வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53

பகுதி எட்டுகுருதிகொள் கரியோள் – 3

bl-e1513402911361அன்னை அருகே வந்ததை பலந்தரை அறியவில்லை. அவள் தன் முன் அமர்ந்த அசைவைக் கண்டு திரும்பி நோக்கினாள். அன்னை நீள்மூச்சுவிட்டு “உன்னிடம் பேசிய பின் சுகேசன் என்னிடம் வந்தான்” என்றாள். முழங்கையை தன் மடியிலூன்றி முன்னால் குனிந்து அவள் விழிகளை நோக்கி “அரசரும் மைந்தரும் அஸ்தினபுரியிலிருந்து மீண்டு வந்துவிட்டனர். அஸ்தினபுரியுடன் படைக்கூட்டில் முத்திரை சாத்திட்டிருக்கின்றனர்” என்று சொன்னாள். “ஆம், அறிவேன்” என்றாள் பலந்தரை.

அரசி அவளிடம் மேலும் பேச விரும்பினாள். அதற்கான சொற்களை அமைத்தபின் தணிந்த மென்குரலில் “நீ இங்கு வந்தபோது உளம் மகிழ்ந்தேன். இங்கிருந்த பதின்மூன்று ஆண்டுகளும் என் வாழ்வில் இழந்தவை அனைத்தையும் மீண்டும் பெற்றேன். ஆனால் இப்போது நீ இங்கிருப்பது சரியல்ல என்று படுகிறது. உன்னைக் கடந்து அங்கு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நீ இங்கிருக்கும் தோறும் தோற்றுக்கொண்டிருக்கிறாய்” என்றாள்.

பலந்தரை “அன்னையே, நீங்கள் அறிவீர்கள். ஷத்ரிய அரசவைகளில் உண்மையில் பெண்களின் சொல்லுக்கு எந்த மதிப்பும் இல்லை” என்றாள். “எவர் சொன்னது? அப்படியென்றால் ஏன் உன் உடன்பிறந்தார் இருவரும் ஷத்ரியப் பேரவையின் அரசவையில் சென்றமர்ந்தனர்?” என்று அன்னை கேட்டாள். “அவர்கள் அங்கு என்ன உரைத்தனர்?” என்று சொல்லி பலந்தரை இளக்காரமாக உதடைச் சுழித்தாள். “அவர்கள் ஒரு சொல்லும் எடுக்க வேண்டியதில்லை. அவையில் சென்று அமர்ந்திருந்தார்கள் என்பதே போதுமானது. அங்கிருக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் திரைக்குப் பின் அமர்ந்திருப்பதை அறிவார்கள். அவையின் சொல்லும் எண்ணங்களும் அவ்வுணர்வை அகத்தே கொண்டிருக்கும்” என்றாள் அன்னை.

பலந்தரை “அவர்கள் ஒன்றும் திரௌபதிகள் அல்ல” என்றாள். அன்னை அதை புறக்கணித்து “நீ இப்பக்கம் அவையில் அமர்ந்திருக்கவேண்டும். பாண்டவர்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் நீ எண்ணுவதென்ன என்பதும் கலந்திருக்கவேண்டும்” என்றாள். “இப்போது என்ன நிகழ்கிறது அங்கே என்று அறிவாயா? ஐந்து ஊர்களை எப்படி நாவெடுத்து யாதவர் அவர்களிடம் கேட்டார்? அரசகுடிப் பிறந்த நீ ஊர்த்தலைவனின் தலைவியாக சிற்றில் அடுமனையிலும் புறத்தளத்திலும் இல்லப் பணியாற்றி வாழப்போகிறாயா?” என்றாள். அதை பொருட்படுத்தா உதட்டசைவுடன் “நான் அங்கு செல்லப்போவதில்லை” என்று அவள் சொன்னாள்.

“இங்கு நீ அரசியென்றிருக்கலாம். ஆனால் இங்கு அரசி எனும் இடம் அங்கு உன் கணவர் அரசர் என்பதனால்தான் அமைகிறது. அதை அளிப்பது நானோ உன் தந்தையோ அல்ல, இங்குள்ள குடியினர் என்று அறிந்துகொள். அங்கு அவர் ஊர்குடித்தலைவர் என்றானால் இங்கு நீ அரசவை அமைந்தால் எவரேனும் ஒரு ஊர்குடித்தலைவர் எழுந்து ஒரு மறிச்சொல் உரைக்கக்கூடும். அந்த நச்சிலிருந்து உனது உளம் ஒருபோதும் விடுபடமுடியாது” என்றாள் அன்னை. எரிச்சலுடன் “நான் என்ன செய்யவேண்டும்?” என்று பலந்தரை கேட்டாள். “இங்கு வீணே பொழுதழிக்க வேண்டியதில்லை. எழுந்து சென்று உபப்பிலாவ்யத்தின் அவையமர்க! இப்போது இளைய யாதவர் திரும்பி அங்கு சென்று கொண்டிருக்கிறார்” என்றாள் அன்னை.

