மனோன்மணியம் பல்கலையில்…

11

2018 இலக்கியக்கூட்டங்களின் பெருக்காக இருக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டது. ஜனவரியில் சென்னையில் விகடன் விழா. பாண்டிச்சேரி, கடலூர் சென்றுவந்ததுமே பிப்ரவரி ஒன்றாம்தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக விழா. பொதுவாக இலக்கியக்கூட்டங்களை குறைத்துக்கொள்ளவேண்டும் என்பது என் எண்ணம். அதிலும் கல்லூரிகளில் பேசுவதைப்போல வீண்வேலை பிறிதில்லை. அக்கறையற்ற கண்கள்முன் நிற்பது எழுத்தாளனுக்குப் பெரிய வதை.

ஆனாலும் அதை முற்றாகத் தவிர்க்கமுடிவதில்லை. பேரா. அ.ராமசாமி இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு மதுரை அன்னம்- அகரம் பதிப்பகத்தில் நான் சந்தித்த நாள்முதல் என் நண்பர். சில தீவிரமான பணிகளை கல்வித்துறைக்குள் செய்ய முயல்பவர். பேராசிரியர் ஞா.ஸ்டீபன் குமரிமாவட்ட மலைக்குடிகளைக்குறித்த நாட்டாரியல் ஆய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றியவர் [கொக்கறை காணிக்காரர் வாழ்வும் பண்பாடும்] மனோன்மணியம் பல்கலைக்கு நான் செல்வது நான்காவதுமுறை என்றார் அ.ராமசாமி.

அடிக்கடி மேடையில் பேசும் நிலை வரும்போது  திரும்பத்திரும்பச் சொல்ல ஆரம்பிக்கும் அபாயம் அதிகம். மேடைக்கான மொழிநடை உருவாகிவருவது அதைவிடப்பெரிய அபாயம். இந்த ஆண்டு இனி கூட்டங்களைக் குறைத்துக்கொள்ளவேண்டும்

நானும் நண்பர் ஷாகுல் ஹமீதும் என் காரில் நெல்லை சென்றோம். அகில இந்திய வானொலியைச் சேர்ந்த நண்பர் ஜான் பிரதாப் வந்திருந்தார். ஏராளமான அறிமுகமான நண்பர்கள் என் தளத்தைப் பார்த்து விழாவுக்கு வந்திருந்தார்கள். சா.தேவதாஸ் ராஜபாளையத்திலிருந்து வந்திருந்தார். இமையத்தையும் கலாப்ரியாவையும் பார்த்தது உற்சாகமூட்டும் அனுபவம். இருவருமே என் பிரியத்திற்குரிய படைப்பாளிகள் என்பதுடன் இயல்பான அன்புவெளிப்பாடு கொண்டவர்கள். அதாவது நாம் தைரியமாக எப்படி வேண்டுமென்றாலும் கலாய்க்கலாம். இந்த நாளை உற்சாகமாக்கியது அவர்களின் சொற்கள்.

துணைவேந்தர் பாஸ்கர் அவர்களைச் சந்தித்தோம். அண்ணா பல்கலையில் இயற்பியல் கற்று ஜப்பானில் உயராய்வு செய்தவர். தமிழிலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். நிகழ்ச்சியில் அவர் தலைமை வகித்தார். உலகத்தமிழிலக்கியத்திற்கான பொதுவரைபடம் ஒன்றை உருவாக்கமுடியுமா அதற்கான கருதுகோள்கள் என்னவாக இருக்கமுடியும் என்ற தலைப்பில் நான் பேசினேன்.

நேரடியாகவே இலக்கியக் கருத்துக்கள். கூடுமானவரை தெளிவாகப் பேச முயன்றேன். ஆனால் முழுமையாக யோசிக்காத ஒரு புதிய கருத்து. ஆகவே கூடவே சிந்தனையும் ஓடி சில சொற்கள் தடுக்கின. நல்லவேளை, முழுமையான மேடைப்பேச்சாளராக ஆகவில்லை என நிறைவுகொண்டேன்.

என் உரையின் மையம் இதுவே. இதுவரை இலக்கியத்தை கால,இட அடிப்படையில் வரைபடப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் இலக்கியம் அகவயமானது, தெரிவுகளால் ஆனது. அதை நூல்பட்டியலாக தொகுக்கமுடியாது. அந்தத் தெரிவுக்கான அளவுகோல்கள் முக்கியமானவை. அவை எப்படி இருந்தாலும் அகவயமானவை, ஏனென்றால் இலக்கியம் அகவயமானது. இலக்கியவிமர்சனம் மூலம் ஓரளவு புறவயமாக ஆக்கமுடியும்

2

இலக்கியவரைபடம் என்றால் என்ன? ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட வளர்ச்சிச் சித்திரம் அது. அவ்வாறு பொதுமைப்படுத்தப்படுவதற்குச் சில பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைகள் தேவையாகின்றன வழக்கமாக கால அடிப்படையிலான பொதுமைப்படுத்தல்களும், வளர்ச்சிச் சித்திரமும்தான் அளிக்கப்படுகின்றன. அது சிக்கலற்றது. புறவயமானது. ஆகவே கல்விப்புலத்திற்கு ஏற்றது. மு.அருணாச்சலம் அவர்களின் தமிழிலக்கிய வரலாறு, மு.வரதராஜன் அவர்களின் தமிழிலக்கியவரலாறு போன்றவை கால அடிப்படையிலானவை.

