சாப்பாட்டு மேஜையில் ஒரு சர்ச்சை. ஒரு சீனக்குழந்தை கண்களைச் சுருக்கிக்கொண்டு ஆவேசமாக பூனைக்குரலில் பாடுவதை நான் சித்தரித்தேன். அஜிதன் சிரிக்க அருண்மொழி ஐயத்துடன் “மலையாளமும் அப்படித்தானே ஒலிக்கிறது?” என்றாள்.
அருண்மொழி குமரிநிலம் வந்து ஆண்டு இருபது. இப்போதும் அவளுடைய மலையாளம் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கும். இத்தனைக்கும் அவள் வேலைபார்த்த பெரும்பாலான ஊர்களில் தபால் அலுவலகத்திற்கு வருபவர்கள் மலையாளம்தான் பேசுவார்கள். அருண்மொழி மலையாளம் பேசமுயல்வதைக் கண்டு உள்ளம் உருகி அவர்களே தமிழ் பேசுவார்கள்.
நான் கேட்க வாய்ப்பில்லாதபோது மலையாளம் பேசுவாள் என்று கேட்டிருக்கிறேன். கல்பற்றா நாராயணன், சுவாமி தம்பான் ஆகியோருக்கு தமிழ் தெரியாது. ஆகவே அவர்கள் தமிழ் பேசுவார்கள். அவர்களிடம் அருண்மொழி மலையாளம் பேசுவாள். கல்பற்றா நாராயணனின் கால் எதிலோ முட்டியபோது “எந்து பட்டீ?” என்று அருண்மொழி ஆதுரத்துடன் கேட்டது பிரபலம்
தம்பான் அருண்மொழியிடம் “பறவை இல்லை அம்மா பறவை இல்லை” என்று சொன்னதைக்கேட்டு எந்தப் பறவை என்று கேட்டேன். தண்ணீர் குப்பியை அவள் கைதவறிப் போட்டுவிட்டதற்குத்தான் அப்படிச் சொல்கிறார் என்று அறிந்து கொண்டேன்.
தாய்மொழியைப் பழித்தமையால் ஆவேசம் கொண்டு நான் சொன்னேன். “கவின் மலையாளம் என்றுதானே கேரளத்தில் மகாராஜாகீழே வேலைபார்த்த மனோன்மணியம் சுந்தரனார் பாடியிருக்கிறார்?
“அப்படியா? என்றாள் ஐயமாக. அவர் பிள்ளைவாள் ஆயிற்றே, விவரமில்லாமல் பாடமாட்டாரே என பாவனை.
நான் “கன்னடமும் களித்தெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்” என்றேன்
அருண்மொழி குபுக் என்று சிரித்து “அது பிற்காலத் திரிபு. இதுகூட தெரியவில்லையா? ’கன்னடமும் களித்தெலுங்கும் கஞ்சிமலையாளமும் துளுவும்’ என்றுதான் வரும்” என்றாள்
எனக்கே குழம்பிவிட்டது. “ஆமாப்பா களிக்குப் பின்னால் கஞ்சிதான் பொருத்தமாக இருக்கிறது” என்றான் அஜிதன்
உண்மையிலேயே பாடபேதமாக இருக்குமோ? ஆனால் நல்ல சிவப்புச் சம்பா அரிசியில் சமைத்து வாழைக்காய் விழுக்குபிரட்டி, மோர்மிளகாய், மாங்காய் அச்சாறுடன் உண்ணப்படும் கஞ்சிதானே மலையாளத்தின் அடையாளம்?
பொதுவாக தமிழர்களுக்கு மலையாளக் கஞ்சி மேல் ஒருவகையான ஒவ்வாமை இருக்கிறது. கேரளத்தைக் கைப்பற்றி சேரர் முடிசூடி அமர்ந்த ராஜராஜ சோழனுக்கு இங்கே கஞ்சி பரிமாறப்பட்டபோது அவர் துணுக்குற்று எழுந்தபோதிலிருந்து அது ஆரம்பித்தது என்கிறார்கள். கஞ்சியை விரும்பும் தமிழரை நான் பார்த்ததே இல்லை.