பலந்தரை “இனி என்ன, அஸ்தினபுரியில் காலால் உதைத்து வெளியே தள்ளிவிட்டார்கள். அஸ்தினபுரியின் அரசர் இவர்களுக்கு இயன்றபடி போரை இயற்றவேண்டும். நிலம்வெல்ல படைநின்றவர் என்னும் பெருமையாவது குடியினரிலும் கொடிவழியினரிலும் எஞ்சும்” என்றாள். ஏளனத்துடன் சிரித்து “கொடியுடனும் வாளுடனும் வந்து கூடியிருக்கும் நிஷாதரும் கிராதரும் அசுரரும் இவர்களுக்கு வெற்றியை அளிப்பார்கள் என்று நம்பியிருக்கிறார்கள். வெறும் நுரை அது. அது உடைந்து சிதறுகையில் உண்மையென்ன என்று உணர்வார்கள்” என்றாள். கையசைத்து “எவ்வண்ணமேனும் அழியட்டும். எனக்கு அவர்களிடம் சொல்வதற்கு ஒரு சொல்லும் இல்லை” என்றாள்.

அன்னை அவள் தொடையைத் தொட்டு “அவ்வாறல்லடி, இருபுறமும் இருப்பவர்கள் அறிந்த உண்மை ஒன்று உண்டு. போர் நிகழுமென்றால் பேரழிவு இரு சாராருக்குமே. எய்துவதைவிட இழப்பதற்கே மிகுதி. ஆகவே ஆற்றலை மதிப்பிட்டுக்கொள்ளும்பொருட்டு ஒரு முதற்பெரும்போர் நிகழும். அதன் இறுதியில் இரு பக்கமும் இருக்கும் மூத்த அரசர்கள் அமர்ந்து உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள். அங்குதான் மெய்யான நிலப்பகிர்வும் கருவூலப்பங்கீடும் நிகழும். குடியுரிமை கொடிவழிகளுக்காக வகுத்தளிக்கப்படும். அப்போது நீ அங்கிருக்கவில்லையென்றால் எப்போதைக்குமென இழந்தவளாவாய்” என்றாள்.

பலந்தரை சலிப்புடன் எழுந்து “அங்கு சென்று கரியவளுக்கு சேடியாக அமைவது சலிப்பூட்டுகிறது. வெண்ணிறத்தவள் சிறுகுடிப்பெண்களுக்குரிய போர்த்தொழில் அறிந்தவள். பிறர் அடுமனைப்பெண்கள், அரசியென்று அணி சூடியவர்கள். அங்கிருப்பவர்கள் எவரும் எனக்கு உகந்தவர்கள் அல்ல. அங்கு செல்வதைப்பற்றி எண்ணினாலே சினமும் சலிப்பும் எழுகிறது” என்றாள். “சினமும் சலிப்பும் நன்று. அவை அரசருக்குரிய இயல்புகள். அவர்களிடம் எளியோர் அணுகாது தடுப்பவை அவை. பிறரை வெல்லவும் அவர் மீது சொல்நாட்டவும் ஆற்றல் அளிப்பவை. அவற்றை பெருக்கிக் கொள். படைக்கலமாக்கி ஏந்து. சென்று அங்கு நின்று உன் இடத்தை நிலைநாட்டி மீள்க!” என்று அன்னை சொன்னாள்.

எண்ணியிராக் கணத்தில் பலந்தரை உளம் தளர்ந்தாள். “அன்னையே, அறியா ஊழ் சினந்து என்னை துரத்தி வருகிறது என்று எண்ணுகிறேன். ஒரு கணத்தில் என் வாழ்வின் அனைத்துப் பாதைகளும் மாறுபட்டன. இன்று நான் அஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் இணையரசியென அமர்ந்திருக்கக்கூடும். அஸ்தினபுரி வென்று நிலம் கொண்டபின் அதன் வளர்ச்சிப்போக்கில் என்றோ ஒரு நாள் என் மைந்தர்களுக்கு அதில் பாதியை நான் கேட்டுப்பெற்றிருக்க முடியும். அவர்கள் தனிமுடி சூடி தங்கள் கொடிவழியினருக்கு புகழ் சேர்த்து அளித்திருக்கவும் கூடும். நாடிலிகளும் ஏதிலிகளுமாகிய இந்த இழிகூட்டத்தின் கையில் நான் சிக்கிக்கொண்டேன்” என்றாள்.

“ஒருமுறை என் பிறவி நூலைக் கணித்த சூதர் ஒருவர் என் இயல்புக்கு இயைந்த கொடையென இதை அளித்தது என் குடித்தெய்வம் என்று உரைத்தார். இப்போதெல்லாம் உளம்சோரும் தருணத்தில் மெய்யாகவே என் தகுதி இதுதானா என்று ஐயம் கொள்கிறேன். இருண்டு சூழும் பெருமழைபோல் அந்த ஐயம் என்னை ஆட்கொள்கிறது. அச்சோர்விலும் வெறுமையிலும் இருந்து மீண்டுவர நெடுநாட்களாகும். இந்திரப்பிரஸ்தத்தையோ உபப்பிலாவ்யத்தையோ நான் அஞ்சுவது அதனால்தான்” என்று பலந்தரை சொன்னாள்.

