அவர்களே வந்து அடிபணிந்து அழைப்பார்கள். ஆனால் அவைக்கு அழைக்கவில்லை என்பது எளிதாக விட்டுவிடத் தக்கதன்று. அரசரின் அவையில் அவர் அமரவில்லை என்றால் நாளை படையெழுச்சியில் நம் அரசரின் இடம் என்ன? அவர்களின் ஆணைக்கேற்ப வில்லுடன் செல்லும் காவல்வீரரா?” என்றார் ஹரிதர். “அத்துடன் இங்குள்ள ஒரு போர்நெறியையும் நாம் அறிவோம். சூதர் படைக்கலம் ஏந்தக்கூடாது. ஏந்தி களம்புகுந்தாலும் ஷத்ரியர்களுடன் ஒற்றைநேர்ப் போரில் ஈடுபடக்கூடாது. நம் அரசர் ஷத்ரிய அவையில் அமரச் செய்யப்படவில்லை என்பதைச் சுட்டியே அவருடன் நேர்ப்போரிட பாண்டவர் தரப்பின் ஷத்ரியர் மறுக்கக்கூடும்.”

ஏளனத்துடன் முகம் சுளித்து “போர் முதிர்கையில் பாண்டவர்களின் அம்புகளைக் கண்டு அஞ்சி ஓடிவந்து நம் அரசரின் காலில் விழுந்து மன்றாடுவர். அஸ்தினபுரியின் மணிமுடியை வேண்டுமென்றாலும் அவருக்கு அளிக்க முன்வருவர்” என்றாள் விருஷாலி. “ஆம், அதுவே நிகழும் என நாம் அறிவோம். ஆனால் அச்செயல் காலப்போக்கில் நாவும் செவியும் அறியாது மறையும். வென்றார் பக்கம் சாய்வதும் உயர்குடியினருடன் நிற்பதும் சூதர்களின் இயல்பு. நம் அரசர் வில்லுடன் சென்றார் என்பதே நிற்கும். இன்று ஷத்ரியர் அவையில் வென்றபின் கொள்ளும் நிலத்தில் அவருக்கான உரிமை ஏட்டெழுத்தால் வகுக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர் அங்கே அரசர் என இணைநின்றார் என்று ஆகும். அச்சொல் அளிக்கப்படவில்லை. அரசி, படைக்கூட்டின் தலைவரென துரியோதனர் ஷத்ரியப் பேரவையில் அளிக்கும் சொல்லுக்கே மதிப்பு. தனியறையில் நிகழும் தழுவல்களும் நெகிழ்வுரைகளும் அரசியலில் எவ்வகையிலும் பொருளற்றவையே” என்று ஹரிதர் சொன்னார்.

“ஆம்” என விருஷாலி பெருமூச்செறிந்தாள். பெருமூச்சுடன் “சிறுமைகளினூடாக எழுந்து வந்தவர் நம் அரசர். இத்தகையதோர் சிறுமையை அவர் இதுவரை பெற்றதில்லை” என்று ஹரிதர் சொன்னார். சற்றுநேரம் எண்ணி ஆழ்ந்திருந்த பின் “அவர் ஷத்ரியர் அல்ல என்று அஸ்தினபுரியின் அரசர் அந்த அவையில் உரைத்தாரா?” என்று விருஷாலி கேட்டாள். “இல்லை அரசி, சுயார்ஜித நெறிப்படி அங்கநாட்டரசர் ஷத்ரியரே என்றும், அதை நிறுவும் பொருட்டு படைக்கலம் ஏந்தி களம் நிற்கவும் தான் ஒருக்கமே என்றும்தான் அவர் உரைத்தார். உண்மையில் அவையில் அவ்வாறு உரைப்பதன் பொருட்டே இளைய யாதவரையும் ஷத்ரியர் என்று ஏற்று அரசருக்குரிய அனைத்து முறைமைகளுடனும் அவையமர்த்தினார் என்கிறார் சுஜாதர்” என்றார் ஹரிதர்.