ஆனால் வெறுமே கால அடிப்படையிலான வரைபடத்தை இலக்கியம் போன்ற ஒரு பண்புருவாக்க செயல்பாட்டுக்கு அளிக்க முடியாது. ஒரு வெறும் நூலகப் பட்டியலாக, எழுத்தாளர்க் கணக்கெடுப்பாக அது ஆகிவிடும். அதற்கு இலக்கியவிமர்சனம் தேவையில்லை.

ஒரு காலகட்டத்தில் உள்ள அத்தனைபேரையும் நாம் பட்டியலிடமுடியாது. முக்கியமானவர்களை முன்னிறுத்தி, குறிப்பிடத்தக்கவர்களை தொகுக்கவேண்டும். அந்தத்தெரிவிலேயே பண்புருவாக்கம் அளவுகோல் ஆகிவிடுகிறது.

அந்தப்பண்புக்கூறுகள் என்ன? அவற்றை எப்படி வகுத்துக்கொள்வது என்பதே இந்த வரைபட உருவாக்கத்தின் மெய்யான கேள்வி. இலக்கியம் அகவயமானது, ஆகவே அதன் பண்புகூறுகளை முற்றிலும் புறவயமாக வரையறைசெய்துவிடமுடியாது. எத்தனை புறவயமாக வகுத்துக்கொண்டாலும் அதற்கான எல்லை உண்டு. அவ்வெல்லைக்கு அப்பால் முக்கியமான விடுபடல்களும் உண்டு

பொதுவான பண்புக்கூறுகள் என நாம் இதுவரை எடுத்துக்கொண்டிருப்பது அ. கருத்தியல்  ஆ. அழகியல்கொள்கைகள்.

22

கருத்தியல் அடிப்படையில் என்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தை

1 சுதந்திரப்போராட்டகாலகட்டம் அல்லது தேசிய உருவாக்க காலகட்டம் 2. தமிழியக்க காலகட்டம் ,திராவிட இயக்க காலகட்டம் 3 இடதுசாரி இயக்கக் காலகட்டம் 4. தனிமனிதவாத தாராளவாதக் கருத்துகளின் காலகட்டம். 5 எதிர்நிலை,கலகக் கருத்துக்களின் காலகட்டம் எனப்பிரிக்கலாம். இந்த ஐந்து காலகட்டத்திற்கும் காலப்பிரிவினையையும் செய்துகொண்டால் ஒரு வரைபடம் உருவாகிறது. ஒவ்வொன்றிலும் மூன்று அல்லது நான்கு தலைமுறைகளை பட்டியலிடலாம். அதையே நாம் செய்துவருகிறோம்

அல்லது அழகியல் கோட்பாடுகளின் அடிப்படையில் 1. மறுமலர்ச்சிக் காலம் 2. கற்பனாவாத காலம் 3. யதார்த்தவாத காலம் 4. நவீனத்துவ காலம் 5. பின்நவீனத்துவ காலம் என்றும் பிரிக்கலாம்.

ஆனால் இந்த வழக்கமான இரு பிரிவினைகளும் ஈழம், மலேசியா, சிங்கை இலக்கியங்களையும் கருத்தில்கொண்டு உலகத் தமிழிலக்கிய வரைபடத்தை உருவாக்கிக்கொண்டோமென்றால் பொருந்தாமலாகிவிடும்.. இவற்றுக்கு  பண்பாட்டு அரசியல் அளவுகோலாக உள்ளது. அது அரசியலுடன், தேசியவரலாற்றுடன் தொடர்புள்ளது. ஒவ்வொருநாட்டுக்கும் ஒவ்வொரு அரசியல்வரலாறு உள்ளது.

மேலைநாட்டு அழகியல்க் கோட்பாடுகள் சார்ந்த பகுப்புகள் இலக்கியம் அந்நாட்டின் மையப்போக்காக இல்லாமல் ஒரு சிறுபான்மையினரின் குரலாக ஒலிக்கும் நாடுகளுக்கு பொருந்தாது. மேலைநாட்டுக்கோட்பாடுகள் அப்படி சீராக முறையாக அங்கே சென்றிருக்க வாய்ப்பில்லை

*உதாரணமாக இந்தியத்தமிழ் இலக்கியத்தை மேலே சொன்னபடி பிரிக்கலாம் என்றால் ஈழ இலக்கியத்தை அ. தொழிற்சங்க எழுத்தின் காலகட்டம் [கோ.நடேசய்யர்] ஆ தமிழ்த்தேசிய எழுச்சியின் காலகட்டம் [மு தளையசிங்கம்] இ. போராட்டக் காலகட்டம் ஈ. போராட்டத்திற்கு பிந்தைய காலகட்டம் என்றே பிரிக்கமுடியும். அதற்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பில்லை