ஏக்கம் நிறைந்த குரலில் அன்னையை நோக்கி “இங்கு நான் வருகையில் அன்று படகிலிருந்து பாண்டவ இளையவர் என்னைத் தூக்கிக் கவர்ந்தெடுத்த கணத்தைக்கடந்து இறந்த காலத்துக்கு மீள்கிறேன். இங்கிருந்து நான் செல்வதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளன. பெருகிப் பரவவும் பூத்துக் கனியவும் முடிவிலா வாய்ப்புகள். அந்தக் கனவுகளுடன் இங்கிருக்கவே வந்தேன். பதின்மூன்று ஆண்டுகள் அக்கனவுகளுடன் இங்கு வாழ்ந்தேன்” என்றாள் பலந்தரை.

“ஆம், அது நன்று. இனி அதை முடித்து நீ சென்றாகவேண்டும்” என்றாள் அன்னை. “சென்று என்ன செய்ய என்று சொல்லுங்கள். அங்கு என் சொல் அவை நிற்கவில்லையென்றால் என்ன செய்வது?” என்று பலந்தரை கேட்டாள். “அது நிகழக்கூடும் என்று நானும் அறிவேன். அவர்கள் வென்று நாடுகொண்டால் அதிலொரு பெரும்பங்கு உன்னை சாரவேண்டும், ஏனென்றால் நீ ஷத்ரியப் பெண். அரசனுக்கு முதல் இளையோனின் அரசி. தோற்று அவர்கள் ஏதிலிகளானால் தயங்காமல் அப்பேருடலன் அளித்த மங்கலநாண் துறந்து இங்கு திரும்பி வா. காசியின் மகளை மணம்புரிய இன்னும் அரசர்கள் ஒருங்கியிருக்கிறார்கள்” என்றாள் அன்னை.

“நீ ஒன்றை நெஞ்சில் நிறுத்துக! காசியின் குருதி அனைத்து குலங்களையும் தூய்மை செய்வது, கங்கையின் நீரைப்போல. திரிகர்த்தத்தின் மூதரசர் ஷத்ரிய அரசி ஒருத்தி அமைவாளென்றால் அவளுக்குப் பிறக்கும் மைந்தர்களுக்கு பட்டத்து உரிமையளிப்பதாக சென்ற ஆண்டே அறிவித்திருந்தார். காரூஷ நாட்டு அரசரும் யவன நாட்டு அரசரும் ஷத்ரியக் குருதிக்காக காத்திருக்கிறார்கள். உனக்கு வழிகள் எவையும் முற்றாக மூடிவிடவில்லை” என்றாள் அன்னை.

பெருமூச்சுடன் பலந்தரை “இதை பலமுறை சொல்லிவிட்டீர்கள். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் உள்ளிருந்து ஒன்று அது இயல்வதல்ல என்று சொல்கிறது. அதைக் கடந்து வந்து இதை பற்றிக்கொள்ள என்னால் இயலவில்லை” என்றாள். அன்னை “இத்தருணத்தில் அவ்வாறு தோன்றுவது இயல்பு. ஆனால் உன் கை துணிந்து மங்கலநாணை அறுத்து எறிந்ததென்றால் மறுகணமே உளம்கொண்ட தடைகள் அனைத்தும் நீங்கி நீ துணிவு பெறுவாய். ஷத்ரியப் பெண்ணுக்கு அது எவ்வகையிலும் பிழையும் இழிவும் அல்ல. மைந்தரை அரசமர்த்த அவள் எதுவும் செய்யலாமென்கின்றன நெறிநூல்கள்” என்றாள்.

பின்னர் “நான் வந்தது இன்று கங்கைக்கரையில் ஊர்த்துவபிந்து அருகே அமர்ந்த அம்பையன்னைக்கு பலியூட்டும் அனலாட்டும் நிகழ்கிறது என்பதை சொல்லவே. நாம் உடனே சென்றாகவேண்டுமென்று அமைச்சர் தெரிவித்தார். நீ அணிகொள்ள வேண்டும்” என்றாள். பலந்தரை புருவத்தைச் சுருக்கி “இப்பருவத்தில் அங்ஙனமொரு பூசெய்கையும் பலிக்கொடையும் வழக்கமில்லையே?” என்றாள். “இது இத்தருணத்திற்கென ஆற்றப்படும் தனிப்பூசை” என்று அன்னை சொன்னாள். “நிமித்திகரிடம் சொல்சூழ்ந்து இதற்கான பொழுதை நானே தெரிவு செய்து ஆணையிட்டேன்.”