“ஆயினும் அந்த ஷத்ரிய படைக்கூட்டின் முதன்மை படைத்தலைவர்களில் நம் அரசர் இல்லை என்பது மட்டுமே கையும் விழியும் தொடும் உண்மை. எளிய குடிகள் அதையே அறிகிறார்கள். சித்தம் சென்று சேரும் உண்மைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்கவியலாது” என்றார் ஹரிதர். விருஷாலி “ஆனால் அவர் இன்றிருக்கும் நிலையில் படை நடத்த இயலும் என்று நான் எண்ணவில்லை” என்றாள். ஹரிதர் “முகில் மூடியிருந்தாலும் கதிரவன் ஒளியிலான் ஆவதில்லை. அதை அறியாத ஓர் புல்லிலைகூட இப்புவியில் இல்லை” என்றார். “மெய்யாகவே அவர் மீளமுடியுமென நினைக்கிறீர்களா?” என்று விருஷாலி கேட்டாள். “அரசி, அவரை மாவீரரென்றாக்கியது வஞ்சம். அது மீண்டுமெழுமென்றால் அவர் முந்தைய அங்கநாட்டரசரே ஆகிவிடுவார்.”

விருஷாலி பொருள்நிகழா விழிகளால் அவரை நோக்கிவிட்டு வெறுமனே தலையசைத்தாள். “சுஜாதர் வந்திருப்பது நம் அரசரை நேரில் சந்திக்கும் பொருட்டு. அவரை மீண்டும் அஸ்தினபுரிக்கு கொண்டுசென்று அரசரின் முன் நிறுத்த விரும்புகிறார். படைக்கூட்டை தான் தலைமை தாங்கி நடத்தபோகிறோமா இல்லையா என்று நம் அரசர் அஸ்தினபுரியின் அரசரிடம் நேரில் கேட்கவேண்டுமென்கிறார் சுஜாதர்.” விருஷாலி “அழைப்பின்றி அங்கு சென்று கேட்கவேண்டும் என்றா?” என்றாள். “அவ்வாறல்ல, படைக்கூட்டில் தன் இடம் என்ன என்பதை நம் அரசர் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். தொல்குடி நாடுகளின் நிரையில் என்றும் அங்கம் இருந்துள்ளது. அங்கம் அமராத ஷத்ரியப் பேரவை முழுமையுடையதும் அல்ல.”

விருஷாலி பெருமூச்சுடன் “அவரிடம் யார் அதை சொல்வது? முறைப்படி நான் அவரைச் சென்று சந்திக்கக் கூடாது” என்றாள். “ஆம், ஆனால் நாளை கதிர்பெயர்வு பூசனை நிகழவுள்ளது. கதிரவன் ஆலயத்திற்கு அரசரை கூட்டி வருகிறேன். தாங்கள் அவரை அங்கு சந்திக்கலாம். தங்கள் சொல் அவர் செவியில் விழலாம்” என்றார் ஹரிதர். விருஷாலி “அமைச்சரே, நான் அவரை தனிமையில் சந்தித்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. அரசவிழவுகளில் அருகமர்வதொழிந்து அவரிடம் தனியாக ஒரு சொல்கூட உரைத்ததில்லை. அவருடன் எப்படி சொல்சூழ்வதென்பதையே மறந்துவிட்டிருக்கிறேன்” என்றாள். பின் தயங்கி கைநகங்களை நோக்கி “ஒருவேளை அவளை அவர் சந்திக்கக்கூடும். அவள் ஷத்ரியப்பெண். அரசுசூழ்தல் அறிந்தவள்” என்றாள்.

ஹரிதர் “தாங்களே அறிவீர்கள், தங்களிடம் உள்ள அணுக்கம்கூட அவருக்கு இளைய அரசியிடம் இல்லை. அவர் அவர்களை நேரில் சந்தித்து இரண்டாண்டுகளுக்கு மேலாகிறது” என்றார். விருஷாலி அந்த மறுமொழியில் நிறைவுற்று “ஆம், அதை சொன்னார்கள். அவர் உலகில் இன்று பெண்களே இல்லை என்றே அறிந்தேன்” என்றாள். தான் சொன்னது மிகையாகிவிட்டது என உடனே உணர்ந்து அதை எப்படி ஈடுசெய்வதென்று அகம்தவித்தாள். ஆனால் ஹரிதர் அச்சொற்களைக் கேட்டதாகவே விழிகாட்டாமல் “அவர் ஆலயத்திற்கு வருகையில் அங்கு சுஜாதரும் வருவார். ஆலயமென்பதால் அரசர் மது அருந்தா நிலையிலிருப்பார். தங்கள் சொற்கள் அவர் செவிகளை சென்று அடையக்கூடும்” என்றார்.