கஞ்சிக்கான கருதுகோள்கள் சில உண்டு, அவை தமிழ்ப்பண்பாட்டுக்கு அன்னியமானவை. எந்த உணவுப்பொருளையும் அதன் அசல்மணம் தெரியும்படித்தான் சமைக்கவேண்டும் என்பது அதில் முதன்மையானது. கேரளத்தில் வாழைக்காய்ப் பொரியலில் அதன் கறைமணம் இருக்கும். தோலின் மடிப்புகளை மட்டுமே சீவுவார்கள். மிளகாய்ப்பொடி உள்ளிட்ட சுவைமாற்றிகள், மணம் மாற்றிகள் இல்லை. உப்பு மட்டுமே. கடுகும் உலர்மிளகாயும் போட்டு தாளித்தால் அது வாழைக்காய்பொரியல் அல்லது விழுக்குபுரட்டி. ஏன் அப்பெயர் என்றால் அது முழுக்கமுழுக்க தேங்காயெண்ணையிலேயே வேகும். ஒரு சொட்டு நீர் விடக்கூடாது.
தமிழகத்தில் சாப்பிட்ட பின்னர்கூட வெண்டைக்காய்ப் பொரியலையும் பாகற்காய் பொரியலையும் வேறுபாடு கண்டுபிடிக்க முடிவதில்லை. எல்லாவற்றையும் ஏழுமுறை உருமாற்றியே இங்கே சமைக்கிறார்கள். தமிழகத்தில் வெயிலும் மிளகாய்ப்பொடியும் எல்லாவற்றையும் மூடியிருக்கிறது. எல்லாமே இன்னொன்றாக மாற்றப்பட்டுள்ளது. பாகற்காயை புளிநீரில் ஊறவைத்து கசப்பை அகற்றிவிடவேண்டும். நெல்லிக்காயை நீரில் கொதிக்கவைத்து புளிப்பை நீக்கிவிடவேண்டும். மிளகாய்ப்பொடி மட்டும் கொதிக்கக்கொதிக்க அப்படியே திகழவேண்டும். இது போகர் கொண்டுவந்த ரசவாத முறைமைகளை சமையற்காரர்கள் தவறாகப் புரிந்துகொண்டதிலிருந்து உருவான சமையல்முறை எனப்படுகிறது.
இரண்டாவது கஞ்சிநெறி, சமையலில் கூடுமானவரை மணமூட்டிகள் சேர்க்கக்கூடாது என்பது. கேரளத்தில் உற்பத்தியாகும் சுக்கு, மிளகு வகையறாக்களை நூறாண்டுகளுக்கு முன்புகூட மலையாளிகள் நாட்டுமருந்தாகவே அறிந்திருந்தார்கள். அவற்றை மற்ற மக்கள் உணவாகச் சாப்பிடுகிறார்கள் என அறிந்தபோது திடுக்கிட்டார்கள். முகப்பவுடரில் பர்மாக்காரர்கள் போண்டா போட்டு சாப்பிடுகிறார்கள் என்று தெரிந்தால் நமக்கு எப்படி இருக்கும் அப்படி ஒரு துணுக்குறல்.
ஆகவே கஞ்ஞி என்பது உணவில் அரிசியின் நேரடி மணம் எழுந்தாகவேண்டும் என்று அடம்பிடித்ததில் இருந்து உருவான சமையல்முறை. அரிசிக்கு மணம் அளிப்பது தவிடு. ஆகவே தவிடு நீங்காத கைக்குத்தல் அரிசி. அந்த அரிசி சாக்கில் கட்டப்பட்டு பெருச்சாளிப் புழுக்கையுடன் அரசுக் களஞ்சியத்தில் ஆறுமாதம் இருந்ததாக இருக்கக் கூடாது. நெல்லிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குமேல் ஆகாத புதிய அரிசி நன்று. அந்த நெல் மச்சில் ஓராண்டு இருந்த பழைய நெல்லாக இருந்தாகவேண்டும்.