அவள் வினாவுடன் நோக்க அன்னை “நம் குடியில் பிறந்தவர் மூதன்னை அம்பை. நம் குடித்தெய்வம் அம்பாதேவி மண்வடிவு கொண்டு எழுந்தவர் அவர் என்கின்றன கதைகள். அஸ்தினபுரியின் மீது அவர் கொண்ட வஞ்சம் ஒரு துளியும் குன்றாமல் அவ்வண்ணமே உள்ளது. அப்பழியோ ஒவ்வொரு கணமுமென பெருகி அக்குடியை சூழ்ந்துள்ளது. முன்பு இதை என்னிடம் சொல்லியிருந்தால் பொய்யென்றான பழங்கதை என்று உரைத்திருப்பேன். இன்று ஒவ்வொன்றாக எண்ணிக் கோத்து எடுக்கையில் எத்தனை பேரொழுங்குடன் அவை தங்கள் திசை தேர்கின்றன என்றுணர்ந்து திகைக்கிறேன். அச்சமும் கொள்கிறேன்” என்றாள்.

“இளையவளே, உன் உடன்பிறந்தார் இருவரும் அஸ்தினபுரிக்கு அரசியராகச் சென்றதும் அம்பையின் வஞ்சத்தினாலேயே என இன்று எண்ணுகிறேன். தங்கள் நல்லியல்பால், பெருங்காதலால் அவர்கள் அஸ்தினபுரியை அழிவுக்கு கொண்டு செல்வார்கள். மறுதிசையில் நீ உன் கசப்பால், சினத்தால் அஸ்தினபுரியை அழிவுக்கு கொண்டுசெல்வாய். சற்று முன் சொன்னாய் அல்லவா, அஸ்தினபுரியே வெல்லும் என்று? மானுடர் எண்ணும் ஒவ்வொரு கணக்கிலும் அவ்வாறே காட்டுகிறது ஈவு. ஆனால் நிமித்திகர் அனைவரும் ஒரே குரலில் நம் கணக்குகளுக்கு அப்பால் நின்றாடும் கோள்களின் சேர்க்கையையும் ஊழின் சுழிப்பையும் கணித்து உணர்ந்து சொல்வது பிறிதொன்று. அஸ்தினபுரி அழிந்தாகவேண்டும், அது அழியும்.”

“அந்நகர் எந்நெறியின்பாற்பட்டு பிறந்ததோ அந்நெறியின் ஆணை அது. அதுவே அம்பையின் நாவில் தீச்சொல்லென எழுந்தது. மானுடர் இடும் அனைத்துக் கணக்குகளையும் முடித்து அஸ்தினபுரியை வீழ்த்தும் நம் மூதன்னையின் கண்ணீர் என்று உணர்க! அஸ்தினபுரி வீழுமென்றால் உனக்கும் இரு கணக்குகள் நேராகும். உன்னை இளிவரல் செய்து கடந்து சென்ற இரு உடன்பிறந்தாரின் விழிநீருக்கு முன் புன்னகைக்கும் வாய்ப்பு உனக்கு கிடைக்கும். உன் மைந்தருக்கு வேட்டைப்பொருளில் நெஞ்சும் ஈரலும் அமையும். இத்தருணத்தில் பசியும் விடாயும் கொண்டு எழுந்து நீ ஆற்றவேண்டிய வழிகளை நான் வகுத்துரைப்பது அதனால்தான்” என்று அன்னை சொன்னாள்.

பலந்தரை “சொல்லிச் சொல்லி என்னை ஆற்றல் மிக்கவளென்று நம்பவைத்திருக்கிறீர்கள், அன்னையே. ஆனால் இதுநாள் வரை நான் எந்த அவையிலும் எழுந்து தருக்கி நிற்க முடிந்ததில்லை. என்னைவிட மேலானவர்கள் எவரையும் விழிநோக்கி பேசவும் இயன்றதில்லை. இளவரசி என்றும் அரசி என்றும் அணிந்த இந்த ஆடைகளுக்கும் அணிகளுக்கும் அப்பால் அஞ்சியும் குழம்பியும் நின்றிருக்கும் எளிய பெண்தான் நான் என்று எண்ணுவதிலிருந்து எனக்கு விடுதலை இல்லை” என்றாள். அன்னை சினத்துடன் “அவ்வண்ணமே இருந்தாலும் என்ன? பெரும்புயலில் எழுந்து பறக்கும் சிறுகல் மலைப்பாறையை உடைக்கும் என்பார்கள். இத்தருணம் உனக்கு பேராற்றலை அளிக்கும். எவர் கண்டார்? இங்கு நிகழ்வது அனைத்தும் உன்னில் முனை கொள்ளலாம்” என்றாள்.

“மீண்டும் நான் என்ன செய்வதென்ற திகைப்பை அடைகிறேன்” என்றாள் பலந்தரை. “கிளம்பிச்சென்று பாண்டவர்களின் அவையில் அமர்ந்து உன் சொல்லை கூறு. ஒருபோதும் அவர்கள் சிறுஉடன்படிக்கையுடன் அமையக்கூடாது. அஸ்தினபுரி அழிக்கப்படவேண்டும். துரியோதனன் அழிவான். அதுவே அவன் ஊழ் என்கின்றனர் நிமித்திகர். அந்த அங்கநாட்டுச் சூதன் வில்லெடுத்து களம்நிற்பான் என்பதனால் பாண்டவர்களும் முதுகெலும்பு முறிக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஷத்ரியத் தலைமை மகதத்திற்கோ கலிங்கத்திற்கோ செல்லும். அவர்களுடன் பாண்டவர்கள் ஒப்புச்சாத்திட்டு நிலம் வெல்வார்கள். அதில் உன் மைந்தனுக்கு தனிநிலத்தை நாம் கோருவோம்.”