“பார்ப்போம். ஆனால் இதனால் என்ன நிகழக்கூடும்?” என்று விருஷாலி கேட்டாள். “அரசர் அங்கநாட்டிலிருந்து அஸ்தினபுரி சென்று ஓராண்டாகிறது. நம் அரசரின் அகத்தில் துயர்நிறைத்த அந்த அவைச்சிறுமை நிகழ்ந்து பதின்மூன்றாண்டுகள் அவர்கள் ஒருமுறைகூட நோக்கிக்கொள்ளாமல் பிரிந்திருந்தனர். பின்னர் விராடபுரிக்கு படை கொண்டு சென்றபோது அஸ்தினபுரியின் கோரிக்கைக்கு ஏற்ப மீண்டும் இணைந்தனர். அப்போரில் நம் அரசரின் படைக்கலங்கள் கை நழுவி போர்வெற்றி குலைந்ததனால் அஸ்தினபுரியின் அரசர் நம் அரசரை நோக்கி கடுஞ்சொல் உதிர்த்ததாகவும், அரசர் உளம்வருந்தி மறுசொல்லின்றி திரும்பி இங்கு வந்ததாகவும் சொல்கிறார்கள். மெய்யா என்று சொல்லத் தெரியவில்லை, நான் அதை ஏவலரிடமிருந்தே அறிந்தேன்” என்றார்.

“என்னிடமும் எதுவும் சொல்லப்படவில்லை” என்றாள் விருஷாலி. “ஆனால், அந்தப் பதின்மூன்றாண்டுகளில் அஸ்தினபுரியின் படையுடன் சென்று பெரும் படைவல்லமை கொண்ட பாஞ்சாலம் உட்பட பதினெட்டு நாடுகளை வென்று கப்பம் கட்டவைத்திருக்கிறார் நம் அரசர். இப்போது அங்கு ஷத்ரிய அவையில் அமர்ந்திருந்த அரசர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நம் அரசரின் முன் படைத்தோல்வி அடைந்து காணிக்கையும் கப்பமும் கொண்டு வைத்து முடிகவிழ்த்து வணங்கி மீண்டவர்கள். அஸ்தினபுரி இன்று கொண்டுள்ள கருவூலநிறைவும் படைமாண்பும் நம் அரசரின் கொடையாலேயே. அதை அறியாதவர்கள் பாரதவர்ஷத்தில் எவருமில்லை.” ஹரிதர் “ஆம், அதை பிற எவரையும்விட துரியோதனர் அறிவார்.  இருவரையும் அருகமர்ந்து தோள் தழுவச்செய்தால் பிறிதொன்று நிகழக்கூடும். சுஜாதர் விரும்புவது அதையே” என்றார்.

விருஷாலி “நன்று நிகழ்ந்தாகவேண்டும். அவர் இன்றிருக்கும் நிலையிலிருந்து எதன்பொருட்டு எழுந்தாலும் அது நன்றே” என்றாள். “முயல்வோம் அரசி, அதை சொல்லிச்செல்லவே வந்தேன்” என ஹரிதர் எழுந்தார். அவர் தலைவணங்கி விடைகொள்ள விருஷாலி மெல்லிய குரலில் “அவளிடம் சொல்லிவிடலாமே” என்றாள். ஹரிதர் நிமிர்ந்து நோக்கினார். விருஷாலி “அவளும் உடனிருக்கட்டும். அவர் மீண்டெழுவது எங்கள் இருவருக்குமே நன்று அல்லவா?” என்றாள். ஹரிதர் “ஆம், அரசி” என்றார். அவள் “மேலும் அவள் ஷத்ரியப்பெண். அவரை அவையமரச் செய்யாமை என்னைவிட அவளையே மேலும் புண்படுத்தியிருக்கும்” என்றாள். ஹரிதர் புன்னகைத்து “ஆம்” என்றார்.