இதேபோல நோக்கினால் மலேசிய இலக்கியத்தில் தொழிற்சங்க எழுச்சியின் தொடக்க காலம் இலக்கியத்திற்கு பங்களிப்பு ஏதும் ஆற்றவில்லை என்பதைக் காணலாம். திராவிட எழுத்தின் செல்வாக்குள்ள எழுத்தின் காலம் தான் அங்கே தொடக்கம் [ கோ.சாரங்கபாணி]. அதன்பின்  யதார்த்தவாத எழுத்து [சை பீர்முகமது, ரெ கார்த்திகேசு, சீ முத்துசாமி போல] அரசுடன் ஒத்துப்போகும் எளிமையான பிரச்சார எழுத்து அதற்குப்பின். தொண்ணூறுகளுக்குப்பின் எதிர்ப்பரசியலின் காலம்[ ம.நவீன்]  என பிரிக்கலாம்

ஆகவே இலக்கியம் என்னும் செயல்பாட்டின் இயல்பான வளர்ச்சிப்போக்கைக் கொண்டு ஒரு பகுப்பு முறை உருவாக்கப்படவேண்டும். அதுவே உலகத்தமிழிலக்கிய வரைபடம். அது புறவயமான கால அளவுகோல்களுடன் பொருத்திக்கொள்ளப்படவேண்டும்

3

பண்புக்கூறுகளால் இலக்கியக் காலகட்டப் பிரிவினை செய்து எழுதப்பட்ட நூல் சிட்டி சிவபாதசுந்தரம் எழுதிய ‘தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977) முக்கியமான முன்னோடிநூல் அது  ஆனால் அவர் இலக்கியத்தை சமூகவரலாற்றின் துணைப்பொருளாகக் காண்கிறார். தனித்தச் செயல்பாடாக அல்ல. ஆகவே ஒவ்வொருநாட்டுக்கும் ஒவ்வொரு அளவுகோல் தேவைப்படுவதைக் காணலாம். அது உதவுவது அல்ல.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புலம்பெயர்ந்த நாடுகள் தழுவிய ஒரேவரைபடமாக உலகத் தமிழ் இலக்கியத்தின் சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அதற்கு தமிழ் இலக்கிய வளர்ச்சிப்போக்கின் அடிப்படையில் பண்புக்கூறுகள் வகுக்கப்படவேண்டும். அவை கால அடிப்படையில் அதன்பின் பிரிக்கப்படவேண்டும் .அவற்றில் பங்களிப்பு செய்தமையின் அடிப்படையில் இலக்கியவாதிகள் அட்டவணையிடப்பட வேண்டும். இதுவும் அகவயமானதே. ஆனால் பயனுள்ளது

அ மரபிலக்கியத்திலிருந்து விடுபடுதல் /நவீன இலக்கிய வடிவங்களின் உருவாக்கம் முதல் காலகட்டம். உரைநடைத்தன்மை, ஜனநாயகம் அதாவது வாசகனிடம் பேசும்தன்மை, அரசியல் உள்ளடக்கம் ஆகியவை நவீன இலக்கியத்தின் அம்சங்கள். இவற்றைக் கொண்ட நவீன இலக்கியம் உருவாவது முதல் காலகட்டம். பாரதி முதலான முன்னோடிகளின் பங்களிப்பு இதில் முக்கியமானது. சித்தி லெப்பை மரைக்காயர் [அசன்பே சரித்திரம்] இப்பட்டியலில் முக்கியமான இடம்பெறுவார்.

2  இலக்கியத்தை ஒரு கருவியாகக் கண்டு அரசியல் சமூகவியல் மாற்றங்களுக்கு முயன்றவர்களின் காலகட்டம். இது முதல்காலகட்டத்தின் நீட்சி. இடதுசாரி இலக்கியம்,தேசியப் போராட்ட இலக்கியம் போன்ற அனைத்தும் இதற்குள் அடங்கும்

3 இலக்கியக் கலையின் வளர்ச்சிக் காலகட்டம். இலக்கியம் என்பதை ஒரு தனி அறிவுக்களமாக, கலைவடிவமாக கண்டவர்கள். வடிவநேர்த்தி,எழுத்தாளனின் தனித்துவம், தனிமனித உள்ளத்தை நோக்கிச் செல்லுதல் ஆகியவை இக்காலகட்டத்தின் இயல்புகள்.

4 இலக்கியம் தன்னை மறுபரிசீலனை, மறுகட்டமைப்பு செய்துகொள்ளும் காலகட்டம் என அடுத்த காலகட்டத்தை சொல்லலாம்.

இந்நான்கு பகுப்புகளிலும் ஒரு படைப்பாளி எந்த பங்களிப்பை ஆற்றியிருக்கிறார் என்பதை ஓரளவு புறவயமாகச் சொல்லமுடியும். அதனடிப்படையில் ஒரு காலவரையறையை உருவாக்கமுடியும். அவ்வாறு உலகத்தமிழிலக்கிய வரைபடம் ஒன்றை உருவாக்கலாம். இது ஒரு எண்ணம், விவாதத்திற்குரியது.

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–48
அடுத்த கட்டுரைஉலக இலக்கிய வரைபடம் -உரை