மீண்டும் அவள் தொடையைத் தொட்டு தாழ்ந்த குரலில் “இன்று உன் பணி ஒரு தருணத்திலும் பாண்டவர்கள் அனலமைந்து எளிதில் எதையேனும் ஏற்று அமையாது காத்தல் மட்டுமே. இருபுறமும் அனலோம்பும் பணியையே உங்கள் மூதன்னையர் உங்கள் மூவருக்கும் அளித்துள்ளார்கள்” என்றாள் அன்னை. பெருமூச்சுடன் பலந்தரை “நினைவறிந்த நாள் முதல் உங்கள் சொற்களையே என் எண்ணங்களாகக் கொண்டிருக்கிறேன். உங்கள் வழிகாட்டுப்படியே அனைத்தையும் ஆற்றியிருக்கிறேன். இம்முறையும் அதுவே ஆகுக!” என்றாள்.

bl-e1513402911361அம்பையன்னையின் ஆலயமுகப்பில் அமைச்சர்கள் மூவரும் அவர்களின் தேருக்காக காத்து நின்றிருந்தனர். தேர் விரைவழிந்து திரும்பி நின்றதும் வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் எழுந்தன. அணுக்கச்சேடி இறங்கி நின்று வணங்க அன்னை உள்ளிருந்தே ஆடைகளை சீரமைத்துக்கொண்டு அரசணிக்கோலத்தில் கைகூப்பியபடி இறங்கினாள். அவளைத் தொடர்ந்து பலந்தரையும் இறங்கி நின்றாள். சிற்றமைச்சர் தலைவணங்கி “ஆலயம் ஒருங்கிவிட்டது, அரசியரே. இன்னும் சற்று நேரத்தில் பலிக்கொடையும் அனலாட்டும் தொடங்கவிருக்கிறது. இத்தருணம் தங்கள் வருகையால் சிறப்புறுக!” என்றார். “வாழ்க!” என்றபடி அன்னையும் பலந்தரையும் நடந்தனர்.

அம்பையன்னையின் சிற்றாலயத்தின் முகப்பில் அரசரும் மூத்தவரும் அரசணிக்கோலத்தில் கைகூப்பி நின்றிருக்க அவர்களுக்குப் பின்னால் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நிரைகொண்டிருந்தனர். செவ்வாடை அணிந்த பூசகர்கள் அங்குமிங்கும் சுழன்று அனைத்தையும் ஒருக்கிக்கொண்டிருந்தனர். நீலம், சிவப்பு, பொன்மை என மூவண்ண மலர்களும் குவிக்கப்பட்ட பாயில் அப்பமும் நறவமும் கனிகளும் படைக்கப்பட்டிருந்தன. பன்னிரு தூபக்கலங்களில் புகையெழும்பி சூழ ஆலயமே முகில்களுக்குள் இருப்பதுபோல் தோன்றச்செய்தது. சுற்றி நடப்பட்டிருந்த மூங்கில் கம்பங்களில் எரிந்த நெய்ப்பந்தங்களில் அப்பகுதியின் காட்சி நீர்ப்பாவையென அலைந்தது.

பலந்தரை அன்னையைத் தொடர்ந்து சென்று ஆலயமுகப்பில் நின்றாள். கைகூப்பி கருவறைக்குள் அமர்ந்திருந்த அம்பையன்னையை நோக்கிக்கொண்டிருந்தாள். இளஅகவையிலேயே கேட்ட கதை. சால்வனாலும் பின்பு பீஷ்மராலும் சிறுமை செய்யப்பட்டாள். தன் உள்ளனலால் உடலைச் சிதையாக்கி எரிந்தமைந்தாள். சொல்லை மட்டும் அருகே நின்றிருந்த கரும்பன்றி ஒன்றுக்கு அளித்துவிட்டுச் சென்றாள். பன்றிகளில் வாழ்கிறது அன்னையின் தீச்சொல். அத்தருணங்கள் விறலியரால் மீண்டும் மீண்டும் வெவ்வேறு சொற்களில் பாடப்பட்டன. அவள் ஒவ்வொருமுறையும் விழிநீர் வழிய உடல்மெய்ப்பு கொண்டுதான் அதை கேட்டிருந்தாள்.

ஆனால் அம்பையன்னை கொண்ட அச்சினத்தின் வேர் எது என இளமையில் அவளுக்கு புரியவில்லை. பிறிதொரு அரசரை மணம்கொண்டு மைந்தரீன்று சிறந்திருந்தால் என்ன? ஷத்ரியப் பெண்ணுக்கு கருவறையில் வீரமைந்தர் எழுவதே சிறப்பு. கணவர்கள் அவளுக்கு ஒரு பொருட்டேயல்ல என்றுதான் அவளுக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. அதை அவள் முதுசெவிலியிடம் கேட்டபோது “அரசியருக்கான அறம் அது, காதல்மகளிருக்கானது அல்ல” என்று செவிலி சொன்னாள். பின்னர் விறலி ஒருத்தியிடமும் அதையே கேட்டாள். “தன் காதலை தானே அறிதல் பெண்ணுக்கு தெய்வங்கள் அளிக்கும் நற்கொடை, அரசி. அறிந்தபெண் அதற்கு அடிமை” என்றாள். அம்மறுமொழியும் அவளுக்கு புரியவில்லை.