அவர் கிளம்பும்போது விருஷாலி மேலும் ஓரிரு அடிகள் முன்னால் வந்து “மறுக்கப்படுவதன் மேல் விழைவுகொள்வது மானுட இயல்பு. அவள் ஷத்ரியப்பெண் என்பதனாலேயே அவர் உள்ளத்தில் அவளுக்கு இடம் சற்று மிகுதியாக இருக்கவும்கூடும்” என்றாள். ஹரிதர் நிமிர்ந்து அவள் விழிகளை நோக்கிவிட்டு “நான் அதை அறியேன், அரசி” என்றார். அவள் பெருமூச்சுவிட்டு “நன்று” என்றாள். அவர் மீண்டும் ஒருமுறை தலைவணங்கிவிட்டு வெளியேறினார்.

bl-e1513402911361கர்ணனை சந்திக்கவிருப்பது விருஷாலியை முதலில் உவகை கொள்ளச்செய்தது. அந்தச் சந்திப்பை உள்ளத்தில் நிகழ்த்திக்கொள்ளத் தொடங்கியதும் மெல்ல அவள் துணிவிழக்கலானாள். ஏன் அதை ஒப்புக்கொண்டோம் என்று எண்ணி நிலையழிந்து ஆடையைப்பற்றி கசக்கியபடி, உப்பரிகைகளிலும் இடைநாழிகளின் சாளரங்களிலும் நின்றபடி சரிந்த விழிகளுடன் அவள் அரண்மனையில் சுற்றிவந்தாள். ஹரிதரிடம் சேடியை அனுப்பி தன்னால் இயலாது என்று சொல்லிவிடலாமா என இருமுறை சேடியை அழைத்தபின் தயங்கி கையசைத்து அவளை வெளியேறச் சொன்னாள். கர்ணனிடம் இயல்பாகப் பேசிய நாளையே அவளால் நினைவுகூர முடியவில்லை. அது வேறு கர்ணன், அன்றிருந்த விருஷாலியும் வேறு ஒருத்தி. இத்தனை காலத்தில் அவள் வளர்ந்து விரிந்து பிறிதொருத்தியென்று ஆகிவிட்டிருந்தாள்.

வளர்ச்சியா? பாறையிடுக்கில் வளர்ந்த ஆலமரம். வழிந்தும் சுழன்றும் கவ்வியும் இடைவெளியிலும் வெடிப்புகளிலுமெல்லாம் வேரோடியது. அந்த ஒப்புமையை பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கநாட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு ஒரு பூசனைக்காக சென்றுகொண்டிருந்தபோது வழியருகே நின்ற ஆலமரத்தைக் கண்டு அடைந்தாள். ஆலமரத்து வேர் பாறைவளைவில் நீர் என வழிந்திருந்தது. வெடிப்புகளில் பிரிந்து செறிந்திருந்தது. தேர் செல்லத் தொடங்கியபின் அதன் பிடிக்குள் இருந்த பெரும் கற்பாறையை விழிகளுக்குள் கண்டாள். வானிலிருந்து ஒரு கழுகின் உகிர் அதை பற்றியிருப்பதுபோலத் தோன்ற திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். பெருமூச்சுடன் தலையை அசைத்து அந்த விழிப்பாவையை சித்தத்தால் கலைத்தாள்.

அந்த ஒப்புமையை பின்னர் முதுசேடி காளியிடம் சொன்னாள். அவள் நரைத்த கண்கள் ஒளிகொள்ள புன்னகைத்து “எங்களூரில் பெட்டிப்பூசணி செய்வதுண்டு, அரசி. பூசணியை மரப்பெட்டிக்குள் விட்டு அது வளர்ந்து நிறைந்தபின் பெட்டியைக் கழற்றி அதை எடுப்பார்கள். கூடைகளில் அடுக்கி படகில் கொண்டுசெல்ல உகந்தது. நகரங்களில் விரும்பி அதை வாங்குவார்கள்” என்றாள். முள்குத்தியதுபோல சினம் எழ அதை உடனே கடந்து சிரித்து “மெய், அதுதான் மேலும் பொருத்தம்” என்றாள். பின்னர் எண்ணிநோக்கியபோது அந்த ஒப்புமையின் ஆழம் விரிந்துகொண்டே வந்தது. அரசியென வந்து சேர்ந்தபோது திகைப்பளித்த அரண்மனைக்குள் அவள் மெல்ல நீர்போல நிரம்பி அனைத்து இடங்களையும் முழுமையாக நிறைத்துவிட்டிருந்தாள்.