அரிசி என்பது பருக்கைப் பருக்கையாக நீடிக்கவேண்டும், பசையாக ஆகக்கூடாது. ஆகவே தன்மானம் கொண்ட பழையபாணி நெல்வகைகளே உகந்தவை.. மோப்பக்குழையும் பொன்னி, சீரகச்சம்பா வகையறாக்கள் கூடாது. நன்கு கொதித்த பின்னரும் சோறு கஞ்சியில் முழுமையாக மிதக்கவேண்டும்.நல்ல கஞ்சி பார்வைக்கு அயிரைமீன்கள் நீரில் செறிந்திருப்பதுபோல் இருக்கும். சரி, கொஞ்சம் பெரிய அயிரை.
கஞ்சிக்கு இருவகை தொடுகறிகள் தேவை. ஒன்று, காரமற்ற மிதமான துணையுணவுகள். மரவள்ளிக்கிழங்கு, காய்ச்சில்கிழங்கு, பலாக்காய் போன்றவற்றால் ஆன களிக்கூட்டுகள். (களிக்கூட்டுகாரனே மறந்நு போயோ?) இவற்றை மயக்குதல் என்பார்கள். மனதை மயக்குதலாலும் நாம் அவற்றை குழைத்து மசக்குதலாலும். (மயக்கமென்ன?) கிழங்குகளையும் பலாச்சுளையையும் வேகவைத்து, தேங்காயுடன் சிவப்பு மிளகாய் சேர்த்து அரைத்த கூட்டை போட்டு துடுப்பால் கிண்டி களியாக்குவார்கள்.
அவியல், பூசணிக்காய் கூட்டு போன்றவை சிறப்பு நிகழ்வுகளுக்கு. தேங்காய் துருவிப்போட்டு தாளித்த பாசிப்பயிறு, கொண்டைக்கடலை தனி. வெண்டைக்காய், கத்தரிக்காய், கோவைக்காய் போன்றவற்றாலான வறுவல். இதை இங்கே விழுக்குபுரட்டி என்பார்கள். இதனுடன் உலரவைக்கப்பட்ட கொத்தவரைக்காய், பாகற்காய் போன்றவற்றை எண்ணையில் பொரித்து எடுத்த ‘கொண்டாட்டம்’. அந்தக்காலத்தில் கொண்டாடியிருக்கிறார்கள்.
ஊறுகாய்கள் தனி. மோர்மிளகாய். கண்ணிமாங்காய் எனப்படும் வடுமாங்காய் ஊறுகாய். அறிக, கஞ்சிக்கு நெல்லிக்காய் ஊறுகாய் தவிர்க்கப்படவேண்டும். சுவையை அழித்துவிடும். யானைக்கால் பப்படம் எனப்படும் அரிசி அப்பளம். மரவள்ளிக்கிழங்கு பப்படம் இன்னும் சிறப்பு. நீளமாக கீறி உப்புமட்டுமே சேர்த்து வேகவைத்து உலரச்செய்து பின் பொரித்து எடுக்கப்படும் மரவள்ளிக்கிழங்கு வத்தல் பொரித்து வைப்பது அப்பளம் தன் தனிமையை உணராமலிருக்கும் பொருட்டு.
இதைத்தவிர பொரித்த மீன். எல்லா மீன்பொரிப்பும் உத்தமம் என்றாலும் மத்தி தனிச்சிறப்புக்குரியது. நெத்திலியுடன் பச்சைமிளகாய் மற்றும் மாங்காய் சேர்த்து செய்யப்படும் அவியல் நன்று. முட்டையைக் கொண்டும் அதே அவியல் செய்யலாம், முட்டை அவியலில் மாங்காய் தவிர்க்கப்பட வேண்டும். தெரெச்சி போன்ற மீன்கள் என்றால் அவற்றை வேகவைத்து உதிர்த்து பச்சைமிளகாய் சேர்த்து தாளித்து எடுக்கப்படும் புட்டு எனப்படும் கூட்டு. ஞாயிற்றுக்கிழமை என்றால் கருவாட்டை நன்கு கழுவி குறைவான உப்புடன் மிளகாய்த்தூள்போட்டு அப்படியே பொரித்து எடுக்கலாம்.
எப்படியானாலும் கஞ்சி திரிச்சூர் பூரத்தில் சாமியை ஏற்றிவரும் கொம்பன் ஆனைபோல. அதைச்சூழ்ந்து பஞ்சவாத்தியங்களான மத்தளம்,திமிலை, இலைத்தாளம், கொம்பு, கைமணி ஆகியவை ஒருபக்கம். செண்டையும் மேளமும் மறுபக்கம். சாமரம், குடை தேவை. ஆர்ப்பும் குரவையுமாக கொண்டு வரவேண்டும் என்பது தொல்மரபு.