ஆனால் கங்கைநீர்ப்பரப்பின் படகில் இருந்து கோழிக்குஞ்சை உகிர்கொண்டு கவ்வி எழும் பருந்தென அவளை பீமன் எடுத்துச்சென்ற கணத்தில் ஒரு சிறு மின்னலென அம்பையன்னையின் முகமே அவளுள் எழுந்தது. படகில் அமர்ந்து உடல் குறுக்கி மேலாடையால் முகம் மூடி அமர்ந்து விழிநீர் உகுத்தபோது மிக அருகே என அம்பையன்னையை அவள் உணர்ந்தாள். அந்தப் பகல் முழுக்க முகத்திரையை மேலெடுக்காமல் நடுங்கிக்கொண்டே இருந்தாள். படகிலிருந்து இறங்கியபோது ஒருமுறை காற்றில் முகபடாம் விலக அப்பால் பீமனின் பெருங்கைகளை கண்டாள். கங்கைநீரில் மிதந்துவரும் இமயமலை பூர்ஜமரம்போல் தோன்றின. அவன் வடத்தைப் பற்றியபோது உள்ளம் திடுக்கிட அதை பெருமலைப்பாம்பு என உணர்ந்தாள்.

மீண்டும் மூடுபடம் கொண்டு முகம் மூடிக்கொண்டபோது குமட்டல் எழுந்து உடல் விதிர்த்தது. அதை விழிகளிலிருந்து விலக்க முயன்றாள். ஆனால் அதுவே அவள் சித்தமென்றாகி நின்றது. ஒருகணம்கூட அந்தக் கைகளை அவள் பார்த்திருக்கவில்லை. ஆனால் அதன் தசையமைப்பும் நரம்புவலையும் தன் உள்ளங்கை என அவள் அறிந்திருந்ததாகத் தெரிந்தது. அரண்மனைச் சடங்குகள் ஆலய வழிபாடுகள் மகளிரறைச் சந்திப்புகள் எங்கும் அவள் அந்த தசைத்திரளால் வெருட்டப்பட்ட சித்தம் கொண்டிருந்தாள். அவ்வப்போது ஏனென்றறியாமல் குமட்டியது. வாயில் வீண்நீர் ஊறியது. அவளருகே படிக்கம் ஏந்தி நின்றிருந்த சேடி அதை நீட்ட துப்பிக்கொண்டே இருந்தாள்.

குந்தியின் முன் அவள் சென்றபோது “பேரரசியை வணங்குக, அரசி” என்றாள் செவிலி. அவள் அசைவிலாது நின்றாள். “பேரரசியே இனி உங்கள் அன்னை” என்றாள் செவிலி மீண்டும். குந்தி புன்னகையுடன் “படகு ஆடியதனால் ஏற்பட்ட தலைச்சுழல்வு. நீங்கிவிடும்… ஓய்வெடுக்கட்டும்” என்று அவள் தலையை தொட அவள் அந்தக் கையை தலை விலக்கி உதறினாள். அழுத்தமான குரலில் “வணங்குக, அரசி!” என்றாள் செவிலி. அதன் உட்பொருளை உணர்ந்து குனிந்து குந்தியின் தாள்தொட்டாள். அந்தக் கையை தன் சென்னியில் வைக்கவில்லை. பிறகெப்போதும் அவள் குந்தியின் கால்தொட்டு வணங்கவுமில்லை. அன்று அந்தக் கை அழுக்குபட்டதென அசைக்காமல் கொண்டுசென்றாள். அப்பால் சென்றதும் யானத்தைக் கொண்டுவரச்சொல்லி கையை கழுவினாள். படிக்கத்தில் உமிழ்ந்து வாய்கழுவிக்கொண்டாள்.

காம்பில்யத்தில் கங்கைக்கரையருகே அமைந்த வேனில் மாளிகையில் அவர்களுக்கான முதலந்தியை ஒருக்கியிருந்தனர். அவள் சாளரத்தருகே காத்து நின்றிருக்க காலடியோசையின்றி உள்ளே வந்த பீமன் அறைநடுவே நின்று புன்னகையுடன் “பிழை பொறுத்தருள்க அரசி, அடுமனையில் சற்று பணி என்பதால் பிந்திவிட்டேன்” என்றபின் மேலும் தணிந்த குரலில் விழிகளில் கனிவுடன் “அனைத்திற்கும் பிழை பொறுத்தருள்க! அரசனென்றும் ஆண்மகனென்றும் என் செயல்களை ஆற்ற நேர்கிறது. அவையிரண்டும் நானல்ல என்று அகத்தே உணர்வதுண்டு. இங்கு உன் முன் வந்து நிற்பவன் அவ்வாறு உணரும் எளிய கான்மகன்” என்றான்.