அரண்மனையைவிட்டு அவள் வெளியேறும் தருணங்களே அரிது. அங்கநாட்டு அரசியருக்கான இரண்டு அரண்மனைகளும் சேடியர் தங்குமிடங்களும் காவலர் குடிகளும் தனியாக கங்கையின் கரையில் சிறு கோட்டை ஒன்றுக்குள் அமைந்திருந்தன. அவளுடைய அரண்மனை வடக்கிலும் இளைய அரசி சுப்ரியையின் அரண்மனை தெற்கிலும் தனித்தனியாக அரண்களுக்குள் அமைந்திருந்தன. அரசியரின் அரண்மனைகளிலிருந்து கற்படிகளினூடாக நேராக கங்கைப்பெருக்கில் இறங்கி நீராடி மீளவும் படகுத்துறைகளுக்குச் செல்லவும் வழியிருந்தது. எனவே அவள் அரண்மனை தனியான ஓர் அரசென்று அவள் ஆட்சியில் இலங்கியது. அவளுக்கான சேடியரும் செவிலியரும் அடுமனையாளரும் அகம்படியினரும் அருகில் குடியிருந்தனர். அங்கிருந்து புலரியில் கிளம்பிச்சென்று கதிரோன் ஆலயத்தில் முதற்கதிரெழுகையை வணங்கி மீண்டபின் அவள் வெளியே செல்வதேயில்லை.

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தர் மைந்தராகிய பகதத்தனையும், வங்கநாட்டரசர்களான சமுத்ரசேனனையும் சத்ரசேனனையும், புண்டரநாட்டரசன் வாசுதேவனையும் வென்று கப்பம் கொண்டு மீண்ட கர்ணன் தனக்குக் கிடைத்த பங்கைக் கொண்டு சம்பாபுரியின் தெருக்களையும் அரண்மனையையும் கோட்டையையும் விரிவாக்கிக் கட்டியபோது நகரம் அழிந்து பிறிதொன்றாகியது. அர்க்கபுரி என அது பெயர்மாற்றமும் பெற்றது. ஓராண்டு கழித்து அங்கு மீண்டும் வந்த அயல்வணிகர் அது முற்றிலும் வேறுநகர் என்று மயங்கினர்.

புதிய நகரம் அங்குள்ள ஒவ்வொன்றையும் மாற்றியது. இல்லங்களும் சாலைகளும் அங்காடிகளும் மட்டுமல்லாமல் மக்களின் ஆடைகளும் பேச்சும்கூட மாறுபட்டன. அங்காடி பெருகியபோது அங்குவரும் பொருட்கள் பெருகின, அவற்றை வாங்கும் மக்கள் பெருகினர், அங்கே வணிகமும் பெருகியது. கையில் எடுக்கும் எப்பொருளுக்கும் ஏழுமுறை விலைசொல்லி ஊடும் நகர்ப்பெண்கள் முதல்விலையிலேயே அமைந்தனர். எப்போதும் படைக்கலங்களையே விரும்பி வாங்கும் ஆண்கள் அணிகலன்களையும் ஆடைகளையும் நாடினர். அதைவிட அவர்களின் முன்னோர்களைக் குறித்த அனைத்துக் கதைகளும் வளர்ந்து உருமாறின. முன்பிருந்த பெருநகர் ஒன்றின் ஒரு சிறுபகுதியே அந்தச் சம்பாபுரி என்று முதியோர் சொன்னார்கள்.

