கஞ்சி -கடிதங்கள்

kanji

கஞ்சிமலையாளம்

அன்பிற்கினிய ஜெ சார்,

 

மரவள்ளி கிழங்கு, அப்பளம் தவிர மற்ற எல்லா துணை உணவுகளும் அந்த கடையில் நான் சாப்பிட்டுள்ளேன். பலாக்காயை கீறி அதனுடன் உப்பும் காரமும் குறைவாக சேர்த்து கொஞ்சம் தேங்காய் துருவி இட்டு கஞ்சியுடன் தருவார்கள். எழுதும் போதே எச்சில் ஊறுகிறது. அரிசியின் மணம்தான் கஞ்சியின் தனிச்சிறப்பு. அந்த மணம் தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக கிடைக்கும் எந்த அரிசியிலும் இல்லை.

 

கேரளம் வந்தது முதல் பல சத்யாக்களில் சாப்பிட்டுள்ளேன். அவை எல்லாமே நல்ல சுவைதான். ஆனால் அவை ஒன்றுடன் இன்னொன்றை ஒரு விகிதத்தில், ஒரு பக்குவத்தில் கலப்பதால் கிடைக்கும் சுவை. அவ்வுணவுகளில் எதாவது ஒன்று கூடினாலோ குறைந்தாலோ அவ்வளவுதான். ஆனால் கஞ்சி இயல்பான சுவை. தொடுகறி எதுவும் இல்லாமலே அதனை ரசித்து உண்ண முடியும். ஆகவே கஞ்சிதான் இந்த மண்ணின் சுவை என்று நான் நம்புகிறேன்.

 

துயரம் என்னவென்றால் அந்த கடையை ஒரு மாதத்திற்கு முன்பே மூடிவிட்டார்கள். பக்கத்திலிருக்கும் ஐயப்பன் கோயில் சத்யாவுக்கு, அந்த எளிய பெண்கள் நடத்திய கடை பலியானது. இன்னும் அந்த பந்தல் பிரிக்கப்படவில்லை. எவ்வளவு யோசித்தாலும் அந்த பெண்களின் முகங்கள் நினைவில் வரவில்லை. என்றாவது அந்த பெண்கள் வேலை செய்யும் கடையிலோ அல்லது அந்த பெண்களின் வீடுகளிலோ கூட சாப்பிட நேர்ந்தால் கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவேன். அப்போதாவது அவர்களை ஒரு படம் எடுத்து கொள்ள வேண்டும்.

 

அன்பன்

அ மலைச்சாமி

 

 

அன்புள்ள ஜெ

கஞ்சி கட்டுரையை நான் மிக விரும்பி வாசித்தேன். ஏனென்றால் எனக்கு அது ஒரு சொந்த அனுபவம். நான் கேரளத்தில் பணிநிமித்தமாகச் சென்றபோது அங்கே அன்றெல்லம் ராத்திரியில் கஞ்சிதான் கிடைக்கும். நான் அன்று எஞ்சீனியரிங் வேலைக்காக இடுக்கி ஜில்லாவில் வேலைபார்த்தேன். அன்றெல்லாம் மழையும் குளிரும்தான். ஒருசில வீடுகளில்தான் சாப்பாடு. கஞ்சி வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு மாசத்திற்குள் நான் கஞ்சிக்கு அடிமையாக ஆகிவிட்டேன். ஏனென்றால் மற்றதெல்லாம் பிறகு. கஞ்சிசாப்பிட்டால் ராத்திரியில் தூக்கம் சுகமாக இருக்கும். வயிறு அமைதியாக இருக்கும். தூக்கத்தில் தொந்தரவுகளே இருக்காது. சீக்கிரமே செரித்துவிடுவதனால் வயிறு காலியாகிவிடுவதுதான் காரணம். இன்றைக்கும் வரை கஞ்சிதான். அனேகமாக உலகில் அரிசியை இப்படி கஞ்சியாகச் சாப்பிடுபவர்கள் மலையாளிகள் மட்டும்தான் என நினைக்கிறேன்

 

சுந்தரராஜன்

முந்தைய கட்டுரைநந்தகுமார் வலைப்பூ
அடுத்த கட்டுரைஏன் மகாபாரதத்தை எழுதுகிறேன்?