அச்சொற்கள் அவளுக்கு எவ்வகையிலும் பொருள் அளிக்கவில்லை. ஐயமும் சினமும் கொண்டு சுருங்கிய கண்களுடன் அவனை நோக்கி நின்றாள். பீமன் அருகணைந்து “அச்செயலுக்கு பிழைநிகராக நான் ஆற்றவேண்டியதென்ன?” என்று உரைத்தான். இயல்பாக அவன் கை அவள்மேல் பட்டதுமே சிலிர்த்து உதடு குவித்து “அகல்க!” என்றாள். மூச்சொலியாக “தொடவேண்டாம்” என்றாள். அவன் கையை பின்னால் எடுத்துக்கொண்டதும் விலகி சாளரத்தின் மறுபக்கம் சென்று நின்று “விலகிச் செல்க! விலங்கல்லவென்றால், கல்வியும் குடிப்பண்பும் சற்றேனும் இருந்தால் விலகிச் செல்க!” என்று உடைந்த குரலில் கூவினாள்.

இரு கைகளும் உயிரற்றவைபோல் தொங்க, விரிந்த நெஞ்சு எழுந்தமர “நன்று! இன்னும் சில என்னுள் எஞ்சியுள்ளன. அவ்வாறு நீயும் உணரும்போது நாம் அணுகுவோம், அரசி” என்றபின் அவன் திரும்பிச் சென்றான். பிறகு அவன் அவளை அணுகவேயில்லை. அவர்களுடன் துவாரகைக்குச் சென்றாள். அங்கும் தனித்தே இருந்தாள். முதல் ஆவணிவிழா அங்கே எழுவது வரை. ஆவணி எட்டாம் தேய்பிறைநாள் துவாரகையில் பெருங்களியாட்டுக்குரியது. ஆணும் பெண்ணும் மானுடத்தன்மையை இழந்து விலங்குகளும் பறவைகளுமென்றாவார்கள். தேவர்களும் கந்தர்வர்களும் ஊடுகலப்பார்கள். காமம் அன்றி உணர்வோ எண்ணமோ அறமோ பிறிதேதுமில்லை என நகர் அன்று உணரும்.

தலைமைப் பூசகர் கைகாட்ட பறைகளும் முழவுகளும் கொம்புகளும் இணைந்த பேரொலி எழுந்து இருளை நிறைத்தது. பலிக்கென ஏழு காராடுகளை பூசகர் இட்டுவந்தனர். அவள் விழிகளை மூடி அன்னையின் பின் மறைந்து நின்றுகொண்டாள். ஏழு கம்பளிக்குவைகள் போலிருந்த ஆடுகள். ஒன்றோடொன்று ஒட்டி பழுப்புக்கல் விழிகள் ஓட்டி கனைத்துக்கொண்டன. அவள் அவற்றின் கரிய நகங்களை நோக்கிக்கொண்டிருந்தாள். கன்னங்கரியவை என்பதனாலேயே பிறந்ததுமே தெய்வங்களுக்குரியவை என்று ஆக்கப்பட்டவை. எத்தனை தலைமுறைகளாக அவை தெய்வங்கள்முன் சங்கு அறுக்கப்பட்டு விழுந்திருக்கும். சென்று பிறிதொரு வாயிலினூடாக மீண்டு வந்துகொண்டிருக்கின்றனவா அவை?

முதன்மைப்பூசகர் கைகாட்ட நிமித்திகன் வலம்புரிச்சங்கை மும்முறை ஊதி அரசப்பெருமை அறிவித்தான். “பிரம்மா, அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஷ், அனேனஸ், பிரதிக்‌ஷத்ரர், சஞ்சயர், ஜயர், விஜயர், கிருதி, ஹரியஸ்வர், சகதேவர், நதீனர், ஜயசேனர், சம்கிருதி, க்ஷத்ரதர்மா, சுமஹோத்ரர், சலர், ஆர்ஷ்டிஷேணர், காசர், தீர்க்கதமஸ், தன்வந்திரி, கேதுமான், பீமரதர், திவோதாசர், ஜயசேனர், சஞ்சயர், சுருதசேனர், பீமகர், சஞ்சயர், பீமதேவர், ஜயர், விஜயர் என நீளும் காசிநாட்டுக் கொடிவழியில் பிறந்த விருஷதர்பர் தன் மைந்தர் சுபாகுவுடன் வந்து நின்று இயற்றும் இந்தப் பூசனை முழுமைகொள்க! அன்னை நிறைவுறுக! ஆம், அவ்வாறே ஆகுக! இங்கு வந்து வணங்கி நின்றிருக்கும் அரசி குணவதியும் இளவரசி பலந்தரையும் அன்னை அருள்பெறுக! ஆம், அவ்வாறே ஆகுக!”