உண்மையில் ஐநூறாண்டுகளுக்கு முன்பு அங்கமாமன்னர் லோமபதரின் ஆட்சியில் தலைநகரமாக இருந்த சம்பாபுரி பன்னிரு சிறுதெருக்கள் மட்டுமே கொண்ட சிறுநகர். ஆனால் பாரதவர்ஷத்தின் நகர்களில் அதுவே முழுவட்ட வடிவு கொண்டது. ஆகவே சூரியனின் சகடநிழல் என அது புகழ்பெற்றிருந்தது. அங்கம் சரிவடைந்தபோது அதன் பெரும்பகுதி இடிந்து மண்சுவர்களால் ஆனதாக மாறியது. நகரம் இடிபாடுகளிலிருந்து சிதல்புற்றென கட்டுப்பாடின்றி வளர்ந்து உருவானது. மறைந்த சம்பாபுரியை அதன் வடிவில் மீட்டுக் கட்டவேண்டும் என்பது அங்கநாட்டரசர்கள் அனைவருமே முடிசூடுகையில் கொள்ளும் கனவு. மாறிமாறி வங்கத்திற்கோ கலிங்கத்திற்கோ மகதத்திற்கோ கப்பம் கட்டிவந்த அவர்களால் அக்கனவை அகத்திலிருந்து வெளியே எடுக்கவே இயலவில்லை.

திசைக்கதிரோன் ஆலயத்தில், சித்திரை மாதம் அனல்மீன் பொழுதில் நடுகம்ப நிழல் மறையும் உச்சிவெயில் வேளையில், கொன்றைசூட்டும் விழாக்கொடையின்போது வெறியாட்டெழுந்த பூசகன் வேல்சுழற்றி ஆடி “சம்பாபுரியின் தெய்வம் நான்! சம்பாபுரி என் மலர். சம்பாபுரி என் ஒளிகொள் கலம். சம்பாபுரி என் சகடத்தின் நிழல். நகர் எழுக! இது பொழுது, அருளினேன். எழுக சம்பாபுரி!” என்று கூவினான். “ஆணை, எனை ஆள்பவனே” என கர்ணன் தலைவணங்கினான். தொல்சுவடிகளை நாடெங்கிலுமிருந்து மீட்டுக்கொண்டு வந்தான். சம்பாபுரியின் வடிவையும் முறைமைகளையும் அவற்றிலிருந்து எடுத்து அவற்றின்படி நகரை மீட்டமைத்தான். அதன் வழியாகவே கர்ணன் அங்கநாட்டு மக்களின் உள்ளத்தில் ஆழ இடம்பெற்றான்.

கலிங்கநாட்டிலிருந்து வந்த சிற்பிகள் சூரியபாதையை கணக்கிட்டு சம்பாபுரியை வடிவமைத்தார்கள். நகரம் முழுமையான வட்டவடிவமாக அமைக்கப்பட்டு அதன் நடுவே ஏழு முகடுகள் கொண்ட கோபுரத்துடன் சூரியனின் பேராலயம் எழுந்தது. அதன் வலப்புறம் அரசனின் அரண்மனையும், அதன் இரு கைகள் என குடிப்பேரவையும் அரசப்பேரவையும் நிறுவப்பட்டன. இடப்புறம் படைத்தலைவர்களின் மாளிகை நிரை. நேர்முன்னால் அந்தணர்கள். பின்னால் ஆலய ஊழியர்கள். சகடத்தின் இருபத்துநான்கு ஆரங்களாக பாதைகள் எழுந்து வட்டமான கோட்டையைச் சென்றடைந்து உட்பக்கப் பெருஞ்சாலையில் இணைந்தன. ஆறு வாயில்கள் கொண்ட சம்பாபுரியின் கற்கோட்டைக்குமேல் இருபத்துநான்கு காவல் மாடங்கள் அச்சாலைகளை நோக்கி திறந்திருந்தன.