ஆனால் 1770 முதல் தென்னிலத்தில் பெரும்பஞ்சம் தொடங்கியபோது குமரிமாவட்டத்தின் அத்தனை ஊர்களிலும் கஞ்சித்தொட்டிகள் திறக்க அன்றிருந்த மகாராஜா கார்த்திகைத்திருநாள் ராமவர்மா ஆணையிட்டார். அன்றைய கல்லால் ஆன கஞ்சித்தொட்டிகள் பல இன்றும் ஊர்களில் உள்ளன. கஞ்சிமடம் போன்ற பெயர்களும்.
அந்தக்கஞ்சி பஞ்சக்கஞ்சி. கிழங்குகள், தானியங்கள், கீரைகள், காய்கறிகள் என கிடைத்த அனைத்தையும் கொண்டு கொதிக்க வைக்கப்படுவது. நாள் முழுக்க அனைவருக்கும் அது அளிக்கப்பட்டது. இங்கே கிழங்குகளுக்குப் பஞ்சமில்லை என்பதனால் அது குறைவுபடவில்லை.அந்தப் பஞ்சம் முடிவதற்குள் திருவிதாங்கூரின் மக்கள்தொகை இரண்டு மடங்காகியது. காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலம் இரண்டு மடங்காகியது. அரசு வருமானமும் இரண்டு மடங்காகியது.
பஞ்சக் கஞ்சி இப்போது கொல்லங்கோடு தூக்கம் போன்ற விழாக்களில் மட்டும் ஒரு நோன்பாக அளிக்கப்படுகிறது. உச்சிபிளக்கும் வெயிலில் நின்று தூக்கம்பார்த்துவிட்டு கஞ்சியை கொதிக்கக்கொதிக்க குடித்தால் கஞ்சாவை விட போதை வரும். பெரும்பாலானவர்கள் நிழல் கண்ட இடத்தில் சாய்ந்துவிடுவார்கள்
திருவிதாங்கூர் மகாராஜாவே கஞ்சிதான் குடித்தார் என்பதை போர்ச்சுக்கீசியர் குறிப்புகள் காட்டுகின்றன. பண்பாடற்றவர்கள் கஞ்சியை வெள்ளிக்கரண்டியால் நட்சத்திர விடுதிகளில் உண்கிறார்கள். கஞ்சியை பலா இலையை கோட்டி கரண்டியென்றாக்கி அதைக்கொண்டுதான் குடிக்கவேண்டும் என்பது நெறிநூல்களின் கூற்று.
கஞ்சியாலானது கேரளம். என் நண்பர், மதுரை மறத்தமிழர், மலைச்சாமி அழகர் கண்ணனூரில் வேலைகிடைத்துச் சென்றார். ஓராண்டு கஞ்சியை கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. ஒரு மழைநாளில் நனைந்து குளிர்ந்து வழியோர ஓட்டல் ஒன்றில் நுழைந்து கஞ்சி குடித்தார். கஞ்சிக்கு அடிமையானார். பேருந்திலேறிச் சென்று அந்தக் கஞ்சியைக் குடித்து வரும்படியாக.
நான் கண்ணனூர் சென்றபோது என்னிடம் அவர் கஞ்சியின் பெருமைகளை கண்சொக்கிச் சொன்னார். ”மதுரையில் இந்தமாதிரி கஞ்சி குடிப்பீர்களா?’ என்றேன். ”அங்கே இந்த மாதிரி மழை இல்லையே சார்” என்றார்
மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை நல்ல மழைநாளில் நனைந்து வாரிக்கொண்டு திருவனந்தபுரம் கரமனை பகுதியில் இருந்த ஏதேனும் கஞ்சிக்கடைகளில் சம்பா அரிசிக் கஞ்சியை முழுமையான அகம்படியுடன் குடித்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே கஞ்சிமலையாளமும் துளுவும் என்றுதான் எழுதியிருப்பார்
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Feb 1, 2018