பூசெய்கைகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்தபோது அவள் எண்ணத்தின் மயக்கில் எங்கோ இருந்தாள். துணைப்பூசகர் காராட்டை இழுத்து பலிபீடம் நோக்கி கொண்டுசென்றபோதுகூட என்ன நிகழவிருக்கிறதென அவள் உணரவில்லை. பள்ளிவாள் மேலெழுந்து ஒளியுடன் விழுந்து ஆட்டின் தலையை வெட்டி குருதி வீழ்த்தியதும்தான் விதிர்த்தாள். ஆடு காலுதைத்துச் சரிய தலை விழிநோக்கு நிலைத்திருக்க அன்னையின் காலடியில் விழுந்தது.

அவள் கண்களை மூடிக்கொண்டாள். அடுத்த ஆடு வெட்டப்படுவதை ஓசையெனக் கேட்டு அதிர்ந்துகொண்டிருந்தாள். அன்னை அவள் கையைப்பற்றி “நிமிர்ந்து நில். என்ன செய்கிறாய்? அரசியென நிமிர்ந்து நில்!” என்றாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. மேலும் அன்னைக்குப் பின் ஒடுங்கி கண்களை இறுக மூடிக்கொண்டாள். வெட்டுண்டு சரியும் ஆடுகளின் குளம்புகள் மண்ணில் உரசித்துடிக்கும் அசைவை ஓசையிலேயே உணர முடிந்தது. குருதி மணம். எங்கெங்கோ எந்தெந்த தருணங்களிலோ எவற்றிலெல்லாமோ உணர்ந்த மணம்.

தலை சுழல்வதுபோல், கால் தளர்வதுபோல் உணர்ந்தாள். “முன்சென்று நில்! சுடராட்டு நிகழவிருக்கிறது!” என்று அன்னை தாழ்ந்த குரலில் சொல்லி அவளை உந்தினாள். அவள் நிமிர்ந்து நின்று விழி திறந்து நோக்கியபோது ஆடுகளின் உடலிலிருந்து குமிழியெழும் கொழுங்குருதி ஏழு கலங்களில் சேர்க்கப்பட்டு கருவறைக்குள் கொண்டு வைக்கப்பட்டது. ஏழு தலைகளும் நிரையாக அம்பையன்னையின் காலடியில் வைக்கப்பட்டிருந்தன. வஞ்சமும் துயரமும் கொண்ட விழிகளுடன் அவை கைகூப்பி நின்றிருந்தவர்களை நோக்கிக்கொண்டிருந்தன.

பூசகர் கைகாட்ட அனைத்து பந்தங்களும் எரியவிடப்பட்டன. காட்டுத்தீயென எரிந்த செவ்வெளிச்சத்தில் ஏழு கலங்களில் நிறைக்கப்பட்ட குருதியை கருவறைக்குள் கொண்டுசென்று அம்பையின் சிலைக்குமேல் பொழிந்து செம்முழுக்காட்டினார். இருமல் போலவும், தேம்பல் போலவும், விம்மல் போலவும், குழறல் போலவும் பறைகள் ஓசையிட்டன. அனைத்து ஓசையும் தன் அடிவயிற்றுக்குள் சென்று சுழிப்பதுபோல் உணர்ந்தாள். அன்னையை இடக்கையால் பற்றி காலை நன்கு ஊன்றி விழாமல் காத்துக்கொண்டாள்.

பன்னிரு துணைப்பூசகர்கள் நெய்ப்பந்தங்களை பற்ற வைத்தனர். கருவறைக்குள் பூசகர் ஏழு திரியிட்ட நெய்விளக்கை சுழற்றி அன்னைக்கு சுடராட்டு காட்டியபோது வெளியே பந்தங்களைச் சுழற்றி காற்றில் அறியா எழுத்துக்களை உருவாக்கி மறையச்செய்தனர். பூசனை முடிந்ததும் பந்தங்கள் அணைந்தன. தொழுசுடருடன் பூசகர் வெளியே வந்தபோது மெல்லிய உறுமல் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர். கங்கைச் சரிவின் சேற்றுப்பரப்பில் இருந்த குறும்புதரிலிருந்து கரிய காட்டுப்பன்றியொன்று உறுமி, தலை தாழ்த்தி பிடரியின் முள்மயிர் சிலிர்க்க வளைந்த வெண் தேற்றைகள் எழுந்து தெரிய மேலேறி வந்தது.

எவரோ அறியாது ஓசையிட அது தயங்கி நின்றது. மீண்டும் தலைதாழ்த்தி உறுமலோசை எழுப்பியபடி அவர்களை நோக்கி வந்தது. பூசகர் “வராகி எழுந்துவிட்டாள். வழி விடுக! வழி விடுக!” என்றார். வலப்பக்கமாக இழுத்து சேற்றுவிளிம்பருகே இடப்பட்ட ஆடுகளின் தலையிலா உடல்களை அணுகிய பன்றி அவற்றில் ஒன்றைக் கவ்வி காலூன்றி இழுத்தபடி மீண்டும் சேற்றுச் சரிவில் இறங்கி மறைந்தது.

வெண்முரசு வாசிப்பு முறை – ராஜகோபாலன்

முந்தைய கட்டுரைமாத்ருபூமி இலக்கியவிழா
அடுத்த கட்டுரைகஞ்சி கடிதங்கள்-2