அங்கநாட்டு அரசர்களின் வாழ்க்கையை வகுத்துரைக்கும் சூரியதாசவிலாசம் என்னும் தொல்நூலின் நெறிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அங்கநாட்டு அரசரின் அனைத்துச் செயல்பாடுகளையும் விண்கதிர் செல்லும் வழியைக்கொண்டு வகுத்தது அது. கதிர் செல்லும் பாதைக்கேற்ப அரசர்களின் அன்றாடச் செயல்களும் நாள்தோறும் மாறுபட்டன. தென்பெயர்வும் வடபெயர்வும் அவையில் அரியணையை திசைமாற்றின. அதற்கேற்ப திரும்பும்படி அரைவட்ட வடிவில் அவைமாளிகை வடிவமைக்கப்பட்டிருந்தது. நகர்மையத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட நிழல்மாளிகையில் சுவர்களின் நிழல் விழுவதைக்கொண்டு பொழுதை நாழிகையில் அறுபதில் ஒரு பங்கு என கணித்தனர்.

அங்கநாட்டரசன் மையமாக அமைந்த சூரியனில் இருந்து பன்னிரண்டு பாகைகளில் அமைந்த பன்னிரு அரண்மனைகளில் மாதம் ஒன்றில் என தங்கினான். ஒவ்வொரு மாதத்திற்கும் வெவ்வேறு வண்ணங்களில் உடையணிந்தான். வேனிலில் பசுமை முதல் குளிர்கால இறுதியில் வெண்மை வரை என அது வகுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அன்று மலர்ந்த பருவமலர்கள் அவன் அவையில் காட்சிவைக்கப்பட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய தனிப் பண்கள் அவன் அவையில் இசைக்கப்பட்டன. கோடையில் வெண்புரவிகளும் கார்காலத்தில் செம்புரவிகளும் குளிர்காலத்தில் கரும்புரவிகளும் பூட்டிய தேரில் அவன் பயணம் செய்தான். அங்கநாட்டு அரசர்கள் பதினான்கு நாட்களுக்கு ஒருமுறை சூரியநகர்வுக்கேற்ப வகுக்கப்பட்ட நற்பொழுதுகளில் தங்கள் அரசியரை வந்து சந்திக்க வேண்டுமென்று அந்நூல் கூறியது.

அந்நெறிகள் வகுக்கப்பட்ட பின்னர் கர்ணன் அரசியரிடமிருந்து மெல்ல மெல்ல அகன்றுசென்றான். அவன் விழிகள் மாறிக்கொண்டே செல்வதை விருஷாலி கண்டாள். அவனிடம் எப்போதுமிருக்கும் உள்ளொடுங்கல் அகன்று ஆணவம் தோள்களிலும் சிரிப்பிலும் உரைக்காத ஒற்றைச் சொற்களிலும் கூடியது. அவையமர்ந்து மீசையை மெல்ல நீவியபடி அமைச்சர்களையும் குடிகளையும் நோக்கும்போது எங்கோ தொலைவில் இருப்பவன் எனத் தெரிந்தான். “அனைவரையும் காண்பவன், அனைவரையும் தழுவிக்கொள்பவன், அனைவருக்கும் அளிப்பவன், எவரும் அணுகமுடியாதவன். அவன் வாழ்க!” என்று அவையில் வேசரநாட்டுப் புலவர் ஒருவர் கர்ணனை வாழ்த்தியபோது விருஷாலி உளம் விம்மி மூடிய முகத்திரைக்குள் விழிநீர் கொண்டாள்.

முதலில் விருஷாலிக்கு அவ்வாறு உருவான அகல்வு ஒரு விடுதலையென்றே தோன்றியது. தன்னை மேலிருந்து நோக்கும் இரு விழிகள் அகன்றதுபோல. மிகச் சிறுதுளி எனக்காட்டும் பெருமலை ஒன்றிலிருந்து சேய்மைகொண்டதுபோல. எப்போதேனும் அவைகளில் அவனை அணுக்கத்தில் காணும்போது மட்டும் அறியமுடியாத ஓர் ஏக்கம் எழும். அஞ்சியவளாக அதை அவளே பிற எண்ணங்களால் மூடிக் கடப்பாள். மைந்தர் வளரத் தொடங்கியபோது அவள் கர்ணனை நினைப்பதே அரிதாயிற்று. விருஷசேனனும் இளையோரும் கர்ணனின் உருவை துளிமாற்றின்றி தாங்களும் கொண்டிருந்தனர். நிழலசைவில் நெஞ்சு திடுக்கிடும்படி அவர்கள் கர்ணனை காட்டினர். அரைச்செவியில் அவர்கள் குரல் கேட்டால் அதுவும்கூட கர்ணன்போலவே ஒலித்தது.

“அது இயல்பே, அரசி. களிப்பாவையாக வந்த மதயானைபோல இப்போது அவர் உருவாகவே மைந்தர் உங்களுக்கு அமைந்துவிட்டிருக்கிறார்கள். அவர் வடிவும் அந்நிமிர்வும் கொண்டவர்களாயினும் உங்களுக்கு உகந்தவர்கள்” என்றாள் காளி. “அன்னையர் கணவர்களை எப்படி அகத்தில் காண்கிறார்களோ அவ்வாறு மைந்தர் பிறக்கிறார்கள். மலையில் இருந்து ஒரு கல் எடுத்து அருகே மலையென நிறுத்தி ஆலயம் சமைத்து வணங்குவதைப்போல.”

விருஷாலி காளியை வரச்சொல்லி சேடியை அனுப்பினாள். முதுமை மேலும் மூத்து அவள் வளைந்தொடுங்கி இருந்தாள். ஒவ்வொரு முறை அவளைக் காண்கையிலும் விருஷாலி உளம் திகைப்பதுண்டு. “காலம் ஒரு களிறுபோல என் மேல் ஏறிச்சென்றுவிட்டது. சிதைந்த உடல் எஞ்சுகிறது” என்றாள் காளி ஒருமுறை. சேடியின் கைபற்றி வந்த காளி அவள் அறையில் தரையில் சுவர் சாய்ந்து அமர்ந்தாள். விருஷாலி அவளிடம் “அன்னையே, தங்கள் சொல் எனக்குத் தேவை. நான் இருக்கும் நிலையை என்னாலேயே கணிக்க முடியவில்லை” என்றாள். “நான் நெடுந்தொலைவில் இருக்கிறேன், அரசி. என்னால் சிற்பச்செதுக்கல்களை காண இயலாது. ஆனால் பேராலயங்கள் சிறு அணிகலன்கள்போல் தெரிகின்றன” என்றாள் காளி.

விருஷாலி அனைத்தையும் சொன்னாள். முதுமகளின் செவி கூர்கொண்டிருந்தமையால் அவள் உளம்விம்மியும் சொல்ததும்பியும் சொன்னவற்றை துளிசிந்தாமல் பெற்றுக்கொண்டாள். பற்களில்லாத வாயை மென்றபடி அமர்ந்திருந்தாள். முகம் பிசையப்படும் மாவென உருமாறிக்கொண்டே இருந்தது. பின்னர் விழிதிறந்து புன்னகைத்தாள். வெண்பச்சையாக மாறிவிட்டிருந்த விழிகள், பல்லில்லாத வாய். ஆயினும் அவள் புன்னகை அழகாகவே இருந்தது. “அரசி, நீங்கள் சொல்லி அவரை திசைகொள்ளச் செய்ய இயலாது. நீங்கள் அல்ல, எவரும் அதை செய்ய முடியாது. ஏனென்றால் அவர் பெருமானுடர். அவர்களை தெய்வங்கள் கைகளில் ஏந்தியிருக்கின்றன. அவர்களின் செல்வழிகள் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டன. அவர்கள் ஆற்றவேண்டிய பணி அவர்களுக்கு முன்னரே முடிவுசெய்யப்பட்டுவிட்டது.”

“ஆனால் நீங்கள் அவரிடம் சென்று பேசலாம்” என்று காளி தொடர்ந்தாள். “அத்தெய்வங்களில் ஒன்று தருணம்நோக்கி இருக்குமென்றால் உங்கள் சொல் சென்று அதை தொடக்கூடும். நண்டுவளை உடைப்பெடுத்து பெருநதிகள் திசைமாறுவதுண்டு.” விருஷாலி “ஆம், அவ்வாறே நிகழவேண்டுமென தெய்வங்களை வேண்டிக்கொள்கிறேன்” என்றாள்.

வெண்முரசு வாசிப்பு முறை – ராஜகோபாலன்

முந்தைய கட்டுரைஅருட்செல்வப் பேரரசன் சந்திப்பு
அடுத்த கட்டுரைஆர்கைவ் தளம் முடக்கம்